31 மார்ச், 2009

3ஷா - 6லிருந்து 25 வரை...

“அய்யா.. ஜாலி.. நான் ஸ்கூலுக்கு போகப்போறேனே?”

“ஏஞ்சலுக்கே ஏஞ்சல் ட்ரெஸ்ஸா?
இதெல்லாம் ஓவரா தெரியலை?”

“கல்யாணம் தான் கட்டிக்கினு பாட்டுக்கு டேன்ஸ் ஆட
அப்பவே பிராக்டிஸ் பண்ணிட்டேன்!”

“மம்மி டாடியோட ஒரு பர்த்டே பார்ட்டி. யப்பா.. மம்மி எவ்ளோ அழகா இருக்காங்க?”

“டிஸ்னி லேண்ட் போனப்போ எடுத்தது. நீங்களே சொல்லுங்க.
நான் அழகா இருக்கேனா? இல்லேன்னா மிக்கி மவுஸ் அழகா இருக்கா?”

“கனா காணும் காலங்கள்!”

“க்க... க... க்க.... கல்லூஊர்ரீச் சாலை!”

“99ல் மிஸ் சென்னை. 2008ல் மிஸ் கோலிவுட்!”

“அப்போவெல்லாம் நான் தான் நெ.1 மாடல்!”

“சினிமாவில் கல்லக்கல் எண்ட்ரீ”

“ஒரு பங்ஷனில் ‘பகீர்' போஸ்!”

30 மார்ச், 2009

மிஸ் கிளாமர் வேர்ல்டு!


எது எதற்கு தான் கருத்துக்கணிப்புகள் நடத்துவது என்ற விவஸ்தை மேற்கத்திய பத்திரிகைகளுக்கு இல்லாமல் போய் விட்டது. நல்ல வேளையாக ஆண்கள் பத்திரிகையான FHM "உலகின் கவர்ச்சியான அழகி" என்ற பரவாயில்லை ரக தலைப்பில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.


கொஞ்ச காலம் முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தில் நடித்த மேகன் டெனிஸ் ஃபாக்ஸ் 2008ஆம் ஆண்டின் கவர்ச்சி அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உலகளவில் முதல் நூறு இடங்களில் இருக்கும் கவர்ச்சி அழகிகளையும் அந்தப் பத்திரிகை பட்டியலிட்டிருக்கிறது.

உதட்டழகால் உலகையே கிறங்கடிக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கே பண்ணிரண்டாவது இடம் தான் கிடைத்திருக்கிறது என்றால் போட்டியில் கலந்துகொண்ட அழகிகளின் கவர்ச்சியை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். பாரிஸ் ஹில்டனின் நிலையோ இன்னும் பரிதாபம், எழுபத்து ஏழாவது இடம் தான் அவருக்கு. அதிரடி திருமணங்கள், திடீர் குழந்தை என சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு கடைசி இடமான நூறாவது இடம் மட்டுமே கிடைத்தது. நம்ம ஊர் நமீதாக்களும், நயன்தாராக்களும் இந்த போட்டியில் கலந்துகொள்ளாததாலேயே இவர்களுக்கெல்லாம் இடம் கிடைத்திருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஹாலிவுட் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து கூறியிருக்கிறார்.


முதலிடம் பெற்ற ஃபாக்ஸுக்கு இருபத்தொரு வயது தான் ஆகிறதாம். பொது இடங்களுக்கும், விழாக்களுக்கும் அபாயகரமான உடைகளை அணிந்துவந்து ஆண்களின் மனநிலையை பிறழச் செய்வது தான் அம்மணிக்கு ஹாபியாம். பச்சை குத்திக் கொள்வதில் (tattoos) அதிக ஆர்வம் கொண்ட ஃபாக்ஸ் உடலில் ஒன்பது இடங்களில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அவரது பாய் ஃபிரண்டான பிரையனின் பெயரை அவர் எங்கே பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னோமானால் தணிக்கைக்குழு இந்தப் பதிவுக்கு "A" சான்றிதழ் வழங்கிவிடக்கூடும்.

25 மார்ச், 2009

விகடன் - விமர்சனம்!


யூத்ஃபுல் நியூ ஜெனரேஷன் விகடன் வடிவத்தில் தான் ஏமாற்றம் தந்தது. இப்போது உள்ளடக்கத்திலும் பெரியளவில் ஏமாற்றம் தந்துவருகிறது. குமுதத்தின் மீதான விமர்சனமே பத்து ரூபாய் விலையுள்ள பத்திரிகையை பத்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது என்பதுதான். விகடன் பதினைந்து ரூபாய். எனவே பதினைந்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றபோதிலும் கூட இன்பாக்ஸ் என்ற பெயரில் பெரிய பெரிய படங்களைப் போட்டு பக்கத்தை நிரப்புவதை ஜீரணிக்கவே முடியவில்லை.

இருவாரங்களாக விகடன் வெளியிட்டு வரும் சர்வே முடிவுகள் கொஞ்சம் கூட மக்களின் எண்ணவோட்டத்தோடு தொடர்பில்லாததாகவே இருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே சர்வே எடுக்கிறார்களா அல்லது டெஸ்க் ஒர்க்கா என்ற சந்தேகமும் எழுகிறது. மன்மோகன் மீதும், காங்கிரஸ் மீதும் அதிருப்தி மக்களுக்கு அதிகமாக இருக்கிறதாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் பிரதமர் பட்டியலில் அவருக்கு தன் முதலிடமாம். நன்றாகவே காதுகுத்துகிறார்கள் விகடன் குழுவினர். இந்த சர்வே தொடர்பாக எழுதப்படும் கட்டுரை நல்ல நகைச்சுவை. ஷங்கர் படங்களில் டிவி மைக் முன்பாக பேசுபவர்கள் மாதிரி மக்கள் பேசுகிறார்கள். விகடன் நிருபர்களின் எண்ணவோட்டம் மக்களின் எண்ணவோட்டமாகி விடாது.

கார்ட்டூன்களும் முன்புமாதிரி ஷார்ப்பாக இல்லை. ஹரனும், மதனும் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம். சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக தோன்றுகிறது. சினிமாவை வாசிக்க பலருக்கும் ஆர்வமிருப்பினும் விகடன் ஒரு சினிமாப் பத்திரிகையல்ல என்பதால் ஓவர்டோஸாக இருக்கிறது. கதைகளுக்கான இடம் ரொம்ப ரொம்ப குறைவு. இன்னமும் கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்குண்டு. ஒருவேளை கதைசொல்லிகள் குறைந்துவிட்டார்களோ? நாஞ்சில் நாடனின் ‘தீதும், நன்றும்’ கூட ஏமாற்றத்தையே தருகிறது. பேசாமல் அவரை தொடர்கதை எழுதச் சொல்லலாம். டாபிக்கல் மேட்டர்களை எழுத வேறு எழுத்தாளர்களை ஏற்பாடு செய்துக் கொள்ளலாம்.

அதுபோலவே சினிமா விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இப்போது இல்லை. வில்லு படத்துக்கும் காஞ்சிபுரம் படத்துக்கும் நான்கைந்து மதிப்பெண்களே வித்தியாசம் என்பதை யாராலும் நம்பமுடியவில்லை. விமர்சனத்தில் தாங்கு, தாங்குவென்று தாங்கப்படும் படங்களுக்கு கூட நாற்பத்தி ஐந்துக்கு மேல் விகடன் மதிப்பெண் தருவதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.

கண்கள் பனித்து, இதயம் இனித்து விட்டாலும் இன்னமும் தயாநிதி ஃபீவர் விகடனுக்கு மட்டும் தீரவில்லை. கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்பு நடுநிலையாளர்களை(?) வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். ரெகுலர் விகடன் வாசகர்கள் விரும்புவது விகடனின் சீரியஸ்லெஸ் ட்ரேட்மார்க் கட்டுரைகளையே. திருமாவேலனின் கட்டுரைகள் உக்கிரமாக, அற்புதமாக வருகிறது. இவையெல்லாம் வரவேண்டிய இடம் ஜூனியர் விகடனே தவிர்த்து சீனியவர் விகடனில் அல்ல. ஆடிக்கொருமுறை, அமாவசைக்கொரு முறை இதுபோன்ற சீரியஸ் கட்டுரைகளோ, பேட்டிகளோ வரலாம். சென்ற இதழில் வெளிவந்த ம.க.இ.க. செயலர் மருதையனின் பேட்டி அபாரம். இதுபோன்ற பேட்டிகளை மாதத்துக்கு ஒருமுறை போடலாம். ரெகுலராக இங்கேயே வந்துவிட்டால் ஜூ.வி.க்கு என்ன வேலை? மொத்தத்தில் அரசியலுக்கான அளவை விகடன் கொஞ்சம் குறைக்க வேண்டும்.

பாராட்டும்படியாக இருக்கும் விஷயங்களும் நிறைய இருக்கின்றன. குறிப்பாக இதழ் முழுக்க தூவப்பட்டிருக்கும் இளமை. அந்த இளமைக்கு சப்போர்ட் செய்யும் கலக்கல் கலர்ஃபுல் லே-அவுட். விகடனை வாங்கியதுமே நான் முதலில் வாசிப்பது லூசுப்பையனை. ஆனால் லூசுப்பையன் கூட பயாநிதி பற்றி அதிகமாக எழுதுவதில்லை என்பது வருத்தம் தான். நா.கதிர்வேலனின் சினிமாக்கட்டுரைகளை சொற்சுவைக்காக தவறாமல் வாசிப்பதுண்டு.

சில கவனிக்கத்த இளைஞர்களும் விகடனில் உண்டு. பாரதித்தம்பி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பத்தாண்டுகள் கழித்து இவர் இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருக்கப் போகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சென்ற வார மருதையனின் பேட்டி ஒன்றே போதும். பாரதித்தம்பியின் முதிர்ச்சியை எடுத்துக்காட்ட. அடுத்ததாக மை.பாரதிராஜா. இவரை ஏன் தான் சினிமாவுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்களோ என்று நொந்துப் போகிறேன். மற்ற விஷயங்களுக்கும் பாரதிராஜாவை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். டைமிங் சென்ஸ் நிறைந்தவர். ஜூவியில் பரக்கத் அலியும், ஆராவும் கவர்கிறார்கள்.

விகடன் விரைவில் அடுத்தக் கட்டத்துக்கு உள்ளடக்க ரீதியாகவும், வடிவ ரீதியாகவும் மாறவேண்டியது அவசியம்.

24 மார்ச், 2009

லாடம், அருந்ததீ!

லாடம்!


ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் ‘நச்’சென்று வந்திருக்கக் கூடிய படம். ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டிருக்கலாம். எக்ஸ்ட்ராவாக ஒரு மணி நேரத்துக்கு ஜவ்வென்று இழுத்தது இயக்குனரின் தவறு. இந்தப் படத்துக்கு எதற்கு ஹீரோயின், எதற்குப் பாடல்களெல்லாம் என்றே தெரியவில்லை. படத்தின் மேக்கிங்கில் கலக்கியிருக்கும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் வேகமான திரைக்கதைக்காக மெனக்கெட்டிருக்கலாம்.

இரண்டு தாதாக்கள். ஒரு தாதாவின் மகனை இன்னொரு தாதா கொன்றுவிட, அந்த இன்னொரு தாதாவின் மகனை இந்த தாதா பதினாறு நாட்களுக்குள் கொன்றுவிடுவேன் என்று சபதம் செய்கிறார். இரு தாதாக்களுக்கும் இடையில் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். ஏதாவது புரிகிறதா? இதுதான் படத்தின் அவுட்லைன். அட்டகாசமான ஆக்சன் த்ரில்லராக வந்திருக்க வேண்டியது இடையிடையே லூசு ஹீரோயின் ஒருவரால் தொய்வடைகிறது.

படம் முழுக்க ப்ளூ டோன் வன்முறையை தீவிரமாக காட்ட உதவுகிறது. இருந்தாலும் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தேவையற்ற உறுத்தலையும் தருகிறது. ஹீரோ நல்ல தேர்வு. ஹீரோயின் அச்சு அசலாக ஜோதிகாவை மிமிக்ரி செய்கிறார். முதலிரவுக் காட்சியில் அவரது காஸ்ட்யூம்.. அடடா.. ‘சிறுதொடுதலில்’ பாட்டு சூப்பர் மெலடி. இன்னும் பத்து வருடம் கழித்தும் சன் மியூசிக்கில் யாரோ ஒரு கோவிந்தராஜ் தனது காதலி மாலதிக்காக டெடிகேட் செய்யலாம்.

லாடம் - நன்றாகவே அடிக்கப் பட்டிருக்கிறது!

* - * - * - * - * - * -


அருந்ததி!


நெஜமாகவே பயப்படும்படி ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. சந்திரமுகியின் பத்துநிமிட க்ளைமேக்ஸ் நினைவிருக்கிறதா? அதே எஃபெக்டில் முழுநீளமாக எடுக்கப்பட்டிருக்கும் படம் அருந்ததி. கொல்டித் தேசத்திலிருந்து டப் செய்யப்பட்டு வந்திருப்பதால் உடை, கலாச்சாரம் இத்யாதி சமாச்சாரங்கள் மட்டும் உதைக்கிறது. ஆனால் திகிலுக்கு ஏது மொழி?

அந்த சமஸ்தானத்து பிளாஷ்பேக் அபாரம். சால பாக உந்தி. மூன்று தலைமுறை கழித்தும் வில்லனின் ஆவி ஹீரோயினின் மறுபிறப்புக்காக காத்திருக்கிறது. இதே அவுட்லைனில் தேவதை என்றொரு படத்தை நாசர் இயக்கியிருந்ததாக நினைவு.

இதுவரை வெறுமனே காட்டிக் கொட்டிருந்த அனுஷ்கா முதல்முறையாக நடித்துக் காட்டியிருக்கிறார். முகம் முழுக்க மஞ்சள் பூசி, பெரிய குங்குமப் பொட்டோடு.. வாவ்.. பகுத்தறிவாளர்கள் கூட கையெடுத்துக் கும்பிடக் கூடிய தெய்வத் தோற்றம். வில்லனாக வருபவருக்கு மேக்கப் போட்டவருக்கு ஒரு ஆஸ்கர் கொடுக்கலாம். வில்லனின் முகத்தில் எப்போதும் பிணக்களை.

படத்தின் ஒவ்வொரு காட்சியும், அடுத்தக் காட்சியோடு இணைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்லிசன் அட்டகாசம். மொக்கை கதைக்கு சூப்பராக திரைக்கதை எப்படி எழுதுவது என்பதற்கு இப்படத்தை பாடமாகக் கூட வைக்கலாம். கேமரா, கிராபிக்ஸ், இசை, கலை, எடிட்டிங், கலர் கிரேடிங் என்று டெக்னிக்கல் ஆஸ்பெக்டில் இந்தப் படம் இந்தியத் திரையுலகுக்கே ஒரு மறுமலர்ச்சி.

அருந்ததி - அசல் தீ!

ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள்!


துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடர்களுக்கு அடுத்ததாக உலகில் மிகப்பிரபலமான திரைத்தொடராக ஜேம்ஸ்பாண்டு 007 திரைப்படத் தொடர்களை குறிப்பிடலாம். இயான் பிளெமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1950களில் எழுதிய நாவல்கள் மற்றும் குறுநாவல்களே ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களாக பரிணமித்திருக்கின்றன. 1962ல் தொடங்கிய ஜேம்ஸ்பாண்டின் திரைப்பட சகாப்தம் 2008 வரை 22 பிரம்மாண்ட படங்களாக வளர்ந்து நிற்கிறது.

வசூல் ரீதியாக பார்க்கப் போனால் இதுவரை வந்த 22 படங்கள் மூலமாக நான்கு பில்லியன்களுக்கு மேல் டாலர்களாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஹாரிபாட்டர் திரைப்பட வரிசை மட்டுமே இதைவிட அதிக வருவாயை ஈட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயான் ப்ளெமிங் எழுத ஆரம்பித்து ஜேம்ஸ்பாண்டு பிரபலமான பின்னர் 1954ல் தொலைக்காட்சி வடிவமாக கடைசியாக வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு படமான காசினோ ராயல் வெளியாகியது. அதன் பின்னர் ஜேம்ஸ் பாண்டை திரைக்கு கொண்டுவர பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மெனக்கெட்டு பல தடைகளால் தள்ளிப்போடப்பட்டது. 1962ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் ஜேம்ஸ்பாண்டு திரைப்படமான டாக்டர் நோ வெளியாகி வசூலை வாரி குவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் கோடைவிடுமுறை நேரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் ஆறு பேர் நடித்திருக்கிறார்கள். சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் ஆகியோர் அவர்கள்.

ஒலிப்பதிவு மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான அகாடமி விருதுகளை ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் பெற்றதுண்டு.

ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கென பல சிறப்பு அம்சங்கள் உண்டு.

ஜேம்ஸ் பாண்டு கலக்கல் ம்யூசிக்கில் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும். ஒரு சில படங்களில் மட்டும் இந்த பாரம்பரியம் மிஸ்ஸிங்.

கதாநாயகியை முத்தமிடுவது அல்லது காதல்செய்வது எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கடைசி ரீலில் இடம்பெறும். ஆன் ஹெர் மெஜஸ்டி சர்வீஸ் மற்றும் காசினோ ராயல் படங்களின் இறுதியில் மட்டும் இந்த சம்பிரதாயம் இருக்காது. காரணம் இரண்டு படங்களிலும் ஜேம்ஸின் காதலி கடைசி காட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்.

ஜேம்ஸின் பாஸான மிஸ் எம்மின் செக்ரட்டரி மனிபென்னி ஜேம்ஸ்பாண்டை ஒரு தலையாக காதலிப்பது எல்லா படங்களிலும் வரும் காட்சி. ஜேம்ஸ் ஏனோ அவரது காதலை நிராகரித்தே வருவார். முதல் படமான டாக்டர் நோ மற்றும் கடைசியாக வெளிவந்த காசினோ ராயல் இருபடங்களிலும் மனிபென்னி கதாபாத்திரம் இல்லவே இல்லை. மற்ற அனைத்துப் படங்களிலும் அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக ஜேம்ஸை காதலிக்கும்.

ஒவ்வொரு படத்துக்கும் ஜேம்ஸ் பாண்டுக்கு க்யூ பிராஞ்ச் வினோத அழிவு ஆயுதங்கள் உருவாக்கித் தருவது வாடிக்கை. அவற்றை வைத்து தான் தலைவர் க்ளைமேக்ஸில் எதிரிகளை ஒற்றை ஆளாய் அழித்தொழிப்பார்.

இன்று தமிழ்படங்களில் உச்சரிக்கப்படும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் ஜேம்ஸ் படங்கள் தான் முன்னோடி. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பஞ்ச் டயலாக் இருக்கும். தலைவரின் அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்திவிட்டு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பார். ஜேம்ஸ்பாண்டு திரைப்பட வரிசையில் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் இந்த சம்பிரதாயத்துக்கு விதிவிலக்கு.

ஜேம்ஸ்பாண்டு பார்களுக்கு சென்றால் வோட்கா மார்டினி விரும்பி குடிப்பார். பார் டெண்டரிடம் "Shaken, not stirred" என்றும் சொல்வார். கோல்டன் ஐ திரைப்படத்தில் இது கொஞ்சமாக மாற்றப்பட்டு "Shaken, but not stirred" ஆனது. காசினோ ராயல் திரைப்படத்தில் பார்டெண்டர் ஜேம்ஸ்பாண்டை பார்த்து "Shaken or stirred?" என்று கேட்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றாலே பெண்கள் வெகுபிரசித்தம். இவர் காப்பாற்றும் பெண்கள் இவரை காதலிப்பார்கள் அல்லது சக பெண் ஏஜெண்டுகள் இவரை காதலிப்பார்கள். அதுவும் இல்லையென்றால் வில்லனின் ஆசைநாயகிகளுக்கு ஜேம்ஸ் மீது காதல் வந்துவிடும். பெண்களே இல்லாமல் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுப்பது நடக்காத காரியம்.

ஜேம்ஸ் பாண்டு படங்களில் அவருக்கு வழங்கப்படும் கார்கள் வெகுபிரசித்தம். நவீனவசதிகளோடு கூடிய அதிவேக கார்களை ஜேம்ஸ் பயன்படுத்துவார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கார்கள் பல மில்லியன் டாலர்களுக்கு ஏலத்துக்கு விடப்படும்.

எல்லா ஜேம்ஸ் படங்களிலும் அந்த படப் பெயர் ஒரு வசனத்திலாவது இடம் பெறும். உதாரணமாக சில....
Mr.Bond, You Only live Twice
You lived to Die Another Die.

மூவி டைட்டிலில் ஒரு பிரபலமான பாப் பாடகரின் பாடல் இடம் பெறும். அந்த பாடல் வரியிலும் பட பெயர் இடம் பெற்றிருக்கும். மடோனாவின் பாடல் Die Another Die படத்தை சிறப்பித்தது.

ஒரு சூதாட்ட காட்சியாவது 007 படங்களில் கண்டிப்பாக இடம் பெறும். அது என்ன ராசியோ தெரியவில்லை. பனி சறுக்கு காட்சிகளும் நிறைய படங்களில் வருவதுண்டு.

ஜேம்ஸாக நடிக்கும் நடிகர்களை எடுத்து கொண்டால், ஒருவரை விட்டு ஒருவர் தான் நிலையாக இருகின்றனர். கானரிக்கு பிறகு வந்த லெஸன்பி ஒரு படத்திலும், மூருக்கு பிறகு வந்த டிமோத்தி டால்டன் இரு படங்கள் மட்டுமே நடித்தனர். டானியல் கெரெக் தொடர்ந்து நிலைப்பாரா என்று பொறுத்து பார்ப்போம்

ஜேம்ஸின் உதவியாளராக, Money Penny என்று ஒரு பெண்மணி தோன்றுவார். பாண்டு தன் அலுவலகத்தில் நுழைந்த்தும், தன் தோப்பியை கழற்றி Stand-டை நோக்கி வீசுவது வாடிக்கை.


இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் :


டாக்டர் நோ (1962)ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)கோல்டுஃபிங்கர் (1964)தண்டர்பால் (1965)யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)லைவ் அண்ட் லெட் டை (1973)தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)மூன்ரேக்கர் (1979)ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)ஆக்டோபுஸ்ஸி (1983)எ வ்யூ டூ கில் (1985)தி லிவிங் டேலைட்ஸ் (1987)லைசென்ஸ் டூ கில் (1989)கோல்டன் ஐ (1995)டுமாரோ நெவர் டைஸ் (1997)தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)டை அனதர் டே (2002)கேசினோ ராயல் (2006)குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)
Font sizeஅடுத்து வர இருப்பது

பாண்ட் 23 (2011)