18 ஆகஸ்ட், 2014

சீண்டலாமா?

அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் அம்மாவை வானாளவ புகழ்ந்துவிட்டு போகட்டும். அது அவர்களது இயல்பு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டம் தட்டுவது போலப் பேசிச் சீண்டலாமா?

“தன் கட்சி சின்னம் எது என்று தெரியாமல் தடவி, தடவி தாரத்தின் துணை கொண்டு தடுமாறி, தடுமாறி ஓட்டுப்போட்ட ஒருவர், அம்மாவை எதிர்த்து நிற்க பலவகையில் கூட்டணி போட்டார். அப்படிப்பட்டவருக்கு ஒன்று சொல்கிறேன். நீங்க என்னிக்கும் தனியா நிக்க மாட்டீங்க, தண்ணியில நிப்பீங்க; இல்லை என்றால், தாரம் சொல்லும் வழியில் தப்பாதான் நிப்பீங்க. மொத்தத்தில் மச்சானுக்காக மப்பேத்தி நிப்பீங்க” (தினத்தந்தி, 6 ஆகஸ்ட் 2014)

ஏதோ தெருமுனை கூட்டம் ஒன்றில் மூன்றாந்தர கட்சிப் பேச்சாளர் பேசிய பேச்சல்ல இது. இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர் செந்தூர் பாண்டியன் அளித்த பதில் இது. இந்த பதிலைக் கேட்டதுமே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பரித்தார்கள்.

நேரடியாகப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை என்றாலும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தை நோக்கி செய்யப்பட்ட சீண்டல். தங்கள் தலைவரை படுமோசமாக தாக்கி அமைச்சர் பேசியதைக் கேட்டதுமே, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமடைந்தனர். தங்களுக்குப் பேச வாய்ப்பு வழங்க வேண்டுமென்று சபாநாயகர் தனபாலை கேட்டார்கள்.

“யாரையும் சுட்டிக் காட்டி பேசவில்லை. அப்படியிருக்க ஆட்சேபணை தெரிவிக்க தேவையில்லை” என்று அமைச்சர் சொன்னார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், தேமுதிகவினருக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை. அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

சீண்டப்பட்டவர்கள் எதிர்பார்த்தபடியே வெளியேறி விட்டார்கள். ஆனாலும் அமைச்சர் தன்னுடைய பதிலை(!) தொடர்ந்தார்.

“அரசியலில் எதிரிகளை, ஓட விடுவது என்பது ஒருவகை. ஓடவிட்டு, ஓடவிட்டே, ஒன்னும் இல்லாமல் செய்வது இன்னொரு வகை. அம்மா ஒருவர்தான் அரசியலில் மட்டித் தலைவர், புட்டித் தலைவர், குட்டித் தலைவர் அனைவரையும் ஓடவிட்டு ஓடவிட்டே மண்ணைக் கவ்வ வைத்தார்”

இந்தப் பதிலால் மக்களுக்கு ஏதாவது பயனுண்டா? அமைச்சரின் பேச்சுக்கும் இந்துசமய அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
சட்டமன்றத்தில் தங்கள் பிரச்சினைகளை விவாதிப்பார்கள், தீர்த்து வைப்பார்கள் என்று நம்பி அவர்கள் வாக்களித்து அனுப்பியவர்கள் இப்படித்தான் ‘டைம்பாஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் எந்த ஒரு பிரச்சினையைப் பேச எழுந்தாலும், யாராவது ஒரு அமைச்சர் எழுந்து சம்பந்தப்பட்ட கட்சித்தலைவரை சீண்டுவது கடந்த சட்டமன்றத் தொடரில் தொடர்கதை ஆகிவிட்டது. இளம் அமைச்சர்கள் மட்டுமின்றி மூத்த அமைச்சர்களும் இந்த ‘நாகரிகத்தை’ தொடர்கிறார்கள் என்பதுதான் அவலம்.

முல்லைப்பெரியாறு குறித்த விவாதம் ஒன்றில் தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் தங்கள் தலைவரை குறித்து பாராட்டுப் பத்திரம் வாசிக்கத் தொடங்கினார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமில்லாமல் கட்சித்தலைமையை குளிர்வித்துவிட்டுதான் உரையைத் தொடங்குகிறார்கள். மக்கள் மன்றத்தில் நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதைக் குறித்த கவலை யாருக்குமே இல்லை.

உடனே எழுந்த முன்னாள் முதல்வரும், மூத்த அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் “உங்கள் தலைவரைப் பார்த்து இந்த நாடே சந்தி சிரித்தது” என்றார்.

அமைச்சரின் இந்த ‘பொறுப்பான’ பதிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உறுப்பினருக்கு அனுமதி வழங்கப் படவில்லை. “விவாதம் கூடாது. உட்காருங்கள்” என்று சபாநாயகர் சொல்லிவிட்டார்.

“நகர்ப்புறங்களில் மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவுக்கு, கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் வழங்கவேண்டும்!” என்று கோரிக்கை வைத்தார் திமுக உறுப்பினர் எ.வ.வேலு.

பொறுப்பான அமைச்சர் என்ன பதில் சொல்லவேண்டும்? வழங்க முடியும் அல்லது முடியாது. முடியாது என்றால் ஏன் முடியாது என்று விளக்க வேண்டும். இதுதானே மக்கள் எதிர்பார்ப்பு?

“கருணாநிதியின் மகன் மத்திய மந்திரியாக இருந்தார். அப்போதே மத்திய அரசை கூடுதல் மண்ணெண்ணெய் கேட்டு பெற்றிருக்கலாமே?” என்று பதில் அளிக்கிறார் செல்லூர் ராஜூ. தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே போக, சபாநாயகர் தனபாலுக்கே தாங்க முடியாமல் சில வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார். அமைச்சரின் வார்த்தைகளையே அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் லட்சணத்தில்தான் நம் சட்டமன்றத்தில் விவாதம் நடக்கிறது.

கல்வித்துறை மானியக் கோரிக்கை எவ்வளவு முக்கியமானது. அந்த விவாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற கட்சிகள் குறித்து கவிதை பாடுகிறார் ஆளுங்கட்சி உறுப்பினர் மயிலாப்பூர் ராஜலட்சுமி.

“தைரியம் இருந்தால் தேர்தலில் தனித்து நில்லுங்கள். உங்கள் தலைமையின் தகுதி இந்த தேர்தலில் தெரிந்துவிட்டது. உங்களை யாரும் சீண்டமாட்டார்கள். தொகுதிக்கு ஆயிரம் வாக்குகளையாவது வாங்கிக் காட்டுங்கள்” என்று எதிர்க்கட்சியான தேமுதிகவை பார்த்து சவால் விடுகிறார் அமைச்சர் வைத்தியலிங்கம். இது சட்டமன்றமா அல்லது அதிமுக கட்சி மாநாடா?

சட்டமன்றத்தில் நிகழும் ஆளுங்கட்சியின் அநாகரிகமான சீண்டல்களுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல நடந்ததுதான் ‘ஓடுகாலி’ விவாதம்.

மவுலிவாக்கம் பதினோரு மாடி கட்டிட விபத்தினைக் குறித்துப் பேச எதிர்கட்சிகள் வாய்ப்பு கேட்டன. அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டபோது திமுக, தேமுதிக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டும் வாய்ப்பு கேட்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து அமைச்சர் வைத்தியலிங்கம் சொன்னார்.

“ஓடுகாலிகள் வெளியே சென்று விட்டார்கள். நீங்கள் அமர்ந்து என் பதிலை கேளுங்கள்”

மறுநாள் ‘ஓடுகாலி’ என்கிற வார்த்தையை நீக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் கேட்டபோது, ‘அது நாகரிகமான வார்த்தைதான் நீக்க வேண்டிய அவசியமில்லை’ என்று பதில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளில் ராக்கிங் செய்வது மாதிரி எதிர்கட்சிகளை சீண்டுவது. அவர்கள் பதில் சொல்ல வாய்ப்பு கேட்டால் வாய்ப்பு மறுக்கப்படுவது. அவர்களாக வெளிநடப்பு செய்தால் தப்பித்தார்கள். இல்லையேல் குண்டுக்கட்டாக வெளியேற்றம்.

“எங்களுக்கு எல்லாம் தரும் தங்களுக்கு (முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு) திருப்பித்தர உயிரை தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. இருப்பினும் மீண்டும் பிறப்பு ஒன்று உண்டு என்றால், நான் புல்லாய் பிறக்க வேண்டும், போயஸ் தோட்டத்தில்;நான் கல்லாய் பிறக்க வேண்டும், அம்மா வீற்றிருக்கும் தலைமைச் செயலகத்தில்; நான் மிதியடியாய் பிறக்க வேண்டும், தாயின் திருப்பாதத்தில்; மொத்தத்தில் கற்பூரமாய் பிறக்க வேண்டும், அம்மா எனும் சன்னிதானத்தில் கலந்துவிட” என்று அமைச்சர் செந்தூர் பாண்டியன் அள்ளி விட்டததைப் போன்ற புகழுரைகளைப் பேசுவதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை (மக்களின் பணம் வீணடிக்கப்பட்டாலும்) ஆனால் மக்கள் மன்றமான சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க இடமின்றி, எதிர்க்கட்சிகளை சீண்டி வெளிநடப்பு/வெளியேற்றம் செய்வது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல

“உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன...” என்று அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், முதல்வர் அண்ணாவை நோக்கிச் சொன்னார் (அண்ணாவுக்கு அப்போது உடல்நலம் சற்று குன்றியிருந்தது குறிப்பிடத்தக்கது). ஆவேசப்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களை அமைதிப்படுத்திவிட்டு அண்ணா சொன்ன பதில். “நாங்கள் எங்கள் அடிகளை எண்ணித்தான் வைக்கிறோம்”

அந்தப் பொற்காலம் திரும்புமா?

(நன்றி : புதிய தலைமுறை)

12 ஆகஸ்ட், 2014

திருப்பதி வெங்கடாசலபதி மகிமை

ஸ்ரீமான் சதீஷுக்கு வயது பதினெட்டு. ஒண்ணு + எட்டு = ஒன்பது. உலகம் போற்றும் தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் ராசி எண் என்பதை இதற்குள்ளாகவே ரத்தத்தின் ரத்தங்களான சிற்றிலைகள் கணக்கு போட்டிருப்பீர்கள்.

பதினெட்டு வருடத்தில் எவ்வளவு பேசியிருக்க வேண்டும்? ஆனால் ஸ்ரீமான் சதீஷ் அவர்களால் பேசமுடியவில்லை. ஸ்ரீமான் நரேந்திரமோதியின் ஆட்சி டெல்லி செங்கோட்டையிலும், தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புண்ணிய ஆட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நடந்துக் கொண்டிருக்கும் ஷேமமான கலிகாலத்தில் இப்படியொரு அவலம் பாரதத்தின் எந்த குடிமகனுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஸ்ரீமான் சதீஷ் மட்டும், சரஸ்வதி சபதம் சிவாஜி மாதிரி வாய்பேச முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஏனெனில் அண்டோமேனியாவின் பங்காளியான எலிஸபெத் மகாராணியின் ஆட்சி ஆளுகைக்குள் இருக்கும் தீயநகரமான லண்டனில் அவர் வசித்து வந்தார்.

கிறிஸ்தவ மெஷினரியின் கோட்டைக்குள் வசித்து வந்ததால், நியாயமாக அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய ஹிந்துமத கடவுளர்களின் அருளாசி இதுநாள் வரை கிடைக்காமல் இருந்தது. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு புண்ணியஷேத்திரமான திருப்பதிக்கு ஸ்ரீமான் சதீஷின் குடும்பம் கடந்தவாரம் வந்தது.
திருமலையில் தரிசனம் முடிந்து, தீர்த்தம் பெற்றுக்கொண்டு பிரகாரத்துக்கு வந்தார்கள். அங்கே பஜகோவிந்த பக்தகோடிகள் இறைவனின் திருநாமத்தை ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமாக இட்டுக் கொண்டிருந்தார்கள். சதீஷின் நாக்கில் இறைவன் எழுத்தாணி கொண்டு எழுதினான். உடனே, “அம்மா” என்று பேசினார். அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஸ்ரீமான் சதீஷ், அம்மா என்று அழைத்தது அவரது சொந்த அம்மாவை அல்ல. புரட்சித்தலைவி அம்மாவைதான் என்பது அனைவருக்கும் புரிந்தது. இறைவனின் திருத்தலத்தில் தனக்கு பேச்சுவந்த அதிசயத்தை உணர்ந்த ஸ்ரீமான் சதீஷ், அடுத்து ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமிட திருப்பதியே திருயெழுச்சி கண்டது. இது சத்தியம். போனவாரம் திருமலையில் நிகழ்ந்த அற்புதம். நம் ஹிந்துமத புனிதப் பத்திரிகைகள் யாவும் இந்த அதிசயத்தை செய்திக்கட்டுரையாக வெளியிட்டிருப்பதிலிருந்தே, இந்த சத்தியத்தின் வலிமையை எண்பத்து ஐந்து கோடி ஹிந்துக்களும் உணரலாம்.

இதுநாள் வரை கிறிஸ்தவ மெஷினரிகள் நடத்தும் கபட கூட்டத்தில்தான் ‘நடக்க முடியாதவர்கள் நடப்பார்கள். பேசமுடியாதவர்கள் பேசுவார்கள். பாட முடியாதவர்கள் பாடுவார்கள்’ என்றெல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்ததாக பொய்யாக பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீமான் கமலஹாசன் அவர்கள் நடித்த ‘காதலா காதலா’ என்கிற திரைக்காவியத்தில் இந்த பொய்ப்பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுவிட்டதை ஏற்கனவே ஹிந்துக்கள் அறிந்ததே. ஆனால் இனி நிஜமாகவே நம் ஹிந்துமதத் தலங்களிலும் இந்த அற்புதங்கள் அடுத்தடுத்து நிகழும் என்பதற்கு ரத்த சாட்சியாக ஸ்ரீமான் சதீஷ் திகழ்கிறார். பதினெட்டு ஆண்டுகளாக பேசமுடியாதவர், இறைவனின் ஆலயத்தில் பேசியிருக்கிறார். இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறென்ன வேண்டும்?

பேசமுடிந்தாலும் நாமும் இனி ‘அம்மா, அம்மா’ என்று ஸ்ரீமான் சதீஷைப் போல உரக்கப் பேசுவோம். இதுவொன்றே நாம் நம் பேச்சுரிமையை தக்கவைத்திருப்பதற்கு அடையாளமாகும். புரட்சித்தலைவியின் புகழைப் போற்றுவோம். இறையருளை பெறுவோம். ‘கோயிந்தா, கோயிந்தா’ என்று கோஷமிட்டு, நம் எதிர்காலத்தை குறியீடாக கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு உணர்த்துவோம்.

தீயசக்திகளும் குடிவெறியர்களும் வீழ்க. அம்மா வாழ்க.

7 ஆகஸ்ட், 2014

சதுரங்க வேட்டை

வானத்தின் கன்னம் கருத்திருந்திருந்தது. முணுக்கென்றால் பிரளயமாய் பெருமழை கொட்டிவிட தயாராய் இருந்த கருமாலைப் பொழுது. என்னைப் பார்க்க அலுவலகத்துக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு விருந்தோம்பல் செய்யும் பொருட்டு அலுவலக வாசலில் இருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கடைக்குள்ளே நான்கைந்து திருநங்கையர் பஜ்ஜி, சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

டீ மாஸ்டர் அவர்களை ஏதோ பச்சையாக கலாய்த்துக் கொண்டிருக்க, அவர்களும் பதிலுக்கு கலகலப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு தேநீர்க் கோப்பைகளோடு வெளியே வந்தோம். சற்று தள்ளிப்போய் நின்று ஜிகர்தண்டா, பின்நவீனத்துவம் என்று பேசிக்கொண்டே தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.

கடை வாசலில் திடீர் சலசலப்பு. திருநங்கையரில் சிலர் வெளியே நின்றிருந்தவர்களின் தலையில் கை வைத்து ஏதோ மந்திரம் மாதிரி முணுமுணுத்து காசு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து அவர்களை விரட்டினார்கள். வேறு சிலர் அவர்கள் தங்களை தொட்டுவிடக் கூடாதே என்று ஒருமாதிரியான அருவருப்பும் உணர்வோடு இருப்பது மாதிரி விலகி ஓடினார்கள். சிலர் அவர்களை கிண்டல் செய்து, வழக்கமாக அவர்களை வசைபாடும் வார்த்தைகளை கூறி ஆபாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இருபது வயது பையன் ஒருவனை ஆசிர்வதித்து காசு கேட்க, அவன் நெருப்பை மிதித்தது போல பரபரவென்று வாகனங்களுக்கு இடையே ஓடி சாலையின் மறுபுறம் நோக்கி ஓடினான்.

அவனை துரத்திக்கொண்டு ஓடிய திருநங்கைக்கு நாற்பது வயது இருக்கும். கரேலென்று தாட்டியாக இருந்தார். சிகப்பு ஜாக்கெட். மஞ்சள் புடவை. நெற்றியில் பெரிய அளவில் வட்டமாக குங்குமம். பையன் தப்பித்துவிட்டதால் பரிதாபமாக நாங்கள் இருந்த பக்கமாக வந்தார். எங்களை நெருங்கியவர் சடாரென்று திரும்பிப் பார்த்து, சட்டென்று என் தலையில் கைவைத்து ஏதோ மந்திரம் சொல்லத் தொடங்கினார்.

“எம் மவன் நல்லா வரணும் நீயி” என்று சொல்லிவிட்டு கைநீட்டி காசு கேட்டார்.

அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய சராசரிகளை போல நானும் நடந்துகொள்ள முடியாது. ஏனெனில் நான் சராசரி அல்ல. முதன்மையாக இணையப் போராளி. ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்கர், லிங்க்ட் இன், ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ உள்ளிட்ட ஏராளமான இணையத் தளங்களில் எனக்கு அக்கவுண்டு உண்டு. தற்போது தமிழில் எழுதப்படும் இலக்கியங்களை படிக்கிறேனோ இல்லையோ எது எதுவெல்லாம் இலக்கியம், யார் யாரெல்லாம் இலக்கியவாதிகள் என்று தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். மாதாமாதம் சில இலக்கியப் பத்திரிகைகளை படிக்கிறேன். நண்பர்களோடு சாதாரணமாக எதையாவது பேசும்போது, “அயன் ராண்ட் இதைப்பத்தி என்ன சொல்றாங்கன்னு பார்த்தீங்கன்னா...” என்று ஆரம்பித்து, அவர்களை தாழ்வுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறேன். சகட்டுமேனிக்கு மார்க்ஸ், நோம்சாம்ஸ்கி, சீமான் தெ பொவார், ஜே.கிருஷ்ணமூர்த்தி, பெரியார் என்று பெயர்களை உச்சரிப்பதால் நான் கொஞ்சம் ஸ்பெஷல். எனவே நான் உண்மையாகவே அப்படி இல்லையென்றாலும், நான்கைந்து பேராவது என்னை இண்டெலெக்ச்சுவல் என்றோ அல்லது நிறைய வாசித்து பண்பட்ட தரமான இலக்கிய வாசகன் என்றோ மூடத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட நான் மற்ற சராசரிகளை மாதிரி அவரை அணுகுவது சரியல்ல என்று என் இலக்கிய மனதுக்கு பட்டதால், பாக்கெட்டில் இருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து, சுற்றும் முற்றும் பந்தாவாக நோட்டம் விட்டு அவரிடம் கொடுத்தேன். நான் எதிர்ப்பார்த்த மாதிரியே அங்கே இருந்த சராசரிகள் அசந்துவிட்டார்கள்.

இருபது ரூபாயை நோட்டை வாங்கியவர், அதை எடுத்து என் முகத்தை சுற்றி திருஷ்டி மாதிரி கழித்தார். முணுமுணுவென்று ஏதோ மந்திரங்களை உதிர்த்தார்.

“அய்யோ. எம் புள்ளைக்கு பணத்தோட அருமையே தெரியலையே?” என்று வேதனைப்பட்டு விட்டு, “எனக்கு இந்த காசு வேணாம். பத்து ரூபாய் மட்டும் இருந்தா கொடு” என்றார்.

பணத்தின் மீது எந்த பிரேமையும் சற்றும் இல்லாத அந்த திருநங்கை, எனக்கு ருஷ்ய பேரிலக்கிய நாவல் ஒன்றின் கதாபாத்திரம் மாதிரியே தோன்றினார். சிலிர்த்தமாதிரி தோளை குலுக்கிக் கொண்டு பெருந்தன்மையாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னேன்.

“பரவால்லக்கா. வேற காசு இல்லை. வெச்சுக்கங்க”

“அப்படின்னா எனக்கு இந்த காசே வேணாம். செவ்வாய்க்கிழமை அதுவுமா இவ்ளோ பெரிய மனசோட புள்ள கொடுத்திருக்கே. நீ நல்லா இருக்கணும். காலத்துக்கும் லஷ்மி உங்கூடவே இருக்கணும். உதவி செய்யுற இந்த மனசு சாகுறவரைக்கும் உனக்கு அப்படியே அமையணும்”

அக்கா எனக்கு சிண்ட்ரெல்லா மாதிரி தேவதையாக தெரிந்தார். இம்முறை நிஜமாகவே மெய்சிலிர்த்துவிட்டேன். பக்கத்தில் இருந்த நண்பரும் இதே மாதிரி மெய்சிலிர்த்தார். அவரும் இலக்கியவாதிதானே? சட்டென்று ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அக்காவிடம் நீட்டினார்.

“அம்மா செவ்வாய்க்கிழமை அதுவுமா மந்திரிச்சி கொடுக்கறேன். இந்த காசை செலவு பண்ணாமே பத்திரமா வெச்சிருக்கணும். காலத்துக்கும் உன் பர்ஸுலே காசு நிக்கும். பர்ஸை காட்டு, நானே வெச்சிடறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

என்னதான் திராவிட இயக்கத்து பகுத்தறிவு நம் ரத்தத்தில் ஊறியிருந்தாலும், நாம் இதுவரை வாழ்க்கையில் சந்தித்தே இராதவர் அடுத்தடுத்து, நம்மை வள்ளல் ரேஞ்சுக்கு அவ்வளவு பேர் மத்தியில் ஒரு பொதுஇடத்தில் புகழ்ந்துக்கொண்டே இருந்தால் ‘ஜிவ்’வென்று இருக்கத்தானே செய்யும்? அனிச்சையாக பர்ஸை எடுத்தேன். பட்டென்று பிடுங்கினார். பர்ஸைப் பிரித்தார். உள்ளே நான்கு நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. கையில் எடுத்தார்.

திடீரென்று நிகழ்ந்துவிட்ட இந்த அசம்பாவிதத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. “காசை எடுக்காதே!” என்று கத்தினேன்.

“இரு மகனே. இதையும் மந்திரிக்கணும்” என்று சொல்லியவாறே, பர்ஸை என் கையில் கொடுத்துவிட்டு சட்டென்று மொத்த ரூபாயையும் (நாலு நூறு ரூபாய் நோட்டு, தலா ஒரு இருபது மற்றும் பத்து என்று மொத்தம் நானூற்றி முப்பது ரூபாய்) இரு கைகளுக்கும் நடுவில் வைத்து, கால்களை விரித்து தொடைகளுக்கு நடுவே வைப்பது மாதிரி வைத்து, “என்னோட யோனியில் (இலக்கிய அந்தஸ்துக்காக இந்த சொல்லை பயன்படுத்தினேன். அவர் உண்மையில் சொன்னது இந்த உறுப்பை விளிக்கும் கொச்சையான சொல்தான்) வெச்சிட்டேன். அம்மனுக்கு போயிடிச்சி. ஊர்லே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம். கெடா வாங்கி விட்டிருக்கேன். அதுக்கு சரியா போச்சி இந்த காசு!” என்றார்.

இந்த உளவியல் தாக்குதலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.

“யக்கா. இன்னும் சம்பளம் கூட வரலை. செலவுக்கு இந்த காசுதான் இருக்கு. நூறு ரூபாய் எடுத்துக்கிட்டு மீதியை கொடுத்துடு”

அவர் கொடுப்பதாக தெரியவில்லை. நான் கொஞ்சம் குரலை உயர்த்தி பேச ஆரம்பித்தேன். அவரது சகாக்கள் வரிசையாக அவர் பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள். ஒரு கேங்ஸ்டர் படத்தில் ‘டான்’ ஓபனிங் சீன் மாதிரி இருந்தது அந்த காட்சி. என் குரல் தாழ்ந்து, மீண்டும் கெஞ்சல் தொடங்கியது.

என் கெஞ்சலை தாங்கமுடியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, பெரிய மனசு வைத்து இருநூறு ரூபாயை மட்டும் திருப்பித் தந்தார். “டேய், அம்மனுக்கு காசுன்னு கேட்டாகூட முழு மனசா கொடுக்க மாட்டேன்றே பாடு!” என்று சொல்லிவிட்டு, வேறு சில வசைச்சொற்களை உதிர்த்தவாறே வேகமாக இடத்தை காலி செய்தார்கள்.

ஆக, என்னுடைய மனிதநேயத்தை காட்டிக்கொள்ள நேற்று நான் செய்த செலவின் குறைந்தபட்ச சில்லறை விலை (வசைகள் உட்பட) ரூபாய் இருநூறு மட்டுமே.

4 ஆகஸ்ட், 2014

காமிக்ஸ் காதல்


மிகச்சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்தது இந்த காதல்.

தினத்தந்தியிலும், வானொலியிலும் ராணி காமிக்ஸின் முதல் இதழான ‘அழகியைத் தேடி’க்கு அவ்வளவு விளம்பரங்கள். சன் பிக்சர்ஸ் அவர்களுக்கு படங்களுக்கு செய்த அதகளங்களை அப்போதே செய்துவிட்டார்கள் தினத்தந்தி குழுமத்தார். அப்பாவிடம் அடம்பிடித்து அழகியைத் தேடி வாங்கினேன். பளபள வார்னிஷ் அட்டையில் ரூ.1.50 விலையில் அழகி என்னை ஈர்த்துக் கொண்டாள்.

யாரும் பிரித்து பார்க்காதவண்ணம் ஸ்டேப்ளரால் ‘பின்’ செய்யப்பட்டு வந்த புத்தகத்தை அப்பாதான் பிரித்துக் கொடுத்தார். பிரித்ததோடு இல்லாமல் லேசாக புத்தகத்தை புரட்டிப் பார்த்தவர் புருவத்தைச் சுருக்கினார். உள்ளே அழகி உடைமாற்றும் கட்டங்கள் இருந்ததுதான் காரணம். அப்போதெல்லாம் குமுதம் நடுப்பக்கம் எடுக்கப்பட்டுதான் என்னுடைய வாசிப்புக்கு வரும். அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான சென்ஸார் அதிகாரியாக இருந்த அப்பாவுக்கு அழகிகள் அரைகுறை ஆடைகளோடு வரும் காமிக்ஸ், தன் மகனின் வெள்ளை உள்ளத்தில் நஞ்சை கலந்துவிடுமோ (இத்தனைக்கும் அப்போ ஆறேழு வயசுதான்) என்று சஞ்சலம். “இனிமே காமிக்ஸெல்லாம் வேணாம். பாலரத்னாவும், அம்புலிமாமாவும் போதும்” என்று முடிவெடுத்தார்.
ஏற்கனவே அண்ணாக்கள் வாசிக்கும் முத்துகாமிக்ஸால் கட்டம் கட்டமான சித்திரங்களின் வசீகரத்தில் ஈர்க்கப்பட்டுவிட்ட எனக்கு அது ஏமாற்றமான முடிவு. இன்னும் எத்தனை காலத்துக்குதான் விக்கிரமாதித்தன் தோளில் சுமந்துக்கொண்டு போகும் வேதாளத்தோடு மாரடிப்பதோ என்று சோர்ந்துப் போனேன். நல்ல வேளையாக ‘மாடஸ்டி’ காப்பாற்றினாள். ராணி காமிக்ஸ் மாதிரி படோடப விளம்பரங்கள் இல்லையென்றாலும், தரமான காமிக்ஸாக ‘லயன் காமிக்ஸ்’சும் அந்த மாதம்தான் விற்பனைக்கு வந்தது. லயன் காமிக்ஸின் ஆசிரியருக்கு அப்போது வயசு பதினேழுதான். ‘கத்தி முனையில் மாடஸ்டி’ தமிழ் சித்திரக்கதை உலகின் பொற்காலத்துக்கு வித்திட்டாள்.

‘காமிக்ஸ் வேண்டும்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த எனக்கு ராணிக்கு பதிலாக மாதாமாதம் லயன் காமிக்ஸ் வாங்கித்தர ஆரம்பித்தார் அப்பா. அப்பாவுக்கு ஒரு பழக்கம். பரங்கிமலை ரயில்வே நிலையத்தின் புத்தகக்கடையில் தொங்கும் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களையுமே வாங்கிவிடுவார். அதில் எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் வெளிவந்த நிறைய காமிக்ஸ்களும் இருந்தது. நான் பிறந்த காலத்திலிருந்தே எதிர்காலத்தில் வளர்ந்து படிப்பேன் என்பதற்காக நிறைய காமிக்ஸ், குழந்தைகள் புத்தகங்களை வாங்கி பரணில் சேமித்துவைத்தவர் அவர். வேறு எந்த அப்பாவாவது மகனின் வருங்கால வாசிப்புக்கு கைக்குழந்தையாக இருந்தபோதே புத்தகங்கள் வாங்கி சேமித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஐந்து, ஆறு வயதில் கூட்டி கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்தபோது பாடப்புத்தகங்களை தவிர்த்து நான் படித்து முடிக்க மூட்டை மூட்டையாக என் வீட்டில் புத்தகங்கள் இருந்தது. இதனாலேயே வழக்கமான குழந்தைகள் மாதிரி சேட்டை செய்யாமல் சமர்த்தாக எப்போதும், எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். பையன் பெரிய ஐ.ஏ.எஸ்.ஸா வருவான் போலிருக்கு என்று வீட்டில் மூடத்தனமாக நம்பினார்கள். இந்த வாசிப்பு பிற்காலத்தில் விரிவடைந்து மருதம், விருந்து, திரைச்சித்ரா, சரோஜாதேவி ரேஞ்சுக்கு என்னுடைய டீனேஜில் மாறியது.

பழைய கந்தாயங்களை விடுங்கள். காமிக்ஸுக்கு வருவோம். என்னிடம் இருந்த பழைய காமிக்ஸ்களும், குழந்தைகளுக்கான இதழ்களும் நாங்கள் வீடுமாறியபின், முன்பிருந்த குடிசைவீட்டில் கட்டுக்கட்டாக சேகரிக்கப்பட்டிருந்தது. ஒரு தீவிபத்தில் அந்த குடிசைவீட்டோடு சேர்த்து பொக்கிஷங்கள் மொத்தமாக தீக்கிரையானது. கலைமகள், கல்கி, விகடன், அமுதசுரபி என்று எவ்வளவு தீபாவளி மலர்கள். சிகப்புநாடா மாதிரி எவ்வளவு அரிய இதழ்கள். அத்தனையும் காலி. அதற்கு பின்பு வீட்டில் இதழ்களை சேகரிக்கும் பழக்கமே எங்கள் வீட்டில் விட்டுப்போயிற்று. படித்துவிட்டு மாதாமாதம் கடைகளுக்கு போட்டுவிடுவார்கள்.

அப்போதெல்லாம் மடிப்பாக்கம் கூட்ரோடில் இருந்த டி.என்.எஸ். வேஸ்ட் பேப்பர் மார்ட், அரசு நூலகத்தைவிட அரிய சேவைகளை பகுதி மக்களுக்கு செய்துக் கொண்டிருந்தது. படிக்க தவறிய ராணி காமிக்ஸ்களை அங்கேதான் வாசித்தேன். நான், ஆனந்த் அண்ணா, பிரபா அண்ணா மூவரும் கூட்டணி. ஆளுக்கு இருபத்தைந்து காசு போட்டு டி.என்.எஸ். வேஸ்ட் பேப்பர் மார்ட்டில் ஒரு அக்கவுண்ட் துவக்கினோம். ஒரு புத்தகம் எடுத்துப்போக எழுபத்தைந்து காசு. வாசித்துவிட்டு திரும்பித் தந்தால் மீதி ஐம்பது காசு கொடுத்துவிடுவார்கள். கூடுதலாக இருபத்தைந்து காசு டாப்-அப் செய்தால், இன்னொரு புத்தகத்தை எடுத்துவரலாம். பாலாஜி அண்ணா இந்த பார்ட்னர்ஷிப்பில் இல்லை. அவர் சொந்தக் காசில்தான் புத்தகம் எடுப்பார். எங்களுக்கு இலவசமாகவே படிக்க கொடுப்பார். இப்படியாகதான் ராணி காமிக்ஸின் முதல் நூறு இதழ்களையும் படித்தோம்.

எட்டாவது படிக்கும்போது மீண்டும் காமிக்ஸ்களை சேகரிக்க ஆரம்பித்தேன். முத்து, லயன், மினி லயன், ஜீனியர் லயன், ராணி, பொன்னி, மேத்தா, அசோக் என்று கணிசமான இதழ்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சேகரித்து வைத்திருந்தேன். கட்டு கட்டாக கட்டி பாலிதீன் கவரில் ரசகற்பூரம் எல்லாம் போட்டு வைத்திருந்தேன். ஒருநாள் மதியம் பார்த்தபோது அந்த கட்டுகளில் பெரும்பாலானவை இல்லை. இதயமே வெடித்துவிட்டது. தங்கை, அந்த அரிய பொக்கிஷங்களில் மதிப்பு தெரியாமல் தெருமுக்கில் இருந்த ஒரு வேஸ்ட் பேப்பர் கடையில் எடைக்குபோட்டு, ஏதோ வாங்கி சாப்பிட்டு விட்டிருக்கிறாள். அந்த கடைக்கு போய் கூடுதல் பணம் கொடுத்து இதழ்களை திரும்பப் பெற்றாலும், நிறைய இதழ்கள் மிஸ்ஸிங். திரும்ப கலெக்ட் செய்யும் ஆர்வமே போய்விட்டது. வீட்டுக்கு வருபவர்களும் அவ்வப்போது இரவல் வாங்கிக்கொண்டு போவார்கள். திரும்பத் தரமாட்டார்கள். அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

தொண்ணூறுகளின் இறுதியில் மீண்டும் லயன் காமிக்ஸ் புத்துணர்வு பெற்று அட்டகாசமான கதைகளை கொண்டுவந்தபோது மறுபடியும் சேர்க்க ஆரம்பித்தேன். என்னிடம் இல்லாத இதழ்களை எல்லாம் வெளியே நண்பர்களிடம் எக்ஸேஞ்ச் மூலமாகவும், ப்ரீமியம் விலையிலும் (87 தீபாவளி மலரை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். அசல் விலை பத்து ரூபாய்தான்) வாங்கிக் குவித்தேன். இன்றுவரை சேர்த்து வருகிறேன். இன்னும் சில இதழ்கள் தேவை. தேடிக்கொண்டிருக்கிறேன். என் நூலக சேகரிப்பில் ஒரு செல்ஃப் நிறைய காமிக்ஸ்கள் உண்டு. யாருக்கும் காட்டுவதும் கிடையாது. இரவல் கொடுப்பதும் கிடையாது. இடைபட்ட காலங்களில் என்னுடைய வாசிப்புரசனை வேறு தளங்களுக்கு நகர்ந்துவிட்டாலும், இன்றும் காமிக்ஸ்களுக்குதான் முன்னுரிமை.

இடையில் ராணி காமிக்ஸ் நின்றுவிட்டது. அதற்கு முன்பாகவே பொன்னி, மேத்தா, அசோக் மாதிரி காமிக்ஸ்கள் காலி. லயன், முத்து காமிக்ஸ்களும் சொல்லிக்கொள்ளும்படியாக வருவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘இரத்தப்படலம்’ மெகா கலெக்‌ஷனின் விளைவாக லயன் – முத்து மீண்டும் புத்துணர்வு பெற்று தற்போது தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இதழிலும், மற்ற சகோதர இதழ்களிலும் முத்து-லயன் காமிக்ஸ்கள் தமிழக குழந்தைகளிடையே உருவாக்கிக் காட்டிய வாசிப்புசாதனைகளை கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் கொண்டுவர என்னால் முடிந்த முயற்சிகளை செய்திருக்கிறேன். என்ன செய்தாலும் என்னுடைய சிறுபிராயத்தை சுவாரஸ்யப்படுத்திய லயன் – முத்து குழுமத்தாருக்கு போதாது என்றாலும், சிறியளவிலான நன்றிக்கடன்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஓக்கே, நீண்ட இந்த காமிக்ஸ் புராணத்துக்கு இப்போது என்ன அவசியமென்ற சந்தேகம் வரலாம். லயன் காமிக்ஸ் வெற்றிகரமாக முப்பது ஆண்டுகளை கடந்துவிட்டது. முப்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இரண்டு அதிரடியான நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

லயன் மேக்னம் ஸ்பெஷல் – 1 (விலை ரூ.400)
லயன் மேக்னம் ஸ்பெஷல் – 2 (விலை ரூ.150)

(மொத்தம் 900+ பக்கங்கள்)

இரண்டு ரூபாய்க்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காமிக்ஸ் வாங்கி படித்தவர்கள், இப்போது ஐநூற்றி ஐம்பது ரூபாய்க்கு காமிக்ஸா என்று வாய்பிளக்கலாம். விலை ஒரு பிரச்சினையே இல்லை. புத்தகத்தை புரட்டிப் பாருங்கள். புரிந்துக் கொள்வீர்கள்.

லயன் முத்து குழுமத்தார் மாதாமாதம் குறைந்தது இரண்டு, மூன்று இதழ்களை இப்போது தொடர்ச்சியாக கொண்டு வருகிறார்கள். ரூ.60/- மற்றும் ரூ.100/- விலையில் பளபள ஆர்ட் பேப்பரில், சர்வதேச தரத்தோடு வெளிவரும் இதழ்களுக்கு இந்த விலை ரொம்பவும் குறைவுதான்.

காமிக்ஸ் இதழ்களை தொடர்ந்து வாங்குபவர்கள், லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். பெரும்பாலான வாசகர்கள் இப்போது சந்தா முறையில்தான் வாங்குகிறார்கள். முன்பு போல புத்தகக் கடைகள் மூலமாக வினியோகம் செய்வதில்லை.

Prakash Publishers,
No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189
Phone : 04562 272649, Cell : 98423 19755

சென்னையில் இருப்பவர்கள், கே.கே.நகர் டிஸ்கவரி புக்பேலஸ் மூலமாகவும் காமிக்ஸ் வாங்கலாம். உரிமையாளர் வேடியப்பனுக்கு போன் செய்து சொன்னால், உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவையோ அதை எடுத்து வைத்துவிடுவார். நண்பர்களுக்கும் சேர்த்து அவரிடம் புக்கிங் செய்துக் கொள்ளலாம் (முந்தைய இதழ்கள் சிலவும் அவரிடம் உண்டு). ‘லயன் மேக்னம் ஸ்பெஷல்’ அவரிடம்தான் ‘அட்வான்ஸ் புக்கிங்’ செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் கிடைத்துவிடக்கூடும்.

Discovery Book Palace
No. 6, Mahaveer Complex, First Floor,
Munusamy salai, K.K.Nagar,
Chennai – 600 078 (Near Pondicherry Guest House)
Vediyappan Cell : 9940446650

1 ஆகஸ்ட், 2014

அழைத்தார் பிரபாகரன்

ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.

பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அன்றைய நாட்களை எப்படி இவ்வளவு துல்லியமாக நினைவுக்கு கொண்டுவந்து ஜப்பார் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்ற நாளிலிருந்து அவர் சந்திக்க நேர்ந்த மனிதர்கள், இடங்கள், உண்ட உணவு, அடைந்த உணர்வு என்று அனைத்தையுமே அங்குல அங்குலமாக நாமே நேரில் சென்று வந்ததைப் போன்ற உணர்வை தரும் விவரிப்பு. இன மேலாதிக்க மனோபாவ நாடுகளின் சதியால் முற்றிலுமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்டுவிட்ட ‘தமிழ் ஈழம்’ என்கிற தமிழர்களின் நாடு எப்படியிருந்தது என்பதற்கு வரலாற்று சாட்சியாக, ஆவணமாக இந்நூலை கொடுத்திருக்கிறார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தவற்றையெல்லாம் எழுதி பக்கத்தை கூட்டவில்லை. அதையெல்லாம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகளில் நாம் வாசித்துவிட்டோம். தொலைக்காட்சியில் பார்த்துவிட்டோம். எனவே அதை மிகக்கவனமாக தவிர்த்திருக்கிறார். இந்நூலின் நாற்பத்தியெட்டு பக்கங்களுமே இதுவரை நாமறியாத சம்பவங்களை எக்ஸ்க்ளூஸிவ் தன்மையோடு கொடுக்கிறது.

அய்யாவுக்கு விருந்தோம்பல் செய்ய பணிக்கப்பட்ட பெண்புலி, ஊன்றுகோல் கொண்டு சிரமப்பட்டு நடந்தாலும் முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு வலம் வந்த தமிழ்ச்செல்வன், அய்யாவை ஆரத்தழுவி வரவேற்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், அய்யாவை வழியனுப்பி வைக்க பணிக்கப்பட்ட இளைஞர் பவநந்தன் என்று அப்பயணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் அழுத்தமான சித்திரங்களை நம் மனதில் உருவாக்குகிறார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களில் அய்யா ஜபாரை மட்டும் தனியாக அழைத்து பிரத்யேகமாக சந்தித்தார் பிரபாகரன். “உங்களுடைய ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு பிரபாகரன் நிகழ்த்திய உரையாடல்தான் நூலின் மையச்சரடு.

அந்த அற்புத நேரத்தை இவ்வாறாக விவரிக்கிறார்.

குழந்தையைப் போல ஓடிச்சென்று கடிப்பிடிக்க ஆசை. ஆனால் ஆயுதமேந்திய அந்த இளைஞர்கள் ஒரு கணம் என் எண்ணத்தில் மின்னி மறைந்தனர். என்னையும் எண்ணத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு சிலையாக நின்றேன். என்னை நெருங்க, நெருங்க அவருடைய நடையின் வேகம் கூடுகிறது. நெருங்கி வந்து அப்படியே கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்கிறார். அவரது தாடை என் தோளில். இன்னும் பிடி இறுகுகிறது. “நான் உங்கள் பரம ரசிகன் அய்யா” என்கிறார்.

உறவுகளிடம் விடை பெற்று நாடு திரும்பும்போது ஓர் இராணுவ அதிகாரியோடு அய்யாவின் உரையாடல்.

“பிரபாகரன் எப்படி இருக்கிறார்?”

“நன்றாக இருக்கிறார்”

“ஓ. நாங்கள் இலங்கையர். அதனால் சகோதரர்கள். ஆனால் விதியின் குரூரம் நாங்கள் எதிரெதிர் முகாம்களில் இருக்கிறோம்”

“ஆம். அப்படிதான்”

“உங்களுக்கு ஒன்று தெரியுமா, இஸ்ரேலின் மோஷே தயானுக்கு பிறகு ராணுவ திட்டமிடலில் பிரபா வல்லவர். அவரைப்பற்றி நான் பெருமைப்பட வேண்டும்”

அனேகமாக ராஜபக்‌ஷேவும்கூட இந்த அதிகாரியை போலதான் பிரபாகரனை மதிப்பிட்டிருப்பார். இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு?

நூல் : அழைத்தார் பிரபாகரன்
எழுதியவர் : சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
பக்கங்கள் : 48
விலை : ரூ.50
வெளியீடு : தமிழ் அலை, 80/24-B, பார்த்தசாரதி பேட்டை தெரு,
தேனாம்பேட்டை, சென்னை-600 086.
போன் : 044-24340200 மின்னஞ்சல் : tamilalai@gmail.com

நூல் வெளியீட்டு விழா 03-08-2014, ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம்.