29 செப்டம்பர், 2014

மக்களுக்கு தண்டனையா?

பெங்களூர் தீர்ப்பு கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.

நீதித்துறைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கும் இடையேயான மோதல் என்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. லல்லு, ஜெ தண்டனைகளுக்குப் பிறகு நீதித்துறையின் கை சற்றே ஓங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஏராளமான குழப்பங்களை எதிர்காலத்தில் நாம் சந்திக்க நேரிடும். ஜனநாயக நாட்டில் ’மக்கள்தான் மகேசர்கள்’ என்று சொல்லப்படும் கூற்று வெறும் வார்த்தைஜாலமாக உருமாறக்கூடும். நீதித்துறையினை நடத்துபவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால் அரசு தலைமை ஏற்பவர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்கிற அடிப்படையான வேறுபாட்டை நாம் அறிய வேண்டும். நேரடி மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத இந்திய ஜனாதிபதி, தன்னிச்சையாக தன்னுடைய சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்தத் தொடங்குகிறார் என்று கற்பனை செய்து பார்ப்போம். விளைவு என்னவாகும்? அதுவேதான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

ஊழல் ஒழிப்பு, ஊழல் தடுப்பு ஆகியவை நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமானவை. ஆனால் ஊழலுக்கே வாய்ப்பில்லாத மெக்கானிஸத்தை நம் அரசியலமைப்பு உருவாக்குவதுதான் ஊழலை ஒழிக்கக்கூடிய நிஜமான நடவடிக்கையாக இருக்கும். நடந்துவிட்ட ஊழல்களுக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டோம் என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்வது நமக்கு எவ்விதத்திலும் பெருமையல்ல. சர்வதேச அரங்கில் நாம் தலைகுனியக்கூடிய நிகழ்வுகள்தான் இவை.

மூன்று முறை மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலிலேயே போட்டியிட முடியாது என்கிற நிலையை எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் என்று நாம் நினைக்க இடமேயில்லை. ஏனெனில் பக்கத்து வீடு எரிந்தால், தன் வீடு என்னவாகும் என்பது அவர்களுக்கும் தெரியும். எதிர்காலத்தில் ஒரு தலைவரின் மீதோ, கட்சியின் மீதோ பொய்வழக்கு புனையப்பட்டு - ஆனால் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகள் உருவாக்கப்பட்டு - தண்டனைகள் கிடைக்கும் பட்சத்தில் அது ஜனநாயகத்துக்கு நல்லதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். உதாரணத்துக்கு செப்.27 அன்று கோபாலபுரம் வீட்டுக்கு கல்லெறியச் சென்றவர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கல்லெறியச் சென்றவர்கள் தந்த புகாரின் பேரில் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. டிகுன்ஹா மாதிரி ஒரு நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இருவருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கினால் அது சரியான நீதியாக அமையுமா?

1996ல் பதியப்பட்ட ஒரு வழக்குக்கு 2014ல் தீர்ப்பு என்பதே இந்திய நீதித்துறையின் பலவீனத்தைதான் காட்டுகிறது. 1991-96 ஆட்சிக்காலத்தில் அவர் குற்றமே செய்திருக்கட்டும். பதினெட்டு ஆண்டு காலம் கழித்து, வயதுமுதிர்ந்த நிலையில் இருப்பவருக்கு சிறைத்தண்டனை என்பது மனிதாபிமான பார்வையிலும் சரியானதாக இருக்க முடியாது. ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்றால், அதற்கு உரிய காலத்தில் தண்டனை தந்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திய நீதி மட்டுமல்ல, காலம் தாழ்த்திய தண்டனையும் கூட சரியானதல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கை தாமதப்படுத்தினார் என்று சால்ஜாப்பு சொல்லப்போனால் அதுவும்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. வாய்தா கொடுத்ததும் நீதிமன்றங்கள்தானே? விலக்கு கேட்கும்போதெல்லாம் கொடுத்த நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தானே தாமதத்துக்கு காரணம்? கண்டிப்பு காட்டி வழக்கை விரைவாக நடத்தவேண்டிய பொறுப்பு யாருக்கு அதிகம்?

91-96 ஆட்சிக்காலத்தில் செய்த ஊழலால் அவர் 2014ல் தொடங்கி அடுத்து பத்தாண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தகுதியற்றவர் ஆகிறார். ஆனால் இடையில் 2001-06 மற்றும் 2011-14 அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக இருமுறை பொறுப்பேற்றிருக்கிறார். இப்போது தேர்தலிலேயே நிற்க தகுதியற்றதாக நீதிமன்றம் கருதக்கூடிய ஒருவர் இருமுறை மக்களால் பெருவாரியாக ஆதரவளிக்கப்பட்டு முதல்வராக இருந்திருக்கிறார் என்பது இந்திய நீதிபரிபாலனத்தின் போதாமையா? தகுதியற்ற ஒருவர் என்று நீதிமன்றம் இன்று கருதுபவர், மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மக்களும் குற்றவாளிகளா? இதனால் தமிழக மக்கள் மீதும் வழக்கு தொடர்ந்து, விசாரித்து அவர்களுக்கும் இந்திய நீதித்துறை தண்டனை வழங்கப் போகிறதா?

8 செப்டம்பர், 2014

பாம்புக்கு பயப்படலாமா?


பாம்பாட்டியும் வேண்டாம். மகுடியும் வேண்டாம்.
முதலுதவி செய்ய பயிற்சி இருப்பதைப் போல பாம்பை பிடிக்கவும் பயிற்சி இருக்கிறது ...


ஆறரை அடி நீளம் இருக்கும். சாரைப்பாம்பு. அசால்டாக கையில் பிடித்து தெருவில் நடந்துச் சென்றவரைப் பார்த்து திருநின்றவூரே ஆச்சரியப்பட்டது. நாமும்தான். சுற்றி நின்ற மக்கள் அச்சத்தோடு பார்த்தது அவரையா அல்லது பாம்பையா என்று தெரியவில்லை.

“சார் நீங்க பாம்பாட்டியா?”

“இல்லைங்க நான் ஷங்கர்” என்றவாறே பிடித்த பாம்பை ஒரு கருப்புநிற பையில் அடைத்தார்.

“என்ன சார் செய்யப்போறீங்க?”

“இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தாருன்னா யாராவது விஷயம் தெரியாம அடிச்சி கொன்னுடுவாங்க. பாதுகாப்பான வேற இடத்தில் விட்டுட்டு வந்துடுவேன்” என்று பைக் டேங்கில் பாம்பு இருந்த கருப்புப்பையை வைத்துக்கொண்டு கிளம்பினார். நாமும் கூடவே கிளம்பினோம். ஆள் நடமாட்டமில்லாத ஒரு ஏரிக்கரைக்கு போனார். பையைத் திறந்தார். சுதந்திரக் காற்றை சுவாசித்த சாரையார் சர்ரென்று நெளிந்து வளைந்து மறைந்தார்.

சங்கரிடம் பேசினோம்.

“எனக்கும் பாம்புன்னா ரொம்ப பயம் சார். சினிமாவிலே ரஜினிகாந்த் பயப்படுவாரே அதுமாதிரி ஆரம்பத்துலே பயந்துக்கிட்டிருந்தேன். பிறந்ததிலிருந்தே நகரத்தில் வளர்ந்து நகர நரகம் அலுத்திடிச்சி. அதனாலேதான் கொஞ்ச வருஷம் முன்னாடி சென்னையிலிருந்து இடம்பெயர்ந்து இவ்வளவு தூரம் திருவள்ளூர் பக்கம் வந்து கிராம வாழ்க்கைக்கு தயாரானோம். நான், மனைவி, இரண்டு குழந்தைகள், அம்மா, அப்பா.

அழகான தோட்டம். நிறைய செடி கொடி. சுத்தமான காத்து. வாகன சத்தங்களோ, நகர சந்தடியோ சற்றுமில்லை. நாங்களே இயற்கை முறையில் தோட்டத்தில் விளைவிக்கிற காய்கறிகள்னு வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமாதான் போயிக்கிட்டிருந்தது. இந்த அழகான சூழலில் பாம்புகளும் தவிர்க்க முடியாதவைன்னு தெரிஞ்சிக்கிட்டோம்.

விதவிதமான வண்ணங்களில் அரை அடியிலிருந்து ஏழு அடி வரைக்கும் வித்தியாசமான பாம்புகள் அடிக்கடி கண்ணில் மாட்டும். பகலில் கூட பரவாயில்லை. இரவு வேளைகளில் நிலவொளியில் மினுமினுப்பாக நமக்கு பக்கத்திலேயே ஊர்ந்துப் போறப்போ அடிவயிற்றிலிருந்து ஒரு பயபந்து மேலெழும்பி நெஞ்சுக்கு வரும். அதுமாதிரி பாம்பை பார்த்த நாட்களில் நானும், மனைவியும் தூக்கம் வராம அமைதியா தூங்கிக்கிட்டிருக்கிற எங்க குழந்தைகளை பார்த்தவாறே கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டிருப்போம்.

கொஞ்ச நாட்களில் எங்களுக்கு பாம்புகள் பழகிடிச்சி. நம்ம வீட்டுக்குள்ளே பாம்புகள் வருவதில்லை. அதுங்க இருக்கிற இடத்துக்குதான் நாம வந்திருக்கோம் என்கிற புரிதல் ஏற்பட்டுடிச்சி. நல்லா கவனிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். கொசுக்கடியால் நோய் வந்து சாகும் மக்களைவிட, பாம்பு கடிச்சி செத்தவங்க ரொம்ப ரொம்ப குறைவுதான். நம்மை கடிக்கணும்னு கொசு மாதிரி, பாம்புக்கு வேண்டுதல் எதுவும் கிடையாது. நம்ம வீட்டுக்குள்ளே எல்லாம் வருதுன்னு பாம்பை வெறுக்கிறதைவிட, அதை புரிஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தேன்.

கண்ணில் படும் பாம்புகளின் பழக்க வழக்கங்களை கவனிக்க தொடங்கினேன். பாம்புகள் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாங்கி படிச்சேன். வீட்டில் இருக்குறவங்க கிட்டேயும் இதையெல்லாம் பகிர்ந்துக்கிட்டேன். குறிப்பா என்னோட குழந்தைகள் கிட்டே பாம்புகளோட குணாதிசயங்களையும், தன்மைகளையும் பத்தி விலாவரியா பேசிட்டேன். அவங்களும் பாம்புகளை ஃப்ரெண்ட்ஸா ‘ட்ரீட்’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

ஆனால், படிப்பு வேற அனுபவம் வேற இல்லைங்களா. ஒரு நாள் திடீர்னு ஹாலில் இருந்து சரசரவென வேகமா வந்த அந்த பாம்பார் சட்டுன்னு கிச்சனுக்குள்ளே புகுந்துட்டார். என்னோட அம்மா பயந்துப்போய் ‘வீல்’னு கத்திட்டாங்க. சமையலறையில் அவ்வளவு பொருட்களுக்கு நடுவிலே அவரு எங்க ஒளிஞ்சிக்கிட்டிருக்காருன்னு தெரியலை. நடுவுலே ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக்கிட்டு நீண்ட தடி ஒண்ணை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு பாத்திரமா உருட்டி தேட ஆரம்பிச்சேன். எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் அடியிலே சுருண்டு பத்திரமா படுத்துக்கிட்டிருந்தாரு. கை நடுங்க நடுங்க அவரை எப்படியோ ஒரு டப்பாவுக்குள்ளே அடைச்சிட்டு, நேரா காரை எடுத்துக்கிட்டு கிண்டி பாம்பு பண்ணைக்கு வந்தேன்.
நான் கொண்டு போன பாம்பு கொம்பேறி மூக்கனாம். இதைப்பற்றி ஏராளமா கட்டுக்கதைகள் மக்களிடம் இருக்கு. ஒரு சினிமாவுக்கு கூட ‘கொம்பேறி மூக்கன்’னு பேரு வெச்சிருக்காங்க. ஆக்சுவலா அவரு ஒரு அப்பிராணி. விஷமே கிடையாதுன்னு அங்கிருக்கிற அலுவலர் ஒருவர் எனக்கு புரிய வெச்சாரு. அவரு கையிலே நாம கொண்டுபோன கொம்பேறி மூக்கன், ஒரு குழந்தையை மாதிரி நெளிஞ்சி நெளிஞ்சி விளையாடிக்கிட்டிருந்தது. பாம்புகள் பற்றி பல விஷயங்களை அவர்தான் விளக்கினாரு. எனக்கு நல்ல புரிதல் கிடைச்சிச்சி. அன்னியிலேருந்து பாம்புகளை நேசிக்கவே ஆரம்பிச்சேன். அவர் பரிசளித்த புத்தகம் ‘Snakes of India : The Field Guide’. இந்த புத்தகத்தை வாசிக்கறப்போ நம்முடன் புவியில் வாழ்கிற பாம்புகள் பற்றிய நல்ல அறிதல் கிடைத்தது. இப்போ இதே மாதிரி வடிவமைக்கப்பட்ட ஒரு நல்ல புத்தகம் அங்கே அறுபத்து அஞ்சு ரூபாய்க்கு கிடைக்குது. நீங்களும் வாங்கிப் படிக்கலாம். ச.முகமது அலி எழுதிய ‘பாம்பு என்றால்’ புத்தகமும் பாம்பு பற்றிய நம்முடைய மூடநம்பிக்கைகளை தோலுரிக்குது.

இதையெல்லாம் படிச்சபிறகு பாம்புகளை அடையாளம் காண ஓரளவுக்கு தெரிஞ்சது. முக்கியமான விஷயம், எதுவெல்லாம் விஷப்பாம்புன்னு பார்த்ததுமே கண்டுபிடிக்கிற அளவுக்கு நாலெட்ஜ் வளர்ந்தது. தோட்டத்தில் ஒரு பாம்பு வந்துச்சின்னா, அதுக்கு விஷமில்லைன்னு தெரிஞ்சா கண்டுக்காம அப்படியே ஜாலியா விட ஆரம்பிக்கிற அளவுக்கு பெருந்தன்மை ஏற்பட்டுடிச்சி. முக்கியமா என்னோட பசங்களுக்கு இதையெல்லாம் புரியவைக்க ரொம்ப மெனக்கெட்டேன்.

சமீபத்தில் ஒரு நல்ல பாம்பு பக்கத்து வீட்டிற்குள் புகுந்திடிச்சின்னு சொன்னாங்க. அதை எப்படி அப்புறப்படுத்துறதுன்னு தெரியலை. அதற்குரிய சரியான பொருட்கள் நம்மிடம் இல்லைன்னு தோணுச்சி. அன்னைக்கு அந்த பாம்பு எப்படியோ அங்கிருந்து தப்பிடிச்சின்னு வெச்சிக்குங்க. ஆனாலும் மறுபடியும் ஒருமுறை அது வர்றதுக்கு நிறைய சாத்தியக்கூறு இருக்கறதா மனசுக்கு பட்டுச்சி. இந்த பாம்பை யாரும் அடிச்சி சாகடிச்சிடக்கூடாது, அதை எப்படி பிடிச்சி காப்பாத்துறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.

டிஸ்கவரி சேனலில் பாம்பு பிடிக்கிறவங்க நீளமா ஒரு ஸ்டிக் வெச்சிருப்பாங்க. அதுமாதிரி ஒண்ணு வாங்கிடலாம்னு விசாரிச்சப்ப, அது நல்லா பாம்பு புடிக்க தெரிஞ்சவங்கதான் பயன்படுத்த முடியும், சரியா பயன்படுத்தலைன்னா பாம்பு செத்துடும்னு ஊட்டியில் வசிக்கும் பாம்புகளின் தோழரான வனவாழ்வு மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சாதிக் அலி சொன்னார். பொதுமக்களின் வசிப்பிடத்தில் மாட்டிக்கொள்ளும் பாம்புகளை பத்திரமா அப்புறப்படுத்தும் சேவையை இவர் செய்துவருகிறார். அதைவிட சுலபமான ஒரு சாதனத்தை அவர் எனக்கு கொடுத்து, எப்படி பயன்படுத்தனும்னு டிப்ஸ் கொடுத்தார். நீலகிரி டி.எஃப்.ஓ. பத்திரசாமி சின்னச்சாமியும் எனக்கு இதுபற்றி நிறைய சொன்னார்”
கையில் இருக்கும் அந்த கருவியை காட்டியபடியே நமக்கு விளக்குகிறார் ஷங்கர்.

“இதுதான் அது. இரண்டு கம்பிகள் கொண்ட எளிமையான கருவி. ஒரு கம்பியின் முனையில் வளைவு உள்ள ஸ்டிக். இன்னொரு கம்பியின் முனையில் சாக்ஸ் வடிவில் கருப்புத்துணி. வளைவான கம்பி கொண்டு பாம்பை லாவகமா ஒரு மூளைக்கு தள்ளி, இன்னொரு கம்பியில் இருக்கிற துணிக்குள் செலுத்தி பாதுகாப்பா அப்புறப்படுத்த முடியும். பாம்புக்கோ, அதை கையாளுகிற நபருக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது. இதை பயன்படுத்த நினைக்கிறவங்க அதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட ஆட்களையோ, நிறுவனங்களையோ சந்தித்து பயிற்சி எடுக்கறது நல்லது.

ஆச்சரியமா இந்த கருவி கிடைச்ச நாளிலிருந்து பாம்பு கண்ணில் மாட்டவே இல்லை. ஏதாவது விஷப்பாம்பு மாட்டினாதான் இதை பயன்படுத்தனும்னு முடிவெடுத்திருந்தேன். ஆனா இன்னிக்கு மாட்டினது ஆபத்தில்லாத சாரைப்பாம்புதான். ஆறரை அடி நீளம் என்பதால் தெருவாசிகள் ரொம்ப பயந்துட்டாங்க. அடிக்க வேற வந்துட்டாங்க. அவங்களை சமாதானப்படுத்துறதுக்குதான் புடிச்சி பாதுகாப்பா இங்கே விட்டிருக்கேன்.

பொதுவா பாம்புகளை பிடிச்சோம்னா அருகிலிருக்கும் வனத்துறை அலுவலரிடம் அதை சமர்ப்பிக்கணும். அவர் அதோட உடல்நிலையை சோதிச்சி, மக்கள் நடமாட்டமில்லாத அரசாங்கத்துக்கு சொந்தமான இடத்தில் விட்டுடுவாரு. நம்ம ஊரு சுற்றியும் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு வனத்துறை அலுவலகம் எங்கிருக்குன்னே தெரியலை. தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ளே புடிச்ச பாம்புக்கு ஏதாவது ஆயிடிச்சின்னா? அதனாலேதான் சாதிக் அலி அவர்களிடம் பேசி, அவரோட வழிகாட்டுதல்படி இங்கே எடுத்துவந்து விட்டுட்டு அதை மொபைல் கேமிராவில் வீடியோவும் புடிச்சிட்டேன்” என்றார்.

அவரை வாழ்த்தி விடைபெற முனைந்தபோது, “பாம்பை பார்த்தீங்கன்னா அடிச்சி கொன்னுடாதீங்க சார். சட்டப்படி குற்றம். மானை சுட்டதுக்காக சல்மான்கான் மேல் கேஸ் போட்டமாதிரி உங்க மேலயும் போட்டு ஜெயிலில் அடைக்க முடியும். பாம்பை பிடிப்பதும், அடிப்பதும் வீரசாகசமில்லை, கோழைத்தனம். அதே மாதிரி பாம்புகளை பற்றிய போதிய அறிவில்லாமல் அதை அணுகுவதும் தவறு” என்று எச்சரித்தார்.


பாம்புக்கு படையெல்லாம்
நடுங்க வேண்டாம்!


பாம்பைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட கதைகள் தொண்ணூறு சதவிகிதம் பொய். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்பு கதைகளை நம்பவே நம்பாதீர்கள். மனித இனம் தோன்றுவதற்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பாம்புகள் தோன்றிவிட்டன. எனவே நம்மைவிட அவற்றுக்கு பூமியில் வாழும் உரிமை கூடுதல்.

நம் நாட்டில் வாழக்கூடிய பாம்புகளில் கொடிய விஷம் கொண்டவை நான்கே நான்குதான். நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், ராஜநாகம் ஆகியவற்றுக்கு மட்டுமே விஷமுண்டு. நாம் காணும் பாம்புகளில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பாம்புகள் விஷமற்றவையே. ராஜநாகம் மழைக்காடுகளில் மட்டுமே வசிக்கும். மற்ற மூன்றுவகை பாம்புகளும் வயல்கள் அதிகமிருக்கும் இடங்களில் காணப்படலாம். நகரங்களில் விஷமுள்ள பாம்பு வாழ்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத விஷயம். கண்ணாடி விரியன் தவிர்த்து மற்ற வகை பாம்புகள், மனித நடமாட்டத்தை கண்டால் அஞ்சி ஓடி ஒளிந்துவிடும். நமக்கு பாம்புகள் மீது இருக்கும் பயத்தை காட்டிலும், பாம்புகளுக்கு நம் மீது பயம் அதிகம். விரியன் வகை பாம்புகள் நம்மை கண்டால் ஓடி ஒளியாமல் அதே இடத்தில் சுருண்டுக் கொள்ளும். அதற்கு அச்சுறுத்தல் என்றால் மட்டுமே தாக்க முயலும். பெரும்பாலும் பாம்பு கடியில் இறப்பவர்கள் விஷத்தினால் அல்ல. பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தினால் ‘ஹார்ட் அட்டாக்’ வந்துதான் இறக்கிறார்கள்.


பாம்பை பாதுகாக்கும் சட்டம்!

இந்திய வனப்பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, நல்ல பாம்பு, அரிய உயிரினமாகிவிட்ட ராஜநாகம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வகைகள். இவற்றை கொல்வது, வீட்டில் வளர்ப்பது, துன்புறுத்துவது போன்றவை ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய கடுமையான குற்றங்கள். இதற்காக மற்ற பாம்புகளை அடித்துக் கொல்லலாமா என்றால் அதுவும் கூடாது. வனச்சட்டம் பாம்புகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது.


பாம்பை புரிந்துகொள்ள...

பாம்புகளை புரிந்துகொள்ள கீழ்க்கண்ட அமைப்புகளை நாடலாம்.

வனவாழ்வு மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு
(Wildlife & Nature Conservation Trust)
எண். 97, ஊட்டி காப்பி ஹவுஸ் பில்டிங் (இரண்டாவது தளம்),
கமர்சியல் ரோடு, ஊட்டி - 643 001. போன் : 0423-2442000 மொபைல் : 9655023288
மின்னஞ்சல் : info@wnct.in இணையத்தளம் : www.wnct.in

சென்னை பாம்பு பூங்கா
ராஜ்பவன் அஞ்சல்,
சென்னை – 600 022.
போன் : 044-22353623
மின்னஞ்சல் : cspt1972@gmail.com இணையத்தளம் : www.cspt.in

(நன்றி : புதிய தலைமுறை)

6 செப்டம்பர், 2014

வாழ்த்துகள் நண்பா!

ஆரம்பத்தில் சாருவின் வாசகராகதான் அந்த நண்பர் அறிமுகமானார். எப்போதுமே கார்ப்பரேட் டிரெஸ் கோடில் பளிச்சென்றுதான் இருப்பார். நிறைய பேசுவார். பேச்சுக்கு இடையே ‘டக் டக்’கென்று ஏதாவது ஒரு வித்தியாசமான கேள்வியைப் போடுவார். அந்த கேள்விக்கு பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பேச்சை வளர்த்து மேலும் சில கேள்விகளை போடுவார். அவரது பேச்சில் ஒரு faculty தன்மை இருக்கும்.

பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக ‘நமஸ்காரம்’ என்பார். போனில் கூட ‘ஹலோ’வுக்கு பதிலாக ‘நமஸ்காரம்’தான். என் வாழ்க்கையிலேயே எனக்கு ‘நமஸ்காரம்’ மூலம் வினோதமாக வணக்கம் தெரிவிக்கும் ஒரே மனிதர் இவர்தான். கடந்த நூற்றாண்டிலேயே வழக்கொழிந்துப்போன ‘நமஸ்காரம்’ இவருக்கு மட்டும் எங்கிருந்து ஒட்டிக் கொண்டது என்று தெரியவில்லை.

சாருவின் நூல்களில்தான் அவருக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது என்றாலும், பிற்பாடு சாரு அறிமுகப்படுத்திய இலக்கியவாதிகளை வாசித்து தன்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டார். குறிப்பாக ஜெயமோகனின் தீவிர வாசகர் ஆகிவிட்டார். ‘அறம்’, ‘புறப்பாடு’ சீரியஸ்களின் தீவிர வாசகர். “அவரோட மகாபாரதம் சட்டுன்னு புரியலைன்னா கூட, மொழியிலே ஒரு வசீகரம் இருக்கு தலைவா” என்பார்.

பின்னர் எங்களோடு மொக்கை ஃப்லிம் க்ளப் படங்களுக்கு வர ஆரம்பித்தார். பைலட் மாதிரி தரை டிக்கெட் ரேஞ்ச் தியேட்டர்களோடு செட் ஆகாமல் சங்கடப்படுவார். “அடிக்கடி தெலுங்கு படம் போறீங்களே? அப்படி அதுலே என்னதாங்க இருக்கு?” என்று கேட்டு ஜூனியர் என்.டி.ஆரின் ‘பாட்ஷா’வுக்கு கூட வந்தார். படம் மட்டுமல்ல. படம் பார்த்த ஆடியன்ஸும் அவரை மிரட்சிப்படுத்தி விட்டார்கள் போல. அதிலிருந்து படம் பார்ப்பதையே விட்டுவிட்டார். “டிவியிலே கூட சினிமா போட்டா பார்க்குறதில்லைங்க” என்கிறார்.

ஒரு மாதிரி மிடுக்கான நடை, உடை, பாவனையோடு இருந்த அவரை ‘பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்’ என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தோம். பொதுவாக எங்கள் செட் நண்பர்கள், மற்றவர்களின் ‘டூ பர்சனலான’ தகவல்களில் தேவையின்றி ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரம் போக்கு சரியில்லை என்றால் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை.

ஏனோ தெரியவில்லை. ஒரு நாள் டீக்கடை சந்திப்பில் மனம் திறந்து பேச ஆரம்பித்தார்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டம் ஒன்றில் பிறந்தவர். அப்பா லாரி டிரைவர். படுமோசமான ஏழ்மை. பள்ளியில் நன்றாக படித்திருந்தாலும், கல்லூரியில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதியில்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை. பெட்ரோல் போடும் நேரம் போக மற்ற கணக்கு வழக்குகளிலும் முதலாளிக்கு உதவியிருக்கிறார். ‘டிகிரி படிச்சவன் மாதிரி வேலை பார்க்குறானே’ என்று ஆச்சரியப்பட்ட முதலாளி விசாரித்திருக்கிறார். குடும்பச்சூழல் காரணமாக மேற்படிப்புக்கு வாய்ப்பில்லை என்று இவர் சொன்னதும், ‘ஏதோ கம்ப்யூட்டர்னு சொல்றாங்களேப்பா, அதுலே ஏதாவது கோர்ஸ் படியேன்’ என்பது மாதிரி அறிவுறுத்தியிருக்கிறார்.

அப்படிதான் ஏதோ ஒரு ஷார்ட் டெர்ம் டிப்ளமோ கோர்ஸில் சேர்ந்தார். இவருடைய சின்சியாரிட்டியை பார்த்த அந்த இன்ஸ்டிட்யூட், இவரது கோர்ஸ் முடிந்ததும் இவரையே ஃபேகல்டியாக பணிக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வகுப்பு முடிந்ததும் கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருப்பார். இண்டர்நெட்டில் தேடித்தேடி நிறைய தளங்களை பார்த்து புரோகிராமிங் கற்றார். மேலும் அறிவு பெறுவதற்காக ஏதோ கோர்ஸில் இணைந்து codingல் விற்பன்னர் ஆனார்.

சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் சொற்ப சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. சம்பளத்தை பற்றிய பிரக்ஞையை மறந்து சின்சியராக வேலை பார்க்க, துறையில் சொல்லிக் கொள்ளும்படி பெயர் பெற்றார். டிகிரியே இல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பெற்ற அனுபவம் அவரை உயர்த்தியதின் காரணமாக இன்று இன்னொரு மென்பொருள் நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கிறார். நல்ல சம்பளம் என்பதைத் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

ஊரில் இருந்த குடிசைவீட்டை அகற்றி மாடிவீடு கட்டினார். சகோதரிக்கு திருமணம் செய்துவைத்தார். பெற்றோரை நன்கு பார்த்துக் கொள்கிறார். பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த குடும்பச் சூழலையே மாற்றி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

இவரது கதையை கேட்டதுமே, “பாஸ், எங்க பத்திரிகைக்கு பேட்டி கொடுங்களேன்” என்று முந்திரிக்கொட்டை தன்மையாக கேட்டேன். ‘பெட்ரோல் பங்க் ஊழியர் இன்று சாஃப்ட்வேர் நிறுவன உயர் அதிகாரி’ என்று டப்பென்று ஒன்லைனர் ரெடி ஆனது. ‘நமஸ்காரம்’ சொல்லி, “ஆளை விடுங்க” என்று எஸ்கேப் ஆனார். “போட்டோவெல்லாம் பெருசா போடுவோம் தலைவரே” என்றாலும் வேண்டாமென்று மறுத்துவிட்டார். “தன்னம்பிக்கை கதைதான்னாலும் அனுதாபம் தேடறமாதிரி ஆயிடும். ஒவ்வொருத்தனும் இதுமாதிரி போராடித்தானே முன்னுக்கு வர்றான், நான் மட்டும் என்ன ஸ்பெஷல்?” என்று மறுத்துவிட்டார். அதனால் என்ன? இதோ இங்கே எழுதிவிட்டேனே.

சென்னையிலேயே நீண்டகாலம் தனியாகதான் வசித்து வந்தார். “கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா?” என்று கேட்போம். “பார்த்துக்கிட்டிருக்காங்க. ஜாதகம் எதுவும் செட் ஆகமாட்டேங்குது. நமக்கு லவ்வு பண்ணவும் துப்பு இல்லே” என்று நொந்துக் கொள்வார்.

நடுவில் எங்களுக்குள் கொஞ்சம் கேப். அவருக்கு பணிரீதியாக அநியாயத்துக்கு பளு. திடீரென ஒருநாள் அலுவலகம் வந்தவர் தன்னுடைய திருமணப் பத்திரிகையை வெட்கத்தோடு நீட்டினார். நாளைக்கு கல்யாணம். இதோ கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் நண்பா!

18 ஆகஸ்ட், 2014

சீண்டலாமா?

அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் அம்மாவை வானாளவ புகழ்ந்துவிட்டு போகட்டும். அது அவர்களது இயல்பு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டம் தட்டுவது போலப் பேசிச் சீண்டலாமா?

“தன் கட்சி சின்னம் எது என்று தெரியாமல் தடவி, தடவி தாரத்தின் துணை கொண்டு தடுமாறி, தடுமாறி ஓட்டுப்போட்ட ஒருவர், அம்மாவை எதிர்த்து நிற்க பலவகையில் கூட்டணி போட்டார். அப்படிப்பட்டவருக்கு ஒன்று சொல்கிறேன். நீங்க என்னிக்கும் தனியா நிக்க மாட்டீங்க, தண்ணியில நிப்பீங்க; இல்லை என்றால், தாரம் சொல்லும் வழியில் தப்பாதான் நிப்பீங்க. மொத்தத்தில் மச்சானுக்காக மப்பேத்தி நிப்பீங்க” (தினத்தந்தி, 6 ஆகஸ்ட் 2014)

ஏதோ தெருமுனை கூட்டம் ஒன்றில் மூன்றாந்தர கட்சிப் பேச்சாளர் பேசிய பேச்சல்ல இது. இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர் செந்தூர் பாண்டியன் அளித்த பதில் இது. இந்த பதிலைக் கேட்டதுமே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பரித்தார்கள்.

நேரடியாகப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை என்றாலும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தை நோக்கி செய்யப்பட்ட சீண்டல். தங்கள் தலைவரை படுமோசமாக தாக்கி அமைச்சர் பேசியதைக் கேட்டதுமே, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமடைந்தனர். தங்களுக்குப் பேச வாய்ப்பு வழங்க வேண்டுமென்று சபாநாயகர் தனபாலை கேட்டார்கள்.

“யாரையும் சுட்டிக் காட்டி பேசவில்லை. அப்படியிருக்க ஆட்சேபணை தெரிவிக்க தேவையில்லை” என்று அமைச்சர் சொன்னார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், தேமுதிகவினருக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை. அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

சீண்டப்பட்டவர்கள் எதிர்பார்த்தபடியே வெளியேறி விட்டார்கள். ஆனாலும் அமைச்சர் தன்னுடைய பதிலை(!) தொடர்ந்தார்.

“அரசியலில் எதிரிகளை, ஓட விடுவது என்பது ஒருவகை. ஓடவிட்டு, ஓடவிட்டே, ஒன்னும் இல்லாமல் செய்வது இன்னொரு வகை. அம்மா ஒருவர்தான் அரசியலில் மட்டித் தலைவர், புட்டித் தலைவர், குட்டித் தலைவர் அனைவரையும் ஓடவிட்டு ஓடவிட்டே மண்ணைக் கவ்வ வைத்தார்”

இந்தப் பதிலால் மக்களுக்கு ஏதாவது பயனுண்டா? அமைச்சரின் பேச்சுக்கும் இந்துசமய அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
சட்டமன்றத்தில் தங்கள் பிரச்சினைகளை விவாதிப்பார்கள், தீர்த்து வைப்பார்கள் என்று நம்பி அவர்கள் வாக்களித்து அனுப்பியவர்கள் இப்படித்தான் ‘டைம்பாஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் எந்த ஒரு பிரச்சினையைப் பேச எழுந்தாலும், யாராவது ஒரு அமைச்சர் எழுந்து சம்பந்தப்பட்ட கட்சித்தலைவரை சீண்டுவது கடந்த சட்டமன்றத் தொடரில் தொடர்கதை ஆகிவிட்டது. இளம் அமைச்சர்கள் மட்டுமின்றி மூத்த அமைச்சர்களும் இந்த ‘நாகரிகத்தை’ தொடர்கிறார்கள் என்பதுதான் அவலம்.

முல்லைப்பெரியாறு குறித்த விவாதம் ஒன்றில் தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் தங்கள் தலைவரை குறித்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கத் தொடங்கினார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமில்லாமல் கட்சித்தலைமையை குளிர்வித்துவிட்டுதான் உரையைத் தொடங்குகிறார்கள். மக்கள் மன்றத்தில் நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதைக் குறித்த கவலை யாருக்குமே இல்லை.

உடனே எழுந்த முன்னாள் முதல்வரும், மூத்த அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் “உங்கள் தலைவரைப் பார்த்து இந்த நாடே சந்தி சிரித்தது” என்றார்.

அமைச்சரின் இந்த ‘பொறுப்பான’ பதிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உறுப்பினருக்கு அனுமதி வழங்கப் படவில்லை. “விவாதம் கூடாது. உட்காருங்கள்” என்று சபாநாயகர் சொல்லிவிட்டார்.

“நகர்ப்புறங்களில் மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவுக்கு, கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் வழங்கவேண்டும்!” என்று கோரிக்கை வைத்தார் திமுக உறுப்பினர் எ.வ.வேலு.

பொறுப்பான அமைச்சர் என்ன பதில் சொல்லவேண்டும்? வழங்க முடியும் அல்லது முடியாது. முடியாது என்றால் ஏன் முடியாது என்று விளக்க வேண்டும். இதுதானே மக்கள் எதிர்பார்ப்பு?

“கருணாநிதியின் மகன் மத்திய மந்திரியாக இருந்தார். அப்போதே மத்திய அரசை கூடுதல் மண்ணெண்ணெய் கேட்டு பெற்றிருக்கலாமே?” என்று பதில் அளிக்கிறார் செல்லூர் ராஜூ. தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே போக, சபாநாயகர் தனபாலுக்கே தாங்க முடியாமல் சில வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார். அமைச்சரின் வார்த்தைகளையே அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் லட்சணத்தில்தான் நம் சட்டமன்றத்தில் விவாதம் நடக்கிறது.

கல்வித்துறை மானியக் கோரிக்கை எவ்வளவு முக்கியமானது. அந்த விவாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற கட்சிகள் குறித்து கவிதை பாடுகிறார் ஆளுங்கட்சி உறுப்பினர் மயிலாப்பூர் ராஜலட்சுமி.

“தைரியம் இருந்தால் தேர்தலில் தனித்து நில்லுங்கள். உங்கள் தலைமையின் தகுதி இந்த தேர்தலில் தெரிந்துவிட்டது. உங்களை யாரும் சீண்டமாட்டார்கள். தொகுதிக்கு ஆயிரம் வாக்குகளையாவது வாங்கிக் காட்டுங்கள்” என்று எதிர்க்கட்சியான தேமுதிகவை பார்த்து சவால் விடுகிறார் அமைச்சர் வைத்தியலிங்கம். இது சட்டமன்றமா அல்லது அதிமுக கட்சி மாநாடா?

சட்டமன்றத்தில் நிகழும் ஆளுங்கட்சியின் அநாகரிகமான சீண்டல்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல நடந்ததுதான் ‘ஓடுகாலி’ விவாதம்.

மவுலிவாக்கம் பதினோரு மாடி கட்டிட விபத்தினைக் குறித்துப் பேச எதிர்கட்சிகள் வாய்ப்பு கேட்டன. அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டபோது திமுக, தேமுதிக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டும் வாய்ப்பு கேட்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து அமைச்சர் வைத்தியலிங்கம் சொன்னார்.

“ஓடுகாலிகள் வெளியே சென்று விட்டார்கள். நீங்கள் அமர்ந்து என் பதிலை கேளுங்கள்”

மறுநாள் ‘ஓடுகாலி’ என்கிற வார்த்தையை நீக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் கேட்டபோது, ‘அது நாகரிகமான வார்த்தைதான் நீக்க வேண்டிய அவசியமில்லை’ என்று பதில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளில் ராக்கிங் செய்வது மாதிரி எதிர்கட்சிகளை சீண்டுவது. அவர்கள் பதில் சொல்ல வாய்ப்பு கேட்டால் வாய்ப்பு மறுக்கப்படுவது. அவர்களாக வெளிநடப்பு செய்தால் தப்பித்தார்கள். இல்லையேல் குண்டுக்கட்டாக வெளியேற்றம்.

“எங்களுக்கு எல்லாம் தரும் தங்களுக்கு (முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு) திருப்பித்தர உயிரை தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. இருப்பினும் மீண்டும் பிறப்பு ஒன்று உண்டு என்றால், நான் புல்லாய் பிறக்க வேண்டும், போயஸ் தோட்டத்தில்;நான் கல்லாய் பிறக்க வேண்டும், அம்மா வீற்றிருக்கும் தலைமைச் செயலகத்தில்; நான் மிதியடியாய் பிறக்க வேண்டும், தாயின் திருப்பாதத்தில்; மொத்தத்தில் கற்பூரமாய் பிறக்க வேண்டும், அம்மா எனும் சன்னிதானத்தில் கலந்துவிட” என்று அமைச்சர் செந்தூர் பாண்டியன் அள்ளி விட்டததைப் போன்ற புகழுரைகளைப் பேசுவதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை (மக்களின் பணம் வீணடிக்கப்பட்டாலும்) ஆனால் மக்கள் மன்றமான சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க இடமின்றி, எதிர்க்கட்சிகளை சீண்டி வெளிநடப்பு/வெளியேற்றம் செய்வது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல

“உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன...” என்று அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், முதல்வர் அண்ணாவை நோக்கிச் சொன்னார் (அண்ணாவுக்கு அப்போது உடல்நலம் சற்று குன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது). ஆவேசப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களை அமைதிப்படுத்திவிட்டு அண்ணா சொன்ன பதில். “நாங்கள் எங்கள் அடிகளை எண்ணித்தான் வைக்கிறோம்”

அந்தப் பொற்காலம் திரும்புமா?

(நன்றி : புதிய தலைமுறை)

12 ஆகஸ்ட், 2014

திருப்பதி வெங்கடாசலபதி மகிமை

ஸ்ரீமான் சதீஷுக்கு வயது பதினெட்டு. ஒண்ணு + எட்டு = ஒன்பது. உலகம் போற்றும் தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் ராசி எண் என்பதை இதற்குள்ளாகவே ரத்தத்தின் ரத்தங்களான சிற்றிலைகள் கணக்கு போட்டிருப்பீர்கள்.

பதினெட்டு வருடத்தில் எவ்வளவு பேசியிருக்க வேண்டும்? ஆனால் ஸ்ரீமான் சதீஷ் அவர்களால் பேசமுடியவில்லை. ஸ்ரீமான் நரேந்திரமோதியின் ஆட்சி டெல்லி செங்கோட்டையிலும், தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புண்ணிய ஆட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நடந்துக் கொண்டிருக்கும் ஷேமமான கலிகாலத்தில் இப்படியொரு அவலம் பாரதத்தின் எந்த குடிமகனுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஸ்ரீமான் சதீஷ் மட்டும், சரஸ்வதி சபதம் சிவாஜி மாதிரி வாய்பேச முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஏனெனில் அண்டோமேனியாவின் பங்காளியான எலிஸபெத் மகாராணியின் ஆட்சி ஆளுகைக்குள் இருக்கும் தீயநகரமான லண்டனில் அவர் வசித்து வந்தார்.

கிறிஸ்தவ மெஷினரியின் கோட்டைக்குள் வசித்து வந்ததால், நியாயமாக அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய ஹிந்துமத கடவுளர்களின் அருளாசி இதுநாள் வரை கிடைக்காமல் இருந்தது. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு புண்ணியஷேத்திரமான திருப்பதிக்கு ஸ்ரீமான் சதீஷின் குடும்பம் கடந்தவாரம் வந்தது.
திருமலையில் தரிசனம் முடிந்து, தீர்த்தம் பெற்றுக்கொண்டு பிரகாரத்துக்கு வந்தார்கள். அங்கே பஜகோவிந்த பக்தகோடிகள் இறைவனின் திருநாமத்தை ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமாக இட்டுக் கொண்டிருந்தார்கள். சதீஷின் நாக்கில் இறைவன் எழுத்தாணி கொண்டு எழுதினான். உடனே, “அம்மா” என்று பேசினார். அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஸ்ரீமான் சதீஷ், அம்மா என்று அழைத்தது அவரது சொந்த அம்மாவை அல்ல. புரட்சித்தலைவி அம்மாவைதான் என்பது அனைவருக்கும் புரிந்தது. இறைவனின் திருத்தலத்தில் தனக்கு பேச்சுவந்த அதிசயத்தை உணர்ந்த ஸ்ரீமான் சதீஷ், அடுத்து ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமிட திருப்பதியே திருயெழுச்சி கண்டது. இது சத்தியம். போனவாரம் திருமலையில் நிகழ்ந்த அற்புதம். நம் ஹிந்துமத புனிதப் பத்திரிகைகள் யாவும் இந்த அதிசயத்தை செய்திக்கட்டுரையாக வெளியிட்டிருப்பதிலிருந்தே, இந்த சத்தியத்தின் வலிமையை எண்பத்து ஐந்து கோடி ஹிந்துக்களும் உணரலாம்.

இதுநாள் வரை கிறிஸ்தவ மெஷினரிகள் நடத்தும் கபட கூட்டத்தில்தான் ‘நடக்க முடியாதவர்கள் நடப்பார்கள். பேசமுடியாதவர்கள் பேசுவார்கள். பாட முடியாதவர்கள் பாடுவார்கள்’ என்றெல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்ததாக பொய்யாக பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீமான் கமலஹாசன் அவர்கள் நடித்த ‘காதலா காதலா’ என்கிற திரைக்காவியத்தில் இந்த பொய்ப்பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுவிட்டதை ஏற்கனவே ஹிந்துக்கள் அறிந்ததே. ஆனால் இனி நிஜமாகவே நம் ஹிந்துமதத் தலங்களிலும் இந்த அற்புதங்கள் அடுத்தடுத்து நிகழும் என்பதற்கு ரத்த சாட்சியாக ஸ்ரீமான் சதீஷ் திகழ்கிறார். பதினெட்டு ஆண்டுகளாக பேசமுடியாதவர், இறைவனின் ஆலயத்தில் பேசியிருக்கிறார். இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறென்ன வேண்டும்?

பேசமுடிந்தாலும் நாமும் இனி ‘அம்மா, அம்மா’ என்று ஸ்ரீமான் சதீஷைப் போல உரக்கப் பேசுவோம். இதுவொன்றே நாம் நம் பேச்சுரிமையை தக்கவைத்திருப்பதற்கு அடையாளமாகும். புரட்சித்தலைவியின் புகழைப் போற்றுவோம். இறையருளை பெறுவோம். ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமிட்டு, நம் எதிர்காலத்தை குறியீடாக கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு உணர்த்துவோம்.

தீயசக்திகளும் குடிவெறியர்களும் வீழ்க. அம்மா வாழ்க.