7 மே, 2011

தர்ம சங்கடம்


வாசிக்கும்போதும், பேசும்போதும் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு சொல் ‘தர்மசங்கடம்’. சங்கடம் என்கிற சொல்லுக்கான பொருள் நமக்கு புரிந்தாலும், இங்கே prefix ஆக வரும் ‘தர்ம’ என்பதின் அர்த்தம் பலருக்கும் புரிவதில்லை.

எழுத்தாளர் ஒருவரிடம் தர்மசங்கடத்துக்கு விளக்கம் கேட்டேன்.

“நாம் ஒன்றை சரியென்று நினைப்போம். சந்தர்ப்பச் சூழலால் அதையே தப்பு என்று சொல்ல வேண்டிய நிலை சில நேரங்களில் வரும். நம்மளவில் ‘தர்மம்’ என்று நினைப்பதை, நாமே மீறவேண்டிய சூழல் ஏற்படுவதைதான் ‘தர்மசங்கடம்’ என்று சொல்லுகிறோம்” என்று விளக்கம் அளித்தார். இவ்விளக்கம் ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

தர்மசங்கடத்தைப் பற்றி இப்போது ஏன் இவ்வளவு விளக்கமாக நான் ஆராய வேண்டியிருக்கிறது என்பதே எனக்கும், தலைவர் கலைஞருக்கும் கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான். ஸ்பெக்ட்ரம்தான். வேறென்ன?

சமீபத்தில் (கனிமொழிக்காக) கூட்டப்பட்ட திமுக உயர்நிலைக் கூட்டம் முடிந்ததும் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர் : சி.பி.ஐ நடத்திவரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா, இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?

கலைஞர் : தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட தர்மசங்கடம் எங்களுக்கு ஏற்படாது. அது என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை.

அச்சு அசலான திராவிட மணம் கலைஞரின் பதிலில் கமழ்கிறது. தமிழ்ச்சூழலில் நாத்திகராக இருக்கும் ஒருவர், எத்தகைய சூழலிலும் இதிகாசக் கிண்டல்களை கைவிட மாட்டார் என்பதற்கு கலைஞர் மிகச்சரியான எடுத்துக்காட்டு.

கலைஞர் விவரிக்க விரும்பாத ‘சங்கடம்’ என்னவென்பதை விவரிப்பதில் நமக்கு தர்மசங்கடம் எதுவுமில்லை.

பதினைந்து, பதினாறு வயதுவரை தீவிரமான என்று சொல்ல முடியாவிட்டாலும் நானும் ஆத்திகனாகவே இருந்தேன். கேரக்டர் அடிப்படையில் கிருஷ்ணனை பிடிக்கும் என்றாலும், சிவமதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முருகர் இஷ்ட தெய்வம் (இதற்குப் பின்னால் தமிழ்க்கடவுள் என்கிற அரசியல் காரணமும் உண்டு). கல்யாண கந்தசாமி கோயிலுக்கு ரெகுலராக சென்றிருக்கிறேன். திருப்போரூர் முருகனை காண பயபக்தியோடு சைக்கிள் மிதித்திருக்கிறேன். நாத்திகனாக மனமாற்றம் அடைந்தபிறகும் கூட, யாராவது கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சொன்னால் பெசண்ட் நகர் அறுபடைவீடுதான் இன்றும் பர்ஸ்ட் சாய்ஸ். செகண்ட் சாய்ஸ் வடபழனி முருகன்.

காதல் தோல்வி, +2 தோல்வியென்று அடுத்தடுத்து அடைந்த தோல்விகள் கடவுள் மீதான நம்பிக்கையை சிதைத்தது. இவ்வேளையில் தேடிப்பிடித்து வாசித்த திராவிட இயக்க இனமான வரலாறு கடவுள் எதிர்ப்பாளனாய் கட்டமைத்தது. பெரியாரின் சிந்தனைகள் மீது மையல் கொண்டு, திராவிடர் கழகத் தோழர்களோடு திரிய ஆரம்பித்தேன். தோழர்களுடனான வாதங்கள், தெருமுனைக் கூட்டங்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யம் கூடி, அர்த்தம் மிகுந்ததாக மாறியது. இந்த காலக்கட்டங்களில் கேட்ட பல கதைகளில் ஒன்றுதான் ‘தர்மசங்கட’ கதை.

திராவிட இயக்கப் பெருசுகள் பலரும் ஒருமாதிரியான ’கும்ப கோணத்து குசும்பு’ பார்ட்டிகள். கேலியும், கிண்டலுமாக இதிகாசங்களையும், புராணங்களையும் அணுகுவார்கள். “அவ்ளோ இந்திரியம் கொட்டறதுக்கு, இந்திரனோட ‘அது’ என்ன மெட்ரோ வாட்டர் பைப்பா?” என்று கேள்வி எழுப்புவார்கள். இதுமாதிரி தெருமுனைக் கூட்டங்களை கோயில் வாசலில்தான் பெரும்பாலும் நடத்துவோம். எங்கள் தெருமுனை சித்தி-புத்தி வினாயகர் கோயில் வாசலில் (கோயில் அனுமதி பெற்று) சில கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

திரளாக மக்கள் கூடாவிட்டாலும், ‘என் பணி கடன் செய்து கிடப்பதே’ என்று ஃபுல் சார்ஜோடு பேசுவதுதான் திராவிடர் கழகப் பேச்சாளர்களின் ஸ்பெஷாலிட்டி. பெரியார் மாதிரியே கெட்டப்பில் இருந்த தாம்பரத்துக்காரர் ஒருவர்தான் எங்களது வழக்கமான பேச்சாளர். அவர் அப்போது சொன்ன கதைதான் தர்மசங்கட கதை.

தர்மரின் மனைவி பாஞ்சாலிக்கு, தர்மரோடு சேர்த்து ஐந்து கணவர்கள். ஏன் ஐந்து கணவர்கள் என்பதற்கு ஆபாசமான இன்னொரு கிளைக்கதை உண்டு. ஐந்து கணவர்கள் என்றாலும், கணவர்களுக்கு செய்தாகவேண்டிய ‘அந்தரங்க’ கடமைகளை செய்வதில் பாஞ்சாலி எந்தக் குறையும் வைக்கவில்லை. நாளுக்கு ஒருவர் என்கிற அடிப்படையில் இந்த விஷயத்தை பிரித்துக் கொண்டார்கள்.

அதாவது அர்ஜூனன் உள்ளே இருந்தால், அறைவாசலில் அவனுடைய செருப்பு இருக்கும். நகுலனோ, சகாதேவனோ ‘அதற்காக’ வந்தால், வாசலில் செருப்பைப் பார்த்துவிட்டு, ‘அண்ணன் உள்ளே இருக்கிறார்’ என்பதை புரிந்துகொண்டு கிளம்பிவிடுவார்கள்.

அன்றைக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. தர்மர் செருப்பு போடாமல் வந்துவிட்டார். ரூமுக்குள்ளும் நுழைந்துவிட்டார். கொஞ்சநேரம் கழித்து ஆசையோடு பீமரும் வந்திருக்கிறார். வாசலில் செருப்பு எதுவும் இல்லாததால், அவரும் உள்ளே நுழைந்துவிட.. அங்கே தர்மரோடு பாஞ்சாலியை எசகுபிசகான கோலத்தில் பார்த்துவிட்டாராம். ‘அம்மாதிரியான கோலத்தில் தம்பி நம்மை பார்த்துவிட்டானே’ என்று தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம்தான் ‘தர்ம சங்கடம்’ என்று ஆனதாம்.

தாம்பரத்துப் பேச்சாளரின் வெர்ஷன் இது. இதே வடிவில் மகாபாரதத்தில் இருக்கிறதா என்று தெரியாது. நான் வாசித்த பைகோ பிரசுரத்தின் அமர்சித்ரக் கதாவில் இந்தக் கதை இல்லை.

கலைஞர் விவரித்து சொல்ல விரும்பாத ‘தர்ம சங்கட’ கதை இதுதான்.

திராவிட இயக்கத்தாரின் கடவுள் மறுப்பு இதுமாதிரியான ஆபாசக் கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனாலேயே கூட எதிர்த்தரப்பு வன்மமாக ஆத்திகத்தை வளர்க்க ஒரு நியாயமும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. “அவர்கள் ஆபாசமானவர்கள்” என்கிற ஆத்திகப் பிரச்சாரம், பிராமணரல்லாத மற்ற சாதியினரிடமும் பரவலாக எடுபட்டது. தடாலடியான திராவிட கடவுள் மறுப்புப் பிரச்சாரம் 60களிலும், 70களிலும் எடுபட்டமாதிரி.. 80களிலும், 90களிலும் ஏனோ எடுபடவில்லை. மாறிவிட்ட பிரச்சார அணுகுமுறைகளை திராவிட இயக்கத்தார் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது காரணமாக இருக்கலாம்.

அவர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் கடவுளை பரப்பினார்கள். திராவிட இயக்கத்தவர்கள் அதே சினிமாவில் கடவுளை மறுத்தார்கள். பின்னர் அவர்கள் சினிமாப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டபோதும், இவர்கள் மட்டும் தொடர்ச்சியாக எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இரு கை தட்டப்படாமல் ஓசையே எழாமல் போய்விட்டது. தினமலர் மாதிரியான அச்சு ஊடகங்கள் நவீன முறையில் மதப்பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, விடுதலை, முரசொலி வகை திராவிடப் பத்திரிகைகள் பழைய மரபு சார்ந்த பகுத்தறிவு பிரச்சார முறைகளையே தொடர்ந்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் விடுதலை முழித்துக்கொண்டு, சில காலமாக இணையத்துக்கே வந்திருக்கிறது.

தனிப்பட்ட முறையில் சொன்னால், இந்து மதத்தின் ஆபாசக் கதைகளை கைத்தட்டி, விசிலடித்து ரசிக்கிறேன். இதே மனநிலையில் இன்றைய வெகுஜனம் இல்லையென்று தோன்றுகிறது. கடவுளை எதிர்க்க, மதத்தை மறுக்க அவர்களுக்கு வேறு புதிய காரணங்கள், நவீனப் பிரச்சாரங்கள் தேவைப்படுகிறது.

அதுவும் இந்தியச் சூழலில் நாத்திகப் பிரச்சாரம் என்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானதாகும். இங்கே சிறுபான்மையினருக்கு அணுசரனையாக இருந்தாக வேண்டிய கட்டாயத்தில், பெரும்பான்மை மதத்தை குறிவைத்து அடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. துரதிருஷ்டவசமாக பகுத்தறிவாளர்கள் அணுசரனையாக நடந்து கொள்ளும் சிறுபான்மை மதங்கள் கட்டுப்பெட்டித் தனத்தோடும், பெரும்பான்மை மதமான இந்துமதம் ஓரளவு ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருந்துத் தொலைக்கிறது. எந்த ஒரு மாற்றத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளும் பகாசுரத் தன்மையோடு இந்துமதம் வாழுகிறது. இந்த கருத்தை எனக்கு சொல்லப் பிடிக்காவிட்டாலும், இது உண்மை என்பதை ஜீரணித்தே ஆகவேண்டும்.

இந்தியாவின் சுமார் 56 மதங்களின் கூட்டமைப்புதான் இந்து மதம். இந்த 56 மதங்களில் நாத்திக மதமும் கூட உண்டு. கடவுளை மறுக்கும் முனிவர்கள் கூட இந்த மதத்தில் இருந்திருக்கிறார்கள். சார்வாஹ மஹரிஷி என்று மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் உண்டு. இந்தியாவில் நாத்திக மதத்தை ஸ்தாபித்தவர் இவர். சாமியார்களிடம் தொடர்ச்சியாக பகுத்தறிக் கேள்விகளை ஆபிரகாம் கோவூர் எழுப்பி வந்த மாதிரி, கிருஷ்ணனை நிற்கவைத்து கேள்வி கேட்டவர் சார்வாஹ மஹரிஷி.

‘யாவே த்வயக்ஷகம் ஜீவேத் ருணம் க்ருத்வா | க்ருதனி பேதஹ: பஸ்மி பூதஸ்ய தேஹ | புனராஹமன் குதஹ’ என்றொரு சுலோகம் கூட உண்டு. ‘மரணித்த உடம்பு பஸ்பமான பின்பு, சொர்க்கம் ஏது? மேலுலகம் எல்லாம் ஏமாற்று வேலை. வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இவ்வாறாக நாத்திகத்தையும் அனுமதிக்கும் மதமாக இந்து மதம் இருக்கிறது (பவுத்தமும் இப்படியான ஒரு சலுகையை வழங்குகிறது என்று நினைக்கிறேன்). மற்ற மதங்களில் நாத்திகர்களுக்கு இடமிருப்பதாக தெரியவில்லை. மதத்தை/கடவுளை மறுப்பவனை இந்து மதம் மதவிலக்கு செய்வதில்லை. சீர்த்திருத்தவாதிகளோடு உரையாட இம்மதம் எப்போதும் தயாரானதாகவே இருந்திருக்கிறது. மதமற்றவனையும் தன் மதமாக அறிவித்துக் கொள்கிறது. மதமற்ற இந்திய பழங்குடிகள் அனைவரும் ‘இந்து’க்கள் என்கிற அயோக்கியத்தமான பிரிவு இந்திய சட்டத்திலேயே இருக்கிறது.

பத்திரிகைகளில் கட்டுரை எழுதுதல், பொதுக்கூட்டங்களில் இதிகாசங்களில் இருந்து ஆபாசக் கதைகளை எடுத்துச் சொல்லுதல், பேட்டிகளில் கலைஞர் செய்வது மாதிரியான நையாண்டி போன்ற அந்தக்கால பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் தற்காலத்தில் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் காலத்திலேயே இராமாயணம்/மகாபாரதம் ஒளிபரப்பானபோது ஒரு மறுமலர்ச்சியை இந்து மதம் இந்தியா முழுவதும் பெற்றதை, நானே கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.

துரதிருஷ்டவசமாக இதுமாதிரியான நேர்மறை நவீனப் பிரச்சாரத்தை இன்னமும் பகுத்தறிவாளர்கள் கைகொண்டதாக தெரியவில்லை. கலைஞரின் குடும்பத்தார் நடத்தும் தொலைக்காட்சிகளில் கூட இராமாயணம் ஒளிபரப்பாகிறது. மூடநம்பிக்கையை தூண்டும் தொடர்கள் இடம்பெறுகின்றன. கலைஞர் ஸ்பெக்ட்ரம் பிரச்சினைக்காக சங்கடப்படுகிறாரோ இல்லையோ, திராவிடப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சரியாக கொண்டு சேர்க்க முடியாத இந்த சூழ்நிலைக்காக, பகுத்தறிவு இயக்கங்களுக்கு தலைமை தாங்குபவர் என்கிற அடிப்படையில் நிச்சயம் தர்மசங்கடப்பட்டே ஆகவேண்டும். சன் தொலைக்காட்சி வகையறாக்களில் இடம்பெறும் அபத்தமான மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு தர்மசங்கடம் கொண்டாக வேண்டும்.

பகுத்தறிவாளர்கள் என்று அறிவித்துக் கொண்டோரும் அவரோடு சேர்த்து தர்மசங்கடப்பட்டு தொலைவோம். வேறென்ன செய்வது?

5 மே, 2011

உலகின் முதல் அஜால்-குஜால் 3டி படம்!

ஒரு காலத்தில் தமிழ்ப்புத்தாண்டாக இருந்த தினம் ஏப்ரல் 14. அபூர்வ சகோதரர்கள் மாதிரியான படங்கள் கோடைவிடுமுறையை குறிவைத்து கச்சிதமாக வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியது. அந்த காலம் எல்லாம் போயே போச்சு. போன வருடம் சுறா, இந்த வருடம் மாப்பிள்ளை. இப்படியாகத்தான் இருக்கிறது தமிழக சினிமாவின் ஏப்ரல் 14 நிலைமை.

இந்த ஏப்ரல் 14 அன்று, விடுமுறை தினக் கொண்டாட்டம் ஹாங்காங், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் களை கட்டியது. ‘பெருசுகள்’ பலரும் ஒரு வாரமாக ஊன், உறக்கமின்றி திரையரங்கு வாசல்களில், தேருக்கு வடம் பிடித்து நின்றது மாதிரி உலக்கைகளாக தவமிருந்தார்கள். இளசுகளுக்கும் உற்சாகம்தான். பின்னே? காணாத காட்சியெல்லாம் காணப்போகிறார்களே? உலகின் முதல் அஜால் குஜால் 3டி படம் வெளியாகிறதே? காமவெறியோடு கூட்டம் கும்பலாக கும்மியது. படத்தின் ‘உச்சக்கட்ட’ காட்சி முடிந்துவிட்ட பின்னரும் கூட, தியேட்டரில் அமர்ந்திருந்த பெருசுகள் சிலையாய் சமைந்திருந்தார்களாம். அடுத்தக் காட்சிக்கும் இவர்களே போய் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க, முதன்முறையாய் தரிசனத்துக்கு வந்தவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போக, மூன்றாவது உலகப்போரையே ஏற்படுத்திவிடக் கூடிய கலவர உணர்வு, இந்த ஏரியாக்களில் பரவியிருக்கிறது.

அந்தப் படம் ‘செக்ஸ் அண்ட் ஸென் : எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’. ஸ்டீபன் ஷியூ என்பவர் 1991ல் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய திரைப்படம் ‘செக்ஸ் அண்ட் ஸென்’. ஹாங்காங் குஜால் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அந்தப் படம் சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதையே 20 ஆண்டுகள் கழித்து 3டி வடிவில் தயாரித்து, வயோதிக வாலிப அன்பர்களை குஷிப்படுத்த நினைத்தார் ஷியூ. ‘தி கார்நர் ப்ரேயர் மேட்’ என்கிற சீன செவ்விலக்கியத்தை (நம்ம வாத்ஸ்யாயனரின் காமசூத்ரா மாதிரி என்று தோன்றுகிறது) தழுவி இதன் திரைச்சதை எழுதப்பட்டிருக்கிறது. திரை முழுக்க பிட்டு என்பதால் படம் சூப்பர் ஹிட்டு. ஹாங்காங்கில் அவதார் திரைப்படம் செய்த வசூல்சாதனையை இப்படம் அனாயசமாக சுக்குநூறாக்கியிருக்கிறது.

ஒரு சாமானிய பிட்டு பட ரசிகன், பானு தியேட்டரில் காட்டப்படும்.. வீடியோவிலிருந்து ஃபிலிமுக்கு மாற்றிய தேய்ந்த பிட்டிலேயே ஜென்மசாபல்யம் அடைந்துவிடுகிறான். தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்த சமூகத்தின் தலைவிதி இதுதான். இவனைப்போன்ற ரசிகனின் ரசிப்புத்தன்மையை மேம்படுத்தும் பொருட்டே, அதிசமீப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டியில் கிட்டத்தட்ட நிஜ அனுபவத்தையும், உயர்வகை கிளர்ச்சியையும் தந்தாக வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தில் இருந்திருக்கிறார் ஷியூ. இப்படியொரு ‘ஐடியா’ தோன்றியதற்காகவே ஷியூவின் காலைப்பிடித்தாவது, அவரை இந்தியாவுக்கு வரவழைத்து படம் எடுக்கச் சொல்லலாம்.

பிட்டுபட பிதாமகனான இத்தாலிய இயக்குனர் டிண்டோபிராஸ், நடக்கும் நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். 1979ல் அவர் இயக்கிய ‘கேலிகுலா’ உலகின் தலைசிறந்த மேட்டர் படங்களில் ஒன்றாக இன்றுவரை அஜால்குஜால் ரசிகர்களால் மதிப்பிடப்படுகிறது. அத்திரைப்படத்தை 3டியில் மறு உருவாக்கம் செய்து கல்லா கட்ட நினைப்பதாக தன்னுடைய விருப்பத்தை டிண்டோபிராஸ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சீனாவில் ஏற்கனவே ஜனத்தொகை அதிகம். இப்படத்தை வெளியிட்டுவிட்டால், அடுத்த பத்து மாதங்களில் ஜனத்தொகை இரட்டிப்பு ஆகிவிடக்கூடிய வாய்ப்பும், ஆபத்தும் ஏற்பட்டது. எனவே சீன அரசாங்கம் மெயிண்லேண்ட் சைனாவில் தடை விதித்து விட்டது.

வெறும் பிட்டுப்படம் இத்தகைய வரலாற்றுச் சாதனைகளை செய்யுமா என்று கேட்டால், வேறு ஒரு வெயிட்டான ‘மேட்டரும்’ படத்தில் இருப்பதாக செப்புகிறார்கள். ‘டைட்டானிக்’ காதலையே, ஓர் இஞ்ச் கேப்பில் முந்தியடித்துவிட்டதாம் இப்படத்தின் காதல். ‘காதலுக்கு காமமே தேவையில்லை’ என்பதுதான் படம் சொல்ல வரும் மெசேஜ். இந்த மெசேஜைதான் படம் முழுக்க காமத்தைக் கொட்டோ கொட்டுவென்று கொட்டி சொல்லியிருக்கிறார்கள், முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி.

நாயகன் அரசகுலத்தைச் சார்ந்தவன். வாழ்க்கை என்பது மிகக்குறுகியது. இந்த குறுகியக் காலக்கட்டத்துக்குள் உடல் ஆசையின் உன்னத நிலையை அடைந்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் வாழ்ந்து வருபவன். ஒரு சாமியாரின் பெண்ணை கண்டவுடனேயே காதல்வசப்படுகிறான் (கவனிக்கவும், காமவசமல்ல). சாமியாரின் பெண் வாரத்துக்கு ஏழு நாளும் ராகவேந்திரருக்கு விரதம் இருப்பாள் போலிருக்கிறது. எனவே நாயகனின் அந்தரங்கத் தேவைகளை ஈடு செய்ய அவளால் இயலாது. காதல் வென்றதா, காமம் வென்றதா என்பதை 3டி கண்ணாடி போட்டுக்கொண்டு, துட்டு இருப்பவர்கள் ஐமேக்ஸிலும், துட்டில்லாதவர்கள் ஜோதி தியேட்டரிலும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

இந்தியாவுக்கு இப்படம் வரும் மார்க்கமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புலப்படவில்லை. இப்படியொரு உயர்ந்த முயற்சி நம் அண்டை நாட்டில் நடந்திருக்கிறது. அங்கிருக்கும் திரை ரசிகர்கள் இதனால் பன்மடங்கு உத்வேகம் அடைந்திருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டும் இப்படிப்பட்ட அற்புத அனுபவத்தை இழக்கலாமா? எப்படிப்பட்ட ஓரவஞ்சனை இது. ஊழலுக்கெல்லாம் உண்ணாவிரதம் இருப்பவர்கள், நமது அடிப்படை உரிமைகளுக்கும் போராட்டம் நடத்த முன்வர வேண்டும். ‘செக்ஸ் அண்ட் ஸென் : எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’ என்கிற செவ்வியல் காவியத்தை இந்திய ரசிகர்களுக்கு வழங்கக்கோரி, மெழுகுவர்த்தி ஏந்தி தணிக்கத்துறை அலுவலகங்கள் முன்பு மாபெரும் அறப்போராட்டம் நடத்தவேணுமாய், சக பிட்டுப்பட ரசிகர்களை கோருகிறேன். இப்போராட்டம் நம்முடைய சுயநலம் சார்ந்ததல்ல. நூற்றி பத்து கோடி இந்தியர்களின் அடிப்படை உரிமை அடிப்படையிலானது என்றும் சுட்டிக் காட்டுகிறேன்.

குறைந்தபட்சம், நம்முடைய தலைவர் சாருநிவேதிதா அவர்களையாவது ஹாங்காங்குக்கு அரசு செலவில் அனுப்பிவைத்து, பார்த்து ரசிக்கவைத்து, இப்படத்தைப் பற்றி உயிர்மையில் விமர்சனமாவது எழுதவைக்க மன்மோகன்சிங் அரசாங்கம் முயற்சிகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

ஒருவேளை அரசு இப்படத்தை இந்தியாவில் அனுமதித்து விட்டாலும், ஒரு சிறு அச்சம். ‘மை டியர் குட்டிச்சாத்தானை’ 3டியில் பார்த்தே, கோன் ஐஸை பிடுங்க திரைக்கு முன்னால் கைநீட்டிய பிக்காரி கூட்டம் நம் கூட்டம். எக்கச்சக்கமான நாட்டுக்கட்டை சதைகளை 3டியில் பார்த்துவிட்டால், திரையரங்குகளின் திரை என்ன கதிக்கு ஆளாகுமோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.


இப்போதைக்கு கீழே இருக்கும் படத்தை, 3டியாக நினைத்துக்கொண்டு, உற்று உற்றுப் பார்த்து நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!4 மே, 2011

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..

கலர்டிவி, கம்ப்யூட்டர் என்று நவீனசாதன இலவசங்களை அறிவித்து அலுத்துப்போயிருக்கின்றன அரசியல் கட்சிகள். வித்தியாசமாக சிந்தித்து, சிந்தித்து கட்சிகளின் பொருளாதார ஆலோசகர்களின் மூளை சூடேறிப் போயிருக்கிறது. வேறு வழியின்றி இப்போது பாரம்பரிய முறையிலான சில இலவசங்களை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் கொடுக்கப்பட்டிருக்கும் புதுமையான வாக்குறுதிகளில் ஒன்று ‘வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு நாலு ஆடு இலவசம்’.

கான்க்ரீட் காடுகளான ஃப்ளாட்களில் சுதந்திரமாக நாய்க்குட்டி கூட வளர்க்கும் சூழல் இல்லாத நகர்ப்புறங்களில் இது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் மக்களிடையே கணிசமான வரவேற்பினை பெற்றிருக்கிறதை நாம் பார்க்க முடிகிறது. விவசாயத்தோடு தொடர்புடைய மக்களுக்கு உபத்தொழிலாக ஆடு, கோழி, மாடு வளர்ப்பு தொன்று தொட்டே இங்கு நடந்து வருகிறது.

திருப்பூரில் வசிக்கும் இளைஞர் ஜெயக்குமார் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். ராமநாதபுரத்தை பூர்விகமாக கொண்ட இவரது குடும்பமே பரம்பரை பரம்பரையாக இதே தொழிலில் ஈடுபட்டிருக்கிறது. அரசாங்கம், கிராமப்புற ஏழைமக்களுக்கு ஆடு இலவசமாக தருவதென்றால், அது மிக நல்ல திட்டம், வரவேற்கத்தக்கது என்கிறார்.

“ஆடுவளர்ப்பு என்பது நல்ல லாபகரமான தொழில். வளர்த்தெடுத்த ஆட்டை இறைச்சிக்காக நல்ல விலைக்கு விற்கலாம். தோல் விற்பனை கூடுதல் லாபம். ஒரு ஆட்டுக்குட்டியின் தற்போதைய விலை ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை வரும். இரண்டு வருடம் வளர்த்தால் போதும். ஏழாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம். பராமரிப்புச் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான் ஒரு ஆட்டுக்கு வரும். இரண்டு ஆண்டில் நான்கைந்து மடங்கு லாபம் தரக்கூடிய தொழில் இது.

அரசு நான்கு ஆட்டுக்குட்டிகள் தந்தாலே போதும். சில வருடங்களில் ஒரு மந்தையையே உருவாக்கிவிட முடியும். ஏனெனில் ஒரு பெண் ஆடு, வருடத்துக்கு இரண்டு குட்டிகள் போடும்” என்கிறார் ஜெயக்குமார்.

டெல்டா மாவட்டங்களில் ‘ஆடு’ என்பது முதலீடு. கையில் கொஞ்சம் காசு இருந்தால் போதும். ஆட்டுக் குட்டிகளாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வங்கி சேமிப்புக் கணக்கில் வரும் வட்டியெல்லாம், இதில் கிடைக்கும் லாபத்துக்கு முன்பாக தூசு. வளர்க்க இயலாதவர்கள் ’வாரத்திற்கு’ விட்டு விடுகிறார்கள். ‘வாரம்’ என்பது என்னவென்றால், ஒருவர் தனது ஆட்டை, வளர்க்க விரும்பும் மற்றொருவரிடம் பராமரிப்புக்கு கொடுத்துவிடுவார். அந்த ஆடு, அது போடும் குட்டி, மற்ற லாப-நஷ்டங்கள் இருவருக்கும் சரிபாதி. அதாவது வாரத்திற்கு எடுப்பவர் தொழிலின் ஒர்க்கிங் பார்ட்னர் மாதிரி. இம்மாவட்டங்களில் திருமணத்தின் போது பெண்களுக்கு ஆடுகளை பிறந்தவீட்டு சீராகவே கொடுப்பதுண்டு. மியூச்சுவல் ஃபண்ட் மாதிரியான விஷயங்கள் கிராமத்தவர்களுக்குப் பொதுவாக தெரியாது. ஆனால் அதில் கிடைக்கும் லாபத்தை இதுபோன்ற விஷயங்களில் அனுபவிக்கிறார்கள்.

சரி, அரசு ஆடுகள் கொடுக்கிறது. அந்த ஆடுகளுக்கு சீக்கு வந்தால் எங்கே போவது? அரசு கால்நடை மருத்துவ கட்டமைப்புகள் எந்த நிலையில் உள்ளது?

139 கால்நடை மருத்துவமனைகள், 1207 கால்நடை மருத்துவ சிறுமையங்கள் (dispensaries), 22 தனி மருத்துவர் மையங்கள் (2008-09 நிலவரப்படி) இருப்பதாக தமிழக அரசு இணையத்தளத்தில் தகவல் கிடைக்கிறது. கால்நடை மருத்துவர்கள் எவ்வளவு பேர் என்கிற தகவல் இல்லை. லட்சக்கணக்கில் ஆடுகளை ஏழைகளுக்கு இலவசமாக அரசு வழங்கும் பட்சத்தில் இந்த கட்டமைப்பை வைத்துக்கொண்டு, என்ன நோக்கத்துக்காக வழங்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற வாய்ப்பேயில்லை. எனவே ஆடுகள் வழங்கப்படுவதற்கு முன்பாக நிறைய கால்நடை மருத்துவர்களை பணிக்கு சேர்த்து, ஏராளமான புதிய மருத்துவ நிலையங்களை அரசு உருவாக்கித்தர வேண்டும். சில நூறு கோடிகளை, திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இதற்காகவே செலவழித்தாக வேண்டும்.

“ஆடுவளர்ப்பினை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளில் செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்காக ஆடுகள் விடுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். அரசு ஏழைகளுக்கு ஆடுகள் வழங்குமானால், அதை நிச்சயம் ஆதரிக்கிறேன். கிராமப் பொருளாதாரம் வலுப்படும் என்றும் நம்புகிறேன். அதே நேரம் மிகத்துல்லியமான பெரியளவிலான திட்டம் தீட்டப்படாமல் இது சாத்தியப்படாது” என்கிறார் தேசிய வேளாண்மை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரிகேடியர் ரகுநாதன்.

மக்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் இதையெல்லாம் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை. எது எப்படியாயினும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்த கதையாக இந்த வாக்குறுதி மாறிவிடக்கூடாது. வாக்குறுதி கொடுத்த கட்சி ஆட்சிக்கு வருமேயானால், இத்திட்டத்தை நிஜமாகவே பயனுள்ள திட்டமாய் உருவாக்கிட முதல் நாளிலிருந்தே வாக்காளர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


ஆடு வளர்ப்பு – சில டிப்ஸ்

• தினமும் காலையில் எட்டரை, ஒன்பது மணியளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, அவை தங்கியிருந்த கொட்டகைகளை துப்புரவாக சுத்தம் செய்து வைத்து விட வேண்டும்.

• பின்னர் பத்தரை, பதினோரு மணியளவில் அடர்தீவனம் வழங்கவேண்டும். கடலைப்புண்ணாக்கு ஊறவைத்த நீரை குடிக்க தரவேண்டும்.

• உச்சி வெயில் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. பிற்பகல் மூன்று, மூன்றரை மணியளவில் தொடங்கி ஐந்து, ஐந்தரை வரை மேய்ச்சலுக்கு மீண்டும் அனுப்பலாம்.

• ஆடு பட்டியில் அடைந்திருக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனியாக பசுந்தீவனங்களை துண்டு துண்டாக்கி கொடுக்கலாம்.

• மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் தொடர்ச்சியாக செய்துவரவேண்டும்.

• மருத்துவரின் ஆலோசனைபடி, தகுந்த இடைவெளிகளில் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும்.


ஆடு வளர்ப்பு தொடர்பாக தமிழில் விலாவரியாக வாசிக்க நிறைய புத்தகங்கள் கிடைக்கிறது.

ஆட்டையே வாழ்க்கையில் நேரில் பார்த்திராத ஒருவர்கூட ஆடுவளர்ப்பில் கில்லாடியாக ஆகிவிடக்கூடிய அளவுக்கு அ முதல் ஃ வரை சொல்லிக்கொடுக்கிறது ஊரோடு வீரக்குமார் எழுதிய ‘ஆடு வளர்ப்பு – லாபம் நிரந்தரம்’ புத்தகம்.

எத்தனை வகை ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம், ஆட்டுக்கு என்ன நோய் வரும், என்ன மருந்து மாதிரியான அடிப்படைத் தகவல்களை கொண்ட நூல் இது. வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04

(நன்றி : புதிய தலைமுறை)

3 மே, 2011

வானம்படத்தைப் பற்றி பெரியதாக சொல்ல எதுவுமில்லை. ‘வேதம்’ என்கிற அற்புதமான தெலுங்கு காவியத்தை, முடிந்துப்போன தம்மை காலில் போட்டு நசுக்குவது மாதிரி நசுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக பரத் கதாபாத்திரம் மகா அகோரம். வேகாவின் மூக்குத்தி கொடூரம். சிம்பு அண்டா சைஸ் சொம்பு. பிரகாஷ்ராஜின் அழுகையை கண்டிருந்தால், நாயகன் கமல் தூக்குமாட்டி செத்துவிடுவார். சோனியா அகர்வாலின் முதல் குளோசப்பை கண்ட குழந்தைகளுக்கு இரவுக்காய்ச்சல் வரும் (பன்மடங்கு உப்பிப்போய் ‘பத்து பத்து’ பிட்டுபட சோனா மாதிரி இருக்கிறார்). ‘எவண்டி உன்னை பெத்தான்?’ பாட்டை பார்ப்பதற்கு/கேட்பதற்கு பதில், பட்டையடித்து மட்டையாகலாம்.

இன்னும் ஆயிரம் அடாசுகள் படத்தில் இருந்தாலும், இது ஒரு முக்கியமான படம். இந்துத்துவ தீவிரவாதத்தையும், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் ஒரே தட்டில் நிறுத்திவைத்து தமிழில் நேர்மையாக பேசியிருக்கும் முதல் படம். இதற்காகவே இந்த திராபையான படத்தை மெச்ச வேண்டியிருக்கிறது. ஆதரிக்க வேண்டியிருக்கிறது.

மும்பை பாணியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், தமிழகத்தில் என்று நடைபெற ஆரம்பித்ததோ, அன்று சொருகப்பட்டது நம் மத நல்லிணக்கத்துக்கான ஆப்பு. இதுபோன்ற வெறிபிடித்த ஊர்வலங்களின் இருண்ட மறுபக்கத்தை ஒரு சிறுகாட்சி மூலமாக சிறப்பாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மதபோதை இருக்கும்பட்சத்தில் அது எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுமென்று பிரகாஷ்ராஜின் தம்பியை தீவிரவாதத்திற்கு தள்ளிவிடும் அந்த இந்து எஸ்.பி கதாபாத்திரம் மூலமாக கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.

பலமுறை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய விஷயம்தான். இஸ்லாமியன் இங்கே இந்திய நாட்டுப்பற்றை நெற்றியில் பெரிய ஸ்டிக்கராக ஒட்டிவைத்துக் கொண்டே திரிய வேண்டியிருக்கிறது. நாட்டுப்பற்றே சற்றுமில்லாத, இந்த நாடு மீது எந்த மரியாதையுமில்லாத என்னைப் போன்றவர்கள், இந்துவாக பிறந்து தொலைத்துவிட்டதால் எந்தப் பிரச்சினையுமின்றி வாழமுடிகிறது. இந்துவாக பிறந்துவிட்டவன் இந்த நாட்டை, தலைவர்களை, அரசியலை என்னமாதிரியாக வேண்டுமானாலும் பேசமுடியும். ஓர் இஸ்லாமியன் கொஞ்சம் சுருதி தவறி பேசிவிட்டால் போதும். அவன் அல்-உம்மாவா, சிமியா என்று ஆராயத் தொடங்கிவிடுகிறோம்.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போதும் கூட, “துலுக்கனுங்க பாகிஸ்தானைதான் சப்போர்ட் பண்ணுவானுங்க” என்று சிண்டு, வண்டுகள்கூட அனாயசமாக ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடித்துவிடும் வகையில் இந்திய பொதுப்புத்தி ஆழமாக கட்டமைக்கப்பட்டு விட்டிருக்கிறது. “நாங்கள் இந்தியர்கள்” என்று சொல்லிக்கொண்டே, இஸ்லாமியர்கள் சீதை மாதிரி சிதையில் இறங்கி தங்களது நாட்டுப்பற்று கற்பினை நிரூபித்தாக வேண்டுமா என்று தெரியவில்லை.

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் மூலமாக மிகச்சரியாக இந்த அசாதாரண நிலையினை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் க்ரீஷ். இந்த வாரம் யாருக்கு பூங்கொத்து தருவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஞாநியிடமிருந்து பிடுங்கி, வானம் பட இயக்குனருக்கு கொடுத்துவிடலாம்.

2 மே, 2011

’சுஜாதா விருதுகள் 2011’ - விருது வழங்கும் விழா

தோழர்களே!

இந்த விருது அறிவிக்கும்போது விளையாட்டுத்தனமாகவே இருந்தேன். இது எவ்வளவு முக்கியமான அங்கீகாரம் என்பதை எதிர்பாராத இடங்களில்/மனிதர்கள் மூலமாக வந்து விழுந்த பாராட்டுச் சுனாமியின் பின்னரே அறியமுடிகிறது. நான் பணிபுரியும் பத்திரிகை, என்னுடைய போட்டோவெல்லாம் போட்டு வாழ்த்தியிருக்கிறது. இவ்விருதினை வழங்கும் அமைப்பினரின் செயல்பாடுகளின் மூலமாக உருவாகியிருக்கும் கவுரவம் இது.

விருது கிடைத்துவிட்டது என்பதற்காக நண்பர்கள் ‘பார்ட்டி’ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பட்டியல் தயார் செய்து, பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று (டாஸ்மாக் விலை நிலவரப்படி) மதிப்பீடு போட்டுப் பார்த்தேன். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது. கிடைக்கப் போகும் பணத்தை விட இது பத்து மடங்கு அதிகம் என்பதால், இப்போதைக்கு ‘பார்ட்டி’ விஷயத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவருவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. அதுவுமில்லாமல் இன்னமும் பத்து நாள் கழித்து, மே 13 அன்று தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் , இந்த எளிய தொண்டனின் சார்பாக தமிழ்நாட்டுக்கே பார்ட்டி தரவிருக்கிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்திய/வாழ்த்தவிருக்கும் பெருந்தன்மையான உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி. எல்லோரும் அவரவர் அன்பை கடனாகவும் / ‘மொய்’யாகவும் அளித்து உதவியிருக்கிறீர்கள். வாய்ப்பு வரும்போது அசலும், வட்டியுமாக நிச்சயம் திருப்பி செலுத்துவேன்.