9 மே, 2012

நித்யானந்தா


தீவிரமாக யோசித்துப் பார்த்தால் நித்யானந்தா ஒன்றும் அவ்வளவு மோசமானவர் இல்லை என்று இப்போது தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் காவியும், ரஞ்சியுமாக மாட்டிக் கொண்டபோது நானும் கும்பலோடு கோவிந்தா போட்டது தவறோ என்று வருந்துகிறேன். இணைய-ஊடக வெளிகளில் தொடர்ச்சியாக இயங்குவதால் ஏற்படும் கோளாறு இது. அற-அதர்மங்களை யோக்கிய கண்ணாடி போட்டு பார்ப்பதால் ஏற்படும் விளைவு.

ஒரு நடிகையோடு உடலுறவு கொண்டார் என்பதற்காக அவர் கெட்டவர் என்று பிரச்சாரம் செய்யப்படுவது சட்டத்துக்கு எதிரானது. வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் ஒத்திசைவோடு பாலியல் உறவு கொள்வதை சட்டம் மட்டுமல்ல, இயற்கையும் அனுமதிக்கிறது. அதை ரகசிய கேமிரா கொண்டு படம் பிடித்ததும், ஊடகங்களில் ஏதோ அநீதிக்கு எதிரான பிரச்சாரம் மாதிரியாக காட்டப்படுவதும் intrusion of privacy ஆக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. இந்திய ஊடகங்கள் ஸ்கூப்புக்காக ‘எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராகி விட்டார்கள் என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சான்று. இப்போது மதுரை ஆதீனமாகி விட்டதால் அடுத்த ரவுண்டு ஆடிக் கொண்டிருக்கிறது ஊடகங்கள். நித்யானந்தாவின் பெயரோ, போட்டோவோ அட்டைப்படத்திலும், போஸ்டரிலும் இருந்தால் சர்க்குலேஷன் எகிறுகிறது. இவ்வகையில் இவர் ஒரு வசூல்ராஜா.

இல்லாத கடவுளை காட்டி ஆன்மீகக் கடை விரித்தபோது நித்யானந்தாவுக்கு எதிர்ப்புகள் வந்திருந்தால் நம் மக்களின் சூடு, சொரணையை மெச்சியிருக்கலாம். இப்போதும் கூட குறிப்பிட்ட சாதியை சாராதவர் எப்படி மதுரைக்கு ஆதீனமாகலாம் என்று பொங்குகிறார்களே தவிர்த்து, அடித்தட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆன்மீக மடங்கள் இருப்பதை குறித்த எந்த ஆட்சேபணையும் மக்களுக்கு இல்லை. காசு கொடுத்து ஆதீனமாகி விட்டார் என்று அடுத்த குற்றச்சாட்டு. மற்ற மடங்களுக்கெல்லாம் என்ன யானை மாலை போட்டா அடுத்த மடாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? இல்லையென்றால் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்களா? திரைமறைவில் ஏதேதோ நடந்து யாரையோ எதற்காகவோ சின்னவா ஆக்குகிறார்கள். நம் மட மக்கள், எந்த அற்புதமும் நிகழ்த்திக் காட்ட துப்பில்லாத அவரது காலில் விழுந்து வணங்குகிறார்கள். அடுத்த மடாதிபதி தேர்ந்தெடுக்கப் படுவதில் என்னென்ன அயோக்கியத் தனங்கள் நடக்கும் என்பதை வெட்டவெளிச்சமாக வெளிக்காட்டிய நித்யானந்தாவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள். என்னவோ இதற்கு முன்பாக இருந்த மதுரை ஆதீனம் பெரிய யோக்கியர் மாதிரியும், ஆதீனத்தின் பெருமையை நித்யானந்தாதான் குலைக்கப் போகிறார் என்பது மாதிரியும் பேசுவது எத்தகைய அறிவீனம்?

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகத்தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் சுலபமாக மாற்றிவிட முடியாத மக்களின் கடவுள்-ஆன்மீகம்-சாமியார்கள் குறித்த மூட மனப்போக்கினில் மிகக்குறுகிய காலத்தில் பெரும் எதிர்மாற்றம் ஏற்படுத்தியவர் என்கிற வகையில் நித்யானந்தாவை பாராட்ட பெரியாரிஸ்டுகள் முன்வரவேண்டும். ஊருக்கு ஒரு நித்யானந்தா உருவாவதின் மூலமாகவே பெரும்பான்மை மக்கள் நாத்திகம் நோக்கி இயல்பாகவே நகரத் தொடங்குவார்கள். கடவுளுக்கும், சாமியாருக்கும் வீணாக்கும் தங்கள் கடின உழைப்பினையும், சிந்தனையையும் உருப்படியான விஷயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். சுலபமாக தகர்த்தெறிந்துவிட முடியாத இந்துத்துவ சனாதன கோபுரத்தை இடியாகப் பாய்ந்து கட்டுடைப்பவர் என்கிற வகையில் நித்யானந்தாவை நாம் பாசிட்டிவ்வாகவும் பார்க்கலாமே... ஒய் நாட்?

8 மே, 2012

வழக்கு எண் 18/9


எக்ஸலெண்ட்... படம் பற்றி இதைவிட வேறென்ன சொல்வது? பாராட்டுவது என்றால் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும், ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

குறைகளின்றி எந்த படைப்பையும் முழுமையாக உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கும் வாய்ப்பு இருந்தால், கடவுள் இருப்பதும் உண்மையாகிவிடும். வழக்கு எண்ணும் விதிவிலக்கல்ல. ஆசையாக பெற்றெடுத்த அழகான குழந்தைக்கே ‘திருஷ்டிப் பொட்டு’ வைத்துத்தானே அழகு பார்க்கிறோம். தனக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று நம்பியோ என்னவோ, நான்கைந்து படமாக எடுக்கவேண்டிய மொத்த சரக்குகளையும் அவசரமாக வழக்கு எண்ணில் வாரி இறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

டீனேஜ்களில் இருக்கும் விளிம்புநிலை சமூக இளைஞன் – இளம்பெண். அதற்கு நேரெதிர் நிலையில் இருக்கும் அதே வயதுகளில் பணக்கார பையன் – மேல்நடுத்தர வர்க்கத்து பள்ளி மாணவி. இயல்பாக இவர்களது சிலநாள் வாழ்வை படம்பிடித்துக் காட்டியிருப்பதின் மூலம் சமூகம் எவ்வளவு பெரிய இடைவெளிகளோடு நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரியவைக்கிறார் இயக்குனர்.

சாலையோர சாப்பாட்டுக் கடையில் வேலைபார்க்கும் வேலுவின் ரிஷிமூலத்தையெல்லாம் விலாவரியாக காட்டியிருப்பதில் ஆவண நெடி அதிகம். வேலு வடநாட்டு முறுக்குக் கம்பெனியில் வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் வழக்கு எண்ணின் கதைக்கு அனாவசியம். இதெல்லாம் படத்தின் நீளத்துக்கு மட்டுமே உதவும். அக்காட்சிகள் இல்லாமலேயே அப்பாத்திரத்தின் தன்மையை பார்வையாளன் பிடித்துக் கொள்வான்.

இரண்டாம் பாதி டீனேஜ் இன்பாச்சுவேஷன் காட்சிகள் பெரும்பாலும் மிகையாக நாடகத் தன்மையோடே நகர்கிறது. பணக்காரர்கள், போலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் கெட்டவர்களாகவேதான் இருந்துத் தொலைக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் கிட்டம் இருக்கிறதா? மாணவ சமூகத்தினரிடையே செல்போன் எத்தகைய கலாச்சார எதிர்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அக்கறையோடு அணுகியிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். அதே நேரம் செல்போனால் பாசிட்டிவ் விளைவுகளே இல்லை என்று இயக்குனர் நம் தலைமீது அடித்து சத்தியம் செய்கிறாரோ என்றும் அஞ்சத் தோன்றுகிறது.

அரசியல் – காவல்துறை – முதலாளிகள் இவர்களுக்கிடையே தொடர்புக்கண்ணியாக பணம் மட்டுமில்லை, சாதியும் இருக்கிறது என்பதை விளைவுகளை எண்ணாமல் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கும் பாலாஜி சக்திவேலின் துணிச்சலை கரகோஷம் எழுப்பி வரவேற்கலாம். இதே சாதியை தனது இரண்டாவது படமான ‘காதல்’-லிலும் வம்புக்கு இழுத்திருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. தென்மாவட்டங்களில் பாலாஜி சக்திவேலை குறிவைத்து போஸ்டர்கள் ஒட்டப்படலாம்.

பாடி மவுண்ட் ரிக் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளில் அதை பயன்படுத்தி இருப்பதாக தோன்றுகிறது. அக்காட்சிகள் ஏதோ ப்ளூ மேட் போட்டு எடுத்தமாதிரியாக ஒட்டாமல் பல்லிளிக்கிறது. பின்னணி இசை கொடுமை. இதைமாதிரி தீவிர கதையம்சமுள்ள படங்களை எடுத்துவிட்டு, நேராக இளையராஜாவிடம் போய்விடலாம். கண்ணீரை துடைத்துக்கொண்டே கலக்கலாக பின்னணி அமைத்துவிடுவார்.

தியேட்டரில் பார்த்தாலும் கூட என்னவோ வீட்டில் அமர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குனர்’ பார்ப்பதைப் போன்ற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. நான்கைந்து குறும்படங்களை மொத்தமாக பார்த்ததைப் போன்ற அனுபவத்தை தருகிறது. சிக்கனமான படமாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம். வழக்கமான சினிமா ஃபீலிங் சுத்தமாக இல்லை. க்ளைமேக்ஸ் எண்டிங் பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா என்கிற பட்டிமன்றம் இன்னும் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சர்வநிச்சயமாக ‘வழக்கு எண் 18/9’ தமிழ் சினிமாவுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர். உப்புமா இயக்குனர்கள் இதை படுமோசமாக பிரதியெடுத்து அடுத்தடுத்து வெளியிடப்போகும் மொக்கைப் படங்களை நினைத்தால் இப்போதே வயித்தை கலக்குகிறது.

3 மே, 2012

கிருஷ்ணா டாவின்ஸி


அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. தொண்ணூறுகளின் துவக்கம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். வெகுஜன இதழ்கள் மூலமாக வாசிப்புப் பழக்கம் ஏற்படத் தொடங்கியிருந்த பருவம். கடலை மடித்துத் தரும் தாளில் அச்சிட்டிருந்ததைக் கூட விட்டுவைக்காமல் படிக்கும் ஆர்வம்.

நாற்பதாண்டுக்கும் மேலாக குமுதத்தில் அரசாட்சி செலுத்திய எஸ்.ஏ.பி.யின் ஆசிரியர் குழுவினர் வயது காரணமாக ஒவ்வொருவராக ஓய்வு பெற ஆரம்பித்தார்கள். அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஆசிரியர் எஸ்.ஏ.பி., வாசகர்கள் உணர்ந்துக்கொள்ள இயலாத வகையில் இயல்பான முறையில் குமுதத்துக்கு புது ரத்தம் பாய்ச்சத் தொடங்கினார். எஸ்.ஏ.பி.க்கு அடுத்தடுத்து குமுதத்துக்கு ஆசிரியர்களானவர்கள் பெரும் பத்திரிகை ஜாம்பவான்களாக இருந்தபோதிலும், பத்திரிகையின் அடித்தளத்தை ஆக்கிரமித்தவர்கள் துடிப்பான இளைஞர்கள். அவர்களில் ஒருவர் இவர்.

சில பேரை பார்த்ததுமே பிடிக்கும். சிலர் பெயரை கேட்டதுமே பிடிக்கும்.
கிருஷ்ணா டாவின்ஸி என்கிற பெயரை முதன்முறை அச்சில் வாசித்தபோதே நிரம்பவும் பிடித்துப் போனது. குறும்பான இந்தியக் கடவுளின் பெயர் முன்பாதியிலும், இத்தாலிய மேதையின் பெயர் பிற்பாதியிலுமாக கவர்ச்சியான கலவையில் அமைந்த புது பெயர்.

குமுதத்தில் எழுதுவதற்கு முன்பாகவே ‘சாவி’யில் சக்கைப்போடு போட்டிருக்கிறார் கிருஷ்ணா. ஒரே இதழில் அவரது மூன்று சிறுகதைகள் அடுத்தடுத்து பிரசுரிக்கப்படும் அளவுக்கு சாவியை கவர்ந்திருக்கிறார். ஆசிரியர் சாவியே வியந்துப்போய் தொடர் எழுதும் வாய்ப்பையும் இவருக்கு தந்திருக்கிறார். அப்போது கிருஷ்ணாவுக்கு வயது இருபத்தியொன்றோ, இருபத்திரண்டோ இருக்கலாம். வெகுஜன இதழ்களில் எழுதுபவர்களுக்கு தெரியும். தொடர் எழுதும் வாய்ப்பெல்லாம் அவ்வளவு சீக்கிரமாக கிடைத்துவிடாது.

குமுதம் இதழில் கிருஷ்ணா டாவின்ஸியின் பணி பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருந்திருக்கிறது. அரசியல், சமூகம், கலை, நகைச்சுவை என்று எல்லா திசைகளிலும் பவுண்டரி விளாசக்கூடிய பத்திரிகையாளராக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தபடியே, பகுதிநேரமாக குமுதத்துக்கு எழுதிக் கொண்டிருந்தார். பிற்பாடு அரசு வேலையை துறந்து, முழுமூச்சாக குமுதத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

கார்கில் போரின் போது நேரடியாக களத்துக்குச் சென்று செய்தி எழுதியவர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற பத்திரிகையாளர் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியான சாதனை மைல் கற்கள் அவருக்கு உண்டு. ‘நையாண்டி பவன்’ என்கிற தலைப்பில் குமுதத்தில், கின்ஸி என்கிற பெயரில் கிருஷ்ணா எழுதிய நகைச்சுவைப் பத்தி, இன்றைய வெகுஜன இதழ்களின் போக்குக்கு முன்னோடியாக அமைந்தது. பத்திரிகையுலகில் பணியாற்றுவதை லட்சியமாகக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு சந்தேகமில்லாமல் கிருஷ்ணா டாவின்ஸி ஒரு ஹீரோ.

அவருடனான நேரிடை சந்திப்புகள் எனக்கு இரண்டு, மூன்று முறை தான் வாய்த்திருக்கிறது. முதன்முறை நேரில் சந்தித்த பிரமிப்பில் அவர் குறித்த என்னுடைய எண்ணங்களை பாராட்டு மழையாக கொட்டியபோது, அதுகுறித்த எந்த பெருமையும் அவர் முகத்தில் தென்படக் காணோம். “குமுதம் எனக்கு தாய்ப்பால்” என்று எங்கோ, எப்போதோ இணையத்தில் எழுதி, அதை நானே மறந்துவிட்டேன். அதை நினைவுகூர்ந்து, “நல்ல
wordplay. ஆனா, பத்திரிகையில் வேலை பார்க்கிறவன் இப்படியெல்லாம் extreme statement விடக்கூடாது” என்று சொல்லி சிரித்தார்.

கிருஷ்ணா தன்னுடைய கதைகளில் கூட ‘ரிப்போர்ட்டிங்’குக்கான இலக்கணங்களை கடைபிடித்திருப்பார். கிருஷ்ணா டாவின்ஸி குமுதத்தில் தொடராக எழுதிய ‘நான்காவது எஸ்டேட்’ பல வாசகர்கள் இன்றும் நினைவுகூர்வது. டெஹல்கா டாட் காம், சூட்கேஸும் கையுமாக பங்காரு லெட்சுமணனை கேமிராவில் சிறைபிடித்து வெளியுலகத்துக்கு ஸ்கூப் செய்தியாக அம்பலப்படுத்திய நேரம் அது. அந்த சம்பவத்தை கருவாக கொண்டு எழுதப்பட்ட நான்காவது எஸ்டேட்டின் முதல் அத்தியாயம், கலைஞரின் நடு இரவு கைதுக் கொடுமையை உருவகப்படுத்தித் தொடங்கும். அயல்நாட்டுச் செய்தியையே எழுதுவதாக இருந்தாலும், கட்டுரையின் தொடக்கத்தில்  ‘உள்ளூர் டச்’ இருந்தாக வேண்டும் என்பது இதழியலின் எழுதப்படாத வரையறை. கிருஷ்ணா டாவின்ஸியின் எந்த கட்டுரையும், கதையும் வாசகர்களுக்கு அந்நியமாக என்றுமே தோன்றியதில்லை.

குமுதத்தில் இருந்து விலகியபிறகு, சினிமாக்காரர்களோடு நிறைய கதை விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். இயக்குனராக முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார். சில படங்களின் ‘டைட்டிலில்’ அவரது பெயரை காணமுடிந்தது.

அருமையாக கிடார் வாசிப்பார். இரவுகளில் தன்னுடைய தனித்துவக் குரலால் பாடி குடும்பத்தாரையும், நண்பர்களையும் மகிழவைப்பார் போன்ற செய்திகளெல்லாம் அவரது திடீர் மரணத்துக்குப் பிறகுதான் எல்லோருக்கும் தெரியவருகிறது. இயக்குனர் ராம் ஏற்பாடு செய்திருந்த கிருஷ்ணாவுக்கான நினைவேந்தல் கூட்டத்தில் கூடியிருந்த பல பத்திரிகையாளர்களுக்கு துரதிருஷ்டவசமாக அன்றுதான் அவரது பத்திரிகை ஆற்றலைத் தாண்டிய தனித்திறமைகள் சில முதன்முதலாக தெரிய வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி கடைசியாக ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதையின் தலைப்பே, அவர் வாழ்க்கையை கடைசி நிமிடம் வரை எவ்வளவு நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார் என்பதை புரியவைக்கிறது. “காலா அருகே வாடா”. துரதிருஷ்டவசமாக இக்கதை பிரசுரமானபோது அவர் உயிரோடு இல்லை. . 1968 மே 7 அன்று பிறந்த கிருஷ்ணாடாவின்ஸி, கடந்த ஏப்ரல் 4 அன்று தன்னை இயற்கையோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும். மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் துவக்கம். மரணித்தவர் தன்னுடைய நினைவுகளை நம்மிடம் வாழவைத்திருக்கிறார் என்பது மாதிரியாக தத்துவங்கள் பேசி மரணித்தவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நாம் ஆறுதல் கூறலாம். ஆறு வயது குழந்தை அப்பாவை இழந்திருக்கிறாள். இச்சூழலில் ஆறுதல்களும், அஞ்சலிகளும் எவ்வளவு அபத்தமானவை என்பதே நமக்கே தெரிந்தபோதிலும், நாமும் அதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன் – மைக்கேல் ஜாக்சனின் பாடல் வரிகளில் ஒன்று. உண்மைதான். அவரது இசை என்றும் மரணமடையாது” - ஜாக்சனின் மறைவின் போது கிருஷ்ணா டாவின்ஸி ஒரு அஞ்சலிக் கட்டுரையில் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தார். க்ளிஷேவாக இருந்தாலும் இதைத்தான் கிருஷ்ணாவுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழ் வெகுஜன பத்திரிகையுலகுக்கான கிருஷ்ணாவின் பங்களிப்பு என்றென்றும் நம் நினைவில் நிற்கும்.

(நன்றி : உயிர்மை, மே 2012)

2 மே, 2012

உலகின் முதல் தொழில்

20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் சுவாரஸ்யமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி நூற்று இருபது ரன்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும்.

பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே தூக்க, பவுண்டரி லைனில் இருந்தவர் மிக கவனமாக எல்லைக்கோட்டை தொடாமல் அந்த கேட்சை பிடித்தார். இருப்பினும் ஐந்துவிக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் வைசாக் வென்றுவிடும் என்றே அனைவரும் கருதினார்கள். மாறாக அதே ஓவரில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் எல்.பி.டபிள்யூ, போல்டு, ரன் அவுட் என்று பொறுப்பில்லாமல் அவுட் ஆக பதினேழாவது ஓவரில் பதினைந்து ரன்கள் வித்தியாசத்தில் மதுரை கில்லி அணி வென்று தன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டது. சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய வைசாக் அணியினர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதிரணியினருக்கு கைகுலுக்கினார்கள்.

பத்திரிகையாளர்கள் வைசாக் அணியின் உரிமையாளரும், ஆசியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான அஜய் புல்லையாவை சூழ்ந்துகொண்டார்கள்.

“என்.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் அணி தான் கோப்பையை வெல்லும் என்று சொன்னீர்களே? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?”

“என் அணி கோப்பையை வெல்லப்போவது இல்லை என்று சொல்லப் போகிறேன்!”

“இருந்த அணிகளிலேயே மிக அதிக விலைக்கு அதாவது ஐநூறு கோடி ரூபாய்க்கு இந்த அணியை வாங்கியிருக்கிறீர்கள். இதர செலவுகளாக ஒரு இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்திருப்பீர்கள். பணம் வீணாகிவிட்டது என்று கவலை கொள்கிறீர்களா?”

“ம்... நான் ஒரு தொழிலதிபர். பண இழப்பு எனக்கு வருத்தத்தை தரவில்லையென்று பொய் சொல்லமாட்டேன். அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவையும், பயிற்சியாளரையும் நம்பி தோற்றுவிட்டேன். நான் தேர்ந்தெடுத்த அணியை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டிருந்தால் என் அணி வென்றிருக்கும்!”

“பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறீர்களே? மீதி இருக்கும் போட்டிகளில் இதனால் உங்கள் அணியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படாதா?”

இதற்குள்ளாக புல்லையாவின் அந்தரங்க பாதுகாவலர்களும், உதவியாளர்களும் அவரை காருக்கு அழைத்துச் சென்றுவிட பத்திரிகையாளர்களின் மற்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க இயலவில்லை. பத்திரிகையாளர்கள் கூட்டமாக வைசாக் அணியின் கேப்டன் நகுல் ஆர்யாவை சூழ்ந்தார்கள்.

“உங்களால் தான் வைசாக் அணி தோற்றதாக அணியின் உரிமையாளர் குற்றம் சாட்டுகிறாரே?”

நகுலின் முகம் சிவந்தது. உதடுகள் துடிதுடித்தது. இருப்பினும் ஒரு நொடியில் தன்னை சரிசெய்துகொண்டு புன்னகைத்தவாறே, “அவர் ஒரு நல்ல தொழிலதிபர். இதைத்தவிர சொல்ல வேறொன்றுமில்லை” என்றவாறே மைதானத்தை விட்டு வெளியேறினான்.


ஜய் புல்லையாவின் அந்தரங்க அலுவல் அறை அது. அவரது மகன் தேஜாவை தவிர வேறு யாருக்கும் அந்த அறைக்குள் செல்ல அனுமதியில்லை. தேஜா இருபது வயது இளமைப்புயல். பதினெட்டு வயதிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைவராக பொறுப்பேற்றவன். பிறந்ததிலிருந்தே குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே வாழ்ந்தவன் என்பதால் ரோஜாப்பூ நிறத்திலிருந்தான். தலை கலைந்திருந்ததை கைகளால் சரிசெய்தான். முகம் சற்று வாட்டமாக இருந்தது. கிரிக்கெட் ரசிகன் என்பதால் என்.பி.எல். போட்டிகளில் ஒரு அணியை தங்கள் குழுமம் வாங்குவது என்பது அவன் செய்திருந்த முடிவு.

“அப்பா! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜமானது. தோற்றவுடனேயே நம் அணித்தலைவரின் தலையை நீங்கள் உருட்டியது நாகரிகமானது அல்ல!” கொஞ்சம் சீற்றத்தோடே தந்தையிடம் சொன்னான்.

“வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள நாம் விளையாட்டு வீரர்கள் அல்ல. தொழிலதிபர்கள். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பல லட்சங்களை பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தது. விவரம் புரியாமல் வார்த்தைகளை விடமாட்டேன் தேஜா!”

“புரியவில்லை அப்பா. இந்தப் போட்டிகளில் வென்றிருந்தால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இருப்பினும் இப்போதே கூட ஸ்பான்ஸர்கள் மூலமாக நாம் ஈட்டிய வருவாயை கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு நஷ்டம் எதுவுமில்லை. அப்படியிருக்க ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை நம் அணி தோல்விகளுக்கு பொறுப்பேற்க செய்ததில் நமக்கென்ன லாபம்?” நகுலின் தீவிர விசிறியான தேஜா தன் அபிமான வீரனுக்கு தன் தந்தையாலே ஏற்பட்ட அவமானத்தால் வருத்தத்தில் இருந்தான்.

கனிவாக தன் மகனைப் பார்த்த புல்லையா, “உலகின் முதல் தொழில் எது தேஜா?”

“விபச்சாரம்!”

“இல்லை.. ஊழல்! சாத்தான் ஆதாம் மூலமாக செய்த ஆப்பிள் ஊழல் தான் உலகின் முதல் தொழில்!”

“சரி!”

“ஊழல் என்ற வார்த்தையை சமூகம் அருவருப்பாக நோக்கினாலும் கூட தொழில் செய்பவர்கள் ஊழல் செய்யாமல் எந்த தொழிலையும் செய்யமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களைவிட பன்மடங்கு தனியார் துறைகளில் ஊழல் செய்து சம்பாதிக்க முடியும். சம்பாதிப்பது தானே நமது தொழில்?”

“புரியவில்லை அப்பா. நம் அணித்தலைவர் அவமானப்படுத்தப் பட்டதற்கும் நீங்கள் கொடுக்கும் வியாக்கியானங்களுக்கும் என்ன தொடர்பு?”

“பொறு. அதற்குதான் வருகிறேன். நம் அணியை ஐநூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன். ஏறத்தாழ இருநூற்றி ஐம்பது கோடி செலவழித்து விளம்பரப்படுத்தியிருக்கிறேன். நம் அணி வென்றால் நமக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் வரும். அதே நேரத்தில் நம் அணி வெல்லும் என்று தொழில்முறை சூதாட்டக்காரர்கள் கட்டியிருக்கும் பந்தயத் தொகை எவ்வளவு தெரியுமா?”

“ஐயாயிரம் கோடி ரூபாய் இருக்கலாம். இருந்ததிலேயே சிறந்த அணி நம் அணி என்பதால் இவ்வளவு பெரிய தொகை பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக பத்துக்கு எட்டு பேர் நம் அணிதான் கோப்பையை வெல்லும் என்றார்கள்”

“நீ சொல்லுவது சரி. ஆனால் நம் அணி தோற்கும் என்று பண்ணிரெண்டாயிரம் கோடிக்கு பந்தயம் கட்டப்பட்டிருப்பது உனக்குத் தெரியுமா?”

“தெரியாது அப்பா”

“ஆம் மகனே. நம் அணி தோற்கும் என்று நம் ஆட்கள் மூலமாக நான் மட்டுமே பத்தாயிரம் கோடி ரூபாய் கட்டியிருக்கிறேன்! இப்போது சொல். நம் அணி தோற்றால் யாருக்கு லாபம்”

வியப்போடு, “லாபம் இருக்கட்டும் அப்பா. நம் அணி வென்றிருந்தால் நமக்கு தானே கவுரவம்?”

“கவுரவத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு. இங்கே சம்பாதிப்பவன் தான் வெற்றி பெற்றவன். நிறைய பணம் சம்பாதித்தவனை கவுரவமும், புகழும் தானே தேடி வரும்! நம் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறப் போகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஆயிரம் கோடி அளவில் நன்கொடை தந்தாக வேண்டும். நான் முப்பது ஆண்டுகளாக பாடுபட்டு சேர்த்தப் பணத்தை தரச்சொல்கிறாயா? ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை தான் ஊழல்வாதிகளுக்கு தரமுடியும்!”

“என்ன இருந்தாலும் நகுலின் பெயர் அசிங்கப்பட்டது எனக்கு நல்லதாகப் படவில்லை. அவர் நம்முடைய நல்ல நண்பர்!”

“கவலைப்படாதே நகுலின் பெயர் பாதிக்கப்படாது. கடைசி இரு போட்டிகளில் அவன் சதம் அடிப்பான், இழந்த பெயரை மீட்டுக் கொள்வான். அதற்கும் நான் ஏற்பாடு செய்துவிட்டேன்!”

“அதற்கும் கூடவா ஏற்பாடு?”

“ம்ம்.. நகுல் நம் அணியின் தலைமை பொறுப்பேற்க நாலு கோடி பேசியிருந்தோம் இல்லையா? நமக்கு பத்தாயிரம் கோடி அளவிலான லாபத்தை அவன் தந்திருப்பதால் அவனுக்கு பேசியிருந்த தொகையை விட நூறு மடங்கு அதிகம் தருவதாக உறுதியளித்திருக்கிறேன். உனக்கு சந்தோஷம் தானே?”

“சந்தோஷம் அப்பா!” நகுல் ஏன் தன் தந்தையை நல்ல தொழிலதிபர் என்று சொன்னான் என்று புரிந்ததால் அர்த்தத்தோடு சிரித்தான் தேஜா!

(நன்றி : குமுதம்)

25 ஏப்ரல், 2012

தண்ணீர்ப் பந்தல்


சென்னைக்கு வெகு அருகில் அமைந்திருந்தாலும், கிராமிய அடையாளங்கள் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட எங்கள் ஊருக்கு இருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு புன்னை மரமோ, வேப்பமரமோ கட்டாயம் இருக்கும். அவ்வப்போது வெயிலில் வியாபாரம் செய்யும் பிளாஸ்டிக் சாமான் கடைக்காரரோ, ஜோசியரோ ‘தில்’லாக யார் வீட்டு முன்பாகவும் இளைப்பாறலாம். “கொஞ்சம் தண்ணி கொடுங்க தாயீ!” என்று குரல் கொடுத்தால், பெரிய சொம்பில் ஜில்லென்று கிணற்று நீர் கட்டாயம் கிடைக்கும். அந்தக் காலத்து மடிப்பாக்க தண்ணீரை குடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பேச்சுக்கு சொல்வார்கள்.. ‘எங்க வீட்டு கிணத்துத் தண்ணி தேங்காய்த்தண்ணி மாதிரி இருக்கும்’ என்று.. நிஜமாகவே எங்க ஊர் தண்ணி தேங்காய்த் தண்ணிதான். அப்போதெல்லாம் நினைத்ததேயில்லை, தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்குவோமென்று.

‘கேட்டால் கிடைக்கும்’ என்பதால் மடிப்பாக்கத்திலோ, சுற்று வட்டாரத்திலோ நான் தண்ணீர்ப் பந்தலை பார்த்ததே இல்லை. அறுபத்து மூவர் விழாவுக்கு மயிலாப்பூர் வரும்போதுதான் இப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதே தெரியும். அப்போதெல்லாம் நகரில் சில இடங்களில் பக்காவாக கான்க்ரீட் கட்டமைப்பு கொண்ட தண்ணீர் பந்தலை ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். உபயம் : லயன்ஸ் கிளப் என்றோ அல்லது ஜெயின் சங்கம் என்றோ கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும். எவர்சில்வர் லோட்டா மிகக்கவனமாக அதைவிட நான்கு மடங்கு விலை கொண்ட சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல் திறக்கும் புரட்சிக்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர் நம் புரட்சித்தலைவி அம்மாதான். 96ல் தோற்றபிறகு எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் அதிமுக சோர்ந்துப்போயிருக்க, ஒரு கோடைக்காலத்தில் அம்மா அறிக்கை விட்டிருந்ததாக ஞாபகம். “தீயசக்தியின் ஆட்சியில் மக்கள் தாகத்தால் தவித்துப் போகிறார்கள். எனவே கழகத் தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் திறந்துவைத்து மக்களின் தாகத்தைப் போக்க வேண்டும்” என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததாக நினைவு.

அன்று ஆரம்பித்த அமர்க்களம்தான் இன்று ஆவேசமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் வந்துவிட்டாலே அதிமுகவினர் உற்சாகமடைந்து விடுகிறார்கள். ‘தண்ணீர்ப் பந்தல் திறக்கவரும் புரட்சித்தலைவியின் போர்ப்படைத் தளபதியான செங்கோட்டையன் அவர்களே, அம்மாவின் இதயக்கனி அக்கா வளர்மதி அவர்களே’ ரேஞ்சுக்கு மெகா போஸ்டர் ஒட்டி, கடைகளில் கலெக்‌ஷன் கல்லா கட்டி, தெருவெல்லாம் தோரணம், ஆயிரம்வாலா பட்டாசு என்று கோடைத்திருவிழாவை அரசியல் கலாச்சார கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். காலணா பந்தலை திறக்க எதற்கு அமைச்சர்கள் வருகிறார்கள் என்கிற தர்க்கம் பிடிபடவே மாட்டேன் என்கிறது.

இவர்களைப் பார்த்து ரசிகன் விஜய் நற்பணி மன்றம், கேப்டன் நரசிம்மா மன்றம், காதல் மன்னன் ‘தல’ மன்றம் என்று துக்கடா நற்பணி இயக்கங்களும், உதிரிக் கட்சிகளும் கூட பந்தல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சென்னைக்கு வருபவர்கள் தடுக்கி விழுந்தாலே ஏதோ ஒரு தண்ணீர்ப் பந்தலில்தான் விழுந்தாக வேண்டும். திமுககாரர்கள் இந்த விஷயத்தில் அசமஞ்சங்கள். கிருஷ்ணா நீர் வாங்கிக் கொடுத்துவிட்டோமென்று மிதப்பில் அலைகிறார்கள் போல.

எக்கனாமிக்கலாக பார்த்தால் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைக்க என்ன செலவாகும்? ஐந்துக்கு ஐந்து சைஸில் சவுக்கு கட்டி, தென்னை ஓலை வேய்ந்து ஒரு சிறிய குடில். தோராயமாக இரண்டாயிரம் செலவாகலாம். இரண்டு பெரிய சைஸ் பானை. கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் இருநூறு, இருநூற்றி ஐம்பது என்று எஸ்டிமேட் தருகிறார்கள். நான்கு பிளாஸ்டிக் லோட்டா நாற்பது ரூபாய். ஒட்டுமொத்தமாகவே அதிகபட்சம் இரண்டாயிரத்து ஐநூறில் பக்காவான தண்ணீர்ப்பந்தல் அமைத்துவிடலாம். துரதிருஷ்டவசமாக ஒரு பந்தலுக்கு நம்மாட்கள் குறைந்தபட்சம் ஐம்பதாயிரத்திலிருந்து, ஒரு லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பந்தலுக்கு ஆகும் செலவை விட இருபது, நாற்பது மடங்கு போஸ்டர், பட்டாசு, பேனர் மாதிரியான சமாச்சாரங்களுக்கு செலவழிக்கிறார்கள். இந்த ஆடம்பரம் இல்லாவிட்டால் ஒரு பந்தல் அமைப்பதற்கு பதிலாக நாற்பது, ஐம்பது பந்தல் போட்டு அசத்து அசத்துவென அசத்தலாம். ஆனால் பப்ளிசிட்டிதான் எதிர்ப்பார்த்த அளவுக்கு கிடைக்காது.

சரி, தீபாவளி மாதிரி கொண்டாடி பந்தல் அமைத்துவிட்டார்கள். மெயிண்டனென்ஸ் எப்படியிருக்கிறது?

முதல் நாள் திறப்பாளர் வந்து திறக்கும்போது தர்ப்பூசணி, கிர்ணிப்பழம், ரஸ்னா, கோக்கோ கோலா, மோர், லொட்டு லொசுக்குவென்று கோடையைத் தணிக்கும் குளிர் சமாச்சாரங்களாக மக்களுக்கு தந்து அசத்துகிறார்கள். இரண்டாவது, மூன்றாவது நாள் மட்டும் பானையில் தண்ணீர் இருக்கும். ஐந்தாவது நாள் அந்தப் பானையில் கால்வாசியளவு தண்ணீர் இருக்கும். குடித்தால் ஒரு மாதிரி சவுரு அடிக்கும். ஏழாவது நாள் பானை மட்டும் இருக்கும். பத்தாவது நாள் பந்தல் மட்டும் இருக்கும். பதினைந்தாவது நாள் அங்கே கட்டப்பட்ட பேனர்களும், ஒட்டப்பட்ட போஸ்டர்களும் மட்டுமே இருக்கும். திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில நாளிதழ்களில் மட்டும் ‘கவர்’ சிஸ்டத்தில் பிரசுரிக்கப்படும். பந்தலை ஏற்பாடு செய்து திறந்துவைத்த வட்டச் செயலாளரோ, கொட்டச் செயலாளரோ அடுத்த உள்ளாட்சியின் போது சீட்டு கேட்க ‘பக்கா’வாக இதையெல்லாம் ஆல்பம் போட்டு வைத்திருப்பார்.

தண்ணீர்ப் பந்தல் யாருக்காவது பயன்படுகிறதா?

பன்றிக்காய்ச்சல் பரவிவரும் நிலையில் யாரும், எதிலும் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. யாசகம் கேட்கும் தோழர்கள் கூட தண்ணீர்ப் பந்தல் எதையும் இப்போது பயன்படுத்துவதாக தெரியவில்லை. ஒண்ணரை ரூபாய் கொடுத்தால் ‘ஜில்’லென்று பொட்டிக்கடையில் பாக்கெட்டாகவே கிடைக்கிறது தண்ணீர். குடிவெறியர்கள் கூட மிக்ஸிங்குக்கு தண்ணீர்ப் பந்தல் தண்ணீரை யூஸ் செய்வதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நிஜமாகவே நாட்டு நடப்பு எல்லைமீறி கேணைத்தனமாக நடந்துக் கொண்டிருக்கிறது.