பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஆகஸ்ட், 2016

23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்!

ஒரு சித்திரக்காரரின் கனவு காமிக்ஸ் பயணம்...
“பூங்குழலி, குந்தவை, நந்தினின்னு நான் யாரை வரைஞ்சாலும், அது அவங்களை மாதிரியே இல்லை. கூடப்படிக்கிற பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க. என்னாலே ஓவியனாவே ஆக முடியாது. என்னை விட்டுடும்மா”, பதிமூன்று, பதினான்கு வயது மாணவனாக இருந்தபோது தங்கம், அவரது அம்மாவிடம் கதறி அழுதுக் கொண்டே சொன்னார்.

அப்போதுதான் ‘கல்கி’ இதழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடரை ஆரம்பித்திருந்தார் கல்கி. அத்தொடருக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் மக்களிடையே பிரபலமாகி இருந்தன.

நாடு விடுதலை ஆவதற்கு பத்து ஆண்டுகள் முன்பே தங்கம் பிறந்துவிட்டார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அப்பா காலமானார். இவரை வளர்க்க அம்மா ரொம்பவும் சிரமப்பட்டார். தங்கத்துக்கு நிறைய படிக்க விருப்பம். அவருடைய அம்மாவுக்கும் இவரை படிக்க வைக்க ஆசை இருந்தாலும், குடும்ப வறுமை அதை அனுமதிக்கவில்லை. எனவே தொழிற்கல்வி எதிலேனும் மகனை சேர்த்துவிட்டு சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

கும்பகோணம் நகராட்சி அப்போது சித்திரகலாசாலை என்கிற பெயரில் பள்ளி நடத்திக் கொண்டிருந்தது. தங்கம் அதில் சேர்ந்தார். இந்த ஓவியப்பள்ளிதான் பிற்பாடு புகழ்பெற்ற கும்பகோணம் ஓவியக்கல்லூரியாக மாறி, ஏராளமான ஓவியர்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியது.

பள்ளியில் சேரும்வரை வரைவதில் எவ்வித ஆர்வமோ, அனுபவமோ இல்லாத தங்கம், ஓவியப்பள்ளியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய அம்மாதான் குடும்ப வறுமைநிலையை எடுத்துக்கூறி தொடர்ந்து அங்கே தொழில் கற்றுக்கொள்ளச் சொன்னார். ஓவியம் பழகினால், தன் மகன் விளம்பரப் பலகைகள் எழுதி பிழைத்துக் கொள்வான் என்று தங்கத்தின் அம்மா கருதினார். 1950ல் தொடங்கி 1956 வரை அந்தப் பள்ளியில் படித்த தங்கத்துக்கு ஒருகட்டத்தில் ஓவியம் வரைவதில் பெரும் ஈடுபாடு உண்டானது. சித்திரமும் கைப்பழக்கம்தானே?
“அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எந்த ‘பொன்னியின் செல்வன்’ ஓவியங்களை என்னாலே வரையமுடியலைன்னு அழுதேனோ, இப்போ அதே ‘பொன்னியின் செல்வன்’ கதையை சித்திரக்கதை நூலாகவே வரைஞ்சி வெளியிட்டிக்கிட்டு இருக்கேன். அம்மா இருந்திருந்தா ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பாங்க” என்கிறார் ஓவியர் தங்கம்.

அமரர் கல்கியின் எழுத்தை ஓவியத்தில் கொண்டுவருவது மிகவும் சிரமம். அந்த கதையின் சம்பவங்களை நன்கு மனதுக்குள் உள்வாங்கி, சித்திரமாக சிந்தித்து பதினோரு அத்தியாயங்களை வரைந்து முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறார் தங்கம். தன்னுடைய பதின்ம வயது கனவினை, எண்பதாவது வயதை எட்டும் பருவத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.

வந்தியத்தேவன் அறிமுகமாகும் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார், வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் ஆகிய அத்தியாயங்களின் முக்கிய நிகழ்வுகளை சித்திர விருந்தாக படைத்திருக்கிறார்.

ஓவியப்பள்ளியில் பத்தொன்பது வயதில் படிப்பை முடித்துக் கொண்ட தங்கம், பாலு பிரதர்ஸ் என்கிற ஓவியர்களிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். இந்த பாலு பிரதர்ஸ், அந்த காலத்தில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்துக்கு வரைந்த பேனர் ஓவியங்கள் மிகவும் பிரபலம். அந்நாளைய திமுக மாநாடுகளுக்கும் இவர்கள்தான் ஓவியர்கள். ‘கலை’ என்கிற சினிமாப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுமே தங்கத்துக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.

1958ல் தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வேலைக்குச் சேர்ந்தார் தங்கம்.

“இப்போ சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நீங்க அமர்ந்து வேலை பார்க்கிற இதே ‘தினகரன்’ அலுவலகம்தான் அப்போ ‘தினத்தந்தி’ அலுவலகமா இருந்தது. அங்கேதான் நான் வேலைக்கு சேர்ந்தேன். சி.பா.ஆதித்தனாரிடம் நேரிடையாக வேலை கற்றுக்கொள்ளக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைச்சது. தினத்தந்தியில் கார்ட்டூன் போடவும் வாய்ப்பு கொடுத்தாரு. நான் முதன் முதலில் வரைஞ்ச கார்ட்டூன் எதுக்குன்னா, சினிமா தியேட்டரில் சிகரெட் பிடிச்சா காவல்துறை கைது செய்யும்னு அப்போ அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்குதான்.

‘கருப்புக் கண்ணாடி’ன்னு ஒரு சித்திரத் தொடரை தந்தியிலே ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம் ‘இவள் இல்லை’ன்னு ஒரு தொடர். இதுவும் நல்லா பிரபலமாச்சி. அவங்களோட மாலை நாளிதழான ‘மாலை முரசு’வில் ‘பேசும் பிணம்’ அப்படிங்கிற சித்திரத் தொடர் வரைஞ்சு எழுத கூடுதலா வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்களோட வார இதழான ‘ராணி’யிலும் ‘முத்துத்தீவு மோகிணி’ங்கிற சித்திரத் தொடர் பண்ணினேன். அந்த இதழோட ஆசிரியர் அ.மா.சாமிக்கு இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் அதிகம்”

“நீங்க ‘கன்னித்தீவு’ தொடருக்கும் படம் வரைஞ்சீங்க இல்லையா?”

“அது யதேச்சையா அமைஞ்ச வாய்ப்பு. ‘கன்னித்தீவு’ தொடங்கியபோது அதற்கு படம் வரைந்துக் கொண்டிருந்தவர் என்னுடைய சீனியரான கணேசன் என்கிற ஓவியர். ‘கணு’ என்கிற புனைபெயரில்தான் அவர் வரைவார். எனக்கும்கூட ‘அணில்’, ‘மின்மினி’ மாதிரி புனைபெயர்களை ஆதித்தனார் சூட்டியிருந்தார்.

திடீர்னு கணேசனுக்கு உடல்நலமில்லாம போயிடிச்சி. அவரை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க. அவர்தான் என்னிடம், ‘தம்பி! கன்னித்தீவு எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்னுடக்கூடாது, தொடர்ச்சியா வரணும். நீ வரைஞ்சிக்கொடு’ன்னு கேட்டுக்கிட்டாரு.

அவர் உடல்நலம் பெற்று அலுவலகத்துக்கு திரும்ப ஒரு நாலஞ்சி மாசம் ஆயிடிச்சி. அதுவரைக்கும் நான்தான் ‘கன்னித்தீவு’க்கு வரைஞ்சிக்கிட்டிருந்தேன். அந்தத் தொடருக்கு அப்பவே நல்ல வரவேற்பு. ஆனாலும், ‘கன்னித்தீவு’ தமிழர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறப்போவுது, ஐம்பது வருஷத்தை தாண்டியும் முடிவே இல்லாம தொடர்ச்சியா வரப்போகுதுன்னுலாம் நாங்க நினைக்கவேயில்லை”
“டாக்டரோட மனைவி டாக்டர் என்பது மாதிரி ஓவியரான நீங்களும், இன்னொரு ஓவியரை திருமணம் செய்துக்கிட்டீங்க இல்லையா?”

“திட்டமிட்டெல்லாம் செய்யலை. யதேச்சையா அமைஞ்சது. அவங்களும் நான் படிச்ச அதே கும்பகோணம் பள்ளியில் ஓவியம் படிச்சவங்கதான். சந்திரோதயம்னு பேரு. தூரத்துச் சொந்தம். தஞ்சை கிறிஸ்தவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியரா பணியாற்றி ஓய்வு பெற்றிருக்காங்க. அவங்களும் ரொம்ப நல்ல ஓவியர். ‘மர்மவீரன் ராஜராஜ சோழன்’ என்கிற சித்திரநூலை வரைஞ்சி வெளியிட்டிருக்காங்க.

நாங்க ரெண்டு பேரும் ஓய்வு பெற்ற பிறகு ஓவியக் கலையில் தான் எங்க ஓய்வை கழிக்கிறோம். குழந்தைகளுக்கு ஓவியம் வரைய சொல்லித் தருவதில் என் துணைவியாருக்கு ஆர்வம் அதிகம். எங்களிடம் கற்ற குழந்தைகள் வரையும் ஓவியங்களை வெச்சு மகாத்மா காந்தியின் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம்.

தஞ்சாவூரை சுற்றி இருக்கிற கோயில்களில் நாங்க வரைஞ்ச ஓவியங்களை நீங்க பார்க்கலாம். தஞ்சை பெரிய கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராகவேந்திரா கோயில் ஆகிய இடங்களில் நாங்க வரைஞ்ச தெய்வ திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கு. இருவருக்கும் ஒரே தொழில், ஒரே மாதிரியான கலைமனம் என்பதால் எங்க வாழ்வினை மனசு ஒருமிச்சு ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்”

“இடையிலே நீங்க பத்திரிகைகளில் பணிபுரியலை இல்லையா?”

“ஆமாம். அரசு வேலையில் சேர்ந்தேன். மதுரை, திருச்சின்னு ஓவிய ஆசிரியரா பணியாற்றிட்டு, அதுக்கப்புறம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரா 1963ல் தொடங்கி 33 வருஷம் வேலை பார்த்துட்டு ஓய்வு பெற்றேன்.

மருத்துவத்துறையில் வித்தியாசமான பணி. ஆபரேஷன்களை எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோ எடுக்கணும். இந்த போட்டோக்கள்தான், மருத்துவர்களுக்கு கேஸ் ஸ்டடி பண்ணி, நோயாளிகளுக்கு மேலதிகமா சிறப்புச் சிகிச்சை கொடுக்க உதவும். மருத்துவர் ரங்கபாஷ்யம் அவர்கள் மேற்பார்வை பார்த்து இந்த வேலையை சிறப்பா செய்ய கற்றுக் கொடுத்தார்.

அப்புறம் மைக்ரோஸ்கோப் வெச்சி போட்டோ எடுக்கிற ஒரு கலையையும் இங்கேதான் கற்றேன். இம்மாதிரி எடுக்கப்படும் படங்களை வெச்சி கேன்சர் முதலான நோய்களை உறுதிப்படுத்துவார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய ஊக்குவிப்பில் இந்த வேலையை செய்தேன். ஓவியத்தில் தேர்ச்சி இருந்ததால், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த வேலைகளை திறம்பட செய்து நல்ல பெயர் வாங்க முடிந்தது. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் மாதிரி இதழ்களிலும், அமெரிக்க இராணுவம் கேன்சர் விழிப்புணர்வுக்காக வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ நூல் முதலிய சர்வதேச இதழ்களில் எல்லாம் நான் எடுத்த படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

என்னோட பணி அனுபவங்களை, கலைப்பணிகளையெல்லாம் ‘ஓவியனின் கதை’ என்று சுயவரலாற்று நூலா எழுதி வெளியிட்டிருக்கேன். அமெரிக்காவில் பிசியோதெரபிஸ்டா என் மகன் ராஜேந்திரன் பணிபுரிகிறார். அவரைப் பார்க்க நாங்க அமெரிக்காவுக்கு போனப்போ கண்ட, கேட்ட அனுபவங்களை ‘அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை’ என்று நூலாக எழுதி வெளியிட்டேன். தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருது அந்த நூலுக்கு கிடைத்தது”
“ஆனாலும், சித்திரம் வரையுற தாகம் தணியலை இல்லையா?”

“அதெப்படி தணியும்? எண்பது வயசை நெருங்குறப்பவும் வரைஞ்சுக்கிட்டுதானே இருக்கேன்? தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போகும் போதெல்லாம் ராஜராஜசோழனை சித்திரக்கதையா வரையணும்னு தோணும். அவரோட ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது சின்ன அளவிலே வரைஞ்சி வெளியிட்டேன். ஓய்வுக்கு பிறகு நிறைய இதழ்களில் வரையறேன்.

உங்களோட தினகரன் வசந்தம் இதழில்கூட ‘வீர சோழன்’ என்கிற சித்திரத் தொடரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியா வரைஞ்சி எழுதிக்கிட்டிருந்தேன். நெடுநாள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அத்தொடர் எழுதும்போதுதான் என் மகன் கோயமுத்தூரில் படிச்சிக்கிட்டிருந்தார். அவரோட கல்விச் செலவுக்கு நீங்க மாதாமாதம் அனுப்பற சன்மானம் உதவிச்சி. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்”
“உங்க நூல்கள் கடைகளில் கிடைக்கிறதில்லையே?”

“உண்மைதான். எனக்கு வரையத் தெரியுது. அதை அப்படியே அச்சிடவும் தெரியுது. எப்படி எல்லாருக்கும் விற்பனைக்கு கொண்டுபோறதுன்னு தெரியலை. எங்களோட நூல்களை தஞ்சாவூரில் நேரில் பெறணும்னா தங்கபதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின்ரோடு, மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர்-613501 (கைபேசி : 9159582467) என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளியிட்டிருக்கிறதை கேள்விப்பட்டு நிறையபேர் விசாரிக்கிறாங்க. எல்லாருக்கும் கொண்டு போகணும்னு ஆசையாதான் இருக்கு”

“உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்காரு. மகள்?”

“சென்னை ராணிமேரிக் கல்லூரியில் வேலை பார்க்கிறாங்க. அவங்க பேரை சொல்ல மறந்துட்டேனே? பொன்னியின் செல்வி!”

படங்கள் : பி.பரணிதரன்

(நன்றி : தினகரன் வசந்தம்)

1 ஜூன், 2012

கல்விக்கடன் - FAQs


கல்விக்கடன் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கு

விடையளிக்கிறார் கல்விக்கடன் சேவைப்படையின்

ஒருங்கிணைப்பாளர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன்


+2 முடித்து விட்டேன். எனக்கு கல்விக்கடன் வேண்டும். யாரை தொடர்பு கொண்டு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (Indian Banker’s Association) கல்வி வளர்ச்சிக்கான மாதிரித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில்தான் கல்வி பெறுவதற்கான கடன் வசதி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது உதவித்தொகை அல்ல, கடன். வட்டியும் உண்டு. +2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு எந்தெந்த வகையில் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முதலில் பரிசீலித்து, இறுதியாகவே கல்விக்கடன் பெற முயற்சிக்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் எந்த பொதுத்துறை/தேசிய வங்கியிலும் கல்விக்கடன் பெறலாம். வங்கி மேலாளரை அணுகி கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கடன் தரமுடியுமா முடியாதாவென்று விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து பதினைந்து முதல் முப்பது நாட்களுக்குள்ளாக வங்கிகள் மாணவர்களுக்கு பதில் அளித்தாக வேண்டும். கல்லூரியில் சேர்ந்தபிறகே வங்கியை அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் +2 தேர்வு எழுதியதுமே, மாணவருடன் பெற்றோரும் சென்று, அருகிலிருந்து வங்கிக்கு சென்று மேலாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆலோசனை கேட்டு வைத்துக் கொள்வது நலம்.

யார் யாருக்கெல்லாம் கல்விக்கடன் மறுக்கப்படும்?

கல்விக்கடன் பெற எல்லா மாணவர்களுக்கும் தகுதியுண்டு. ஆனால் வேலைவாய்ப்புக்கு வாய்ப்பில்லாத கல்விக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. கடன் என்பதால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்கிற நியாயமான அச்சம் வங்கிகளுக்கு இருக்கிறது. அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு கண்டிப்பாக கல்விக்கடன் கிடைக்காது.

என்னென்ன சான்றிதழ்கள்/ஆவணங்கள் தரவேண்டும்?

+2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்றுக்காக ரேஷன் அட்டை, பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் நாலரை லட்சத்துக்குள் இருந்தால், தாசில்தார் ரேங்கில் இருக்கும் அரசு அதிகாரி ஒப்பளித்த வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்துடன் கல்லூரியில் சேர்ந்தற்கு சான்றாக அட்மிஷன் கார்ட், மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதற்கான மதிப்பீடு (estimate) ஆகியவையையும் தந்தாக வேண்டும்.

கடனுக்கு பிணை அல்லது உத்தரவாதம் தரவேண்டுமா?

கடன் தொகை நாலு லட்ச ரூபாய் வரை இருந்தால் பிணையோ, உத்தரவாதமோ தேவையில்லை. நான்கு முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை ஆக இருந்தால், மூன்றாம் நபர் ஜாமீன் தரவேண்டும். ஏழரை லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்குமேயானால் சொத்துபிணை வைக்கவேண்டியிருக்கும்.

வட்டிக்கு மத்திய அரசின் மானியம் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதை பெற என்ன செய்யவேண்டும்?

தொழில்நுட்பம் மற்றும் பணிசார்ந்த (professional) கல்வி பயில்பவர்களுக்கு வட்டி மானியம் உண்டு. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் இதற்காகத்தான் கேட்கப்படுகிறது. இச்சான்றிதழை வைத்தே வட்டிக்கு மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும். கல்விக்கடன் பெறும்போதே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் வட்டிக்கு மானியம் குறித்த விளக்கங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் கடன் கொடுக்க மறுக்கும்/தாமதிக்கும் வங்கிகள் குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும்?

வங்கிகளில் எல்லா கிளைகளிலுமே, குறிப்பிட்ட அந்த வங்கிக்கு மண்டல மேலாளர் யாரென்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். கடன் தர மறுக்கும்/தாமதிக்கும் குறிப்பிட்ட வங்கியின் கிளை குறித்து மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் அந்த வங்கியின் தலைவருக்கு மின்னஞ்சல்/மடல்/தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம். ரிசர்வ் வங்கி இம்மாதிரி கல்விக்கடன் குறித்த புகார்களை விசாரிக்கவென்றே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும் இவரிடம் புகார் அளிக்க முடியும்.

வட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறை என்ன? படிக்கும்போதே செலுத்த வேண்டுமா? படித்து முடித்து வேலை கிடைத்தபிறகு செலுத்திக் கொள்ளலாமா?

படிக்கும்போதே வட்டியையோ, கடனையோ திருப்பிக் கட்டச் சொல்லி எந்த வங்கி மேலாளரும் வற்புறுத்த முடியாது. படித்து முடித்து ஒருவருடம் கழித்து (அல்லது) வேலை கிடைத்த ஆறு மாதத்திற்குப் பிறகு அசலோடு வட்டியையும் சேர்த்து மாதாந்திரத் தவணையாக கட்டத் தொடங்க வேண்டும். கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் அவகாசம் தரப்படும்.

குடும்பச் சூழலால் பாதியில் படிப்பை விட்டு விட்டேன். நான் வாங்கிய கல்விக்கடனை வட்டியோடு திருப்பி செலுத்தியே ஆகவேண்டுமா?

ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி இது உதவித்தொகை அல்ல. கடன். எந்தச் சூழலிலும் கடன் என்றால் அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும்.

முதல் ஆண்டுக்கு கடன் கொடுத்துவிட்டு, இரண்டாம் அல்லது ஆண்டுகளில் கடன் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

இம்மாதிரி நிகழ்வது அபூர்வமானது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நல்ல கல்வியை பெறவேண்டும் என்கிற சமூகநோக்கத்துக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கிவிட்டோமே என்று கடனுக்காக கல்லூரிக்குப் போய்வந்தால் அதை பெற்றோர் சகித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடன் கொடுத்த வங்கியால் நிச்சயம் சகித்துக் கொள்ள முடியாது. தங்களிடம் கடன் பெற்ற மாணவர்கள், அதைவைத்து ஒழுங்காக கல்வி கற்கிறார்களா என்று சரிபார்க்கவே வங்கி மேலாளர்கள் மதிப்பெண்களை விசாரித்து தெரிந்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்களை அக்கறையோடு கண்டிக்கிறார்கள். தங்களிடம் கடன் பெற்ற மாணவன் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்று வங்கிகள் எதிர்ப்பார்க்கின்றன. முதல் ஆண்டுக்கு கொடுத்து, அடுத்த ஆண்டுக்கு மறுப்பது மாதிரியான விஷயங்கள் மிக மிக அரிதானது. இம்மாதிரியான விஷயங்களுக்கு துல்லியமான வரையறைகள் ஏதுமில்லை. ஆனால் நியாயமே இல்லாமல் மறுக்கப்படுகிறது என்றால் மண்டல மேலாளரிடமோ, வங்கித் தலைவரிடமோ அல்லது ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியிடமோ புகார் தெரிவிக்கலாம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் கல்விக்கடன் பெறமுடியும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

அப்படியெல்லாம் கிடையாது. அண்ணன் கடன் வாங்கியிருந்தால், தம்பிக்கோ தங்கைக்கோ கடன் தரமுடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. ஆனால் கடன் தொகை அண்ணன், தம்பிக்கும் சேர்த்து நாலு லட்ச ரூபாய்க்கு மேல் செல்லுமேயானால் பிணை, வைப்பு ஆகிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?

மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். போலிஸ் விசாரணை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன். கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தை கூட வங்கி அணுகலாம். கடன் என்றால், அதைத் திருப்பிக் கட்டத்தானே ஆக வேண்டும்?கல்விக்கடன் சேவைப்படை

கல்விக்கடன் விஷயத்தில் மாணவர்களுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக கல்விக்கடன் சேவைப்படை (education loan task force) இயங்குகிறது. சமூக முன்னேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இது நடத்தப்படுகிறது. கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, விளக்கங்கள் தேவைப்பட்டாலோ இந்தப் படையினர் உதவுகிறார்கள். info@eltf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் இவர்களை தொடர்பு கொள்ளலாம். eltf.in என்கிற இணையத்தளத்தில் கல்விக்கடன் குறித்த தகவல்களை பகிர்ந்து வைத்திருக்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

30 ஜனவரி, 2012

இப்படித்தான் திருட்டு டிவிடி தயாராகிறது!

'நண்பன்’ திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியானது. ஆனால், அந்தப் படத்தின் திருட்டு டிவிடி ஜனவரி 1 அன்றே மார்க்கெட்டுக்கு வந்து விட்டது. அதிர்ந்துப் போன இயக்குனர் ஷங்கர் போலிஸ் கமிஷனிரிடம் புகார் கொடுக்க வருகிறார்...

இப்படியொரு அதிரடி தொடக்கத்துடன் ஒரு நாவல் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது. அந்த நாவலின் பெயர் ‘அழிக்கப் பிறந்தவன்’. விலை ரூ. 50. சென்னை கே.கே.நகரில் உள்ள ‘டிஸ்கவரி புக் பேலஸில்’ கிடைக்கும் இந்த நாவல், நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் சக்கைப்போடு போட்டிருக்கிறது.

திருட்டு டிவிடி எப்படி தயாராகிறது.. எப்படி கடைக்குச் செல்கிறது.. என்பதில் தொடங்கி பர்மா பஜாரில் இயங்கும் நிழல் உலக வாழ்க்கையை இன்ச் பை இன்ச்சாக தோலுரித்துக் காட்டும் இந்த நாவலை எழுதியிருப்பவர் யுவகிருஷ்ணா. ’வசந்தம்’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான இவரது முதல் நாவல் இதுதான் என்பது ப்ளசண்ட் சர்ப்ரைஸ்.

”புதுப்படங்களை யாரும் பார்ப்பதற்கு முன்பாக நாம் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும்தான். எனக்கும் இருந்தது. ‘இன்னும் தியேட்டரில் ரிலீஸே ஆகாத புதுப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. பார்க்கிறாயா?’ என்று நண்பன் ஒருவன் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நான் பார்த்த படம்தான் கார்த்திக் நடித்த ‘சுந்தர பாண்டியன்’. படம் வெளிவருவதற்கு முன்பாக திருட்டு விசிடி வந்துவிட்டதால், அப்படம் திரையரங்குக்கே வரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சினிமா நிறுவனத்தில் வேலை பார்த்தபோதுதான், திருட்டு விசிடி சமாச்சாரம் ஒரு சினிமாத் தொழிலையும், அத்தொழில் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதை நேரடியாக உணர்ந்தேன். எங்கள் நிறுவனம் பெரும் முதலீடு செய்து கையகப்படுத்திய ஒரு பெரிய படம், திருட்டு சிடி வந்துவிட்டதால், மிகப்பெரிய நடிகர் நடித்திருந்தும் ஓபனிங் கூட கிடைக்காமல் படுத்துவிட்டது.

இக்காலக்கட்டத்தில்தான் திருட்டு சிடி எந்த வழியிலெல்லாம் தயாராகிறது, எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன். இந்த உலகம் விஸ்தாரமானது. உலகளாவியது. அவ்வப்போது காவல்துறையால் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் ரோட்டில் விற்பனை செய்யக்கூடிய அப்பாவிகள்.ஐம்பதுக்கும், நூறுக்குமாக உழைப்பவர்கள். மாஸ்டர் காப்பி போடும் ‘பாஸ்’கள் மாட்டுவதேயில்லை என்பதை தொடர்ச்சியாக செய்தித்தாள் வாசிப்பவர்கள் உணரமுடியும்.

இப்படிப்பட்ட அப்பாவிகளில் உலகத்தைதான் நாவலில் களமாக்கியிருக்கிறேன். நாவலை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று அடிக்கடி பார்ப்பதற்கும், பஜாரின் பழைய கதைகளை தெரிந்துகொள்வதற்கும் ஒரு மாத காலம் செலவிட்டேன்.

சினிமாத் தொழிலை அழிக்கப் பிறந்த திருட்டு டிவிடியைதான் ’அழிக்கப் பிறந்தவன்’ என்று சுட்டியிருக்கிறேன்” என்கிறார் யுவகிருஷ்ணா.

(நன்றி : தினகரன் வசந்தம் 29.01.2012 இதழ்)

1 ஜூலை, 2010

காமிக்ஸ் வடிவில் இலக்கியங்கள்!


செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளில் அரசும், தமிழார்வலர்களும் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிந்த நேரத்தில், சத்தமில்லாமல் செம்மொழி இலக்கியங்களை நடைமுறைத் தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது கிழக்கு பதிப்பகம்.

மாநாட்டையொட்டி சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை நாவல் வடிவிலும், குழந்தைகளுக்கான படக்கதை (காமிக்ஸ்) வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். அனேகமாக தமிழிலக்கியம் இந்த வடிவங்களில் வருவது இதுவே முதன்முறை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இந்த காப்பியங்களுக்கு உரைநூல்கள் ஏற்கனவே நிறைய உண்டு. உரைநூல்கள் பெரும்பாலும் பண்டித மொழியில், பாமரர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய நடையில் இல்லாததால் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் கிழக்கு பதிப்பகத்தார்.

இப்புதிய வடிவங்களால் சங்க இலக்கியத்தின் வீச்சு நீர்த்துப் போய் விடக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியோடு கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனை சந்தித்தோம்.

“உரைநூல்களற்ற சங்க இலக்கியங்கள் மிகவும் குறைவு. அவற்றின் அர்த்தம், கவித்துவம் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உரை எழுதுபவர்கள் மிக அடர்த்தியான மொழியில் எழுதியிருக்கிறார்கள். நம்முடைய சமகால வாசகர்களின் வாசிப்புக்கு இந்த அடர்த்தி இடையூறு செய்யும்.

பாரதியில் தொடங்கிய நவீன உரைநடை, பிற்காலத்தில் பத்திரிகைகளின் வளர்ச்சியால் எளிமை, அழகு, சுவாரஸ்யத்தோடு வளர்ந்தது. எனவே இந்த உரைநடை வசீகரம், பண்டித தமிழ் மற்றும் பழங்கால இலக்கியங்கள் மீதான வாசிப்பு ஆர்வத்தை வாசகர்களிடம் குறைத்துவிட்டது. இதையடுத்து தமிழிலக்கிய வாசிப்பு என்பது ஆர்வம் சார்ந்ததாக மாறிவிட்டது. கல்வி அடிப்படையில் பார்த்தாலும் கூட சில செய்யுள்களையும், இலக்கியத்தின் சில பகுதிகளையும் நாம் கட்டாயத்தின் அடிப்படையில்தான் மாணவப் பருவத்தில் வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் பண்டிதர்களின் கையில் இருந்த காலம் மலையேறி விட்டது. இப்போது பாமரர் வசம் வந்திருக்கிறது. இந்நிலையில் நம்முடைய பேரிலக்கியங்கள் கடுமை மொழி சார்ந்த பிரச்சினையால் சமகால, எதிர்கால வாசகர்களுக்கு கிட்டாமல் போய்விடக் கூடாது என்று யோசித்தோம். எனவே நாவல் வடிவில் காப்பியங்களை கொண்டுவருவது என்ற திட்டத்துக்கு வந்தோம். இதிகாசங்கள் குழந்தைகளுக்கு படக்கதைகளாக தரப்படுவதைப் போல இலக்கியங்களையும் தந்தால் என்ன என்றொரு கூடுதல் யோசனையும் வந்தது.

ஏற்கனவே நாவல் வடிவம் என்பது வாசிப்பவர்களுக்கு நன்கு பழகிய வடிவமாக இருக்கிறது. சமகாலத் தமிழில் அப்படியே மீண்டும் இலக்கியங்களை புத்தகங்களாக கொண்டு வந்திருக்கிறோம். எதையும் கூட்டவோ, குறைக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. எனவே இலக்கியம் நீர்த்துப் போகும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நம் மொழியின் முக்கியத்துவத்தையும், தொன்மையையும் உலகுக்கு உரத்துச் சொல்லும் வகையில் உலக செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மாநாட்டையொட்டி இந்நூல்களை வெளியிடுவதில் கிழக்கு பதிப்பகம் பெருமை கொள்கிறது.

இவற்றை வாசிப்பவர்கள் சுவையுணர்ந்து மேலதிக வாசிப்புக்கு மூலநூல்களை தேடிப்போகக் கூடிய வாசலை நாங்கள் திறந்துவைக்கிறோம்” என்றார்.

வெகுவிரைவில் ‘முத்தொள்ளாயிரம்’ நூலையும் கொண்டுவர இருக்கிறார்கள். சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் எளிமைப்படுத்தி வித்தியாச வடிவங்களில் கொண்டுவரும் முயற்சியில் கிழக்கு பதிப்பகம் முனைப்பாக இருக்கிறது.

24 மே, 2010

மொழி விவசாயி!

சனி, ஞாயிறு விடுமுறை கிடைத்தால் போதும். தமிழகத்தின் ஏதோ ஒரு நகருக்கு, ஏதோ ஒரு கிராமத்துக்கு அவர் பேருந்து ஏறிவிடுவார். இல்லையேல் புதுவைக்கு அருகிலிருக்கும் ஏதாவது பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள்.

யார் இவர்?

எந்த அமைப்பின் பின்புலமுமின்றி தனிமனிதராக தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி கூட்டங்களை தமிழகமெங்கும் நடத்தி வரும் முனைவர் மு.இளங்கோவன். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிபுரிகிறார். நாற்பத்தி மூன்று வயது.

மாணவர்களை சந்தித்து இணையத்தில் தமிழை பரவலாக்குவதை தன்னார்வத்தோடு தனிநபர் இயக்கமாகவே செய்துவரும் இவரது பின்னணிக் கதையும் சுவாரஸ்யமானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரசோழன் உருவாக்கிய வெற்றி நகரான கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகிலிருக்கும் இடைக்கட்டு கிராமத்தில் பிறந்தவர் இளங்கோவன். படிப்பறிவு இல்லாத குடும்பம். பெற்றோர் விவசாயிகள். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்லலாம். இவரது முன்னோர் ஒரு காலத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலத்தை கட்டி ஆண்டவர்கள். வெள்ளையர் காலத்தில் அப்பகுதியில் பொன்னேரி என்ற பெயரில் செயற்கை ஏரி ஒன்று உருவாக்கப்பட்ட போது இவர்களது நிலங்களை அரசு எடுத்துக் கொண்டது.

மிச்சமிருந்த சொச்ச நிலங்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள் இளங்கோவன் குடும்பத்தினர். பரம்பரை பரம்பரையாக செல்வத்தில் கொழித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதால் கல்வியின் அவசியம் யாருக்கும் தெரியவில்லை. இளங்கோவனின் பெற்றோர் முதன்முதலாக தங்கள் மகனுக்கு கல்வி போதிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்கள்.

அருகிலிருந்த உள்கோட்டை கிராமப் பள்ளிக்கு இளங்கோவனை கல்விகற்க அனுப்பி வைத்தார்கள். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்தவர் மேல்நிலைக் கல்விக்காக மீன்சுருட்டி கிராமத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. தினமும் 13 கிலோ மீட்டர் நடந்து சென்று பள்ளிக்கு செல்வார் இளங்கோவன். மாலையில் அம்மாவுக்கு உதவியாக வீட்டுவேலைகள்.

+2வில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி. இருந்தாலும் தங்களது மகன் +2 வரை படித்ததே பெரிய விஷயம் என்று பெற்றோர் எண்ணினார்கள். அதுவே அவர்களுக்கு போதுமானதாகவும் இருந்தது. இரண்டு மாடு வாங்கி கொடுத்து, மகனை விவசாயம் செய்ய சொன்னார் தந்தை முருகேசன்.

மூன்று வருடங்கள் விவசாயமே எதிர்காலம் என்று உழைத்தார் இளங்கோவன். அவ்வப்போது அருகிலிருக்கும் நகருக்கு செல்வார். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை சீசன்களில் நகரிலிருக்கும் துணிக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிபுரிவார். தமிழார்வம் கொண்ட இளங்கோவன் ‘தென்மொழி’போன்ற இலக்கிய இதழ்களை தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.

ஒருமுறை துணிக்கடைக்கு வந்த தமிழாசிரியர் ஒருவர் இவரது கையில் இருந்த தென்மொழியை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். அவர் வாழ்நாளில் துணிக்கடையில் பணி செய்யும் ஒருவரின் கையில் தீவிர இலக்கிய இதழை கண்டதேயில்லை. ஆச்சரியப்பட்டு இளங்கோவனின் பின்னணியை விசாரித்திருக்கிறார்.

“தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ் படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கும் வரலாம்” என்று அறிவுறுத்தி நெறிப்படுத்தினார். அவரது வழிகாட்டலில் திருப்பனந்தாள் காசி திருமடம் நடத்திய செந்தமிழ் கல்லூரியில் தமிழ் படிக்கச் சென்றார் இளங்கோவன்.

மகன் என்ன படிக்கிறான், அதை படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் அவரது பெற்றோருக்கு தெரியாது. பட்டம் படிக்கப் போகிறேன் என்று சொன்னதுமே வீட்டில் இருந்த எதையோ விற்று காசு கொடுத்து அனுப்பி வைத்தார் அப்பா.

அங்கே இளங்கலை படிக்கும்போது தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்க ஆரம்பித்தார். கல்லூரி, பல்கலைக்கழக அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ள ஆரம்பித்தார். ஆய்வுக்கட்டுரைகளாக எழுதித்தள்ளி பல்வேறு ஆராய்ச்சிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களாக வென்று குவித்தார். திருப்பனந்தாள் மட நிர்வாகம் இளங்கோவனை ஊக்கப்படுத்திக் கோண்டே இருந்தது. அங்கேயே முதுகலையையும் முடித்தார்.

முதுகலை முடித்த பின்னரும் கூட உயர்கல்வி பற்றியோ, வேலைவாய்ப்பு பற்றியோ இளங்கோவனுக்கு ஏதும் தெரியாது. மதுரை இளங்குமரன் என்ற தமிழறிஞரிடம் குருகுல வாசம் செய்து, தமிழ் கற்க முடிவெடுத்தார். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழறிஞர்கள் குருகுலவாசம் மூலமாகவே தமிழ் கற்றார்கள். அந்த அடிப்படையில் மரபுத்தமிழில் பயிற்சிபெற குருகுல வாசமே சிறந்த்து என்று இளங்கோவன் எண்ணினார்.

இந்த காலக்கட்டத்தில் தூயதமிழில்தான் இளங்கோவன் பேசுவார். அவரது நடை உடை பாவனைகள் நூற்றாண்டுக் காலத்துக்கு முந்தைய தமிழறிஞர்களை ஒத்த்தாக இருக்கும். கேலி, கிண்டல்கள் பற்றி இளங்கோவன் கவலைப்படுவதேயில்லை.

அப்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு நாளிதழில் கண்டு விண்ணப்பித்தார். பேராசிரியர் க.ப.அறவாணன் தலைமையிலான தமிழியல் துறையில் ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’எனும் தலைப்பில் ஆய்வுசெய்து இளம் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்பட்ட ஆய்வினையும் நிறைவுசெய்தார்.

மாணவப் பருவத்தில் இருந்தபோது இவர் எழுதிய மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் போராட்ட வீர்ர் வெ.துரையனார் அடிகள் முதலான நூல்கள் வெளிவந்தன.

ஒருவழியாக கல்வி, முனைவர் பட்டம் எல்லாம் முடிந்தது. அடுத்து?

தமிழ்நாட்டின் எல்லா பட்டதாரி இளைஞர்களைப் போலவே இளங்கோவனும் சென்னைக்குப் படையெடுக்கிறார். சென்னையின் பிரம்மாண்டம் அவரை தன்னுள் விழுங்கிக் கொள்கிறது. திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும் என்று இளங்கோவனுக்கு ஆர்வம் அதிகம்.

ஏனெனில், நாட்டுப்புறப் பாடல்களில் நிறைய ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார். ஒப்பாரிப்பாடல், நடவுப்பாடல்கள் ஆகியவற்றை நூற்றுக்கணக்கில் சேகரித்து ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். நம் மண்ணின் வரிகளை வெள்ளித்திரையில் ஒலிக்கச் செய்யவேண்டுமென்பது இளங்கோவனின் ஆசை.

தமிழை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு சரணாலயம் கவிஞர் அறிவுமதியின் அறை. இளங்கோவனும் அவரது அறையில்தான் தங்கியிருந்தார். அறிவுமதிக்கு இளங்கோவன் திரைத்துறைக்கு செல்வதில் விருப்பமில்லை. “தமிழில் ஆராய்ச்சி செய்பவர்கள் மிகக்குறைவு. தமிழறிஞர்களும் சினிமாவுக்குப் போய்விட்டால் யார்தான் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது?” என்று இளங்கோவனிடம் அக்கறையோடு கூடிய கண்டிப்பு காட்டினார்.

தமிழ் மட்டுமே தெரிந்த இளங்கோவனுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளர் பணி கிடைத்தது. அதுவும் தற்காலிகப் பணியே. ‘தமிழியல் ஆவணம்’ என்ற திட்டப்பணியில் ஒரு ஆண்டு பணிபுரிந்தார். ஒப்பந்தம் முடிந்ததும் மறுபடியும் குருகுல வாசம். இம்முறை இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நூல் வெளிவர அவரிடம் ஓராண்டு உதவியாளராகப் பணி.

பேச்சும், மூச்சும், வாழ்வும் தமிழாகவே கழிந்துகொண்டிருந்தது இளங்கோவனுக்கு. வருமானத்தை தவிர எல்லாமே கிடைத்தது அவருக்கு. என் தமிழ் என்னை கைவிடாது என்ற நம்பிக்கையோடு மட்டுமே வாழ்வை அணுகிக் கொண்டிருந்தார். இடையில் ஒரு கலை அறிவியல் கல்லூரியில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வில் வென்றதுமே வாழ்க்கை இவருக்கு வசப்பட்டது. இவர் கேட்டதை எல்லாம் தமிழ் வாரி வாரி கொடுத்தது. இன்று புதுவையின் புகழ்வாய்ந்த கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

2006ஆம் ஆண்டு வாக்கில் இணையம் இவருக்கு அறிமுகமானது. இணையம் உலகத் தமிழர்களை ஓர் புள்ளியில் திரட்டுகிறது என்பதை உணர்ந்தார். குறிப்பாக இளைஞர்களை இணையம் கட்டி வைத்திருக்கிறது. அன்றாட வாழ்வில் தமிழைப் புறக்கணிக்கும் இளைஞர்கள் கூட இணையத்தில் தமிழை கொண்டாடும் நிலையை கண்டார்.

நண்பர்களின் உதவியோடு வலைப்பூ ஒன்றினை உருவாக்கி (http://muelangovan.blogspot.com/) தமிழறிஞர்கள் குறித்த அறிமுகத்தினை தொடர்ச்சியாக பதிய ஆரம்பித்தார். கல்வெட்டுகள் வாயிலாக பழந்தமிழ் அறிஞர்களை குறித்து இன்று அறிகிறோம். இன்று நவீன கல்வெட்டாக செயல்படுவது இணையம்தான். எனவே தமிழுக்காக உழைப்பவர்களை, உழைத்தவர்களை ஆவணப்படுத்த வலைப்பூ இளங்கோவனுக்கு வசதியாக இருக்கிறது.

உலகின் எதிர்காலம் இணையத்தை பெருமளவில் சார்ந்திருக்கும் என்று சொல்லப்படும் இக்காலக்கட்டத்தில் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலமாக மொழியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லமுடியும் என்று நம்பினார். ஊர் ஊராகச் சென்று இவர் இன்று இணையத்தமிழை பரப்பும் பணியை செய்துவருவதற்கு இதுவே காரணம்.

அந்தமானில் இருந்து ஒருவர் கூட தமிழில் இணையத்தில் இயங்காத நிலை இருந்தது. சமீபத்தில் அங்கு சென்றிருந்த இளங்கோவன், அங்கிருந்த தமிழர்களிடம் கணியில் எப்படி தமிழை உள்ளிடுவது, இணையத்தில் தமிழ் மூலமாக இயங்குவது போன்றவற்றை கற்றுத் தந்துவிட்டு திரும்பியிருக்கிறார். எல்லா தமிழர்களுக்கும் தமிழ் - இணையம் குறித்த தெளிவு வேண்டுமென்பதற்காக ‘இணையம் கற்போம்’ என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

நாம் விரும்பினாலும் சரி. விரும்பாவிட்டாலும் சரி. எத்துறையாக இருந்தாலும் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கத்தானே செய்யும்?

பல்வேறு அமைப்புகளின் விருதுகளோடு முத்தாய்ப்பாக, இந்திய அரசின் செம்மொழி மத்திய உயராய்வு நிறுவனம் 2006-07 ஆண்டுக்கான ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’இவருக்கு வழங்கி கவுரவித்திருக்கிறது.

விருதுகளும், பாராட்டுகளும் வரவேற்பறையை அலங்கரிக்க, இன்னமும் திருப்பனந்தாள் மட கல்லூரியில் படித்தபோது இருந்த அதே எளிமையோடே இருக்கிறார் மு.இளங்கோவன். “சட்டையை கழட்டிட்டா இன்னும் நான் விவசாயி தாங்க” வெள்ளந்தியாக சிரிக்கிறார்.

புதுச்சேரியில் அவரை சந்தித்தபோது வருத்தம், மகிழ்ச்சி, வியப்பு, கோபம் என்று பல்வேறு உணர்வுகளில் ஆங்கிலம் கலக்காத அழகுத்தமிழில் பேசிக்கொண்டே போகிறார்.

“தமிழ் வளர நம்முடைய கல்விச்சூழலில் மாற்றம் தேவை. தமிழ்வழிக் கல்வியால் மட்டுமே தமிழின் இருப்பை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கும் உறுதி செய்யமுடியும். அதுபோலவே தமிழ் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையையும் எடுத்துவரவேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் தான் செய்யமுடியும்.

தமிழ் என்பது இன்று பட்டிமன்றங்களில் நகைச்சுவை செய்ய பயன்படுகிறது. மக்களுக்கு தமிழ்ச்சுவையை சூடாக, சுவையாக கொடுத்த பட்டிமன்றங்கள் இன்று சில தமிழறிஞர்களாலேயே வணிகமயமாகி விட்டது எத்தகைய அவலம்?

அயல்நாடுகளுக்கு சென்றிருக்கும் நம் தமிழர்கள் எப்படி தமிழ் வளர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால், தமிழ் சினிமாக்காரர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அவற்றை பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு விற்கிறார்கள்.

தமிழர்களுக்கு தமிழில் நடத்தப்படும் அச்சு ஊடகங்களோ பிழைகளோடு வருகிறது. முழுக்க முழுக்க வேற்றுமொழிக் கலப்போடு தமிழ்க்கொலை செய்கிறது. வானொலி, தொலைக்காட்சி தமிழைப் பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை”

”அப்படியானால் தமிழின் எதிர்காலம் குறித்து அச்சப்பட வேண்டியிருக்கிறது என்கிறீர்களா?”

“அப்படியெல்லாம் நாம் அச்சப்பட்டு விட வேண்டாம். இன்று இணையம் இருக்கிறது. இணையம் என்பது இளைஞர்களுக்கு இதயமாக இருக்கிறது. அவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகவோ, கற்பிக்கும் ஊடகமாகவோ மட்டுமில்லை. எனவே இணையத்தில் தமிழை பரவலாக்கினோமானால் அது அடுத்த தலைமுறைக்கு தமிழை சரியாக கொண்டு சேர்க்கும் பணியாக இருக்கும். தமிழறிஞர்கள் தங்கள் எழுதுகோல்களை மூடிவைத்துவிட்டு கணினியை கற்றுக்கொண்டு, கணினியில் தமிழ் பரப்ப முன்வரவேண்டும். தமிழ் வளர்க்க என்னென்ன சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவோ, எதையும் புறக்கணிக்காமல் அத்தனையையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவேதான் கணினியில் தமிழை எப்படி உள்ளிடுவது? இணையத்தில் தமிழை கொண்டுசெல்வது என்று ஊர் ஊராக போய் கற்பித்து வருகிறேன். வளர்ந்தவர்களுக்கு ஆலோசனைகளோ, வழிகாட்டுதல்களோ எரிச்சலைத் தரும் என்பதால் மாணவசமுதாயத்துக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் தமிழை வாழவைப்பார்கள்.

இணையம் இவ்வளவு இன்றியமையாதது என்பதால்தான் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டோடு இணையமாநாடும் நடத்தப்படுகிறது. இதனால் இணையத்தமிழ் பயன்பாடு தமிழர்களுக்கு நல்லமுறையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன்!”

அரியலூருக்கு செல்லும் அவசரத்தில் இருந்தவர் நம்மிடம் கைகுலுக்கி விடைபெறுகிறார். கையில் கொஞ்சம் புத்தகங்கள், லேப்டாப், சில சிடிக்கள். பேருந்தை பிடிக்கும் அவசரம். எந்தப் பயணமாக இருந்தாலும் தமிழ் அவருக்கு வழிதுணையாக இருக்கும்.

(நன்றி : புதிய தலைமுறை)

14 மே, 2010

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


“சமீபத்தில் என்னுடைய சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். மாடி அறையில் இரு பக்கங்களிலும் ஒரு அடி விட்ட்த்தில் ஒரு வட்டமான துளை. அதிலிருந்து ஒரு குருவி வெளியே ‘கிச் கிச்’ என சத்தமிட்டுக்கொண்டே பறந்துவந்தது. அதைக் கண்ட என்னுடைய பேத்தி ‘தாத்தா இது என்ன பறவை?’ என்று கேட்டாள்.

திகைத்துப் போனேன். சென்னையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நிறைய குருவிகளை கண்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது எங்குமே காணப்படவில்லை. நகரில் வளர்ந்த என்னுடைய பேத்திக்கு, அந்தப் பறவையின் பெயர் கூட தெரியவில்லை. என் நினைவுக்கு தெரிந்தவரையில் பத்தாண்டுகளாக, குருவிகளை கண்டதாக நினைவில்லை. சிட்டுக்குருவிகள் எல்லாம் எங்கே போனது? ஏன் போனது? யாராவது எனக்கு பதில் கூறுவார்களா?” என்று புதிய தலைமுறைக்கு கடிதம் எழுதியிருந்தார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் கே.திரவியம்.

கடிதத்தை கண்டதும் நமக்குள்ளும் ‘சிட்டுக்குருவிகள் எங்கே போச்சு?’ என்ற கேள்வியே எழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலரும், இயற்கை உலக நிதியகத்துக்கான (WWF-India) அறங்காவலருமான தியடோர் பாஸ்கரனிடம் வாசகரின் கடிதத்தைக் காட்டினோம். அவர் விரிவாகவும், வேதனையோடும் பேச ஆரம்பித்தார்.

“பறவைகளைப்பற்றி என்னிடம் பேசுபவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 'சிட்டுக்குருவிகளை இப்போது ஏன் காண முடிவதில்லை? மனிதருக்கு மிக அருகில் உரிமையுடன் வாழும் பறவை. புள்ளினத்தைப்பற்றி ஒன்றும் அறியாதவரும் சிட்டுகுருவியை இனங் கண்டுகொள்ள முடியும்.

சிறிது எண்ணிப் பார்த்தோமானால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல.. முன்பு நாம் எளிதில் கண்ட பல பறவைகளையும் கூட இப்போது அரிதாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதுகளில் சென்னை மவுண்ட் ரோடில் இருந்த ஒரு அரசு விடுதியில் நான் தங்கும் போதெல்லாம் காலையில் மெரினாவிற்கு நடந்து போவதுண்டு. அப்போது வாலாஜா சாலையில், அரசு விருந்தினர் விடுதிக்கு அடுத்த ராஜதானி கல்லூரி மகளிர் விடுதியின் முன் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதனடியில் பலர் நின்று கொண்டு கூப்பிய கைகளுடன் மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை தினமும் பார்த்ததுண்டு. அந்த புளியமரத்தில் அடைந்திருந்த பல செம்பருந்துகள் காலையில் மரத்தை விட்டு பறந்து செல்லும் போது அவைகளைத் தரிசிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்று சென்னையில் செம்பருந்தை யாராவது உங்களால் காண முடிகின்றதா? வெண்கொக்குகள் மாலையில் கூட்டம் கூட்டமாக வடதிசை நோக்கிப் பறப்பதை இன்று நாம் காணமுடிகின்றதா? கிளிகளின் கூட்டம் இன்று எங்கே போனது?

சுற்றுப்புற சூழலின் இயல்பு கெடாமலிருப்பதற்கு பறவைகள் ஒரு குறியீடு. ஒரு வயல்வெளியிலோ அல்லது ஏரியிலோ பறவைகளே இல்லாதிருந்தால் அங்கு சுற்றுச்சூழல் மாசுபட்டிருக்கிறது என்றும், அதனால் நீரில் வேதியல் பாதிப்பு இருக்கிறது என்றும் யூகிக்கலாம். ரசாயன பூச்சிமருந்துகளாலும் வேதியல் உரங்களாலும் நீரும் நிலமும் மாசுபடுத்தப்பட்டுவிட்டன. பறவைகளின் வாழ்விடங்கள் மாசுபடுவதற்கு முக்கிய காரணியான DDT என்ற நச்சு மருந்து 1942இல் பால் முல்லர் என்ற அறிவியலாளர் உருவாக்கி அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.

நமது நாட்டில் 1949இல் அறிமுகம் செய்யபட்ட DDT சார்ந்த இம்மருந்துகளை ஐம்பதுகளில் வேளாண்மையில் பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்தனர். பறவைகளுக்கு பிடித்தது கேடுகாலம். பூச்சிக்கொல்லி மருந்துகள் பல அவதாரங்கள் எடுத்து பல பெயர்களுடன் வெளிவந்தன. இன்று நம்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துத் தொழிலில் மட்டும் 5000 கோடி ரூபாய் புரள்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு ஆண்டிற்கு 60,000 டன் நச்சுமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது என்கிறது ஒரு கணிப்பு.

பயன்படுத்த ஆரம்பித்து இருபது வருடம் கழித்தே இதன் தீயவிளைவுகளை உணர முடிந்தது. இந்த நச்சு மருந்துகளின் - அவைகளில் பெயர்களை விட்டுவிடுவோம் - வேதியல் கூற்றின் அடிப்படை இயல்பு அவைகளின் அழியாத்தன்மை (persistence). எந்த இடத்திலும், எந்த உடலிலும் அது வீரியம் குறையாமல் இருக்கும். நீரிலிருந்து, தவளையில் உடலின் சென்று, பின் அதை இரையாகக்கொள்ளும் செம்பருந்துவின் உடலின் தங்கி அதை அழித்து விடுகின்றது. பருந்துகள் இடும் முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்காது. சிட்டுகுருவிக்கும் இதே கதிதான். அது உண்ணும் சிறு தானியங்களிலிருக்கும் நச்சுப்பொருள் அதன் இனப்பெருக்கத்தை தடுக்கின்றது.

பூச்சிமருந்துகள் தீமை இழைக்கும் சிறு உயிரினங்களை மட்டுமல்லாமல் மருந்து தெளிக்கப்படும் இடத்திலுள்ள எல்லா பூச்சி புழுக்களையும் அழிக்கின்றன. மழைக்காலத்தில் இந்த மருந்துகள் நீரில் கரைந்து ஏரிகளையும் குளங்களையும் அடைந்து அங்கு வாழும் சிற்றுயிர்களையும் நாசம் செய்கின்றது. இந்த உயிரினங்களை இரையாகக்கொண்டு வாழும் புள்ளினங்கள் மறைய ஆரம்பிக்கின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், எந்த சமயத்தில் வானத்தைப் பார்த்தாலும் ஏதாவது பறவைகளைக் காண முடியும். இப்போது நிலைமை வேறு. சில வாரங்களுக்கு முன், சித்தாலப்பாக்கம் அருகே ஒரு மாலையில், ஒரு பாறையின் மீது இருந்து சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அரைமணி நேரம் இருந்திருப்போம். அந்தப் பரந்த வானத்தில் அந்த மாலையில் நாங்கள் எந்தப்பறவையையும் பார்க்கவில்லை. இரு வாலாட்டி குருவிகளைத்தவிர. புள்ளினம் எவ்வளவு அரிதாகிவிட்டது என்று புலப்பட்டது. சிட்டுக்குருவியும் இதுபோலத்தான் சுற்றுச்சூழல் மாசுவிற்கு பலியாகி விட்டது.

அதுமட்டுமல்ல. பழைய காலத்தில் ஓட்டு வீடுகள் அதிகம் இருந்த போது அந்த ஓட்டின் இடைவெளியில் கூடிகட்டி பல்கி பெருகிக் கொண்டிருந்தது. ஓட்டு வீடுகள் மறைந்து கான்கிரீட் கட்டடங்கள் வந்த பின் குருவிக்கு கூடு கட்ட இடமில்லை. மூன்றாவது காரணம் செல் தொலைபேசி டவர்கள் என்று சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த டவர்களிருந்து உருவாகும் கதிரியக்கம் பறவைகளை இனப்பெருக்கத்தை சீரழிக்கின்றது என்று சென்னையிலுள்ள உயிரியிலாளர் ரஞ்சித் டேனியல் கூறுகின்றார். சென்னை நகரிலிருந்த சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, புல்புல், மணிப்புறா, செம்பருந்து போன்ற அன்றாடம் எளிதாகக் காணக்கூடிய புள்ளினங்களும் அரிதாகி விட்டன என்கிறார் டேனியல்.

கோவையிலுள்ள சலிம் அலி பறவையியல், இயற்கை வரலாறு மையத்திலுள்ள உயிரியலாளர்கள் ஒரு பரிசோதனை செய்து இதை அறிந்துள்ளனர். ஐம்பது முட்டைகளை செல் டவர் கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமடம் வைத்து பின் பரிசோதித்தில் எல்லா முட்டைகளில் கருக்களும் சிதைக்கப்பட்டிருந்ததை பதிவு செய்திருக்கின்றன.

சிட்டுக்குருவிகளில் ஆண்குருவிக்கும் பெண்குருவிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் உண்டு. ஆண்குருவியின் இறக்கைகளில் சிறிது செங்கல் நிறமிருக்கும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே கூடுகட்டும். குஞ்சுகள் பொரித்தவுடன் இரண்டும் இரைதேடிக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டி விடும். சிட்டுக்குருவிகள் தானியங்களை உண்டு வாழ்ந்தாலும், குஞ்சுகளுக்கு புழு, பூச்சிகளைத்தான் இரையாகக் கொடுக்கின்றன.

இப்படி ஒன்றாக, ஆணும் பெண்ணும் சேர்ந்து குஞ்சுகளை பராமரிப்பதை சில பறவை இனங்களே செய்கின்றன. மயிலினத்தில் பெண்மயில் மட்டுமே குஞ்சுகளை பராமரிக்கும். மனிதருடன் மிக நெருக்கமாக இருந்த பறவை சிட்டுக்குருவி. வீடுகளிலும் பொது இடங்களிலும் அதன் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். இன்று நம்மை விட்டு விலகிப்போய் விட்டது. பறவை ஆர்வலர் யாரவது சிட்டுகுருவி ஒன்றைக் கண்டால் உடனே மின்னஞ்சலில் tamilbirds என்ற யாஹ¥ குழுவிற்கு செய்தி அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்!” என்று முடித்தார் தியோடர் பாஸ்கரன்.

மனித இனம் எது எதையோ தேடி, தம்மிடம் இருப்பதை இழந்து வருகிறது என்பது மட்டும் அவரது பேச்சில் புரிகிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

12 ஏப்ரல், 2010

ஏ.ஆர்.ரஹ்மான் - பிரத்யேகப் பேட்டி!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிராமி விருது வாங்கியபோது கிராமி நாயகன் ஒரு பதிவிட்டிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டிக்காக சந்தித்த அனுபவங்களை அதில் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

பதிவை வாசித்த பலரும் அப்பேட்டியை இணையத்தில் ஏற்றும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சீனியர் கல்யாண்ஜி தன்னுடைய வலைப்பதிவில் இப்போது அப்பேட்டியை பதிவிட்டிடுக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டியை இங்கே வாசிக்கலாம்!

17 மார்ச், 2010

விலைவாசி எதிர்வினை - Writer Visa

விலைவாசி குறித்த ஈரோடு அருணின் கருத்துக்கு எழுத்தாளர் விசாவின் எதிவினை இது :

சில வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ஆற்காட்டார் ஒரு அறிக்கை விட்டார் அதில் "எல்லோரும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். எல்லோரிடமும் பணம் இருக்கிறது. அதனால் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. விலை வாசி உயர்ந்தால் என்ன? விலை வாசி உயர்வால் யாரும் பாதிக்கப்படவில்லை". இப்படி ஒரு பாமரத்தனமான அறிக்கையை நான் ஒரு தமிழக அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.ஆனால் தமிழக மக்களுக்கு இது தான் தரமான அறிக்கை. காரணம் அவர்களுக்கு எட்டியது அவ்வளவு தான்.

எழுத்தாளர்களை விட சினிமா ஹீரோக்களை அதிகம் நேசிக்கும் நம்மை போன்றவர்கள் வாழும் ஒரு தேசத்தில் தான் ஒரு அமைச்சர் இவ்வாறான ஒரு அறிக்கையை விட்டும் தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியும்.

நான் ஜெர்மனியில் வேலை பார்த்த போது என்னுடைய சம்பளம் 2600 ஈரோக்கள். எல்லா வரி பிடித்தங்களும் போக. நான் நண்பர்களோடு சமைத்து சாப்பிட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் கறியோ மீனோ சமைப்போம்.எந்த வித தடைகளும் இன்றி விரும்பியதை வாங்கி சமைத்து உண்டு வந்தோம்.

அப்படி ஆடம்பரமாக உணவுக்கு செலவு செய்த போதும் எங்களின் ஒரு மாத உணவு செலவு வெறும் 100 ஈரோக்கள் தான். அதாவது நான் வாங்கிய சம்பளத்தில் 26-ல் ஒரு பங்கு தான் நான் உணவுக்கு செலவு செய்திருக்கிறேன்.

இந்தியாவில் 26000 ரூபாய் சம்பளம் பெற்றால் வெறும் ஆயிரம் ரூபாயில் என்னால் அப்படி ஒரு லக்சுவரி உணவை கனவில் கூட எதிர் பார்க்க முடியாது. இந்தியாவில் வாரத்துக்கு 2000 என்பதாக 8000 ரூபாய் வரை செலவாகும்.

அதாவது நான் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை உணவுக்காக செலவு செய்ய வேண்டும். இப்போது சொல்லுங்கள். விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜெர்மனி போன்ற நாடு சிறந்ததா அல்லது எல்லோரிடமும் பணம் இருக்கு, விலைவாசி இஷ்டத்துக்கும் ஏறட்டும் என்று சாடிஸ்ட்தனமாக சிந்திப்பது சிறந்ததா? இத்தனைக்கும் ஜெர்மனி ஒரு வளம் கொழிக்கும் விவசாய நாடல்ல.

விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படை காரணிகளாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் :

Supply – Depends on the Availability of a commodity. சந்தையில் விற்பனைக்காக வரும் ஒரு பொருளின் அளவு. இதுக்கு மேல இதை தமிழில் சொல்ல முடியவில்லை. நீங்களே உங்களுக்கு வாகாக மொழி பெயர்த்துக்கொள்ளவும்.

Demand – Varies with the need and purchasing power of the individuals. சந்தையில் அந்த பொருளின் தேவை. இது இரண்டு காரணிகளால் கூடும். ஒன்று அதன் அத்தியாவிசியம் மற்றொன்று அதை வாங்கும் அளவுக்கு மக்களிடம் அதிகபடியான பணம் இருக்க வேண்டும்.

Excess purchasing power. சப்ளை அதிகமாக இருந்து டிமாண்ட் குறைவாக இருக்கும் போது விலைவாசி குறைவாக இருக்கும் என்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிற விஷயம்.
இப்போது விலைவாசி ஏறுகிறதென்றால் சப்ளை குறைவாக இருக்க வேண்டும். Demand அதிகமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் விலைவாசி ஏறுகிறது. தற்போதைய விலை வாசி ஏற்றத்திற்கும் Demand மற்றும் Supply ஏற்றத்தாழ்வுகளே காரணம்.

இதை யார் சரி கட்டுவது?

இதை அரசாங்கம் தான் சரி கட்ட வேண்டும். சும்மா மக்களிடம் போலியாக அறிக்கைகள் விடுவதையும் ரிசர்வ் வங்கியின் மூலம் சில கட்டுப்பாடுகள் விதிப்பதையும் விட்டுவிட்டு நிஜமாக அரசாங்கம் களத்தில் குதித்து தீர்வு காணவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு பண வீக்கம் அதிகமாக இருந்Tஹது விலைவாசியும் அதிகமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கம் குறைவாக இருந்Tஹ போதும் விலைவாசி விண்ணை முட்டி நின்றது .

இதற்கு காரணம் யார்?

இதை கட்டுக்குள் கொண்டு வராத அரசாங்கம். எப்படி என்று கேட்பீர்களானால் விளக்குகிறேன்.

உங்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வீட்டு மனைகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதற்கு ஐ.டி. துறை தான் காரணம் என்று பாமரத்தனமாக கட்டுரைகள் எழுதி ஐ.டி. துறையில் இல்லாத மக்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து சபித்து மகிழ்ந்தார்கள்.

உண்மையில் ஐ.டி. துறை தான் அந்த விலை ஏற்றத்திற்கு காரணமா?

அப்போது வீட்டு மனைகளின் விலை உயர்ந்தது. வீடுகளின் விலை உயர்ந்தால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் வீடுகளின் விலை உயர்கிறதென்று சமாதானம் அடையலாம். ஆனால் வெறும் தரையும், மண்ணும் இப்படி ஒரு வகை தொகை இல்லாமல் விலை ஏறிக்கொண்டிருக்க காரணம் யார்?

நூறு மனைகள் இருக்கிறது. ஆயிரம் பேர் வாங்குவதற்கு தயாராஇ இருக்கிறார்கள். அந்த ஆயிரம் பேரில் நூறு பேர் தான் உண்மையில் வாங்க பண வசதி படைத்தவர்கள். மீதி 900 பேர் வங்கிகளால் பணம் வழங்கப்பட்டு அந்த போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இப்போது அந்த நூறு மனையை வைத்திருக்கும் ஓனர்களும் விற்பனையில் ஈடுபடும் இடை தரகர்களும் என்ன விலை சொன்னாலும் ’வாங்க ஆளிருக்குடா மாமே அதனால இஷ்டத்துக்கு விலையை ஏத்து’.

‘இன்னைக்கு வந்தா அம்பது லட்சம் நாளைக்கு வந்தா அறுபது லட்சம்’ - இந்த டயலாக்கை என் காது பட கேட்டிருக்கிறேன். இப்படி இஷ்டத்துக்கு ஏற்றிவிட்டது யார்? இப்போது இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் என்ன சொல்கிறது. 1000 பேர் வாங்க தயாராய் இருக்கிறார்களே? பிறகு என்ன நம்ம நாட்டில் கஷ்டம் வந்துவிட்டது. கேக்குற விலையை கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று பொறுப்பற்ற தனமாய் சைக்கோ தனமாய் சாடிஸ்ட் தனமாய் இருந்துவிட்டு பொதுமக்கள் ஐ.டி. துறை மேல் பாய விட்டு வேடிக்கை பார்ப்பதையும் கை தட்டி வரவேற்ற நாம் முட்டாள்கள் தானே?

இந்த எடுத்துக்காட்டின் மூலமாக நான் சொல்ல வருவது என்ன வென்றால் விலைவாசியை Supply - Demand எனும் காரணிகளிடம் கண்ணை மூடி அரசாங்கம் ஒப்படைத்துவிட்டால் சப்ளை எனும் ஒரு காரணியை குறைத்து விலை வாசியை யார் வேண்டுமானாலும் ஏற்றலாமே.

உதாரணமாக பத்து பேர் ஒரு தெருவில் இருக்கிறார்கள். ஒரு கடை இருக்கிறது. பத்து பேரும் காலையில் சிகிரெட் வாங்கி பிடிப்பார்கள். இப்போது சிகிரெட்டின் விலை ஐந்து ரூபாய். அடுத்த நாள் கடைக்காரன் என்னிடம் ஐந்து சிகிரெட்டுகள் தான் இருக்கிறது (மற்ற ஐந்தை வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு) எனவே உங்களில் யார் ஒரு சிகிரெட்டுக்கு பத்து ரூபாய் தருகிறார்களோ அவர்களுக்கு நான் சிகரெட் கொடுக்க தயார் என்கிறான்.

உடனே அதில் வசதி படைத்த இரண்டு பேர் ஐ.டி. துறையில் மூன்று பேர் பத்து ரூபாய்க்கு சிகிரெட் வாங்கி பிடிக்கிறார்கள். சிகிரெட் கிடைக்காத மீதி ஐந்து பேர் சிகிரெட் விலை உயர ஐ.டி. துறை தான் காரணம் என்று கட்டுரை எழுதி சாந்தமடைகிறார்கள். இது தான் இன்றைய நிலை.

எனவே அரசாங்கம் போலியாக சந்தையில் சப்ளையை குறைத்து விலை வாசியை ஏற்றிவிடும் இடைத்தரகர்களை கண்டறிய வேண்டும். மேலும் இலவசத் திட்டங்களுக்கு செலவிடும் உணவு தானியங்களால் கூட பொது மார்க்கெட்டில் விலை வாசி உயர வாய்ப்புண்டு. அதையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.

இதையும் மீறி நிஜமாகவே சப்ளை குறைகிறதென்றால் அது எதனால் என்றும் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்திற்கு அதிக சலுகைகள் வழங்கலாம்.
மேலும் இந்திய வணிகத்தில் இந்தியா கோதுமையை குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிக அதிக விலைக்கு அதே கோதுமையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பது தெரியுமா? அதற்கு டிரேட் டிபிசிட்டை காரணம் காட்டுகிறது அரசாங்கம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அரசாங்கம் சரியான நேரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்கிற போது சில உடன்பிறப்புக்கள் தங்கள் அரசியல் தோழர்களே பாதிக்கப்படலாம் என்பதால் அரசும் அத்தனை தீவிரமாய் நடவடிக்கை எடுப்பதில்லை. வெங்காயத்தின் விலை உயர்வை பற்றி தெரிந்திருக்கும். எந்த ஒரு பொருளின் சப்ளையையும் கட்டுப்படுத்தி விலைவாசியை உயர்த்த முடியும். அப்படி யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அல்லது எது கட்டுப்படுத்துகிறது? அரசாங்கத்தின் எந்த திட்டம் கட்டுப்படுத்துகிறது? என்பதை ஆராய்ந்து அதற்கான எதிர் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு எல்லாருக்கும் நல்ல சம்பளம் இருக்கு விலைவாசி ஏறினா என்னான்னு கேட்டு பாமரத்தனமா பேசுறது எப்படி இருக்குதுன்னா, ‘கேளேன்.. நீ கேளேன்.. மச்சி நீ கேளேன்’ன்னு சொல்றமாதிரி இருக்கு.

எவனும் கேக்க வேண்டாம் போங்கய்யா.

அன்புடன்
விசா

* - * - * - * - * - *

- இந்த விவாதம் என்னுடைய வலைப்பூவை பொறுத்தவரை முடிவடைகிறது. இப்பதிவுக்கான எதிர்வினைகளை இங்கே பின்னூட்டமாக இடலாம். அல்லது அவரவர் வலையில் பதிந்து மேற்கொண்டு விவாதம் நீள வழிவகுக்கலாம். வலைப்பதிவு இல்லாதவர்கள் யாரேனும் கட்டுரையாக வரைந்தால் மட்டுமே என்னுடைய வலைப்பூவில் வெளியிட முயற்சிக்கிறேன்.

இச்சூழலுக்கு முக்கியமான விவாதத்தை தொடங்கிய அருணுக்கும், தொடர்ந்த விசாவுக்கும் எனது நன்றி.

அன்புடன்
யுவகிருஷ்ணா

விலைவாசி உயர்வு - நிபுணர் கருத்து

விலைவாசி உயர்வு பற்றி பலரும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும்போது ஆன்லைன் டிரேடிங் செய்துவரும் வியாபாரியான ஈரோடு அருண் மட்டும் வேறு மாதிரியாக சொல்கிறார்.

“விலைவாசி உயர்வு என்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் உணவுப்பொருட்கள், தங்கம் மாதிரியான பொருட்களை தொடர்ச்சியாக வர்த்தகம் செய்து வருகிறோம். தங்கம் அதன் அதிகபட்ச விலை உயர்வை கண்டபோதும் கூட, எப்போதும் நடக்கும் வர்த்தகம் எங்களுக்கு நடந்துகொண்டே தானிருந்தது. விலை அதிகமாகி விட்டது என்று காரணம் கூறி, யாரும் எதையும் வாங்குவதையோ, வாங்கும் அளவையோ குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை.

என் பாட்டி காலத்தில் சவரன் முப்பது ரூபாய் விற்றதாக சொல்வார்கள். அப்போது என் தாத்தாவின் வருமானம் மாதம் நாற்பது ரூபாயாக இருந்திருக்கும். இன்று பண்ணிரெண்டாயிரம் ரூபாய்க்கு மேலாக ஒரு சவரன் விற்கிறது. எனது வருமானம் அதை வாங்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது இல்லையா? இதன் மூலமாக நான் உணர்வது என்னவென்றால், விலையேற்றத்தின் போது வாங்குபவனின் வருமானமும் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இப்போது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்களும், ஊடகங்களும் குற்றம் சாட்டுகின்றன. மத்திய அமைச்சர் ஒருவரும் ஒத்துக்கொண்டதாக செய்தித்தாள்களில் படித்தேன். பொருட்களின் தயாரிப்பு அளவு குறைந்திருப்பதால், ‘டிமாண்ட்’ ஏற்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். நாட்டின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவினை அதிகப்படுத்துவதின் மூலமாக இந்தப் பிரச்சினையை சரிசெய்துவிடலாம் என்று எனக்கு தோன்றுகிறது. விவசாயம் செழிக்க வேண்டியதின் அவசியத்தை இது உணர்த்துகிறது.

தக்காளி வியாபாரி, வெங்காயம் வாங்கும்போது விலைவாசி உயர்ந்துவிட்டது என்று புலம்புவார். தக்காளியின் விலையும் உண்மையில் உயர்ந்திருக்கும். வெங்காய வியாபாரி தக்காளி வாங்கும்போது அவரும் விலை உயர்ந்துவிட்டது என்று நொந்துகொள்வார். இரண்டு பேரின் விற்பனைப் பொருளின் விலையும் உயர்ந்துவிட்டதால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துவிடப் போவதில்லை. ஆயினும் ‘எண்கள்’ அடிப்படையில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

நான் சொல்வதெல்லாம் நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டும் பொருந்தும் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஏழைகளின் அவதி பற்றி என் பேச்சில் எதுவுமேயில்லை என்றும் நீங்கள் சொல்லலாம். ஒரு வியாபாரியாக லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கறாராக பேசுவதாகவும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஏழைகளின் அவதி எப்போதுமே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஏதாவது அதிசயம் செய்து விலைவாசியினை குறைத்துவிட்டால் மட்டும் ஏழ்மை நீங்கிவிடாது. அப்படிக் குறைக்கப்பட்டாலும் அதன் பலன் பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்குமே போய் சேரும். அவர்களது சேமிப்பு அதிகமாகுமே தவிர்த்து ஏழ்மை ஒழிந்துவிடாது. வறுமை ஒழிப்புக்கு வேறு சாதுர்யமான திட்டங்கள் தேவை.”

அருணின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து யாரேனும் எழுத விரும்பினால் எழுதலாம். எழுதிய கட்டுரையை என் மின்மடலுக்கு புகைப்படத்தோடு அனுப்பலாம். பிரசுரிக்க தயாராக இருக்கிறேன்.