July 18, 2014

கருப்பு கண்டத்தின் கலங்கரை விளக்கம்!

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அவரது கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை கழிந்தது. வெளியில் வந்ததுமே அவர் முதலில் பார்க்க விரும்பிய நாடு இந்தியா. சிறைவாழ்க்கை முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கு வந்தார். ஏனெனில் இது காந்தி பிறந்த தேசம்.
ரோலிஹ்லஹ்லா மண்டேலா ஜூலை 18, 1918ல் பிறந்தார். தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பிராந்தியத்தில் ம்பாஸே நதி வளப்பத்திய பகுதியில் ம்வெஸோ என்கிற குக்கிராமம். பழங்குடியின பரம்பரை. ‘ரோலிஹ்லஹ்லா’ என்கிற சொல்லுக்கு க்ஸோஸா மொழியில் ‘கிளையை பிடித்து இழுப்பது’ என்று பொருளாம். ஆனால் பொதுவாக இச்சொல்லுக்கு அர்த்தமாகச் சொல்லுவது ‘பிரச்சினையை உருவாக்குபவன்’.
மண்டேலாவின் தந்தை ஒரு பழங்குடியினத் தலைவர். அங்கிருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்தார். வெள்ளையரின் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மண்டேலாவின் தந்தை தன்னுடைய அந்தஸ்தினை இழந்தார். உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்தான் எல்லாருக்கும் தலைவர் ஆனார். இதனால் குழந்தையாக இருந்த மண்டேலாவை தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் இடம்பெயர வேண்டியதானது.
கூனு என்கிற மற்றொரு கிராமத்துக்குச் சென்றார்கள். இது முன்பு வசித்து வந்த ம்வெஸோவை விட குக்கிராமம். பசும்புல் போர்த்திய நீண்ட சமவெளி. சாலைகள் இல்லை. கால்நடைகள் நடந்து, நடந்து உருவாக்கிய பாதைகள். உள்ளூரிலேயே விளையும் தானியங்களும், காய்கறிகளும்தான் உணவு. குழந்தை மண்டேலா களிமண், மற்றும் மரக்கிளைகளை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மைகளையும் கொண்டுதான் விளையாடினார்.
மண்டேலாவின் தந்தைக்கு தன்னுடைய மகன் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று ஆசை. புதியதாக முளைத்திருந்த தேவாலயம், வெள்ளைக்கார குழந்தைகள் பயில ஒரு பள்ளியையும் நடத்தியது. பலத்த பரிந்துரையின் பேரில் அங்கு சேர்க்கப்பட்டார் மண்டேலா. ரோலிஹ்லஹ்லா என்கிற பெயர் வாயில் நுழையாததாலோ அல்லது மதமாற்ற நோக்கத்தாலோ தெரியவில்லை. அவரது பெயர் நெல்சன் மண்டேலா என்று பள்ளிப் பதிவேட்டில் பதியப்பட்டது. அவரது பரம்பரையிலேயே பலகையும், பல்பமும் எடுத்துக்கொண்டு முதன்முதலாக கல்வி கற்க பள்ளிக்குச் சென்றவர் மண்டேலாதான்.
அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது அப்பா, நுரையீரல் நோய் காரணமாக காலமானார். தேம்பு என்கிற பழங்குடியினத்தவரின் தலைவராக இருந்த ஜோகிந்தபா, மண்டேலாவின் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். ஜோகிந்தபாவை அந்த இனத்துக்கு தலைவராக பரிந்துரைத்தவரே இவர்தான். தந்தையை இழந்த தனயனான மண்டேலாவை அவர் பொறுப்பேற்றுக் கொண்டு வளர்க்க முடிவெடுத்தார். கூனு கிராமத்திலிருந்து மோட்டார் காரில் தேம்பு மக்களின் தலைநகரான ம்கேஸ்வேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜோகிந்தபா தன்னுடைய மற்ற குழந்தைகளைப் போலவே மண்டேலாவையும் வேறுபாடு காட்டாமல் தன்னுடைய மகனாக வளர்த்தார்.
அவர்களது தாய்மொழியான க்ஸோஸாவை தவிர்த்து ஆங்கிலத்தையும் பயின்றார் மண்டேலா. வரலாறு மற்றும் புவியியல் படிப்பதில் கில்லாடி. இக்காலக் கட்டத்தில்தான் ஆப்பிரிக்காவின் வரலாற்றை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகமானது. ஜோகிந்தபாவை சந்திக்க நிறைய ஆப்பிரிக்க இனத்தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாடி தம்முடைய இன வரலாற்றை உள்வாங்கிக் கொண்டார். வெள்ளையர்கள் வருவதற்கு முன்பாக ஆப்பிரிக்க மக்கள், தமக்கென தனித்த கலாச்சாரத்தோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்பதை அறிந்ததுமே, தம் இனம் அடிமைத்தளையில் சிக்கிக் கொண்ட அவலத்தை உணர்ந்தார். தங்கள் மண், நிலம், காற்று அனைத்தையுமே வெள்ளையர்கள் வசமாக்கிக் கொண்டார்கள் என்று அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
மண்டேலாவுக்கு பதினாறு வயது. அவர்கள் வழக்கப்படி குழந்தை ஆணாக மாறும் சடங்கு ஒன்று குடும்ப விழாவாக கொண்டாடப்படும். உடலில் ஒரு அறுவைச் சிகிச்சையும் நடக்கும். இந்த சடங்கை செய்துக் கொண்டால்தான் தந்தை வழி பாரம்பரியத்தின் அந்தஸ்து கிடைக்கும். சொத்துரிமையும் உண்டு. அதற்குப் பின்னால்தான் திருமணம் செய்துக்கொள்ளக் கூடிய தகுதியுமுண்டு என்பது ஆப்பிரிக்க நம்பிக்கை. மண்டேலாவோடு இருபத்தைந்து பேருக்கு இந்த சடங்கு, பெரிய விழாவாக நடந்தது.
விழாவில் பேசிய பழங்குடி இனத்தலைவர்களில் ஒருவர், “நம்முடைய அடுத்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து மறைய விதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அவர்களே நிர்வகித்துக்கொள்ள அனுமதிக்கப்படாதவர்களாக ஆகிவிட்டார்கள். வெள்ளையர்களை அனுசரித்து, அவர்களது கால் நிழலில்தான் வாழ்வை முடிக்க விதிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்என்று பேசினார்.
மண்டேலா உள்ளிட்டவர்களுக்கு இந்த பேச்சை கேட்டதுமேஜிவ்வென்றிருந்தது.
ஜோகிந்தபாவின் மகன்களில் ஒருவராக வளர்ந்ததால், அப்பகுதியில் ஓர் இளவரசனுக்குரிய மரியாதையோடு மண்டேலா நடத்தப்பட்டார். வெஸ்லேயான் பள்ளியில் படித்தார். கடினமான உழைப்பின் காரணமாக கல்வியில் சிறந்து விளங்கினார். பள்ளிப் பருவத்தில் தடகள வீரராகவும், குத்துச்சண்டையில் வல்லவராகவும் இருந்தார். கருப்பு நிறமுடையவராக இருந்தாலும் படிப்பில் சுட்டி என்பதால், வெள்ளைக்கார மாணவர்களிடையேயும் மண்டேலாஸ்டார்’. மதோனா என்கிற அவரது முதல் பெண் நண்பரை அங்கேதான் அடையாளம் கண்டுகொண்டார்.
1939 ல் ஃபோர்ட் ஹரே பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்த காலத்தில் ஆக்ஸ்போர்டுக்கும், ஹார்வர்டுக்கும் இணையாக ஆப்பிரிக்காவில் பேசப்பட்ட பல்கலைக்கழகம் அது. ரோமன் டச்சு சட்டம் பயின்றார். இதைப் பயிலுவதன் மூலமாக சிவில் சர்வீஸ் பணியில் சேரமுடியும். ஒரு கருப்பினத்தவர் அதிகபட்சமாக அப்போதைய தென்னாப்பிரிக்காவில் சேரக்கூடிய வேலை இதுதான்.
இரண்டாம் ஆண்டு படிக்கும்போது பல்கலைக்கழகத்தின் மாணவப் பிரதிநிதி கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். உணவு உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் மாணவர்களுக்கு இருந்தது. இதை கண்டித்து, சில கோரிக்கைகளை முன்வைத்து தன்னுடைய பதவியிலிருந்து விலகினார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மண்டேலா தரப்புக்கும் மோதல் வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்தார்கள். மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்று மண்டேலாவை வலியுறுத்தினார்கள்.
ஒப்புக்கொள்ளாத மண்டேலா வீட்டுக்கு சென்றுவிட்டார். அவருடைய வளர்ப்புத் தந்தை ஜோகிந்தபாவுக்கு இது பிடிக்கவில்லை. மண்டேலா பொறுப்பற்றவராக இருக்கிறார் என்று கருதி, அவருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டார். ஒரு போராளியாக உருவெடுத்துவரும் நேரத்தில் திருமணமா என்று ஆவேசமான மண்டேலா, வீட்டை விட்டும் வெளியேறினார். ஜோகன்னஸ்பர்க் நகருக்கு இடம்பெயர்ந்து பகுதிநேர செக்யூரிட்டியாகவும், கிளெர்க்காவும் பணிபுரிந்தார். இளங்கலை பட்டத்தை தபால் வாயிலாக படித்துத் தேறினார்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் 1942ஆம் ஆண்டு மண்டேலா இணைந்தார். இனவெறி பாகுபாடுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக பங்குகொண்டார். கட்சியில் புதியதாக நிறைய இளைஞர்கள் சேர்ந்ததால், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞரணி உருவானது. மிகக்குறுகிய காலத்திலேயே இவர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் ஆதரவு பெருகி, கட்சியை விட செல்வாக்கான இடத்தை பெற்றார்கள். வெள்ளை அதிகாரிகளிடம் மனுகொடுத்து நீதியை கெஞ்சி கேட்டு பெறுவது மாதிரியான கட்சியின் அரதப்பழசான போராட்ட(?) முறைகள் வேலைக்காகாது என்று இந்த இளைஞர்கள் உணர்ந்தார்கள்.
புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், ஒத்துழையாமை, தொழிலாளர் நலன், நிலச்சீர்த்திருத்தம், அனைத்து கருப்பினக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி என்று இவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. வேறு வழியின்றி கட்சியும் இளைஞர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டது. கட்சியின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு அறவழிப் போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார் மண்டேலா.
போர்ட் ஹரே பல்கலைக்கழகத்தில் மண்டேலாவுக்கு அறிமுகமானவர் ஆலிவர் டாம்பூ. அவரோடு இணைந்து ஒரு சட்ட ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினார். மண்டேலா & டாம்பூ என்கிற நிறுவனம் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் கருப்பின மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களிலும் இலவசமாகவும் சட்ட ஆலோசனை சேவை வழங்கியது. 1956ல் மண்டேலா கைது செய்யப்பட்டார். அரசியல் தொடர்பாக அவரோடு சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் நீதிமன்றத்தில் இவர்கள் அத்தனை பேரும் விடுதலை ஆனார்கள்.
இதற்கிடையே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் ‘கருப்புப் போராளிகள்’ என்று புது போராளிகள் சிலர் புரட்சி செய்ய கிளம்பினார்கள். நீக்கு போக்கான கட்சியின் போராட்ட முறைகள் மீது அவர்களுக்கு கடுமையான அதிருப்தி இருந்தது. இவர்கள் விலகி புதியதாக கண்ட இயக்கம் ஆயுதவழி தீர்வு.
1961ல் அதுவரை அகிம்சைப் போராட்டங்கள் வாயிலாக தீர்வு காணலாம் என்று நம்பிக்கொண்டிருந்த மண்டேலாவுக்கும் வன்முறை அரசியல் மீது ஈர்ப்பு தோன்றியது. கொரில்லா முறை போர்களால் வெள்ளையர்களை வென்றுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டு, கட்சியின் கிளையாக ஒரு அமைப்பை நிறுவினார். அதே ஆண்டு நடந்த மூன்று நாள் தேசிய வேலைநிறுத்தத்தையும் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தினார். இதையடுத்து அவரை கைது செய்த வெள்ளையர் அரசு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இவ்வழக்கில் மீண்டும் 1963ல் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். இம்முறை அவருக்கும், மேலும் பத்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. அரசியல் சதி, வன்முறை என்று சகட்டுமேனிக்கு அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
தன்னுடைய இருபத்தேழு ஆண்டு சிறைவாழ்வில் பதினெட்டு ஆண்டுகளை ரோபன் என்கிற தீவிலிருந்த சிறைச்சாலையில் கழித்தார் மண்டேலா. சிறையில் இருந்தபோது காசநோயால் கடுமையாக துன்பப்பட்டார். கருப்பரின அரசியல் கைதி என்பதால் அவருக்கு முறையான சிகிச்சை கூட வழங்கப்படவில்லை. இம்மாதிரி துன்பங்களுக்கு இடையேயும் மண்டேலா லண்டன் பல்கலைக்கழகத்தில் தபால் வாயிலாக படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.
மண்டேலா சிறைக்குள்ளேயே இருந்தது தென்னாப்பிரிக்க அரசுக்கு சர்வதேச தளத்தில் கடுமையான சிக்கல்களை உருவாக்கியது. அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்ட தகவல்கள் பிற்பாடு வெளியாயின. 1981ல் அவரை சிறையில் இருந்து தப்பிக்கவிட்டு, திரும்பப் பிடிப்பதற்குப் பதிலாக சுட்டுக் கொல்லலாம் என்றுகூட ஒரு திட்டம் இருந்தது. மண்டேலாவின் சிறைவாழ்க்கைதான் தென்னாப்பிரிக்க காலனிய அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் உலகம் உற்றுக் கவனிக்க காரணமாக அமைந்தது.
1982ல் மண்டேலாவையும், அவரோடு சிறைப்பட்டிருந்த மற்ற தலைவர்களையும் பால்ஸ்மூர் சிறைச்சாலைக்கு கொண்டுச் சென்றார்கள். 1985ல் அதிபரா இருந்த பி.டபிள்யூ போத்தா, கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை விலக்கிக் கொண்டால் மண்டேலாவை விடுதலை செய்துவிடலாம் என்று ‘பண்டமாற்று’ பேச்சைத் தொடங்கினார். இது இரு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பை தோற்றுவித்தது.  நாளுக்கு நாள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ‘மண்டேலாவை விடுதலை செய்’ குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. எனவே அவ்வப்போது மண்டேலாவோடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஏகப்பட்ட முறை நடந்த பேச்சுகளிலும் பலன் ஏதுமில்லை. அதிபர் போத்தா உடல்நலம் குன்றிய நிலையில் பதவிக்கு வந்தவர் பிரெடரிக் வில்லியம். கடும் நெருக்கடியான சூழலில் பதவிக்கு வந்த இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கினார். அரசியல் அமைப்புகளுக்கு இருந்த கெடுபிடிகளை தளர்த்தினார். பிப்ரவரி 11, 1990 அன்று மண்டேலாவின் விடுதலையையும் உறுதி செய்தார்.
சிறையில் இருந்து வெளியான மண்டேலா இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு சர்வதேச அளவில் தரப்பட்டுக் கொண்டிருந்த அழுத்தம் தன்னுடைய விடுதலையால் குறைந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். 1991ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக மண்டேலா ஆனார். அதிபர் க்ளார்க்குடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் அனைத்து மக்களும் பங்குபெறும் வகையிலான தேர்தலை நடத்த ஆர்வம் காட்டினார்.
இச்சூழலில் வெள்ளையர்கள் அதிகாரத்தை கருப்பின மக்களோடு பகிர்ந்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் கருப்பின மக்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகார மாற்றம். இதனால் இரு தரப்பு பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது. கடுமையான அரசியல் அழுத்தம் மண்டேலாவுக்கு ஏற்பட்டது.
1993ஆம் ஆண்டு மண்டேலாவை விடுதலை செய்த அதிபர் கிளார்க்குக்கும், விடுதலை ஆனபிறகு நாட்டை அமைதிவழியில் வழிநடத்த உத்தேசித்த மண்டேலாவுக்கும் இணைத்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரு தரப்பும் கவுரவப்படுத்தப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த மக்களின் மனமும் அமைதியை நாடியது. ஏப்ரல் 1994ல் தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயகத் தேர்தல் நடந்தது. நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கருப்பின அதிபராக பொறுப்பேற்றார். தான் சிறையில் ரகசியமாக எழுதிய ‘சுதந்திரத்துக்கான நீண்ட பயணம்’ நூலை மண்டேலா வெளியிட்டார்.
தன்னுடைய முதல் ஆட்சிக்கால பொறுப்பில் வெள்ளையர்களின் மைனாரிட்டி அதிகாரத்தை மிக சாதுர்யமாக மெஜாரிட்டி கருப்பினத்தவருக்கு மடைமாற்றிக் காட்டினார் மண்டேலா. இரு தரப்பு மக்களும் ஒற்றுமையாக வசிக்க, விளையாட்டை ஆயுதமாக பயன்படுத்தினார். நாட்டின் மறுசீராக்கத்திலும், வளர்ச்சியிலும் வேகம் காட்டினார். புதிய வேலைகளை உருவாக்குவது, வீடு மற்றும் மருத்துவம் என்று மக்களின் அடிப்படை வசதிகளை கட்டமைத்துத் தந்தார். 1996ல் புதிய சட்ட அமைப்பினை அறிமுகப்படுத்தினார். தனிப்பெரும்பான்மையோடு கூடிய வலுவான மத்திய அமைப்பு, மைனாரிட்டி மக்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் சட்டம், கருத்துரிமை என்று மண்டேலா வடிவமைத்த சட்டம், கிட்டத்தட்ட இந்தியாவை ஒத்திருந்தது.
1999 பொதுத்தேர்தலின் போது தன்னை அரசியல் வாழ்விலிருந்து தாமாகவே விலக்கிக் கொண்டார் மண்டேலா. ஆனாலும் மக்களுக்கான அவரது பணி தொடர்ந்துக்கொண்டே இருந்தது. மண்டேலா அறக்கட்டளை மூலமாக பள்ளி, மருத்துவமனைகளை உருவாக்க நிதி திரட்டிக் கொடுத்தார்.
2001ல் அவருக்கு கேன்சர் நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. 2004ல் தன்னுடைய எண்பத்தி ஐந்தாவது வயதில் பொதுவாழ்வில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக சொன்னார்.
“இனி என்னை அழைக்காதீர்கள். நானே உங்களை அழைப்பேன்” என்று மண்டேலா அறிவித்தபோது தென்னாப்பிரிக்கர்கள் மட்டுமல்ல. உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களின் கண்களிலும் ஈரம் கசிந்தது. சிறுவயதில் தான் களிமண் பொம்மை செய்து விளையாடிய கூனு கிராமத்தில் தன்னுடைய இறுதிக்காலத்தை செலவழிக்க விரும்புவதாக மண்டேலா கூறினார்.
2010ல் தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற போது மீண்டும் மக்கள் மத்தியில் பெருத்த ஆரவாரத்துக்கு இடையில் தோன்றினார் மண்டேலா. பின்னர் அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமாவின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போதும் அவரோடு தோன்றினார்.
2011ல் தொடங்கி அவரது உடல்நலம் தொடர்ச்சியாக மோசமாகிக்கொண்டே போனது. மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அல்லாடி கடந்த டிசம்பர் 5 அன்று தன்னுடைய 95வது வயதில் காலமானார். மண்டேலா மறைந்தார். ஆனால் அவர் உயர எழுப்பிய வெள்ளைக்கொடி தென்னாப்பிரிக்காவில் பட்டொளி வீசிப் பறக்கிறது. அமைதி என்கிற சொல் உலகில் புழங்குகிறவரைக்கும், மண்டேலாவின் பெயர் யாருக்கும் எளிதாக மறந்துவிடாது.

குடும்பம்
மண்டேலாவுக்கு மூன்று முறை திருமணம் ஆகியிருக்கிறது. 1944 முதல் 1957 வரை எவலின் மாஸே என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். பின்னர் 1958ல் வின்னீயை மணந்தார். இரு மகள்கள். 1998ல் மாசேலை மணந்தார்.
அமைதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் போராடிய மண்டேலா கடைசி நாட்களில் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார். ஏனெனில் அவரது மகன்களில் ஒருவரான மகாத்தோ 2005ஆம் ஆண்டு இந்நோயால் மரணமுற்றார்.

மண்டேலாவின் கருத்துகள்
 • மனிதம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் நெருப்பு. வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் என்றுமே அணையாது.
 • ஒரு பெரிய சிகரத்தை எட்டியவனுக்குதான் தெரியும். தான் இன்னமும் எட்டவேண்டிய சிகரங்கள் ஏராளமாக இருக்கின்றன என்று.
 • சக மனிதனின் நிறத்தைக் கண்டோ, மதத்தை கண்டோ, வேறு பின்னணிகளை கண்டோ வெறுக்கவேண்டுமென்று யாரும் பிறப்பதில்லை.
 • உங்கள் எதிரியோடு அமைதியாக போகவேண்டுமென்று நீங்கள் நினைத்தால், அவனோடு நீங்கள் உறவாட வேண்டும். வேறு வழியில்லாமல் உங்களுக்கு நண்பன் ஆகிவிடுவான்.
 • முடியவே முடியாது என்றுதான் தோன்றும், எதுவுமே நிகழ்ந்து முடியும்வரை.
 • வீடுகளிலும், தெருக்களிலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும்போது சுதந்திரம் என்பது தன்னுடைய அர்த்தத்தை இழக்கிறது.
 • பாதி சுதந்திரம் என்றொரு விஷயம் இல்லவே இல்லை. சுதந்திரம் என்றாலே அது முழுமையான ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.
 • உங்களுக்கும், சகமனிதனுக்கும் புரியும் பொதுமொழியில் பேசினால், அது அவனது மூளையை எட்டும். ஆனால் அவனுடைய தாய்மொழியில் நீங்கள் பேசினால், அது அவனது இதயத்தையே தொடும்.

மண்டேலாவும் இந்தியாவும்

 • 1893ல் தன்னுடைய தன்னுடைய இருபத்தி நான்காவது வயதில் காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார். வந்த ஒரு வாரத்திலேயே அங்கு நிலவிய இனவெறி பாகுபாட்டின் கொடுமையை தனிப்பட்ட முறையில் அனுபவித்தார். இனவெறியாளர்களிடம் அடிமைப்பட்டிருக்கும் தேசங்களின் விடுதலையே மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத செயல்பாடு என்று பிரச்சாரம் செய்தார். தன்னுடைய தாய்மண்ணில்தான் காந்திக்கு இந்த ‘ஞானம்’ கிடைத்தது என்பதால் காந்தி மீதும், அவரால் விடுதலைப்பட்ட இந்தியா மீதும் நெல்சன் மண்டேலாவுக்கு அளப்பரிய மரியாதை ஏற்பட்டது.
 • மகாத்மா காந்தியின் இரண்டாவது மகனான மணிலால் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தார். அங்கே வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து ’இண்டியன் ஒப்பீனியன்’ என்றொரு குஜராத்தி-ஆங்கில பத்திரிகையையும் நடத்தினார். மக்களுக்காக நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தி பலமுறை வெள்ளை அரசால் கைது செய்யப்பட்டார். 1949ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் கூட்டம் ஒன்றில் பேசிய மணிலால், “எந்த நிபந்தனையுமின்றி காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசினார். 1956ல் தான் சாகும் வரை கருப்பர் இன மக்களுக்காக எழுதியும், போராட்டங்களை முன்னெடுத்தும் கொண்டிருந்தார். வேறு தேசத்தில் பிறந்தவராக இருந்தாலும், காந்தியையும் தம்மில் ஒருவராகவே நினைத்த கருப்பின மக்கள், அவரது மகனை தங்களுக்காக காந்தி அர்ப்பணித்ததை எண்ணி சிலிர்த்துக் கொண்டார்கள்.
 • இன விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் தாண்டிய வெற்றிகரமான தீர்வினை மகாத்மா காந்தி கண்டறிந்தார். அகிம்சைப் போராட்டங்களின் வாயிலாக இந்தியாவை காலனியாதிக்கத்தில் இருந்து அவர் விடுதலை பெற செய்தது உலகெங்கும் போராடிக் கொண்டிருந்த கணிசமான போராளிகளை ஈர்த்தது. அவர்களில் ஒருவர் நெல்சன் மண்டேலா. வன்முறை தவிர்த்த போராட்டங்களை இனி வெள்ளையர்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டும் தன் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். இந்தியாவின் விடுதலையே நெல்சன் மண்டேலாவுக்கு உந்துசக்தியை வழங்கிய நிகழ்வு.
 • ரோபன் சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் மண்டேலா எழுதிய டயரிப்பக்கங்களில் காந்தியும், இந்தியாவும் அதிகமாக இடம்பெற்ற விஷயங்கள். இந்தியாவை சத்தியாகிரகம் பெற்ற பிள்ளையென்று வர்ணித்து எழுதியிருக்கிறார் மண்டேலா.
 • நெல்சன் மண்டேலா 1990ல் விடுதலை ஆனதுமே அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டது. மண்டேலாவுக்கு முன்பாக இவ்விருதைப் பெற்ற இந்தியரல்லாத ஒருவர் எல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கபார் கான் மட்டுமே. இன்றுவரை பாரதரத்னா பெற்ற வெளிநாட்டவர் இவர்கள் இருவர் மட்டும்தான்
 • மண்டேலா விடுதலை ஆனதை தென்னாப்பிரிக்காவோடு இணைந்து, இந்தியாவும் கொண்டாடியது. கொச்சி நகரில் ஒரு சாலைக்கு அவரது பெயர் இடப்பட்டது. தலைநகர் டெல்லியிலும் ஒரு குடியிருப்புப் பகுதி அவரது பெயரால் வழங்கப்படுகிறது.
 • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குடியரசுத்தலைவராக இருந்தபோது 2004ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மண்டேலா சிறை வைக்கப்பட்டிருந்த அறையை நேரில் சென்று பார்த்தார். “தென்னாப்பிரிக்காவில் நான் கண்டதிலேயே சிறந்த இடம் இதுதான்” என்று கலாம் சொன்னார். பின்னர் குடியரசுத்தலைவராக வந்த பிரதிபா படேலும் அதே சிறை அறையை போய் பார்த்தார். “இது வழிப்பாட்டுக்குரிய இடம்என்றார்.
(நன்றி : புதிய தலைமுறை)

July 5, 2014

அடுத்த பின்லேடன்!

“அப்புறம் உங்களை எல்லாம் நிச்சயமாக நியூயார்க்கில் வந்து சந்திக்கிறேன்”

நீண்டகாலம் சிறைபட்டு கைதியாக இருந்து வெளியில் வந்து சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாளில் யாருமே உணர்ச்சிவசப்பட்டுதான் இருப்பார்கள். எதுவுமே பேசமாட்டார்கள். ஆனால் இந்த வார்த்தைகளை அமெரிக்க அதிகாரிகளை நோக்கி அபுதுவா சொல்லும்போது அவர் முகம் இறுகியிருந்தது. கண்களில் கொலைவெறி இருந்தது.

முப்பத்தி நான்கு வயதில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர், அடுத்த நான்கு ஆண்டுகளை ஈராக்கின் பக்கா கண்காணிப்பு முகாமில் கைதியாக கழித்தார். கண்காணிப்பு காலத்தில் அல்லாவே என்று அமைதியாக கிடந்த இவர் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக எல்லாம் இருக்கக்கூடியவர் அல்ல என்று அதிகாரிகள் அவர்களாகவே முடிவெடுத்தார்கள்.

சிறைகாலத்தில் அபுதுவா எந்த வம்புதும்புக்கும் சம்பந்தமில்லாதவராகவே தெரிந்தார் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏதோ ஒரு மசூதியில் கிளெர்க் ஆக பணியாற்றியதாகவும், துப்பாக்கியையும் வெடிகுண்டையும் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்பதாகவும் கற்பூரம் ஏற்றி அடிக்காத குறையாக சத்தியம் செய்தார். சந்தேகத்தின் பேரில் அமெரிக்காவின் வதைமுகாம்களில் கண்காணிப்புக்கு உட்பட்டு காரணமே இல்லாமல் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதுமாதிரி அப்பாவிகளில் ஒருவர்தான் அபுதுவாவும் என்று அதிகாரிகள் கருதினார்கள்.

2009ல் தாங்களே ரிலீஸ் செய்த அபுதுவாவின் தலைக்கு, அடுத்த இரண்டு ஆண்டில் பத்து மில்லியன் டாலரை (தோராயமாக அறுபது கோடி ரூபாய்) விலையாக அறிவிப்போம் என்று அமெரிக்கா கனவிலும் நினைத்ததில்லை. அமெரிக்க அரசின் இந்த சிறப்புப் பரிசுத் திட்டத்தில் அபுதுவாவைவிட ஒரே ஒருவர்தான் விலை விஷயத்தில் லீடிங்கில் இருக்கிறார். அவர் அல்குவைதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல்-ஸவாரி. விரைவில் அல்-ஸவாரியை முந்தி, நெம்பர் ஒன் இடத்தை அபுதுவா பெறக்கூடும் என்று கருதப்படுகிறது. அன்று சொன்னமாதிரி நிஜமாகவே அபுதுவா நியூயார்க்குக்கே வந்துவிடுவாரே என்று அமெரிக்கா அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக ஈராக்கின் பல நகரங்களை பின்லேடன் ஆதரவுப்படைகள் கைப்பற்றி வருவதாக செய்தித்தாள்களில் படித்து வருகிறீர்கள் இல்லையா, அந்த அமைப்பின் தலைவர்தான் இந்த அபுதுவா.

யார் இவர்?

அமெரிக்க இராணுவ ஆவணங்களின்படி ஈராக்கின் சமாரா நகரில் 1971ல் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. இப்ராஹிம் அவ்வாத் இப்ராஹிம் அலி அல் பத்ரி அல் சமாரி என்பது முழுப்பெயர். அபுபக்கர் அல் பாக்தாதி என்றே ஊடகங்கள் இவரை எழுதுகின்றன. இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் இடையே பிரபலமான டாக்டர் இப்ராகிம் என்கிற பெயர் இவரைதான் சுட்டுகிறது என்கிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும் பெயர் அபுதுவா.

2003ல் ஈராக்கில் அமெரிக்க ஊடுருவல் நிகழ்ந்தபோது மிகச்சிறிய அளவிலான சில போராளிக் குழுக்களை அபுதுவா தலைமையேற்று நடத்தியதாக சொல்கிறார்கள். அல்குவைதாவின் ஈராக் கிளையான ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக்) அமைப்பிலும் அவர் கவுன்சில் உறுப்பினராக இருந்ததாக தகவல். 2009ல் அமெரிக்க கண்காணிப்பு முகாமில் இருந்து விடுதலை ஆனவருக்கு சில மாதங்களிலேயே அதிர்ஷ்டம் அடித்தது. ஐ.எஸ்.ஐ. தலைவர் அபு ஓமர் அல் பாக்தாதி திடீரென்று கொல்லப்பட, அவருடைய இடம் இவருக்கு 2010 மே மாதம் கிடைத்தது. அதன்பிறகு ஈராக்கில் நடந்துவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் இவரே காரணமாக இருக்கிறார். 2011ல் அல்குவைதா தலைவர் பின்லேடன் அமெரிக்காவால் கொல்லப்பட்டபோது, அதற்காக தகுந்த முறையில் பழிவாங்கப்படும் என்றும் அமெரிக்காவை ஓர் அறிக்கை மூலம் எச்சரித்தார் அபுதுவா.

அல்குவைதாவோடு முரண்பாடு

2013 ஏப்ரலில் சிரியாவில் உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அபுதுவா முடிவெடுத்தார். ஐ.எஸ்.ஐ. அமைப்பை கொஞ்சம் விரிவுபடுத்தி சிரியாவையும் சேர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் சிரியா) என்று அமைப்பின் பெயரை மாற்றி, சிரியாவின் கலகத்தில் தானும் ஈடுபட்டார். தன்னுடைய சிறிய இராணுவத்துக்கு தலைமையேற்று போரிட்டு சிரியாவின் பல நகரங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அபுதுவாவின் இந்த தான் தோன்றித்தனமான போக்கை அல்குவைதா தலைமை ரசிக்கவில்லை. ஈராக்கோடு உங்கள் வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று எச்சரித்தபோது, இனிமேல் தாங்கள் அல்குவைதாவின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்திர இஸ்லாமிய அமைப்பு என்று அபுதுவா அறிவித்து விட்டார்.

மாயாவி ஷேக்

அபுதுவா மதக்கல்வியில் பி.எச்.டி. முடித்தவர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று மதப்பிரச்சாரத்தையும், தீவிரவாத வெறியை ஊட்டுவதிலும் தன் வாழ்நாளை செலவழிக்கிறார். உலகளவிலான ஜிகாதி அறிவுஜீவிகளின் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. பின்லேடன் மரணத்துக்கு பிறகு அல்குவைதா மீதிருந்த நம்பிக்கை இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடையே குறைந்துவரும் நிலையில், அவர்களின் கலங்கரை விளக்கமாக அபுதுவா உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக ஈராக்கில் அடுத்தடுத்து சிறைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்த இவரது நடவடிக்கைக்கு சன்னி இஸ்லாம் வகுப்பினரிடையே நல்ல வரவேற்பு.

அல்குவைதாவின் செயல்பாடுகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் செயல்பாடுகளுக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. வீடியோ டேப்புகள் மூலமாக தங்கள் நடவடிக்கைகளை உலகறியச் செய்வது அல்குவைதா பாணி. ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு அம்மாதிரி விளம்பரங்கள் மீது நம்பிக்கை இல்லை. உயிருக்கு அஞ்சாத சுமார் ஏழாயிரம் போராளிகள் அபுதுவாவின் கட்டளைக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள். தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது கண்கள் மட்டுமே தெரியும் வண்ணம் ஒரு முகமூடி அணிந்திருப்பாராம் அபுதுவா. அதனாலேயே இவரை ‘மாயாவி ஷேக்’ என்று ஜிகாதிகள் அழைக்கிறார்கள். அமெரிக்க கண்காணிப்பு முகாமில் இருந்தபோது எடுத்த ஓரிரண்டு போட்டோக்கள் மட்டும்தான் இவரை அடையாளப்படுத்தி அறிந்துகொள்ள இருக்கும் ஒரே ஆதாரம்.

நோக்கம் என்ன?

இஸ்லாமியர்களின் எல்லை என்றொரு கனவு அபுதுவாவுக்கு உண்டு. ஐரோப்பாவில் ஸ்பெயினின் வடக்கு எல்லையில் துவங்கி, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா முழுக்க ஒரே இஸ்லாமிய குடையின் கீழ் அமையவேண்டும் என்று விரும்புகிறார் (ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கனவு வரைபடத்தை காண்க). இஸ்லாமிய ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசங்களை ஷரியத் சட்டம்தான் ஆளவேண்டுமாம். இந்த லட்சியத்துக்கு முதல் படியாகதான் சிரியா, ஈராக் இரண்டு நாடுகளையும் கைப்பற்றி ஒரே ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டுமென்று சமீபமாக போராடி வருகிறார்கள். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் இவர்களது பங்கு கணிசமாக இருந்தது. ஈராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்று பாக்தாத்தை நெருங்கி விட்டார்கள்.

முதற்கட்ட வெற்றியை ருசித்தபின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் விரிவுப்படுத்தப்படுமாம். இந்தியா முழுக்க இஸ்லாமிய தேசம் என்று அபுதுவாவின் ஆதரவாளர்கள் நம்புவதால், முளையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமக்கு மிகப்பெரும் தலைவலியாக வளர்ந்து நிற்கப்போவது இவர்கள்தான்.

நிதி நிலவரம் எப்படி?

கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் நிதி திரட்டியதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. அல்குவைதாவுக்கு முன்பு நிதி கொடுத்துக் கொண்டிருந்த புரவலர்கள் பலரும் இப்போது புதிய செல்லப்பிள்ளையான அபுதுவாவையும் வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவுமின்றி தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் இருக்கும் செல்வங்களை அப்படியே சூறையாடும் பழங்கால இராணுவபாணியை இவ்வமைப்பு பின்பற்றுகிறது. சமீபத்தில் ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியபோது, அங்கிருந்த வங்கியை சூறையாடியதின் மூலமாக மட்டுமே சுமார் நானூறு மில்லியன் டாலரை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு இப்போது இரண்டு பில்லியன் டாலர் சொத்துமதிப்பு இருக்கலாம் என்றொரு கணக்கீடு.

இன்றைய நிலையில் உலகின் மிக ஆபத்தான மனிதராக அபுதுவாவை மேற்கத்திய ஊடகங்கள் விமர்சிக்கின்றன. இதுவரை உலகம் கண்டிராத வகையில் வீரமும், அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவிரவாத தலைவர், மிகக்குறுகிய காலத்திலேயே அற்புதங்களை நிகழ்த்த வல்லவர் என்பதால் அமெரிக்கா முள்ளின் மீது விழுந்த சேலையை எடுக்கும் கவனத்தில் இவரை கையாள நினைக்கிறது.

கடைசி செய்தி :

‘இஸ்லாமிய தேசம்’ உருவானது!

சிரியா மற்றும் ஈராக்கில் இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றி இருக்கும் பகுதிகளை தனிநாடாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதற்கு கலிபாவாக (மன்னராக) அபுதுவா இருப்பார் என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இனி ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற பெயரில் தாங்கள் இயங்கப்போவதில்லை, தங்களுடைய அமைப்பையே ‘இஸ்லாமிய தேசம்’ என்கிற பெயரில்தான் நடத்தப்போகிறோம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

(நன்றி : புதிய தலைமுறை)

July 1, 2014

போலாம் ரைட்!

“மோசமான சர்வீஸ்” என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். “எவ்வளவு உழைச்சாலும் நல்ல பேரே இல்லைங்க. ஜனங்களுக்கு நன்றியே கிடையாது” என்று போக்குவரத்துத் துறையினரும் புலம்புகிறார்கள். பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டாலும் தமிழகத்தை பொறுத்தவரை பொது போக்குவரத்தின் சூப்பர் ஸ்டார் பஸ்தான்.

நாட்டிலேயே அதிக அரசுப் பேருந்துகள் தமிழகத்தில்தான் ஓடுகிறது. 1972ல் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்டதில் தொடங்கும் இத்துறையின் வரலாறு படைத்திருக்கும் மகத்தான சாதனைகள் ஏராளம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வெறும் முப்பது பஸ்களோடு சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட சேவை இது. இன்று தோராயமாக இருபதாயிரம் பேருந்துகள். ஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்கள். நிர்வாக வசதிக்காக எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் அரசுப்பேருந்து போக்குவரத்துத் துறை தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளா, கர்னாடகா, பாண்டிச்சேரி என்று அண்டை மாநிலங்களுக்கும் பஸ் விட்டு தென்னிந்தியாவுக்கே பெரும் சேவை செய்து வருகிறது.

அதிலும் தமிழக அரசு நடத்திவரும் சேவையில் இருக்குமளவுக்கு வகை வகையான பேருந்துகள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. நகர நெரிசலை கணக்கில் கொண்டு நகரப்பேருந்து மற்றும் தாழ்தளப் பேருந்து, புறநகர்ப் பகுதிகளை நகரோடு இணைக்கும் புறநகர்ப் பேருந்து, பெரிய நகரங்களுக்கு இடையே ஓடும் வீடியோ கோச் மற்றும் டீலக்ஸ் பேருந்து, பிசினஸ் ட்ரிப் அடிக்கும் தொழிலதிபர்களின் தேவையை மனதில் நிறுத்தி அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து, பெருநகரங்களை இணைக்கும் வண்ணம் சொகுசான பயணம் தரும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட செமி ஸ்லீப்பர் கோச் பேருந்து, வால்வோ பேருந்து என்று டிசைன் டிசைனாக பட்டையைக் கிளப்புகிறார்கள்.

“எல்லாம் சரிதான். ஆனால் கஸ்டமர் சர்வீஸ் படுமோசம். கண்டக்டர்கள் பயணிகளுக்கு மரியாதையே தருவதில்லை. வயதான பயணிகளையும் கூட ஒருமையில் ஏய்ச்சுகிறார்கள். டிரைவர்கள் வேண்டுமென்றே ஸ்டாப்பிங்கை விட்டு தள்ளிதான் நிறுத்துகிறார்கள். எப்போதுமே சரியான சில்லறையை பையில் வைத்திருக்க முடியுமா. சில்லறை இல்லையென்றால் ‘வள்’ளென்று விழுகிறார்கள். நேரத்துக்கு வண்டிகள் வருவதில்லை. சாதாரண ஒயிட் போர்ட் பேருந்துகள் அபூர்வம். சொகுசுப் பேருந்து என்று போர்ட் மாட்டி கொள்ளை அடிக்கிறார்கள். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். முதல்வரோ, போக்குவரத்துத்துறை அமைச்சரோ ஒருமுறை மாறுவேடத்தில் பஸ்ஸில் பயணித்தால்தான் மக்களின் கஷ்டம் அவர்களுக்கு தெரியும்” என்று பொறிந்துத் தள்ளுகிறார் சென்னையில் பணிபுரியும் ஆக்னஸ். வழக்கமாக பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அத்தனை பேருமே சொல்லி வைத்தாற்போல இதேபோலதான் பொங்குகிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. குறுகிய தூர பயணமோ அல்லது நீண்டதூர பயணமோ, பயணம் என்பது பணிகள் தடையற நடப்பதற்கும், தொழில்வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. சமூகமும், பொருளாதாரமும் இணையும் புள்ளி போக்குவரத்தில் இருக்கிறது. சாலைவழி போக்குவரத்துதான் பிரதானம் எனும்போது பேருந்து போக்குவரத்தில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாத் தரப்பினரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய தன்மை கொண்டவை.

பொதுவாக தமிழக போக்குவரத்துத்துறை மீது பயணிகளால் சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

* அடிக்கடி பேருந்து வருவதில்லை. குறிப்பாக காலை அலுவலகம்/பள்ளி/கல்லூரி நேரங்களில் போதுமான இடைவெளியில் பேருந்துகள் தேவை. குறைவான வண்டிகள் இயக்கப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாகி பயணிப்பவர்களுக்கு நரகவேதனையாக அமைகிறது.

* பெரும்பாலான பேருந்து வழித்தடங்கள் வசூலை மனதில் கொண்டே திட்டமிடப்படுகின்றன. இதனால் செல்லவேண்டிய இடத்துக்கு இரண்டு, மூன்று பேருந்துகள் பிடித்து செல்லவேண்டியதால் ஏற்படும் காலதாமதம், போக்குவரத்து நெரிசல், மனவுளைச்சல்.

* சமீப காலங்களில் அரசு போக்குவரத்து நிறுவனங்களில் கட்டண உயர்வு இரண்டு மூன்று மடங்காக ஏறிவிட்டது. சாதாரணப் பேருந்துகளையே கூட சொகுசுப்பேருந்து என்று பெயர் மாற்றி அநியாயமாக கொள்ளையடிக்கிறார்கள்.

* பேருந்து நிலையங்கள் குறைந்த இடைவெளி இல்லாமல் மிக தூரமாக அமைக்கப்படுகின்றன. இதனால் நீண்டதூரம் நடந்துவந்து பஸ் ஏறவேண்டியிருக்கிறது. சில குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் எல்லா பஸ்களும் நிற்பதில்லை.

* குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்கள் வருவதில்லை. வருமென்று உறுதிசொல்ல ‘டைம் கீப்பர்கள்’ இருப்பதில்லை. எனவே நீண்டநேரம் காத்திருத்தலிலேயே ஒரு பயணி காலம் கழிக்க வேண்டியிருக்கிறது.

* இரவு நேரங்களில் பேருந்து நிலையங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகளிடமிருந்து பயணிகளை பாதுகாக்க போக்குவரத்துத்துறை எந்த ஏற்பாடும் செய்வதில்லை.

* பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அழுக்காக, சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றன.

* மோசமான நிலையில் பராமரிக்கப்படும் பேருந்துகளால் விபத்துகள் நேருகின்றன.

“இதில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டுகளே அல்ல. இவை உலகளவில் எல்லா நாடுகளிலுமே பஸ் போக்குவரத்து குறித்து சொல்லக்கூடிய பொதுவான விஷயங்கள்தான். மற்ற மாநிலங்களுக்கு போய் பஸ்ஸில் பயணித்துப் பார்த்தால், தமிழகம் எவ்வளவு மேல் என்பதை அறிவீர்கள். நம்முடைய பேருந்துகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் மேலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போகுமளவுக்கு சாலை வசதிகள் இல்லை. இப்போதே போக்குவரத்துச் சிக்கலில் முழி பிதுங்குகிறது. எனவேதான் சிறியரக பேருந்துகளை சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். படிப்படியாக இச்சேவை எல்லா நகரங்களுக்கும் விரிவாக்கப்படலாம்.

சேவைதான் என்றாலும் நாங்களும் அரசுக்கு லாபம் காட்டவேண்டிய அல்லது குறைந்த நஷ்டத்தை கணக்கு காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே வசூலையும் கூட மனதில் வைத்து பேருந்து வழித்தடங்களை முடிவு செய்கிறோம். அதிலென்ன தவறு. இத்தனைக்கும் கட்டணத்தைப் பொறுத்தவரை லாப நோக்கில் நாங்கள் நிர்ணயிக்கவில்லை. எரிபொருள் விலையேற்றம், வாகனங்களின்/உதிரிபாகங்களின் விலையை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட நாங்கள் செய்துவரும் சேவை மிகக்குறைந்த விலை சேவைதான்.

சில டிப்போக்களில் சாதாரணப் பேருந்துகளின் போர்டை சொகுசுப் பேருந்து என்று மாற்றி ஓட்டுகிறார்கள். அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்தந்த டிப்போ மேலாளர்கள் அதிக வசூல் காட்டி சாதனை புரியவேண்டும் என்கிற ஆர்வக்கோளாறில் செய்யும் செயல் இது. தகுந்த ஆதாரங்களோடு செய்யப்படும் புகார்களுக்கு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துதான் வருகிறோம்.

மேலும் குறைகளே இல்லாமல் இயங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் இல்லை. இப்போது இருக்கும் கட்டமைப்பை வைத்து, எவ்வளவு சிறப்பாக செய்யமுடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்கிறோம். பொதுபோக்குவரத்து குறித்து அரசின் கொள்கைகளிலேயே மாற்றங்கள் கொண்டுவந்தால்தான் சரிசெய்ய முடியும். இவற்றையெல்லாம் செய்ய பெரும் நிதி தேவைப்படும். நம்முடைய நிதி ஒதுக்கீட்டில் போக்குவரத்துக்கு பெரிய ஒதுக்கீடும் இல்லை” என்றார் போக்குவரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற ஊர்களில் தனியார் பஸ்கள் ஓடுகின்றன. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களின் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை தனியார் மீதும் வைக்கலாம். ஆனால் மக்களோ தனியாரை ‘அட்ஜஸ்ட்’ செய்துக் கொள்கிறார்கள்.

“திங்களூரிலிருந்து தினமும் ஈரோடுக்கு தனியார் பஸ்ஸில்தான் போகிறேன். முன்பு எங்கள் ஊருக்கு நிறைய பஸ் விடவேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் தனியார் வண்டிகள் நிறைய வந்தபிறகு அந்த கோரிக்கைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. நடுத்தர வர்க்கத்துக்கு பஸ் ஒரு வரம். இருசக்கர வாகனமோ/காரோ பயன்படுத்தினால் நம்முடைய வருமானத்தில் பெரும் பகுதியை அது எடுத்துக் கொள்ளும்” என்கிறார் ஈரோட்டில் வீடியோகிராபராக பணியாற்றும் மூர்த்தி.

“அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பேருந்தையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை நகரில் மட்டும் சுமார் மூவாயிரம் பேருந்துகள் ஓடுகின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்காக வேண்டும். அதற்கேற்ப நகரின் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கும் நாம், நம்முடைய பேருந்துகளில் ஜி.பி.எஸ் போன்ற வசதிகளை ஏற்படுத்தினால் பயணம் என்பது குறைகளற்ற நல்ல அனுபவமாக மக்களுக்கு அமையும்” என்கிறார் சென்னை கனெக்ட் அமைப்பின் திட்ட இயக்குனரான ராஜ் செருபால்.

சிறப்பான பேருந்து சேவையை மேம்படுத்தி மக்களுக்கு அளிக்க அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?

* உலகளாவிய தர அளவுகோல்களையொட்டி வடிவமைக்கப்படும் பேருந்துகளை அரசு வாங்க வேண்டும். நிற்பதற்கு வசதியாக நிறைய இடம், உடல் ஊனமுற்றோர் பயன்படுத்த வாகான படிக்கட்டு மற்றும் இருக்கைகள், லக்கேஜ் வைக்க வசதி, சைக்கிள்களை ஏற்ற இடம் போன்றவை ஒருங்கே அமையுமாறு பேருந்துகளை உருவாக்க வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகளை நம்பாமல் பேருந்து நிறுத்தங்களில் நிலையங்களை போக்குவரத்து நிறுவனமே கட்ட வேண்டும். வெயில்/மழை படாமல் இருக்க தரமான மேற்கூறை, அமருவதற்கு வசதி, இரவுகளிலும் பயணி பாதுகாப்பை உணர மின்னொளி வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றுக்கு முறையான பராமரிப்பு ஆகியவற்றை உருவாக்க வேண்டும். முக்கியமான பேருந்து நிலையங்களில் நவீன கழிப்பறை வசதி கட்டாயம் அமையவேண்டும்.

* பயணிகளோடு டிரைவர்/கண்டக்டர் ஆகியோருக்கு நல்லுறவு கட்டாயம். இதை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கண்டக்டர்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் ஸ்மார்ட்கார்ட் போன்ற டிக்கெட் முறைகளை அறிமுகப்படுத்தலாம்.

* பெரும்பாலான மக்கள் நீண்டதூர பயணங்களை திட்டமிடும்போது போய் சேரவேண்டிய இடங்களுக்கு பஸ் வசதி இருக்கிறதா, இருந்தால் எத்தனை மணிக்கு கிளம்பும் போன்ற விவரங்கள் தெரியாததாலேயே ரயில் போக்குவரத்தை பெரிதும் விரும்புகிறார்கள். அரசு போக்குவரத்து சேவை குறித்த தகவல்களை இருபத்து நான்கு மணி நேரமும் இலவசமாக தர ‘கால் சென்டர்’ போன்ற அமைப்பை நிறுவலாம்.

* பேருந்து வழித்தட சேவையை பொறுத்தவரை கருத்தியல்ரீதியாக அந்தந்த பகுதி மக்களின் பங்கேற்பும் இருந்தால் நல்லது. போக்குவரத்து அதிகாரிகள் தாம் பணிபுரியும் பகுதிகளில் இருக்கும் மக்கள் நல அமைப்புகளோடு நல்லுறவில் இருக்க வேண்டும்.

June 30, 2014

இலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?

“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பவுத்த பிக்குகளால் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்களை அவ்வறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டிருந்தது. இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மதமோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

அளுத்கமாவில் வெடித்த கலவரம்

இலங்கையின் மக்கள்தொகையில் இஸ்லாமியர் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக நெடுங்காலமாகவே பவுத்த பிக்குகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இவர்களது பிடியில் இலங்கை போய்விடக்கூடாது என்று வலியுறுத்தி ஆங்காங்கே கூட்டங்கள், பேரணிகள் நடத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலமாக சென்று அவர்களுக்கு எதிராக கோஷம் இட்டு வந்தனர். இப்படிதான் இருதரப்புக்கும் இடையே மோதல் சமீபமாக தொடங்கியது.
ஒரு ஞாயிறு மாலை அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியிலிருக்கும் அளுத்கமா, பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் நடந்த பேரணியில் கடுமையான வன்முறை ஏற்பட்டது. மூன்று முஸ்லிம்கள் பலியாகினர். எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மசூதிகள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடக்க சிதறி ஓடினர்.

வேடிக்கையான முரண் என்னவென்றால், மத வன்முறையால் ஆங்காங்கே மோதல்களும், நாடு முழுக்க மக்கள் மத்தியில் மனதளவிலான பதட்டமும் நிலவிவரும் இதே வேளையில் பொலிவியாவில் ராஜபக்‌ஷேவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. அங்கிருந்தபடியே கூலாக “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று அதிபர் அறிவிக்கிறார்.

யார் தூண்டியது?

வலதுசாரி புத்தமத குழுவான ‘போது பல சேனா’ (புத்த வீரப்படை) என்கிற அமைப்புதான் இப்பகுதியில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்திருக்கிறது. இவர்கள் நடத்திய பேரணியில்தான் இஸ்லாமியரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த பேரணியில் புத்த வீரப்படையின் தலைவர் கலகோடா அத்தே ஞானசரா, மதவெறுப்பு தொனிக்க படுமோசமாக பேசியிருக்கிறார். “எந்த இஸ்லாமியராவது இனி சிங்களர்கள் மீது கைவைக்க நினைத்தால் – குறிப்பாக புத்த துறவிகளை சீண்டினால் – அதுதான் இஸ்லாமியர்களின் இறுதிநாளாக இருக்கும்” என்று அவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இவரது பேச்சை கேட்டதுமே வெறிபிடித்த கூட்டம் அப்படியே இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு போய் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏராளமானோர் வீட்டை விட்டு வெளியேறி அங்கிருக்கும் மசூதியில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர்.

குரான் எரிப்பு

“ஒவ்வொரு இரவையும் அச்சத்தோடே கடக்கிறோம். காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை” என்று அப்பகுதி இஸ்லாமியர் சர்வதேச ஊடகங்களிடம் குமுறுகிறார்கள்.
“எங்கள் வீட்டை அடித்து நொறுக்கியவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் எங்களை ஆபாசமாக ஏசினார்கள். வீட்டுக்குள் இருந்த குரானை கொண்டு போய் நடுரோட்டில் போட்டு எரித்தார்கள்” என்று கண்கலங்குகிறார் எண்பது வயது பன்சியா ஃபைரூஸ்.

கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம்களில் இருவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருக்கிறது. நான்காவதாக கொல்லப்பட்ட ஒருவர் தமிழர். ஒரு இஸ்லாமியரின் நிறுவனத்தில் காவல்காரராக பணிபுரிந்த அவர்மீதும் கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த வன்முறை வெடித்ததற்கு முந்தைய நாள் ஒரு புத்தமத துறவி மீது இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தாக்கினார்கள் என்றொரு தகவல் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“புத்த வீரப்படை இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும் அமைப்பில்லை. இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். அன்று எங்கள் தலைவர் கொஞ்சம் காட்டமாக பேசியது உண்மைதான். ஆனால் வன்முறையை தூண்டவில்லை. எல்லா மக்களும் அமைதிவழியில் வாழவேண்டும் என்றுதான் அவர் கேட்டுக்கொண்டார்” என்று புத்தவீரப்படையின் தலைமை செயலரான திலந்தா வித்தனாகே அவசர அவசரமாக மறுத்திருக்கிறார்.

அரசியல் ஆகிறது மதம்

மியான்மரை போலவே இலங்கையிலும் பவுத்தமதம் அரசியலில் ஆளுகை செலுத்த முயல்கிறது. அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு நெருக்கமானவர்கள், அமைச்சரவை சகாக்களே கூட மதவன்முறையை ஊதிப்பெருக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இலங்கை அரசின் சட்டத்துறை அமைச்சரான ஹக்கீமே கூட இச்சம்பவங்களை குறிப்பிட்டு, “பவுத்தர்கள் நடத்திய தாக்குதலை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இலங்கை அரசில் அங்கம் வகிப்பதற்காக நான் அவமானப்படுகிறேன்” என்று குமுறினார்.

அமைதியை விரும்பும் புத்த துறவியான வடாரகா விஜிதா தெரோ இருதரப்பு மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை புத்த வீரப்படையின் ஞானசரா வெளிப்படையாகவே அவரது அமைதிப்பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். சில வாரங்களுக்கு முன்பாக உடல் முழுவதும் ஆழமான வெட்டுக்காயங்களோடு கொழும்புவின் புறநகர் சாலை ஒன்றில் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடந்தார் விஜிதா தெரோ.
புத்த வீரப்படைக்கு அதிபர் ராஜபக்‌ஷேவின் மறைமுக ஆசி இருக்கிறது என்று வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை அதை அதிபரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்த கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என்று சுமார் முன்னூறு பேர் புத்தவீரப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஞானசராவின் மதவெறி பேச்சுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்றுகோரி கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள்.

பொலிவியா நாட்டின் ஜி-77 சந்திப்பு முடிந்ததுமே நாடு திரும்பிய ராஜபக்‌ஷே பாதிக்கப்பட்ட இஸ்லாமிய கிராமம் ஒன்றுக்கு நேரில் சென்றார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடுநிலைமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதிகூறினார். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருக்கிறோம் என்று காவல்துறையும் அறிவித்திருக்கிறது.
ஆனால், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. புத்த வீரப்படை மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று அரசினை நோக்கி கேட்கிறார்கள் இஸ்லாமியர்கள். அரசு எதுவும் செய்யக்கூடிய எண்ணத்தில் இல்லை என்பதுதான் கடைசிக்கட்ட நிலவரம்.

(நன்றி : புதிய தலைமுறை)

June 28, 2014

துலக்கம்

அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை பிறழ்ந்தவன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு பழகிய அனுபவம் கொண்டவரான பாலபாரதி இந்த செய்தியை ஓர் இணையத்தளத்தில் வாசிக்கிறார். அவருக்குள் ஒரு குறுநாவலுக்கான கரு தோன்றுகிறது. அதுதான் ‘துலக்கம்’.

சமீப பத்து, பதினைந்து வருடங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு மாற்றங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டு வருகிறது. வாழ்வு குறித்த புரிதல்களை தெளிவாக்கிக் கொண்டு, அதை எதிர்கொள்வது குறித்த தீர்வுகளை முன்வைப்பதே பொதுவாக இலக்கிய நாவல் மரபு. உயர்தர மொழி கட்டமைப்பில், எளிய வெகுஜனவாசகர்கள் சுலபத்தில் அணுகிவிட முடியாதபடி, அறிவுஜீவிகள் பொத்தி பொத்தி பாதுகாத்த இலக்கியம் இன்று அனைவருக்குமானதாக மாறிவருகிறது. குறிப்பாக சிறு பத்திரிகைகள் தங்களுடைய கறார்தன்மையில் சமரசம் செய்துகொண்டு ‘எல்லோருக்குமானது இலக்கியம்’ என்று செயல்பட துவங்கியிருக்கும் காலக்கட்டம் இது. இதன் மூலமாக இதுவரை தீவிர இலக்கியம் என்று பேசப்பட்டதற்கும், வெகுஜன வாசிப்புக்கான எழுத்துகளுக்கும் இடைநிலையில் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமாக உருவாகி வருகிறார்கள். மரபான நாவல்முறையை உடைத்து புதிய வடிவங்களை முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பின்நவீனத்துவ எழுத்தாளர்களும் இதே காலக்கட்டத்தில்தான் கோலோச்சி வருகிறார்கள் என்றாலும், அவர்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்பவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

இந்த புதிய போக்கில் பத்திரிகையாளர்களும் புனைவிலக்கியம் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருப்பது ஒரு முக்கியமான திருப்பம். குறிப்பாக பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற எழுத்தாளர் மனோஜை குறிப்பிடலாம். முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை தமிழில் எழுதியிருக்கும் இவரது எழுத்துப்பாணி ‘ரிப்போர்ட்டிங் ஸ்டைல்’ என்று சொல்லக்கூடிய வெகுஜன பத்திரிகை நடையில், இதுவரை இலக்கியம் என்று நம்பப்பட்ட மதிப்பீடுகளை கதையாக்குவது. ‘துலக்கம்’ நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். யெஸ்.பாலபாரதியும் சுமார் பதினைந்து ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர். குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதை நேரடியாக அங்கேயே சென்று, குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு ரிப்போர்ட்டிங் செய்தவர்.

‘துலக்கம்’ – காணாமல் போன ‘அஸ்வின்’ என்கிற சிறுவனைப் பற்றிய துல்லியமான ரிப்போர்ட்டிங். இருவேறு கிளைகளில் பிரிந்து பயணிக்கும் கதையை, கடைசி அத்தியாயத்தில் ஒன்றிணைக்கும் வழக்கமான பாணிதான் என்றால், பத்திரிகையாளருக்கே உரிய விவரணைகளோடு ‘ஆட்டிஸம்’ என்கிற மனகுறைபாடு குறித்த பார்வையை எல்லோருக்குள்ளும் ஆழமாக விதைக்கிறது.

நகரில் கள்ளநோட்டு கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் இதற்காக நகரெங்கும் ஊடுருவியிருப்பதாக ஒரு தகவல். இத்தகைய சூழலில் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒரு சிறுவன் மாட்டுகிறான். தோற்றத்திலும், நடவடிக்கையிலும் வித்தியாசமாக தோன்றும் அவன்மீது சந்தேகப்படுகிறார்.

இதே நேரம் சென்னை புறநகர் மடிப்பாக்கத்தில் கல்யாண் என்பவர் தன்னுடைய மகன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவனுக்கு ஆட்டிசப் பாதிப்பு இருப்பதாக விசாரணையில் கூறுகிறார். புகாரை வாங்கும் போலிஸ்காரர்களோ ஆட்டிஸம் என்பதை மனநிலை தவறியதாக புரிந்துக் கொள்கிறார்கள். இப்படியாக இரண்டு டிராக்குகளில் கதை நகர்கிறது.

முருகன் தன்னிடம் மாட்டிய சிறுவனை விசாரிக்கும் முயற்சியில் ‘ஆட்டிஸம்’ பற்றி அறிந்துக் கொள்கிறார். கல்யாண் தன்னுடைய மகன் தொலைந்த சோகத்தில் இருக்கும்போது ப்ளாஷ்பேக்கில், தன் குழந்தைக்கு ஆட்டிஸம் என்று கண்டறிந்ததில் இருந்து, அதிலிருந்து அவனை மீட்க செய்யும் போராட்டங்கள் என்று கதை விரிகிறது.

துலக்கம் என்கிற சொல்லுக்கு குத்துமதிப்பாக ‘விசாரணை’ என்று பொருள் கொள்ளலாம். ‘துப்புதுலக்குவது’ என்று ஏற்கனவே நமக்கு பரிச்சயமான வார்த்தையில் வரும் ‘துலக்குவது’தான் துலக்கம். ஆட்டிஸம் குறித்த விசாரணை என்று துலக்கத்தின் ஒன்லைனர் அமைந்திருப்பதால், மிக கச்சிதமாக கதைக்கு தலைப்பு பொருந்துகிறது.

கரணம் தப்பினாலும் டாக்குமெண்டரி ஆகிவிடக்கூடிய கதையை சுவாரஸ்யமான நடையில் சிறப்பான நாவலாக உருவாக்கியிருக்கிறார் பாலபாரதி. அனேகமாக ‘ஆட்டிஸம்’ குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவலாக இதுவாகதான் இருக்கக்கூடும். எழுதத் தெரிந்த யாருமே எதைப்பற்றியும் எழுதிவிடலாம் என்று தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் இம்மாதிரி குறிப்பிட்ட ஒரு பிரச்சினை சார்ந்த எழுத்தை எவ்வித தர்க்கப்பிழையுமின்றி எழுதுவதற்கு சலிக்காத உழைப்பும், அப்பிரச்சினை குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும். பாலபாரதிக்கு இருந்திருப்பதால் ‘துலக்கம்’ சாத்தியமாகி இருக்கிறது. எளிதில் வாசிக்கக்கூடிய நடையை மிகக்கவனமாக அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால், ‘ஆட்டிஸம்’ குறித்த விழிப்புணர்வு எல்லா தரப்புக்கும் போய்ச்சேர வேண்டும் என்கிற அக்கறை இருப்பதை உணரமுடிகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வாசித்தாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கச்சிதமான எடிட்டிங். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்துக்கு மட்டுமல்ல, சமூகம் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்த புரிதலுக்காகவும் துலக்கத்தை அனைவரும் வாசிக்கலாம்.

நூல் : துலக்கம்
எழுதியவர் : யெஸ்.பாலபாரதி
பக்கங்கள் : 128
விலை : ரூ.85
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணாசாலை, சென்னை-600 002
போன் : 044-42634283/84 மின்னஞ்சல் : books@vikatan.com

‘துலக்கம்’ நூல் வெளியீடு, நாளை மாலை சென்னையில் நடக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.