29 ஜனவரி, 2014

நடுப்பக்கம்

‘ராணி’யைத் தவிர வேறெந்த பத்திரிகையும் தன்னை குடும்பப் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் குமுதம் நிஜமாகவே குடும்பப் பத்திரிகையாகதான் ஒரு காலத்தில் இருந்தது. எண்பதுகளின் குடும்பங்களை ‘குமுதம் குடும்பம்’ என்றே சொல்லலாம். குமுதம் வாங்காத குடும்பங்களே இல்லை என்ற நிலை. அட்டை டூ அட்டை பக்கா மிக்ஸர். லேசாக அரசியல். பல்சுவை அரசு பதில்கள். குழந்தைகளுக்கு ஆறு வித்தியாசங்கள். அவ்வப்போது சித்திரக் கதைகள். ஆன்மீக வாதிகளுக்கு பிரார்த்தனை க்ளப். இல்லத்தரசிகளுக்கு ஏராளமான சிறுகதைகள் மற்றும் தொடர்கதை. கன்னித்தீவு ரேஞ்சுக்கு எப்போதும் குமுதத்தில் ‘சாண்டில்யன்’. சினிமா நட்சத்திரங்களின் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி. கிசுகிசு. ‘லைட்ஸ் ஆன்’ வினோத் என்று எல்லாமே குமுதத்தில் இருக்கும்.

குறிப்பாக கதைகள். எல்லா genre (செக்ஸ் உட்பட) கதைகளும் வருமாறு இதழ் வடிவமைக்கப்படும். “நல்ல கதையை படிக்கும் வாசகன் அதை ‘நல்ல கதை’ என்று சொல்லக்கூடாது. ‘குமுதமான கதை’ என்று சொல்ல வேண்டும்” என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆணையிட்ட அளவுக்கு நிலைமை இருந்தது.

குமுதத்தில் எல்லாமே இருந்தாலும், அவர்களுக்கு ஒரு ‘சீக்ரட் வெப்பன்’ இருந்தது. ‘நடுப்பக்கம்’. குமுதத்தின் ‘இளமை இமேஜ்’ இந்த ஒரு பகுதியால்தான் கொடிகட்டிப் பறந்தது. எந்த ஒரு பத்திரிகையை வாங்கினாலும், அதில் முதலில் பார்க்க வேண்டிய பகுதி என்று ஒவ்வொரு வாசகருக்கும் ஏதோ ஒரு பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிலர் கார்ட்டூனை முதலில் பார்ப்பார்கள். தலையங்கம், தொடர்கதை, கடைசிப்பக்கம் என்று ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்துவமான ரசனை இருக்கும். சொல்லி வைத்தாற்போல குமுதம் வாசகர்கள் வாங்கியதுமே பிரித்துப் பார்ப்பது நடுப்பக்கத்தைதான். பெண்களும் கூட நடுப்பக்கத்தைதான் முதலில் பார்ப்பார்கள். நடுப்பக்க படத்துக்கு ஜாடிக்கேத்த மூடியாய் கச்சிதமாக எழுதப்பட்ட கமெண்டை படித்துவிட்டு, “நாசமாப் போறவன் இந்த குமுதம்காரன்” என்று வெளிப்படையாக திட்டுவார்கள். ஆனால் முகத்தில் கோபமோ, கடுகடுப்போ இருக்காது. நாணத்தால் முகம் சிவந்திருப்பார்கள். ஜெயப்ரதா ரேஞ்சுக்கு அழகாக இருந்த ரோகிணி அக்கா அம்மாதிரி முகம் சிவந்ததை நிறையமுறை பார்த்திருக்கிறேன்.

நான் குழந்தைப் பருவத்தில் குமுதத்தில் பொம்மை பார்க்க ஆரம்பித்து (பெரும்பாலும் சிலுக்கு, அனுராதா பொம்மைகள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்), ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்து வெகுவிரைவிலேயே –அதாவது எட்டு, ஒன்பது வயது வாக்கில்- நடுப்பக்கத்துக்கு வந்துவிட்டேன். அப்பா ஆன்மீகவாதியாக இருந்தாலும், முதலில் நடுப்பக்கத்தை தரிசித்துவிட்டுதான் ‘பிரார்த்தனை க்ளப்’புக்கே வருவார். தனக்கு போட்டியாக குடும்பத்தில் இன்னொருவனும் நடுப்பக்கத்தை ஆராதிப்பவனாக வளர்வது அவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த குமுதம் இதழில் நடுப்பக்கம் மட்டும் இல்லாமல் இருந்தது. தன்னுடைய அடையாளத்தை இழந்துநின்ற அந்த இதழ்களை வாசிக்கும் ஆர்வமே எனக்கு போய்விட்டது. ஆரம்பத்தில் குமுதமே நடுப்பக்கத்தை வாசகர்களின் பாசாங்கு கண்டனங்களுக்கு பயந்து நிறுத்திவிட்டதோ என்று நினைத்திருந்தேன். பிற்பாடு கால்குலேட் செய்து பார்த்ததில் பக்க எண் இடித்ததில், இது அப்பாவுடைய சதியென்று அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி உணர்ந்துகொண்டேன். அதனாலென்ன அக்கம் பக்கம் வீட்டு இதழ்களுக்குப் போய் குமுதத்தின் நடுப்பக்கத்தை வாசித்து, என் இலக்கிய அறிவு நாளொரு ‘மேனி’யும், பொழுதொரு நடிகையுமாக வளர ஆரம்பித்தது.

இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த ‘நடுப்பக்கம்’ எப்போதிலிருந்து குமுதத்தில் காணாமல் போனது என்று சரியாக நினைவில்லை. அந்த ‘சேவை’யை குமுதம் நிறுத்தியிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலை. இதனால் இளைஞர்களின் எழுச்சி தாமதப்பட்டு, புரட்சி தேவையில்லாமல் சில நூற்றாண்டுகள் தள்ளிபோடப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை. எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி?

இந்த வார குமுதம் நடுப்பக்கத்தை பார்த்தேன். என் மகள் தமிழ்மொழி போட்டோவை போட்டிருக்கிறார்கள். இப்படியே போனால் இன்னும் கொஞ்சநாளில் குமுதம், ‘பூந்தளிர்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘ரத்னபாலா’, ‘அம்புலிமாமா’, 'பாலர் மலர்’ ரேஞ்சுக்கு குழந்தைகள் இதழாக பரிணமித்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் என்னை ஆட்டிப் படைக்கிறது.

27 ஜனவரி, 2014

எக்ஸ்பிரஸ் வேக புத்தகம்

1992. மார்ச் மாத தொடக்கத்தில் தினத்தந்தியில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. ரஜினி ஸ்டில்லோடு கவிதாலயாவின் அண்ணாமலை படம் பற்றிய அறிவிப்பு. இயக்கம் வசந்த்.

சல்மான்கான் படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மார்ச் 9 அன்று சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா. அங்கே காத்திருந்த கவிதாலயா மேனேஜர், நேராக அவரை பாலச்சந்தரிடம் அழைத்துச் செல்கிறார்.

“வசந்த் விலகிட்டான். அண்ணாமலையை நீ பண்ணு” பாலச்சந்தர் சொன்னபோது சுரேஷ்கிருஷ்ணாவால் நம்பவே முடியவில்லை. கையை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார். ரஜினி ரசிகராக இருந்தாலும் முன்பாக அவர் இரண்டு கமல் படங்களைதான் இயக்கியிருந்தார். தன்னை ஏன் எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.

“ஜூன் ரிலீஸ்னு ப்ளான் பண்ணிட்டோம். தனிப்பட்ட காரணங்களாலே வசந்த் விலகிட்டான். கவிதாலயாவோட மானம் காப்பாத்தப் படணும். நாளை மறுநாள் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. போயஸ் கார்டன் போய் ரஜினியை பார்த்து பேசிடு”

தானாக வந்து பொறியில் மாட்டிக்கொண்டது அப்போதுதான் அவருக்கு புலப்படுகிறது. சூப்பர் ஸ்டாரை முதன்முதலாக இயக்கப் போகிறோம். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் இரண்டு நாளில் ஷூட்டிங் தொடங்கியாக வேண்டும். எதையும் பேசவிடாமல் நூற்றி ஒன்பது ரூபாய் அட்வான்ஸை கையில் திணித்துவிட்டார் குருநாதர் கே.பி. அவரிடம் பதினாலு படங்கள் வேலை செய்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா.

“என்னாலே முடியும் சார். நான் செய்யறேன்” என்று தன்னம்பிக்கையோடு சொல்லிவிட்டு, ரஜினியை காண கிளம்பினார்.

இது அண்ணாமலையின் கதை மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற சாதனை சிகரமான ‘பாட்ஷா’வுக்கும் ‘அ’ன்னா போடப்பட்டது இங்கேதான். தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாத உயரத்தில் இருக்கும் நடிகர் ஒருவரை, கிட்டத்தில் பார்த்து பேசி அவரை புரிந்துகொண்டு அவர் ஏன் சூப்பர் ஸ்டார் என்பதை பாட்ஷாவின் திரைக்கதை வேகத்தில் எழுதியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரோடு மூத்தப் பத்திரிகையாளர் மாலதி ரங்கராஜனும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் மு.மாறனின் தமிழாக்கத்தில் ‘பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.

மூன்று மாத கால குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் அண்ணாமலையின் தரம் என்னவென்பதை இருபது ஆண்டுகள் கழித்தும் நாம் இன்றும் உணரமுடிகிறது. நம்மை இன்றும் வசீகரிக்கும் பல காட்சிகளின் பின்னணியை விலாவரியாக விவரித்திருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

குறிப்பாக அண்ணாமலையின் ‘கடவுளே கடவுளே’ பாம்பு காட்சி. ரஜினியின் மீது ஏறிய பாம்புக்கு வாய் தைக்கப்படவில்லையாம். இது படப்பிடிப்பில் ரஜினி, சுரேஷ்கிருஷ்ணா யாருக்குமே தெரியாது. பாம்பை கொண்டுவந்தவரின் கவனக்குறைவால் இது நேர்ந்திருக்கிறது.

சரத்பாபுவிடமும், ராதாரவியிடமும் சவால் விட்டு தொடை தட்டும் காட்சிக்கு வித்தியாசமான டிராலிஷாட் அமைத்திருந்தார். பொதுவாக ட்ராலி நேர்க்கோட்டிலோ அல்லது ரவுண்டிலோ டிராவல் செய்யும். மாறாக இக்காட்சிக்கு முக்கோண வடிவில் ஏற்பாடு செய்திருந்தார் சுரேஷ்கிருஷ்ணா. ரஜினிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி இது எப்படி திரையில் தெரியப்போகிறது என்பது தெரியாது. ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் இணைந்து சாதனை படைத்த காட்சி இது. கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பல படிகள் நாம் முன்னேறிவிட்டாலும் இன்றும் இந்த காட்சி தரும் அனுபவம் அலாதியானது.

அண்ணாமலை தயாரானபோதே சுரேஷ்கிருஷ்ணாவோடு அடுத்தும் படம் செய்யவேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். அதுதான் ‘பாட்ஷா’. அவர் சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்துவிட்டிருக்கிறது. ஆனால் அதிரடியான அண்ணாமலையை செய்துவிட்டு, அதற்கடுத்து அதைவிட அதிரடியான ‘பாட்ஷா’ என்று இருவரின் கூட்டணியில் வந்தால் சரியாக இருக்காது என்று ரஜினி நினைக்கிறார். dilute செய்வதற்காக ஒரு படம் நாம பண்ணலாம் என்று காமெடி சப்ஜெக்டாக வீராவை கொண்டுவருகிறார். தன்னுடைய படங்கள் என்னமாதிரி வரிசையில் அமையவேண்டும் என்று ரஜினி மெனக்கெட்டிருக்கிறார்.

அண்ணாமலை மாதிரியில்லாமல் வீரா செய்யும்போது ரஜினியோடு சில கருத்துவேறுபாடுகள் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு தோன்றுகிறது. அடிப்படையில் அவருக்கு கதையே பிடிக்கவில்லை. தெலுங்கு ‘அல்லரி மொகுடு’வை தமிழுக்கு கொண்டுவந்தால் சரியாக வராது என்று நினைக்கிறார். ரஜினிக்கு அந்த ஸ்க்ரிப்டில் முழு நம்பிக்கை இருந்தது. இளையராஜா முதலில் போட்ட ட்யூன்களில் ஏதோ குறைகிறது என்பதில் தொடங்கி, பாடல் காட்சிகளுக்கு யோசித்த ஐடியா வரை சுரேஷ்கிருஷ்ணாவுக்கு நிறைய சங்கடங்கள். அதையெல்லாம் எப்படி ரஜினியின் உதவியோடு தாண்டி வெற்றிப்படமாக எடுத்தார் என்பதை எந்த ‘சென்சாரும்’ இல்லாமல், திறந்த புத்தகமாய் எழுதியிருக்கிறார்.

‘பாட்ஷா’ எடுத்தபோது, சூப்பர் ஸ்டாரை கம்பத்தில் வைத்து அடிக்கும் காட்சிக்கு தயாரிப்பாளர் ஆர்.எம்.வீ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ரஜினியை வைத்துதான் இந்தப் பிரச்சினையையும் இயக்குனர் கன்வின்ஸ் செய்திருக்கிறார். படம் எடுக்கும்போதே ரஜினிக்கும், சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் தெரிந்துவிட்டது. இதுதான் தங்கள் வாழ்க்கையின் ‘மாஸ்டர் பீஸ்’ என்று. பாட்ஷா தயாரிப்பில் இருந்தபோது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருவரும் ‘பாட்ஷா’வாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

பல சிரமங்களை தாண்டி படம் தயார். அன்று மாலை ஆர்.எம்.வீ பார்க்க இருக்கிறார். அதற்கு முன்பாக காலையில் ரஜினி பார்க்கிறார். இரண்டாம் பாதி சரியாக வரவில்லை என்று ரஜினிக்கு தோன்றுகிறது. கையைப் பிசைந்துக் கொண்டிருந்தவருக்கு கை கொடுத்தார் சுரேஷ்கிருஷ்ணா. அவசர அவசரமாக இரண்டாம் பாதியில் பல காட்சிகளை வெட்டி, சில எஃபெக்ட்டுகளை சேர்த்து ஆர்.எம்.வீ.க்கு போட்டு காட்டுகிறார். எடிட்டிங் டேபிளில் தயாரான படம் பாட்ஷா என்கிறார் அதன் இயக்குனர். புத்தகத்தின் க்ளைமேக்ஸான இந்த பகுதி பாட்ஷாவின் க்ளைமேக்ஸுக்கு நிகரான பரபரப்பு கொண்டது.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னுடைய காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இயக்குனரில் தொடங்கி மேக்கப் அசிஸ்டண்டுகள், லைட்டிங் பாய்கள் அனைவரோடும் பேசி தயாராகி நடிக்கும் ரஜினியின் பண்பினை பல பக்கங்களில் விவரித்திருக்கிறார். ரஜினி ஓய்வுக்கு கேரவன் பயன்படுத்துவதில்லையாம். காட்சி இடைவேளைகளில் ஏதாவது பெஞ்சில் படுத்தபடியே, கண்ணை மூடி, கண்களுக்கு மேல் துணியை போட்டு (வெளிச்சம் பாதிக்காமல் இருக்க) அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு மனதுக்குள்ளாகவே ரிகர்சல் பார்ப்பாராம். ரஜினியின் ஒர்க்ஸ்டைல் என்னவென்பதை அக்குவேறு ஆணிவேராக அலசியிருக்கிறார்.

பொதுவாக ரஜினியை பற்றி மக்களிடம் இப்படியொரு எண்ணம் இருக்கிறது. அவர் நடிப்பைத் தவிர்த்து வேறெதிலும் ஆர்வம் காட்ட மாட்டார். மாறாக கமல் ஒரு படத்தின் அத்தனை நிலைகளிலும் உழைப்பார் என்று. சுரேஷ்கிருஷ்ணாவின் இந்த புத்தகம் அதற்கு நேரெதிரான பிம்பத்தை உருவாக்குகிறது. படத்தின் ஒன்லைனரில் தொடங்கி பாடல்கள், இசை, காட்சிகள், வசனங்கள் என்று அனைத்துக்குமே ரஜினி மெனக்கெடுகிறார். படப்பிடிப்பில் காட்சியின் தாக்கத்தை மனதில் கொண்டு இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஐடியாவும் கொடுப்பதுண்டு. கதைக்கு மாறாக காட்சிகள் எடுக்கப்பட்டால் அது ஏன், எதற்கென்று கேட்டு தனக்கு திருப்தி தராவிட்டால் அதுகுறித்த ஆட்சேபணைகளையும் தெரிவிப்பார். ஷூட்டிங் தாமதப்பட்டு தயாரிப்பாளருக்கு பணநஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். இதனால் பகலில் பாடல் காட்சிகள், இரவில் சண்டைக் காட்சிகள் என்று இருபத்து நான்கு மணி நேரம் உழைக்கவும் அவர் எப்போதும் தயாராகதான் இருந்திருக்கிறார்.

நூலின் பலவீனம் அதன் தலைப்புதான். மூன்று படங்களில் ரஜினியுடனான சுரேஷ்கிருஷ்ணாவின் அனுபவங்கள்தான் இப்புத்தகம். ஆனால் பாட்ஷா குறித்து மட்டுமே என்கிற மனோபாவத்துடன் தான் நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். “எப்படா பாட்ஷா வரும்” என்று ஆவலாக பக்கங்களை புரட்ட புரட்ட அண்ணாமலையும், வீராவும் சலிக்கிறார்கள். நூற்றி எண்பது பக்கங்கள் தாண்டியபிறகுதான் பாட்ஷா வருகிறார்.

தன்னோடு பணியாற்றிய ஒரு நடிகரை குறித்து இம்மாதிரி ஓர் இயக்குனர் புத்தகம் எழுதுவது அற்புதமான விஷயம். முன்பு தமிழில் இருந்த இந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. உலகம் சுற்றும் வாலிபன் எப்படி உருவானது என்று எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் இயக்குனர்கள் சிலர் (ப.நீலகண்டன் மாதிரியானவர்கள்) அவரைப் பற்றி பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். சிவாஜி பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது (ஆரூர்தாஸ் எழுதிய புத்தகங்கள் முக்கியமானவை). சுரேஷ்கிருஷ்ணா மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இதேபோல பேசும்படம், அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் படங்களையொட்டி கமலைப்பற்றி சிங்கீதம் எழுதினால் நன்றாக இருக்கும். கமலே எழுதினால் அது இலக்கியமாகிவிடும், வாசிக்க சகிக்காது.

பாட்ஷாவும் நானும் : புனைவுக்கு நிகரான சாகஸம்!


நூல் : பாட்ஷாவும் நானும் : ஒரே ஒரு ரஜினிதான்
எழுதியவர்கள் : சுரேஷ் கிருஷ்ணா & மாலதி ரங்கராஜன்
பக்கங்கள் : 264
விலை : ரூ.125
வெளியீடு : வெஸ்ட்லேண்ட் லிமிடெட்
இணையத்தில் வாங்க : டிஸ்கவரி புக் பேலஸ் இணையத்தளம்

22 ஜனவரி, 2014

அதிகாரத்துக்கு அலாரம்!

‘ஆம் ஆத்மி’ மீது இப்போது வரை எனக்கு பெரிய நம்பிக்கை எதுவும் வந்துவிடவில்லை. அன்னாஹசாரே அளவுக்கு இல்லையென்றாலும் கேஜ்ரிவாலும் எனக்கு சொல்லிக்கொள்ளக் கூடியவகையில் எண்டெர்டெயினராகதான் தெரிகிறார். அதிலும் தினகரனில் கேஜ்ரிவால் குறித்த செய்திகளை போடும்போதெல்லாம் குளிருக்கு அவர் தலைக்கு மப்ளர் சுற்றிய படத்தை மட்டுமே பயன்படுத்துவதை பார்க்கும்போதெல்லாம் குபீர் சிரிப்பு வருகிறது.

ஆனால், கேஜ்ரிவாலை இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் நம்புகிறார்கள். வேறு வழியில்லாமல் ‘நமோ’ கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது குல்லாவுக்கு சலாம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். கேஜ்ரிவாலின் படத்தை அட்டையில் போட்டால் பத்திரிகை விற்கிறது. இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை.

ஆனால், கேஜ்ரிவால் டில்லியில் போலிசாருக்கு எதிராக நடத்திய ‘தர்ணா’ அவர்மீது எனக்கு பெரிய மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இராணுவமும், காவல்துறையும் இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டின் அடிப்படைப் பண்புக்கு சவால் விடும் அதிகார கூலிகளாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது காவல்துறையின் அராஜக நடவடிக்கைகளை எதிர்கொண்ட கட்சிகள் கூட, அதிகாரத்துக்கு வந்ததுமே அத்துறையின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமலோ, அல்லது மேலும் கூடுதலாக ஆட்டம் போடவே அனுமதிக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. எடுத்துக்காட்டுக்கு திமுகவை எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவிலேயே காவல்துறையால் படுமோசமாக வேட்டையாடப்பட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்து திமுகவினர்தான். இந்தியெதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம், ஜெயலலிதாவின் 91-96, 2001-06 காலக்கட்டங்களில் சராசரி திமுககாரனில் தொடங்கி திமுக தலைவர் வரை மிக மோசமாக மனிதநேயம் சற்றுமின்றி தமிழ்நாடு காவல்துறையால் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஐந்து முறை ஆட்சிக்கு வந்த கலைஞரே கூட இத்துறைக்கு கடிவாளம் போடநினைத்ததில்லை என்பதுதான் அரசியல்முரண்.

அன்னா ஹசாரேவின் போராட்டங்களின் போது காவல்துறையின் அடக்குமுறைகளை நேரடியாக சந்தித்தவர் கேஜ்ரிவால். அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தின் போதும் இத்துறை எப்படிப்பட்ட அதிகாரபோதையில் இயங்குகிறது என்பதை நேரடியாகவே அறிந்திருப்பார்.

தொடர்கதையாகி விட்ட டெல்லியின் பாலியல் குற்றங்களை தடுக்கத் தவறியதாக டெல்லி காவல்துறையை எண்ணுகிறார். சட்ட அமைச்சரே களமிறங்கி சிலரை சுட்டிக் காட்டியும் டெல்லி காவல்துறை கையை கட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில், கேஜ்ரிவால் தன்னுடைய இமேஜை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தர்ணாவில் குதித்தது இந்திய சரித்திரத்தின் குறிப்பிடத்தக்க சம்பவமாக எண்ணத் தோன்றுகிறது. முதன்முறையாக ஓர் ஆட்சியாளர் இந்த அதிகாரப் பூனைகளுக்கு மணி கட்ட நினைக்கிறார். அதிகாரத்துக்கு எதிராக அலாரம் அடித்திருக்கிறார். அதிகார ருசி கண்டுவிட்ட காங்கிரஸும், பாஜகவும் பதறுவது இதனால்தான். மீடியாவும் சட்டென்று கேஜ்ரிவாலை விமர்சித்து தலையங்கங்களும், கிண்டலான செய்திகளும் எழுதிக் குவிக்கிறது.

கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கையை அறம், ஆட்சியியல், லொட்டு லொசுக்கு காரணங்களை காட்டி ஆயிரம் நொட்டு சொல்லலாம். விளம்பரத்துக்கு செய்கிறார் என்று சுலபமாக விமர்சித்துவிட்டு போகலாம். அதிகாரத்துக்கு வந்த ஒருவர் அதிகாரத்துக்கு எதிராக போராடுகிறார் என்கிறவகையில் இவ்விவகாரத்தில் கேஜ்ரிவாலை ஆதரிப்பதே சாமானிய மனிதர்களுக்கான நல்ல சாய்ஸ். இராணுவம், காவல்துறை போன்றவை ஆட்சிக்கு வருபவர்களுக்கு வாலாட்டும் வகையில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படவும், நேர்மையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும் படவேண்டும். ஜனநாயக நாட்டில் வசிக்கும் சராசரி குடிமகன் மிலிட்டரிக்காரரையும், போலிஸ்காரரையும் கண்டு அச்சப்படும் நிலை மாறவேண்டும். குறிப்பிட்ட இப்பிரச்சினை தொடர்பான கேஜ்ரிவாலின் போராட்டம் முழுவெற்றியை அடையாவிட்டாலும், பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே நாட்டுக்கு நல்லது.

20 ஜனவரி, 2014

ஜில்லா : பொது மன்னிப்பு

‘ஜில்லா’ பற்றிய முந்தைய பதிவு. இதை வாசித்துவிட்டு, இப்பதிவை வாசிப்பது நலம். இல்லாவிட்டால் close செய்துவிட்டு செல்வது அதைவிட நலம்.

இரவு வேளைகளில் மல்லிகைப்பூ வாசத்தை முகர்ந்துவிட்டால், சராசரித் தமிழன் காமவெறி மூடுக்கு ‘செட்’ ஆகிவிடுவான். அதைப்போலவே சினிமா ரசிகர்களுக்கு ‘ஃபெஸ்டிவல் மூட்’ என்று ஒன்றிருக்கிறது. தமிழில் இதை சரியாக புரிந்துக்கொண்ட நடிகர்கள் எம்.ஜி.ஆரும், ரஜினியும். இவர்களது பெரும்பாலான படங்கள் நூறு நாள், வெள்ளிவிழா கண்டது பொங்கல், முன்பு தமிழ்ப்புத்தாண்டாக இருந்த ஏப்ரல் 14 மற்றும் தீபாவளி தினங்களில் வெளியான திரைப்படங்களில்தான். கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாட தகுதியான படங்களாக பார்த்து இறக்குவது ஒரு கலை. அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் பெற்ற கமல்ஹாசனுக்கு இன்றுவரை கைவராத கலை. எம்.ஜி.ஆராகவும், ரஜினியாகவும் ஆக விரும்பும் இளைய தளபதி அவர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம். முன்பாக இதே பொங்கல் திருநாளில் திருப்பாச்சி, போக்கிரி என்று அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள் கூட அவருக்கு இந்த உள்ளொளி தரிசனத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பது அவலம்தான்.

ஒரு வழியாக ‘ஜில்லா’ பார்த்துவிட்டோம். முந்தைய ‘தலைவா’வை விட ஒரு மொக்கைப்படத்தை இளைய தளபதி கொடுத்துவிட முடியுமா என்று நாம் வியந்துக் கொண்டிருந்த வேளையில், அதைவிட சூப்பர் மொக்கையையே என்னால் தரமுடியுமென்று தன்னுடைய ‘கெத்’தை நிரூபித்து சாதனை புரிந்திருக்கிறார். முன்பு ‘ஆதி’யில் ஏற்பட்ட அதே விபத்துதான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ‘திருஷ்யம்’ கொடுத்த மோகன்லால் திருஷ்டி கழித்துக் கொண்டிருக்கிறார். ‘தளபதி’ ரேஞ்சு படமென்று கதை சொல்லி, இளைய தளபதியின் கேரியர் படகை கவிழ்த்துவிட்டார் இயக்குனர் நேசன். இந்த படம் ஏன் மொக்கை என்று விளக்குவதற்கு ஆயிரத்து இருநூறு பக்கங்கள் தேவைப்படும் என்பதால், இந்த மொக்கைப் பதிவையே வாசிக்கும் தைரியம் கொண்டவர்கள் ஒரு முறை ‘ஜில்லா’வை தரிசித்து தனிப்பட்ட தெளிவுக்கு வந்துவிடலாம்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. காஜல், இளைய தளபதியை நோக்கி சொல்கிறார். “உன் மூஞ்சியையே இப்போ கண்ணாடியில் பார்த்தால் உனக்கு பிடிக்காது”. அப்படியெனில் படம் பார்ப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமாரான ஒரு கதையை ஜில்லாவின் கதையென்று நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த கட்டுரையை வாசித்த லட்சக்கணக்கானவர்கள், “பரவாயில்லை மாதிரிதான் இருக்கும் போலயே” என்று முதல்நாளே போய் படம் பார்த்திருக்கிறார்கள். அவ்வாறு பார்த்து, அதன் காரணத்தால் மனம் பிறழ்ந்துப்போய் ஆயிரக்கணக்கானவர்கள் உளவியல் சிகிச்சை பெற்றுக்கொள்ள நாம் காரணமாகி விட்டோம். அதற்காக லக்கிலுக் ஆன்லைன் தளத்தை வாசிப்பவர்களிடம் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோருகிறோம். இனிமேல் மொக்கையா இருக்குமென்று நாம் யூகிக்கும் திரைப்படங்களுக்கு, படுமொக்கையான கதையையே முன்கூட்டி எழுதுகிறோம் என்று சத்தியப் பிரமாணம் செய்கிறோம்.

கடைசியாக, ஜில்லாவுக்கும் பிரஸ்தானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் யாரேனும் கையைப் பிடித்து இழுக்க நினைத்தால் ரெண்டு படத்தையும் பேக் டூ பேக்காக டிவிடியில் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்காக மீண்டும் மீண்டும் நானே தற்கொலை முயற்சியில் ஈடுபடவேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதில் நியாயமே இல்லை. நீங்களும் தற்கொலைக்கு முனையலாம். உங்களாலும் முடியுமென்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஒரு ரீமேக்கை ரீமேக் மாதிரி தெரியாமல் படம் எடுப்பதில் மட்டும் இயக்குனர் நேசன் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். ஜெயம் ராஜா இவரிடம் இந்த பாடத்தை மட்டும் டியூஷன் படிக்கலாம்.

18 ஜனவரி, 2014

கலாப்ரியா

அப்பா அப்போது ‘சுபமங்களா’ ரெகுலராக வாங்குவார். இதழுக்கு இதழ் அதில் ஏதோ ஒரு வி.ஐ.பி.யின் பேட்டி வரும். அதில்தான் முதலில் ‘கலாப்ரியா’ என்கிற பெயரை வாசித்தேன். அவரது பெயரில் இருந்த கவர்ச்சியால் கவரப்பட்ட நான், அவர் கவிஞர் என்றதுமே லீசில் விட்டு விட்டேன். சுபமங்களா பேட்டிகள் பிற்பாடு கலாப்ரியாவின் பெயரை தாங்கி ‘கலைஞர் முதல் கலாப்ரியா வரை’ என்று புத்தகமாகவே கூட வந்தது.

கலாப்ரியா என்பவர் தமிழில் முக்கியமான கவிஞர். குற்றாலத்தில் கவிதைப்பட்டறை நடத்துகிறவர் என்கிற சிறியளவிலான அவரது அறிமுகம் மட்டுமே எனக்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு ‘காட்சிப்பிழை’ இதழில் கலாப்ரியா எழுதிய ஒரு சினிமா கட்டுரையை வாசித்தேன். பொதுவாக இலக்கியவாதிகள் உள்ளுக்குள் எம்.ஜி.ஆர்/ரஜினி ரசிகர்களாக இருந்தாலும், வெளியே மார்லன் பிராண்டோ/அல்பசீனோ என்று ஃபிலிம் காட்டக்கூடிய பண்பு வாய்ந்தவர்கள். தன்னை எம்.ஜி.ஆர் ரசிகராக ‘தெகிரியமாக’ கலாப்ரியா வெளிக்காட்டிக் கொள்கிறாரே என்கிற ஆச்சரியத்தில், அவர் ‘கவிதை தவிர்த்து’ வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடி, வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அவரைப் பற்றி அவரோடு பழகியவர்களிடம் பேசி, அவரைப்பற்றி நிறைய தெரிந்துக் கொண்டேன். எங்கள் ஆசிரியர் மாலனும், அவரும் ஒருமையில் ஒருவரை ஒருவர் விளித்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு நெருக்கமானவர்கள்.

மிகக்குறுகிய காலத்திலேயே கலாப்ரியா என்னுடைய அப்பாவுக்கு இணையான அந்தஸ்தை என்னுடைய இதயத்திலே பெற்றுக் கொண்டார். என் அப்பாவும் இலக்கியவாதி ஆகியிருந்தால், கலாப்ரியா மாதிரியேதான் இருந்திருப்பார். எம்.ஜி.ஆர் – திமுக – இந்தித்திணிப்பு எதிர்ப்பு – எமர்ஜென்ஸி என்று அறுபதுகளின்/எழுபதுகளின் இளைஞர்களுடைய அசலான பிரதிநிதி கலாப்ரியா.

கலாப்ரியாவின் எந்த நூலை வாசிக்க வேண்டுமென்று என்னை கேட்டால், கீழ்க்கண்ட அவரது கட்டுரைத் தொகுப்புகள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்று பரிந்துரைப்பேன் : நினைவின் தாழ்வாரங்கள் (சந்தியா), ஓடும் நதி (அந்திமழை), உருள் பெருந்தேர் (சந்தியா), சுவரொட்டி (கயல் கவின்), காற்றின் பாடல் (புதிய தலைமுறை).

ஒரு கவிஞன், கவிதை தாண்டி உரைநடைக்கு வரும்போது வாசகனுக்கு வாசிப்பு அனுபவத்தின் எல்லைகளை எந்தளவுக்கு விஸ்தரிக்க முடியும் என்பதற்கு கலாப்ரியாவின் மேற்கண்ட நூல்கள் நல்ல சாட்சி.

மிக எளிமையான மொழி. தேவைப்படும் இடங்களில் உவமானங்கள். வாசகனை எந்த இடத்தில் நகைக்கவிட வேண்டும், உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும் என்கிற எழுத்து நுட்பத்தை நுணுக்கமாக கையாளுகிறார் கலாப்ரியா. தன்னுடைய சுயம் சொல்லும் சாக்கில் அறுபதாண்டு தமிழகத்தின் வரலாற்றை ஒரு சாமானியனின் பார்வையில் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வெள்ளைத்தாளின் கருப்பெழுத்துகளில் பதிந்துக்கொண்டே போகிறார். நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்ள அவருக்கு அவருக்கேயான தனித்துவமான ’ஈஸி ஃபார்முலா’ கைகொடுக்கிறது. ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை விவரிக்க நினைத்தால், அந்த வருடத்தில் ரிலீஸான எம்.ஜி.ஆர் படத்தை நினைவுக்கு கொண்டுவந்து, அதன் மூலமாக தன்னுடைய மூளையை கூர்மையாக்கிக் கொள்கிறார். தன்னுடைய அப்பா காலமானபோது நடந்த நிகழ்வுகளை கூட ‘நல்ல நேரம்’ வெளியான காலக்கட்டத்தின் பின்னணியில் பகிர்ந்துக் கொள்கிறார்.

தமிழ் சினிமா உதவி இயக்குனர்கள் ‘சீன் சுடுவதற்காக’ ஏராளமான காட்சிகள் கலாப்ரியாவின் வாழ்க்கையில் காணப்படுகிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் வேலை இல்லாதவராக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு சரியில்லை போல. அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார். “உங்கண்ணன் காலையிலே போய் குடும்பக் கட்டுப்பாடு செஞ்சிக்கிட்டு கொண்டுவந்த அரிசியிலே சமைச்சது” என்று அம்மா வறுமைநிலையை கோடிட்டுக் காட்டுகிறார். அண்ணனுடைய மனைவி தவறி பல காலமாகிறது. சாப்பாட்டுக்காக தேவையே இல்லாமல் கு.க. செய்துக் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து தலையில் அடித்துக்கொண்டு தெருவுக்கு வந்து அழுகிறார் கலாப்ரியா. தமிழ் சினிமாவில்கூட வறுமையான குடும்பத்தை காட்ட இவ்வளவு நுணுக்கமான காட்சி இதுவரை வந்ததில்லை. ஆனால் கலாப்ரியாவின் வாழ்வில் நிஜத்திலேயே நடந்திருக்கிறது.

இந்தித்திணிப்பு காலத்தில் கலாப்ரியா ஏரியாவில் ஒரு டீக்கரைக்காரரோ அல்லது சைக்கிள்கடைக்காரரோ தீவிரமான திமுககாரர் இருந்திருக்கிறார். அவர் வைத்த இந்தி ஒழிக பேனருக்காக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். அவரைப் பற்றியும், அவர் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது பற்றியும் கொஞ்சம் காமெடியாகதான் கட்டுரை போகிறது. கடைசி காட்சி காவல் நிலையத்துக்குள் அவர் சித்திரவதை செய்யப்பட்டு வெளியே குரல் கேட்கிறது. “தமிழ் வாழ்க”. காவல் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த கலாப்ரியா உள்ளிட்ட மாணவர்களுக்கு ‘ஜிவ்வென்றிருந்தது’ என்று கட்டுரை முடிகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பாக கலாப்ரியா பெற்ற அதே ‘ஜிவ்’வை வாசிக்கும்போது நானும் பெற்றேன்.

நினைவின் தாழ்வாரங்கள், ஓடும் நதி, உருள் பெருந்தேர் நூல்கள் மூன்றையுமே டிரையாலஜி எனலாம். கலாப்ரியாவின் பயோக்ராஃபி. சுவரொட்டி சினிமா தொடர்பான அவரது கட்டுரைகளை கொண்டது. கருப்பு வெள்ளை, வண்ணம், சினிமாஸ்கோப் என்று தமிழ் சினிமாவின் காலமாற்றங்களை கடைக்கோடி ரசிகனின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆச்சரியமான விஷயம் சாதாரண ரசிகன் காணத்தவறிய பல கோணங்களை (குறிப்பாக நடிகரல்லாத மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரணைகள்) துல்லியமாக எழுதியிருக்கிறார். புதிய தலைமுறை இதழில் தொடராக வெளிவந்த ‘காற்றின் பாடல்’ கலாப்ரியாவின் அனுபவங்கள் வாயிலாக சமூகத்தை, மனிதர்களை பதிவுசெய்யும் ஆவணம்.

இதுவரை கலாப்ரியாவை நான் நேரில் கண்டதில்லை. நாளை சென்னை புத்தகக் காட்சியில் நவீனக் கவிதைகள் குறித்து வாசகர்களோடு உரையாடப் போகிறாராம். இதுகுறித்து அவரோடு உரையாட, கவிதை பாமரனான எனக்கு எதுவுமில்லை. வெறுமனே அவர் பேசுவதை வேடிக்கை பார்க்கப் போகிறேன்.