13 பிப்ரவரி, 2012

இதற்குப் பெயர் தான் காதலா?

நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலாத கவர்ச்சியான மாநிறம். அழகு சொட்டுகிறது என்று உடனடியாக சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான் அவள்.

பார்த்ததுமே
மனசில் பச்சக்கென்று ஃபெவிஸ்டிக் மாதிரி ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது. லொக்… லொக்… லொக்… தொடர்ச்சியாக ஐம்பது நொடி இருமல்.

கண்களில் நீர் கோர்த்தது. என்னவளை அடையாளம் கண்டுக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா? இல்லையென்றால், அவ்வழியாக கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான். என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு போல் மாறினேன்.

நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா, முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள், முதன்முதலாய் காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.

கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்தது என் இளமை. நந்தனத்தில் பார்த்த அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது. மின்னலே மாதவன் மாதிரி அந்த ஒரு நொடி தரிசனத்தில் முற்றிலுமாய் மாறிவிட்டேன்.

அவள் தான் என் காதலி என்று இப்போது தீர்மானமாக முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை போய் தேடுவது?

பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், பிள்ளையார் கோயில்களுக்கு ஏன் இளம்பெண்கள் அதிகம் வருகிறார்கள்?

ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால், சிட்டி சென்டர் ப்ளாஸா பக்கமாக செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மைனா மாட்டுவாளா என்று கண்களால் சலிக்கிறேன்.

அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் ஏற்பட்டிருக்கலாம். அவளைக் காணவே முடியாத பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. நிச்சயமாக பெண் ஒரு போதை. கண்ணதாசன் சரியாகதான் சொல்லியிருக்கிறார். 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் நிறைய வருகிறது.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன். இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. ச்சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?

எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு. வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி.. அய்யோ கடவுளே! எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?

உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு கேன்சர் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?

11 பிப்ரவரி, 2012

பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?

கடந்த வாரம் முழுக்க கர்நாடக அமைச்சர்கள் பிட்டுப்படம் பார்த்தது ஒரு தேசத்துரோக குற்றம் என்பதைப் போல மக்களிடம் விவாதம் நடந்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஏசு சொன்னதைதான் இரண்டாயிரம் வருஷம் கழித்தும் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. “உங்களில் எவன் யோக்கியனோ, அவன் முதல் கல்லை எறியலாம்”.

பொதுவாக இதுமாதிரி ‘மேட்டர்’களில் கேரள அமைச்சர்கள்தான் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று யூகித்திருந்தேன். என் யூகத்துக்கு மாறாக கர்நாடக அமைச்சர்களும் – அதிலும் கலாச்சாரக்காவல் இயக்கமான பாஜகவின் அமைச்சர்கள் - முன்னோடிகளாக இருக்கிறார்கள் என்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி.

பிட்டுப்படம் பார்ப்பது ஒரு கலாச்சாரச் சீரழிவு என்பதாக வெறும் வாய் வார்த்தையில்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் ஒவ்வொருவருக்கும் ‘செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ இருந்தாலும் கூட ‘பிட்டு’ பார்ப்பதில் இருக்கும் குறுகுறுப்பு எழுபது, எண்பது வயசானாலும் அடங்குவதில்லை. பெண்களுக்கு ‘பிட்’டில் ஆர்வமில்லை என்றுதான் ஒரு காலத்தில் அப்பாவியாக நினைத்திருந்தேன். அதுவும் வெத்து யூகம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பாக அனுபவப்பூர்வமாக உணரமுடிந்தது.

பிட்டு பார்ப்பதில் போய் என்னத்தை குற்றவுணர்ச்சி என்பது புரியவில்லை. சுய இன்பம் மாதிரி இதுவும் இயல்பான ஒரு சமாச்சாரம்தான். வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. பிட்டு என்றில்லை. பரபரப்பான எந்த விஷயமாக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் நமக்கு சலிப்பதேயில்லை. செக்ஸ் சர்வநிச்சயமாக பரபரப்பான விஷயம். எனவே பிட்டு பார்த்தவர்கள் அதற்காக தாம் தரமிறங்கி நடந்துகொண்டோமே என்று சுயகழிவிரக்கம் கொள்வதோ, பிட்டு பார்த்தவர்களை நோக்கி ‘அயோக்கியர்கள்’ என்று பழிப்பதோ அநியாயம்.

‘பிட்டு’ எடுப்பதுதான் குற்றம், பார்ப்பது ஒன்றும் பெரிய பாவமல்ல என்பது என் வாதம். பிட்டுக் கலாச்சாரத்துக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் பெண்கள். குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்கப் பெண்கள். பணத்துக்காக விருப்ப அடிப்படையில் பெர்ஃபாமன்ஸ் காட்டுபவர்கள் போய், கட்டாயத்துக்காக இதில் ஈடுபடுத்தப்படுபவர்கள், கேண்டிட் முறையில் மறைவாக கேமிரா வைத்து எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படும் பிட்டுகள் என்று இத்துறை நாம் எவ்வளவு பெரிய அயோக்கியர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத படுமோசமான அயோக்கியத்தனமான முறையில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ‘பிட்டு’ விவகாரத்தை எதிர்ப்பதாக இருந்தால், இந்த அரசியல் அடிப்படையில்தான் எதிர்க்க வேண்டும்.

பிட்டு மாதிரி எந்த சமகாலப் பிரச்சினையாக இருந்தாலும் உலகமயமாக்கலின் விளைவு மற்றும் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதைதான் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுப் படுத்தியிருக்கிறது. அதன் பலனாக விளையும் சாதகங்களோடு, பாதகங்களையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இன்றைய தேதியில் இணையத்துக்கு இருக்கும் அகோரப்பசிக்கு, இந்த ‘பிட்டுகள்’ பெரும் தீனியைப் போட்டு வருகின்றன.

இந்தியக் கலாச்சாரத்தில் முதன்முதலாக கோயில்களில் சிற்பவடிவில் ‘பிட்டுகள்’ காட்டப்பட்டன என்பது வரலாற்றில் அழுத்தமாக பதிவான ஒன்று. பிற்பாடு தொழில்நுட்பம் முன்னேற முன்னேற புகைப்படங்களில், சினிமாக்களில், வீடியோக்களில், விசிடிக்களில், இணையத்தில் என்று வளர்ந்து இன்று மொபைல் போன்களில் வந்து நிற்கிறது. இது ‘பிட்டு’களை விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி தவிர்க்க இயலாத சூழல். இக்கலாச்சாரம் ஜூராசிக்தனமாக வளர்ந்து எதிர்காலத்தில் நடுத்தெருவில் யாராவது இருவர் (ஆண் + ஆணாக இருந்தாலும் கூட) லைவ்ஷோ காட்டி, அதை சுற்றிலும் ஒரு ஐம்பது, நூறு பேர் வேடிக்கைப் பார்ப்பதாக இருந்தாலும் நாம் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அடையத்தேவையில்லை. ஏதேனும் ஒரு சேனல் இதை நேரடி ஒளிபரப்பாகவும் ஸ்பான்ஸர்கள் உதவியோடு ஒளிபரப்பக்கூடும்.

அபத்தமான, ஆபாசமான இந்தக் கட்டுரை மீண்டும் கர்நாடக அமைச்சர்களுக்கே வருகிறது. ஏதோ இரண்டு அமைச்சர்கள் ஆர்வத்தில் ‘பிட்டு’ பார்த்துவிட்டார்கள். ஒரு அமைச்சர் தன் மொபைலையே முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாய் கொடுத்து உதவியிருக்கிறார். இதையெல்லாம் குற்றமென்று சொல்லமுடியுமாவென தெரியவில்லை. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் இம்மாதிரி செல்போனில் பிட்டு பார்ப்பார்கள் என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கருக்கு தெரியாது. எனவே இதுகுறித்த சட்டப்பிரிவு எதையும் அவர் வரையறுத்திருக்க வாய்ப்பில்லை. நம்மிடம் இருக்கும் அரைநூற்றாண்டுக்கும் மேலான கிழடு தட்டிப்போய்விட்ட சட்டத்தை வைத்து அவர்கள் மீது கிரிமினல் குற்றமாக வழக்கு தொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பப்ளிக் நியூசன்ஸ் மாதிரி ஏதாவது கேஸுதான் போடமுடியும். அவ்வாறு இதற்கு முன்பாக ‘பிட்டு’ பார்த்தவர்கள் யார்மீதாவது என்ன பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் யாராவதுதான் சொல்லியாக வேண்டும்.

இந்த விஷயத்தில் அமைச்சர்கள் செய்த குற்றத்தைவிட, அதை ‘ஜூம்’ செய்து உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கேமிராமேன் செய்த குற்றத்தின் அளவுதான் பெரியது என்று கருதுகிறேன். இரண்டு பேர் பார்த்ததை இப்போது உலகமே பார்க்க ஆசைப்படுகிறது. பர்மாபஜாரில் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ‘மினிஸ்டர் பார்த்த பிட்டு கொடுப்பா’ என்று கேட்டு, டிவிடி வியாபாரிகளை ‘டார்ச்சர்’ செய்துக் கொண்டிருக்கிறார்களாம். அவசரத்துக்கு கையில் கிடைக்கும் ஏதோ மொக்கைப் பிட்டை கொடுத்து ‘இதைத்தான் மினிஸ்டர்கள் பார்த்தார்கள்’ என்று அவர்களும் வாடிக்கையாளர்களை ‘திருப்தி’ செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ‘பிட்டுவெறி’ சமூகம்தான் அப்பாவி அமைச்சர்களை ‘ராஜினாமா’ லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

10 பிப்ரவரி, 2012

அற்புதம், ஆனால் உண்மை!

வடஇந்தியாவில் ஜமால்புரி என்றொரு நகரம். அதற்கு பக்கத்தில் பக்காரா என்றொரு கிராமத்தில் ஷங்கிமங்கீஸ்வரர் என்றொரு ஆலயம். ஒரு சமயம் இந்த ஆலயத்துக்கு திடீரென ஒரு நல்ல பாம்பு வந்தது. இதைப் பார்த்த பூசாரி பயந்து ஓட முயற்சித்தார். உடனே பாம்பு மனிதக் குரலில் பேசியது.

“நான் சில நாட்கள் பூமியில் அவதாரம் எடுப்பேன். தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன். இங்கே நடந்த அதிசயத்தை யார் கதையாக எழுதி அவர்களது வலைப்பூவில் பதிவிடுகிறார்களோ, அவர்களுக்கு 24 நாட்களில் நினைத்ததை எல்லாம் தீர்த்து வைப்பேன். இந்த கதையை படித்துவிட்டு இன்று, நாளை என்று நாட்களை கடத்துபவர்களை தெருநாயை விட்டு கடிக்கச் செய்வேன்”

இவ்வாறாக கூறிவிட்டு நல்ல பாம்பு மறைந்துவிட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட முகர்ஜி என்பவர் தன்னுடைய பெங்காலி பிளாக்கில் இந்தக் கதையை எழுதினார். இருபத்து ஐந்தாவது நாள் அவருக்கு திருமணம் ஆனது. அமெரிக்காவில் ஜார்ஜ் பராக் என்பவர் கூகிள் டிரான்ஸ்லேட்டரில் முகர்ஜியின் கதையை மொழிமாற்றி வாசித்து, தனது வலையில் ஒரு கதையாக போட்டார். இருபத்தி ஆறாவது நாள், நீண்டநாட்களாக தொல்லை கொடுத்து வந்த அவரது மனைவியிடமிருந்து அவருக்கு விவாகரத்து கிடைத்தது.

உகாண்டாவைச் சேர்ந்த அடிஜமீன் என்பவர் இந்தக் கதையை கேள்விப்பட்டு கேலியும், கிண்டலும் செய்தார். அவர் ஜெர்மனிக்குக்கு போயிருந்தபோது, பெர்லின் தெருவிலிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் நான்கு அவரைப் பாய்ந்து பிடித்து, கடித்துக் குதறிப் போட்டது. தொப்புளைச் சுற்றி ஊசியே போடமுடியாத அளவுக்கு தொப்புள் எது, மார்பு எதுவென்று அடையாளம் தெரியாத அளவுக்கு நாய்க்கடி படு கோரமாக அமைந்துவிட்டது.

விஷயத்தை கேள்விப்பட்டு, நான் இந்தக் கதையை எழுதி டிராஃப்டில் போட்டு மிகச்சரியாக நேற்றோடு, இருபத்தி நான்கு நாட்கள் முடிந்துவிட்டது. இன்று அதுவாகவே பப்ளிஷ் ஆகிவிட்டது. இருபத்தி ஐந்தாவது நாளான இன்று, நீங்கள் இதைப் படித்துவிட்டு என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கதையை வாசித்துவிட்ட பாவத்துக்காக இதை கட் & பேஸ்ட் செய்து உங்கள் வலைப்பதிவில் இடாமல் அலட்சியப்படுத்தும் பட்சத்தில், அடிஜமீனுக்கு நேர்ந்த கோராமை உங்களுக்கும் நேரலாம். ஜட்டி போட கூட இடமில்லாத அளவுக்கு நாய்க்கடி மோசமாக அமையலாம் என்றும் எச்சரிக்கிறேன்.

7 பிப்ரவரி, 2012

கதிரேசன் செட்டியாரின் காதல்

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அழகான வடிவமைப்பு கொண்டவை என்கிற ஒரே காரணத்துக்காகவே சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று மா.கிருஷ்ணன் எழுதிய ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’. அவரே வரைந்த முகப்பு ஓவியத்தோடு, கவர்ச்சிகரமான தலைப்போடு.. அதேநேரம் மனதை மயக்கக்கூடிய vintage feelingஐ உருவாக்கியது இந்த நூலின் அட்டைப்படம். அட்டையிலேயே subcaption ஆக ‘ஒரு துப்பறியும் நவீனம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பழையநூல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் என்கிற எண்ணத்தோடு, வேறெதுவும் பெரிய எதிர்ப்பார்ப்புகள் இன்றியே புரட்டினேன்.

இந்நூலின் அட்டையை வடிவமைத்த சந்தோஷ் தற்போது உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிரபல பதிப்பகங்களின் பெரும்பாலான நூல்களின் மேலட்டையை அலங்கரித்து வருகிறார். ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ நூலில் உள்ளே இடம்பெற்ற படங்களை மிக சுமாரான தரத்தோடு இவர்தான் வரைந்திருக்கிறார். என்னை மாதிரியே சந்தோஷும் இது நாற்பதுகளிலோ, ஐம்பதுகளிலோ நடைபெறும் கதையென்று நினைத்து வரைந்திருப்பார் போல. போலிஸ்காரர்கள் டவுசர் அணிந்திருக்கிறார்கள்.

மாறாக இது 1989ல் நடக்கும் கதையென்று நாவலின் பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1995ல் இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது நூலாசிரியரின் வயது 83. அடுத்த ஆண்டே காலமாகிறார். அதே ஆண்டுதான் இந்நூலும் முதல் பதிப்பு பெறுகிறது. உலகளவில் பிரபலமான சூழலியலாளரான மா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் முதல் நாவல் இது. 1970லேயே பத்மஸ்ரீ விருது வாங்கியவர் இவர். எனக்கென்னவோ நாவலை விட இந்த பின்னுரை ஏகத்துக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

கதிரேசன் செட்டியாரின் வீட்டு வேலைக்காரன் ஒருவன் கத்தியால் குத்திக் கொல்லப்படுகிறான் என்று முதல் அத்தியாயம் தொடங்குகிறது. நேரடியாக கதைக்குள் இறங்கிவிடும் ஆசிரியர், அடுத்தடுத்து ஏராளமான பாத்திரங்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி நிதானமாக டெஸ்ட் மேட்ச் ஆடியிருக்கிறார். விறுவிறுப்பான நடையிலேயே துப்பறியும் நாவல்களை வாசித்து பழகிய நமக்கு இது ஒரு புதுவித அனுபவம்தான்.

ஒரு கொலை மட்டுமே முழுநீள நாவலுக்கு போதுமான சரக்கில்லை என்பதை நாவல் எழுத முயற்சிப்பவர்கள், எழுதியவர்கள் அறிந்திருப்பார்கள். மா.கிருஷ்ணனும் எழுதத் தொடங்கும்போது உணர்ந்திருப்பார். எனவே ஊரில் நடைபெற்ற ஒரு கோயில் கொள்ளையையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். விவேக், நரேன், கணேஷ்-வசந்த் என்று ஆக்‌ஷன் ஹீரோக்களையே பெரியளவில் வாசித்த நமக்கு இந்நூலில் ஆற, அமர விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரிகள் ‘திக்கை’யாக தெரிவதில் ஆச்சரியமேதுமில்லை.

நூலின் மிகப்பெரிய பலம் மா.கிருஷ்ணனின் மொழி. இவ்வளவு வசீகரமான மொழியை சமீபத்தில் நான் வாசித்ததேயில்லை. விசாரணை அதிகாரியான முகைதீன் என்கிற பாய் கூட ‘அவா ஊதுனா, இவா வருவா’ ஸ்டைலில் பிராமண பாஷைதான் பேசுகிறார். இந்த மாதிரி ‘லாஜிக்’கெல்லாம் பெரிய பொருட்டல்ல என்று நினைக்கக்கூடிய வாசிப்பின்பப் பிரியர்களுக்கு இந்நூல் சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் சைட் டிஷ்ஷாக கொண்ட மட்டன் பிரியாணி விருந்து.

ஏகத்துக்கும் கேரக்டர்களை அறிமுகப்படுத்திவிட்டு ஆசிரியர் திணறுவதாக சில இடங்களில் தோன்றுகிறது. முடிச்சு மேல் முடிச்சு போட்டுவிட்டு அவிழ்ப்பது என்பதுதான் க்ரைம் தில்லர்களின் அடிப்படையே. மாறாக எங்கே முடிச்சுப் போட்டோம், அதை எங்கே அவிழ்க்கப் போகிறோம் என்கிற திட்டமிடல் க்ரைம் நாவல்களை எழுதுபவர்களுக்கு அவசியம். மசலா கதைகளுக்கு லாஜிக் பார்ப்பது பாவம்தானென்றாலும், 89ல் மதுரைக்கு அருகிலிருக்கும் ஒரு சிறுநகர காவல்நிலையத்தில் போன் கூட இருக்காதா என்றெல்லாம் எடக்குமடக்காக யோசிக்கத் தோன்றுகிறது. இந்நாவலை மட்டும் லாஜிக் லபக்குதாஸூகளான விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வாசித்தால், கிழித்து தோரணம் மாட்டி, வூடு கட்டி குத்தாட்டம் போடுவார்.

இருபத்தாறு அத்தியாயங்கள் வரை சாவகாசமாக வெத்தலைப்போட்டு அன்னநடை நடந்துக் கொண்டிருந்த நாவலாசிரியர் திடீரென முடிக்கும் பொருட்டு சஸ்பென்ஸை மொக்கையாக கட்டுடைக்கிறார். அதன் பிறகு திடீரென கதைக்கும், கதையின் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்று யோசித்திருப்பார். நாவலின் கடைசி மூன்று பாராகிராப்புகளில் அட்டகாசமாக சம்பந்தப்படுத்தி முடிக்கிறார். இந்த ‘யூ’ டர்ன்தான் இந்நாவலை ஒரு கலைப்படைப்பாக மனதுக்குள் நிறுத்துகிறது. இதுவரை வாசித்த கதையின் பரிமாணத்தை அப்படியே ஒட்டுமொத்தமாக வேறு பரிமாணத்துக்கு அள்ளிச் செல்லுகிறது. இந்த புதிய பரிமாணத்தில் மீண்டும் ஒருமுறை உடனே வாசிக்க வைக்கத் தூண்டுகிறது.


நூல் : கதிரேசன் செட்டியாரின் காதல்

ஆசிரியர் : மா.கிருஷ்ணன்

பக்கங்கள் : 244

விலை : ரூ.125/-

வெளியீடு : மதுரை பிரஸ்
60-பி, கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
மின்னஞ்சல் : maduraipress@gmail.com

4 பிப்ரவரி, 2012

தமிழ்ப் பதிப்புத்துறைக்கு நெருக்கடியான காலம்!

வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம் என்ற அறிஞர் அண்ணாவின் வழியில் வந்த கட்சிகள்தான் மாறி, மாறி மாநிலத்தை ஆளுகின்றன. ஆனால் அரசு நூலகங்களுக்கு கூட கடந்த சில ஆண்டுகளாக நூல்களே வாங்குவதில்லை.

தமிழக அரசின் பொதுநூலகத்துறையின் கீழ் 4028 நூலகங்கள் இயங்குகின்றன. இந்த நூலகங்களுக்கு எந்த நூல்களை தேர்வு செய்வது என்று ஒரு குழு அமைக்கப்பட்டு வருடா வருடம் நூல்கள் தேர்வு செய்யப்படும். ஆரம்பத்தில் 600 நூல்கள் என்றிருந்த எண்ணிக்கையை 2007ல் இருந்து 1000 என்று உயர்த்தி முந்தைய அரசு ஆணையிட்டது. பதிப்பாளர்களும், வாசகர்களும் இந்த ஆணையால் அடைந்த மகிழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு கூட நீடிக்கவில்லை.

2009ல் இருந்து இன்றுவரை நூலகங்களுக்கு அரசு நூல் வாங்குவதில்லை. புதிய நூல்கள் இடம்பெறாததால், அவற்றை படிக்க விரும்பும் நூலகத்துக்கு வரக்கூடிய வாசகர்கள், வேறு வழியில்லாமல் சொந்தக் காசு போட்டு புதிய நூல்களை வாங்க வேண்டியிருக்கிறது. காசு கொடுத்து நூல்களை வாங்க வசதியில்லாதவர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு புதிய நூல்கள் சென்று சேருவது தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மாவட்டங்களில் சொத்துவரியோடு சேர்த்து பத்து சதவிகிதமாய் வசூலிக்கப்படுகிற வரி நூலகவரி. இந்தப் பணம் அந்தந்த மாவட்ட நூலக வளர்ச்சிக்காக மட்டுமே செலவழிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக நெ.து.சுந்தரவடிவேலு இருந்தபோது இந்த விதி அமலுக்கு வந்தது. இவ்வகையில் நூலகவளர்ச்சிக்கு கிடைக்கும் தொகையை ஒட்டுமொத்தமாக, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைக்க அரசு பயன்படுத்திக் கொண்டதாலேயே, புதிய நூல்களை வாங்கவும், மற்ற மாவட்ட நூலகங்களை பராமரிக்கவும் தற்போது நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

கருப்பன் சித்தார்த்தன் என்பவர் பொதுநூலகத்துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில நூல்களை குறிப்பிட்டு இவையெல்லாம் 2006-10 காலக்கட்டத்தில் எத்தனை பிரதிகள் பொதுநூலகத்துறைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது, விபரங்களை தரமுடியாது என்றும் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

நூலகங்களுக்கு நூல்களை வாங்குவதில்லை என்கிற பிரச்சினை புத்தகப் பதிப்பாளர்களைதான் அதிகம் பாதிக்கும். இருப்பினும் இவர்கள் சார்பான அமைப்புகள் அவ்வப்போது அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுப்பதோடு தமது கடமையை முடித்துக் கொள்கின்றன. பதிப்பாளர்களும் எதிர்கால நலன் கருதி, இதுகுறித்து வெளிப்படையாக வாய்திறக்க அச்சப்படுகிறார்கள்.

உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன், “தமிழ்ப் பதிப்புத்துறைக்கு கடும் நெருக்கடியான காலம் இது” என்று வருத்தப்படுகிறார்.

“தமிழில் புத்தகங்கள் வெளியிடும் பெரும்பாலான பதிப்பகங்கள் பொது நூலகத்துறையைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. புத்தக விற்பனைக்கான போதுமான சில்லறை விற்பனை மையங்கள் இல்லாத பதிப்பாளர்களுக்கு நூலக ஆணைதான் வாழ்வாதாரம். கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகங்கள் வாங்கப்படாததால், எப்போதும் இல்லாத வகையில் தற்போது புதிய நூல்களை வெளியிட முடியாத அளவுக்கு பதிப்புத்துறை முடங்கிப் போயிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு, இந்த அறிவுசார் துறையை காப்பாற்ற முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறார் மனுஷ்யபுத்திரன்.

தமிழக நூலகங்களில் நூல்கள் வாங்கப்படாதது மட்டும் பிரச்சினையில்லை. நூலகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான அடிப்படைப் பணிகள் கூட நடைபெறுவதில்லை என்பதுதான் சோகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்துறையில் காலியாக இருக்கும் சுமார் ஆயிரம் நூலகர் பணியிடங்கள் நிரப்பப்படவேயில்லை. இதே காலக்கட்டத்தில் சுமார் எட்டுநூறு பேர் ஓய்வும் பெற்றிருக்கிறார்கள்.

நூலக வரியாக உள்ளாட்சி அமைப்புகளிடம் வசூலிக்கப்படும் வரியை நூல்கள் வாங்கவும், நூலகங்களை மேம்படுத்தவும் செலவிட்டாலே போதுமானது. தமிழக அரசு இதற்கான நிதி எதையும் தனியாக ஒதுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பொது நூலகங்கள் அடிப்படை வசதியற்ற நிலையிலேயே இருக்கின்றன. தமிழக அரசு உடனடியாக புதிய நூலக தேர்வுக் குழுவை அமைத்து, கடந்த மூன்றாண்டுகளுக்கான நூல்களை வாங்குவதின் மூலம் பதிப்பாளர்களை நெருக்கடிச் சூழலிலிருந்து காப்பாற்ற முடியும். இது தமிழ் பதிப்பாளர்களின் தொழில் பிரச்சினை மட்டுமல்ல. எண்ணற்ற எழுத்தாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் கூட.

உடனே கவனிக்குமா அரசு?