16 டிசம்பர், 2008

பொம்மலாட்டம்!

வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் இமயம். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் பார்த்த படம் எதுவென்பதே நினைவில் இல்லை. தாஜ்மஹால் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டிருக்கிறது. பாரதிராஜா தமிழின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றாலும் 1980களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப மறுமலர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டார் அல்லது பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இந்த ஒரு காரணத்தாலேயே தமிழில் அவுட்-ஆஃப்-ஷோ ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். கடைசியாக கிழக்குச்சீமையிலே தான் சூப்பர்ஹிட் என்பதாக ஞாபகம்.
 
பாரதிராஜாவின் பலம் மண்ணின் மனம் + கதை மாந்தர்களின் உளவியல் போக்கினை எளிமையாக சித்தரிப்பது. தன் மகனை கதாநாயகனாக்கி அழகு பார்க்கும் ஆசையில் தன்னுடைய பலத்தை சில ஆண்டுகளாக மறந்து தொலைத்திருந்தார். அப்போதிருந்த தமிழ் திரையுலகின் பெரிய ஜாம்பவான்களோடு கூட்டணி அமைத்து ஆசை மகன் மனோஜுக்காக உருவாக்கிய தாஜ்மஹாலில் தன்னுடைய இயல்பினை கோட்டை விட்டு விட்டார். இழந்த இயல்பை 'பொம்மலாட்டம்' மூலமாக கச்சிதமாகப் பெற்றிருக்கிறார். இப்படத்தில் நானா படேகர், ருக்மிணி, ரஞ்சிதா கதாபாத்திரங்கள் அச்சு அசல் பாரதிராஜாவின் டிரேட்மார்க். 'சினிமாவுக்குள் சினிமா' என்ற கல்லுக்குள் ஈரம் காலத்து கான்செப்ட்.
 
அனேகமாக தானே நடித்து இயக்க இக்கதையை பாரதிராஜா கையிலெடுத்திருக்கக் கூடும். நானாபடேகரின் ஒவ்வொரு பிரேமையும் பாரதிராஜாவோடு ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. நானாபடேகரின் நடிப்பை நடிப்புச்சுனாமி என்று சொல்லுவதா அல்லது நடிப்பு பூகம்பம் என்று சொல்லுவதா? 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது நானாபடேகருக்கு வழங்கப்படாவிட்டால் அவ்விருதினை தூக்கி குப்பையில் போடுவது தான் நியாயம். தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குனரே சினிமாத்துறையையும், அதன் போக்கையும் கிண்டலடிப்பது ரசிக்கக்கூடியது. குறிப்பாக தற்கால கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபைனான்ஸியர்களை வாங்கு வாங்கென்று வாங்குகிறார் பாரதிராஜா. அயல்நாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுடும் இயக்குனர்களையும் ஒரு பிடிபிடித்திருந்தால் தாராளமாக எழுந்து நின்று கைத்தட்டியிருக்கலாம்.
 
'பொம்மலாட்டம்' த்ரில்லராகவும் இல்லாமல், சராசரிப் படமாகவும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் விடப்பட்டிருக்கிறது. படம் முழுக்க ஆமைவேகத்தில் நகருகிறது. இடையிடையே சில பாடல்கள் கதையின் போக்குக்கு தொந்தரவாக இருந்தபோதிலும் ஹிமேஷ்ரேஷ்மையாவின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமை. ஹீரோயின் முகத்தை சூப்பர் இம்போஸ் செய்து பாடல்காட்சிகளில் காட்டும் உத்தி 1980களிலேயே காலாவதியாகி விட்டது என்று பாரதிராஜாவுக்கு யாராவது உதவி இயக்குனர் எடுத்துச் சொல்லியிருக்கலாம். படத்தின் இறுதிக்காட்சி வித்தியாசமானதாக இருந்தபோதிலும் 'சப்'பென்று முடிகிறது. க்ளைமேக்ஸ் இன்னும் வெயிட்டாக இருந்திருந்தால் பொம்மலாட்டம் ஜோராக நடந்திருக்கும்.
 
இப்படம் ஆங்கிலத்திலோ அல்லது பிரெஞ்சிலோ எடுக்கப்பட்டிருந்தால் உலகப்படமாக போற்றப்பட்டிருக்கும். பல உலகப்பட விழாக்களில் பங்குபெற்றிருக்கும். பின்நவீனத்துவக்கூறுகள் உள்ளடக்கப்பட்டதாக சினிமா சிந்தனையாளர்களால் பாராட்டப்பட்டிருக்கும். தமிழில் இதை பாரதிராஜா முயற்சித்திருப்பதால் 'தற்கொலை முயற்சி' என்று கூறி அவர்மீது காவல்துறை வழக்கே தொடரலாம்.
 
ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்திருப்பதாக சொன்னார்கள். படம் முழுக்கத் தேடிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. படம் பார்த்த யாராவது கண்டுபிடித்துத் தரலாம். ஒரு இரண்டாம் கட்ட நடிகர் நடிக்க வேண்டிய கேரக்டர் அது. படத்துக்குத் தொடர்பில்லாத அவரது காதல் மற்றும் கந்தாயத்து காட்சிகள் தாமரை இலை மேல் நீர்த்துளி. படத்துக்கு ப்ளஸ் : பாரதிராஜா + நானாபடேகர். மைனஸ் : மீதி எல்லாமே. நானாபடேகருக்காக ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டிய படம். ஆனால் சாருநிவேதிதாவுக்கு மட்டும் தான் இந்தப் படம் பிடிக்கும்.
 
பொம்மலாட்டம் - நவரசத் தாண்டவம்!

11 டிசம்பர், 2008

மூன்று மொக்கைப் படங்கள்!

சூப்பர் ஸ்டார் நடித்த குசேலன் தான் சென்ற வருடத்தின் சிறந்த மொக்கைப்படம் என்றாலும், 2008ல் வெளிவந்த படங்கள் பெரும்பாலானவை மொக்கைப் படங்கள் என்பதால் இப்போது 'மொக்கைப் படங்கள்' என்ற ஒரு கேட்டகிரியே அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உப்புமா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அஞ்சும் நிலையில், சமீபத்தில் வெளியான மூன்று மொக்கைப் படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. யப்பா ஃபுல் ஸ்டாப் இல்லாம எவ்ளோ பெரிய வாக்கியம்?மேகம்

தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய தேறாத நிலையில் அஜித்தின் ஏகனோடும், பரத்தின் சேவலோடும் வெளியான சூப்பர் படம். தமிழரசன் என்பவருக்கு சினிமாவில் நடிக்க ஆசையிருந்தது. அவரை வைத்து யாரும் படமெடுக்க முன்வராத நிலையில் அவரே அதிரடியாக தயாரித்து ஹீரோவாக நடித்தப் படம். கிட்டத்தட்ட ஒரு மேட்டர் படம். படத்தை வெளியிடமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தால் 'பிட்' இணைத்து ஜோதியிலும், பல்லாவரம் லஷ்மியிலும் வெளியிடப்பட்டிருக்கும்.

இப்படத்தின் கதை உலகத் திரைப்படங்களுக்கெல்லாம் சவால் விடக்கூடியது. மெக்கானிக்கான ஹீரோ பேங்கில் வேலை செய்யும் ஒரு சுமார் ஃபிகரை லவ்வுகிறார். கல்யாணமும் செய்துக் கொள்கிறார். இந்நிலையில் முதலிரவில் முக்கியமான கட்டத்தில் நெஞ்சுவலி என்று சொல்லி ஹீரோயின் மயங்கி விழுகிறார். ஹார்ட்டில் ஏதோ பிரச்சினையாம். ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போகிறார்கள். ஹார்ட்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஹீரோயினின் கற்பை ஆட்டை போட்டு கொன்று விடுகிறார்.

அந்த டாக்டரின் மனைவியை பதிலுக்கு ஹீரோ வன்புணர்வு செய்து, அதை கேமிராவில் படமாக்கி டாக்டருக்கு போட்டு காட்டுவது தான் கதை. பழிக்குப் பழி! :-(

ஹீரோ தமிழரசனுக்கு 40 வயது இருக்கலாம். விக் வைத்து ஒப்பேற்றுகிறார். இவருக்கு இரண்டு டூயட்டும் உண்டு. ராஜ்கிரண் ரேஞ்சுக்கு இருக்கும் இவர் காதலிக்கும் காட்சிகள் படா கொடுமை. டாக்டரின் மனைவியாக வரும் ஃபிகர் நன்கு 'சீன்' காட்டுகிறார். ஃபேஸ் கட் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் மேற்படி மேற்படி மேட்டர்களில் இயக்குனருக்கு ரொம்பவும் ஒத்துழைப்பு 'காட்டி'யிருக்கிறார்.எல்லாம் அவன் செயல்!

ஆர்.கே. என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ சில சினிமா கம்பெனிகளில் எடுபிடியாக இருந்தாராம். எப்படியோ அப்படி இப்படியென்று முன்னேறி கொஞ்சம் துட்டு சேர்த்துவிட்டாராம். ஆர்.கே.ஆர்ட்ஸின் 'எல்லாம் அவன் செயல்' படத்தில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார். கோயம்பேடு ரோகிணி வளாகத்தில் இவருக்கு வாழ்த்துப் பேனர்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கிறது. வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷே இவரிடம் தோற்றுவிடக் கூடிய லெவலுக்கு பிராண்ட் பில்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்.

மிகக்கொடூரமான குற்றவாளிகளின் கேஸ்களை எடுத்து சாமர்த்தியமாக வாதாடி விடுதலை வாங்கித் தருவது வழக்கறிஞர் எல்.கே.வின் வாடிக்கை. மகளையே வன்புணர்வு செய்தவன், டீச்சர் ஒருவரை கொடூரமாக வன்புணர்ந்து சாகடித்தவன் போன்ற கேப்மாறி, மொள்ளமாறி, முடிச்சவிக்கி, பொறம்போக்குகளுக்கெல்லாம் வாதாடி அவர்களை விடுதலை செய்ய வைக்கிறார் எல்.கே. விடுதலையான மொள்ளமாறிகளுக்கு அடுத்த சில நாட்களிலேயே உலகத்திலிருந்தும் விடுதலை வாங்கித் தருகிறார். "இந்த கேசுலே நீ மாட்டிக்கிட்டாலும், உயர்நீதி, உச்சநீதி மன்றங்களுக்கெல்லாம் அப்பீல் பண்ணி, ஜெயில்லே சுகவாழ்க்கை வாழ்வே. அதனாலே என் வழியிலே நான் நீதியை தருகிறேன்!" என்று தன் செயலுக்கு நியாயமும் கற்பிக்கிறார்.

சிந்தாமணி என்ற மருத்துவக் கல்லூரி மாணவி ராக்கிங் கொடுமையால் சில பணக்கார மாணவிகளால் கொல்லப்பட அந்த வழக்கிலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகிறார் எல்.கே. கேசை உடைத்து குற்றவாளிகளை காப்பாற்றுகிறார். வழக்கம்போல தான் காப்பாற்றியவர்களை தானே கொல்கிறாரா? என்பது தான் க்ளைமேக்ஸ்.

மொக்கையான ஹீரோ என்றாலும் வலுவான கதை, திறமையான இயக்குனரால் (ஷாஜி கைலாஸ்) இப்படம் மொக்கைப்படம் என்ற கேட்டகிரியில் இருந்து விலகி நிற்கிறது. இடைவேளைக்குப் பிறகு படம் நிஜமாலுமே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனாலும் ஹீரோ டிராகுலா குரலில் அவ்வப்போது க்ளோசப்பில் மந்திரங்கள் சொல்லும்போது தியேட்டரில் திருட்டுத்தனமாக காதலனோடு படம் பார்க்க வந்த காதலிகள் பயந்துவிடுகிறார்கள்.

'சிந்தாமணி கொலை கேசு' என்ற மலையாளப் படத்தின் தழுவல் இது. வணிகத்துக்காக வடிவேலுவின் காமெடி ட்ராக் படத்தோடு ஒட்டாமல் தனியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஹீரோ ஆர்.கே. தான் படுத்துகிறார் என்றால் வடிவேலு அதைவிட படுத்துகிறார். சமீபகால வடிவேலுக்கு இப்படம் ஒரு திருஷ்டி படிகாரம்.

நல்லவேளையாக ஆர்.கே.வுக்கு ஹீரோயினோ, டூயட்டோ இல்லாததால் ரசிகர்கள் தப்பித்தார்கள். வீரத்தளபதி ஜே.கே.ஆர் மட்டும் இப்படத்தில் நடித்திருந்தால் இப்படம் ஒரு ஆண்டு ஓடியிருக்கும் என்பது உறுதி.
சாமிடா!
முழுக்க முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியது விளம்பரங்களும், போஸ்டர்களும். விளம்பரங்களை கண்டவர்களுக்கு இது மொக்கைப்படம் என்பது விளங்கவே விளங்காத அளவுக்கு பக்கா பர்ஃபெக்‌ஷன். 'நான் கடவுள்' திரைப்படம் மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டேஏஏ... கொண்டிருக்க, அந்த கதையை நைசாக உருவி, தழுவி இப்படத்தை அவசரகதியில் எடுத்துத் தள்ளிவிட்டார்கள் என்று திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள். நான் கடவுள் படத்தின் கதை என்னவென்று அப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பாலாவுக்கே தெரியாத நிலையில் 'சாமிடா' படக்குழுவுக்கு எப்படி தெரிந்தது என்பது தான் ஆச்சரியம்.
டிவி நடிகரும், சினிமாக்களில் அடியாள் மற்றும் துண்டு கேரக்டர்களில் நடித்து வருபவருமான ஒருவரை ஹீரோவாக்கி விஷப்பரிட்சை எழுதியிருக்கிறார்கள். ஹீரோ பெயர் செம்பியாம். சொம்பு என்றே வைத்திருக்கலாம். காதல் காட்சிகளில் சொம்பு மாதிரி இருக்கிறார். இத்தனைக்கும் ஹீரோயின் அந்த காலத்து ஷோபா மாதிரி செம ஃபிகர். ஹீரோயின் அழகாக இருந்தாலும் ரியாக்‌ஷன் கொடுமை. மேட்டர் படங்களில் பலான காட்சிகளில் கொடுக்கப்படும் ரியாக்‌ஷனையே காதல் காட்சிகளில் கொடுக்கிறார். பின்னணி இசையும் மேட்டர் பட லெவலுக்கே இருக்கிறது. ஒரு சில அஜால் குஜால் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தால் ஓரளவுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.
மிக மிக சாதாரணமான தாதா கதை. சொர்ணாக்கா மாதிரி கேரக்டருக்கு பிந்துகோஷ் மாதிரி ஒரு நடிகையை நடிக்கவைத்து ரசிகர்களை கேலி செய்திருக்கிறார் இயக்குனர். படம் முடியும்போது 'அப்பாடா' என்று நிம்மதியோடு தியேட்டரை விட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடவேண்டியிருக்கிறது.
இந்தளவுக்கு கேணைத்தனமாக, மொக்கைத்தனமாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்திலும் கேமிரா மேஜிக்கை செய்திருக்கிறது. அனேகமாக டிஜிட்டலில் படமாக்கியிருப்பார்கள் என்று தெரிகிறது. இயல்பான வெளிச்சம் கண்ணுக்கு இதமென்றாலும், நிழல் அதிகமாக இருக்கும் காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. காசியை கேமிரா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு பிரமாதமாக காட்டுகிறது. இந்த கேமிராமேனுக்கு நல்ல இயக்குனர் யாராவது வாய்ப்பளித்தால் தேவலை.

9 டிசம்பர், 2008

ஒபாமா பராக்!


'மாற்றம்' என்ற சொல் இன்று அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அதிபரை தந்திருக்கிறது. மாற்றத்தின் இன்னொரு பெயர் ‘பராக் ஹூசேன் ஒபாமா'. நாம் ஒத்துக் கொள்கிறோமோ இல்லையோ.. அமெரிக்காவின் அதிபர் தான் உலகத்துக்கே ஆக்டிங் அதிபர் என்பது இன்றைய யதார்த்தம். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உலகத்தை ஆளப்போகும் அதிபர் பற்றி தமிழில் நிறைய தரவுகளோடு வந்திருக்கும் நூல் ‘ஒபாமா பராக்!'

ஒபாமா

பராக் ஒபாமா

பராக் ஹூசேன் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் வென்ற கணத்தில் ஒரு கருப்பரினப் பெண் பெற்ற பரவசத்தோடும், ஆனந்தக் கண்ணீரோடும் தொடங்குகிறது நூல். தொடங்கியப் புள்ளியிலிருந்து இறுதிவரைக்கும் விறுவிறுப்பு, பரபரப்பு இதைத்தவிர வேறொன்றுமில்லை. ஒபாமா குறித்த நூலென்றாலும் ஒபாமாவின் கென்யா தாத்தாவை கூட விட்டுவைக்காமல் விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். கென்யாவின் அந்த பாரம்பரிய பழங்குடி இனம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வாசகர்களுக்கு தீபாவளி போனஸ்.

நூலின் கதையை இவ்விமர்சனத்தில் வைக்க விரும்பவில்லை. இனி நூல் வாசிக்கப்போகும் வாசகர்களுக்கு அது Spoiler ஆக அமைந்துவிடும். இந்நூல் என்னிடம் கையளிக்கப்படும்போது நூலின் பதிப்பாசிரியர் ஒரு சுவாரஸ்யமான சவால் விட்டார். இந்நூலில் இடம்பெற்றிருப்பதை தவிர்த்து ஒபாமா குறித்து இன்றைய தேதியில் புது தகவல்களை வேறும் யாரும் தந்துவிட முடியாது என்று. சவாலை அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் என்னுடைய தோல்வியை நூல் வாசித்து முடித்ததுமே மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு அமெரிக்கரால் கூட தங்கள் அதிபரைப் பற்றி இவ்வளவு சுருக்கமாக, தெளிவான தரவுகளோடு இன்றைய தேதியில் எழுதிவிட இயலாது. இந்நூல் உருவாக்கத்துக்காக முத்துக்குமார் உழைத்த உழைப்பு பின்னிணைப்பில் அவர் வாசித்த புத்தகங்களின் பட்டியலை கண்டாலே புரிகிறது. ஆங்கிலம் மட்டுமே வாசிக்கும் இந்தியர்களுக்காக உடனடியாக இந்நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டியது அவசியம்.

நிறைகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் இந்நூலில் சிறு சிறு குறைகளும் உண்டு. ஒரு மசாலாப்பட வேகத்தோடும், விறுவிறுப்போடும் ஓடும் ஒபாமாவின் கதைக்கு இடையிடையே அமெரிக்க கருப்பரின போராட்டங்கள் குறித்த பிளாஷ்பேக் இடையிடையே தோன்றுவது வாசிப்பின் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர். ஆயினும் பரிபூரணமான தகவல்களை வாசகனுக்கு தந்தே ஆகவேண்டும் என்ற அறம் நூலாசிரியருக்கு இருப்பதால் இதை மனப்பூர்வமாக மன்னித்து விடலாம்.

அமெரிக்கா குறித்த டாலர் தேசம் உள்ளிட்ட சில நூல்களை வாசிக்காதவர்களுக்கு இந்நூலில் அடிக்கடி இடம்பெறும் ஏழ்மை போன்ற சொற்கள் ஆச்சரியம் அளிக்கலாம். அமெரிக்காவிலும் ஏழைகள் உண்டு. இந்தியாவில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அதெல்லாம் அமெரிக்காவிலும் கட்டாயம் உண்டு. சதவிகித வாரியாக வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அமெரிக்க தேர்தல் முறை குறித்து விலாவரியாக ஆனால் எளிமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் கமிஷனருக்கு இந்நூலை சிபாரிசு செய்கிறேன். அதே நேரத்தில் அங்கேயும் தேர்தல் முறையில் எப்போதாவது கோமாளித்தனம் நடக்குமென்பதையும் நூலாசிரியர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதிக வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்ற அல்கோர் 2000ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றதை இதற்கு உதாரணமாக நூல் காட்டுகிறது.

இரா. முத்துக்குமாரின் மொழிநடை குறித்து அவசியம் பாராட்டியே தீரவேண்டும். இவ்வளவு எளிமையாக வாக்கியங்களை அமைக்கும் வித்தையை எங்குதான் கற்றாரோ? வாசிப்புக்கு இடையூறு செய்யாத சுருக்கமான, அழகான, நல்ல தமிழோடு கூடிய நடை. எழுத விரும்பும் அமெச்சூர் எழுத்தாளர்களுக்கு இந்நூல் வாக்கியங்களை அமைக்க நல்ல பயிற்சியை அளிக்கும். வரலாறு மற்றும் சுயசரிதை நூல்கள் இதே நடையில் தொடர்ந்து வருமேயானால் இவ்வகை நூல்களுக்கான வாசகர்களை எண்ணிக்கையை கட்டாயம் அதிகரிக்கச் செய்யும். நியூ ஹொரிசன் மீடியா நிறுவனத்தின் வெளியீடுகளான மினிமேக்ஸ் புத்தகங்களுக்கு பொறுப்பாசிரியராக பதவி வகிக்கும் முத்துக்குமாருக்கு மிக உயரமான எதிர்காலம் பதிப்பகத்துறையிலும், எழுத்துத்துறையிலும் நிச்சயம் இருக்கிறது.

கருப்பு, வெள்ளை இனத்தவர் பிரச்சினை குறித்து மார்ச் 18, 2008 அன்று ஒபாமா பிலடெல்பியாவில் பேசிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உரையின் தமிழாக்கம் நூலின் பின்னிணைப்பில் இருப்பதாக 112ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் வாசித்த பிரதியில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அதுபோலவே 126 மற்றும் 127ஆம் பக்கங்களில் 88 மற்றும் 14 ஆகிய இரு எண்களைப் பற்றிய சில முக்கிய, குறிப்பிட வேண்டிய தகவல்கள் உண்டு. ஆனால் 126ஆம் பக்கத்தில் 88 என்பதற்குப் பதிலாக 84 என்று தவறுதலாக அச்சிடப்பட்டிருக்கிறது. கண்களுக்கு உடனடியாக 'பளிச்'சென்று தெரிந்த இரு குறைகள் இவை. அடுத்தடுத்த பிரதிகள் அச்சிடப்படும் போது இக்குறைகளை பதிப்பகம் நிவர்த்தி செய்துவிடுமென்று நம்புகிறேன்.

ஒபாமா பராக்! - அனைவருமே கட்டாயம் வாசித்தாக வேண்டிய நூல்.


நூலின் பெயர் : ஒபாமா பராக்!

நூல் ஆசிரியர் : ஆர். முத்துக்குமார்

விலை : ரூ.80

பக்கங்கள் : 152

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

நூல் குறித்த பதிப்பாசிரியரின் அறிமுகம்!

நூலாசிரியரின் குரு தன் மாணவன் குறித்து அடையும் பெருமிதம் இங்கே!

1 டிசம்பர், 2008

“சமீபத்தில்...” ஸ்கீஸோஃப்ரீனியா!

சில பெருசுகள் 1970களில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூட 'சமீபத்தில்' என்று சொல்லுவது வழக்கம். இது ஒரு வியாதி. மனப்பிறழ்வு. இந்த மனப்பிறழ்வுக்கு பெயர் ஸ்கீஸோஃப்ரீனியா. முரட்டு வைத்தியங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது. இந்த கருமாந்திர நோய்க்கு மருந்து மாத்திரை எதுவும் கிடையாது. எந்த காரணத்தால் இந்த மனோவியாதி வந்து தொலைத்ததோ அந்தக் காரணத்தை தவிர்த்தால் இதில் இருந்து வெளிப்படலாம். அல்லது மனதுக்கு ப்ரீத்தியான காரியங்களில் ஈடுபட்டாலும் ஸ்கீஸோஃப்ரீனியாவிலிருந்து வெளிவரலாம். இல்லையேல் நாக்கு நமைக்கும் அளவுக்கு ஒரு நாளைக்கு 1008 முறை 'ஸ்கீஸோஃப்ரீனியா' என்று உச்சரித்துப் பழகலாம்.

* - * - * - * - * - * - * - * - * - * - *

தீவிரவாதிகள் குறித்து ஊடகங்களிலும், வலைப்பதிவுகளிலும் மிக அதிகமாக இப்போது விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர் 26க்கு பிறகாக. மிக மிக எளியமுறையில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் அடக்கும் வழியிருக்க ஏன் தான் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல் தன் பதவியை ராஜினாமா செய்தாரோ தெரியவில்லை.

எங்காவது தீவிரவாதிகள் வாலை ஆட்டினால் அவர்களை ஒட்டநறுக்க ஆயிரம் யானை பலம் கொண்டவர் தமிழகத்தில் இருக்கிறார். எங்கள் தங்கம் கேப்டன். இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை. தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள். நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.

நரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு. வீரப்பனை தமிழக போலிசார் சுட்டுக் கொல்வதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தனிமனிதராக பிடித்த சாதனைக்கும் கேப்டன் சொந்ந்தக்காரர். இப்படிப்பட்ட ஆல்-இன்-ஒன் கமாண்டோ இருக்கிறார். அவரை புதிய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேப்டன் பிஸியாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஆக்சன் கிங் அர்ஜூனையாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஒற்றன் படத்தில் கூட ஒண்டியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழித்தவர் அவர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.

பூ

"தங்கச்சி மவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னே பொண்ணா பெத்துட்டே. கங்கிராட்ஸ்"
 
"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு கட்ட தங்கச்சியும் ஒரு பொண்ணு பெத்து தரணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்ப வழக்கம்"
 
* - * - * - * - * - * - * - *
 
"ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"
 
"ம்ம்ம்ம்... கொமாரைத் தான் கட்டிப்பேன்!"
 
"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"
 
"பெருசானப்புறம் கொமாரு மாமாவைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்!"
 
கொமாரு மாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அவளை அடிக்கத் துரத்தினான். அத்தைகள், சித்திகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்ட அவளைப் பிடிக்க இயலாத இயலாமையில் அழுதுகொண்டே, "ம்ம்ம்.. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அவளை அதுமாதிரி பேசாம இருக்கச் சொல்லு!"
 
அவனது அழுகை சொந்தங்களுக்கு சிரிப்பை தந்தது, குதூகலத்தை தந்தது. அடிக்கடி அவளை "யாரைக் கட்டிப்பே?" என்று கேட்டு அவனை வெறுப்பேற்றி விளையாடினார்கள்.
 
* - * - * - * - * - * - * - *
 
கொருக்கலிக்கா முந்திரிக்கா விளையாடும்போது சத்தத்தோடும், ராகத்தோடும், "கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கோ!"
 
நாலு பேர் எதிரில் அவமானப்படுத்தப்பட்ட சீற்றத்தில், "ச்சீ போடி மூக்குச்சளி. உன்னைப் போயி எவன் கட்டிப்பான்?"
 
* - * - * - * - * - * - * - *
 
தென்னை ஓலைகளுக்கு இடையே அவளைப் பார்த்தபோது புதிதாய் தெரிந்தாள். முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் நாணத்தால் சிகப்பிட்டிருந்தது. "கொமாரு மாமா என்னைக் கட்டிக்கோ!" என்று இப்போது அவள் கேட்கமாட்டாளா என்று முதல் தடவையாக ஏங்கினான்.
 
* - * - * - * - * - * - * - *
 
"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"

"என்ன பேசுறது?"

"சும்மா ஏதாவது பேசேன்"

"ம்ம்ம்ம்... உங்கிட்டே யாராவது 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?"

"செருப்பால அடிப்பேன்"

"............... :-( "

"ஆனா அது என் அத்தை பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்"
 
* - * - * - * - * - * - * - *
 
"அதெப்படி? பெரியவங்களுக்குள்ளே பிரச்சினைன்னா உறவு விட்டுப் போயிடுமா? என் அத்தைப் பையனுக்கு என்னை தூக்கிட்டு போயி கட்டிக்கக் கூட உரிமையிருக்கு!"
 
* - * - * - * - * - * - * - *
 
கடைசியாக அவளை அவளது திருமண வரவேற்பில் பார்த்தான். குமாரு மாமாவை தனியாக கூப்பிட்டு மணமகள் அறையில் ஏதோ பேசினாள். அவுட் ஆஃப் போகஸில் தெரிந்தாள். அவன் கண்களில் நீர் கோர்த்திருந்ததால். அவள் சோகமாக ஏதோ பேசினாள் என்றாலும் என்ன பேசினாள் என்பது இப்போது அவனுடைய நினைவில் இல்லை. அன்றைய அவனது இரவை மது ஆக்கிரமித்தது.
 
இப்போதும் இதே நகரத்தில் தான் வசிக்கிறாள். அவளது கணவனோடு சவுக்கியமாக. எங்கிருந்தாலும் வாழ்க!
 
* - * - * - * - * - * - * - *
 
தேவதைகள் வானத்திலிருந்து குதித்து விடுவதில்லை. மாமனுக்கு மகளாக பிறக்கிறார்கள். தேவதைகளை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. மீதி பேர் 'பூ' படத்தின் நாயகன் தங்கராசுவை போல மனமறுந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விடுங்கள், நமக்கே நமக்கென ஒரு மாரியம்மாள் இனிமேல் புதியதாகவா பிறந்து வரவேண்டும்?
 
கோமா ஸ்டேஜில் இருக்கும் தமிழ் சினிமா சூழல் 'பூ' போன்ற திரைப்படங்கள் வணிகரீதியிலான வெற்றியினை அடைந்தால் ஆரோக்கியமான பாதைக்கு திரும்ப இயலும். இப்படத்தை வெற்றியடையச் செய்வது சினிமா ரசிகர்களின் கடமை. விமர்சிக்க சில விஷயங்கள் இருந்தாலும் பூமாலையை, உன்னதப் படைப்பை கொத்துப்பரோட்டா போட மனதுக்கு இஷ்டமில்லை. உணர்வு குன்றாமல் உணர்ச்சிகளால் தவசிரத்தையோடு நெய்திருக்கிறார் இயக்குனர் சசி.
 
பூ - செல்லுலாய்டில் செதுக்கப்பட்ட முழுநீள காதல் கவிதை