8 ஜூன், 2011

வீட்டில் மாணவர். வகுப்பில் ஆசிரியர்!

பொருளாதாரப் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை. ஆனாலும் பொருளாதாரத்தில் ஆல் பாஸ். வகுப்பெடுக்க ஆசிரியரே இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் ரங்கசமுத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர்.

ரெங்கசமுத்திரம், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் இருக்கும் ஊர். இங்கே வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள். ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள். தங்கள் குழந்தைகளின் கல்வித்தேவைக்காக அரசுப்பள்ளிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள்.

இத்தகைய பின் தங்கிய சூழலில்தான் ரெங்கசமுத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வருடா வருடம் அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியரோடு சேர்த்து 25 ஆசிரியர்கள்தான் பணிபுரிகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கே மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர வேண்டுமென்றால் அறிவியல் பாடப்பிரிவு மட்டுமே எடுக்க முடியும். ஏனெனில் அப்பாடங்களை நடத்த மட்டும்தான் அரசு நியமித்த ஆசிரியர்கள் இருந்தார்கள். பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழகம், கலைப்பாடப்பிரிவும் (arts) தங்கள் மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்று விரும்பியது. 3rd க்ரூப் எனப்படும் கலைப்பாடப்பிரிவு, அரசு உதவியின்றி இப்படித்தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் இப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டது.

பாடம் எடுக்க ஆசிரியர்கள்?

உதாரணத்துக்கு ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணி. இவர் தானே முன்வந்து வணிகம் மற்றும் அக்கவுண்டன்சி பாடம் எடுக்க விரும்ப்பம் தெரிவித்தார். இவரைப் போலவே மற்ற ஆசிரியர்களும், வழக்கமான தங்கள் வேலையோடு, பணிக்கப்படாத வேலையையும் ஊதியமின்றி மாணவர்களுக்காக கூடுதலாக செய்ய முன்வந்தார்கள். வழக்கமான பள்ளி நேரம் முடிந்தும், மேல்நிலை மாணவர்களுக்காக கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடம் நடத்தினார்கள். சனி, ஞாயிறுகளில் மேல்நிலை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் சிறப்பு வகுப்பு நடத்த ஆரம்பித்தார்கள். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் விடுமுறையே இல்லை.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சில பாடங்களுக்கு மட்டும் தனியார் ஆசிரியர்களை ஊதியத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பொருளாதாரப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்தி வந்த தனியார் ஆசிரியருக்கு, வேறு வேலை கிடைத்துவிட்டதால் பாடமெடுக்க ஆளில்லை.

கையைப் பிசைந்து, கலங்கி நின்றார் தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன். சுமார் 70 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ?

ராமகிருஷ்ணனின் மனைவி சரஸ்வதியும் ஒரு ஆசிரியர்தான். அவர் அருகிலிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிகிறார். பொருளாதாரப் பாடம் எடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். கணவர் பணிபுரியும் பள்ளியின் நிலையறிந்து உதவ முன்வந்தார். தனக்கு விடுமுறையாக கிடைக்கும் சனி, ஞாயிறுகளை கணவரின் பள்ளிக்காக தியாகம் செய்தார். மற்ற நாட்களில் காலையில் இவரிடம் பாடம் படித்துவிட்டு சென்று, வகுப்பறையில் அதே பாடத்தை எடுப்பாராம் தலைமை ஆசிரியர்.

“மாணவனாக இருப்பதற்கு வயது ஒரு பொருட்டில்லை. என்னுடைய மாணவர்களுக்கு பொருளாதாரப் பாடம் எடுத்தேயாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டபோது, நானே வீட்டில் மாணவனாகவும், பள்ளியில் ஆசிரியனாகவும் அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது. மனைவியாக இருந்தாலும், ஆசிரிய கண்டிப்போடே பாடம் எடுத்தார் சரஸ்வதி.

எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களது நேரத்தை தியாகம் செய்து, மாணவர்களுக்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியராக என் பங்கினை நான் செய்ய வேண்டாமா?” என்கிறார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் – சரஸ்வதி ஆசிரியத் தம்பதியினரின் உழைப்புக்கு பலன் தேர்வு முடிவுகளில் கிடைத்தது. எல்லா மாணவர்களுமே வெற்றி. கூடுதல் போனஸாக ஒரு மாணவி 200க்கு 200 மதிப்பெண் எடுத்தும் சாதனை புரிந்தார். பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் 97. Pure science எனப்படும் பாடப்பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவிலும் 100 சதவிகித தேர்ச்சி.

“எங்கள் பள்ளிக்கு கிடைத்த அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் மாதிரி, வேறு எந்தப் பள்ளிக்கு கிடைத்தாலும் இதே போன்ற சாதனை உறுதி. மாணவர்களும் ஆசிரியர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்தார்கள்” என்று சிலிர்த்துக் கொண்டார் தலைமை ஆசிரியர்.

மாவட்ட கல்வி நிர்வாகமும், ரெங்கசமுத்திரம் பள்ளியின் கல்வி எழுச்சிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. அடிக்கடி பள்ளிக்கு அதிரடி விசிட் அடித்து, கல்வித்தரத்தை பரிசோதித்து வருகிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார். “நான் செல்லும் பள்ளிகளில் எல்லாம் ரெங்கசமுத்திரம் பள்ளியை உதாரணமாக காட்டி பேசுவேன். எல்லா அரசுப் பள்ளிகளுமே இதேமாதிரியான தரத்தினை எட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு” என்கிறார் செல்வகுமார்.

ராமகிருஷ்ணன் மாதிரி தலைமை ஆசிரியர் வாய்த்தால் எதுவுமே சாத்தியம்தான்!

(நன்றி : புதிய தலைமுறை)

வேம்புலி!

வேம்புலியை முதன்முதலாக பார்த்தபோது எனக்கு வயசு ஆறு அல்லது ஏழுதான் இருக்கும். வேம்புலிக்கு அப்போதே வயது நாற்பதுக்கும் மேல் இருக்கலாம். முன்மண்டையில் முடி சுத்தமாக இருக்காது. பின்மண்டை முடி பஞ்சு பஞ்சாக பறந்துகொண்டே இருக்கும். நைஜீரிய நிறம். நாகேஷ் உடல்வாகு. காக்கிச்சட்டை, காக்கிபேண்ட். பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் வேளச்சேரிக்கு அந்தப் பக்கமாக இருந்ததெல்லாம் பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகள் என்றுதான் சென்னைவாசிகளுக்கு தெரியும். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு பின்வந்த ஆளுநர் ஆட்சி சென்னைநகரை விரிவாக்கிக் கொண்டிருந்தது. மடிப்பாக்கத்தையும், வேளச்சேரியையும் இணைத்துக் கொண்டிருந்த ஒத்தையடிப் பாதையை வேளச்சேரி மெயின்ரோடாக புனரமைத்துக் கொண்டிருந்தது. லேசுபாசான வேலையல்ல அது.

முதற்கட்டமாக செம்மண் சாலை அமைத்து சைதாப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வழியாக மடிப்பாக்கத்துக்கு பஸ் விட்டது. ரூட் எண் 51E. வேம்புலிதான் முதல் அதிகாரப்பூர்வ ஓட்டுநர் என்பதாக எனக்கு நினைவு இருக்கிறது.

கோக்குமாக்காக ஓட்டுவார். ஒரு பஸ் சாலையில் வந்தால் எதிரில் இன்னொரு வாகனத்துக்கு வழியே இருக்காது. சைக்கிளில் வருபவராக இருந்தாலும் கூட சாலையை விட்டு இறங்கியாக வேண்டும். இருபுறமும் வேலிகாத்தான் முட்புதர்கள் நிறைந்திருக்க, ஆளேயில்லாத ஓட்டை உடைசலான பச்சைநிற பேருந்தை செம்மண் புழுதிப் பறக்க ஸ்டைலாக வாயில் பீடியை செருகியபடி வேம்புலி ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாக ஒடித்து ஓட்டும் அழகுக்கு பாரதரத்னா விருதையே வழங்கலாம்.

பல்லவன் போக்குவரத்துக் கழகம் நகருக்குள்ளான குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நிலையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டிருந்த காலம். ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் கிராமத்து நாட்டாமைகளும், தலையாரிகளும், தலைவர்களும், இன்னபிற அல்லக்கைகளும் கொடுத்த தொல்லை கொஞ்சநஞ்சமல்ல.

உதாரணத்துக்கு நம் வேம்புலிக்கு பூந்தமல்லிக்கு பக்கத்தில் எங்கோ குக்கிராமத்தில் கிடைத்த அனுபவத்தையே பார்ப்போமே? 51Eக்கு வருவதற்கு முன்பாக அந்த ரூட்டில்தான் தலைவர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாராம். ஏதோ ஒரு கிராமத்தை கடக்கும்போது, அங்கிருந்த பஞ்சாயத்துத் தலைவர் சொன்னாராம். “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு ட்ரைவரு. எம் பொண்டாட்டியை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவணும். புடவை கட்டிக்கிட்டு இருக்கா”

கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் புடவை கட்டுவதென்பது திருவிழாதானே? அதுவும் புருஷனோட மவுண்ட்ரோட்டில் படம் பார்க்கப் போகும் பெண் கும்பமேளா ரேஞ்சுக்கு ரசித்து ரசித்து கொசுவம் வைத்துக் கொண்டிருந்திருப்பார் போல. ஐந்து நிமிடம் காத்திருந்தும் பஞ்சாயத்துத் தலைவரின் மனைவி வந்து சேரவில்லை. இளைஞராக இருந்த வேம்புலிக்கு செம டென்ஷன். ஒரு கவர்மெண்டு ஸ்டாஃபையே ஒரு பொம்பளைக்காக வெயிட் பண்ண வைக்கிறானுங்களே என்ற அறச்சீற்றத்தில் வண்டியை ஸ்டார்ட் செய்து, ஆக்ஸிலேட்டரை ஆத்திரத்தோடு மிதித்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணரவில்லை.

‘நம்ம ஊரு தலைவருக்கு கவர்மெண்டு கொடுக்குற மரியாதை இவ்ளோதானா?’ என்று அந்த ஊரே கொதித்துப் போய் கலவரபூமியாகி இருக்கிறது. மறுநாள் திரும்ப அதே ரூட்டுக்கு வேம்புலி போகும்போது நூற்றுக்கணக்கானோர் பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் சாலையில் ‘சாமான்களோடு’ குழுமியிருக்கிறார்கள். வேம்புலியையும், கண்டக்டரையும் லேசாக இரத்தம் வருமளவுக்கு தட்டிவிட்டு, பேருந்தை அடித்து நொறுக்கி துவம்சப் படுத்தியிருக்கிறார்கள். ‘தலைவர் பொண்டாட்டி வர்ற வரைக்கும் வெயிட் பண்ணாத பஸ்ஸூ நமக்கு இருந்தா என்னா? இல்லாங்காட்டி என்னா?’

அதன்பிறகு பல வருட காலங்களுக்கு அந்த ரூட்டுக்கு பல்லவன் போக்குவரத்துக் கழகம் பேருந்தே விடமுடியவில்லையாம். பொதுமக்களுக்கும், கழகத்துக்கும் இடையே இருந்த நல்லுறவைக் கெடுத்த குற்றத்துக்காகதான் வேம்புலியை தண்ணியுள்ள காட்டில் பணி செய்ய மடிப்பாக்கத்துக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சவால்கொண்ட வரலாற்றுப் பின்னணியோடு கூடிய காலக்கட்டத்தில்தான் வேம்புலி பணிபுரிந்தார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மடிப்பாக்கம் மட்டும் அவரை நிம்மதியாக விட்டு வைத்திருக்குமா என்ன? இங்கேயும் ஏகப்பட்ட கூத்துகள். சைதாப்பேட்டையில் கால்நடை மருத்துவமனை ஒன்று உண்டு. ஆடு, கோழி மாதிரியான விலங்குகளுக்கு சீக்கு வந்துவிட்டால், அதன் உரிமையாளர் சைக்கிளில் கட்டிக் கொண்டு வருவார். மாடுகளுக்கு சீக்கு வந்தால்? அப்படியே பண்ணிரெண்டு கிலோ மீட்டர் ஓட்டிக் கொண்டு வரவேண்டியதுதான். ஊருக்குதான் பஸ் வந்துவிட்டதே? சீக்கு வந்த எருமை மாடுகளையும் பஸ்ஸில் ஏற்றியாக வேண்டும் என்று மடிப்பாக்கம் மக்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். முந்தைய அனுபவங்களால் நொந்துப் போயிருந்த வேம்புலி எருமைகளை ஏற்றிக்கொண்டு போக ரெடி. ஆனால் எருமைகள் பஸ்ஸில் ஏற தயாராக இல்லையே? அதுமட்டுமல்லாமல் ‘பஸ் வர்றது வசதியாதானிருக்கு. ஆனா படிக்கட்டு ரொம்ப உயரமா இருக்கு!’ என்று அதிருப்தி அடைந்தார்கள் பொதுமக்கள். அப்போது ஊரில் இருந்த பெண்களில் அதிகபட்ச உயரம் கொண்டவரே நாலேமுக்கா அடிதான்.

இதுமாதிரியான பிரச்சினைகளுக்கு நடுவேயும் வேம்புலி பணிவிஷயத்தில் சிறப்பாகவே செயல்பட்டார் என்று நம்புகிறேன். பேருந்து நிலையம் இருந்த இடத்துக்கு அருகேதான் பஞ்சாயத்து அலுவலகமும் இருக்கும். பயணிகளை ஏற்றிக்கொள்ள காத்திருக்கும் நேரத்தில் அடிக்கடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வேம்புலி செல்வார். அங்கிருந்த தலைவரோடு அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. தலைவரோட ஃப்ரெண்டு என்கிற அந்தஸ்து வேம்புலிக்கு தெனாவட்டையும் தந்தது.

பயல்கள் யாராவது ஃபுட்போர்டில் தொங்கி அழும்பு செய்தாலோ, பஸ்ஸுக்குள் கலாட்டா செய்தாலோ உடனடியாக வேம்புலி சொல்லும் டயலாக் “டாய் ரொம்ப ஆடினீங்கன்னா தலைவர்கிட்டே சொல்லிடுவேன்”. தலைவர் கொஞ்சம் மென்மையானவர்தான். அவருக்கு அடாவடி இமேஜ் எதுவுமில்லை என்றாலும் அவர்மீதிருந்த மரியாதையால் இந்த டயலாக்கை கேட்டதுமே அடங்கிவிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல், தலைவரே இல்லாமல் மடிப்பாக்கம் பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்திலும் வேம்புலி இதே டயலாக்கையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை அந்த ஊர் தலைவர் நிரந்தரத் தலைவர்.

அப்போதிருந்த பஸ்கள் எல்லாம் பெரும்பாலும் பாடாவதி பஸ்கள். நீண்டதூர ரூட்டுகளில் ஓடி உழைத்து ரிட்டையர்ட் ஆன பஸ்களை மடிப்பாக்கம் ரூட்டுக்கு அனுப்புவார்கள். வாரத்துக்கு ஒருமுறையாவது எங்காவது உட்கார்ந்து கொள்ளும். பயணிகள் டிரைவரைதான் சபிப்பார்கள்.

மடிப்பாக்கம் ரூட்டுக்கு வந்தபிறகு அருகிலிருந்த வானுவம்பேட்டையில் நிலம் வாங்கி வீடு கட்டினார். காலையில் நாலு மணிக்கு ரெண்டு ரெண்டரை கிலோ மீட்டர் நடந்தே பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு செல்வார். டிரெயின் பிடித்து சைதாப்பேட்டையில் இறங்குவார். அங்கிருந்து ஒன்று ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சின்னமலை பஸ் டிப்போவுக்கு நடந்து சென்று ஐந்தரை மணிக்கு வண்டியை எடுப்பார். வேம்புலி தீவிரமான அம்மன் பக்தர். எப்போதுமே பர்ஸ்ட் ஷிப்ட்தான் ஓட்டுவார். காலையில் வண்டியை எடுத்ததுமே நேராக சைதாப்பேட்டை பஸ்ஸ்டாண்டில் இருக்கும் பிடாரி இளங்காளியம்மன் கோயில் வாசலில் நிறுத்துவார். அம்மனுக்கு ஒரு கற்பூரம் ஏத்திவிட்டுதான் அன்றைய வேலையை தொடங்குவார். ரெண்டு ரெண்டரை மணிக்கு வேலை முடியும்.

காலை நாலு மணியிலிருந்து ரெண்டு ரெண்டரை மணி வரை நீங்கள் இதுவரை பார்த்த வேம்புலி வேறு. அதற்குப் பிறகு பார்க்கப் போகும் வேம்புலி வேறு. நல்ல டிரைவரான வேம்புலிக்கு இருந்த ஒரே கெட்டப்பழக்கம் குடி.

ட்யூட்டி முடிந்ததுமே அவர் ஆர்வமாக நாடிச்செல்லும் இடம் சைதாப்பேட்டை சப்வே பக்கமாக இருந்த ஒயின்ஷாப்பாக இருந்தது. கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு அலம்பல் செய்வார். கண்ணுக்கு பட்ட பஸ்ஸில் எல்லாம் ஏறி டிரைவர்களோடும், கண்டக்டர்களோடும் வம்புக்குப் போவார். எல்லாருக்கும் ஆபாச அர்ச்சனைதான். வேம்புலியை தெரிந்தவர்கள் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போனார்கள். ஒருமுறை நல்ல மப்பில் டிப்போவுக்கு போய் அங்கிருந்த அதிகாரியை அடித்துவிட்டு சஸ்பெண்ட் கூட ஆனதாக சொல்வார்கள். வீட்டுக்கு இரவு பத்து, பதினோரு மணிக்குதான் போவாராம். அவர் குடும்பத்தைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரும் சொன்னதில்லை.

நகர விரிவாக்கத்தால் மடிப்பாக்கம் நாகரிகமடையத் தொடங்கியது. முன்புபோல இல்லாமல் நிறைய பஸ்கள். கிராமத்தின் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. முன்பெல்லாம் ஊரில் இருக்கும் எல்லாரையுமே வேம்புலிக்கு தெரியும். இப்போது வேம்புலியின் பயணிகள் பெரும்பாலானவர்கள் அவர் அறியாதவர்களாகவே இருந்தார்கள்.

வேம்புலியோடு எனக்கு ஒரு நான்கைந்து வருடங்கள் நெருக்கமான நட்பு இருந்தது. போய்யா வாய்யா என்று கூப்பிடுமளவுக்கு. பஸ் பாஸ் எடுத்துவர அடிக்கடி மறந்துப்போய்விடும் வயது அது. ‘பரவாயில்லை. டிக்கெட் எடுக்காதே. அதுக்குப் பதிலா பான்பராக் வாங்கி கொடுத்துடு. செக்கிங் வந்தானுங்கன்னா நான் பார்த்துக்கறேன்’ என்பார். பயணிகளிடம் அவர் பெற்ற அதிகபட்ச கையூட்டு பான்பராக்தான்.

அவர் சில வேளைகளில் செகண்ட் ஷிப்ட் அடிஷனலாக நண்பர்களுக்காக பார்ப்பதுண்டு. ஒருநாள் இரவு 10.10 பஸ்ஸை எடுத்தார். இன்ஜினிக்கு பக்கத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சரக்கு விட்டிருந்தாரா தெரியவில்லை. 10.25க்கு மடிப்பாக்கம் வந்துவிட்டார். வழியில் ஓரிரு நிறுத்தங்களில் இத்தனைக்கும் பஸ் நின்றது. அனேகமாக அந்த ரூட்டிலேயே வேகம் அடிப்படையில் இதுதான் உச்சபட்ச சாதனையாக இருக்கும் என்று நினைக்கிறேன். மோசமான சாலை காரணமாக அப்போதெல்லாம் சைதை டூ மடிப்பாக்கம் செல்ல பஸ்ஸில் 45 நிமிடங்கள் ஆகும். இப்போதெல்லாம் சாலை பக்காவாக இருக்கிறதென்றாலும் சில நேரங்களில் போக்குவரத்து காரணமாக ஒன்றரை மணி நேரம் கூட ஆவதுண்டு.

ரன்னிங்கில் இருக்கும் பஸ்ஸை எப்படி ஒரு பயணி சுலபமாக நிறுத்துவது என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார். “பொதுவா கைய நேராக்கா நீட்டுனா நிறுத்த மாட்டானுக. பீச்சாங்கையை இடுப்புக்கு கீழே நல்லா எறக்கி மேலும் கீழும் வேகமா ஆட்டணும். அப்படி ஆட்டுன்னா நீ டிபார்ட்மெண்ட்காரன் இல்லேன்னா போலிஸ்காரன்னு நெனைச்சி நிறுத்துவானுங்க. இதுதான் டெக்னிக்”

நிஜமாகவே இப்படி ஒரு கோட் சிக்னல் இவர்களுக்குள் இருந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதனாலேயே ஸ்பெஷலாக சிலமுறை பஸ்ஸ்டேண்டை தாண்டிப்போய் நின்று ஓடும் பஸ்ஸை நிறுத்தி பரீட்சித்து பார்த்து உணர்ந்துகொண்டேன்.

வண்டி வாங்கியபிறகு நான் பஸ்ஸில் செல்வதே அரிதாகிவிட்டது. எப்போதாவது ஓரிருமுறை சென்றபோதும் கூட டிரைவர்களாகவும், கண்டக்டர்களாகவும் நிறைய புதுமுகங்கள் வந்திருந்ததை கண்டேன். வேம்புலி மாதிரியான சூப்பர்ஸ்டார்கள் ஃபீல்டிலேயே இல்லை. ஒன்று ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது எங்காவது மாற்றல் ஆகியிருக்கவேண்டும். கடைசியாக நான் வேம்புலியோடு சுற்றிக் கொண்டிருந்த காலங்களில் அவருக்கு கண்பார்வை கொஞ்சமாக மங்கத் தொடங்கியிருந்தது. எனவே விருப்ப ஓய்வு கூட பெற்றிருக்கலாம்.

ஒரு வருடம் முன்பாக பழைய பஸ் சகா ஒருவரை நந்தனத்தில் பார்த்தேன். F51, 51E, ஃபுட்போர்டில் தொங்கி என் மண்டை உடைந்தது என்று பசுமைக்கால பஸ் நினைவுகளை பேசிக்கொண்டிருந்தபோது வேம்புலியைப் பற்றியும் பேச்சு வந்தது. “அவர் செத்துட்டாரு தெரியுமா?” என்றதுமே கடுமையான அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒருசேர அடைந்தேன்.

எப்படி இறந்தார் என்று சகா சொன்னதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஒருநாள் நடுஇரவில் ஃபுல் மப்பில் சைதாப்பேட்டைக்கும், கிண்டிக்கும் இடையில் நடுரோட்டில் நின்று பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கைகாட்டியிருக்கிறார். இதுபோல வேம்புலி மப்பில் அலம்பல் செய்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். சடன்பிரேக் அடித்து வேம்புலியை முட்டிக்கொண்டு கூட பஸ் நிற்கும். டிரைவரை ஆபாசமாக திட்டிக்கொண்டே பஸ்ஸுக்குள் ஏறுவார்.

துரதிருஷ்டவசமாக அன்றிரவு சாலையில் நின்று பஸ்ஸுக்கு கைகாட்டுவதாக நினைத்து, தண்டவாளத்தின் நடுவில் நின்று எலெக்ட்ரிக் டிரெயினுக்கு கைகாட்டியிருக்கிறார்.

6 ஜூன், 2011

ஒளியேற்ற வாருங்கள்!


மேலும் தகவல்களுக்கு : http://candlelightfortamils.blogspot.com/

தொடர்புக்கு : lightacandlefortamils@gmail.com

4 ஜூன், 2011

சிறுநகர நாயகன்!

தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய பிரச்சினை இது. வைத்தால் குடுமி. சிரைத்தால் மொட்டை. படத்தின் கதை நடக்கும் களம் என்பது தொண்ணூறு சதவிகிதம் சென்னைதான். இல்லாவிட்டால் மதுரை. அல்லது மதுரை மாவட்டத்தின் ஏதோ ஒரு குக்கிராமம். அரிவாள்தான் கதைக்கே முதலீடு என்றால், போனால் போகுதென்று திருநெல்வேலிக்குப் போவார்கள். “பசுபதி. விட்ரா வண்டியை” என்று வசனம் வைக்க இயக்குனருக்கு ஆசை வந்துவிட்டால், கோயமுத்தூருக்கு வண்டியை விடுவார்கள். ஒரு தெலுங்கரோ, இந்திக்காரரோ தமிழ்ப்படங்கள் பார்க்கும் வழக்கம் கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் இருப்பது நாலே, நாலு நகரங்கள்தான் என்று எண்ணக்கூடும்.

இந்தப் போக்கு தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றும் சொல்லலாம். கிராமம் என்றால் கோவை அல்லது மதுரை. நகரமென்றால் சென்னையென்றே சிந்திக்க இயக்குனர்கள் பழகிவிட்டார்கள். செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேலூர், பொள்ளாச்சி, லொட்டு, லொசுக்கு என்று எவ்வளவோ நகரங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இந்த ஊர்களை களமாக கொண்டும் கதை சொல்லலாம் என்று எந்த புதுமுக இயக்குனருக்கும் தோன்றுவதேயில்லை என்பது பரிதாபம்தான். ஒருவேளை படப்பிடிப்புச் செலவு, சரியான லொக்கேஷன்கள் இல்லாமை போன்ற வேறு நிர்வாக காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால், இதனால் இந்த சிறுநகர மாந்தர்களை தமிழ் சினிமா பிரதிநிதித்துவப் படுத்தாமல் போகின்ற அவலம் நேர்கின்றதை மறுக்கவே முடியாது. ஓரிரு விதிவிலக்கான திரைப்படங்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் நூற்றில் ஒன்றோ, ஆயிரத்தில் நான்காகவோதான் இருக்கும்.

மற்ற ஊர் ஆட்களுக்கு இதனால் சென்னை மீது பெரிய கோபம் இருக்கலாம் என்று உளவியல்ரீதியாக உணரமுடிகிறது. சென்னையிலேயே ரீல் ஓட்டிக் கொண்டிருக்கும் முன்னணி நாயகர்களுக்கு போட்டியாக, புது நாயகன் யாராவது மற்ற ஊர் கதைகளில் நடித்தால் ஆரவாரமான வரவேற்பினை பெறுகிறார். முன்பு ராமராஜன். இப்போது விமல் (விஜய் கூட ஆரம்பக்கால படங்களில் சென்னை தவிர்த்த பிற நகர இளைஞன் கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார்). தங்கள் ஊரையும், தங்கள் மனிதர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் திரைப்படங்களை சென்னை தவிர்த்து ஏனைய ஊர் மக்கள் எப்போதுமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்திய களவாணி, பாஸ் (எ) பாஸ்கரன் மாதிரி படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாக காட்டலாம்.

சில நாட்களுக்கு முன்பாக, உத்திரமேரூரில் +2 படிக்கும் பெண் ஒருவரின் ரெக்கார்ட் நோட்டை பார்க்க நேர்ந்தது. பின்பக்க உள்ளட்டையில் விமலின் வண்ணப்படம். பெண்கள் கமல், ஷாருக், சல்மான், ரித்திக் ரோஷன், அஜித், விஜய், சிம்பு படங்களைதான் வைத்திருப்பார்கள் என்று அதுவரை நமக்கு ஒரு மூடநம்பிக்கை இருந்தது.

“விமல் படத்தை கூடவா?”

“ஏன் வெச்சுக்க கூடாது? விமலுக்கு கல்யாணம் ஆனப்போ எங்கிளாஸ்லே நிறைய பொண்ணுங்க அழுதுட்டாங்க தெரியுமா?”

‘மாஸ்’ அளவிடும் மேட்டரில் நாம் கொஞ்சம் பின்தங்கியிருப்பது புரிந்தது. பிறகு செல்லுமிடமெல்லாம் கவனமாக கவனித்ததில், விமலுக்கு ஒரு மாதிரியான ரூரல் தன்மையோடு கூடிய செமி-அர்பன் மார்க்கெட் மாஸ் உயர்ந்து வருவதை புரிந்துக்கொள்ள முடிந்தது (இதே மாதிரி மாஸ், இவரது சக கூத்துப்பட்டறை நண்பரான மைனா விதார்த்துக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது).

“இங்கிட்டு மீனாட்சி. அங்கிட்டு யாரு?” வசனம் விமலுக்கு நல்ல ஓபனிங். களவாணியின் தறுதலை பாத்திரம் பக்காவான ரீச்சிங். குட்டி, குட்டி ஊர்களில் வசிக்கும் டுட்டோரியல் ஸ்டூடண்ட்ஸ் தங்களை, அச்சு அசலாக கண்ணாடியில் பார்ப்பது மாதிரி விமலை பார்த்திருக்கிறார்கள். படா த்ராபையான திரைக்கதையம்சம் கொண்ட தூங்கா நகரம் கூட விமலுக்காக சொல்லிக் கொள்ளும்படியான வசூலை அள்ளியிருக்கிறது. இப்போது ‘எத்தன்’. அடுத்து ‘வாகை சூட வா’வென்று, நம்பி பந்தயம் கட்டக்கூடிய நிச்சயவெற்றி குதிரை ஆகிவிட்டார் விமல்.

எந்தவித நடிப்பாற்றலும் இல்லாமல், சமீபத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்களும் இல்லாமல் இருந்தாலும் அஜித்துக்கு எப்போதுமே ஒரு மாஸ் இருந்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் திரையுலகுக்குள் நுழைய அஜித் அடைந்த கஷ்டங்களும், நுழைந்த பிற்பாடு உழைத்த பெரிய ரவுண்ட் உழைப்புமே. ஒரு தன்னம்பிக்கை மனிதராக கனகச்சிதமாக அஜித் பிராண்ட் ஆகிவிட்டதைப் போன்றே, விமலுக்குமான ஒரு பின்னணிக்கதை ரசிகர்களுக்கு இவர் மீதான கூடுதல் பிடிப்பை ஏற்படுத்துகிறது.

திருச்சிக்கார இளைஞரான ரமேஷூக்கு சினிமா மீது கொள்ளை விருப்பம். இவருடைய துரதிருஷ்டம், இவர் நுழைய விரும்பிய நேரத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று ஏற்கனவே சினிமாவில் கொட்டை போட்டு பழம் தின்றவர்களின் வாரிசுகளே திரும்ப திரும்ப அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் ‘கூத்துப்பட்டறை’யிலிருந்து நடிகர்களை நேரடியாக, தமிழ் சினிமாவுக்கு சில இயக்குனர்கள் ‘டவுன்லோடு’ செய்துக் கொண்டிருக்கும் போக்கும் காணப்பட்டது. பிடி கூத்துப்பட்டறையை. சினிமாவுக்குள் நுழைய ஒரு குறுக்குவழி விகடன் என்றால், இன்னுமொரு குறுக்குவழி கூத்துப்பட்டறை.

ஆறுமாத காலம் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதாக பேட்டிகளில் சொல்கிறார் ரமேஷ். பின்னர் கில்லி, கிரீடம், குருவி என்று ‘மாஸ்’ படங்களில் துண்டு, துக்கடா வேடங்களில் தலையை காட்டினார். கிடைத்தது சிறுவேடங்கள் என்றாலும், எப்போதும் படப்பிடிப்புத் தளங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்ததால், இளம் புதுமுக இயக்குநர்கள் நிறைய பேரின் அறிமுகம் கிடைத்தது (களவாணி இயக்குனர் சற்குணமும், விமலும் ஏற்கனவே நண்பர்கள்).

விமலாக மாறி, முதல் படமான ‘பசங்க’ வெளியாவதற்கு முன்பே, களவாணி பட பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டது. நண்பன்தான் ஹீரோ என்பதில் சற்குணம் உறுதியாக இருந்தார். இருந்தாலும் புதுமுக நாயகன் என்பதால் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் தயக்கம். பசங்க வெளியாகி சக்கைப்போடு போட, களவாணி கம்பீரமாக வளர்ந்தான். மீதியெல்லாம் தெரிந்த கதைதான்.

விமலின் ‘லவ் ஸ்டோரி’யும் அவரது இமேஜூக்கு உரம் சேர்க்கிறது. டாக்டருக்குப் படிக்கும் சொந்தக்காரப் பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார். “சினிமாக்காரனுக்கு பொண்ணு கிடையாது” என்று பொண்ணுவீட்டுக்கார வீம்பினை எதிர்த்து, வீரமான ‘லவ் மேரேஜ்’.

இவருக்கான மைனஸ் பாயிண்ட் என்றால் ஒரேமாதிரியாக எல்லாப் படங்களிலும் (வாய்க்குள் மாவாவை போட்டு குதப்பிய மாதிரி) பேசிக்கொண்டிருக்கும் டயலாக் டெலிவரிதான்.

விமலின் திரைப்படங்களில் வரும் சென்னை தவிர்த்த பிறநகர இளைஞன் பாத்திரம் அவராக தேர்ந்தெடுப்பதா, அதுவாக அமைவதா என்று தெரியவில்லை. ஆயினும் அவரது சரிவிகித வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. நல்ல சிவந்த நிறம், களையான முகம். நாலு நால் தாடியென இனியும் தனக்குப் பொருத்தமான இதேமாதிரியான பாத்திரங்களை, சரியான கதையமைப்பில் தேர்வு செய்து – வித்தியாசமான கெட்டப்புகளுக்கு எல்லாம் அவசரப்பட்டு ஆசைப்படாமல் - நடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருக்கும் ரஜினி, கமலுக்கான அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் மிகச்சுலபமாக, விரைவாக இடம்பெற்று விடலாம்.

3 ஜூன், 2011

சோழநாட்டு சூரியன் வாழ்க! வாழ்கவே!!


அது எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நீதிக்கட்சி திராவிட கழகமாய் பெயர் மாற்றம் பெற்று இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதை, சமூக சீர்த்திருத்தத்தை தன் களமாய் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருந்த காலம்.

திராவிடர் கழகத்துக்கென தனி கொடியில்லை. கழக முன்னணியினர் கழகத்துக்கு என ஒரு கொடி வேண்டும் என முடிவு செய்து கொடியினை வடிவமைக்க கூடியிருக்கிறார்கள். தேசத்தின் இழிவை குறிக்கும் வகையில் கருப்பு நிறமும், அந்த இழிவினை ஒழிக்கும் புரட்சி நிறமாக சிகப்பினையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 88 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளின் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு தமிழினத் தலைவரின் ரத்தம்!

அரசியல் தலைவர்களிலேயே அரசியல் வாழ்விலும் சரி, சொந்த வாழ்விலும் சரி முழுமையான வாழ்வினையும், எவரெஸ்ட் உயரத்தையும் அடைந்த பரிபூரணத் தலைவர் ஒருவர் உண்டென்றால் உலக வரலாற்றிலேயே அது தமிழினத் தலைவர் கலைஞர் மட்டுமே.

நடிகர் திலகம் ஒருமுறை சொன்னபடி நமது வாழ்நாளிலே சிலவற்றை யாருக்காவது தரமுடியுமேயானால் உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் பாதியை தலைவர் கலைஞருக்கு தந்து... இன இழிவு நீங்க, தமிழனின் புகழ் தரணியெங்கும் பரவ அந்த தங்கத் தலைவனை பல நூற்றாண்டுகளுக்கு வாழவைத்திட வேண்டும்.

வாழும் தமிழே வாழி! நீ வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழனின் புகழ் உயரும் என கூறி, தமிழின் முகவரியாய் வாழும் வள்ளுவன் தலைவர் கலைஞரை வாழ்த்த வயதில்லாமல் உடன்பிறப்புகள் வணங்குகின்றோம்.

வாழ்க தமிழ்!! வெல்க தமிழினத் தலைவரின் நெஞ்சுரம்!!!