மாங்குடி மாறிய கதை!

October 3, 2009


ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.

மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.

கிட்ட்ததட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.

எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம்.
மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது? முதலில் எதை மாற்றுவது? எதை செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே ஜோதிமணிக்கு பிடிபட்டு விட்டது.

தலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளை சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும்!” – இந்த ஐடியா நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. மாறி, மாறி ஒற்றைசடை, இரட்டைசடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.

அடுத்ததாக யூனிபார்ம். அரசு அளிப்பது வருடத்திற்கு ஒரே ஒரு செட். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் இஷ்டத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.

அவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் ஜோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கண்டிஷன். எல்லாரும் யூனிபார்ம் தான் எடுக்கணும். ஏற்கனவே ஒரு செட் இருக்கு. இன்னொரு செட் வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் யூனிஃபார்மிலே ஸ்கூலுக்கு வரலாமில்லே?”

பெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? ஜோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். ஜோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.

இதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...

இன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடி பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘கேம்பஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்த பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருச்சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க், கம்ப்யூட்டர் லேப், நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...

வெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படி சாத்தியம்?

“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்து பயன்படுத்தறோம்கிறது முக்கியம்!” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார்! (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று ஜோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)

இவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலேயுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. ஜோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாக தேவைப்படும்!

லைவ் ஃப்ரம் மாங்குடி!

எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக ஈமெயில் ஐடி இருக்கிறது. “விஜய்97@ரீடிஃப்மெயில்.காம். நோட் பண்ணிக்குங்க சார்” என்கிறான். இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே ஈமெயில் ஐடி இருக்கிறது. கம்ப்யூட்டர் தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.

“தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”

எல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக அசைன்மெண்ட் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த அசைண்மெண்ட்களை மற்ற குழுவினர் மத்தியில் ப்ரசண்டேஷன் செய்யவேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.

குழு அசைண்மெண்ட் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அசைண்மெண்ட் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு அசைண்மெண்டும் தனித்தனி ஃபைல்களில் ஆவணப்படுத்தப் படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த ஃபைலை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தை சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.

நூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே? எப்படி சமாளிக்கிறார்கள்?
“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.

உதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே? ஆனா அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.

தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் டி.சி. கேட்டு வருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் முழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.

“வெள்ளைத்தாளை கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்த்த் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க! விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளை தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”

பள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு போஸ்ட் மாஸ்டர், இரண்டு போஸ்ட் மேன்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்கு கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, போஸ்ட் மாஸ்டரால் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாக தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற விஷயங்கள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.

சிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘ரிகரிங் டெபாசிட்’ ஆக முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாக தருகிறார்கள். இது அவர்களது மேல்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.
இந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்றும் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்கு சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான மார்ஜின் விட்டு எழுதுகிறார்கள்.

ஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்று மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். அசைன்மெண்டை வெள்ளை பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.

மதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் டிவி இருக்கிறது. நூலக அறையில் சிடிக்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் டிவி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட சிடிகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.

ஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற வஸ்துவையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ஆவரேஸ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.

(நன்றி : புதிய தலைமுறை)

34 பின்னூட்டங்கள்:

கல்யாணி சுரேஷ் 10:43 AM, October 03, 2009  

இதை ஏற்கெனவே புதிய தலைமுறை இதழிலேயே படிச்சிடோம்ல.

யுவகிருஷ்ணா 10:43 AM, October 03, 2009  

இது படிக்காதவர்களுக்காக கல்யாணிசுரேஷ்!

செந்தழல் ரவி 11:12 AM, October 03, 2009  

suuuuuuuuuuper......

பிரபாகர் 12:10 PM, October 03, 2009  

கிருஷ்ணா...

கலக்கலாய் இருக்கிறது. இங்கு சிங்கப்பூரில் உள்ள பள்ளி போல இருக்கிறது. புதிய தலைமுறையின் மேல் மதிப்பு இன்னும் அதிகமாகிறது. வல்ல தகவல், பதிவு... நன்றி கிருஷ்ணா...

பிரபாகர்.

Pot"tea" kadai 12:53 PM, October 03, 2009  

நல்ல தகவல்!
புதிய பொறுப்புகளுக்கு வாழ்த்துக்கள் :)

யுவகிருஷ்ணா 1:12 PM, October 03, 2009  

நன்றி பொட்டீ & செந்தழல்!

யுவகிருஷ்ணா 1:12 PM, October 03, 2009  

பிரபாகருக்கும் நன்றி!

பின்னோக்கி 3:45 PM, October 03, 2009  

ஜோதிமணி ஆசிரியரின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம். ஒரு வேளை புதிய தலைமுறையில் வந்திருக்கலாமென நினைக்கிறேன். இதே போல சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல் நிலைப் பள்ளியும் ஒரு எடுத்துக்காட்டு.

ராம்ஜி.யாஹூ 5:14 PM, October 03, 2009  

nice post, thanks for sharing this, I think in Podigai TV also an one hour programme was telecasted about this school.(3months back)

எவனோ ஒருவன் 5:26 PM, October 03, 2009  

@பின்னோக்கி

முதல் புகைப்படத்தில் தலைமை ஆசிரியர் நாற்காலியில் இருப்பவர் தான் ஜோதிமணி. சரியா யுவகிருஷ்ணா?

யுவகிருஷ்ணா 5:30 PM, October 03, 2009  

கரெக்ட்டு எவனோ! :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி 8:48 PM, October 03, 2009  

எனது பெயர் மாறி அடி பட்டுச்சு
எனது ஊருக்கு பக்கத்து ஊரு பேரும் அடி பட்டுச்சு
அதேன் இங்கிட்டு எட்டிப் பாத்தேன்!

ம்ம்ம்! லக்கி!

Kirubanandhini 9:57 PM, October 03, 2009  

நீ................ண்ட பதிவாக இருந்தாலும், உருப்படியான விஷயமாக இருந்ததால் மெனக்கெட்டுப் படித்தேன். அருமை. இன்றைக்கும் இப்படியான ஆசிரியர் இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் 10:10 PM, October 03, 2009  

இது நிஜமா? அல்லது ஏதாவது கற்பனைக்கதையா? ஒரே பிரமிப்பாக இருக்கிறது.

டிபிகல் பாராட்டாக இருந்தாலும் வேற வழி..

ஊருக்கு ஒரு ஜோதிமணி இருந்துவிட்டால்.!

Vetrimagal 11:36 PM, October 03, 2009  

superb!. Thanks Yuvakrishna for writing this . I could get to know about this wonderful young teacher.

Is it really possible? Sounds like a story and not real!

Hats off to you Head Master!

லவ்டேல் மேடி 10:29 AM, October 04, 2009  

நல்ல பதிவு கிருஷ்ணா...!! தோழர் ஜோதிமணியைப் போல் எல்லா பள்ளிகளுக்கும் ஒரு ஆசிரயர் கிடைத்துவிட்டால் .... நம் தல்மிலகமே சொர்கமாகும்...!! பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா..!!

சிவாஜி 12:36 PM, October 04, 2009  

நானும் இத புதிய தலைமுறையில் படித்துவிட்டு, ஒரு பதிவு போட்டுரலாம்னு பாதி டைப் பண்ணி வச்சிருந்தேன். நீங்களே பதிவிட்டு அசத்திட்டிங்க....
உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்!!!!

நான் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று தலைமையாசிரியரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அவரின் தொலைபேசி எண்ணோ அல்லது பள்ளியின் தொலைபேசி எண்ணோ கிடைக்குமா நண்பரே?

பாலா 12:57 PM, October 04, 2009  

தமிழ் நாட்டுலதான் இது நடக்கிறதா? !!!!!!!!!

ஊர்சுற்றி 7:25 PM, October 04, 2009  

நிருபர் லக்கி சாரி..
நிருபர் யுவகிருஷ்ணா வளர்க வளர்க!

வாழ்த்துக்கள் லக்கி அண்ணே.

RAJESH 11:55 AM, October 05, 2009  

மாங்குடி ஜோதிமணிக்கும்

புதிய தலைமுறை லக்கிக்கும்

வாழ்த்துக்கள்

கள்ளபிரான் 5:09 PM, October 05, 2009  

ரொம்ப ஃபாஸ்ட்னா ஆபத்து.

இப்படித்தான், சென்னை எம்.எம்.டி.ஏ காலனி அரும்பாக்கம் அரசு மேனிலைப்பள்ளிக்கதை.

பள்ளி படுமோசம். பொதுத்தேர்வில் மாணவர்களை தலைமையாசிரியர் காப்பியடிக்கத் தூண்டுவார்னா பார்த்துக் கொள்ளலாம்.

அனைவரும் தங்கள் பிள்ளைகள பிற பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்தனர். ஒன்றுமே தெரியாத ஏழை சனங்கள் குழந்தைகள் மட்டும் தொடர்ந்தன.

திடீரென ஒரு புதிய தலைமையாசிரியர் வந்து சேர்ந்தார். எல்லாமே தலைகீழானது: ஆசிரியர்களை விரட்டி வேலை வாங்கினார். சிறப்பு வகுப்ப்கள் நடாத்தப்பட்டன. விடுமுறை நாட்களில் வலிகுறைந்த மாணாக்கருக்கு. மாலையில் தன் செலவில் மாணாக்கருக்கு உணவு வழங்க, சிறப்பு வகுப்புகளுக்கு எல்லாருமே ஆஜர். everyone was motivated. அவரின் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் ஒத்துழைத்தனர். பள்ளியின் தரம் கிடுகிடுவென மேலேறியது. பிள்ளைகள இழுத்த பெற்றோர் திருமபவும் கொண்டு சேர்த்தனர். தனியார் பள்ளிகள் இப்பள்ளியுடன் போட்டி போடாமல் தவித்தன.

இதையறிந்த லோக்கல் கட்சி பெரும்புள்ளி தன் உறவைச் சேர்க்க வந்தார். தலைமயாசிரியர் மறுத்தார்.

பின்னர், தலைமையாசிரியர் பணி மாற்றலில் தூக்கியடிக்கப்படார்.பள்ளி பழைய நிலமைக்கு சென்று, இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

ஜோதிமணிக்கு லக் இருக்குமா?

taaru 12:22 PM, October 06, 2009  

"தலைமை" ஜோதி ஏற்றிய மணி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்...
நன்றி யுவா...

நரேஷ் 1:19 PM, October 06, 2009  

நல்ல பதிவு லக்கி...

பல விஷயங்கள் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன...

கடமையை சரியாகச் செய்யும் மனிதர்களைப் பார்ப்பது சற்று அரிதாகத்தான் இருக்கிறது...

ஜோதிமணி அவர்களுக்கு எனது மரியாதைகள்....

மஞ்சூர் ராசா 4:56 PM, October 07, 2009  

பள்ளிக்கும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.

தலைமையாசிரியரை வணங்குகிறேன்.

பதிவிட்ட யுவாவுக்கும், புதியதலைமுறைக்கும் நன்றி.

mugil 7:14 PM, October 08, 2009  

Good job jothimani...

Mugilan P

இரா. சதீஷ் குமார் 10:38 PM, October 10, 2009  

அருமையான கட்டுரை கிருஷ்ணா,

ஆனந்தக் கண்ணீர் வருகிறது இதைப் படிக்கும் பொழுது! அற்புதம் இந்தப் பள்ளியை முன்னேற்றி நல்லதொரு முன்னாதரணத்தை உருவாக்கிய ஜோதிமணி வாழ்க!

இவருடைய வழியை மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். மற்ற பள்ளி மாணவர்களுக்கெல்லாம் இந்தப் பள்ளியை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

நாளைய இந்தியாவிற்காண விதை முளைத்துவிட்டது, இது வேர் விட வேண்டும், ஆலமரமாக வேண்டும், நம்மால் இயன்றவரை முயற்சி செய்வோம்...

சதீஷ்

avvai7 1:03 AM, October 13, 2009  

தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி, என்பதை உணர்த்துகிறது.

ஒரு காலத்தில் -ப்ரிட்டிஷ் ஆட்சியில் - பல ஊராட்சி, நகராட்சி பள்ளிகள் இவ்வாறு இருந்ததாக பொது கருத்து. பல அரசு கல்லூரிகளும் தரமாக இருந்தன. இன்று? தலைவன் எவ்வழி....

இந்த மாணவர்கள் நிஜ உலகலத்தில் வந்து கேவலங்களை கண்டு சலிக்காமல் இருக்கவேண்டும். வேண்டுகிறேன்.

MakizNan 2:25 AM, October 19, 2009  

arumai............manam makizhchiyaka ullathu..... neenkal enkalukku vazikaattikal

இளங்குமரன் 4:37 AM, October 19, 2009  

அருமையான பதிவு. தலைமையாசிரியரை வணங்குகின்றேன். வணங்கப்பட வேண்டியவர்தான். பதிவிட்ட யுவனுக்கு நன்றி.

இளங்குமரன்

இளங்குமரன் 4:42 AM, October 19, 2009  

//இந்த மாணவர்கள் நிஜ உலகலத்தில் வந்து கேவலங்களை கண்டு சலிக்காமல் இருக்கவேண்டும். வேண்டுகிறேன்.//
avvai7 சொல்வது உண்மைதான். வெளியில் உள்ள நடைமுறைகளையும் அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். தலைமையாசிரியரின் தொலைபேசி எண்ணோ மின்முகவரியோ இருந்தால் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்.

முனைவர் மு.இளங்கோவன் 6:41 AM, October 19, 2009  

மாங்குடி பள்ளி மாறிய கதை எழுதையமைக்கு நன்றி.பாராட்டுகள்.
தலைமையாசிரியருக்குப் பாராட்டு.
இயன்ற இடங்களில் பேசுவேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

இளங்குமரன் 6:47 AM, October 19, 2009  

பதின்மூன்று வயது விசயகாந்துக்கு மின்மடல் அனுப்ப முயன்றேன். திரும்பி வந்துவிட்டது.

மகிழ்நன் 9:56 AM, October 19, 2009  

ஆசிரியல் ஜோதிமணியன் கைப்பேசி எண் கிடைத்தால் தந்துதவும் தோழர்..

வாழ்த்துச் சொல்வதற்கு/....

மகிழ்நன்
09769137032

V.Subramanian 4:30 PM, October 19, 2009  

ஓம்.
இதே போன்று மற்றுமொரு சிறந்த பணி;நன்மக்கள் இருக்கிறார்கள்/
உலகின் இளம் தலைமையாசிரியர்!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு "உலகின் இளம் தலைமையாசிரியர்' என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி.பி.சி.


இத் தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.


குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்துவருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் ஏதுமில்லை. ஆனால், பிறரைப்போல குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி.

அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த - அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர்.

ஆகையால், தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக்கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால், பாபர் அலிக்கு பி.பி.சி. புகழாரம் சூட்ட காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்துக்காக. அதாவது, அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக.

அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாள்களில் "டீச்சர் விளையாட்டு' விளையாடுவதுபோல தன் வீட்டில் ஒரு நாள் "டீச்சர் விளையா'ட்டைத் தொடங்கினார் பாபர் அலி. டீச்சர் - பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப்போனது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள்.

விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோதுதான் தெரிந்தது பாபர் அலிக்கு, தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால், பிரமித்துப்போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்!

பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக்கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். ஆசிரியர்கள்? பாபர் அலியும் அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான்.

ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார் பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள்.

பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள மூர்ஷிதாபாத் பகுதியில் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக்கூடம். மாற்றங்களுக்கு ஓர் உதாரணம் சம்கி ஹஜ்ரா (14).

இந்தச் சிறுமி தன் தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சம்கியின் தந்தை ஊனமுற்றவர். எந்த வேலைக்கும் செல்ல இயலாத நிலையில் இருக்கிறார். பாட்டியும் அப்படியே. சம்கி அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஈட்டும் சொற்பத் தொகையிலேயே இந்தக் குடும்பம் வாழ்கிறது.

பள்ளிக்கூடத்தை ஒருபோதும் அறிந்திராத சம்கி ஒரு நாள் விளையாட்டாக பாபர் அலியின் பள்ளிக்கூடத்துக்குச் சென்றார்.
சரி. பாபர் அலி அப்படி என்னதான் பாடம் நடத்துகிறார்? ""நான் என் ஆசிரியர்களிடம் கேட்பதை இவர்களுக்கு அப்படியே சொல்கிறேன்; அவ்வளவுதான்'' என்கிறார் பாபர் அலி.

-=-=-=-=-=-
ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்

Back to TOP