26 நவம்பர், 2015

கதைக்கார தேவர்

“யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு. எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது.

எட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத்தின் டைட்டிலிலேயே ‘கதை : தேவர் கதை இலாகா’ என்று பெயர் வரும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள். அந்த பிரசித்தி பெற்ற கதை இலாகாவின் தூண்களில் ஒருவராக இருந்தவர் கலைஞானம்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் குறித்த தன்னுடைய நினைவலைகளை தினகரன் தீபாவளி மலருக்காக பகிர்ந்துக் கொண்டார்.
“எல்லாம் தேவரோட ஆசி. நான் நல்லா இருக்கணும்னு முதல் சந்திப்பிலேயே விரும்பினவரு அவரு. அப்போதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருந்தேன். சிவம்னு ஒருத்தரு தேவரண்ணனோட குழுவில் இருந்தவரு. அவர்தான் என்னை அண்ணன் கிட்டே அழைச்சிட்டுப் போனாரு.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நான் எழுதிக்கொடுத்த படங்களோட பேரையெல்லாம் வரிசையா சொன்னவரு, ‘இதையெல்லாம் நீதானே எழுதினே’ன்னு கேட்டாரு. ‘ஆமாம்’னு சொன்னேன். ‘கோபாலகிருஷ்ணனே அருமையா கதை சொல்லுவாரு. அவரையே நீ கதை சொல்லி அசத்தியிருக்கே. கெட்டிகாரன் தாம்பா’ன்னு பாராட்டினாரு.

கொஞ்ச நேரம் பேசிட்டு, குடும்ப நிலவரத்தை விசாரிச்சாரு. அப்போ நான் பெருசா சம்பாதிக்கலை. அதை சொன்னதும், ‘அடப்பாவி, இவ்வளவு ஹிட்டு கொடுத்துட்டு இன்னும் ஒண்ணும் சேர்த்து வைக்கலையா?’ன்னு கேட்டாரு.

உடனே தன்னோட தம்பிகிட்டே சொல்லி பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. என் கையிலே கொடுத்து, ‘இது வெறும் அட்வான்ஸ்தான். இதை எடுத்துட்டு ஊருக்குப் போய் ஏதாவது நிலபுலன் வாங்கி போட்டுட்டு வா. எதிர்காலத்துக்கு உதவும். மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’னு சொன்னாரு. இப்படிதான் நான் தேவர் கிட்டே சேர்ந்தேன்.

தேவரோட இருந்த ஒவ்வொருத்தருக்கும் இதுமாதிரிதான் அனுபவம் இருக்கும். அறிமுகமானவுடனேயே ஒருத்தர் மேலே அளவில்லாமே அக்கறை காட்ட தேவராலே மட்டும்தான் முடியும்.

தேவர் கிட்டே வேலைக்கு சேர்ந்ததுமே தினமும் ஒரு கதை சொல்ல சொல்லுவாரு. கதை இலாகாவை சேர்ந்தவங்களுக்கு இது மட்டும்தான் வேலை. நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம். அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு. பிடிக்கலைன்னா துப்பிடுவாரு. பிடிச்சிருந்தா உடனே ஓக்கே பண்ணி வெச்சுப்பாரு. ஏதாவது படம் படப்பிடிப்பிலே இருந்தாகூட கேப் விடமாட்டார். நாங்க அடுத்தடுத்த படத்துக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்களையெல்லாம் ஆசையா ‘டேய் கதைக்காரனுங்களா...’ன்னுதான் கூப்பிடுவாரு.

அவரும் சுவாரஸ்யமா கதை சொல்லுவாரு. அண்ணன் சொல்ல ஆரம்பிச்சாருன்னா நேரம் போறதே தெரியாது. அவரோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்தையும் மனசு திறந்து எங்களிடம் சொல்லியிருக்காரு.
சின்ன வயசுலே அண்ணன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை நல்லா பலமா வெச்சிருப்பாரு. கோயமுத்தூர் ராமநாதபுரம் பகுதியிலே ‘மாருதி உடற்பயிற்சி நிலையம்’னு இருந்துச்சி. அங்கேதான் அண்ணன் பயிற்சி பண்ணுவாரு. அவருக்கு சினிமாவிலே பெரிய ஸ்டண்ட் கலைஞரா வரணும்னு ஆசை. அங்கேதான் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி செய்ய வருவார். இப்படியாக ரெண்டு பேருக்கும் நட்பு மலர்ந்துச்சி.

அண்ணன் மாச சம்பளத்துக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்லே வேலைக்கு சேர்ந்துட்டாரு. ஷூட்டிங் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. அவருக்கு மாசாமாசம் சரியா சம்பளம் வந்துடும். ஆனா அப்போ எம்.ஜி.ஆர் காண்ட்ராக்டுலே இல்லை. அதனாலே அவருக்கு வேலை இருந்தாதான் காசு. குடும்ப கஷ்டம்.

ஒருமுறை தேவரண்ணன் எம்.ஜி.ஆர் வீட்டு வழியா நடந்து போய்க்கிட்டிருக்காரு. அப்போ எம்.ஜி.ஆரோட தாய் சத்யாம்மா தெருவிலே மிரண்டுப்போய் நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன்ன்னு இவரு கேட்டிருக்காரு. ‘காசு வாங்கிட்டு வர்றேன்னு முதலாளியை பார்க்க ராமச்சந்திரன் போயிருக்கான். அவன் வந்து காசு கொடுத்தப்புறம்தான் அரிசி வாங்கி சமைக்கணும். இப்பவே இருட்டிடிச்சி. புள்ளை பசியோட வருவான். என்ன செய்யுறதுன்னு தெரியலை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. தேவருக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சி.

உடனே தன்னோட வீட்டுக்கு ஓடிப்போனவரு சமையலறைக்கு போய் அரிசிப்பானையிலே இருந்து அரிசியை எடுத்து தன்னோட சட்டை, டவுசர் பாக்கெட்டில் எல்லாம் நிரப்பிக்கிட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஓடியிருக்காரு. அந்த அரிசியை கொடுத்து சீக்கிரமா சோறு வடிச்சி வைங்கம்மான்னு சொல்லியிருக்காரு.

நைட்டு வீட்டுக்கு வந்துப் பார்த்த எம்.ஜி.ஆர், சாதம் தயாரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார். சத்யாம்மா என்ன நடந்ததுன்னு மகன் கிட்டே சொல்லியிருக்காங்க. அப்படியே நெகிழ்ந்துப் போயிட்டாராம் எம்.ஜி.ஆர்.

பிற்பாடு எம்.ஜி.ஆரை வெச்சி தேவர் எப்படி அதிகப் படங்கள் தயாரிச்சாருங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணம். ஒருத்தரு மேலே ஒருத்தரு அவ்வளவு அன்பு ஆரம்பத்துலேருந்தே வெச்சிருந்தாங்க.

தேவருக்கு கல்யாணமாகி குழந்தைகள்லாம் பிறந்திருந்தது. சினிமாவையெல்லாம் மறந்துட்டு கோயமுத்தூரில் பால் கடை நடத்திக்கிட்டிருந்தாரு. நேர்மையா வியாபாரம் பார்க்குறவரு என்பதால் பிசினஸ் நல்லா இம்ப்ரூவ் ஆச்சி. பழைய சினிமா ஆளுங்க அப்பப்போ வந்து தேவரை பார்த்து பேசிட்டு போவாங்க. அப்படிதான் ஒருமுறை கேமிராமேன் விஜயனும், நடிகர் எஸ்.ஏ.நடராஜனும் பேசிக்கிட்டிருந்தாங்க.

பேச்சுவாக்கிலே நாமளே படம் தயாரிக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. மூணு பேரும் காசு போட்டு படக்கம்பெனி ஆரம்பிச்சாங்க. பால் வியாபாரத்துலே சேர்த்த காசை தேவரண்ணன் முதலீடா போட்டாரு.

படம் பேரு ‘நல்ல தங்கை’. எஸ்.ஏ.நடராஜனே நடித்து இயக்கினார். கதை, வசனம் ஏ.பி.நாகராஜன். நம்பியார், ராஜசுலோசனா, மாதுரிதேவின்னு நடிக நடிகையர் எல்லாம் ஸ்டார்ஸ். படம் பூஜை போட்ட அன்னிக்கே நல்லா வியாபாரம் ஆச்சி. நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த நேரத்துலே ஒரு பிரச்சினை. பார்ட்னர் ஒருத்தர் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ புதுமுக நடிகை ஒருத்தர் கிட்டே நடந்துக்கிட்டு, விஷயம் தேவரண்ணன் காதுக்கு வந்துச்சி. இப்படியே போச்சின்னா தன்னோட பேரும் கெட்டுப் போயிடும்னு தேவர் போய் அவரோட சண்டை போட்டாரு. அடிதடி லெவலுக்கு போக அப்புறம் எல்லாரும் வந்து சமரசம் பண்ணி, தேவரண்ணன் தன்னோட பங்கை பிரிச்சி வாங்கிக்கிட்டாரு.

சினிமா ஃபீல்டுக்குள்ளே நுழையணும்னு ஆசைப்பட்டு இப்படி ஆகிப்போச்சேன்னு அவருக்கு வேதனை. ஏ.பி.நாகராஜன்தான் சமாதானப்படுத்தி, ‘நீங்களே தேவர் பிலிம்ஸ் என்கிற பேருலே படக்கம்பெனி ஆரம்பிக்கலாமே?’ன்னு யோசனை சொன்னாரு. தேவருக்கு படக்கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியாவை விட கம்பெனிக்கு ஏ.பி.என். சொன்ன பேரு ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பத்தை அப்படியே சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தி.நகரில் சின்னதா ஒரு ஆபிஸ் போட்டாரு. இப்படிதான் புகழ்பெற்ற தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தோன்றிச்சி.
முதல் படமே எம்.ஜி.ஆரை வெச்சிதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாரு. அதுதான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் எடுக்குறப்பவே தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கதையோட முடிவு விஷயத்தில் சின்ன மனஸ்தாபம். இதனாலே அடுத்து ரஞ்சனை வெச்சி நீலமலைத் திருடன் எடுத்தாரு தேவர். இதுவும் வெற்றிப்படம் தான்னாலும் ‘தாய்க்குப் பின் தாரம்’ அடைந்த வெற்றியை தொட முடியலை. அடுத்து ‘செங்கோட்டை சிங்கம்’னு ஒரு படம். இது ஓடலை. ஜெமினியை வெச்சி ‘வாழவைத்த தெய்வம்’ எடுத்தாரு. சுமாராதான் போச்சி. ‘யானைப்பாகன்’, ‘கொங்கு நாட்டு தங்கம்’னு அடுத்தடுத்து ரெண்டு ஃபெய்லியர்.

தேவர் ஃபிலிம்ஸ்லே கலகலத்துப் போயிடிச்சி. இனிமேல் தேவர் அவ்வளவுதான்னு எல்லாரும் அவரை விட்டு விலக ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கோயமுத்தூருக்கே திரும்பப்போய் ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம்னு அண்ணன் முடிவெடுத்திருக்காரு. அப்போதான் நாகிரெட்டி நிலைமையை கேள்விப்பட்டு கூப்பிட்டு அனுப்பியிருக்காரு. ‘நீங்க தொடர்ந்து சினிமா தயாரிக்கணும்’னு சொல்லி அவரோட ஸ்டுடியோவில் எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுக்கலாம். காசு பத்தியெல்லாம் பிற்பாடு பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு.

சரி. ஒருமுறை முயற்சிக்கலாம்னு அண்ணனும் சாங்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு வேலையை தொடங்கினாரு. அப்போ எம்.ஜி.ஆருக்கு கால் உடைஞ்சிருந்த சமயம். யதேச்சையா அண்ணனும், அவரும் வாகினி ஸ்டுடியோவில் எதிர்படுறாங்க. ஏற்கனவே இருந்த மனஸ்தாபத்தாலே அஞ்சு வருஷம் பிரிஞ்சிருந்த நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கட்டி தழுவிக்கிறாங்க. தன்னைப் பத்தி பேசாம, எம்.ஜி.ஆரோட நலனைப் பத்தி மட்டுமே விசாரிச்சிக்கிட்டிருந்தாரு தேவர்.

அப்போ எம்.ஜி.ஆர் செஞ்ச ஒரு காரியம் மகத்தானது. தேவரை தன்னோடவே தன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். அவரோட தாய் சத்யபாமா படத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் மவுனமா நின்னாங்க. ‘அண்ணா! என் தாய் மீது ஆணை. இனிமேல் நீங்க எப்போ என்னை கேட்டாலும் கால்ஷீட் இல்லைன்னு சொல்லமாட்டேன்’னு சத்தியம் பண்ணினாரு.

சத்தியபாமா தாய் சொர்க்கத்திலிருந்தே தேவரை ஆசிர்வதிச்சிருக்கணும். உடனே தான் எடுத்துக்கிட்டிருந்த படத்துக்கு எம்.ஜி.ஆரை ஹீரோவா போட்டாரு. தேவர், படத்துக்கு வெச்ச பேரை பார்த்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய குசும்புக்காரருன்னு தெரியும். எம்.ஜி.ஆர் செய்த சத்தியத்தை நினைவுறுத்தும் விதமா ‘தாய் சொல்லைத் தட்டாதே’ன்னு பேரு வெச்சாரு.

அதில் தொடங்கி அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வெச்சி பதினாறு படம் தயாரிச்சாரு. எம்.ஜி.ஆர் படம் எடுக்கலைன்னா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் மிருகங்களை வெச்சி படம் எடுப்பாரு. பக்திப்படம் எடுப்பாரு. இந்திக்கெல்லாம் போய் ராஜேஷ்கண்ணாவை வெச்சு ‘ஹாத்தி மேரா சாத்தி’யெல்லாம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். தேவர் பிலிம்ஸ் என்றால் நாடு முழுக்க தெரியுமளவுக்கு கம்பெனியை வளர்த்தார். கதையை முதல்லேயே பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு குறுகிய காலத்துலே படப்பிடிப்பை முடிச்சி நாற்பது, நாற்பத்தஞ்சி நாளில் முழுப்படத்தையும் எடுத்துடுவாரு. உழைப்புக்கு தாராளமா ஊதியம். அதே நேரத்தில் வேலையில் கறாரான கண்டிப்புங்கிறதுதான் தேவரோட ஃபார்முலா.

தன் கூட இருக்குறவங்களும் தன்னை மாதிரியே முன்னேறனும்னு நெனைக்கிற பரந்த மனசு. என்னை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார் தேவர். ‘எல்லாத்தையும் நானே கூட இருந்து முடிச்சிக் கொடுக்கறேன்’னு வாக்கும் கொடுத்தார். நானும் உற்சாகமா போய் முதன்முதலா ரஜினியை ஹீரோவா புக் பண்ணினேன். வில்லன் வேஷம் பண்ணிக்கிட்டிருக்குறவரை ஹீரோவாக்குறியே, சரிபடாதுன்னு தேவர் விலகிட்டாரு. அவரு பேச்சை கேட்கலைன்னு என் மேலே கோவம் கூட பட்டாரு.
எப்படியோ கஷ்டப்பட்டு ‘பைரவி’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினேன். முதல் காட்சி முடிந்ததுமே தேவரண்ணன் கூப்பிட்டு அனுப்பினாரு. ‘நீ ஜெயிச்சிட்டடா’ன்னு சொன்னாரு. எனக்கு குழப்பமாயிடிச்சி. இப்போதானே முதல் காட்சியே முடிந்திருக்கு, அண்ணன் நம்மளை சமாதானப்படுத்த சொல்றாரோன்னு நெனைச்சேன். ‘நீங்க படம் பார்த்த அதே தியேட்டர்லேதாண்டா நானும் மாறுவேஷத்துலே பார்த்தேன். படம் பிரமாதம். நீ ஜெயிச்சிட்டே’ன்னு திரும்பச் சொன்னாரு. அப்போதான் அண்ணன் என் மேலே எவ்வளவு அக்கறையா இருந்திருக்காருன்னு தெரிஞ்சது.

நான் இந்தப் படத்தை தயாரிச்சிக்கிட்டிருந்த நேரத்துலே தினமும் பூஜையிலே உட்கார்ந்து, நான் ஜெயிக்கணும்னுதான் முருகனை வேண்டிக்கிட்டிருந்திருக்காரு. தயாரிப்பாளர் ஆயிட்டதாலே பொம்பளை, தண்ணீன்னு கெட்ட பழக்க வழக்கம் பக்கமா போறேனான்னு ஆளுங்களை வெச்சி கண்காணிச்சி இருக்காரு. அப்படியெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் என்னோட வெற்றியையே அங்கீகரிச்சாரு.

எந்த ரஜினியை வெச்சி படம் பண்ணக்கூடாதுன்னு அண்ணன் எனக்கு சொன்னாரோ, அதே ரஜினியை வெச்சி மூணு படம் அடுத்தடுத்து பண்ணனும்னு ஆசைப்பட்டாரு. என்னை கதைகூட ரெடி பண்ணச் சொன்னாரு. அந்த படம்தான் ‘தாய் மீது சத்தியம்’.

அதுக்காக அவரோட ஆபிசுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தேன். ஊட்டியிலே அமிதாப்பச்சனை வெச்சி தேவர் எடுத்துக்கிட்டிருந்த படத்தோட ஷூட்டிங். அதுக்கு கிளம்பிக்கிட்டிருந்தார். ஆபிஸில் அப்போ கொஞ்சம் கையாடல் மாதிரி ஊழல்கள் நடந்து, தேவரண்ணன் கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தார். ஒரே நேரத்துலே மூணு படம் எடுக்கற டென்ஷன் வேற. முருகன் படத்துக்கு முன்னாடி நின்னு, “ஏண்டா என்னை இப்படி சோதிக்கறே? சீக்கிரமா என்னை கூப்பிட்டுக்கடா”ன்னு மனமுருக வேண்டினார். எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடிச்சி.

மூணு நாள் கழிச்சி செய்தி வந்தது. எங்களை வாழவைத்த தெய்வம் எங்களை விட்டுப் போனது. அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே முருகன் அவரை அழைச்சிக்கிட்டான். இத்தனைக்கும் தேவரண்ணனுக்கு அப்போ வயசு வெறும் அறுபத்தி நாலுதான். நாற்பது வயசுலேதான் அவரோட சினிமா வாழ்க்கையே தொடங்கிச்சி. மிகக்குறுகிய காலத்தில் அப்படியொரு அமரப்புகழை அடைந்த மகத்தான சாதனையாளர் அவர். சினிமா எப்படி எடுக்கணும்னு கத்துக்கணும்னா, தேவர் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு மனிதன் எப்படி வாழணும்னாலும் அவருதான் எல்லாருக்கும் பாடம்”

(நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2015)

20 நவம்பர், 2015

கவர்ச்சி பாதி, அதிரடி மீதி!

உலகை காக்க வருகிறார் உலகநாயகன்...
‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூரு’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் ‘தினகரன் வெள்ளிமலர்’ வாசகர்களுக்கு ஜேம்ஸ்பாண்டை அறிமுகப்படுத்துவதும். நீங்களெல்லாம் சாதா வாசகர்களா என்ன, உலக வாசகர்கள் இல்லையா. உங்களுக்குத் தெரியாத எதை நாங்கள் புதியதாக எழுதிவிட முடியும்?

விதவிதமான துப்பாக்கிகள், எல்லா ‘சைஸிலும்’ பேரழகிகள், நவீனரக கார்கள், மிடுக்கான கோட் ஷூட், கொடூரமான வில்லன்கள், கொலை நடுக்கம் ஏற்படுத்தும் ஆக்‌ஷன் காட்சிகள், ரத்த அழுத்தத்தை எகிறவைக்கும் சேஸிங் சீன்... இதெல்லாம் இல்லாமல் என்ன ஜேம்ஸ்பாண்ட் படம்?

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உலகம் ஜேம்ஸ்பாண்டை ரசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நம் தாத்தாவும் ஜேம்ஸ்பாண்ட் ரசிகராக இருந்தார். நம் அப்பாவும் 007க்கு வெறியராக இருந்தார். நமக்கும் அந்த பிரிட்டிஷ் உளவாளி மீது அத்தனை மோகம். தலைமுறைகளை கடந்த ரசனை இது. ஒவ்வொரு படம் வெளிவரும்போதும், அந்தந்த காலக்கட்டத்தின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு ஜேம்ஸ்பாண்ட் தன்னை சாஃப்ட்வேர் மாதிரி அப்டேட் செய்துக் கொள்கிறார் என்பதே அவரது நிஜமான வெற்றி.

நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பார். உயரிய லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார். தீயவர்களுக்கு தீ. அதிவேகமாக காரை ஓட்டும் அதே அனாயசமான ஸ்டைலை, அழகிகளை ஓட்டும்போதும் காட்டுவார். நவீன ஆயுதங்களை கையாளுவதில் ராட்சஸன். உலகம் சுற்றும் வாலிபன். இனம், மொழி, நாடு, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். இத்தகைய கல்யாண குணங்கள் கொண்ட மாப்பிள்ளையை யாருக்குதான் பிடிக்காது?

உலக வரலாற்றை கிமு, கிபி என்று பிரிப்பதைக் காட்டிலும் இ.உ.போ.மு, இ.உ.போ.பி என்று வகைபடுத்துவதுதான் நியாயம் (குழம்பாதீர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன், பின் என்பதின் சுருக்கம்தான்). உலகம் அதுவரை சந்தித்திராத வகையில் ஹிட்லர் என்கிற மாபெரும் வில்லன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என்று வகைதொகை இல்லாமல் வல்லரசு நாடுகளின் வலிமையை அசைத்துப் பார்த்தான். அயலுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று உலகநாடுகள் பல விஷயங்களை கவலையோடு மீள்பரிசோதனை செய்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். எதிர்காலம் குறித்த அச்சம் அரசுகளுக்கு மட்டுமின்றி, சாதாரண சிவிலியன்களையும் பாடாய் படுத்தியது. அர்த்தமில்லா அச்சம், பனிமூட்டமாய் உலகை சூழ்ந்திருந்த காலக்கட்டம் அது.

“எங்களையெல்லாம் காப்பாத்த ஒரு வேலாயுதம் வரமாட்டானா?” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்டும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார். ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா? எங்க கிட்டே வாங்க’ என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஜேம்ஸை பிரசவித்தவர் பிரபல நாவலாசிரியர் இயான் ஃப்ளெமிங். அந்த காலத்தில் ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி, ஐரோப்பாவில் ரொம்ப பிரபலம். அந்த வங்கியின் உரிமையாளர் குடும்பத்தில்தான் ஃப்ளெமிங் பிறந்தார். இவர், முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வங்கித் தொழிலை கவனிக்க தயாரான நிலையில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. நாட்டை காக்க ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவராவது இராணுவசேவைக்கு போவது அப்போது கடமையாக இருந்தது. ஃப்ளெமிங், அச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். தன்னுடைய பணியில் மகத்தான சாகஸங்களை நிகழ்த்தி, இங்கிலாந்தின் ஹீரோவாக வேண்டும் என்று தினம் தினம் கனவு கண்டார். அதற்கான சந்தர்ப்பங்கள் சரியாக வாய்க்காத நிலையில் தன் கனவுகளை கதைகளாக மூளைக்குள் அடுக்கத் தொடங்கினார். தன்னுடைய சகப்பணியாளர்களிடம் போர் முடிந்தபிறகு ஓர் உளவாளியை நாயகனாக்கி நாவல் எழுதப்போவதாக சொல்லுவார். கதையின் சம்பவங்களாக தன்னுடைய கனவுகளை விவரிப்பார்.

போர் முடிந்தது. அட்வெஞ்சரான பணிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற சலிப்பில் கடற்படைப் பணியில் இருந்து ஃப்ளெமிங்கும் விலகினார். சாகஸமானப் பணியை தேடி பத்திரிகையாளர் ஆனார். சில ஆண்டுகளில் அதுவும் வெறுத்துப் போக, போர்க்கால கனவுகளை தூசுதட்டி நாவல் எழுத உட்கார்ந்தார்.

என்ன எழுதுவது என்று திட்டவட்டமான ஐடியாவே இல்லை. என்னதான் சிந்தித்தாலும் மப்பாகவே இருந்தது. தன்னையே ஹீரோவாக கருதி எழுத ஆரம்பித்தார். இயல்பிலேயே மந்தமானவராக அமைந்துவிட்ட ஃப்ளெமிங், தன்னுடைய ஹீரோவையும் மிஸ்டர் மந்தமாக உருவாக்க விரும்பினார். அவனுக்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை. தன் பெயரை சூட்டி, தன் குடும்பப் பாரம்பரியத்தையே கேவலப்படுத்தவும் மனமில்லை. மொக்கையான வேலையை செய்பவருக்கு மொக்கையான பெயர்தான் இருக்கும். அதுமாதிரி எந்த சுவாரஸ்யமுமில்லாத வேலையை செய்துக் கொண்டிருப்பவர் ஒருவரின் பெயரை சூட்டலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அக்காலத்தில் அமெரிக்காவில் பறவையியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இருந்தார். நாள் கணக்கில் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் அந்த வேலைதான் இருப்பதிலேயே மொக்கையான வேலை என்று முடிவுகட்டிய ஃப்ளெமிங், அவரது பெயரையே தன்னுடைய ஹீரோவுக்கு நாமகரணம் செய்தார். இந்த பெயரை கேட்டாலே, கேட்பவருக்கு மந்தமான ஃபீலிங் உருவாகும் என்று நம்பவும் செய்தார். அந்த பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட்.
‘எம்.ஐ-6’ என்கிற ரகசிய பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனத்தை தன் புனைவில் சிருஷ்டித்தார். 007 என்பது அதன் உளவாளியான ஜேம்ஸ்பாண்டின் ரகசியக் குறியீட்டு எண். தான் விரும்பி உண்ணும் உணவு, லிமிட்டாக சிப்பும் ‘சரக்கு’, ஸ்டைலாக ஊதும் சிகரெட்டு, நாகரிகமாக அணியும் உடை அனைத்தையுமே ஜேம்ஸுக்கு சொந்தமாக்கினார். ஆனால், ஃப்ளெமிங் திட்டமிட்டது மாதிரியாக இல்லாமல் ஜேம்ஸ்பாண்ட் சுவாரஸ்யமாக உருவானான். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். வேண்டுமென்றால் தலைவர் ஸ்டைலாக புகை பிடிக்கும் இந்தப் படத்தைப் பாருங்கள். புரியும்.

1953ல் ஜேம்ஸ்பாண்ட் நாவல் நாயகனாக பிறந்து, சரியாக பதினோரு ஆண்டுகள் கழித்து 1964ல் ஜேம்ஸை உருவாக்கிய ஃப்ளெமிங் மறைந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் உருவாக்கிய ஹீரோவை வெள்ளித்திரையில் கிடைக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1962ல் ‘டாக்டர் நோ’ படம் மூலமாக, நாவலில் சாகஸங்கள் செய்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், சினிமாவுக்கும் தாவினார்.

ஃப்ளெமிங்கின் காலத்துக்குப் பிறகு ஜான் காட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமான எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி சீரியல், வீடியோ கேம்ஸ், சினிமா, மொபைல் அப்ளிகேஷன்கள் என்று ஜேம்ஸ் இடம்பெறாத வடிவமே கிடையாது.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா வுட்டு மாஸ் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்ட் தாக்கத்தில் இருந்து தப்பவே முடியாது. சினிமாக்களில் மட்டுமல்ல. நம்மூர் சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் வரும் துப்பறியும் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்டின் பரம்பரைதானே? அந்தகால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது? லேடி ஜேம்ஸ்பாண்டு கூட உண்டு தெரியுமா? விஜயசாந்தி வேறு யார்?
ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட். இந்த வரலாற்று ஆராய்ச்சி எதற்கென்றால் இன்று முதல் ஜேம்ஸ்பாண்ட் இந்தியாவை காக்கவும், கலக்கவும் வருகிறார் ‘ஸ்பெக்டர்’ மூலமாக. ‘ஸ்பெக்டர்’ என்றால் Special Executive for Counter Intelligence, Terrorism, Revenge and Extortion என்பதன் சுருக்கம். அதற்கு அர்த்தம் தேடி ரொம்ப காய வேண்டாம். மக்களுக்கும் எதிரான மொள்ளமாறி அமைப்பு என்று புரிந்துக் கொண்டால் போதும்.

ஐரோப்பாவில் போன மாதமும், அமெரிக்காவில் இம்மாத தொடக்கத்திலும் வெளியாகிவிட்ட ‘ஸ்பெக்டருக்கு’ கறாரான விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள்தான் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அறிவுஜீவி விமர்சகர்களை வழக்கம்போல புறந்தள்ளிவிட்டு ஜேம்ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். வசூல் மழை கொட்டோ கொட்டுவென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஸ்பெக்டர்’ இந்தியாவில் வெளியான பிறகு இந்த மழை, சுனாமியாகக்கூடும் என உலக சினிமா வானிலை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த குமணன் என்பவர் ஜோஸியம் சொல்லியிருக்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் சினிமா வரிசையில் இது 24வது திரைப்படம். மெக்ஸிகோவின் ‘டே ஆஃப் டெட்’ திருவிழாவில் ஆரம்பக்கும் காட்சியில் தொடங்கி, இறுதி வரை விறுவிறுப்பாக படம் போகிறது என்று ஜேம்ஸ் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். ‘ட்ஜாங்கோ அன்செய்ன்ட்’ படத்துக்காக ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோப் வால்ட்ஸ்தான் வில்லன் என்பது எதிர்ப்பார்ப்புகளை எகிறச் செய்கிறது. செக்ஸ் பாம் மோனிகா பெலூச்சியின் தாராளக் கவர்ச்சி, தீபாவளிக்குப் பிந்தைய போனஸாம். இப்படத்தின் பாண்ட் கேர்ளான லியா சீடோக்ஸும் சும்மா கும்மென்று இருப்பதாக படம் பார்த்தவர்கள் வெட்கத்தோடு சொல்கிறார்கள்.

முந்தைய ஜேம்ஸ் படமான ‘ஸ்கைஃபால்’தான் இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களிலேயே வசூலை அதிகமாக வாரிக் குவித்தது. அதை இயக்கிய சாம் மெண்டிஸே ‘ஸ்பெக்டரையும்’ இயக்கியிருக்கிறார்.

ரைட்டு. நாம் பேசிப்பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஜேம்ஸ் படங்கள் பேசுவதற்கானவை அல்ல. பார்த்து ரசித்து கொண்டாடி தீர்ப்பதற்கானவை. ஹேப்பி ஜேம்ஸ் டே!

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

14 நவம்பர், 2015

சுப்பாண்டியின் சாகசங்கள்!


சுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண்டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்?

சுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.

இந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வரைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.

அம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.

இந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.

சுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏற்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.

பல மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்?

Imitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.

எதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.

விஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.

முதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இதெல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.
வழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

ஹேப்பி ரீடிங் ஃப்ரண்ட்ஸ்!

10 அக்டோபர், 2015

துக்ளக் பிறந்த கதை!

‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.

நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.

நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).

சோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.

“பொறுப்பில்லாமே கண்டதையும் எழுதினா எவன் லைசென்சு கொடுப்பாண்ணேன்?”

“இப்போ கொடுத்திருக்கீங்களே? மேடை ஏத்திட்டேனே? அப்படின்னா யார் பொறுப்பில்லாதவா?”

“வண்டி ஓட்ட லைசென்சு கொடுக்கிறதுங்கிறது, உங்களுக்கு ஓட்டத் தெரியும்னுதான். அந்த வண்டியை எடுத்துட்டுப் போய் எவன் மேலேயோ மோதி விபரீதம் ஆயிடிச்சின்னா அதுக்கு லைசென்ஸ் கொடுத்தவனா பொறுப்பு?”

“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா?”

இதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும் சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின் முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே நேரம், இந்த சம்பவம்தான் சோவை துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல் விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.

சோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால் சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ, பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும் இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.

பிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ முயற்சிக்கிறார்.

“அதெல்லாம் எதுக்குங்குறேன்? அப்படி இல்லைன்னா நீங்க சோவே இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார். அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.

பார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி, நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.

சோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.

“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா?” என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.

“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று பதிலடி கொடுத்தார் சோ.

“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான்? எவன் படிப்பான்?” மாணவர்களின் பதிலடி.

“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”

அடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான் பத்திரிகை தொடங்கலாமா?” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ் விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன ‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).

ஆனால்-

பத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள்.

‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ. 

1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.

எண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.

ஆனால்-

சோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’ என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.