16 அக்டோபர், 2012

யாருக்கு மாப்பிள்ளை யாரோ?


மருத்துவர் அய்யா சமீபத்தில் வானூர் என்கிற ஊரில் வான்மழையாய் பொழிந்திருக்கிறார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஒட்டுமொத்த வன்னியர்களும் மாம்பழத்துக்கு ஓட்டு போட்டால் வன்னியன் ஆளுவான். மண்ணில் நெற்பயிரோடு வீரத்தையும் விளைவித்தவன் வன்னியன்.

வெள்ளையன் என்பதை வன்னியன் என்று தவறுதலாக சொல்லிவிட்டாரா தெரியவில்லை. அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை வெள்ளையர் ஆண்டதாக பாடப்புத்தகங்களில் தவறுதலாக எழுதிவிட்டார்களா என்றும் தெரியவில்லை.

முன்பே அய்யா அருளியிருந்தார். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு தலித்தான் தமிழகத்தின் முதல்வர் என்று. அய்யாவுக்கு செங்கல்பட்டு தாண்டினால் ‘செலக்டிவ் அம்னீசியா’ வந்துவிடுகிறது. ஏற்கனவே என் குடும்பத்தில் இருந்து யாராவது கோட்டையில் கால் வைத்தால், முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்று சாடியிருந்தார். ஆனால் சின்ன அய்யா செங்கோட்டைக்குள் கேபினட் அமைச்சராக நுழைந்தார். பெரிய அய்யா முதல்வரான அம்மாவை வாழ்த்தி ஆசிபெற செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் ஒருமுறை 'தேவுடு' காத்தார்.

மேலும் பேச்சில் ’நச்’சென்று ஒரு ‘பஞ்ச்’ வைத்திருக்கிறார் மருத்துவர் அய்யா. அதுதான் இப்போது பஞ்சாக பற்றிக் கொண்டிருக்கிறது.

யாதவர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சாதி கட்சிகளுடன் தான் கூட்டணி

ஒருவகையில் டாக்டர் ராமதாஸை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாமல் உளமாற ‘பட்’டென்று பட்டாசாய் வெடித்திருக்கிறார். மக்கள், சமூகம், நாடு என்று சல்லியடிக்காமல் சல்லிசாய் வெல்லுவதற்கு இதுதான் எங்களது வழியென்று ஆணியடித்தாற்போல ஆப்பு அடித்திருக்கிறார். ஆப்பு அவருக்கா, நமக்கா என்பது தேர்தல் முடிந்து ஓட்டுகளை எண்ணும்போது தெரியும். சாதிக்கு கட்சி நடத்துபவர், சாதிக்கட்சிகளோடு கூட்டணி வைப்பதுதான் இயல்பு. சாதியால்தான் சாதிக்க முடியுமென்கிற அவரது முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய முத்தான முடிவுக்கு மீண்டும் வந்திருக்கிறார். வாழ்க்கை மட்டுமல்ல. அரசியலும் ஒரு வட்டம்தான்.

அய்யாவைப் போலவே மற்ற அரும்பெரும் தமிழக தலைவர்களும் திறந்த மனதோடு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த தமது ‘ஹிட்டன் அஜெண்டாவை’ தம் உள்ளத்தைத் திறந்து அறிவித்தால், ஓட்டு போடும் யந்திரங்களிடம் உடனடி ‘ஹிட்’ ஆகும். அவர்கள் அறிவிக்காவிட்டாலும்அவர்களது சார்பில் அவர்களது குரலில் நாமே அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
கலைஞர்

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் உடன்பிறப்புகள் அழகிரி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோருக்கு மத்திய கேபினட் அமைச்சரவையில் இடம் தர முன்வருபவர்களோடுதான் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகள் வலியுறுத்துகிறார்கள். ஆனாலும் கூட்டணி விஷயத்தில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அண்ணா கண்ட கழகம் இருந்துவிடாது. நமது சுயமரியாதையை காக்கும் வகையில் பேராசிரியர் தலைமையில் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுவினை கூட்டி இதே முடிவினை எடுப்போம்.

ஜெயலலிதா
1952ல் தொடங்கி தமிழகத்தில் நடந்த ஆட்சிகளிலேயே நல்லாட்சி எனது ஆட்சிதான் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள். தங்கள் சகோதரியின் உத்தமமான ஒளிமிகுந்த ஆட்சி தங்கள் மாநிலத்திற்க்கு மட்டுமின்றி, இருளாய் கிடக்கும் இந்திய நாட்டுக்கே விளக்கேற்றி பயன்பட வேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை. எனவே என்னை, உங்களது ஆருயிர் சகோதரியை பிரதமராக ஒப்புக்கொள்ளும் கட்சியுடன் மட்டுமே புரட்சித்தலைவர் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்கும். தேர்தல் முடிந்து, நான் செங்கோட்டையில் பதவி ஏற்றுக் கொண்டவுடனேயே அந்த கூட்டணி முடிந்தும் போகும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த்
யார் கூடவும் கூட்டணி கிடையாது. மக்களோடும், இறைவனோடும் மட்டும்தான் தேமுதிகவுக்கு கூட்டணி. அதுவும் மக்களோடு மட்டுமா அல்லது இறைவனோடும் சேர்த்தா என்பதை இன்றைக்கு இரவு அறிவிப்பேன். ஆனா யாராவது கூட்டணிக்கு கூப்பிட்டா அதை மக்களும், இறைவனும் ஒத்துக்கிட்டா.. அவங்களோட கூட்டணி வெச்சுக்கிறதுக்கு நான் ரெடி. ஆனா கூட்டணிக்கு முன்னாடியே ஜெயிச்சவுடனேயே கழட்டி விட மாட்டோம்னு ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி கைநாட்டு வெச்சி மக்களுக்கும், கடவுளுக்கும் முன்னாடி கற்பூரம் ஏத்தி அடிச்சி, அந்த கட்சி எங்கிட்டே ஒப்பந்தம் போடணும். போடவைப்பேன்.

கம்யூனிஸ்ட்டுகள்
எங்களை மதிக்கணும்லாம் அவசியமில்லைங்க. ஏதோ ஒண்ணோ, ரெண்டோ சீட்டு பார்த்து போட்டு கொடுத்தா போதும். நாப்பது தொகுதியிலேயேயும் கவுரவம் பார்க்காம ‘ஜிந்தாபாத்’ போட நாங்க தயார்.

(தா.பாண்டியன் குறுக்கிட்டு) சீட்டு கொடுக்கலைன்னா கூட ஜெயலலிதாவோட ஆட்சி டெல்லியி
லும் மலரணும்னு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும். ஜெயலலிதாவை கோபப்படுத்தாம பாத்துக்கணும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை.

வைகோ 
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?
காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?
நேரத்திலே நான் ஊர் செல்லவேண்டும்,
வழி போக துணையாய் அன்பே வாராயோ?


முகாரி ராகத்தில் சோகமாகப் பாடுகிறார். நாஞ்சில் சம்பத் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்து திடீரென ஆவேசமாகி,

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

15 அக்டோபர், 2012

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், இரு நாட்களுக்கு முன்பாக ‘கேப்டன் அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது தமிழில் மொழிபெயர்த்தால்நோ ப்ரா டே’. இருவரும் மார்புக்கச்சை அணியாமல் ஏகப்பட்ட போட்டோக்கள் எடுத்து, ட்விட்டரில் பகிர்ந்து தங்களது ஃபாலோயர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தினார்கள். எலிசபெத் மகாராணி கூடநோ ப்ரா டேகுறித்து ஏதோ ட்விட் போட்டிருக்கிறார்களாம்.

இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்கள் பலரும் விடுதலையாக ஃபீல் செய்திருக்கிறார்கள். இந்த நாளை சுதந்திரத் திருநாளாக கொண்டாடிய பெண்களைப் பார்த்து வேறொரு பெண் கேலியாகச் சொன்னார், For me every day is No Bra day

நான் பதிமூன்று வயதில் பேண்ட் போட ஆரம்பித்ததில் இருந்தே மேல் உள்ளாடையாக ‘கட் பனியன்’ (கை வைக்காத பனியன்) அணிந்து வருகிறேன். டீஷர்ட் அணியும்போது மட்டும் கட்பனியனுக்கு டாட்டா. என்றாவது பனியன் ஸ்டாக் இல்லாதபோதோ அல்லது மறந்தோ அணியாவிடில், ஆடையே அணியாதது போன்ற ஓர் உணர்வு நாள் முழுக்க uneasyயாக உணரவைக்கும்.

மேற்கத்திய நாடுகளில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை பெண்கள் ‘பிரா’ அணிவதாக சொல்கிறார்கள். சமீப ஆண்டுகளாக பெண் என்றால் இந்த உடையை அணிந்தே ஆகவேண்டும் என்பதாக ட்ரெஸ்-கோட் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. இருப்பினும் நம் நாட்டில் நகர்ப்புறம் தவிர்த்துப் பார்த்தால், ‘பிரா’ இன்னமும் ஓர் ஆடம்பர உடைதான்.

ஓக்கே, நாம் தலைப்புக்கு வருவோம்.

அக்டோபர் மாதம் முழுக்கவே மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப் படுகிறது. இந்த விழிப்புணர்வுக்கு சொல்லப்பட்ட வித்தியாசமான ஐடியாக்களில் ஒன்றுதான் ’நோ ப்ரா டே’. அதாவது “ஏன் இன்று பெண்கள் பிரா அணியவில்லை?” என்கிற சந்தேகம் யாருக்கோ ஏற்பட்டு, என்னை மாதிரி மேலதிகமாக விசாரித்து மார்பகப் புற்றுநோய் பற்றி வாசித்தோ, கேட்டோ விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதுதான் ஐடியா. இந்த ‘புத்திசாலித்தனமான’ ஐடியாவின் காரணமாகதான் இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த ‘டே’ கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் ‘தேசிய மார்புக்கச்சை அணியா தினம்’ வெகுசிறப்பாக ஜூலை 9 அன்று வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அந்தந்த ஊர் செலப்ரிட்டீஸ்களை போட்டோ எடுக்க அமெரிக்க போட்டோகிராபர்களிடையே வெட்டுக்குத்து கூட நிகழ்வதுண்டு. இவ்வருடம் விழிப்புணர்வுக்காக உலகளாவிய அளவில் களமிறங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகிய இருவரும் ஆதாரப்பூர்வமாக இத்திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். 
ப்ராவுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் மருத்துவரீதியாக, நேரடியாக என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் ப்ரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதாக கூறி பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அமெரிக்கத் தம்பதியர் புத்தகம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். அந்தப் புத்தகத்தின் பெயரே கொஞ்சம் டெர்ரர் ஆக இருக்கிறது, ‘Dressed to kill’

ப்ரா அணிவதால் இயல்பான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதுவே புற்றுநோய்க்கும் காரணமாகிறது என்று வாதிடுகிறது அந்த புத்தகம். எழுபது சதவிகித மார்பகப் புற்றுநோய், காரணம் சொல்லவியலா காரணங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த காரணம் ‘பிரா’ தான் என்று அடித்துப் பேசுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள்.

இருபத்தி நான்கு மணி நேரமும் ப்ரா அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, பிராவே அணியாத பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதை விட நூற்றி இருபத்தி ஐந்து சதவிகிதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அணுகுண்டை தூக்கிப் போடுகிறார்கள்.

இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு முன்பாக மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களிடம் அவர்கள் ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்களாம். அதில்,

- மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களில் நான்கில் மூவர் நாள் முழுக்க பிரா அணியும் பழக்கம் கொண்டவர்கள்.

- ஏழில் ஒருவர் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமாவது ப்ரா அணிபவர்கள். தூங்கும்போது மட்டும் ஃப்ரீயாக இருப்பவர்கள்.

என்று ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறார்கள்.

இந்த புத்தகத்துக்கு உலகளாவிய ப்ரா ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வருடா வருடம் பல்லாயிரம் கோடி லாபம் பெற்றுத்தரும் ப்ரா விற்பனையை முடக்க நடக்கும் சதியே இந்தப் புத்தகம் என்று ப்ரா விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினார்கள். போதுமான உண்மையோ, ஆதாரங்களோ, கணக்கெடுப்புகளோ இல்லாத அர்த்தமற்ற புத்தகம் என்று மருத்துவ உலகமும் இந்த புத்தகத்தை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் அச்சமாகதான் இருக்கிறது. கட் பனியன் அணிவதால் இதுமாதிரி ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்று யாரேனும் ஒரு நல்ல மருத்துவரை முதலில் கலந்தாலோசிக்க வேண்டும்.

No Panty Day கூட மேலைநாடுகளில் கொண்டாடப்படுவது உண்டாம். மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த நாளாக கொண்டாடப்படுகிறதாம். அன்றைய நாளில் ஷெர்லினும், பூனமும் என்னென்ன போட்டோக்களை பகிரப்போகிறார்களோ என்று இப்போதே கற்பனை செய்துப் பார்த்து, அதன் விளைவாக கிளுகிளுப்பு கலந்த அச்சம் ஏற்பட்டிருப்பதால் லேசாக டெங்கு காய்ச்சல் அடிக்கிறது.

6 அக்டோபர், 2012

விகடன் டைம்பாஸ்

சிக்கென்ற வடிவில் ஸ்லிம் சைஸில் ஐந்து ரூபாய் விலைக்கு கிடைக்கும் டைம் பாஸை வாசிக்க ஐந்து நிமிடங்கள் முழுதாகப் பிடித்தது.

(பழைய) குமுதத்தின் சேட்டை + வண்ணத்திரை, சினிக்கூத்து ரக உள்ளடக்கம் = விகடன் டைம்பாஸ்

அட்டையோடு சேர்த்து அறுபத்தியெட்டு பக்கம். முழு வண்ணம். அட்டை மட்டும் ஆர்ட் பேப்பர். உள்ளே வழக்கமான நியூஸ் பிரிண்ட். என்றாலும் ஐந்து ரூபாய்க்கு தரும் டைம்பாஸ் சற்றே அதிகம்தான். மெயின் டிஷ் சினிமா. தொட்டுக்க ஊறுகாய் மாதிரி லேசாக அரசியல்.

குட்டி சாமியாரை ரிமைண்ட் செய்த ஐடியா குட். அம்மாவின் கைப்பேசி அசத்தல். தாண்டவம் ரிவ்யூ தாங்கலை. போட்டோவுக்கு காசு கொடுக்காத விஜயகாந்த், சீரியஸ் சீண்டல். ‘அத்த பெத்த ரத்தினமே’ போட்டோ காமிக்ஸ் சூப்பர். ஷகிலா பேட்டி சபாஷ்.  வில்பர் சர்குணராஜ் பேட்டி வேஸ்ட்.

விகடனின் சாபக்கேடாக அமைந்துவிட்ட வைகோ டைம்பாஸுக்குள்ளும் தொடர்கிறார். ‘மழை’ ஸ்ரேயா கணக்காக இரண்டு பக்கங்களுக்கு கவர்ச்சி போஸ். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் கிசுகிசுக்களும், துணுக்குகளும் நல்ல தேர்வு. ‘அவதூறு வழக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் ஜெயலலிதாவைப் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி?’ என்கிற கட்டுரைதான் இதழின் பெஸ்ட். இன்னும் இரண்டு பக்கங்களுக்கு நீண்டிருக்கக்கூடாதா என ஆசைப்பட வைத்தது.

ஏராளமான ஐட்டங்கள் இருந்தாலும், இதழை வாசித்து முடித்ததும் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது. ’சிரி’யஸ் பத்திரிகை என்று மொத்தமாக குத்து குத்துவென்று குத்தினாலும் சில சீரியஸ் ஆர்ட்டிக்கிள் இருந்தால் தப்பேதுமில்லை. ஒன்றோ, இரண்டோ ரியல் ஹ்யூமன் ஸ்டோரி இருக்குமேயானால் அந்த பத்திரிகையின் ரேஞ்சே வேறு.

விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இதழில் லே-அவுட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வது மன்மோகன் சிங்கின் டர்பன் ப்ளூ கலர் என்று சொல்வதை மாதிரி ஆகிவிடும். வழக்கம்போல ஆசிப்கானின் கேரிகேச்சர்கள் தத்ரூபம், பிரமாதம். தமிழ் பத்திரிகையுலகில் இவருக்கு முன்னுதாரணம் சொல்லக்கூடிய கேரிகேச்சர் ஆர்ட்டிஸ்ட்டுகள் யாராவது இருந்தார்களா என்றே எனக்கு நினைவில்லை. ஆனாலும் ஒரே மாதிரியான தன்மையுள்ள படங்கள் விரைவில் அலுத்துவிட வாய்ப்பிருக்கிறது. மாதநாவல்களின் அட்டைப்படங்களில் மாருதி தத்ரூபமாக பெண்களை வரைந்தபோது ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம், போகப்போக மங்கிக்கொண்டேப் போனதை மறந்துவிடக்கூடாது.

இந்த பத்திரிகைக்கான ஐடியா ஆனந்த விகடன் உருமாற்றம் பெற்றபோது உருவான யூத்ஃபுல் விகடனில் தொடங்கியிருக்கும் என்று கருதுகிறேன். பிற்பாடு ‘என் விகடன்’ ஆகி, கடைசியாக டைம்பாஸில் விடிந்திருக்கிறது என்று தோன்றுகிறது. புதிய தலைமுறையின் வெற்றிக்கு அதன் ஐந்து ரூபாய் சூத்திரம் ஆரம்பக் காலங்களில் உதவியது. அதே உத்தியை இதற்கும் முயற்சித்திருக்கிறார்கள். ஐந்து ரூபாய் என்பது ஆரம்பக்கால usp (unique selling proposition). இது மூன்று மாத காலத்துக்குகூட தாக்குப்பிடிக்காது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு வாசகரையும் வாரந்தோறும் தக்கவைக்க வேறொரு மேஜிக் ஏதோ தேவைப்படுகிறது. இது பவளவிழா கண்ட விகடனுக்கு நிச்சயம் தெரியும். டைம்பாஸில் என்னென்ன பாய்ச்சலை விகடன் நிகழ்த்தப் போகிறது என்று ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தப் பத்திரிகை குமுதத்துக்கு சவால் விடும் என்று வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகையுலகத்தில் இருக்கும் நண்பர்களால் கிசுகிசுக்கப்பட்டது. குமுதத்துக்கு சவால் குமுதமாக மட்டுமே இருக்க முடியும் என்பது என் எண்ணம். முன்பு குமுதம் இதழே வெளியிட்ட ‘குமுதம் ஸ்பெஷல்’ என்றுமே என்னுடைய கனவுப் பத்திரிகை. குமுதம் குழுமமே நினைத்தாலும் அம்மாதிரியான ஒரு பத்திரிகையை மீண்டும் நடத்த முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அதுபோலவே குமுதத்தில் இருந்து வெளிவந்த ‘ஜங்ஷன்’ கூட என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க ஒரு முன்மாதிரிப் பத்திரிகைதான்.

விகடன் டைம் பாஸின் முதல் இதழ் ஜஸ்ட் பாஸ். விரைவில் டிஸ்டிங்ஷன் பெற அதன் ஆசிரியர் நண்பர் ரீ.சிவக்குமாரை வாழ்த்துகிறேன்.

5 அக்டோபர், 2012

இந்தியாவின் ஹெர்குலிஸ்


மனோகர் ஆயிச்சை உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சூப்பர் ஹீரோ. பாடிபில்டரான மனோகர் வங்கமாநிலத்தில் தம்தி என்கிற ஊரில் பிறந்தார் (இப்போது பங்களாதேஷில் இந்த ஊர் இருக்கிறது). 1950ஆம் ஆண்டு ‘மிஸ்டர் ஹெர்குலிஸ்’ பட்டம் வென்றவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியவர் இவர்தான். மூன்று முறை ஆசியப் போட்டிகளில் ‘பாடி பில்டிங்’ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர். ஆணழகரான மனோகருக்கு ஒரே ஒரு குறை. அவரது உயரம். நான்கு அடி பதினோரு அங்குலம் மட்டும்தான். எனவே அந்தக் காலத்தில் ‘பாக்கெட் ஹெர்குலிஸ்’ என்று ஊடகங்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

சிறுவயதிலேயே மனோகருக்கு உடல் ஆரோக்கியத்தில் பெரும் ஆர்வம் உண்டு. ஒருமுறை மல்யுத்தப் போட்டிகளை நேரில் கண்டபோது, வீரர்களின் திறமை கண்டு அதிசயித்து, இந்த ஆர்வம் அவருக்குள் துளிர்விட்டது. மல்யுத்தம், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டார். பண்ணிரெண்டு வயதில் அவருக்கு ஒரு மர்மக்காய்ச்சல் வந்தது. இதன் காரணமாக முற்றிலும் உடல்நலம் குன்றினார்.

வறுமை, தீவிரமான வாழ்க்கைப் போராட்டங்கள் எதுவுமே மனோகரின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. விசித்திரக் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர் கடுமையான உடற்பயிற்சிகள் மூலமாக மீண்டும் ஆணழகன் ஆனார். டாக்கா நகரில் இருந்த ஒரு பள்ளியில் படித்தார். இந்த காலத்தில் டாக்காவில் பிரபல மேஜிக் நிபுணரான பி.சி.சர்க்காரின் மேஜிக் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் உடல் அழகை பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டும் நிகழ்வுகளில் மனோகரும் இடம்பெற்றார்.

1942ஆம் ஆண்டு ராயல் ஏர்ஃபோர்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கே பணிபுரிந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி மனோகருக்கு உதவினார். நவீனப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தினார்.

அந்தக் காலத்து இளைஞர்களுக்கு இருந்த சுதந்திர தாகம் மனோகருக்கும் இருந்தது. வெள்ளையர் ஆட்சியை எதிர்க்கும் போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இதனால் வெள்ளையரான தனது மேலதிகாரியை ஒருமுறை கன்னத்தில் அறையவேண்டிய சூழலும் வந்தது. உடனடி தண்டனையாக பணிநீக்கம். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிந்து, சிறைத்தண்டனையும் மனோகருக்கு கிடைத்தது. சிறையிலும் கூட தனது உடற்பயிற்சிகளை மனோகர் தொடர்ந்தார். இவரது பயிற்சியை கண்டு வசீகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகள், மனோகருக்கு என்றே சிறப்பு உணவினை ஏற்பாடு செய்தார்கள்.

சிறை சென்றதற்காக நான் வருத்தப்படவில்லை. உலக ஆணழகன் போட்டியில் பட்டம் வெல்வதே என்னுடைய அப்போதைய லட்சியமாக இருந்தது. எந்த உபகரணங்களின் துணையுமின்றி தீவிரமான பயிற்சிகளை அப்போது மேற்கொண்டேன். அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பண்ணிரெண்டு மணி நேரத்தை பயிற்சி செய்வதிலேயே செலவிட்டேன்” என்று இன்று மலரும் நினைவுகளில் மூழ்குகிறார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபிறகு மனோகருக்கும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. கையில் வேலை இல்லை. நான்கு குழந்தைகள். வாழ்வின் மிக மோசமான காலக்கட்டத்தில்தான் முதல் பாராவில் சொல்லப்பட்ட சாதனைகளை அவர் நிகழ்த்திக் காட்டினார்.மிஸ்டர் ஹெர்குலிஸ்பட்டம் வெல்லும்போது அவரது வயது முப்பத்தியேழு. 1952ஆம் ஆண்டு மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர், 1955ல் இதே போட்டியில் மூன்றாவது இடம் பெற்றார். 1960ல் கடைசியாக இதே போட்டியில் நான்காவது இடம் வந்தபோது அவருக்கு வயது நாற்பத்தியேழு.

1500 பக்க அளவுள்ள புத்தகத்தை அப்படியே காகிதத்தை கிழித்தெறிவது மாதிரி கிழிப்பது மாதிரி ‘ட்ரிக்’குகளில் மனோகர் கில்லாடி. பிற்பாடு கொல்கத்தா நகரில் ‘பிசிக்’ என்கிற பெயரில் உடற்பயிற்சி நிலையத்தை நடத்தினார். இந்த நிலையத்தில் இருந்து சத்யன் தாஸ், சுந்தீபன் சென், சத்யா பால், ஹிதேஷ் சாட்டர்ஜி போன்ற இந்திய அளவிலான ஆணழகர்கள் வெளிவந்தார்கள்.

அவர் உடல் பலத்தில் உச்சத்தை எட்டி அறுபது ஆண்டுகள் கழிந்துவிட்டது. 1912ல் பிறந்த மனோகர், தன்னுடைய நூற்றாண்டு நிறைவினை சில மாதங்களுக்கு முன்பாக கொண்டாடினார். கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறியளவிலான ‘ஹார்ட் அட்டாக்’ தவிர்த்து அவரது உடலில் இன்றும் வேறெந்த குறையுமில்லை. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற பழமொழிக்கு நல்ல உதாரணம் மனோகர்.

அவரது மகன்கள் இப்போது கொல்கத்தாவில் ‘ஃபிட்னஸ் சென்டர்’ நடத்துகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனோகர் அங்கேபோய் உடற்பயிற்சி செய்கிறார். இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். 
“பால், பழம், காய்கறிகள், அரிசி, தானியங்கள், மீன் இவைதான் என் நீண்டகால ஆரோக்கியத்துக்கு காரணம்” என்று நூறுவயதையும் சிரமமின்றி கடந்த ரகசியத்தை ‘பளிச்’சென்று போட்டு உடைக்கிறார். சிகரெட்டை தொட்டதேயில்லை. மதுபானம் வாய்ப்பேயில்லை.

“எவ்வளவு சிரமமான வாழ்க்கையாக இருந்தாலும், அந்த ‘டென்ஷன்’ உங்கள் கழுத்தை நெரிக்காதது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நெருக்கடியையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்பவனுக்கு தோல்வியே இல்லை. என் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் பணம் சம்பாதிக்க நான் சிரமப்பட்டுக்கொண்டேதான் இருந்திருக்கிறேன். ஆனால் மகிழ்ச்சியை மட்டும்  எப்போதும் கைவிட்டதேயில்லை” என்கிறார்.

நிறைவான வாழ்வை வாழ்ந்திருக்கும் மனோகருக்கு ஒரு சின்ன ஆசை உண்டு. ஹாலிவுட் நடிகரும், உலகப் புகழ்பெற்ற ஆணழகருமான அர்னால்ட் ஸ்வாஸ்நெகரின் தீவிரமான ரசிகர் இவர். அர்னால்ட் நடித்த அத்தனை படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறார். அர்னால்ட்டும் மனோகரைப் போலவே ‘பாடிபில்டிங்’ பிரிவில் சாதனை மன்னன்.

“ஒரே ஒருமுறை அவரை நேரில் சந்திக்கவேண்டும். கண்ணை மூடுவதற்குள் இது நடக்கவேண்டும்”
சொல்லும்போது மனோகரின் கண்கள் சிறுகுழந்தையின் கண்களாய் மினுமினுக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

1 அக்டோபர், 2012

புல்லட் பாபா


இருபது வருடங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு. ராஜஸ்தானின் பாலி என்கிற ஊரில் இருந்து தன் ஊரான சோடில்லாவுக்கு விரைந்துக் கொண்டிருந்தார் ஓம் பாணா. புல்லட் பயணம். சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்தவர் ஓரிடத்தில் நிலைதடுமாறி, எதிரில் இருந்த மரத்தில் மோதினார். கொஞ்சம் மோசமான விபத்து. சம்பவ இடத்திலேயே பாணாவின் உயிர் பறிபோனது.

மறுநாள் அவரது உடலை கைப்பற்றிய போலிஸார், விபத்தில் சேதம் ஏதுமின்றி தள்ளி விழுந்துக்கிடந்த புல்லட்டை காவல்நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர். அன்று இரவு அந்த வண்டி காணவில்லை. மறுநாள் விபத்து நடந்த இடத்திலேயே மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போலிஸார் குழம்பிப் போனார்கள். மீண்டும் புல்லட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். இம்முறை வண்டியிலிருந்த பெட்ரோலை முழுமையாக எடுத்துவிட்டே நிறுத்தினார்கள். பாதுகாப்புக்கு ஒரு சங்கிலியாலும் கட்டிவைத்தார்கள்.

அதிசயம் ஆனால் உண்மை. அன்றைய இரவும் ‘பைக்’கை காணோம். மறுநாள் காலையும் அதே மரத்தடியில் கம்பீரமாக நின்றிருந்தது அந்த புல்லட் 350. பயந்துப்போன போலிஸார் வேறு வழியின்றி பைக்கை, இறந்துபோன பாணாவின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்த குடும்பத்தாருக்கும் கொஞ்சம் அச்சம்தான். ராவோடு ராவாக குஜராத்தில் இருந்த ஒருவருக்கு புல்லட்டை விற்றுவிட்டார்கள்.

மீண்டும் அதிசயம். ஆனால் அதே உண்மை. இம்முறையும் பைக் விபத்து நடந்த அதே பழைய இடத்துக்கு வந்து, அதே மரத்தடியில் கம்பீரமாக வீற்றிருந்தது. முன்பாவது போலிஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே இருந்தது. இம்முறை புல்லட் பயணம் செய்து வந்திருப்பது சுமார் நானூறு கிலோ மீட்டர். இது ஏதோ பில்லி, சூனியவேலை என்று அச்சப்பட்டு பைக்கை வாங்கியவர், அதை அப்படியே கைவிட்டுவிட்டு போய்விட்டார்.

இம்முறை கிராமமக்கள் கொஞ்சம் தெளிவாகவே இருந்தார்கள். அந்த பைக்கை அங்கேயே விக்கிரகம் போல நிலைநிறுத்தி ‘புல்லட் பாபா’ கோயிலை உருவாக்கி விட்டார்கள்.
இந்த கதை எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தேசிய நெடுஞ்சாலை 65ல் பாலியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் ஜோத்பூருக்கு செல்லும் சாலையில் புல்லட் பாபா கோயிலை நாம் பார்க்கலாம்.

பிற்பாடு ஒருநாள் இரவு, அதே இடத்தில் விபத்தில் மாட்டிய ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய உயிரை ஒரு ராஜபுத்திரர் காப்பாற்றினார் என்று போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அந்த ராஜபுத்திரர்தான் பாணா என்று  ‘புல்லட் பாபா’வின் புகழ் பரவ ஆரம்பித்தது. இன்று அந்த வழியாக செல்லும் வண்டிகளின் ஓட்டுனர்கள் எல்லாம் ‘புல்லட் பாபா’வை வணங்கத் தவறுவதே இல்லை. புல்லட்டுக்கு மாலை சூட்டி, அங்கே இடம்பெற்றிருக்கும் பாணாவின் படத்தை வணங்குகிறார்கள். பாணாவுக்கு பூஜையும் நடக்கிறது. பீர், நாட்டு சாராயம், இதர மதுவகைகளை படையலாக படைக்கிறார்கள். ஏனெனில் விபத்து நடந்த இரவு பாணா லேசாக ‘சரக்கு’ சாப்பிட்டிருந்தார் என்பது கதை.
வாகன ஓட்டிகளுக்கு குங்குமப் பிரசாதத்தோடு ஒரு ஸ்பெஷல் புல்லட் பாபா சிகப்புக் கயிறு வழங்கப்படுகிறது. இந்த கயிறை தங்கள் கையிலோ அல்லது வாகனத்திலோ கட்டிக் கொண்டால் வழித்துணையாக புல்லட் பாபா வருவார். விபத்துகள் நேராமல் காப்பார் என்பது நம்பிக்கை.

சென்னையிலும் இதேபோல ஒரு கோயில் உண்டு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே இது அமைந்திருக்கிறது. பாடிகாட் முனீஸ்வரன் கோயில். பாடிகாட் என்றால் பாதுகாவலர் (bodyguard) என்று பொருள். சென்னை நகரில் புதியதாக வாகனங்கள் வாங்குபவர்கள் நேராக இந்த கோயிலுக்கு வந்துதான் பூஜை செய்கிறார்கள். சுருட்டு முனீஸ்வரருக்கு பிடித்த படையல். முன்புசரக்கும் படையலாக படைக்கப்பட்டதுண்டு. இப்போது சுருட்டே அதிகளவில் படைக்கப்படுகிறது. இங்கே பூஜை செய்யப்படும் வாகனங்கள் எந்தவித விபத்துமின்றி சாலைகளில் பயணிக்க வழித்துணையாக பாடிகாட் முனீஸ்வரர் வருகிறார் என்கிறார்கள் அவரது பக்தர்கள்.

காஷ்மீரில் தொடங்கி குமரி வரைக்கும் மக்கள் ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)