7 பிப்ரவரி, 2013

காம்மத் & காம்மத்


தென்னிந்தியாவுக்கு இது multi starrer ஆண்டு. தெலுங்கில் விக்டரி ஸ்டார் வெங்கடேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் நடிப்பில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ’ ப்ளாக் பஸ்டர். கன்னடத்தில் சீயான் சுதீப் மற்றும் இளம் ஹீரோ சிரஞ்சீவி சர்ஜா இணைந்து ‘வரதநாயக்கா’ சூப்பர்ஹிட். தமிழுக்கு வாய்த்தது சந்தானம் பவர்ஸ்டாரின் லட்டு காம்பினேஷன்தான். ஆனாலும் வசூலுக்கு குறைவில்லை.

இந்த வரிசைப்படி பார்த்தால், அடுத்து மல்லுவுட் எனப்படும் மலையாளத் திரையுலகின் முறை. மெகாஸ்டார் மம்முட்டி, ஜனப்ரிய நாயகன் திலீப் காம்பினேஷன். காம்மத் & காம்மத் என்று படத்தின் டைட்டிலே இருவரையும் தராசுத் தட்டில் சமமாக நிறுத்துகிறது. மலையாளத் திரையுலக வரலாற்றிலேயே சாட்டிலைட் ரைட்ஸ் அதிகவிலைக்கு விற்கப்பட்டு சாதனை. நாலேமுக்கால் கோடி என்று கிசுகிசுக்கிறார்கள். ஓபனிங்கிலும் அமோக விளைச்சல். ஏழு கோடியை அனாயசமாக கடந்திருக்கிறது. மலையாளத்தில் ஐந்து கோடியில் படமெடுத்தாலே அது மெகாபட்ஜெட் எனும்போது இந்த வசூல் அசாதாரண சாதனை.

ஆரம்பத்தில் மம்முட்டியும், ஜெயராமும் இப்படத்துக்காக இணைகிறார்கள் என்று செய்தி பரவத் தொடங்கியபோது பரபரப்பு ஏற்பட்டது. திலீப் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றப் போகிறார் என்றார்கள். பின்னர் திலீப் விலகிக் கொள்ள, அவரது பாத்திரத்தில் மற்றொரு இளம் ஹீரோவான குஞ்சாகோ போபன் நடிப்பார் என்றார்கள். என்ன மாயம் ஆனதோ தெரியவில்லை. மீண்டும் திலீப் என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய பாத்திரத்தில் அல்ல, ஜெயராம் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக என்றார்கள். இடையே குஞ்சாகோ பிராஜக்ட்டில் இருந்து விலகிவிட்டார். அவரது பாத்திரத்தை நரேன் ஏற்கிறார் என்று அறிவித்தார்கள். மம்முட்டியை தவிர வேறு எவருமே இந்தப் படத்தில் சாசுவதம் இல்லை. படிக்கும்போதே தலை சுற்றுகிறது இல்லையா?

இந்த வகையில் படமெடுக்க படாத பாடு பட்டு, நொந்து நூடுல்ஸாகிப் போன இயக்குனர் தாம்ஸன் தாமஸ் படத்தால் கொட்டும் பணமழையைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். எனினும் கேரள திரைவிமர்சகர்கள் சுளுக்கெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவருக்கு இதுதான் ராசி. முந்தையப் படமான ‘காரியஸ்தன்’ பாக்ஸ் ஆபிஸில் ப்ளாக் பஸ்டர்ஹிட். அப்போதும் இதே விமர்சகர்கள் இவரை இப்படியேதான் துப்பினார்கள்.

உதயகிருஷ்ணா மற்றும் சிபி. கே.தாமஸ் என்று இருவர். நம்மூரில் சுபா (சுரேஷ் & பாலகிருஷ்ணன்) மாதிரி அந்த ஊரில் இரட்டை எழுத்தாளர்கள். ஆரம்பக் காலத்தில் இருவரும் ஒற்றுமையாக சில இயக்குனர்களிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். மனோஜ் கே.ஜெயன் ஒரு படம் செய்யலாம், நீங்கள் இயக்குங்கள் என்று இவர்களை ஏற்றிவிட, டுயோ-டைரக்டர் கனவில் மிதந்தார்கள். முயற்சி தொடக்கத்திலேயே அபார்ஷன் ஆனது. மீண்டும் டைரக்டர்களிடம் அசிஸ்டண்டாக வேலை பார்க்க கவுரவம் இடம் கொடுக்கவில்லை. எனவே திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பித்தார்கள். ஹிட்லர் பிரதர்ஸ், மாயாஜாலம் என்று அடுத்தடுத்து தோல்விப்படங்கள். மூன்றாவது படமான மட்டுப்பேட்டி மச்சான் ஓரளவுக்கு ஓட, அந்தப் படத்தை இயக்கிய ஜோஸ் தாமஸின் அடுத்தப் படத்திலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுதான் திருப்புமுனை. திலீப் நடித்த உதயபுரம் சுல்தான்.

திலீப்புக்கு இவர்களது எழுத்து பிடித்துப்போக, அடுத்தடுத்தப் படங்களுக்கு இவர்களையே சிபாரிசு செய்தார். சி.ஐ.டி. மூசா பம்பர்ஹிட் அடிக்க, முன்னணி நாயகர்கள் அனைவருமே தங்கள் படங்களுக்கு இவர்கள்தான் பணியாற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட தொடங்கினார்கள். மலையாள நடிகர்கள் சங்கம்‘அம்மா’ தயாரித்த சாதனைப்படமான ட்வெண்டி டெவெண்டிக்கும் இவர்கள்தான் எழுதினார்கள். மம்முட்டியின் கம்பேக் படமான போக்கிரிராஜா இவர்களது கைவண்ணம்தான். போக்கிரிராஜாவின் வசூலை கிட்டத்தட்ட நெருங்கிய காரியஸ்தனும் இவர்களது எழுத்துதான். மெகாஹிட் படமான கிறிஸ்டியன் பிரதர்ஸ், சக்கைப்போடு போட்ட மாயமோஹினி, மிஸ்டர் மருமகன் என்று சமீபகாலமாக உதயகிருஷ்ணாவும், சிபிதாமஸும் பேனாவை எடுத்தாலே பணமழைதான். திலீப், மோகன்லால், மம்முட்டி என்று சூப்பர்ஹீரோக்களின் படங்களுக்கு எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் யார் கூப்பிட்டாலும் சரி. முன்னுரிமை திலீப்புக்குதான். நன்றி மறப்பது நன்றன்று அல்லவா?

பொதுவாக இவர்களது பேனா காமெடியாகதான் எழுதும். இவர்களது கதைநாயகன் பணக்கார கிறிஸ்துவ அல்லது இந்து குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். இரண்டு குடும்பங்களுக்குள் பகை அல்லது குடும்பத்துக்குள் குழப்பம் என்றுதான் கதையின் ஒன்லைன் இருக்கும். டபுள்மீனிங் டயலாக்குகள் எழுதுவதில் கில்லாடிகள். இரட்டை வெண்ணிற ஆடை மூர்த்திகள் என்றே சொல்லலாம்.

“படமெடுக்க பணம் போட்டவருக்கு நல்ல லாபம் கிடைக்கவேண்டும். காசு கொடுத்து படம் பார்த்த ரசிகனுக்கு நல்ல பொழுதுபோக்கு கிடைக்க வேண்டும். எனவேதான் எங்களை நம்பி எழுதவைக்கும் ஸ்டார் நடிகர்களை வைத்து கலைமுயற்சிகள் எதையும் நாங்கள் பெரியதாக மெனக்கெடுவதில்லை” என்று ஒருமுறை ஓபன் ஸ்டேட்மெண்டே விட்டிருக்கிறார்கள்.

சினிமாவை கலைவடிவமென தீர்க்கமாக நம்பும் மலையாள தீவிர திரையார்வலர்கள் சும்மாவா இருப்பார்கள்? இவர்கள் எழுத்தில் எந்தப் படம் வந்தாலும் பத்திரிகைகளிலும், டிவிகளிலும் காறித்துப்பி விமர்சித்து ஓட ஓட விரட்ட முயற்சிக்கிறார்கள். அதனாலென்ன.. இவர்களது பெயர் திரையில் தெரிந்தாலே மலையாளத் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறதே... அது போதாதா?

இவ்வளவு விலாவரியாக இந்த இரட்டையர்களின் புராணம் பாடுவது ஏனென்றால், காம்மத் & காம்மத்தை எழுதியவர்களும் இவர்கள்தான். மெகாஸ்டார் மம்முட்டி இருக்கிறார் என்பதாலேயோ என்னவோ ‘இரட்டை அர்த்த’ மேட்டரில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்கள். திலீப்பும் ஹீரோயின் கார்த்திகாவை விட்டு இரண்டு அடி தள்ளி நின்றே ரொமான்ஸ் செய்கிறார்.

காம்மத்துகள் எனப்படுபவர்கள் கொங்கணி பிராமணர்கள். நானூறு, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றியபோது அங்கிருந்தவர்கள் தென்னிந்தியா முழுக்க பரவுகிறார்கள். கேரளாவின் காசர்கோடுக்கும் வருகிறார்கள் என்கிற வரலாற்றுக் குறிப்போடு படம் தொடங்கியதுமே நிமிர்ந்து உட்கார்கிறோம். அதற்குப் பிறகு நிமிரவே முடியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி மொக்கைப் போட்டு தளரச் செய்துவிட்டார்கள். காமநெடியாக எழுதிய எழுத்தாளர்களை காமெடியாக மட்டும் எழுதச் சொன்னால் எப்படி? கொஞ்சம் வெயிட்டாகவே சொதப்பிவிட்டார்கள்.

விதவை மறுமணம், மாற்றுத் திறனாளியை அழகான (!) ஹீரோ எந்த நெருடலுமின்றி கைப்பிடிப்பது என்று சமூகநோக்கோடு கதை எழுதியிருந்தாலும், கொட்டாவி வரவைக்கக்கூடிய சலிப்பான திரைக்கதை. சீரியஸாகவும் இல்லாமல், ‘சிரி’யஸாகவும் இல்லாமல் மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தான் கதையாக ஆகிவிட்டது காம்மத் & காம்மத்.

திலீப் பெரிய பிரச்சினை இல்லை. எப்போதும் போல ‘லந்து’ கொடுக்கும் கேரக்டர். அவர் நடிக்க முயற்சித்தால்தான் அதுதான் ரசிகர்களுக்கு சோதனை. ஆனால் இந்தியாவின் மிகத்திறமையான நடிகர்களில் ஒருவரான மம்முட்டிக்குதான் இப்படம் சத்திய சோதனை. ஹிட் கொடுத்தே ஆகவேண்டுமென்று ஜெயிக்கிற குதிரையில் ஏறி குப்புற விழுந்திருக்கிறார்.

நிச்சயமாக இந்தப் படம் ஹிட். சந்தேகமேயில்லை. ஆனால் இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து யாருடைய நினைவிலும் இப்படம் இருக்கப் போவதில்லை. பத்தோடு பதினொன்று ரக படம்தான். இதற்கு ஏன் மெகா ஸ்டார்? மலையாள விமர்சகர்கள் இந்தப் படத்தையும் காலில் தூக்கிப்போட்டு மிதிப்பது நியாயம்தான்.

எது, எப்படியோ. தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க ஒரு விஷயம் படத்தில் உண்டு. தென்னாட்டு ப்ரூஸ் லீயான தனுஷ் இப்படத்தில் கவுரவ வேடத்தில் தனுஷாகவே தோன்றுகிறார். கோயமுத்தூரில் காம்மத் & காம்மத் நிறுவனத்தாரின் ஓட்டலை தனுஷ்தான் திறந்து வைக்கிறார். அவரை தமிழ்நாட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ தனுஷ் என்றுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த மேட்டர் அவருடைய சூப்பர் மாமனாருக்கு தெரியுமா?

(நன்றி : http://cinemobita.com)

6 பிப்ரவரி, 2013

சாதி இனிஷியல் மாதிரி

“லக்கிலூக். ஏதோ பேசணும்னு தோணித்து” இப்படித்தான் ஒவ்வொரு முறையும் பேசும்போது ஆரம்பிப்பார் டோண்டு ராகவன். இப்படி ஆரம்பித்தாலே நம்மை திட்டி எங்காவது எழுதியிருப்பார். அல்லது பின்னூட்டம் போட்டிருப்பார்.

ஏப்ரல் 2006ல் இருந்து பழக்கம். முதன்முதலாக ஒரு வலைப்பதிவில் நான் கமெண்ட் இட்டது என்றால் அது டோண்டுவின் பதிவில்தான். அவரது சஷ்டியப்த பூர்த்தி பதிவில் வாழ்த்துகள் தெரிவித்திருந்தேன்.

லக்கிலுக் said...

வணக்கம் டோண்டு...
நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரன் தான்... மடிப்பாக்கம்...
உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்!

உடனே செல்போன் எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டு பேசினார். அதிலிருந்து பொதுவாக இந்த ஏழு ஆண்டுகளில் அதிகபட்சம் பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு முறையாவது பேசிவிடுவார். பொதுவாக அவர் பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன்.

மதம், சாதி விவகாரங்களில் மிக மோசமான அடிப்படைவாதி. கிட்டத்தட்ட இந்து தாலிபான் என்றே சொல்லலாம். அதை தவிர்த்துப் பார்த்தால் அவர் பக்காவான ஜெண்டில்மேன். தான் பழகும் யாரிடமும் அவர்களுடைய சாதியை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார். பார்ப்பனர் என்றால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் கூட வேற்றுமை காட்டாமல் பழகக்கூடியவர்தான்.

“நீ அய்யர்தானே? எதுக்கு அவாளையே திட்டுற?” லைட்டாக போட்டு வாங்குவார்.

“மடிப்பாக்கத்துலே இருந்தா அய்யரா சார்? கடைசி வரைக்கும் உங்களாலே என்னோட அந்த அடையாளத்தை மட்டும் கண்டுபிடிக்கவே முடியாது”

“சாதியை மறைக்கறது பாவம்பா. அதுவும் இனிஷியல் மாதிரி நம்மோட அடையாளம்தான்”

அவரோடு சாதி, மதம் பற்றியெல்லாம் விவாதித்தால் அலுப்பாகவும், அயர்ச்சியாகவும், அதே நேரம் கோபமாகவும் இருக்கும். ஒருமுறை கண்டிப்பாகவே சொல்லிவிட்டேன். “நமக்கு பேச நிறைய விஷயம் இருக்கு சார். இது மட்டும் வேணாம். வேணும்னா நெட்லே சண்டை போட்டுக்கலாம்”

வாக்கிங் என்கிற பெயரில் அராஜகம் செய்வார். சாதாரணமாக ஏழு, எட்டு கிலோ மீட்டர் நடப்பார். “உங்க வீட்டு பக்கத்துலே பொன்னியம்மன் கோயில் கிட்டே இருக்கேன் லக்கிலூக்” என்பார். “சார். டைம் இப்போ ஒன்பதரை. நான் ஆபிஸ் வந்துட்டேன்” என்பேன்.

ஒரே ஒருமுறை அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன்.

“இந்து காலனி பிள்ளையார் கோயில் கிட்டே இருக்கேன் சார்”..

“அப்படியே இரு...”

பதினைந்து நொடி கழித்து...

“யூ டர்ன் அடிச்சி திரும்பிப் பாரு” சட்டை போடாத வெற்றுடம்புடன் நின்றிருந்தார்.

மிகத்தீவிரமான வைணவர். நங்கநல்லூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் வைணவ கோயில்கள் அத்துணையும் அத்துபடி. அவர் வீட்டுக்கு சிறிது தூரத்தில் இருக்கும் பெருமாள் கோயிலில் சிலமுறை என் அப்பாவைப் பார்த்துப் பேசியிருக்கிறார். “நெத்தியிலே விபூதி, குங்குமத்தோட வீரசைவர் மாதிரி இருப்பாரு. கருணாநிதிக்கு ரொம்ப வக்காலத்து வாங்கிப் பேசுவாரு. உன்னோட அப்பான்னு எனக்குத் தெரியாது”. டோண்டு சார் தன்னை வீரவைணவராக –ஆழ்வார்க்கடியானின் அடுத்த பிறப்பாக- தீவிரமாக நம்பியவர்.

“சார்! லஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு ஒய்ஃப்போட வந்தேன்”

“அங்கே நம்ம ஃப்ரெண்டுதான் அர்ச்சகர். உங்க அப்பாவுக்கும் தெரிஞ்சவர்தான்”

ஏதாவது கோயிலுக்குப் போனால் டோண்டு சாரிடம் ‘அப்டேட்’ செய்துவிடுவேன்.

“பார்த்தசாரதி உக்கிரமானவராச்சே... பொண்டாட்டியோட போற கோயிலா அது? அதுக்கெல்லாம் வேற வேற கோயிலு இருக்குப்பா...”

போனமாதம் சோளிங்கர் போய்விட்டு வந்து மறுநாள் அவரோடு பேசினேன். “நானும் போகணும்னு நெனைச்சிக்கிட்டிருக்கேன். ஆனா அவ்ளோ படி ஏறமுடியுமான்னு தெரியலை. வருஷத்தோட முதநாளே நரசிம்மரை பார்த்திருக்கே. நல்லா வருவே”

நீண்டநாட்களாக மனைவி, குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஜனவரி இரண்டு அன்று பேசும்போது “குழந்தைகளை கூட்டிக்கிட்டு வந்து உங்க கிட்டேயும், மாமி கிட்டேயும் பிளெஸ்ஸிங் வாங்கணும் சார்” என்றேன். ஏனோ கடைசிவரை போகமுடியாமலேயே போய்விட்டது.

“பேஷா வா. வர்றதுக்கு முன்னாடி ஒரு போன் மட்டும் பண்ணிடு”

தொழில் விஷயத்தில் ரொம்ப கறார். ரெண்டு மூன்று மொழிப்பெயர்ப்பு அசைண்மெண்ட் கொடுத்தபோது அவரது ஃபீஸ் செட் ஆகவில்லை. ஒரு சொல்லுக்கு மூன்று ரூபாய், நான்கு ரூபாய் கேட்பார். “உனக்கும் கட்டணும். எனக்கும் கட்டணும். அப்படியில்லாமே வேலை பார்க்கக்கூடாது”

கடைசியாக ஷாஜி மூலம் வந்த ஒரு துபாஷி வேலைக்கு அணுகியபோது, “உடம்பு முடியாம இருக்கேன். இப்பல்லாம் அவ்வளவா வெளிவேலைக்கு போறதில்லை” என்று மறுத்தார்.

இடையில் ரொம்பநாள் இடைவெளி ஏற்பட்டது. ஒரு விழாவில் திடீரென்று பார்த்தபோது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தார். “உடம்புக்கு என்ன” என்று விசாரித்தபோது, “வயசாயிடிச்சில்லே” என்றார். பின்னர் தனக்கு தரப்படும் ட்ரீட்மெண்ட் என்னவென்று விலாவரியாக விளக்கினார். “இந்த ட்ரீட்மெண்ட் எந்த நோய்க்குன்னு உனக்கே தெரியுமில்லே?” அவருக்கு ‘கேன்சர்’ என்பதை நேரடியாக சொல்ல சங்கடப்பட்டார்.

நேற்று காலை பேசினார். குழந்தையை பள்ளிக்கு கிளப்பும் அவசரத்தில் இருப்பதாக சொன்னேன். “உன்னோட பதிவிலே ஒரு கமெண்ட் போட்டிருக்கேன். உனக்கு ஆதரவாதான் போட்டிருக்கேன். பார்த்து ரிலீஸ் பண்ணிடு” என்று ஷார்ட்டாக முடித்துக் கொண்டார். இன்று காலை அவரது வீட்டுக்கு இறுதிமரியாதை செலுத்த போனேன். இருபத்தி நான்கு மணி நேர இடைவெளிதான் எத்தனை கொடூரமானது?

கொஞ்சநாள் முன்பாக பேசும்போது விஸ்வரூபம் பற்றி பேச்சு வந்தது. “சுஜாதாவுக்கு கடைசிக்காலத்தில்தான் புரிஞ்சது. கமல்ஹாசனுக்கு இப்போ புரியும். தன்னோட சொந்த சாதியை மறுக்கிறவனுக்கெல்லாம் கடைசியிலேதான் புத்தி வரும்” என்றார். ஆனாலும் விஸ்வரூபம் பார்க்க ஆவலாக இருந்தார். “நம்ம தியேட்டருலே போடுவானில்லே?” என்று விசாரித்தார்.

நம்ம தியேட்டர் என்றால் நங்கநல்லூர் வெற்றிவேல். அத்தியேட்டரின் பூர்வாசிரமான பெயரான ‘ரங்கா’வைதான் உச்சரிப்பார். வீரவைணவர் ஆயிற்றே? அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவு. அரிதாகதான் படம் பார்ப்பார். அதையும் அங்கே மட்டும்தான் பார்ப்பார். நாளை வெற்றிவேலில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்.

டோண்டு சார் என்றால் உடனடியாக அவரது முரட்டு உழைப்புதான் நினைவுக்கு வரும். இரண்டாவது குழந்தை பிறந்தபோது பேசினார். “ரெண்டுமே பொண்ணா? போச்சி போ. நீ சாகுறவரைக்கும் உழைச்சிக்கிட்டே இருக்கணும் லக்கிலூக். ரிட்டயர்மெண்ட் என்கிற பேச்சே இருக்கப்படாது”. இன்று முழுக்க ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கப் போகிறேன். அவருக்கு என்னால் செலுத்தப்படக்கூடிய அஞ்சலி இதுதான்.

அவர் உயிரைவிட மேலாக நேசிக்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை சமீபத்தில்தான் தரிசித்துவிட்டு வந்தார். வைகுண்டத்திலாவது அவருக்கு மகரநெடுங்குழைகாதன் ஓய்வு தரட்டும். Bye.. Bye Dondu sir…

டோண்டு குறித்து எழுதிய பழைய பதிவு : டோண்டுல்கர்

4 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : uncut version பார்க்க..

ஊடகங்களால் பிரபலமாகி விட்ட சத்தியவேடு சீனிவாசா தியேட்டர் கொஞ்சம் பெரிய சைஸ் ஆம்னி வேன் மாதிரி இருக்கிறது. நூற்றி ஐம்பது சீட்டுகள் இருந்தாலே அதிகம். அதிலும் பாதி சீட்டுகள் உடைந்திருக்கும் என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். ‘சிசென்டருக்கும் கீழே லெவல் தியேட்டர். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் அந்த சிறிய அரங்கின் முன்பாக திரண்டிருந்தது கொடுங்கனவாக இன்னும் சில நாட்களுக்கு நடு இரவில்கூட ஞாபகத்துக்கு வரும். நேற்று காலை போய் முட்டி, மோதிப் பார்த்துவிட்டோம். நைட் ஷோ வரை டிக்கெட் கிடைக்காது என்றார்கள். ‘பிரெஸ்’சுக்கும் ஆந்திராவில் எந்த மதிப்புமில்லை.

கவுண்டரில் சாஸ்திரத்துக்கு இருபது, முப்பது டிக்கெட் வினியோகிக்கிறார்கள். ஐம்பது ரூபாய் விலை. மீதியெல்லாம் கள்ள மார்க்கெட்டில் ஓடுகிறது. நேற்று சிலர் ஐநூறு ரூபாய் கூட கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். நாற்காலிகள் முழுக்க நிரம்பிவிட ‘ஓவர்ஸ்’ டிக்கெட் வினியோகம் நடக்கிறது. பாதி பேர் தரையில் உட்கார்ந்தும், ஓரமாக நின்றுக்கொண்டும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தியேட்டர் ஓனரின் மகன் என்று சொல்லப்பட்டவர் திரையரங்கு முன்பாக திரண்டிருந்த ரசிகர்களிடையே பால்கனியில் இருந்து கமல் ஸ்டைலில் பேசினார். “நாகலாபுரம் இங்கிருந்து இருவத்தஞ்சி கிலோ மீட்டர் இருக்கும். அங்கேயும் வேல்முருகன் தியேட்டர்லே வெள்ளிக்கிழமையிலேருந்து தமிழ்லேதான் போட்டிருக்காங்க. தயவுசெஞ்சி எல்லாரும் அங்கே போய் பாருங்க”

கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொய் சொல்கிறார் என்று நினைத்து எல்லோரும் அப்படியே இருக்க, சில பேர் நாகலாபுரத்துக்கு போன் போட்டு விசாரித்து ‘மேட்டர் ஓக்கே’ என்றார்கள். சத்தியவேட்டில் இருந்த பாதி கூட்டம் நாகலாபுரத்துக்கு விரைந்தது.

வேல் முருகனும் தம்மாத்துண்டு தியேட்டர்தான். ஆனால் சத்தியவேடு சீனிவாசாவை விட கொஞ்சம் பெரியது. போன வாரம் முழுக்க ‘விஸ்வரூபலு’வாக ஈயடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று ‘பல்ப்’ எரிய விஸ்வரூபமாக்கி விட்டார்கள். ‘நாகலாபுரத்தில் தமிழில் விஸ்வரூபம்’ என்று கையால் எழுதி - தமிழில்தான் எழுதியிருக்கிறார்கள், ஆனாலும் ஜாங்கிரி சுட்டமாதிரிதான் இருக்கிறது ஊத்துக்கோட்டையில் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

காலை காட்சிக்கு எழுபது பேர் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் மதிய காட்சிக்கு வேல்முருகன் அதிரிப்போயிந்தி. ஹவுஸ்ஃபுல் ஆகி ஓவர்ஸ் விட தரையும் ஃபுல் ஆனது. டி.டி.எஸ்/க்யூப். சவுண்ட் படு சுமார். புரொஜெக்‌ஷன் ஓக்கே.

சென்னையிலிருப்பவர்கள் விஸ்வரூபத்தின் uncut versionஐ பார்க்க நாகலாபுரத்தை பரிசீலிக்கலாம். சத்தியவேடுக்கு போய் முட்டிப் பார்க்க முடிவெடுப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். ஒரு காட்சி ஃபுல் ஆகிவிட்டாலும், அடுத்த காட்சியை பார்த்துவிடலாம். சத்யவேடுவில் இந்த கேரண்டி இல்லை. பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் புத்தூர் வழியாக திருப்பதிக்குப் போகும் பேருந்தில் செல்லலாம். “நாகலாபுரம் நில்சுனா அண்ணய்யா...” என்று டிக்கெட் எடுப்பதற்கு முன்பாக கண்டக்டரிடம் விசாரித்துக் கொள்ளவும். நாகலாபுரம் ஆர்ச்சுக்கு முன்பாக பைபாஸில் நிறுத்துவார்கள். அங்கிருந்து ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். அல்லது கோயம்பேட்டிலிருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து நாகலாபுரம் செல்லலாம். இந்த பஸ் ஊருக்குள்ளேயே போகும்.

டூவீலரிலோ, காரிலோ செல்பவர்கள் திருவள்ளூர், பூண்டி தாண்டி ஆந்திர எல்லைக்குள் நுழைந்து லெஃப்ட் எடுத்து நாகலாபுரம் செல்லலாம். தோராயமாக எண்பது கி.மீ. தூரம் வரும்.

இவ்வளவு கஷ்டப்பட்டு ஆந்திரா போய்தான் பார்க்க வேண்டுமா, எட்டாம் தேதி ரிலீஸ் ஆகும்போது உள்ளூரிலேயே பார்த்துக் கொள்ளலாமே என்று கேட்பவர்களுக்கு நம்மிடம் பதிலில்லை. தமிழக அரசின் கட்டப் பஞ்சாயத்தால் வெட்டப்படும் காட்சிகள் என்று கேள்விப்படும் காட்சிகள் எல்லாமே படத்தின் உயிர்நாடி. அக்காட்சிகளோடு முழுமையாக பார்க்கும் அனுபவம் அலாதியானது. விஸ்வரூபம் இதுவரை உங்களுக்கு சினிமாவில் வழங்கப்படாத புது அனுபவத்தை வழங்குகிறது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறோம். நமக்கு கிடைத்த அந்த அற்புதமும், பரவசமும் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஆப்ஷன் ஒன்று : வழியில் சுருட்டப்பள்ளியில் ஈஸ்வரன் கோயில் இருக்கிறது. ஆலகால விஷத்தை முழுங்கிய ஈஸ்வரன், டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்க அம்மையின் மடியில் தலை வைத்து இருபது அடி நீளத்துக்கு படுத்தவாக்கில் வீற்றிருக்கிறார். ஈரேழு உலகிலும் ஈஸ்வரனுக்கு இப்படியொரு சிலை இருப்பது சுருட்டப்பள்ளியில்தான். அங்கிருக்கும் அம்மனும் சக்தி வாய்ந்தவராம். விஷத்தால் சிவனுக்கு ஆபத்து ஏற்படாமல் காத்தவர் அவர்தானாம். மிகப்பழமையான இந்த ஆலயம் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. நாகலாபுரத்தில் இருக்கும் பெருமாள் (விஷ்ணு? அல்லது ஏதோ ஒண்ணு) கோயிலும் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் பிரமாதமாக புதுப்பிக்கப்பட்ட இக்கோயில் ஒரு கலை அதிசயம். படம் பார்க்கும் சாக்கில் இப்படி ஓர் ஆன்மீக டூரும் அடிக்கலாம்.


ஆப்ஷன் இரண்டு : ஆன்மீகத்தில் அக்கறை இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கு ஆந்திராவின் ஒரிஜினல் சரக்கு. நம்மூர் டாஸ்மாக்கில் கலப்பட சரக்கு அடித்து வயிறு புண் ஆனவர்களுக்கு ஆந்திர சரக்குதான் சிறந்த மருந்து.

நீங்கள் தேவனோ, சாத்தானோ தெரியாது. ஆனால் இருவருக்குமான ஆப்ஷனும் மேலே இருக்கிறது. choose your best choice!


2 பிப்ரவரி, 2013

கடல்

ஒரு மந்தையிலிருந்த இரண்டு ஆடுகள் தேவஊழியத்துக்காக ஸித்தியாகின்றன. வெள்ளை ஆடு தேவமைந்தனுக்கு மைந்தனாய் தேவபிரசங்கம் செய்ய தலைப்படுகிறது. கருப்பு ஆடு சிற்றின்ப போதையால் தேவனுக்கு விசுவாசமில்லாமல் போய் சாத்தான் வசமாகிறது. (லக்கி 1:46)

சாத்தானின் துர்க்குணங்கள் நிரம்பிய ஆண் ஆட்டுக்குட்டி ஒன்று தேவத்தன்மை பொருந்திய ஆட்டின் சகவாசத்தால் தேவனுக்கு அடிமை ஆகுவதோடு தேவக்குணங்கள் பொருந்தியதாகவும் மாறுகிறது. தேவ தன்மைகள் மிகுந்த மற்றொரு பெண் ஆட்டுக்குட்டியோ, சாத்தானுக்கு ஊழியம் செய்யும் கருப்பு ஆட்டுக்குப் பிறந்தது. (லக்கி  4:55)

கருப்பு ஆடு, வெள்ளை ஆட்டை சூழ்ச்சியின்பால் சூழலுக்கு பலியாக்குகிறது. ஆண் ஆட்டுக்குட்டியும் தன் தேவத்தன்மைகளை துறந்து சாத்தானுக்கு வாலாட்டுகிறது  (லக்கி  11:32)

சாத்தானின் ரத்தமாக இருந்தும் துர்க்குணங்களுக்கு ஆட்படாமல் தேவசிந்தனையோடு வாழும் பெண் ஆட்டுக்குட்டியின் நடத்தை, ஆண் ஆட்டுக்குட்டியை மீண்டும் தேவபாதைக்கு திருப்புகிறது (லக்கி  15:4)

கருப்பு ஆடாக சாத்தான் தேவ மைந்தர்களை அழிக்க உருவெடுத்தான். தேவமைந்தன் வெள்ளை ஆட்டின் உருவில் சாத்தானை ஒழிக்க சாத்தானிய குணங்களை பெறுகிறான் (லக்கி 20:20)

இறுதியில் கருப்பு ஆடு தன்னை முழுமையாக சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்க முடியவில்லை என்று ஒப்புக் கொள்கிறான். தன்னுடைய இரத்தமான பெண் ஆட்டுக்குட்டியை மரிக்கவைக்க அவனால் இயலவில்லை. அவனுக்குள்ளும் தேவவிசுவாசம் இருளுக்குள் ஒளியாய் மிஞ்சியிருக்கிறது. (லக்கி 30:29)

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


உயிர்பிழைத்த ஆட்டுக்குட்டி : படம் பார்த்து குற்றுயிரும் குலையுயிருமாகி, தேவ விசுவாசத்தால் உயிர்பிழைத்து, மீதி வாழ்க்கையை நடைபிணமாக கழிக்கப் போகிறவர்கள்

கருப்பு ஆடு உருவில் நின்ற சாத்தான் : படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் மற்றும் இயக்குனர்

1 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : சூதாட்டம்

அந்த குறுகிய சந்திப்பில் குறைந்தது ஆயிரம் பேர் குழுமியிருந்தார்கள். சோகம், கோபம், ஆவேசம், வெறி, விரக்தியென்று விபரீதமான உணர்வுகள். கூட்டத்தை விலக்கி மெதுவாக ஒரு வெள்ளைநிறக் கார் உள்நுழைகிறது. கார் நின்றதுமே இறங்குபவர்கள் எல்லாரும் வெள்ளுடையும், தலையில் வெள்ளைக் குல்லாவும் அணிந்திருக்கிறார்கள். ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கூட்டம் அமைதியாகிறது. யாராவது விபரீதமாக நடந்துக் கொள்வார்களோ என்று கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அச்சம். அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று காவலுக்கு நின்ற காவலர்களுக்கும் பயம். கிட்டத்தட்ட வன்முறைச் சூழல். ம்ஹூம். அச்சப்படுவது மாதிரி ஏதும் நடந்துவிடவில்லை. மாறாக அவர்களை வாழ்த்தி கோஷங்கள்தான் முழங்கப்பட்டது. பளீரென உதயசூரியனால் விடிகாலை காரிருள் விலகி ஒளிவெள்ளம் பாய்வது மாதிரி, கூட்டத்தில் வார்த்தைகளில் விவரிக்க இயலா சமத்துவ உணர்வு மேலெழுந்தது. மரியாதையாக அவர்களுக்கு அந்த கருப்புநிற கேட் திறந்துவிடப்பட்டது. கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளே சென்றார்கள்.

கமலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன பிரச்சினை ஏற்பட்டுவிட முடியும்? கமலைப் போய் இஸ்லாமியர்கள் எதிரியாக கருத முடியுமா? 
தமிழகம் மதச்சார்பு கொண்ட மாநிலமாக மாறிவிட்டது என்று கமலோ அல்லது வேறு யாரோ நினைத்தால் அதைவிட பெரிய பைத்தியக்காரத்தனம் வேறு எதுவுமில்லை. ஆயிரம் ’அம்மா’க்கள் தோன்றினாலும் இது தமிழர் தந்தை வாழ்ந்த மண். அவரிடம் சாமானியத் தமிழர்கள் எதை கற்றார்களோ இல்லையோ, சகிப்புத்தன்மையை கற்றிருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பெரியார் தமிழகத்தை மதவெறி சக்திகளிடமிருந்து காப்பார். திராவிடர் கழக அனுதாபியான கமலுக்கும் இது நிச்சயம் தெரியும். “இங்கிருந்து வெளியேறி விடுவேன்” என்று அவர் அன்று மிரட்டியது சமநிலை குன்றிய ஒருமாதிரியான சுயபச்சாதாபத்தில்தான். 
அன்று மாலை கமல் வீடு முன்பாக திரண்டிருந்த கூட்டத்தில் நானும் நண்பர்களோடு இருந்தேன். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது சோகம் என்னையும் சோகப்படுத்தி இருந்தது. இரவு எட்டரை மணிவாக்கில் கருப்புச் சட்டையில், போதுமான மேக்கப்பில் பால்கனியில் கமல் தோன்றினார். பரவசமான அந்த நிமிடங்களை என்னவென்று வர்ணிப்பது? எல்டாம்ஸ் சாலை முழுக்க ஒலித்த ‘வாழ்க’ கோஷம் போயஸ் தோட்டத்தை எட்டியிருக்கும். அவர் அதட்டினால் கூட்டம் அடங்கியது. கைத்தட்டலையும், விசிலையும் எதிர்ப்பார்த்து அவரது பேச்சில் சிறு இடைவெளி கொடுத்தால், அதை உணர்ந்துக்கொண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. கூடியிருப்பவர்கள் தன்னிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தன்னுடைய பிரத்யேக ஸ்டைலை காட்டினார் கமல். சட்டென்று காலை ஒரு திண்டின் மீது வைத்து, கால்முட்டியில் ஊன்றி, கையை கன்னத்தில் வைத்து அவர் கொடுத்த ‘போஸ்’ ஒன்றே போதும். அள்ளியது விசில். “என்னுடைய ரசிகர்களாக இஸ்லாமிய சகோதரர்களும் இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு ‘கேப்’ கொடுக்க, அதை உணர்ந்து கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய தோழர்கள் ஒவ்வொருவராக “நானும் இஸ்லாமியன்தான்” என்று குரல் கொடுத்துக் கொண்டே கை உயர்த்தினார்கள். ஆயிரக்கணக்கானோரை அசால்ட்டாக ரிங்மாஸ்டராக அன்று வேலை வாங்கினார் கமல். மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தில் மோகன்லால் பால்கனி வழியாக ரசிகர்களை சந்திக்கும் காட்சியை ஒத்த காட்சி அது.

விஸ்வரூபம் படம் தொடங்கியதிலிருந்து, அது தொடர்பான இன்றைய நிகழ்வுகள் வரை வரிசைக்கிரமமாக யோசித்துப் பாருங்கள். ஒரு க்ரைம் தில்லர் நாவலை வாசிப்பதைப் போன்ற சுவாரஸ்யம் கிடைக்கும். தயாரிப்பு கை மாற்றம், டி.டி.எச். ரிலீஸ், தியேட்டர் அதிபர்களோடு மோதல், டி.டி.எச்.வாபஸ், இஸ்லாமியர் எதிர்ப்பு, அரசாங்கம் தடை, நீதிமன்றத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் ஒரு சினிமாவுக்காக காரசார மோதல், தடை நீக்கம், தடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை, அரசியல் சினிமா பிரமுகர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு, கமல் ஜெ தனிப்பட்ட மோதல் மாதிரியான தோற்றம், வெளியான இடங்களிலெல்லாம் வரலாறு காணாத வரவேற்பு, அகில இந்தியப் பிரச்னையாக உருமாறுதல், இந்தி ரிலீஸ், மீண்டும் பேச்சுவார்த்தை என்று இதுவரை நடந்தவையே கன்னித்தீவின் தொடர் சுவாரஸ்யத்தை மிஞ்சுகிறது. விகடனோ, குமுதமோ உடனடியாக கமலை அணுகி ஒரு ‘மினித்தொடர்’ எழுத ஏற்பாடு செய்தால் தமிழ்நாடே அதிரும்.
விஸ்வரூபம் ஒரு கலைப்படைப்பு. கலைஞனின் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை. சினிமா என்பது பிரதானமாக வியாபாரம். வியாபாரி தனக்குக் கிடைக்கும் கூடுதல் லாபத்துக்காக ‘கட்டிங்’ கூட கொடுக்க வேண்டியிருக்கும். பாலிவுட்டில் இது ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படம் என்பது எத்தனை பேரின் கண்ணை உறுத்தியிருக்கும்? இனி தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் ‘கட்டிங்’குக்காகவே தங்கள் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியிருக்குமென தோன்றுகிறது.

இந்த ஒட்டுமொத்த விஸ்வரூப விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. முன்பாக துப்பாக்கி விவகாரத்திலும் திரைமறைவாக ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், அது சரிபடாத காரணத்தாலேயே இஸ்லாமியர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு மதப்பிரச்சினையாக மாற்றினார்கள் என்றும் சில சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். ஒரு சில விஷமிகளின் சுயநலத்துக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் கெட்டப் பெயர் சம்பாதிக்க வேண்டியிருப்பது வேதனையான நிகழ்வு. தகப்பன் மகள் உறவை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசக்கூடிய ஒருவர் எப்படி அன்பைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு விசுவாசமாக இருக்க முடியும்? இவர்களெல்லாம் தங்கள் பிரதிநிதிகள், தங்கள் சுயமரியாதையை காக்க போராடுகிறார்கள் என்று இஸ்லாமியர்கள் நம்பினால் அதைவிட பெரிய கொடுமை வேறெதுவுமில்லை. தங்களுக்குள் வளர்ந்துவிட்ட கருப்பு ஆடுகளை இனங்கண்டு இஸ்லாமியர்கள் ஒதுக்க வேண்டிய நேரமிது. இல்லையேல் மும்பையைப் போல எப்போதும் மதரீதியான பதட்டம் நிலவக்கூடிய அபாயச்சூழலுக்கு நம் அமைதிப்பூங்காவும் ஆட்படுத்தப்பட்டு விடும்.

கமலும் சும்மா இல்லை. எப்போது படம் எடுக்கும்போதும் ஏதேனும் சர்ச்சையை கச்சை கட்டிக் கொள்வது அவரது வாடிக்கை. மதரீதியான எதிர்ப்பு தோன்றியதுமே, சம்பந்தப்பட்டவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, சமரசப்படுத்தி அமைதியாக படத்தை வெளியிட்டிருக்க முடியும். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது படம் யாருடைய வயிற்றெரிச்சலையோ கொட்டிக்கொண்டு வசூல்மழை பொழிவதில் நமக்கும் உடன்பாடில்லை.
 மடியில் கனம் இருப்பதால்தான் அவருக்கு வழியில் பயம். தமிழுக்குப் பிறகு வெளியிடப்போகும் விஸ்வரூபத்தின் இந்தி வடிவத்துக்கு ஏன் முதலில் தணிக்கைச் சான்றிதழ் வாங்கினார்? ஏனெனில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை கொஞ்சம் கறாரானது. இதே படத்தின் இந்திவடிவம் கொஞ்சம் தாராளமாக தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வாங்கிவிட்டால், அதை பின்பற்றுவதைத் தவிர தமிழ் தணிக்கையாளர்களுக்கு வேறு மார்க்கமில்லாமல் போய்விடும். இந்தியத் துணைக்கண்ட இஸ்லாமியர்களின் மனவோட்டமும், தென்கிழக்கு ஆசிய இஸ்லாமியர்களின் மனவோட்டமும் அடிப்படையில் வேறு வேறானது. எனவேதான் மலேசியாவில் முதலில் படத்தை போட்டுக்காட்டி, இஸ்லாமியர்கள் இப்படத்தை ஆட்சேபிக்க ஒன்றுமில்லை என்று நிறுவ முயன்றார். இருபத்தைந்தாம் தேதி பட வெளியீடு என்று அறிவித்துவிட்டு, திரையரங்குகளில் முன்பதிவும் ஆரம்பித்துவிட்டு கடைசிக்கட்டத்தில் இருபத்தியொன்றாம் தேதி இஸ்லாமிய அமைப்புகளுக்கு படம் போட்டுக் காட்டுகிறார். நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ போய் தடை வாங்கிட அவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்ததைப் போல தோன்றுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நீள்வதாகவும், பாதி படம்தான் முதல் பாகமாக இப்போது வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் இந்திய முஸ்லிம்களைப் பற்றி ஆட்சேபகரமாக எதுவுமில்லை, ஏனெனில் கதை அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் நகர்கிறது என்று சமாதானமும் சொல்கிறார்கள். ஆனாலும் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படும் மீதி படம் இந்தியாவில் நடப்பதாக இருக்கிறது. அப்போது இந்திய முஸ்லிம்கள் சம்பந்தப்படாமல் கதை நகர வாய்ப்பேயில்லை. இப்போது இஸ்லாமியர் அச்சப்படும்படியான விஷயங்கள் அதில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இதனால்தானோ என்னவோ படத்தை இரண்டு பாகமாக கமல் வெளியிடுகிறார். முதல் பாகம் ஓடி வெற்றியடைந்துவிட்டால், அதன் தாக்கத்திலேயே இரண்டாம் பாகத்தை பிரச்சினையின்றி வெளியிட்டுவிடலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்புமே ஆடம்பரமான கேசினோ அரங்கில் அமர்ந்து சூதாட்டம் ஆடுவதைப் போன்ற சித்திரமே மனதில் எழுகிறது. எதிரில் அமர்ந்திருப்பவனின் கரங்களில் இருக்கும் மூன்று கார்டுகள் என்னவாக இருக்குமென்று யூகித்து ஆடவேண்டும். எப்போதுமே ‘ஏஸ்’ கிடைத்துவிடுவதில்லை. ஒரு கட்டில் நாலு ‘ஏஸ்’ தான் இருக்கமுடியும். நிகழ்தகவு அடிப்படையில் சிந்தித்து யோசித்து விளையாடுபவன்தான் சூதாட்டத்தில் கில்லாடி.
 விஸ்வரூபம் விஷயத்தில் கலைஞரின் கையில் இருந்த மூன்று கார்டுமே ‘ஏஸ்’. மதப்பிரச்சினை, அரசுத்தடை என்று மாநில அளவில் இருந்தப் பிரச்சினையை அவரது அறிக்கை தேசியப்பிரச்சினையாக மடைமாற்றி விட்டது. போதாக்குறைக்கு கமலுக்கும், முதல்வருக்கும் முன்விரோதம் என்று போகிற போக்கில் ஒரு திரியையும் கொளுத்திப் போட்டிருக்கிறார். ஊடகங்களில் கிசுகிசு மாதிரியாக கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருந்த விஸ்வரூபத்தை ஜெயாடிவி அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சித்தது என்கிற விவகாரத்தையும் நோண்டினார். காலையில் கமலின் உருக்கமான பேட்டி, மாலையில் கலைஞரின் விவரமான அறிக்கை என்று அந்த நாளிலேயே கமல் தரப்பு ‘ஸ்ட்ராங்’ ஆனது. கமலுக்கு ஆதரவான அனுதாப அலை தமிழ் சினிமாவுலகில் மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் வெகுவாக எழும்பத் தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் காவிரி விஷயத்தில் தமிழகம் ‘கப்பு’ வாங்கிய செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, விஸ்வரூபம் பிரதானப் பிரச்சினையாக மக்களின் முன்பு ஊடகங்களால் முன்வைக்கப்பட்டது. இந்த பரபரப்பு பரவி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களும், ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் கமலுக்கு ஆதரவாக திரண்டார்கள். மத்திய அமைச்சரே விஸ்வரூபம் பற்றி பேசவேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. கலைஞரின் அறிக்கையால் கமலுக்கு பெருவாரியான ஆதரவு திரண்டது. அதே நேரம் கலைஞருக்கும் அரசியல் மைலேஜ் கூடுதலானது. அதிமுக ஆட்சிக்கு எதிரான மனோபாவம் பரவுவது அவரது அரசியலுக்கு லாபம்தானே.. அதுவும் யாரும் எதிர்பாராத ஒரு பிரச்சினையில்? 
கலைஞர் எதிர்ப்பார்த்த மாதிரியே பூனைக்குட்டி வெளியே வந்தது. அதுவரை விஸ்வரூபம் குறித்து எதையும் கண்டுக்கொள்ளாத மாதிரி இருந்த முதல்வர் ஜெயலலிதா தன்னை தற்காத்துக்கொள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜெயலலிதாவின் கருத்துகள் ஓரளவுக்கு அவர் தரப்பு சேதாரத்தைக் குறைத்திருக்கிறதே தவிர, முற்றிலுமாக நிலைமையை மாற்றிவிட முடியவில்லை. வேறு வழியின்றி பதினைந்து நாள் தடை முடிந்ததும் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். ஒருவேளை தடையை நீடித்தால் கலைஞர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்கிற எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டு விடும்.

தமிழ்நாட்டைத் தவிர உலகெங்கும் வெற்றிகரமாக விஸ்வரூபத்தை வெளியிட்டு விட்டார். கமலால் செலவு செய்யமுடியாத கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு தமிழக அரசும், சில இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு விளம்பரத்தைத் தேடி தந்திருக்கின்றன. வழக்கமான கமல் படங்களுக்கு கிடைக்கும் ஆதரவை விட பன்மடங்கு ஆதரவை ரசிகர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய ரவுண்டில் கமல் வென்றிருப்பதாகவே தெரிகிறது.