17 செப்டம்பர், 2010

காதுல பூ!

உலகிலேயே இரட்டையர் குறித்த அதிக மூடநம்பிக்கைகளை மக்களிடையே பரப்பும் சாதனம் எதுவென்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு 'தமிழ் சினிமா'வென்று சத்தமாக சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு 'டபுள் ஆக்‌ஷன்' படங்களை சக்கையாக எடுத்துக் குவித்துத் தள்ளியிருக்கிறார்கள்.

உலகளவில் சினிமாவின் சொர்க்கமான ஹாலிவுட்டில் இரட்டைவேடப் படங்கள் மிகவும் அரிது. ஏனெனில் அங்கெல்லாம் கதையில் 'லாஜிக்' இல்லையென்றால் ரசிகர்கள் கடித்துக் குதறிவிடுவார்கள். நாம் தான் காலம் காலமாக காதில் பூ வைத்த, திரைரசிகப் பாரம்பரியத்தில் வந்தவர்களாயிற்றே? திரையில் எவ்வளவு டூப்பு அடிக்கப்பட்டாலும் கைவலிக்கத் தட்டுகிறோம். வாய்வலிக்க விசிலுகிறோம்.

ஹாலிவுட்டில் 70 வருடங்களுக்கு முன்பாக Man in the iron mask என்றொரு இரட்டைவேடப் படம் வந்து பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அந்தக் காலத்து தமிழ் இயக்குனர் யாரோ தெரியாத்தனமாக பார்த்துத் தொலைத்திருக்க வேண்டும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தது சனி.

தமிழின் முதல் இரட்டைவேடப் படமான 'உத்தம புத்திரன்' 1940ல், பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்து வெளிவந்து சக்கைப்போடு போட்டது.  இதே படம் பிற்பாடு சிவாஜிகணேசனை நாயகனாக்கி, இதே கதையோடு வெளிவந்து மீண்டும் சக்கைப்போடு போட்டது. சக்கைப்போடு போடு ராஜாவென்று அதே உத்தமபுத்திரனின் கதையை மீண்டும் மீண்டும் உல்டா அடித்து தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டைச் செஞ்சுரி அடித்திருக்கும். நேற்றைய இம்சை அரசன் 23வது புலிகேசி கூட உத்தமபுத்திரனின் கதையை உருவியது தானென்பது உற்றுப் பார்க்காமலேயே தெரியும்.

எத்தனை தடவை ஒரே கதையை வேறு வேறு நடிகர்களை வைத்து எடுத்தாலும், திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்குமளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட ரசனை நம்முடையதாகிப் போனது. இரட்டையர்களாக பிறக்கும் அண்ணன் தம்பிகள் பிரிந்து விடுவார்கள். ஒருவன் நல்லவனாக வளர்வான். மற்றொருவன் கெட்டவனாக வளர்வான். இருவரும் மோதிக் கொள்வார்கள். கடைசியில் கெட்டவன் திருந்தி நல்லவனாகி, நல்லவனோடு சேர்ந்து இன்னொரு கெட்டவனை அழிப்பான். தமிழில் வெளிவரும் பெரும்பாலான டபுள் ஆக்‌ஷன் படங்களின் டெம்ப்ளேட் கதை இதுதான். இதே பூவைதான் இயக்குனர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நம் காதுகளில் சொருகி வருகிறார்கள். சொருகிறதுதான் சொருகிறார்கள். ஒரு முறை ரோஜா, ஒரு முறை மல்லி என்று மாற்றி மாற்றியாவது சொருகித் தொலைக்கக்கூடாதா? எப்பவுமே சாமந்திப்பூதானா?

இந்த இரட்டைவேடப் படங்களில் 'வித்தியாசம்' என்ற பெயரில் அடிக்கப்படும் கூத்துகள் அளவில்லாதவை. குறிப்பாக அந்தக்கால எம்.ஜி.ஆர். படங்களிலும், இந்தக் காலத்து அர்ஜூன், சரத்குமார் படங்களிலும் இந்த வித்தியாசக் கொடுமையை நாம் உணரலாம். ஒரு நாயகனுக்கும், இன்னொரு நாயகனுக்கும் வித்தியாசப்படுத்திக் காட்ட மச்சம், குறுந்தாடி, கண்ணாடி என்று மொக்கையாகவே யோசிக்கிறார்கள் நம் இயக்குனர்கள். உதாரணத்துக்கு, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அண்ணன் எம்.ஜி.ஆருக்கு குறுந்தாடி இருக்கும். தம்பி நீட்டாக ஷேவ் செய்திருப்பார். ரசிகர்கள் யார் எந்த எம்.ஜி.ஆர். என்று குழம்பிப் போய்விடுவார்களாம். எனவே அப்படத்தின் இயக்குனரான எம்.ஜி.ஆர் வித்தியாசமாக சிந்தித்து இப்படியொரு மாறுவேட ஏற்பாட்டை ரசிகர்களின் வசதிக்காக செய்திருந்தார். அய்யோ. அய்யோ.

இரட்டை வேடம் என்பதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டவர்களும் ஒரு சிலர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக கமலஹாசனின் சில படங்களை சொல்லலாம். இவர் இருவேடம் என்பதை தாண்டி மூன்று, நான்கு என அதிகரித்துக் கொண்டே சென்று பத்து வேடங்கள் வரை நடித்தவர். உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்கள் என்பது இம்மாதிரியான படங்களில் பெரும்பாலும் ஒன்லைனர். இதுபோன்ற படங்களில் இருவேடங்கள் என்பது தவிர்க்கவே இயலாதது. கரு. பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தில் ஸ்னேகா இரட்டை வேடத்தில் தோன்றுவதுதான் கதையின் அடிப்படையே.

ஆனால் சும்மா 'கெத்'துக்காகவும், செண்டிமெண்டுக்காகவும் இருவேடங்கள் என்பதுதான் அதிகம். தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்சியல் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் அடிக்கடி இரட்டைவேடப் படங்களை எடுப்பதுண்டு. இவர் இரட்டைவேட படத்தை தமக்காக இயக்கினால், அது நிச்சயம் ஹிட்டென்று சரத்குமார், அஜித்குமார் போன்ற நடிகர்கள் நம்புகிறார்கள்.

ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோக்களுக்கு வணிக அடிப்படையில் இரட்டைவேடம் அத்தியாவசியமாகிறது. ஒவ்வொரு படத்துக்கும் இடையே நீண்டகால இடைவெளி கொடுப்பதால், ரசிகர்களுக்கு ஒரே ஒரு தலைவர் திரையில் போதவில்லை என்பது இதற்கான அடிப்படைக் காரணம். படம் முழுவதுமே தலைவர் வந்தாகவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். வெளிவர இருக்கும் எந்திரன் திரைப்படத்தில் நூற்றுக்கணக்கான ரஜினிகள் வருகிறார்கள். கொண்டாட்டத்தின் அளவை சொல்லவும் வேண்டுமா?

மாஸ் ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் நடித்தால்தான் ஹிட் கொடுக்க முடியுமென்ற செண்டிமெண்டும் சிலர் விஷயத்தில் உடைந்ததுண்டு. கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படி வளர்ந்து நிற்கும் விஜய் முதன்முதலாக இரட்டைவேடத்தில் (அதே கதைதான். ஒருவன் நல்லவன். மற்றொருவன் கெட்டவன்) நடித்த அழகிய தமிழ்மகன் தோல்வியடைந்தது. மீண்டும் இந்த விஷப்பரிட்சையை எழுதிப்பார்க்க விஜய் தயாராக இருப்பதாக தெரியவில்லை.

எப்படியோ கொஞ்சகாலமாக இரட்டைவேட மோகம் நடிகர்களிடமும், ரசிகர்களிடமும் குறைந்துவருவதாக தெரிகிறது. கடைசியாக நீங்கள் பார்த்த இரட்டைவேடப் படம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் இந்த ட்ரெண்ட் விளங்கும். ஆனால் அதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட (பெரும்பாலும் இரட்டை) கெட்டப்புகளில் நடித்து, நம் நடிகர்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். ஏதாவது லேட்டஸ்ட் ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டால், அதுபோன்ற கெட்டப்புகளில் தங்களுக்கு வேடம் அமைக்குமாறு இயக்குனரை வற்புறுத்துகிறார்கள்.

சரி, விடுங்கள். நரி இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? நம் மீது விழுந்து கடித்து குதறாதவரைக்கும் சரிதான். நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்த அபத்தமான இரட்டைவேடப் படங்களை கொஞ்சம் கொசுவர்த்தி சுழற்றி (அதாவது ஃப்ளாஷ்பேக் ஓபனிங்) யோசித்துப் பாருங்கள். இன்றையப் பொழுது இனிமையாய் மலரும்.

14 செப்டம்பர், 2010

டாஸ்மாக் இல்லாத ஊர்!‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர்.

நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்?

அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும்.

சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழும் எல்லோருமே சாதி, மத பேதமற்று, ஆண் பெண் சமத்துவத்தோடு வாழவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு போராடிய சமூகப் போராளி அவர். அவருடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டே ‘பெரியார் சமத்துவபுரம்’ என்ற பெயரில் சிற்றூர்களை, தமிழகஅரசு ஆங்காங்கே சில வருடங்களாக உருவாக்கி வருகிறது. ஆனால் அரசு இத்திட்டத்தை சிந்திப்பதற்கு முன்பாகவே, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகவே இந்த ஊர் சமத்துவபுரமாகவே செயல்பட்டு வருகிறது.

மது மட்டுமல்ல. சிகரெட், பான்பராக் என்று லாகிரி வஸ்துகள் எதையுமே பழக்கப்படுத்திக் கொள்ளாமல் வாழ்கிறார்கள். மக்களுக்கு எந்தப் பழக்கமும் இல்லை என்பதால் கடைகளில் இந்த சமாச்சாரங்கள் விற்கப்படுவதில்லை. தமிழக அரசின் சுகாதாரத்துறை இந்த கிராமத்தை ‘புகையில்லா கிராமம்’ என்று அறிவித்திருக்கிறது.

அகிலம் ஆளும் அங்காளபரமேஸ்வரியின் அருள் வேண்டி செஞ்சிக்கு அருகில் இருக்கும் மேல்மலையனூர் சுற்று வட்டாரமே செவ்வாடை அணிந்திருக்கிறது. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மட்டுமே இருக்கும் இந்த ஊர் மட்டுமே கருஞ்சட்டை அணிந்து, கடவுள் மறுப்பு கூறி, கம்பீரமாக தன்னை பகுத்தறிவுக் கிராமமாக பறைசாற்றி வருகிறது.

செக்கடிக்குப்பம்!

“எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும் ஒரு காலத்தில் இருந்தது. ஊரில் ஆறு ஓடாத குறையை சாராய ஆறு நிவர்த்தி செய்தது. மது மயக்கத்தில் எங்கள் சமூகம் அழிந்துகொண்டு வருவதைக் கண்டு மனம் வெறுத்துப் போனோம். தொடர்ச்சியான பிரச்சாரம் மூலமாகவே மனமாற்றத்தைக் கொண்டுவந்தோம். போதைப் பழக்கத்தால் உயிரிழந்த எங்கள் ஊர்க்காரர்களின் சோகக்கதைகளை இளைஞர்களுக்கு பரப்பினோம். மது, சிகரெட் பழக்கங்கள் உடல்நலத்தை கெடுப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். எங்கள் இளைஞர்கள் இப்போது பத்தரைமாற்றுத் தங்கங்கள்” என்கிறார் ஊர்ப்பெரியவரான மா. அர்ச்சுனன்.

விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டவர்கள் செக்கடிக்குப்பத்துக் காரர்கள். அறுபதுகளில் மேல்மலையனூருக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய பெரியார் வந்தார். செஞ்சிக்கு அண்ணா வந்தார். இவர்களது சிந்தனைகளை மேடைவாயிலாக உணர்ந்த ஒரு இளைஞர் கூட்டம், தங்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்பிக் கொண்டது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, தமிழுணர்வுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் இவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு பெரிய வரவேற்பில்லை. “புரோகிதர் இல்லாமல் சீர்த்திருத்த திருமணமா? மணமக்கள் கடவுள் அருள் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா?” என்று அவநம்பிக்கையோடுதான் பார்த்தார்கள்.

அவர்களது நம்பிக்கையை உடைக்க அர்ச்சுனன் தன் வாழ்வையே பணயம் வைத்து ஜெயித்துக் காட்டினார். மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. பீடைமாதம் என்று வழங்கப்படுகிற இம்மாதத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகள் அமங்கலமாகும் என்பது காலம் காலமாக நிலவி வருகிற வாடிக்கை.

1968, மார்கழி மாதத்தில் சீர்த்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார் அர்ச்சுனன். சீரும், சிறப்புமாக வாழ்ந்து திருமணச் சடங்குகளில் இல்லை வாழ்க்கையின் சிறப்பு. சேர்ந்து வாழ்வோரின் மனங்களில்தான் அது இருக்கிறது என்று நிரூபித்தார். இவர் ‘பிள்ளையார் சுழி’ போட்டு ஆரம்பித்து வைக்க, அடுத்தடுத்து சீர்த்திருத்தம் தொடர்ந்தது.

“ஆரம்பக் காலங்களில் மக்களின் மனதை மாற்றுவதற்கு நிரம்ப சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கலைவடிவங்கள் மூலமாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை கவர்ந்தோம். அண்ணா எழுதிய நாடகங்களை சுற்றுவட்டார கிராமங்களில் நடத்திக் காட்டினோம். திருவண்ணாமலை வட்டாரங்களில் நாங்கள் ரொம்ப பிரபலம். ‘பகுத்தறிவுப் பஜனை’ என்கிற பெயரில் மார்கழி பஜனை பாணியிலேயே, அதே ராகத்தில் கடவுள் மறுப்பு பஜனைகளை செய்வோம். கருப்புச்சட்டை அணிந்து தாப்ளாக்கட்டையோடு தெருத்தெருவாக நாங்கள் பஜனை செய்வதைப் பார்த்து, பக்தர்கள் சிலரும், எங்களை பக்தர்கள் என்று நினைத்துக்கொண்டு பஜனையில் கலந்துகொள்வார்கள். பாடப்பாட வார்த்தைகளின் பொருளுணர்ந்து பதறுவார்கள்” என்று சிரிக்கிறார் பகுத்தறிவுப் பாடகரான காத்தவராயன். இந்த வயதிலும் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்பது இல்லையே” என்று ஏழுக்கட்டைக் குரலில் அசத்தலாகப் பாடுகிறார்.

இப்போது இங்கே நடக்கும் திருமணங்கள் அனைத்துமே சீர்த்திருத்த, மத-சாதி மறுப்புத் திருமணங்கள்தான். “இருவரும் நண்பர்களாக வாழ்கிறோம்” என்று மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை எடுத்துக் காட்டுவதாகச் சொல்லி தாலியை புறக்கணிக்கிறார்கள். வரதட்சிணை? கொன்றுவிடுவார்கள்!

திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஊருக்குப் பொதுவாக ‘இராவணே அசுரன்’ திறந்தவெளி நினைவரங்கம் கட்டியிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அவரவர் இல்ல நிகழ்ச்சிகளை இங்கே நடத்திக் கொள்ளலாம். கட்டணம் எதுவுமில்லை.

ஊரில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட மதம்சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. இந்த கொண்டாட்டத்துக்கு மாற்று ஏற்பாடாக சித்திரை மாதத்தில் ‘தமிழ் மன்னர் விழா’, ‘தமிழ் திருநாள்’ மட்டும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் தமிழகத்தின் கிராமந்தோறும் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றப்படுகிறது இல்லையா? வருடம் முழுக்க எங்கள் மக்கள் கூழ்தான் குடிக்கிறார்கள் என்றுகூறி தமிழ் மன்னர் விழாவில் இட்லி, தோசை, கேசரி, பொங்கல் என்று ‘வெரைட்டியாக’ வழங்கி அசத்துகிறார்கள்.

கிராமத் திருவிழாக்களில் ‘சாமி ஊர்வலம்’ நடக்கும். தமிழ் மன்னர் விழாவில் இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகிய பண்டையத் தமிழ் மன்னர்களின் வேடம் அணிந்து இவர்கள் ஊர்வலம் நடத்துகிறார்கள். சிலம்பம், இசை, பகுத்தறிவுப் பாடல்கள், சமூக நாடகங்கள் என்று தமிழ் மன்னர் விழா களைகட்டும். மதப்பண்டிகைகள் தரக்கூடிய குதூகல உணர்வை, பகுத்தறிவு நிகழ்வுகளிலும் கொண்டுவந்து விடுவதால் மக்களுக்கு எதையும் இழந்த உணர்வு இல்லவேயில்லை. பட்டாசுக்கு மட்டும் தடா. அது சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு என்பதால். சுற்றுப்புற ஊர்கள் தீபாவளியைக் கொண்டாடும்போது இவர்கள் மட்டும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று நடத்துகிறார்கள்.

“பொதுவாக மரண ஊர்வலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘பறை’ அடிப்பது வழக்கம். சாதியச் சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்பதால் எங்கள் ஊர் மரண ஊர்வலங்களில் இங்கே ‘பறை’ அடிப்பதில்லை” என்றார் மதியழகன் என்கிற ஊர்க்காரர்.

சரி, இவர்கள் எந்த சமரசமுமின்றி பகுத்தறிவோடு இருக்கிறார்கள். ஆதலால் விளைந்த பயனென்ன?

இந்த ஊர்க்காரரான பேராசிரியர் அ.பெரியார் சொல்கிறார். இவர் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

“முதல் பயன் ஆண்-பெண் சமத்துவம். எங்கள் ஊரில் பெண்களுக்கு முழுமையான சமத்துவம் உண்டு. ஊரில் எல்லோருமே தற்காப்புக்கலையாக சிலம்பம் கற்றுக் கொள்கிறோம். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களும் இங்குண்டு. இக்கலையை கூட பால்பேதமின்றி பெண் குழந்தைகளுக்கும் முழுமையாக சொல்லித்தரப் படுகிறது.

எல்லோருமே பகுத்தறிவாளர்களாக மாறிவிட்ட எங்கள் ஊரில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லோருக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம். தமிழுணர்வும் அதிகம். ஊர்க்காரர்களாக சேர்ந்து தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று நட்த்துகிறோம். அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை விட தாய்த்தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம்.

பிறப்பு மட்டுமல்ல, இறப்பிலும் எங்களுக்கு சாதி மதமில்லை. அறியாமையையும், மூடநம்பிக்கையையும் முற்றிலுமாக ஒழித்திருக்கிறோம் என்று சாதகமாக ஏராளமான விஷயங்கள் பல இருந்தாலும் கூட பகுத்தறிவால் எங்கள் ஊருக்கு விளைந்த முக்கியமான நன்மைகளாக சமத்துவத்தையும், கல்வி விழிப்புணர்வையும் நினைக்கிறேன்” என்றார்.

ஊரில் அடுத்து ஆச்சரியப்படுத்தும் விஷயம் ‘தமிழ்’ பெயர்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு 95 சதவிகிதம் தமிழ்ப் பெயர் சுமந்திருக்கிறார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேருக்கும் கூட தேசியத் தலைவர்களின் பெயர்களாகவே இருக்கின்றன. கப்பலோட்டிய தமிழர் என்பது இளைஞர் ஒருவரின் பெயர். சமீபத்தில் பிறந்த பெண்குழந்தை ஒன்றுக்கு செஞ்சோலை என்றுகூட பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

நபர்களுக்கு மட்டுமல்ல. சுய உதவிக்குழுக்களுக்கும் கூட தமிழ்ப்பெயர்கள்தான். இராவணன், கும்பகர்ணன் ஆகியவை ஆண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு சூட்டியிருக்கும் பெயர். இசைத்தமிழ், விண்ணில் தமிழோசை, சுயமரியாதை ஆகிய பெயர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு. ‘பகுத்தறிவு என்றால் என்ன?’ என்பது இவர்களது விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்.

“பகுத்தறிவு எல்லோருக்குமே இருப்பதால் உள்ளாட்சி திறந்தமனதோடு சிறப்பாக நடைபெறுகிறது. ‘நல்ல ஊர்’ என்று அரசு வட்டாரத்தில் பெயர் எடுத்திருப்பதால் அதிகாரிகளோடும், அரசோடும் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லாமே எங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது” என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவரான வீரமணி.

இப்படிப்பட்ட ஊர் கடந்த ஒன்றரை ஆண்டாக சோகத்தில் மூழ்கி இருக்கிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் துக்கத்தை பறைசாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டுகளில் தமிழர்கள் வெடித்துச் சிதறியது இவர்களது மனங்களில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. தமிழ் மன்னர் விழா, தமிழர் திருநாள் என்று ஊர் விசேஷங்கள் எதுவும் நடத்தும் மனநிலையில் இவர்கள் இல்லை.

“விரைவில் எல்லாம் சரியாகும். நாங்களும் எங்கள் விழாக்களை நடத்துவோம் என்கிற நம்பிக்கையில் காலம் கழிகிறது!” என்கிறார்கள் இந்த கருஞ்சட்டை மனிதர்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

3 செப்டம்பர், 2010

டான் சீனு


டைட்டிலில் ரவிதேஜாவுக்கு மாஸ் ராஜா என்று தப்பாக பட்டம் தருகிறார்கள். அவர் மாஸ் மகாராஜா. ஜெமினி டிவியில் பார்க்கும் பழைய ரவிதேஜா படங்கள் ‘ஆவ்’ ரகம். அவரது முகம், நம்மூர் சத்யராஜூக்கு ஒப்பான கவர்ச்சி கொண்டது. முகலட்சணம் சுமார்தானென்றாலும் தேஜாவின் பரபரவென்ற உடல்மொழி, ‘கோயிந்தா’ பாணி டான்ஸ், நான்ஸ்டாப் காமெடியென்று, பார்க்க பார்க்க பிடிக்கும் ரகம் இவர்.

மசாலா என்ற பெயரில் தமிழில் சுவாமிஸ் கஃபே மசால்தோசை மசாலாவாக இட்டுக் கொண்டிருக்க, தெலுங்கிலோ செட்டிநாட்டு நாட்டுக்கோழி மசாலாவை, காரம் தூக்கலாக வறுத்துத் தள்ளுகிறார்கள். செண்டிமெண்ட், லாஜிக், கலைவடிவம், இத்யாதி, இத்யாதியெல்லாம் யாருக்கு வேண்டும்? படத்தை சுட்டோமா, பரபரவென்று மொளகா பஜ்ஜி மாதிரி விற்றுத் தீர்த்தோமாவென்று இருக்கிறது டோலிவுட்.

கதை ரொம்ப சிம்பிள். சிறுவயதில் அமிதாப்பின் டான் படத்தை முப்பது முறைக்கு மேல் பார்க்கிறான் சீனு. தானும் டான் ஆகவேண்டும் என்ற ஆவலில் டான் சீனுவாக மாறுகிறான். பெயர் மாற்றம் சுலபமானதே தவிர, ஹைதராபாத்தில் டான் ஆவது அவ்வளவு சுலபமல்ல. ஏற்கனவே ஏட்டிக்குப் போட்டியாக கவுண்டமணி – செந்தில் மாதிரி இரண்டு டான்கள். அந்த இரண்டு டான்களுக்கும், துபாயில் இருந்து ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்கும் வி.கே.ராமசாமி பாணியில் இன்னொரு இண்டர்நேஷனல் டான் உண்டு. காட்சிக்கு காட்சி சரவெடி சிரிப்போடு அதிரடி க்ளைமேக்ஸ். மேட்டர் ஃபினிஷ்ட். இண்டர்வெல் ப்ளாக்கில் ஆரம்பிக்கும் குட்டி குட்டி சஸ்பென்ஸ்கள், இரண்டாம் பாதி முழுக்க ஆங்காங்கே தொடர்வது சுவாரஸ்யம்.

ரவிதேஜாவுக்கு ஒரு ஹீரோயின் என்றாலே உரசி உரசி தேய்த்துவிடுவார். ஒன்றுக்கு ரெண்டு. புகுந்து புகுந்து ஃபுட்பால் விளையாடுகிறார். ஷ்ரேயாவையே ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு காட்டியிருக்கும் கேமிராமேனை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கலாம். ஜெர்மனி குளிரில் கூட அம்மணிக்கு வேர்க்கும் போல. ஹாயாக திரிகிறார். இன்னொரு ஹீரோயின் அஞ்சனா சுஹானி. சாதா காட்சிகளில் பார்ப்பதற்கு குத்துவிளக்கு மாதிரி இருப்பவர், பாடல் காட்சிகளில் நைட் லேம்ப் ஆகிவிடுகிறார்.

இரட்டை டான்களான ஷாயாஜியும், ஸ்ரீஹரியும் சீரியஸாக நடித்தாலும், திரைக்கதையமைப்பில் கோமாளிகள் தானென்பதால் ‘த்ரில்லிங்’ குறைவு. இவர்களை விட மெகா கோமாளி மெயின் வில்லன். எனவே க்ளைமேக்ஸில் கிடைக்க வேண்டிய ஆக்‌ஷன் டேஸ்ட் டோட்டலாக மிஸ்ஸிங். ஹீரோ, வில்லன்களே காமெடியன்கள் என்றால் காமெடியன்கள் படுத்தும் பாட்டை வேறு புதுசாக சொல்லவேண்டுமா? பிரம்மானந்தம் தலைமையில் ஒன்றுக்கு மூன்று பபூன்கள். வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைவதைத் தவிர வேறுவழியில்லை.

ஏன் தான் இதுமாதிரி சப்ஜெக்ட்கள் நம் இளையதளபதிக்கும், அல்டிமேட் ஸ்டாருக்கும் மாட்ட மாட்டேங்கிறதோ என்று ஏக்கப் பெருமூச்சுதான் விடமுடிகிறது.

2 செப்டம்பர், 2010

கவிதை நடிகன்!


இளம் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் ’நகரத்திற்கு வெளியே’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சென்னையில் நடந்த இலக்கிய விமர்சன கூட்டம் அது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். டிஸ்கவரி புக் பேலஸ் என்ற புத்தகக்கடையில் நடந்து கொண்டிருந்தது. நூல் விமர்சனத்தை கவிஞர்கள் சிலர் நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலக்கிய ஆர்வலர்கள் கூடிய இருந்த அந்த கூட்டத்துக்கு இடையே திடீரென ஒரு கோமாளி “கருப்பூ.. சிவப்பூ” என்று உரத்தக் சிரிப்புக்கிடையே சொல்லிக்கொண்டே நுழைந்தார். கையில் வண்ண வண்ண பலூன்கள். முகம் முழுக்க வெள்ளைப்பூச்சு அரிதாரம். கருப்பு மையில் பெரிய மீசை. பெரிய சிகப்பு மூக்கு.

பார்வையாளர்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சட்டென்று விமர்சன நிகழ்விடத்தைக் கைப்பற்றிய அக்கோமாளி, கவிஞர் ரமேஷ் பிரேதனின் ‘பலூன் வியாபாரி’ என்ற கவிதையை உரக்க வாசித்தவாறே முன்வரிசையில் இருந்தவர்களுக்கு பலூனை விற்க ஆரம்பித்தார். கவிதைகளின் வரிகளுக்கேற்ப முகபாவனைகளும், உடல்மொழியும் சொல்லுக்கு சொல் மாறிக்கொண்டே இருந்தது. சீரியஸ் இலக்கியத்தை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு, ‘சிரி’யஸ்ஸான நிகழ்வு ஒரு விதூஷகனால் நிகழ்த்தப்பட்டதில் இரட்டை மகிழ்ச்சி.

பலூன் வியாபாரி கவிதை முடிந்ததுமே, ஆன்-த-ஸ்பாட்டில் கோமாளி வில்லனாக மாறினார். பார்வையாளர்கள் எதிரிலேயே கருப்பு மையை முகம் முழுக்க பூசினார். இப்போது அவரது கண்கள் கலங்கி, சிவந்து, முகம் விகாரமடைந்து அச்சமூட்டும் தோற்றம் நிலை கொண்டது. ரமேஷ் பிரேதனின் ‘காந்தியை கொன்றது தவறுதான்!’ கவிதையை வாசிக்கத் தொடங்கினார். கவிதையில் வாசகர்களுக்கு வைக்கப்படும் கேள்விகளை, பார்வையாளர்களை நோக்கி இவர் கேட்கத் தொடங்கினார். அரங்கில் இங்குமங்குமாக குதியாட்டம் போட்டபடி ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டே போனார். திடீரென துப்பாக்கியை நீட்டுவதைப் போல கையை நீட்டி ‘டுமீல்’லென்று சத்தமிட்டபடியே பிணமாக விழுந்தார். பார்வையாளர் மத்தியில் புத்தகத்தின் பக்கங்களை லேசாக புரட்டினாலும் ஒலி கேட்குமளவுக்கு நிசப்தம்.

அடுத்து சி.மோகன் எழுதிய ஒரு தலைப்பில்லாத கவிதை. ‘இன்று எனக்கு தூக்கம் வருகிறது’ இம்முறை மேக்கப்போடு, உடையும் மாறுகிறது. எல்லாமே பார்வையாளர்கள் கண்ணெதிரிலேயே. முகம் முழுக்க சிகப்பு மை. கருப்பு பனியனை துறந்து காவி பனியன். மனிதர்களின் குண இயல்புகளை வேறுபடுத்திக் காட்ட ‘வண்ணங்களை’ குறியீடாக பயன்படுத்துகிறார் அந்த நடிகர்.

பதினைந்து நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட மூன்று கவிதை நிகழ்த்துதல்கள் இவை. கவிதை நிகழ்த்துதல் என்ற சொல் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். கவியரங்கங்களில் கவிதைகள் வாசிக்கப்படுவதுதான் மரபு. நவீன இலக்கியம் வாசிப்பையும், நடிப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறது. கவிதைகள் நாட்டிய நாடகங்களாக நிகழ்த்தப்பட்ட காலம் மாறி, புதுக்கவிதைகளை ஒரு திறமையான நடிகர் மூலமாக வாசகர்களுக்கு கொண்டு செல்லும் புதிய யுக்தி இது. ஏற்கனவே ஞானக்கூத்தன் போன்ற பெரிய கவிஞர்களின் கவிதைகள் இதுபோல நடிகர்களால் நடித்துக் காட்டப்பட்டதுண்டு. பொதுவாக கவிதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவங்களின் தாக்கத்தை, இம்மாதிரியான கவிதை நிகழ்த்துதல்கள் பன்மடங்காக பெருக்குகிறது என்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.

மேற்கண்ட கவிதைகளை நிகழ்த்திய நடிகர் தம்பிச்சோழன். தருமபுரி மாவட்டம் ஊத்துப்பள்ளி என்கிற கிராமத்தில் பிறந்த இவர் கூத்துப்பட்டறை அமைப்பில் நாடகம் எழுதுவதற்கும், நடிப்பிற்கும் பயிற்சி பெற்றவர். தேசிய நாடகப்பள்ளி நடத்திய நவீன நடிப்புப் பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்.

இப்போது பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்திக் கொண்டிருக்கிறார். கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி அளிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். தற்போது நமது பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களை செயல்வழிக் கற்றலாக நடிப்பு முறையில் கற்பிப்பது குறித்த ஆய்வினை செய்துவருகிறார்.

“ஒரு நடிகன் என்பவனுக்கு சினிமாவில் மட்டும்தான் வேலை இருக்கும் என்று நமது மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு நெடுக நடிகர்கள் பிற மொழி இலக்கியங்களை தம் தாய் மொழி மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் இலக்கியத் தூதர்களாக இருந்திருக்கிறார்கள். தம் மொழி சிறப்புகளை அயல்மொழியாளர்களுக்கும் தங்கள் நடிப்பு மூலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நடிகனென்றால் சினிமாவில் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற மனோபாவத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். எனவேதான் சிறந்த கவிதைகளை மக்களிடம் நடிப்பு மூலமாக பரப்பவேண்டும் என்று திட்டமிட்டேன். மேடை வைத்து, டிக்கெட் வாங்கி பிரம்மாண்டமாக நிகழ்த்தி காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. நடிகன் என்றால் கிடைத்த எந்த ஒரு இடத்திலும் அவனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த பதினைந்து நிமிட நிகழ்வுக்கு எனக்கு ரூபாய் நூற்றி ஐம்பது மட்டுமே செலவானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சி. மோகன், அய்யப்ப மாதவன் போன்ற கவிஞர்களின் இன்னும் சில நல்ல கவிதைகளை நிகழ்த்திக் காட்ட தயாராகி வருகிறேன். நல்ல இலக்கியத்தை அறியாத சமூகம் நற்சமூகமாக மலராது. எனவேதான் நான் வாசித்து பெற்ற இன்பத்தை, நம் மக்களும் பெற வேண்டுமென்று எனக்குத் தெரிந்த நடிப்பு மூலமாக வெளிப்படுத்துகிறேன்” என்கிறார் தம்பிச்சோழன்.

காலத்துக்கேற்ப எல்லாவற்றின் வடிவங்களும் மாறித்தான் வந்திருக்கின்றன. மாற்றம் மட்டுமே என்றும் மாற்றமில்லாததாக இருக்கிறது. எதிர்காலத்தில் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை எழுதி பத்திரிகைக்கு அனுப்பாமல், ஒரு நல்ல நடிகரைப் பிடித்து மக்கள் மத்தியில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் ட்ரெண்ட் கூட வெகுவிரைவில் வரக்கூடும்.

(நன்றி : புதிய தலைமுறை)

1 செப்டம்பர், 2010

கிருஷ்ண கிருஷ்ணா! (Adults only, Strictly 18+)

பாவம். இந்த மாய கிருஷ்ணனுக்கு டிரெஸ் போட கூட வக்கில்லாத அளவுக்கு வறுமை. FULL LONG குழலையும் தொலைச்சிட்டதாலே அழுதுக்கிட்டு நிக்கிறான்!

’ஆபாசக் கடவுள்’ கிருஷ்ணருக்கு ஏதோ ஒரு ஜெயந்தி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!