Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

February 3, 2015

இசை

SJ Surya came with bigbang back

இளமை துள்ளோ துள்ளுவென்று துள்ளுகிறது. கதாநாயகியின் தொப்புளை பியானோவாக்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் இதயம் ஏகத்துக்கும் எகிறி குதிக்கிறது.
நாயகியின் பெயர் சாவித்ரியாம். இடுக்குப்பல். வட்டமான முகம். ரோஜா நிறம். கழுத்துவரை பக்கா ஃபேமிலி லுக். முகலாய இளவரசிகள் பயன்படுத்திய மஸ்லின் துணிதான் இடைவேளை வரை இவருக்கு தாவணி. டிரான்ஸ்பரண்டாக இரு கோடுகள் ஜெயராஜின் ஓவியம் போல அப்பட்டமாக கேமிராவில் பதிவாகிறது. இவரது இடுப்புக்கு ஸ்பெஷல் லைட்டிங் வைத்திருக்கிறார் கேமிராமேன். நடிப்புக்கு ஜோதிகாவையும், சிம்ரனையும் டிப்பி அடிக்கிறார்.

சூர்யாவுக்கு முகம் கொஞ்சம் முத்தலாக இருந்தாலும் சேட்டைகளுக்கு குறைவில்லை. பாரதிராஜா மாதிரி கம்பீர குரல். இவருடைய பாம்புகடிக்கு சாவித்ரி மருந்து கொடுக்கும் லாவகத்தை பார்க்கும்போது, நம்மை ஏதாவது தண்ணிப் பாம்பாவது கொத்தித் தொலைக்கக்கூடாதா என்று ஆதங்கம் ஏற்படுகிறது.

படத்தின் தொடக்க காட்சிகள் படைப்பாற்றலின் உச்சம். இசை என்பது கேட்கக் கடவ உருவான சமாச்சாரம். அதை விஷூவலாக மாற்றிக் காட்டமுடியுமா என்கிற சவாலை ஏற்று அனுபவித்து இழைத்திருக்கிறார். குறிப்பாக மலைமுகட்டில் நின்றவாறே நோட்ஸுக்கு கை ஆட்டும் காட்சி ‘ஏ’ க்ளாஸ். டைட்டானிக்தான் இன்ஸ்பிரேஷன். இருந்தாலும் அதை தமிழ்ப்படுத்தியிருப்பதில் சூர்யாவின் தனித்தன்மை பளீரென்று கவர்கிறது. வனத்துக்கு நடுவே அருவிக்கு அருகில் ரெக்கார்டிங் தியேட்டர் மாதிரியான ஐடியாக்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கூட வந்திருக்க வாய்ப்பில்லை.

சத்யராஜை இப்படியும் ஓர் இயக்குனர் பயன்படுத்த முடியுமா என்று காட்சிக்கு காட்சி ஆச்சரியம். அவருடைய நடிப்புலக வாழ்வின் மைல்கல்.

எஸ்.ஜே.சூர்யா, தமிழ் நிலம் தன்னகத்தே உருவாக்கியிருக்கும் மாபெரும் இண்டெலெக்ச்சுவல். யாருடைய தாக்கத்தாலும் பாதிக்கப்படாமல் உருவாகியிருக்கும் சுயம்பு.

‘இசை’ வணிகரீதியாக வெல்லுகிறதோ இல்லையோ, படைப்பாற்றல் ரீதியாக தமிழ் சினிமாவின் புலிப்பாய்ச்சல். சினிமா என்பது டைரக்டர்களின் மீடியம் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் படம்.

ஓக்கே. படம் பற்றிய உள்ளடக்கரீதியான விமர்சனம் ஓவர்.

* * * * * * *

இசை, இன்னொரு மாதொருபாகன்.

தமிழ்-இந்திய பிரபலங்கள் குறித்து இதுவரை நாம் வாய்மொழிவரலாறாக கேள்விப்பட்ட அத்தனை வக்கிரங்களையும் காட்சியாக்கி இருக்கிறது. மொத்த கேஸையும் தூக்கி சத்யராஜ் கதாபாத்திரத்தின் மீது சுமத்தியிருக்கிறது.

இது புனைவு. கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே. படைப்பாளிக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது மாதிரி பஜனை கோஷங்கள் வேலைக்கு ஆகாது.

சூர்யா, ஏ.கே.சிவாவாக அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அவர் கொடுக்கும் போஸ் வாழும் இளம் இசையமைப்பாளரை (தமிழ்ச்சூழலில் இன்றைய தேதிக்கு 62 வயது வரைக்கும் ‘இளம்’தான்) நினைவுபடுத்துகிறது. அந்த பாத்திரத்தின் ஒர்க்கிங் ஸ்டைல், தனிப்பட்ட பண்புகள் அனைத்துமே அவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக ‘இசைக்கடல்’ என்கிற பட்டம் வேறு.

இசைக்கடலுக்கு வில்லன் இசைதேவனாம். தமிழில் இசைக்கு யார் தேவன் என்று கேட்டால் பிறந்த குழந்தை கூட ‘ங்கா..ங்காஜா’ என்று மழலைமொழியில் சொல்லிவிடும்.

தான் துப்புவது கூட இசை. அனைவரும் தன் காலில் விழுந்து அதை பொறுக்கிக் கொண்டு போகவேண்டும் மாதிரி தன்னகங்காரம் என்பதெல்லாம் அப்படியே அவருக்கு பொருந்துவது மாதிரி காட்சியமைப்புகள். அதுவும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த இயக்குனர் ஒருவரே முகத்தில் காறித்துப்பப்பட்டு போவது மாதிரி ஒரு காட்சி…

படம் நெடுக இதுமாதிரி காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதெல்லாம் இசைதேவன் மீதான இயக்குனரின் விமர்சனமாக இருக்கலாம். பிரச்சினை இல்லை.

இசைக்கடலை நிலைகுலைக்க வைக்க இசைத்தேவன் செய்யும் கற்பனைக்கும் எட்டாத வக்கிரமான செயல்பாடுகள்?

இது கற்பனை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் படம் பார்க்கும் ரசிகன், நிஜத்தையும் நிழலையும் ஒப்பிட்டுப் பார்த்து அவரை ‘கதாபாத்திர படுகொலை’ (நன்றி : யாரோ ஒரு தமிழிலக்கியவாதி) செய்துவிட மாட்டானா?

தமிழிலக்கியம்தான் வக்கிரம் நிறைந்து வன்மமான இரத்த பூமியாகி இருக்கிறது. அந்த போக்கினை சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறார் சூர்யா. இனி வேண்டாதவர்களை போட்டுத்தள்ள சினிமாவை ஆயுதமாக பயன்படுத்துவார்கள் படைப்பாளிகள். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் என்னவாக வேண்டுமென்றாலும் சித்தரித்து கருத்து சுதந்திரத்தை காத்துக் கொள்வார்கள்.

ஏன் இந்தப் படத்தைப் பற்றி எதையும் பேச முடியாமல் வாயை இறுக தைத்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டஸ்ட்ரிகாரர்கள் என்பது புரிகிறது. படம் இத்தனை ஆண்டுகளாக பிசினஸ் ஆகாததின் ரகசியமும் அதுவாகதான் இருக்கக்கூடும்.

December 1, 2014

காவியத் தலைவன்

ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணன், குரு நாசரிடம் கோபித்துக் கொண்டு கிளம்புகிறார். பிருத்விராஜை நடித்துக் காட்டும்படி நாசர் சொல்கிறார். பொன்வண்ணனைவிட பிரமாதமாக பிருத்வி நடிக்கிறார். அடுத்து சித்தார்த்தையும் நடித்துக்காட்ட சொல்கிறார். நம்மூர் நாடக மரபு நடிப்பினை உடைத்து, லேசான மேற்கத்திய தாக்கத்தோடு சித்தார்த் செய்ய காவியத் தலைவன் உருவாகிறான் என்று நம்பிக்கை பிறக்கிறது.

ஆனால், ஒரு ஜமீன் பெண்ணை காதலித்து.. அதை பிருத்விராஜ் நாசரிடம் போட்டுக் கொடுத்து அவரது ராஜபார்ட் வேஷம் பிடுங்கப்பட்டு, மீண்டும் பிருத்விராஜ் ராஜாவாகும்போது.. அட.. இதோ இவன்தான் காவியத்தலைவன் என்று நிமிர்ந்து உட்காருகிறோம்.

இரண்டாம் பாதியில் மீண்டும் சித்தார்த்தின் எண்ட்ரி. கர்ணமோட்சம் நாடகத்தில் கர்ணன் உயிரைவிட்ட பிறகு, திடீரென அர்ஜூன வேஷம் கட்டும் சித்தார்த் மிலிட்டரி மிடுக்கில் நடந்துவந்து, பார்வையாளர்களின் உயிரை உருக்கும் பாடலை பாடும்போது, ‘அடடே.. இவன்தான் காவியத்தலைவன் போலிருக்கு’ என்று ஃபீலிங் வருகிறது.

இப்படியாக படம் முடியும் ஃப்ரேம் வரை காவியத்தலைவனை தேடித்தேடி அலுத்துப் போகிறோம். இரண்டு முக்கிய பாத்திரங்களுமே செத்துப் போகிறபோது யார்தான் காவியம் படைத்து தலைவன் ஆனார்கள் என்கிற குழப்பத்தோடே அரங்கை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது.

எப்படிப்பட்ட படத்தையும் ஏதேனும் ஒரு சினிமா கோட்பாட்டுக்குள் அடக்கிவிடும் திறமை படைத்த விமர்சகர் ராஜன்குறையே, இந்தப் படத்தை எந்த சட்டகத்துக்குள் அடக்குவது என்று திணறிப்போயிருக்கிறார் என்பதை அவரது பேஸ்புக் ஸ்டேட்டஸ் காட்டுகிறது. கடைசியாக தமிழன் அவனாகவே கண்டுபிடித்த ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்கிற சினிமா தியரிக்குள் இதைப் பொருத்த முயற்சிக்கிறார்.

இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும் புரியாத வார்த்தைகளில் விமர்சனம் எழுதி உங்களை ஏமாற்றப் போகிறார்கள். வசந்தபாலனுக்காகவும், ஜெயமோகனுக்காகவும் அவர்கள் அளிக்கப்போகும் சலுகை இது. உண்மையில் அவ்வப்போது பளிச், பளிச்சென்று சில ஃப்ளாஷ்கள் அடித்தாலும், காவியத்தலைவன் படுமோசமாக தோற்றிருக்கிறது. அரவானுக்கு பரவாயில்லை என்கிற வகையிலான ஆறுதல் மட்டுமே.

படம் வரைய வசந்தபாலன் எடுத்துக்கொண்ட கேன்வாஸ் ஓக்கே. ஆனால் வரைந்திருக்கும் படம்தான் மாடர்ன் ஆர்ட்டுமாக இல்லாமல், மரபு ஓவியமாகவும் இல்லாமல் ஆறாங்கிளாஸ் பையனின் முதல் ஓவிய முயற்சி மாதிரி ஆகிவிட்டது.

டைட்டிலிலேயே ‘வெள்ளையர் காலத்து நாடகக் கம்பெனி’ என்று சொல்லிவிட்ட பிறகும், களத்தை பார்வையாளர்களுக்கு புரியவைக்க இடைவேளை வரை நேரம் எடுத்துக் கொள்கிறார். இடைவேளைக்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் கதையே தொடங்குகிறது. சித்தார்த் ராஜபார்ட் ஆனதும், அவருக்கும் இளவரசிக்குமான காதல், சித்தார்த் மீதான பிருத்விராஜின் பொறாமை, போட்டுக் கொடுத்தல், குரு சாபம், இளவரசி மரணம், குருவுக்கு சிஷ்யனின் சாபம், குருவின் மரணம், சித்தார்த் விரட்டப்படுதல் என்று சரசரவென்று ஓடி ‘இடைவேளை’ போடும்போது சர்ரென்று பிரமிப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

இடைவேளை முடிந்தவுடன் பழைய குருடி கதவை திறடி கதைதான். முப்பதுகளின் கதை என்றால் மெதுவாகதான் எடுத்துத் தொலைக்க வேண்டுமென்று என்ன இலக்கணக் கண்ணறாவியோ தெரியவில்லை.

படத்தின் பெரிய பலவீனம் பிருத்விராஜ் – சித்தார்த் இடையே ஏற்படும் முரண். எல்லாம் தெரிந்தும் சித்தார்த் நல்லவராகவேதான் இருக்கிறார். கொலைவெறி வருமளவுக்கு இருவரிடையே முரண் ஏதுமில்லை. இரு நண்பர்களுக்குள் பிரச்சினை எனும்போது, ஒரு நண்பன் துரோகியாகதான் ஆகித்தொலைக்க வேண்டுமா? எத்தனை ரஜினிகாந்த் – சரத்பாபு காம்பினேஷனில் இதையே திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறோம். போலவே வடிவாம்பாளான வேதிகாவுக்கு, சித்தார்த்தை ஏன் அந்தளவுக்கு லவ் செய்துத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்றும் தெரியவில்லை. அதுவும் ‘உன்னோட பிள்ளையை என் வயித்துலே சுமக்கணும்’ என்று கெஞ்சுகிற அளவுக்கு காதல் ஏற்பட என்ன எழவு காரணமென்று புரியவில்லை. புத்தி சுவாதீனமுள்ள பெண்ணாக இருந்திருந்தால் பிருத்விராஜைதான் கல்யாணம் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

படத்தின் மெயின் கேரக்டர்களே திரும்பத் திரும்ப ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டிருப்பதால் மெகாசீரியல் வாசனை பலமாக அடிக்கிறது.

ஸங்கீதம் ஏ.ஆர்.ரகுமானாம். சம்பாஷணை ஜெயமோகன் என்று டைட்டில் போட்டிருந்தார்கள். பாட்டெல்லாம் கேட்கும்படி இருப்பதால் ஸங்கீதமே பரவாயில்லை. சம்பாஷணை படுமோசம். முன்பு தூர்தர்ஷனில் கல்கியின் ‘அலைஓசை’ தொடராக வந்தது. அதிலேயே சம்பாஷணை பிரமாதமாக இருந்த நினைவு.

திராவிட எழுத்தாளர்களை இளப்பமாக ஜெயமோகன் பேசுவார், எழுதுவார். அவர்கள் எல்லாம் இலக்கியவாதிகள் அல்ல. சும்மா அலங்கார நடையில் மக்களை உசுப்பேத்துகிறார்கள் என்பதாக அவர்களை பார்க்கிறார். திரள் மக்களை உசுப்பேத்துவது எவ்வளவு கடினமென்று காவியத்தலைவன் படத்தின் ரிசல்ட் மூலம் அவர் உணர்வார். தமிழின் ஆகச்சிறந்த நம் கால எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன், காவியத்தலைவனில் எப்படியெல்லாம் தடுமாறியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே சினிமாவில் வசனங்களால் அனல் கக்கிய அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், திருவாரூர் தங்கராசும் எத்தனை மகத்தான எழுத்தாளுமைகள் என்பதை உணரமுடிகிறது.

ஒரு முயற்சி என்கிற வகையில் மட்டும் பார்க்கலாம். மற்றபடி தியேட்டரில் உட்காரும்போது அடிக்கடி வெளிவரும் கொட்டாவியை தடுக்கவே முடியவில்லை.

October 24, 2014

கத்தி கத்தி பேசும் கத்தி

கொல்கத்தா ஜெயிலில் இருந்து கத்தி தப்பிக்கும் முதல் காட்சி. சட்டென்று ‘முப்பது நிமிடங்களுக்கு முன்னால்’ போடும் ட்விஸ்ட் கொடுக்கும் லாவகம். ‘அடடே! துப்பாக்கியை மிஞ்சிடும் போலிருக்கே’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், மசமசவென்ற திரைக்கதையால் அப்படியே சரிய வைத்துவிட்டார் முருகதாஸ். ஜீவானந்தத்தை கதிரேசன் முதன்முதலாக பார்க்கும் காட்சி எப்படிப்பட்ட ப்ளாக். ஆனால் ரொம்ப சாதாரணமாக ‘அட என்னை மாதிரியே இருக்கானே?’ என்று 1965ல் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ டபுள் ஆக்‌ஷன் ரோல் சீன் மாதிரி ரொம்ப சப்பையான பிரசண்டேஷன். கத்தியும் ஹீரோயினும் முதன்முதலாக சந்திக்கும் காட்சிகள். கத்தியின் காமெடி போர்ஷன் எல்லாம் எவ்வளவு ஜவ்வென்று மனசாட்சியுள்ள நீதிபதி குன்ஹா படம் பார்த்தால் நேர்மையாக தீர்ப்பளிப்பார்.

ஜெயிலுக்குள் ப்ளூப்ரிண்ட் பார்த்து கத்தி ஸ்கெட்ச் போடும் பர்ஸ்ட் சீன் செமை என்றால், அதே கத்தி செகண்ட் ஹாஃபில் மெட்ராஸின் ப்ளூப்ரிண்டை கேட்கும்போது தியேட்டரே வெடிச்சிரிப்பில் வெடிக்கிறது. அந்த ப்ளூபிரிண்ட் காமெடி முடிவதற்குள் அடுத்த காமெடி. மொத்தமாக போய் எல்லாரும் தண்ணீர் வரும் பிரும்மாண்ட குழாய்க்குள் அமரும் போராட்டத்தை தொடங்குகிறார்கள். இந்த ஐடியா மட்டும் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பே ‘லீக்’ ஆகியிருந்தால், மக்கள் முதல்வரை கர்நாடக அரசு விடுதலை செய்யக்கோரி இதே போராட்டத்தை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தலைமையில் திரையுலகினர் நடத்தியிருப்பார்கள்.

குழாய் போராட்டம் நடத்தி சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை உண்டாக்கி நாடெங்கும் டிவிகளில் இளையதளபதியின் படத்தை ஊடகங்கள் விடாமல் காட்டிக் கொண்டிருக்க, தெம்மாங்கு மேற்குவங்க போலிஸார் மட்டும் கர்மசிரத்தையாக டிவியே பார்க்காமல் கத்தியை சின்சியராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டையே உலுக்கும் இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கும்போது போலிஸும், மக்கள் முதல்வரின் அரசாங்கமும் தேமேவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்று பொருள்பட ஏ.ஆர்.முருகதாஸ் படமெடுத்திருப்பது கொஞ்சமும் நியாயமே அல்ல.

கூடுதலாக மேற்குவங்க போலிஸார் தமிழ்நாட்டுக்கு வந்தபிறகும் கூட விரைப்பாக மேற்குவங்க காவல்துறை யூனிஃபார்மையே அணிந்துக்கொண்டு அலைவார்கள் என்று காட்சிப்படுத்தியிருப்பது அம்மாநில காவல்துறையையே களங்கப்படுத்திய மாபெரும் குற்றமாகும்.

மாஸ் மாஸ் என்று அணில்குஞ்சுகள் வாள் வாளென்று கத்தும் அந்த காய்ன் – லைட் ஃபைட்… தேவுடா… “மொத்த காசையும் சீக்கிரம் கொட்டி தொலைடா சனியனே” என்று தியேட்டரில் ஒருவர் பொறுமை இழந்து கத்திக் கொண்டிருந்தார்.

‘சென்னைக்கு தண்ணீ கட்டு’ என்று முருகதாஸ் காட்சிப்படுத்திய காட்சிகளுக்கு ஆர்ப்பாட்டமாக சிரித்து கைத்தட்டிய ரசிகர்களுக்கு உட்லண்ட்ஸ் தியேட்டர்காரன் சூப்பராக தண்ணி காட்டினான். படம் முடிந்து டாய்லெட்டுக்கு போய்விட்டு கைகழுவ குழாயை திறந்தால் நோ வாட்டர். நல்லவேளை, நானெல்லாம் ஒண்ணுக்குதான். உள்ளே சில பேர் ரெண்டுக்கு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கதி என்னவாகியிருக்குமோ?

சரி. இந்த எழவையெல்லாம் விடுவோம். நாலு படம் நடித்தால் ஒரு படம்தான் தேறும் என்பது இளையதளபதியின் விதி. ஒரு படம் சூப்பர் என்றால், அடுத்த படம் படுமொக்கை என்பது ஏ.ஆர்.முருகதாஸின் ஜாதகம். அவங்களோட ப்ளூப்ரிண்டில் அப்படிதான் எழுதியிருக்கு. யாரென்ன செய்துவிட முடியும்?

ஆனால் மீடியாக்காரன் எல்லாம் கேனக்கொண்டையென்று நினைத்துக்கொண்டு செகண்ட் ஹாஃபில் முருகதாஸ் கொடுக்கும் பில்டப் இருக்கிறதே. அட.. அட.. உப்புப் போட்டு உணவு உண்ணக்கூடிய மீடியாக்காரன் இந்த படத்தை பார்த்தால் நியாயமாக காறித்துப்ப வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடந்துவிட வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. படம் பார்ப்பதற்கு முன்பே ‘கத்தி சூப்பர், கத்தி சூப்பர்’ என்று கத்தி கத்தி ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அதே மீடியாக்காரர்கள் போட்ட ஸ்டேட்டஸ்களை பார்த்தால் அவ்வளவு விரைவில் தமிழ் ஊடகவியலாளனுக்கு சுரணை வந்துவிடாது என்கிற நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படவில்லை. இதே கத்தி ஆதரவு ஆவேசம் விரைவில் பத்திரிகை விமர்சனங்களிலும், சேனல் டாப் 10 நிகழ்ச்சிகளிலும் உறுதியாக வெளிப்படும் என்று நம்பலாம்.

சினிமாக்காரனை பொறுத்தவரை மீடியாக்காரன் ஜோக்கர். ஜோல்னா பை போட்டுக்கொண்டு, பேனாவும் ஸ்க்ரிப்ளிங் பேடுமாக க்ளைமேக்ஸில் யாரையோ கேணைத்தனமாக கேள்வி கேட்பான். அல்லது மைக்கை நீட்டிக்கொண்டு ‘நீங்க பதில் சொல்லியே ஆகணும்’ என்பான். அல்லது வில்லனை பற்றி ஏதோ செய்தி போட்டு கொலை செய்யப்படுவான். தமிழ் சினிமாவில் PRESS என்பது அட்மாஸ்பியர் பிராப்பர்ட்டி. அவ்வளவுதான்.

இப்படி ஆபத்தில்லாத ஜந்துவாக சினிமாவில் வலம் வந்துக் கொண்டிருந்த பிரெஸ்காரனை எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கேவலப்படுத்தி ‘கத்தி’ எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தண்ணூத்து மக்கள் கொடுக்கும் ஃப்ளாஷ் நியூஸை செய்தித்தாள்களும், டிவிசேனல்களும் போட மறுக்கிறார்கள் என்பதற்கு முருகதாஸ் வைத்திருக்கும் வசனங்களும், காட்சிகளும் அவ்வளவு கேவலமானவை. மீடியா வெளிப்படுத்தாமல் எந்த செய்தியை தானாகவே புலனாய்வு செய்து முருகதாஸ் தெரிந்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த படத்தில் கொட்டாவி வரும் வரைக்கும் அவர் அள்ளி வைக்கும் புள்ளிவிவரங்களை மீடியா இல்லாமல் இவராகவே ஞானப்பால் குடித்து அறிந்துக் கொண்டாரா? விதர்பா விவசாயிகளின் தற்கொலையில் தொடங்கி, தஞ்சை விவசாயி எலிக்கறி சாப்பிட்டது, மீத்தேன் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு, காவிரி நீருக்கு விவசாயிகள் போராட்டம், முல்லை பெரியாறு போராட்டம் என்று எல்லா செய்திகளையும் மக்கள் மத்தியில் இவர்கள் மக்கள் முதல்வரின் அரசுக்கு பயந்து பயந்து எடுக்கும் சினிமாக்கள் கொண்டுச் சென்றதா அல்லது கத்தியில் கேவலப்படுத்தப்பட்ட ஊடகங்கள் கொண்டுச் சென்றதா?

எப்போதிலிருந்து முருகதாஸ் கார்ப்பரேட்டுகளை தீவிரமாக எதிர்க்கும் நக்சல்பாரியாக மாறினார் என்று தெரியவில்லை. அவரது கஜினி படத்தை ரிலையன்ஸ் ரிலீஸ் செய்ததே, அப்போதிலிருந்தா? அல்லது ஹாலிவுட் கார்ப்பரேட் சினிமா நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸோடு காண்ட்ராக்ட் போட்டாரே அப்போதிலிருந்தா? இல்லையேல், குடிசைத்தொழில் நிறுவனமான ‘லைக்கா’விடம் கத்தி படம் இயக்க கை நீட்டி அட்வான்ஸ் வாங்கினாரே, அப்போதா?

ஆனாலும் முருகதாஸுக்கு தில்லு ஜாஸ்திதான். கோகோ கோலா அம்பாஸடரை வைத்தே கோகோ கோலாவின் நிலத்தடி நீர் சுரண்டலை அம்பலப்படுத்தி இருக்கிறாரே. முருகதாஸும், விஜய்யும் நல்ல விஷயம்தானே பேசியிருக்கிறார்கள், அதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று வழக்கம்போல இணைய மங்குனிகள் ஆங்காங்கே கலகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அட மண்ணாந்தைகளே, இதைகூட காசு வசூல் பண்ணதான் பேசுகிறார்கள். ஒரு போராட்டத்துக்கு கூப்பிடுங்களேன். மக்கள் முதல்வருக்காக உண்ணாவிரதம் இருந்தவர்களை மக்களுக்காக அரைநாளாவது வந்து உட்காரச் சொல்லுங்களேன். அப்போது தெரியும் அவர்களது அக்கறை. இந்தியா சிமெண்ட்ஸின் சென்னை சூப்பர் கிங்ஸின் பிராண்ட் அம்பாஸடர், ஜாய் ஆலுக்காஸின் விளம்பரத் தூதர் சொல்லிதான் தெரியவேண்டுமா கார்ப்பரேட் சுரண்டல் என்றால் என்னவென்று. அந்த அளவுக்கா தமிழர்கள் அறிவுகெட்டு போயிருக்கிறீர்கள்?

‘திமுகவை தாக்கி டயலாக் வைத்துவிட்டார்’ என்று இணைய பார்ப்பனர்களும், திடீர் தமிழின இடிதாங்கிகளும் ஆவேசமாக ஆனந்தம் அடைகிறார்கள். அரசியல்வாதிகளை கிடுக்கிப்பிடி பிடித்திருப்பதாக புளங்காங்கிதம் அடைகிறார்கள். அட தொண்ணைகளா. அவ்வளவு தில்லு ஏ.ஆர். முருகதாசுக்கும், விஜய்க்கும் இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? அப்படி நெஞ்சிலே மஞ்சா சோறு இருந்திருந்தால் பட ரிலீஸுக்கு முந்தையநாள் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வந்திருக்குமா? இல்லையேல் நிஜமாகவே முருகதாஸுக்கு இந்த அறவுணர்ச்சியெல்லாம் இருந்திருந்தால் முன்னாள் முதல்வரின் – திமுக தலைவரின் பேரனிடம் சம்பளம் வாங்கி படம் இயக்கி இருந்திருப்பாரா?

சினிமாக்காரர்கள் பேசும் நியாயம் தர்மம் அறம் எல்லாம் வெறும் துட்டுக்காகதான். இந்த தலைமுறை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சதுரங்க வேட்டையில் கொஞ்சம் கத்திப் பேசி ‘ரைஸ் புல்லிங்’ செய்வாரே நட்ராஜ்? அதே டெக்னிக்கைதான் இதே கத்தியும் செய்திருக்கிறது. இங்கே எவனுக்கும் விவசாயியையும் தெரியாது. விவசாயத்தையும் தெரியாது. அதனால்தான் உள்ளே விசில் அடித்துவிட்டு வெளியே வந்து டாஸ்மாக்கில் சரக்கடிக்கிறான்.

நாளையே விவசாயத்துக்கு ஆபத்து விவசாயிக்கு பிரச்சினை என்றால் அட்டக்கத்தி வீரர்கள் விஜய்யோ, முருகதாஸோ எட்டிப் பார்க்கப் போவதில்லை. டேன்ஸுக்கு மார்க்கு போடுறவன், கள்ளக்காதல் நியூஸு போடுறவன் என்று கத்தியால் ஆபாசமாக விமர்சிக்கப்படும் பத்திரிகைக்காரன்தான் பஸ் புடிச்சி வரப்போகிறான். கடந்த இரண்டு  நாட்களாக மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற வயல்களை படம்பிடித்து அவன்தான் பத்திரிகையில் போட்டோ போட்டுக் கொண்டிருக்கிறான். கத்தி கதாநாயகனும், இயக்குனரும் எவ்வளவு கலெக்‌ஷன் என்று ஊர் ஊராக போன் போட்டு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய உண்மையான முகம்.

June 25, 2014

ஒப நத்துவா ஒப எக்கா

‘ஒப நத்துவா ஒப எகா’ என்கிற சிங்கள வாக்கியத்துக்கு ‘உன்னோடு இருந்தபோது, நீ இல்லாதபோது’ என்று பொருளாம். அதாவது தமிழர்களுக்கு புரியும்படி சொல்வதாக இருந்தால் With you, Without you. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் திடீரென தமிழகத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அரிதான இயக்குனர்களின் திரைப்படங்கள் என்கிற வரிசையில் பி.வி.ஆர். சினிமாஸ், இலங்கை இயக்குனர் பிரசன்ன விதாங்கேவின் இந்த திரைப்படத்தை திரையிட முயற்சித்ததின் அடிப்படையில் இந்த சர்ச்சை எழுந்திருக்கிறது. தியேட்டரில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டவுடன், நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் ஏற்பாட்டில் படம் பார்க்க விரும்புபவர்களுக்காக பிரத்யேக திரையிடல் சென்னையில் நடந்தது.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக தஸ்தாவேஸ்கி எழுதிய கதை ஒன்றினை தழுவி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் பிரசன்ன. நிகழ்வில் இயக்குனர் பேசும்போது தான் தமிழகத்தோடு தொழில்ரீதியாகவும், நட்புரீதியாகவும் பல்லாண்டுகளாக தொடர்பில் இருப்பவன் என்று தெளிவுப்படுத்தினார். முன்பாக அவருடைய திரைப்படமான ‘ஆகாச குசும்’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ஆகாய பூக்கள்’ என்கிற பெயரில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. முப்பதாண்டு இனப்பிரச்சினை காலத்தில் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய படத்தை திரையிட்ட ஒரே சிங்கள இயக்குனர் அவர்தான். எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் அவருக்கு உயர்வான மதிப்பு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஐம்பத்தி இரண்டு வயதாகும் பிரசன்ன, இலங்கையின் மிக முக்கியமான இயக்குனர் என்பது அவரது கடந்தகால செயல்பாடுகளில் தெரியவருகிறது. அவருடைய முதல் படமே இலங்கைக்கான ஓ.சி.ஐ.சி. விருதுகளில் ஒன்பது பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. லியோ டால்ஸ்டாயின் நாவலான புத்துயிர்ப்பு நாவலை தழுவி இவர் இயக்கிய படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்று குவித்திருக்கிறது. இலங்கையின் கலைப்படத்துறையில் தவிர்க்க இயலாத இயக்குனராக உருவெடுத்திருக்கும் இவர், இதுவரை ஏழு படங்களை இயக்கியிருக்கிறார்.

‘ஒப நத்துவா ஒப எகா’, போருக்குப் பின்னான இலங்கை மக்களின் மனவோட்டத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் வழியாக ஆராய்கிறது. மனரீதியாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட பிரிவினையை கவலையோடு காண்கிறது. அன்பு, பிளவுகண்ட மனங்களுக்கு மத்தியிலான பாலமாக அமையலாம் என்கிற யோசனையை முன்வைக்கிறது.

சரத்ஸ்ரீ நடுத்தர வயதினை எட்டிய சிங்களவன். தேநீர் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் சிறுநகரில் அடகுக்கடை நடத்தி வருகிறான். இயல்பிலேயே தனிமையை விரும்புபவனாக சித்தரிக்கப்படும் அவனுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் WWF மல்யுத்த விளையாட்டுதான் ஒரே பொழுதுபோக்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வந்து ஏதோ ஒரு நகையை அடகுவைத்து பணம் வாங்கிச் செல்லும் தமிழ்ப்பெண்ணான செல்வி அவனுக்கு வித்தியாசமாகப் படுகிறாள். தன்னுடைய பணிப்பெண் மூலமாக செல்வியைப் பற்றிய பின்னணி விவரங்களை அறிகிறான். யாழ்ப்பாணத்து பெண்ணான செல்வி போர்க்காலத்தில் அவளுடைய பெற்றோரால் இங்கே கொண்டுவந்து விடப்படுகிறாள். அவளுக்கு துணையாக இருப்பவர்களுக்கு இவள் பெரும் பாரமாக இருக்கிறாள். எனவே ஒரு செல்வந்தரான கிழவருக்கு அவளை மணம் முடித்துத்தர முயற்சிக்கிறார்கள்.

செல்வியை அணுகும் சரத்ஸ்ரீ அவளை திருமணம் செய்துக்கொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறான். வேறு திக்கற்ற செல்வியும் ஒப்புக் கொள்கிறாள். திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியான இல்லறவாழ்வை இருவரும் அனுபவிக்கிறார்கள். சரத்ஸ்ரீயின் வணிக நியாயங்கள் அவளுக்கு புரிபடவில்லை. செல்வியின் தனிப்பட்ட ரசனை மீது சரத்ஸ்ரீக்கு எந்த பிரச்சினையுமில்லை. வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழும் தம்பதிகளின் வாழ்வில் திடீர் புயல்.

காமினி என்கிற பழைய நண்பன் சரத்ஸ்ரீயை காணவருகிறான். முன்னாள் இராணுவவீரனான அவன் மூலமாக சரத்தின் பழைய வாழ்க்கை செல்விக்கு தெரியவருகிறது. இராணுவத்தில் பணிபுரிந்த சரத், விருப்ப ஓய்வு கேட்டு வாங்கி அடகுக்கடைகாரனாய் தற்போது அமைதியான வாழ்க்கையை (பாட்ஷா, மாணிக்கம் ஆனது மாதிரி) வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஓர் அடகுக்கடைகாரன் சிங்களவனாய் இருந்தாலும் அவனை மனமொத்து கணவனாய் ஏற்றுக்கொள்ள முடிகிற செல்விக்கு, தன் கணவன் இராணுவத்தில் இருந்தவன் என்கிற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. இருவருக்குள்ளும் மனரீதியானபிளவு தோன்றுகிறது.

ஒருவரை ஒருவர் மாறி மாறி வருத்திக் கொள்கிறார்கள். கடைசியில் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழமுடியாது என்கிற உண்மையை உணர்கிறார்கள். செல்விக்காக தன்னுடைய கடையை விற்று இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சரத்ஸ்ரீ முயற்சிக்கிறான். அவனில்லாமல் வாழவும் முடியவில்லை, அவனோடு வாழவும் முடியவில்லை என்கிற நிலையில் அதிர்ச்சிகரமான முடிவை செல்வி எடுக்கிறாள்.

இதுதான் ‘ஒப நத்துவா ஒப எகா’வின் கதை.

இந்த படத்தை போய் எந்த இயக்கம் திரையிடக்கூடாது என்று எதிர்த்தது என்று தெரியவில்லை. எந்த எதிர்ப்புமின்றி இது சென்னையில் வெளியாகியிருக்கும் பட்சத்தில் மிஞ்சிப்போனால் நூறு, இருநூறு பேர்தான் இப்படத்தை பார்த்திருப்பார்கள். பிறகு நான்கைந்து பேர் அதை சிலாகித்திருந்தாலே அதிகமாக இருந்திருக்கும்.
பிரசன்ன, சினிமா மொழியில் நல்ல பாண்டித்யம் பெற்றவர் என்று தெரிகிறது. படத்தில் இடம்பெற்ற கலைஞர்களை அவர் வேலைவாங்கி இருக்கும் விதத்தை வைத்துப் பார்த்தால் அவருடைய சர்வதேச தரம் புலப்படுகிறது. காட்சிகளுக்கு அவர் வைத்திருக்கும் கோணங்கள் புதுமையானதாகவும், திரைக்கதைக்கு வலு சேர்க்கும் அவசியமுள்ளவையாகவும் இருக்கிறது. நாயகன், நாயகி என்று இருவரின் வர்ணனைகளால் மாறி மாறி கதை சொல்லும் முறையும் சுவாரஸ்யமாகதான் இருக்கிறது. குறிப்பாக நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி பாட்டில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். நாசிக்கில் பிறந்த அஞ்சலி, யாழ்ப்பாணத் தமிழ் பெண் பாத்திரத்துக்கு அவ்வளவு அசலாக பொருந்துகிறார்.

ஆனாலும் மாபெரும் கலைப்படைப்பு என்று ஒரு சார்பு அறிவுஜீவிகளாலும், கலைஞர்களாலும் முன்வைக்கப்படும் இப்படம் நமக்கு ரொம்ப சாதாரணமாகதான் பட்டது. “அப்புறமென்ன மைனர் குஞ்சு அந்தப் பொண்ணு மேலே கையை வெச்சிட்டான். நம்ம வழக்கப்படி ஆயிரம் ரூவாய் பஞ்சாயத்துக்கு கட்டிப்புடணும். இதுதான் பஞ்சாயத்து அவனுக்கு கொடுக்கிற தண்டனை. என்னப்பா சொல்றீங்க” என்று நாட்டாமை தீர்ப்பு சொல்வதை மாதிரி கணக்காக இப்படம் நமக்கு தோன்றுகிறது.

போருக்குப் பின்னான இலங்கையில் தமிழ் மக்களின் பொருளாதார உளவியல் சிக்கல்களை ஒரு சிங்கள இயக்குனர் காட்சிப்படுத்த முனைந்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சிதான். நியாயமாக பார்க்கப்போனால் இணையத்தளங்களில் வாய்கிழிய பேசும் புலம்பெயர் தமிழர்களோ, போராட்டங்களில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் தமிழக திரைப்பட கலைஞர்களோ இதை செய்திருக்க வேண்டும். ஆனால், பிரசன்னவின் கலையில் தென்படும் ‘சிங்களப் பெருந்தன்மை’தான் இடிக்கிறது. சிங்களவர்களுக்கு போர் குறித்த குற்றவுணர்ச்சி நிச்சயம் உண்டு. ஆனால் தமிழர்களோடு அவர்கள் சகஜமாகவே வசிக்க விரும்புகிறார்கள் என்கிற செய்தியை உலகத்துக்கு அறிவிக்க இப்படம் மூலமாக விரும்புகிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர்களுக்கும் இந்த ஏற்பாடு பிடித்துதான் இருக்கிறது என்பது அவர்கள் படத்தை உள்வாங்கி, வெளியிட்ட கருத்துகளில் இருந்து அறிந்து கொள்கிறோம். கனவிலும் கூட துப்பாக்கிக் குண்டுகள் பாயாத, குண்டுவீச்சுகள் நடக்காத நிம்மதியான உறக்கத்தை அவர்கள் எதிர்ப்பார்ப்பது இயல்புதான்.

ஆனாலும், நம்முடைய தனிப்பட்ட ரசனை, அரசியல் விருப்பு வெறுப்பு அளவுகோல்களின் படி பிரசன்னவின் இந்த படத்தைதான் நாம் இம்மாதிரியெல்லாம் விமர்சிக்க மட்டும்தான் முடியும். அவருடைய கலை உள்ளத்தை மரியாதையோடே அணுகுவதுதான் பண்பாடு. தமிழர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழகத்துக்கு வந்து தன் படத்தை திரையிடுகிறார். தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருந்த திரையிடல் நிகழ்வில் அர்த்தமற்ற கேள்விகளையும், பிரசன்னவுக்கு நேரடித்தொடர்பில்லாத அரசியல் விளக்கங்களையும் தமிழகத்து தமிழ்தேசியப் போராளிகள் கேட்டு, தம்முடைய அறிவீனத்தை உலகறிய செய்துவிட்டார்கள்.

“2009க்கு பிறகு தமிழீழத்தில் எத்தனை அத்துமீறல்கள் நடந்திருக்கிறது என்கிற ஆவணம் மொத்தமாக என்னிடம் இருக்கிறது. இதை நீங்கள் படித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?” என்று கையில் ஃபைலை வைத்துக்கொண்டு ஒருவர் பிரசன்னவை கேட்டார். இதற்கு சினிமா இயக்குனரான பிரசன்ன என்ன பதில் சொல்ல முடியுமென்று தெரியவில்லை. அவர் என்ன அதிபர் ராஜபக்‌ஷேவா?

அடுத்து ஒரு போராளி, “இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்று நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வு என்று அறிவிக்க வேண்டும்” என்று கேள்வி(!) கேட்டார்.

மைக்கை பிடுங்கிய ஜிலுஜிலு சிகப்பு சட்டைக்காரர் ஒருவர் தான் மூன்று கேள்விகள் கேட்க இருப்பதாக படுமோசமான உடைந்த ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். சுமார் பத்து நிமிடங்களுக்கு இயக்குனருக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் ரோதனையாக அவருடைய பேச்சு அமைந்தது. ‘கொஸ்டின் நெம்பர் ஒன்’ என்று அவர் ஆரம்பித்தபோது அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

இதே பாணியில் ஆங்காங்கே இருந்து போர்க்குரல் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஒருவர் “ஏன் படம் முழுக்க பின்னணியில் எல்.ஆர்.ஈஸ்வரியின் தமிழ் பாடல்கள் ஒலிக்கிறது என்கிற அரசியலை தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டு செமையாக அசத்தினார்.

படம் பார்க்க வந்த ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் இயக்குனருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அம்மாதிரி பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை பார்த்து சேகுவேரா மாதிரி ஆவேசமாக இருந்த தோழர் ஒருவர் சொன்னார். “போயும் போயும் உங்களுக்கு போய் இங்கே ஸ்ட்ரைக்கெல்லாம் பண்ணி போராடினோமே? நாடு விட்டு நாடு வந்த உங்களுக்கு எங்களோட அருமை எப்படி தெரியும்?”

வாழ்க பிரபாகரன். மலர்க தமிழீழம்!

May 26, 2014

ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்

பெற்றோரின் இளம் வயது ரொமான்ஸை பிள்ளைகள் காணும் சந்தர்ப்பம் நம் சமூகத்தில் குறைவு. நமக்கு நன்கு நினைவு தெரிகிறபோது அப்பாவுக்கு காதோரத்தில் நரையும், பின் தலையில் சொட்டையும் விழுந்துவிடுகிறது. தளர்ந்துபோன அம்மா மூட்டுவலியால் அவதிப்படுகிறார். இரத்த அழுத்தம் சோதிக்க அடிக்கடி மருத்துவரிடம் போகிறார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருவரும் இணக்கமாக பேசிக்கொள்வதை காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் ’சுள்’ளென்று எரிந்துவிழும் காட்சிகளைதான் அதிகம் காண நேரும். இளம் வயது அம்மாவும், அப்பாவும் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொண்டு மரத்தை சுற்றி ‘டூயட்’ பாடுவதை அவர்கள் பெற்ற குழந்தைகள் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள். இந்த அழகான கற்பனையைதான் திரையில் ஓட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார். தமிழில் ‘அலை’ என்றொரு மொக்கைப் படத்தை எடுத்தவர். அடுத்து மாதவனை வைத்து அவர் இயக்கிய ‘13-பி யாவரும் நலம்’, நீண்டகாலத்துக்கு பிறகு தமிழில் வெளிவந்த வெற்றிகரமான பேய்ப்படம். தெலுங்கில் இவர் இயக்கிய ‘இஷ்க்’, இந்த தலைமுறையின் இதயத்தை திருடாதே. தொடர் தோல்வியால் துவண்டுப் போயிருந்த நடிகர் நிதினுக்கு கம்பேக்.

அக்கினேனி குடும்பத்தைச் சார்ந்த நாகார்ஜூனாவுக்கு ஓர் ஆசை. அப்பா நாகேஸ்வரராவ் நாடறிந்த நடிகர். தேவதாஸை மறக்க முடியுமா? சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த தெலுங்கு திரையுலகத்தை, அன்னபூர்ணா ஸ்டுடியோ மூலமாக ஹைதராபாத்துக்கு ‘ஷிப்ட்’ செய்தவர் அவர்தான். நாகார்ஜூனாவும் வெற்றிகரமான நடிகராக தென்னிந்தியாவில் அறியப்பட்டாயிற்று. அக்கினேனேனி குடும்பத்தில் அவரது இரண்டாம் மனைவியாக இணைந்த அமலாவும் பெரிய நடிகை. அடுத்த தலைமுறையாக அவரது மகன் நாக சைதன்யாவும் ஆறேழு படங்களில் நடித்துவிட்டார். இளையமகன் அகிலும் தடாலடி என்ட்ரிக்காக வரிசையில் காத்து நிற்கிறார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்தடுத்து மூன்று தலைமுறையாக ஆந்திராவில் கலைச்சேவை செய்யும் அக்கினேனி குடும்பத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஒரு படம். இதில் மூன்று தலைமுறை நடிகர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும்.

தன்னுடைய இந்த கனவுப்படத்துக்கு இயக்குனர்களிடம் ’ஸ்க்ரிப்ட்’ கேட்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட பேர் கதை சொன்னார்கள். எல்லாமே சாதாரணமானதாக நாகார்ஜூனாவுக்கு தோன்றியது. அப்போது ‘இஷ்க்’ பெரிய ஹிட். எனவே விக்ரம்குமாரிடமும் கதை சொல்ல சொன்னார். அவர் சொன்ன லைன் நன்றாக இருக்கவே, டோலிவுட்டின் எஸ்.பி.எம்.மான ராகவேந்திராராவிடம் இந்த கதையை எடுக்கலாமா என்று நாகார்ஜூனா ஆலோசித்தார். “ரொம்ப சிக்கலான கதையா இருக்குப்பா. கொஞ்சம் சிம்ப்ளிஃபை பண்ணி பண்ணச் சொல்லு. நல்லா வரும்” என்றார் அவர்.

ஓராண்டு உழைப்புக்கு பிறகு விக்ரம்குமார் திரைக்கதையாகவே சுமார் இரண்டரை மணி நேரம் விவரித்த கதை நாகார்ஜூனாவுக்கு அப்படியே ஓக்கே. “அப்பா கிட்டேயும் சொல்லிடுங்களேன்”. தொண்ணூறு வயது நாகேஸ்வரராவ் பொறுமையாக கதை கேட்டார். ஒவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்ப சொல்லச் சொல்லி மனதுக்குள் ஏற்றிக்கொண்டார். சொல்லி முடிக்க விக்ரமுக்கு ஆறு மணி நேரம் ஆயிற்று. “எல்லாம் சரியா வந்திருக்கு. ஆனா காமெடி குறைச்சல். சீரியஸான சிக்கலான கதை. காமெடியா சொன்னாதான் எடுபடும். நான் பெரிய ஆளுன்னுலாம் நினைக்காம என்னையும் காமெடியன் ஆக்கிடு. என் பேரன் சைதன்யா சகட்டு மேனிக்கு என்னை நாஸ்தி பண்ணுறமாதிரி சீன் ரெடி பண்ணு” என்றுகூறி ஸ்க்ரிப்ட்டை ஓக்கே செய்தார். படத்துக்கு டைட்டில் வைத்தவரும் நாகேஸ்வரராவ்தான். அக்கினேனி குடும்பம் ஒட்டுமொத்தமாக இணைந்து ‘நாம்’ என்று சொல்வதைப் போன்ற பொருள் வரும்படி ‘மனம்’ என்று பெயர் வைத்தார். தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அமிதாப் படத்தில் ஒரு காட்சியாவது வரவேண்டும் என்று நாகேஸ்வரராவ் கண்டிஷனே போட்டார். பொருத்தமான வேடம் எதுவும் இல்லையென்றாலும் தன் மருமகள் அமலா, இன்னொரு பேரன் அகில் ஆகியோரையும் திரையில் காட்டியாக தெரிந்தாகவேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்.

தமிழில் முன்பு ‘பிராப்தம்’ என்று சாவித்திரி தயாரித்த திரைப்படம், சிவாஜியின் நடிப்பில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. அந்த கதையையே கொஞ்சம் பட்டி தட்டி கமர்ஷியல் டிங்கரிங் செய்தால் ‘மனம்’ ரெடி.

இந்தியாவின் நெம்பர் ஒன் தொழிலதிபரான நாகேஸ்வரராவ் (படத்தில் நாகார்ஜூனா) யதேச்சையாக இறந்துப்போன தன்னுடைய தந்தையின் அசலான உருவத்தில் இருக்கும் ஓர் இளைஞனை (நாக சைதன்யா – படத்தில் இவர் பெயர் நாகார்ஜுனா) விமானப் பயணத்தில் சந்திக்கிறார். அவரை அப்பாவென்று அழைத்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். அப்பா மறுபடியும் பிறந்திருக்கிறார் என்றால், அம்மாவும் பிறந்திருக்க வேண்டுமே என்று அம்மாவை தேடுகிறார். அம்மாவான சமந்தாவையும் கண்டடைகிறார். இருவரையும் காதலிக்க வைத்து மகிழ்ச்சியாக வாழவைக்க வேண்டுமென பிரயத்தனப்படுகிறார். ஆனால் போன ஜென்மத்து நினைவுகள் வந்துவிடுவதால், அப்போது சைதன்யா மீது பெரும் கோபம் கொண்டிருந்த சமந்தா, இந்த ஜென்மத்திலும் தொடர்கிறார். இதற்கிடையே நாகார்ஜூனாவுக்கு ஒரு பெண் டாக்டரை கண்டதுமே இதயம் ‘லவ்டப்’ என்று ஆட்டோமேடிக்காக அடித்துக் கொள்கிறது. டாக்டரான ஸ்ரேயாவுக்கும் அதே ‘லவ்டப்’தான். இருவரும் முன்பின் ஒருவரையொருவர் அதுவரை பார்த்துக் கொண்டதில்லை. ஸ்ரேயா பணியாற்றும் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தொண்ணூறு வயது பெரியவர் சைதன்யாவுக்கு (நாகேஸ்வரராவ்) இவர்கள்தான் இளம் வயதிலேயே இறந்துபோன தன்னுடைய அம்மாவும், அப்பாவும் என்று தெரிந்துவிடுகிறது. இவர்களை சேர்த்துவைக்க அவர் மெனக்கெடுகிறார்.

இரண்டு தம்பதியினருக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை. எண்பதுகளில் நாகார்ஜூனாவின் அப்பா சைதன்யாவும், அம்மா சமந்தாவும் கார் விபத்தில் இறக்கிறார்கள். அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நாகேஸ்வரராவின் தந்தை நாகார்ஜூனாவும், தாய் ஸ்ரேயாவும் அதேபோன்ற கார்விபத்தில் மரணமடைகிறார்கள். இரு விபத்துமே நடந்த இடம் மணிக்கூண்டு அமைந்திருக்கும் ஒரு டிராஃபிக் சிக்னல்தான்.

இந்த ஜென்மத்திலும் அதே ஜோடிகள் அதே இடத்தில் மரணமடையப் போகிறார்கள் என்பதற்கான அடையாளங்களை பரஸ்பரம் நாகார்ஜூனாவும், நாகேஸ்வரராவும் உணர்கிறார்கள். தங்கள் பெற்றோரை காப்பாற்றுவதற்காக, விதியை வெல்ல முயற்சிக்கிறார்கள். உணர்ச்சிப்பூர்வமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.

கதையை கேட்டால் தலை சுற்றும். இந்த கிறுகிறுப்பு எதுவுமின்றி கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்து இயக்கியிருப்பதில்தான் விக்ரம்குமாரின் வெற்றியே அடங்கியிருக்கிறது. க்ளைமேக்ஸில் ஆக்சிடெண்ட் நடக்கும் தேதி பிப்ரவரி 14, 2014. ஆனால் நிஜத்தில் ஜனவரி 22, 2014 அன்றே நாகேஸ்வரராவ் காலமாகி விட்டார். க்ளிஷேதான். ஆனால், லைஃப் ஈஸ் ஆல்வேஸ் ஸ்ட்ரேஞ்சர் தன் ஃபிக்‌ஷன்.

அக்கினேனி குடும்பத்தின் ஆதிக்கம்தான் படம் முழுக்க என்றிருந்தாலும் அசத்தியிருப்பவர்கள் சமந்தாவும், ஸ்ரேயாவும். ஆறு வயது குழந்தையின் அம்மாவாக, கணவருடன் கருத்துவேறுபாடு வந்தபிறகு வேதனை காட்டும் குடும்பத்தலைவியாக, சுட்டியான கல்லூரி மாணவியாக, முன் ஜென்மத்து நினைவுகள் வந்ததும் சைதன்யாவின் மீது வெறுப்பு, வளர்ந்த குழந்தை நாகார்ஜூனா மீது தாயன்பு என்று சமந்தாவின் முழுத்திறமையும் வெளியாகியிருக்கிறது. நீண்ட காலமாக திரையில் முகம் காட்டாத ஸ்ரேயா, 1930களின் கிராமத்துப் பெண்ணாக பின்னியிருக்கிறார்.

சைதன்யாவை விட ஐம்பதை கடந்த அவரது அப்பா நாகார்ஜூனாதான் இன்னும் இளமையாக தெரிகிறார். நாகேஸ்வரராவுக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் மறைந்த ஜாம்பவான் திரையில் தெரிவதே நமக்கெல்லாம் போனஸ்தான். அக்கினேனி – ஐரிஷ் ஜாயிண்ட் வென்ச்சரான அகில் அட்டகாசமாக இருக்கிறார். ஆந்திராவுக்கு அடுத்த மகேஷ்பாபு ரெடி.

ஒருவேளை சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் ‘மனம்’ தமிழில் சாத்தியமாகி இருக்கலாம். விக்ரம்பிரபு, பிரபு, சிவாஜி என்று காம்பினேஷனே கலக்கலாக இருந்திருக்கும். தெலுங்கைவிட தமிழில் மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கும்.. ம்... ஆந்திராக்காரர்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக கொண்டாடுகிறார்கள்.

May 24, 2014

கோச்சடையான்

தியேட்டரே அலறுகிறது. செம மாஸ். விசிலடித்து விசிலடித்து வாயே விசிலாகி விட்டது என்றெல்லாம் ஏற்றி விடுவார்கள். எதையும் நம்பாதீர்கள். செம கடி. சிகரெட் பிடிக்காதீர்கள் என்கிற வாசகத்தோடு ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்லைடை தியேட்டரில் போட்டால் கூடத்தான் விசிலடிக்கிறார்கள். ரஜினி படமென்று கூறி மீண்டும் குசேலன் மாதிரி கழுத்தறுத்திருக்கிறார்கள்.

ஆசியாவின் முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படத்தைவிட நிக்கில்டன் சேனலில் வரும் நிஞ்சா ஹட்டோரி சூப்பராக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒருவேளை நிஜ ரஜினியையே வைத்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவை இயக்கியிருந்தால் வேற ரேஞ்சுக்கு போயிருக்கலாம். அறிமுக இயக்குனர் சிம்புதேவனுக்கே ஒரு வரலாற்றுப் படத்தில் ரிஸ்க் எடுக்கும் தில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாருக்கு ஏன் அச்சமென்று தெரியவில்லை.

பிரும்மாண்டமான கிராஃபிக்ஸ் செட்டிங்ஸ் ஓக்கே. ஆனால் பொம்மையில் உருவாக்கப்பட்ட மாடல் ஆட்கள்தான் படுத்துகிறார்கள். ரஜினி சில சீன்களில் பரவாயில்லை. பெரும்பாலான காட்சிகளில் பரிதாபமாக இருக்கிறார். நல்லவேளை த்ரீடி அனிமேஷனில் தன்னை பார்க்காமலேயே நாகேஷ் செத்துப்போய் விட்டார். நாசர், சரத்பாபு, ஷோபனா உள்ளிட்டோரின் பொம்மைகளெல்லாம் அய்யோவென்றிருக்கிறது. கற்பனைக்கு எட்டாத போர்க்கள காட்சிகளை காட்டும்போது பிரமிப்பு ஏற்படுவதற்கு பதிலாக, இதெல்லாம் பொம்மைகள்தானே என்று சலிப்புதான் தோன்றுகிறது.

புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும்போதே அதை ரொம்ப டம்மியாக கொண்டுவந்தால், அந்த தொழில்நுட்பம் மீதே ரசிகர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கமல்தான் சரிபட்டு வருவார். வெகுஜன ரசிகனுக்கு புரியாதவாறு அறிவுஜீவித்தனமாக எதையாவது செய்து கையை சுட்டுக் கொண்டாலும் கலக்கலாக புது டெக்னாலஜியை எஸ்டாப்ளிஷ் செய்வார்.

இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று டைட்டிலில் போடுகிறார்கள். முன்பெல்லாம் டிடியில் போடும் சேர்ந்திசை, மெல்லிசை ரேஞ்சுக்கு பாடல்கள் இருக்கிறது. பின்னணி இசையும் ஏனோதானோ. ஒருவேளை இசையமைத்தது ஆஸ்கர் நாயகனின் ஃபேக் ஐடியோ என்னவோ?

படத்தின் பெரிய ஆறுதல் ரஜினி மற்றும் நாசரின் பின்னணிக் குரல். வயசானாலும் சிங்கங்கள் காடு அலறும் கர்ஜனையாகதான் உறுமுகின்றன. போலவே கே.எஸ்.ரவிக்குமாரின் அருமையான கதை, திரைக்கதை, வசனம். பக்காவான பஞ்ச் டயலாக்குகளை பொம்மைக்கு எழுதி வீணடித்துவிட்டாரே என்று ஆதங்கமாக இருக்கிறது. பிளாஷ்பேக்கை ஏன் தீபிகா பொம்மையிடம், ரஜினி பொம்மை சொல்கிறதோ தெரியவில்லை. ஊருக்கே தெரிந்த கோச்சடையான் பொம்மையின் கதை, தீபிகா பொம்மைக்கு மட்டும் தெரியாதா என்ன?

வாழ்ந்துகொண்டிருக்கும் ரஜினியை வைத்து இதுமாதிரி கந்தர்கோலம் செய்திருப்பதைவிட, மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆரை கிராஃபிக்ஸில் கொண்டு வந்திருந்தால், வாத்தியாரை திரையில் காணும் திருப்தி மட்டுமாவது மிஞ்சியிருக்கும்.

பெட்டர் லக் அட் லிங்கா!

April 28, 2014

வாயை மூடி பேசவும்

‘உனக்கு எது சரின்னு படுதோ, அதை செய்’ படம் சொல்லும் மெசேஜ் இதுதான். எனவே இயக்குனருக்கு சரியென்று பட்டதை எடுத்திருக்கிறார்.

பனிமலை என்றொரு பச்சைப்பசேல் ஊர். பேசினால் பரவும் வியாதி திடீரென்று வருகிறது. எனவே இங்கு பேச்சுரிமைக்கு அரசு தடை விதிக்கிறது. காமிக்கலான கலக்கல் ஒன்லைனர். வாயாடிகளை கலாய்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இயக்குனர் களமிறங்கி விட்டதால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆடி தீர்க்கிறார். இந்த ஐடியா மட்டுமே கரை சேர்த்துவிடுமென்று அவருக்கு மூடநம்பிக்கை.

திருவாரூர் தேர் மாதிரி முதல் பாதியில் படம் நகரவே மறுக்கிறது. ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இயக்குனரே அறிவிப்பாளராய் ‘நடித்திருக்கும்’ டிவி க்ளிப்பிங், நடிகர் பூமேஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் நல சங்கம் என்கிற எழவெல்லாம் எதற்கென்றே தெரியவில்லை. ‘மொழி’ மாதிரி உணர்ச்சிப்பூர்வமான படமாக வந்திருக்க வேண்டியது, இந்த கந்தாயங்களால் ‘தெனாலிராமன்’ ஆகிவிட்டது.

துல்ஷார் துடிப்பாக இருக்கிறார். சிநேகமாக சிரிக்கிறார். நன்றாக நடிக்க அவரது அப்பா கொஞ்சம் டிரைனிங் கொடுக்க வேண்டும். இந்த சப்பை கேரக்டர் செய்ய நஸ்ரியா தேவையா? ஹீரோயினைவிட ஹீரோயினின் சித்தியாக வரும் மதுபாலாவை பார்த்து, யூத் விசில் அடிக்கிறார்கள். இந்திய இளைஞர்களிடையே வெகுவாக பரவிவரும் இந்த ‘ஆண்டிமேனியா’தான் நமோ அலையின் ஒரே சாதனை போலிருக்கிறது.

சார்லி சாப்ளின் பட பாணியில் நகரும் இரண்டாம் பாதி சுவாரஸ்யம். ஆனால் இதைவிட முழுநீள சுவாரஸ்யமாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பாகவே கமல் – சிங்கீதம் கூட்டணி ‘பேசும்படம்’ படத்தில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள்.

சின்ன சின்ன சிறுகதை மாதிரி நல்ல குட்டி ஐடியாக்கள். இந்த படம் எடுப்பதற்கு பதிலாக இயக்குனர், நான்கைந்து குறும்படங்கள் எடுத்திருந்தால், மக்களிடம் நன்றாக பேசப்பட்டிருப்பார்.

டைம்பாஸுக்காக ஒரு முறை பார்க்கலாம். ஒருவேளை கோடைவிடுமுறை குழந்தைகளுக்கு பிடிக்குமோ என்னவோ?

March 31, 2014

லெஜெண்ட்

கால்கள் இரண்டையும் சேர்த்துவைத்து நேராக நிமிர்ந்து நிற்கமுடியாவிட்டால் உங்களை ஸ்கூல் என்.சி.சி.யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாருங்கள். பாலகிருஷ்ணா சாமியின் ரீமேக்கான லக்‌ஷ்மி நரசிம்மாவில் டெபுடி கமிஷனர். பரமவீர சக்ராவில் இராணுவ மேஜர். ரசிகர்களும் அவரை போலிஸாகவும், இராணுவ மாவீரனாகவும் ஏற்றுக்கொண்டு கொண்டாடி தீர்க்கிறார்கள். உங்களுக்கு என்ன சாமி போச்சு?

பாலகிருஷ்ணாவுக்கு வயது ஐம்பத்தி மூன்று. இருபத்தைந்து வயதை எட்டிவிட்ட பெண்கள் கூட அவருக்கு ஹீரோயினாக முடியாது. சுமோவை சுண்டுவிரலால் தூக்கியடிக்கிறார். கிராபிக்ஸோ கேமிரா டெக்னிக்கோ அல்லது என்ன எழவோ. மைக்கேல் ஜாக்ஸனைவிட சிறப்பாக மூன்வாக் செய்கிறார். அவரது விரல் லேசாக தொப்புளில் பட்டதுமே நயன்தாராவே விரகதாபம் கொள்கிறார். பாலைய்யா தொடையை தட்டினால் ஆகாயத்தில் பறக்கும் விமானமே ஆட்டம் காண்கிறது. கண்ணசைவில் கடல் கொந்தளிக்கிறது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை வரிசைகட்டி வந்து இவரிடம் பிச்சையெடுக்கச் சொல்லுங்கள்.

சென்னையில் பிறந்துவளர்ந்த பாலகிருஷ்ணா தன்னுடைய அப்பா என்.டி.ஆரின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பா ஆரம்பித்த கட்சியான தெலுங்குதேசம் அவருக்கு உயிர். தன்னுடைய மூத்த மகளை அக்கா மகனுக்கே மணம் முடித்து கொடுத்தார். சம்பந்தி வேறு யாருமல்ல. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். அவருடைய பின்னணி புரியாமல் அவரது படத்தை பார்க்கும் மாபாவிகள் மொக்கை என்று விமர்சிக்கிறார்கள். பாலைய்யாவின் பாத்திரங்களை ஆந்திர அரசியல், சமூக சூழல் புரிந்தவர்களால் மட்டுமே ரசிக்க முடியும். அவர் ஏன் ஆரஞ்சு கலரில் பேண்ட் போடுகிறார், கிளிப்பச்சை கலரில் சட்டை அணிகிறார், ஊதா கலரில் பெல்ட் மாட்டியிருக்கிறார் என்பதன் பின்னாலெல்லாம் நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை. நரம்பு புடைக்க, கன்னத்து தசைகள் அதிர அவர் பேசும் வசனங்கள் வெறும் சினிமா வசனங்கள் அல்ல. ஒவ்வொரு ஆந்திர குடிமகனின் உள்ளத்துக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு. இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத தமிழ் ஸ்டுடியோ அருண்கள் ‘சினிமா பாரடைஸோ’விலேயே தங்கிவிடலாம். தெலுங்கு படங்களை பார்க்கும் தற்கொலை முயற்சியில் குதிக்கவேண்டியதில்லை.

‘லெஜெண்ட்’ பாலையாவின் தொண்ணூற்றி எட்டாவது படம். நேற்றைய மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் அரசியல் பஞ்ச் பேசி க்ளாப்ஸ் அள்ளிக் கொண்டிருக்கையில், வெயிட்டான பேக்கிரவுண்ட் வைத்திருக்கும் பாலைய்யாவுக்கு சமீபமாக சொல்லிக்கொள்ளும்படி ஹிட் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலுக்கு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கிய சிம்ஹாதான் கடைசி ஹிட். என்.டி.ஆருக்கு பிறகு உருவெடுத்த சிரஞ்சீவி, நாகார்ஜூனா, பவன்கல்யாண், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் என்று தெலுங்கு சினிமாவின் அடுத்தடுத்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஒரே ஒருவர்தான் நிரந்தர போட்டி. தி ஒன் அண்ட் ஒன்லி பாலைய்யா.

ஆந்திரா இரண்டாக பிரிக்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படிப்பட்ட பாலைய்யா என்ன செய்யவேண்டுமோ அதைதான் லெஜண்டில் செய்திருக்கிறார். காட்டுத்தனமான கொலைவெறியாட்டம். சிம்ஹாவில் பாலைய்யாவுக்கு ரீலைஃப் கொடுத்த அதே பொயப்பட்டி சீனுதான் இயக்குனர். ஒரு மாஸ் ஹீரோவை எப்படி புரொஜெக்ட் செய்யவேண்டும் என்கிற நாடி தெரிந்த இயக்குனர். ரவிதேஜாவை தன் அறிமுகப்படமான பத்ராவிலேயே ஷார்ப்பாக தீட்டியவர். ஜூனியர் என்.டி.ஆரின் மிருகவெறிப் படமான ‘தம்மு’தான் அவருடைய முந்தைய படைப்பு.

தெலுங்கில் இப்போது புது டிரெண்ட். ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள். இவ்வருட தொடக்கத்தில் இந்த ஃபார்மேட்டில் வெளிவந்த ராம்சரணின் ‘எவடு’ சூப்பர்ஹிட். ‘லெஜண்ட்’டும் அதே வடிவம்தான். டோலிவுட் படங்களில் ஹீரோவின் அறிமுகக் காட்சிக்குதான் கிரியேட்டிவ்வாக இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் டிஸ்கஷனில் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். களேபரமாக, இதுவரை உலக சினிமாவில் வந்திருக்காத காட்சியாக அந்த பில்டப் அமைந்தால்தான் ரசிகர்களிடம் எடுபடும். லெஜண்டில் ஒவ்வொரு சண்டைக் காட்சியின் தொடக்கத்திலும் ஒன்றுக்கு ஆறாக அதகள பில்டப். பாலையாவுக்கு மட்டுமல்ல, காமெடியன் பிரம்மானந்தத்துக்கு ‘பாட்ஷா’ லெவல் (பாட்ஷா லெவலென்ன, பாட்ஷாவேதான்) பிளாஷ்பேக் வைத்து அமர்க்களம் செய்திருக்கிறார்கள்.

பாலையா டேன்ஸில் கொஞ்சம் கூடுதலாக காண்சன்ட்ரேட் செய்யக்கூடியவர். பாடல் காட்சிகள் வித்தியாசமான லொகேஷன்களில், செம தீமில், அட்டகாசமான நடன அசைவுகளோடு அமையவேண்டும் என்று ஆசைப்படக்கூடியவர். ஆனால் ஆந்திராவின் இளையதலைமுறை ரசிகர்கள் இவரது நடனத்தை காமெடிக் காட்சியாகதான் பார்க்கிறார்கள். இந்த வரலாற்று சோகத்தையும் முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறது லெஜண்ட். இப்படத்தில் ஆடுபவர் பாலகிருஷ்ணாவா அல்லது ஜூனியர் என்.டி.ஆரா என்று கையை கிள்ளி பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது முதுமையையும் தாண்டி ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல் அசுரத்தனமான அசைவுகளை அனாயசமாக செய்திருக்கிறார்.

இங்கே ‘தல’யோட பைக்கை காட்டினாலேயே விசில் அடிக்கிறார்கள். ‘தல’க்கு மட்டும்தான் பைக்கே ஓட்டத்தெரியும் என்று தமிழர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. பாலைய்யா பைக், கார், ரயில், குதிரை, ஹீரோயினையெல்லாம் அசால்டாக ஓட்டுகிறார். ப்ளைட் மற்றும் கப்பல் ஓட்டக்கூடிய காட்சிகள் இல்லாததுதான் படத்தின் ஒரே குறை.

கதை?

அதை விட்டுத்தள்ளுங்கள். இங்கே கே.எஸ்.ரவிக்குமார், ஹரியெல்லாம் நிறைய செய்துவிட்ட கதைதான். ஆனால் ட்ரீட்மெண்ட் பின்னி பெடல் எடுக்கிறது. பரபர திரைக்கதை. போதுமான இடைவெளிகளில் சூப்பர் பாடல்கள். ரொமான்ஸ். ஆக்‌ஷன் என்று அமர்க்களமான மசாலா. பி அண்ட் சி ஏரியாவின் அதிரடி பேட்ஸ்மேனான பாலகிருஷ்ணா இம்முறை மல்ட்டிப்ளக்ஸிலும் சிக்ஸர்களாக விளாசியிருக்கிறார். தன்னுடைய அரசியல் மூவ் அடுத்து என்னவென்று இறுதியில் ரசிகர்களுக்கு க்ளூவும் கொடுத்திருக்கிறார். Balaiah rules the tollywood summer!

லெஜண்ட் : மரண கொண்டாட்டம்!

March 3, 2014

தெகிடி

ஷெர்லாக் ஹோம்ஸ், ஜேம்ஸ்பாண்ட், சங்கர்லால், கணேஷ்-வசந்த், விவேக் - ரூபலா, நரேன் - வைஜயந்தி, பரத் –சுசிலா... இவர்கள் எல்லாம் யாரென்று உங்களுக்கு தெரிந்திருந்தால், ‘தெகிடி’ உங்களுக்கான படம்.

எண்பதுகளின் மத்தியில் வெளிவந்த ‘க்ரைம் நாவல்’ தமிழ் சமூகத்தில் குறிப்பிடத்தக்க சலனத்தை ஏற்படுத்திய பத்திரிகை. கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில்தான் சிறுசுகளிடையே சக்கைப்போடு போட்ட ராணிகாமிக்ஸில் ஜேம்ஸ்பாண்ட் இடைவிடாமல் (அரைகுறை ஆடை அழகிகளின் துணையோடு) துப்பறிந்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும், பின்னாலும் துப்பறியும் க்ரைம் கதைகளுக்கு தமிழில் குறைச்சல் இல்லையென்றாலும் இந்த காலக்கட்டத்தை ‘கோல்டன் பீரியட்’ எனலாம். ‘டிடெக்டிவ்’ என்கிற ஆங்கில சொல் தமிழர்களின் காதலுக்குள்ளானது. சென்னையில் திடீரென ஆங்காங்கே ‘டிடெக்டிவ் ஏஜென்ஸிகள்’ முளைத்தன. வளர்ந்து பெரியவன் ஆனேனா ‘டிடெக்டிவ் ஏஜெண்ட்’ ஆவேன் என்று அந்தகால சிறுவர்கள் (நானும்தான்) இலட்சியம் கொண்டார்கள். உண்மையில் நம்மூர் டிடெக்டிவ் ஏஜென்ஸிகள் பெரும்பாலும் தரகர் வேலைதான் பார்த்தன என்பதெல்லாம் வேறு கதை. அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் போய் பிரைவேட் டிடெக்டிவ்கள் துப்பறிய அப்படியென்ன பெரியதாக கேஸ் கிடைத்து தொலைக்கப் போகிறது?

தெகிடியின் ஹீரோ ஒரு டிடெக்டிவ். எம்.ஏ. கிரிமினலாலஜி படித்தவனுக்கு ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது. சில தனி மனிதர்களின் ப்ரொஃபைலை அக்குவேறு ஆணிவேறாக அலசி உருவாக்கித் தருவதுதான் அவனுக்கு தரப்படும் அசைன்மெண்ட். இவன் துப்பறிந்த ஆட்கள் ஒவ்வொருவராக மண்டையை போடுகிறார்கள். இது யதேச்சையான ஒற்றுமையல்ல என்று உணருகிறான். பிரச்சினை என்னவென்றால் அவன் பார்த்த கடைசி அசைன்மெண்ட் அவனுடைய காதலியுடையது. அவளும் இறந்துவிடுவாளோ என்கிற அச்சத்தில் ஒட்டுமொத்த கேஸையும் தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஆரம்பிக்கிறான். கொலையாளிகள் யாரென்பது ‘திடுக்’ க்ளைமேக்ஸ்.

யெஸ். அப்படியே ராஜேஷ்குமார் டெம்ப்ளேட் கதைதான். நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட க்ரைம்நாவல்களை வாசித்திருக்கும் பட்சத்தில் திரைக்கதையின் முடிச்சுகளை படம் பார்க்கும்போதே ஒவ்வொன்றாக நீங்களே அவிழ்த்து விளையாடலாம். உங்களுக்குள் ஒரு புத்திசாலித்தனமான டிடெக்டிவ் இருக்கும் பட்சத்தில் க்ளைமேக்ஸ் வில்லன் யாரென்று இடைவேளையின் போதே கூட யூகித்துவிடலாம்.

தமிழுக்கு புதுசு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஜெயசங்கரில் தொடங்கி எவ்வளவோ சி.ஐ.டி.கள் ஏகப்பட்ட கேஸ்களை நம்முடைய வெள்ளித்திரையில் துப்பறிந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் க்ளப் டான்ஸ், காதில் பூச்சுற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் என்றே நம்மூர் துப்பறியும் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘தெகிடி’ இதிலிருந்து மாறுபடுவது, அதன் நம்பகத்தன்மை கொண்ட காட்சிகளால். மொக்கைபீஸான நாமே டிடெக்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் அதிகபட்சமாக நம்மால் எதை செய்யமுடியுமோ அதைதான் ஹீரோ செய்கிறார். படத்தில் வரும் ஒரே ஒரு ஆக்‌ஷன் ப்ளாக் கூட, பறந்து பறந்து தூள்பறத்தும் வகையில் அமையாத நார்மலான சண்டைக்காட்சிதான்.
ஹூரோ அசோக்செல்வன் ஜம்மென்று சாஃப்ட்வேர் புரோகிராம்மர் மாதிரி இருக்கிறார். அவருக்கு நுண்னுணர்வு அதிகமென்று நம்பக்கூடிய தோற்றம். ஹீரோயின் ஜனனிக்கு பெரிய சைஸ் கண்கள். முகத்தில் காது, வாய், மூக்கையெல்லாம் விட கண்தான் பளிச்சென்று தெரிகிறது.

க்ரைம் தொடர்கதைகளுக்கு வரையப்படும் ஓவியங்கள் பாணியில் டைட்டில். தேவையான இடங்களில் மட்டும் பாடல்கள். விறுவிறுப்பான பின்னணி இசை. அலட்டலில்லாத இயக்கம் என்று கமர்சியல் காம்ப்ரமைஸ் இல்லாமல் கச்சிதமான படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். ‘நல்ல படமே தமிழில் வரமாட்டேங்குது’ என்று அலுத்துக்கொள்பவர்கள், திரையரங்கம் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டிய திரைப்படம்.

February 27, 2014

ஆஹா கல்யாணம்

ஆதித்யா சோப்ராவின் யாஷ்ராஜ் பிலிம்ஸின் முதல் தென்னிந்திய பிராஜக்ட். மொத்தமாக முப்பத்தைந்து கோடியை போட்டுவிட்டு, ரிசல்ட்டுக்காக நகம் கடித்துக் கொண்டிருந்தார்களாம். ‘ஏ’ சென்டர் தியேட்டர்களில் நல்ல ரிசல்ட். தமிழ், தெலுங்கு இரண்டிலும் சேர்த்து ஈஸியாக ஃபிப்டி சி தாண்டிவிடும் என்று மார்க்கெட்டில் சொல்கிறார்கள். இனி இந்தியில் ஹிட் அடிக்கும் படங்களை டப் அடிக்காமல், இதுபோல தென்னிந்திய நடிகர்களை வைத்து பை-லிங்குவலாக ஏகப்பட்ட படங்கள் நம்மூர் தியேட்டர்களை நோக்கி காவடி தூக்க போகின்றன. முன்பு நம்மூர் ஜெமினி வாசன்களும், ஏவிஎம்களும், சித்ராலயா ஸ்ரீதர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த பிசினஸ் இது. இப்போது வட இந்திய பனியாக்களின் டர்ன்.
ஹீரோ நானியை விடுங்கள். ஹீரோயின் வாணிகபூர் ஓர் அட்டகாசமான வரவு. சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த அம்சங்களுக்கும் கட்டுப்படாத காட்டுத்தனமான அழகு. ஜெயப்பிரதாவையும், அனுஷ்காவையும், ஸ்ருதிஹாசனையும் பிசைந்துசெய்தது மாதிரி அசாதாரணமான காம்பினேஷனில் பிரமிக்கவைக்கும் பேரெழில். கழுத்துக்கும், கழுத்துக்கு கீழான பிராப்பர்ட்டிக்கும் இடையில் மட்டுமே ஒண்ணு, ஒன்றரை அடி கேப் இருக்கும் போலிருக்கிறது. தமிழர்கள் அகலமான முதுகுக்கே ஆவென்று வாயைப்பிளப்பார்கள். முன்புறத்தில் செக்கச்செவேலென்ற நீண்ட, அகன்ற கழுத்தை பார்த்து மெண்டலாகி திரியப் போகிறார்கள். வாணியின் கழுத்தழகை ‘பளிச்’சிடவென்றே பர்ஃபெக்டான காஸ்ட்யூம்கள். போலவே அவரது மத்திய இடைப்பிரதேசத்தின் நீளம், அகலமும் ஜாஸ்தி. இடுப்பை அப்படியும் இப்படியுமா ஆட்டி, ஆட்டி டேன்ஸ் ஆடும்போது தியேட்டரில் ஏகப்பட்ட விக்கெட்டுகள் டொக்காகின்றன. இண்டர்வெல் ப்ளாக்கில் சூடான லிப்லாக் சீன் வேறு. பெரிய ராட்டிணத்தில் ரவுண்ட் அடித்து கோலிவுட் + டோலிவுட்டின் அடுத்த சில ஆண்டுகளை ஆளப்போகிறார் இந்த தேவதை.

பெரும்பாலான காட்சிகள் அனைத்திலும் நாயகன், நாயகி இருவருமே இருக்கிறார்கள். அல்லது இவர்களில் ஒருவர் இடம்பெறும் காட்சிகள் மட்டும்தான். வேறு கிளை பாத்திரங்களோ, கிளைக்கதைகளோ, தனியாக காமெடி டிராக்கோ இல்லவே இல்லை. ஏகப்பட்ட பாத்திரங்கள் இருந்தும் இரண்டே இரண்டு கேரக்டர்களை மட்டுமே மையப்படுத்தி அறுபத்தஞ்சி சீன் எழுதுவது எப்படியென்று, உதவி இயக்குனர்கள் இப்படத்தின் திரைக்கதை கட்டுமானத்தை பாடமாக படிக்க வேண்டும். இடைவெளி இன்றி அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் இருந்தும் காட்சிகள் சலிக்கவேயில்லை. லேசான டப்பிங் வாசனைதான் பெரும் குறை. மற்றபடி பக்காவான மல்ட்டிப்ளக்ஸ் மூவி. கம்ப்ளீட் ஃபேமிலியோடு ஜாலியாக பார்க்கலாம்.

ஆஹா ஓஹோ கல்யாணம்!

February 17, 2014

தோழரை காதலிக்கும் பூர்ஷ்வா

போன தலைமுறை புனிதமாய் கருதி பொத்தி பொத்தி பாதுகாத்த காதலையும், கம்யூனிஸத்தையும் பகடிக்கு உள்ளாக்குவது மலையாள இளம் இயக்குனர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அதிலும் இந்த வினித் சீனிவாசன் க்ரூப் களமிறங்கிய பின்பு ஒரே அதகளம்தான்.

இயக்குனர் ஜூடே ஆண்டனி ஜோசப்பின் அறிமுகப்படமான ‘ஓம் சாந்தி ஓசண்ணா’ அமர்க்களமான ரொமாண்டிக் காமெடி கமர்சியல். சாஃப்ட்வேர் என்ஜினியராக பொட்டி தட்டிக் கொண்டிருந்த ஆண்டனிக்கு திடீரென ஒருநாள் சினிமாவில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. திலீப் நடித்த ‘கிரேஸி கோபாலன்’ படத்தில் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ம்ஹூம். க்ளாப் அடிக்க கற்றுக் கொண்டதை தவிர வேறெதையும் அங்கே கற்க முடியவில்லை. ஹீரோ திலீப்புக்கு இவரைப் பார்த்து பரிதாபமாகி விட்டது. அடுத்து வினீத் சீனிவாசனை இயக்குனராக அறிமுகப்படுத்தி, ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ படத்தை திலீப் தயாரித்தார். அதில் பணிபுரிய ஆண்டனியை, வினீத்திடம் திலீப்பே சிபாரிசு செய்தார். இந்த படத்தில்தான் கேரளாவின் இன்றைய ட்ரீம்பாயான நிவின்பாலி அறிமுகமானார்.தொடர்ச்சியாக வினீத் சீனிவாசின் அடுத்த ப்ளாக் பஸ்டர் படமான ‘தட்டத்தின் மறயத்து’விலும் ஆண்டனி தொழில் கற்றார். போதும். தனிக்கடை போட்டுவிட்டார்.

‘ஓம் சாந்தி ஓசண்ணா’வும் அதே வினீத் ஸ்டைல் தீம் படம்தான். முந்தைய தலைமுறை ‘ச்சோ.. ச்சோ’ கொட்டி ரசித்து ஆராதித்த விஷயங்களை, உலகமயமாக்கலுக்கு பிறகான தலைமுறை எப்படி பார்க்கிறது என்பதுதான். பக்காவான ஸ்க்ரிப்ட். மீடியம் பட்ஜெட். பர்ஃபெக்ட்டான போஸ்ட் புரொடக்‌ஷன். ஃப்ரேமுக்கு ஃப்ரேம்.. இன்ச் பை இன்ச் ரிச்சான குவாலிட்டி. மலையாளத் திரையுலகில் வீசிக்கொண்டிருக்கும் புதிய அலை இதுதான்.

எண்பதுகளின் மணிரத்னம் பட நாயகிகளை மறக்க முடியுமா? மவுனராகம் சுட்டி ரேவதி, இதயத்தை திருடாதே துறுதுறு கிரிஜா. இவர்களின் நீட்சியாக இந்த படத்தில் நஸ்ரியா. படம் தொடங்கும்போதே நிவின்பாலி தன் ரசிகர்களிடம் (!) விளக்கம் அளிக்கிறார். இந்த படம் ஹீரோயினின் வ்யூபாயிண்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.

ஸ்கூல் படிக்கும் பூஜா பையன் மாதிரி வளர்கிறாள். ஜீன்ஸ் பேண்ட், டீஷர்ட், ஹீரோ ஹோண்டா பைக்கென்று. இவளது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆக்டிவிட்டி என்னவென்றால் ‘ஒயின் டேஸ்டர்’. பூஜாவின் சமூகத்தில் நூறு, இருநூறு சவரன் கொடுத்து ஒரு மொக்கையான பையனுக்கு பெண் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. எனவே தன்னுடைய பெட்டர் ஹாஃபை தானே ‘செலக்ட்’ செய்யவேண்டுமென்று மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். ஸ்கூலில் சகமாணவன் ஒரு பக்காவாக செட் ஆகிறான். ஆனால் அவனிடம் பெண்கள் விரும்பத்தக்க ரஃப் ஆன ஆண்மை மிஸ்ஸிங் என்று பூஜாவுக்கு தோன்றுகிறது.

பூஜாவின் இடைவிடா தேடுதலில் மாட்டுபவன்தான் நம் தோழர் கிரி. பக்கா கம்யூனிஸ்டான கிரி, பட்டம் படித்திருந்தாலும் ஊரில் விவசாயம்தான் பார்க்கிறான். பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காக அதிகாரங்களோடு மோதுகிறான். அநீதிகளை தட்டி கேட்கிறான். இது போதாதா. பூஜாவுக்கு காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த –அதாவது பூர்ஷ்வா ஆன- பூஜாவை கிரி விரும்புவானா என்பதுதான் கேள்வி.

அந்த வருட ஓசண்ணா திருநாளன்றுதான் கிரிக்கு பிறந்தநாளும் வருகிறது. தன்னுடைய காதலை அவனிடம் தெரிவிக்க முயல்கிறாள். கிரியின் சித்தாந்த மூளை இக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வர்க்க வேறுபாடுகளை தாண்டி, அவள் பள்ளி மாணவி. தான் பொறுப்பான கம்யூனிஸ்ட் என்பதை சுட்டிக்காட்டி, அவளை ஒழுங்காக படித்து உருப்படுமாறு உபதேசம் செய்கிறான்.

இதற்கிடையே ஒரு காதலை சேர்த்து வைப்பதில் ஏற்படும் பிரச்சினையால், ஒரு பூர்ஷ்வாவின் (ஸ்ஸப்பா) வன்முறை தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் சீனத்துக்கு (முடியல) போய் தலைமறைவாகிறான். பூஜாவுக்கு மெடிக்கல் அட்மிஷன் கிடைக்கிறது. அங்கு வரும் புரொபஸர் ஒருவரோடு லேசான ஈர்ப்பு தோன்றுகிறது. ஆனால் அது காதல் அல்ல என்று அவளது மனம் அவளை தெளிவுப்படுத்துகிறது.

அப்படி இப்படியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்போது பூஜா டாக்டர். மக்கள் சீனத்திலிருந்து தோழர் கிரி திரும்பிவிட்டார். அதே ஓசண்ணா நாள். அன்றுதான் கிரிக்கும் பிறந்தநாள். என்னவாகிறது இவர்கள் காதல் என்பதை நொடிக்கு நாலு முறை கிச்சுகிச்சு மூட்டி, வயிறு வலிக்க வைக்கும் திரைக்கதை வசனங்களோடு சுடச்சுட கேரளா ஸ்பெஷல் மீல்ஸ் பரிமாறியிருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் ஆகச்சிறந்த ஆச்சரியம் நஸ்ரியா. குள்ளச்சியும், ஒல்லிப்பிச்சானுமான நஸ்ரியா எப்படிப்பட்ட திறமைவாய்ந்த நடிகை என்பதை யாராவது நையாண்டி இயக்குனர் சற்குணத்திடம் முன்பே எடுத்துச் சொல்லியிருக்கலாம். அவரைப்போய் தொப்புளை காட்டச் சொல்லி வற்புறுத்தியிருக்க மாட்டார். படம் முழுக்க நஸ்ரியாவின் நரேஷனில்தான் ஓடுகிறது. அதிலும் கிளைமேக்ஸில் “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம். தன்னோட முதல் காதலியோட பேரைதான் பொண்ணு பொறந்தா வைப்பானுங்க” என்று சொல்லும்போது காட்டும் முகபாவம் ஏ க்ளாஸ். நிவின் பாலி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்து, நஸ்ரியாவுக்கு க்ளாப்ஸ் வாங்கித்தரும் பெருந்தன்மையுடைய இளம் நம்பிக்கை நட்சத்திரம்.

ஒருநாள் முழுக்க நண்பர்களோடு சீயர்ஸ் அடித்து ‘சிப்’பி ‘சிப்’பி ஒயின் சாப்பிட்ட போதையை பின்னணி இசையும், பாடல்களும் அளிக்கிறது. திரையின் ஒவ்வொரு பிக்ஸெல்லிலும் இளமையோடு போட்டி போடும் இன்னொரு சமாச்சாரம், கேமரா அள்ளித்தரும் பசுமை. கொஞ்சமும் திகட்டாத கடவுளின் தேசம் கிளியோபாட்ராவின் மேனியைவிட பேரழகு கொண்டது என்பதை மறுக்க முடியாது. கேரளாவில் பிறக்கும் பெண்கள் ஏன் சூப்பர் ஃபிகர்களாக இருக்கிறார்கள் என்று அறிவியல்பூர்வமாக யோசித்துப் பார்த்தால் ஈ ஈக்குவல் டூ எம்சி ஸ்கொயர் என்கிற ஐன்ஸ்டீன் ஃபார்முலாவின் தாத்பரியம் புரியவருகிறது.

February 11, 2014

புலிவாலும் பத்மினியும்

வர்க்கமுரண் தான் ஒன்லைன். எதிர் எதிரான எக்ஸ்ட்ரீம் கார்னரில் வசிக்கும் இரு மனங்கள் ஏன் எப்படி முட்டிக்கொள்கிறது என்பதுதான் தீம். முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. பணத்துக்கு பஞ்சமில்லாத பிரசன்னா. பஞ்சமே வாழ்க்கையென வாழும் விமல். முன்னவருக்கு காதல் சைட் டிஷ். காமம் மெயின் டிஷ். பின்னவருக்கு காதல் புனிதம். காமத்தை பற்றி கல்யாணத்துக்கு அப்புறம்தான் பரிசீலனை. அட்டகாசமான கேரக்டர் ஸ்கெட்ச்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மின்னலை பிடித்து மேகத்தில் குழைத்து பெண்ணென்று செய்துவிட்ட நடிகையின் ‘பிட்டு’ என்றொரு சமாச்சாரம் இணையத்தளங்களிலும், பர்மாபஜாரிலும் உலவிவந்தது நினைவிருக்கிறதா. காமவெறி தமிழ்சமூகம் வயது வித்தியாசம் பாராமல் பார்த்து ரசித்ததே? பின்னர் அது நடிகையுடையது அல்ல, ஒரு பெங்களூர் கல்லூரி மாணவியுடையது என்று பின்கதைச் சுருக்கம் வந்தது. அதற்கு பிறகு அந்த ‘பிட்டு’ டேட்டிங் போனபோது பாய்பிரண்ட் பிடித்தது. அவனுடைய செல்போன் சர்வீஸுக்கு போனபோது கடைக்காரன் நெட்டில் ஏற்றிவிட்டான். அவமானம் தாங்காமல் அந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டாள் என்று கதை தொடர்ந்துகொண்டே போனது. புலிவாலில் அந்த கதை அப்படியே பதிவாகியிருக்கிறது. நீலப்படத்தில் வந்தவர் எந்த கோணத்தில், எம்மாதிரியான உடையில் வந்தாரோ (நாமும் காமவெறி தமிழ்சமூகத்தின் அங்கம்தான் என்பதால் அந்த பிட்டை எப்பவோ பார்த்திருக்கிறோம்) அப்படியே இப்படத்தில் ஓவியா வருகிறார். எதையுமே செல்போனில் பதிவு செய்துக்கொள்ளும் பிரசன்னா, இருவரும் ‘பேசிப்புழங்குவதையும்’ தெரியாத்தனமாக பதிவு செய்துவிடுகிறார். ‘டெலிட்’ செய்ய நினைக்கும்போது, ஏதோ போன் வந்து டெலிட்ட மறந்துவிடுகிறார்.

இந்த போன் எதிர்பாராவிதமாக விமலிடம் சிக்குகிறது. அதன்பிறகு படம் ரோலர் கோஸ்டர் ரைடுதான். இயக்குனர் மாரிமுத்து ஆறுவருடங்களுக்கு முன்பு எடுத்த கண்ணும் கண்ணும் படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மீண்டு வந்திருக்கிறார்.

புலிவால் - அட்டகாசமான கமர்ஷியல் த்ரில்லர்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பிறந்தவர்கள் கொண்டாடக்கூடிய திரைப்படம். பத்மினி என்கிற காரை இப்போதைய இளசுகள் சாலையில் கூட பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ரஜினி வைத்திருந்த கார் (செல்ஃப் டிரைவிங்). டாக்டர்களும், வக்கீல்களும் கார் வைத்திருந்தால் அது பத்மினியாகதான் இருக்கும். ஹ்யூண்டாய் என்றொரு கார் எந்த எமகண்டத்தில் வந்ததோ அம்பாசிடர்களும், பத்மினிகளும் காணாமல் போய்விட்டன. அட்லீஸ்ட் அம்பாஸடராவது டிராவல்ஸுக்கு ஓடுகிறது. பத்மினி சுத்தம்.

நீண்டகாலம் கழித்து, இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருக்கக்கூடாதா என்று என்னை ஏங்கவைத்த திரைப்படம். எந்த கமர்சியல் காம்ப்ரமைஸும் இல்லாமல் யதார்த்தமான போக்கில் மிகதுல்லியமாக ஒரு காலக்கட்டத்தின் அடையாளங்களை திரையில் பதித்திருக்கிறார் இயக்குனர். படம் முடியும்போது பத்மினியில் நாமும் ஒரு ரவுண்டு அடிக்கமாட்டோமா என்று ஏக்கம் வருகிறது.

அழியாத கோலங்கள் பாணியில் ஒரு இளைஞனின் பிளாஷ்பேக்காக படம் விரிகிறது. ஒரு ஊர்லே ஒரு பண்ணையார். அவரிடம் ஒரு பத்மினி. அந்த பத்மினியை ஓட்டுறதுக்கு ஒரு டிரைவர். பண்ணையாருக்கு ஒரு பொண்டாட்டி. ஒரு பொண்ணு. டிரைவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் (க்ளீனர் மாதிரி). டிரைவருக்கு ஒரு காதலி. பத்மினியின் முன்சீட்டில் ஒரு வாட்டியாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு அஞ்சு ரூபாய் (க்ளீனருக்கு லஞ்சம்) சேர்க்கும் சிறுவன் என்று பாத்திரங்களை பக்காவாக செட்டப் செய்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர்.

புகுந்தவீடு எவ்வளவு வசதியாக இருந்தாலும் பொறந்தவீட்டில் இருந்து அல்பத்தனமாக சின்ன சின்ன பொருட்களை எடுத்துப்போகும் பெண், சமையலறையில் அலட்சியமாக அறுவாமனையை நிமிர்த்துவைத்துவிட்டு வேலை பார்க்கும் குடும்பத்தலைவி, அதை பார்த்தவுடனேயே எடுத்து படுக்கவைக்கும் கணவன் என்று இயக்குனரின் சின்ன சின்ன நகாசு வேலைகள் படம் முழுக்க ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகாக அலங்கரிக்கிறது. சர்ப்ரைஸ் போனஸாக ஜெயப்பிரகாஷ் – துளசி காதல்.

படத்தின் நாயகி முந்தைய விஜய்சேதுபதி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தவர் போலிருக்கிறது. கண்களில் சாராயத்தை தேக்கி வைத்திருக்கிறார். மற்ற அம்சங்கள் என்ன என்னவென்று விரிவாக அலச போதுமான ஸ்பேஸ் இந்த படத்தில் இல்லை என்பதால், அடுத்த படம் வரும் வரை வெயிட் செய்தாக வேண்டும். அவரை தரிசித்ததில் இருந்து தாவணி போட்ட பெண் யாரையாவது காதலிக்க வேண்டும் என்று திடீர் ஆசை ஏடாகூடமாக வந்து தொலைக்கிறது.

எனிவே, வதந்திகளை நம்பாதீர்கள். ’பண்ணையாரும் பத்மினியும்’ சூப்பர். மிஸ் பண்ணாமல் டிவிக்கு வரும் வரை வெயிட் செய்யாமல் தியேட்டருக்கு போய் பார்த்துவிடுங்கள்.

January 20, 2014

ஜில்லா : பொது மன்னிப்பு

‘ஜில்லா’ பற்றிய முந்தைய பதிவு. இதை வாசித்துவிட்டு, இப்பதிவை வாசிப்பது நலம். இல்லாவிட்டால் close செய்துவிட்டு செல்வது அதைவிட நலம்.

இரவு வேளைகளில் மல்லிகைப்பூ வாசத்தை முகர்ந்துவிட்டால், சராசரித் தமிழன் காமவெறி மூடுக்கு ‘செட்’ ஆகிவிடுவான். அதைப்போலவே சினிமா ரசிகர்களுக்கு ‘ஃபெஸ்டிவல் மூட்’ என்று ஒன்றிருக்கிறது. தமிழில் இதை சரியாக புரிந்துக்கொண்ட நடிகர்கள் எம்.ஜி.ஆரும், ரஜினியும். இவர்களது பெரும்பாலான படங்கள் நூறு நாள், வெள்ளிவிழா கண்டது பொங்கல், முன்பு தமிழ்ப்புத்தாண்டாக இருந்த ஏப்ரல் 14 மற்றும் தீபாவளி தினங்களில் வெளியான திரைப்படங்களில்தான். கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாட தகுதியான படங்களாக பார்த்து இறக்குவது ஒரு கலை. அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் பெற்ற கமல்ஹாசனுக்கு இன்றுவரை கைவராத கலை. எம்.ஜி.ஆராகவும், ரஜினியாகவும் ஆக விரும்பும் இளைய தளபதி அவர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம். முன்பாக இதே பொங்கல் திருநாளில் திருப்பாச்சி, போக்கிரி என்று அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள் கூட அவருக்கு இந்த உள்ளொளி தரிசனத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பது அவலம்தான்.

ஒரு வழியாக ‘ஜில்லா’ பார்த்துவிட்டோம். முந்தைய ‘தலைவா’வை விட ஒரு மொக்கைப்படத்தை இளைய தளபதி கொடுத்துவிட முடியுமா என்று நாம் வியந்துக் கொண்டிருந்த வேளையில், அதைவிட சூப்பர் மொக்கையையே என்னால் தரமுடியுமென்று தன்னுடைய ‘கெத்’தை நிரூபித்து சாதனை புரிந்திருக்கிறார். முன்பு ‘ஆதி’யில் ஏற்பட்ட அதே விபத்துதான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ‘திருஷ்யம்’ கொடுத்த மோகன்லால் திருஷ்டி கழித்துக் கொண்டிருக்கிறார். ‘தளபதி’ ரேஞ்சு படமென்று கதை சொல்லி, இளைய தளபதியின் கேரியர் படகை கவிழ்த்துவிட்டார் இயக்குனர் நேசன். இந்த படம் ஏன் மொக்கை என்று விளக்குவதற்கு ஆயிரத்து இருநூறு பக்கங்கள் தேவைப்படும் என்பதால், இந்த மொக்கைப் பதிவையே வாசிக்கும் தைரியம் கொண்டவர்கள் ஒரு முறை ‘ஜில்லா’வை தரிசித்து தனிப்பட்ட தெளிவுக்கு வந்துவிடலாம்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. காஜல், இளைய தளபதியை நோக்கி சொல்கிறார். “உன் மூஞ்சியையே இப்போ கண்ணாடியில் பார்த்தால் உனக்கு பிடிக்காது”. அப்படியெனில் படம் பார்ப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமாரான ஒரு கதையை ஜில்லாவின் கதையென்று நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த கட்டுரையை வாசித்த லட்சக்கணக்கானவர்கள், “பரவாயில்லை மாதிரிதான் இருக்கும் போலயே” என்று முதல்நாளே போய் படம் பார்த்திருக்கிறார்கள். அவ்வாறு பார்த்து, அதன் காரணத்தால் மனம் பிறழ்ந்துப்போய் ஆயிரக்கணக்கானவர்கள் உளவியல் சிகிச்சை பெற்றுக்கொள்ள நாம் காரணமாகி விட்டோம். அதற்காக லக்கிலுக் ஆன்லைன் தளத்தை வாசிப்பவர்களிடம் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோருகிறோம். இனிமேல் மொக்கையா இருக்குமென்று நாம் யூகிக்கும் திரைப்படங்களுக்கு, படுமொக்கையான கதையையே முன்கூட்டி எழுதுகிறோம் என்று சத்தியப் பிரமாணம் செய்கிறோம்.

கடைசியாக, ஜில்லாவுக்கும் பிரஸ்தானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் யாரேனும் கையைப் பிடித்து இழுக்க நினைத்தால் ரெண்டு படத்தையும் பேக் டூ பேக்காக டிவிடியில் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்காக மீண்டும் மீண்டும் நானே தற்கொலை முயற்சியில் ஈடுபடவேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதில் நியாயமே இல்லை. நீங்களும் தற்கொலைக்கு முனையலாம். உங்களாலும் முடியுமென்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஒரு ரீமேக்கை ரீமேக் மாதிரி தெரியாமல் படம் எடுப்பதில் மட்டும் இயக்குனர் நேசன் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். ஜெயம் ராஜா இவரிடம் இந்த பாடத்தை மட்டும் டியூஷன் படிக்கலாம்.

January 9, 2014

ஜில்லா

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற...

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

January 3, 2014

உய்யாலா ஜம்பாலா

டோலிவுட்டுக்கு இது பொற்காலம். அவர்கள் எதை எடுத்தாலும் ஒர்க்கவுட் ஆகிவிடுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ சிறிமல்லி செட்டு’ என்கிற கிராமத்துப் பின்னணியை கொண்ட ப்ளாக் பஸ்டரில் துவங்கிய பயணம், அதே வில்லேஜ் ஜானரில் வெளிவந்திருக்கும் ‘உய்யாலா ஜம்பாலா’வின் சூப்பர்ஹிட்டில் முடிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் இளையராஜாக்களும், பாரதிராஜாக்களும் கொடிகட்டிப் பறந்த ஏரியா. இன்றோ தமிழில் பருத்திவீரன்களும், சுப்பிரமணியபுரங்களும், மதயானைக்கூட்டங்களும்தான் கிராமம் என்றாகிவிட்டது.

உய்யாலா ஜம்பாலாவின் ஒருவரி ரொம்ப பழசு. ‘ஒரு ஊரிலே அழகான ஒரு பையன், அவனுக்கு சூப்பரா ஒரு மாமா பொண்ணு’. அவ்ளோதான். உங்களுக்கு மாமாப்பொண்ணு இருந்திருந்தால் இந்த ஒன்லைனரின் கவர்ச்சியை உணர்ந்துகொள்ள முடியும் (நயன்தாரா ரேஞ்சுக்கு ஒரு மாமாப்பொண்ணு எனக்கு வாய்த்தும் ஜஸ்ட் மிஸ்). பரபரவென த்ரில்லருக்கு நிகரான பரபரப்பில் இந்த லைனை திரைக்கதை அமைத்திருப்பதில்தான் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் மாண்டேஜ் காட்சிகள் அநியாயத்துக்கு கலக்கல். பிறந்ததிலிருந்தே அழுதுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை, அவனுக்கு மாமன் மகள் பிறந்தபிறகு – அதை அடிக்கடி விளையாட்டுக்கு சீண்டி – சிரிக்க ஆரம்பிக்கிறான். வளர்ந்ததும் கூட இருவரும் கீரியும் பாம்பும்தான். அவளை வெறுப்பேற்றுவதற்காகவே வேறு ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்குமாறு இவன் பழிப்பு காட்டுகிறான். அவளோ இவனை வெறுப்பேற்ற, ஒரு டுபாக்கூரை காதலிக்கவே தொடங்கி விடுகிறாள். கதையை கேட்க கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும் காட்சிக்கு காட்சி சிரிப்பு வெடிதான். அத்தை பையனும், மாமன் பொண்ணும் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ் என்பது போகோ டிவி பார்க்கும் குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும்.

படத்தில் காட்டும் கிராமத்தின் சித்தரிப்பு ரொம்ப முக்கியமானது. பொதுவாக தெலுங்கு கிராமங்களில் வேட்டியை ஒரு மாதிரி கீப்பாச்சி மாதிரி கட்டிக்கொண்டு அலையும் பெருசுகள், எப்பவுமே கோழி அடித்து குழம்பு வைக்கும் பெண்கள், தாராளமாக மாராப்பை காட்டிக்கொண்டு அலையும் ஹீரோயின், டூயட்டில் கூட கத்தியும் ரத்தமுமாகவே காணப்படும் ஹீரோவென்று இல்லாமல் சமகால கிராமத்தை எந்த சினிமாத்தனமும் இல்லாமல் சித்தரிக்க இயக்குனர் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்.

முழுக்க புதுமுகங்கள் இடம்பெற்று இவர்கள் பெற்றிருக்கும் வெற்றி, பஞ்ச் அடித்தே காலம் தள்ளும் சூப்பர் ஸ்டார்களை அசைத்துப் பார்க்கும் என்பது உறுதி. சினிமாவில் content is the king என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது உய்யாலா ஜம்பாலா.

ஹீரோவாக நடித்திருக்கும் ராஜ் தருண், ஒரு என்ஜினியரிங் மாணவர். இருபத்தோரு வயதாகிறது. டைரக்டர் ஆகவேண்டும் என்பது லட்சியம். ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் பங்கேற்றிருக்கிறார். தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போனபோது, எங்களுக்கு டைரக்டர் எல்லாம் இருக்காங்க. நீ வேணும்னா படத்துலே நடி என்றிருக்கிறார். நடிப்பில் ஆர்வம் இல்லை, டைரக்‌ஷன்தான் லட்சியம் என்று இவர் மறுத்ததுமே, சரி எங்க படத்திலே அசிஸ்டெண்டா வேலை பாரு என்று சொல்லியிருக்கிறார்கள். யாருக்கோ நடிப்பு சொல்லித்தர சொல்லி சில சீன்களை இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். உண்மையில் அது இவர் நடிக்க வேண்டிய சீன்கள். அசிஸ்டெண்ட் டைரக்டர் என்று அல்வா கொடுத்து, கதற கதற இவரையே ஹீரோவாக்கி விட்டார்கள். நடித்தது மட்டுமின்றி திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இப்படத்தில் எல்லா துறைகளிலும் வேலை பார்த்திருக்கிறார் ராஜ் தருண்.

ஹீரோயின் அவிகாவுக்கு பதினாறு வயது. இந்தியில் டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக சக்கைப்போடு போட்டவர். தகுந்த வயசு வந்ததும் திரைத்துறை வாய்ப்புகளுக்கு கதவைத் தட்டியிருக்கிறார். கிடைத்ததெல்லாம் துண்டு துக்கடா வேடம்தான். லோபட்ஜெட் படத்துக்கு மினிமம் சம்பளத்தில் ஹீரோயின் தேவை என்பதால் இவரை ஒப்பந்தம் செய்தார்கள். ஆஸ்கருக்கு தகுதி பெறுமளவுக்கு பின்னி பெடல் எடுத்துவிட்டார். க்ளாமர் அப்பீலே சுத்தமாக இல்லை. ஆனால் ஒவ்வொரு இளைஞனும் கல்யாணம் செய்துக்கொண்டால் இப்படியான ‘லட்சணமான’ பெண்ணைதான் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்குமளவுக்கு ட்ரீம் கேர்ள். கீழ்நெற்றியில் பிளவுபடாமல் ஒட்டிய புருவங்கள் முகத்துக்கு கூடுதல் பொலிவு.

தமிழில் தனுஷ், நஸ்ரியாவை வைத்து படமெடுத்தால் ப்ளாக் பஸ்டர் உறுதி. ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் தயாரிப்பாளர் கொட்டியழ வேண்டிய சம்பளத்தால், படம் ஐநூறு நாள் ஓடினாலும் லாபம் நிற்காது. முன்பெல்லாம் சப்ஜெக்ட்டுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்றமாதிரி நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சம்பளம் அட்ஜஸ்ட் செய்துக்கொண்டு நடிப்பார்கள் என்பார்கள். இப்போதெல்லாம் வரிசையாக நாலு ப்ளாப் படம் கொடுத்த ஹீரோ கூட, புதியதாக ஒப்பந்தம் ஆகும் படத்துக்கு முந்தையப் படத்தை விட செம பர்சண்டேஜ் சம்பளம் ஏற்றிவிடுகிறார்.

நான்ஸ்டாப் எண்டெர்டெயின்மெண்டுக்கு தயாராக இருப்பவர்கள் ‘உய்யாலா ஜம்பாலா’வை மிஸ் செய்துவிட வேண்டாம். ஏனெனில் இது தெலுங்கு சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் மூவியும் கூட.

December 23, 2013

என்றென்றும் பிரியாணி

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் திரைவிமர்சனம் எழுதும் ‘எந்தரோ மாகானுபவலு’ யாரென்று தெரியவில்லை. உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் வரும் விமர்சனங்களைப் போலவே இலக்கியத் தரத்தோடு எழுதுகிறார். மொக்கை, சுமார் என்று இந்து எழுதும் விமர்சனங்களை வாசிக்கும் மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டு “அப்படின்னா படம் நல்லாதான் இருக்கும்” என்று அரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள். நேற்று இரவுக் காட்சிக்கு மடிப்பாக்கம் குமரனில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ ரேஞ்சில் அலை அலையாக, குடும்பம் குடும்பமாக ‘பிரியாணி’க்கு கூட்டம்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா?’, ‘நீதானே என் பொன் வசந்தம்?’ வரிசையில் மற்றுமொரு ஃபீல்குட் மூவி ‘என்றென்றும் புன்னகை’. சினிமா சமூகத்துக்கு தீமை என்று பிரச்சாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியின் தயாரிப்பு. யெஸ், படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனின் தந்தை வேறு யாருமல்ல. அக்கட்சியின் தலைவரான ஜி.கே.மணிதான். ஒரு அரசியல் வாரிசு தயாரித்திருக்கும் இப்படத்தை இன்னொரு வாரிசான ‘ரெட் ஜெயண்ட்’ உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய சூழலில் திமுகவும், பாமகவும் அரசியல் களத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் திரையரங்குகளில் கூட்டணி அமைத்து வெற்றிக்கொடி ஏற்றுகிறார்கள்.

ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒரு முறைதான் தமிழில் படங்கள் ஹிட் ஆகுமென்ற நிலைமை மாறியிருக்கிறது. டிசம்பர் 20 தமிழ் சினிமாவுக்கு ஆடி அமாவாசை. ஒரே நாளில் ரெண்டு ஹிட்டு.

தமிழ் சினிமாவை அழிக்க வந்த கோடரிக்காம்பு திருட்டு டிவிடி கூட அல்ல. சென்சார் போர்ட்தான். இவர்கள் தணிக்கை செய்கிறார்களா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்களா என்றே தெரியவில்லை. பிரியாணியில் “இந்தப் பாட்டுக்குதாண்டா எல்லாரும் காத்திக்கிட்டிருக்காங்க” என்கிற கார்த்தியின் அறிமுகத்தோடு வரும் பாட்டு ‘மிஸ்ஸிஸிப்பி’. அந்தப் பாட்டை சேட்டிலைட் சேனல்களில் ‘கட்’ செய்துவிட்டுதான் ஒளிபரப்புவோம் என்று தயாரிப்பாளர்களிடம் வெள்ளை பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டுதான் ‘யூ/ஏ’ சான்றிதழ் தந்திருக்கிறார்கள். பாட்டு மோசமென்று தணிக்கைத்துறை கருதினால், அதை ‘கட்’ செய்ய சொல்லி தொலைக்க வேண்டியதுதானே? அதென்ன அதை திரையரங்குகளில் ஒளிபரப்பலாம். டிவிக்களில் ஒளிபரப்பக்கூடாது என்று வெட்டி நிபந்தனை? தமிழ்ப் படங்களை தணிக்கை செய்பவர்கள் இந்தி, தெலுங்குப் படங்களையெல்லாம் பார்க்கிறார்களா இல்லையா? தமிழ் திரையுலகினர் முதலில் போராடவேண்டியது ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு’ என்று செயல்படும் தணிக்கைத்துறையினரின் போக்கை எதிர்த்துதான்.

வருட இறுதியில் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் பைக் டோக்கன் போடுகிறவரும், கேண்டீன் விற்பனையாளரும் தொடர்ச்சியாக ‘பிஸி’யாகவே இருக்கிறார்கள். தகராறு, இவன் வேற மாதிரி, பிரியாணி, என்றென்றும் புன்னகையென்று வரிசையாக செம கல்லா. போதாக்குறைக்கு ‘தூம்-3’யின் தமிழ் டப்பிங் வேறு அதிரிபுதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் வருட தொடக்கத்திலேயே ‘வீரம்’, ‘ஜில்லா’வென்று உத்தரவாதமான வசூல் சுனாமி. கங்கிராஜுலேஷன்ஸ் தமிழ் சினிமா!
இணைய சம்பிரதாயப்படி “பிரியாணியில் பீஸ் இல்லை” என்று வழக்கம்போல இணைய விமர்சகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் மொக்கையான ‘வேர்ட்ப்ளே’ ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பாவம் அறிவுக் குருடர்கள். மாயாவாக வரும் மண்டி தாக்கரின் மெகா சைஸ் செஸ்ட் பீஸும், லெக் பீஸும் அவர்களது கண்களுக்கு தெரியவேயில்லை. ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா’வுக்கு பிறகு ரசிகர்களுக்கு சிறப்பான எழுச்சி, புரட்சி.

கதை எழுதுபவர்கள் முதல் வரியிலேயே கதையை துவக்கிவிட வேண்டும் என்பது இளம் எழுத்தாளர்களுக்கு சுஜாதாவின் அறிவுரை. ‘பிரியாணி’ பர்ஸ்ட் ஃப்ரேமிலேயே தொடங்கிவிடுகிறது. பின்னர் கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக கொஞ்சம் ‘ஸ்லோ’ செய்தாலும், விரைவாகவே டாப் கீர் போட்டு விரைகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

ஆரம்பத்தில் இது ஒரு காமெடி கதையென்கிற தோற்றத்தைத் தந்தாலும், போகப்போக ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவலுக்கான அத்தனை ‘திடுக்’ திருப்பங்களோடும் த்ரில்லிங்காக பயணிக்கிறது. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய நடிகரான நாசரை எவ்வளவு பாடு படுத்தவேண்டுமோ, அவ்வளவு பாடு படுத்தியிருக்கிறார் இயக்குனர். அவரை ப்ரிட்ஜுக்குள் பிணமாக முடக்கியதில் தொடங்கி, பிரேம்ஜி அமரனை இமிடேட் செய்து நடிக்கவைப்பதென்று அராஜகம், அதகளம்.

எப்படியோ கார்த்திக்கும் ஒரு மாமாங்கம் கழித்து சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு ஹிட். மங்காத்தா மாதிரி இல்லையென்று குறைப்பட்டுக் கொள்கிறவர்கள், ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். மங்காத்தாவில் ஹீரோ அஜித். யுவன்ஷங்கர் ராஜாவின் நூறாவது படமென்று சொல்லிக் கொள்ள பின்னணி இசையிலோ, பாடல்களிலோ சாட்சியங்கள் எதுவுமில்லை. அறிமுகப் படத்திலேயே இதைவிட சிறப்பான இசையை தந்தவர் யுவன். டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட் வரை டைட்டான பக்கா எண்டெர்டெயினர்.
ஐ.அஹமத் மீடியாவில் முக்கியமான ஆள். டிவி, ரேடியோ நிகழ்ச்சிகளில் நல்ல அனுபவம். பண்பலை வானொலியான ரேடியோ சிட்டியை தமிழகத்தில் நிறுவியவர். ‘திங் எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் பார்ட்னர். யூடிவி மாதிரி பெரிய நிறுவனங்களில் கிரியேட்டிவ் டைரக்டராக இருந்தவர்.

எல்லோரைப் போலவும் இவருக்கும் சினிமா ஆசை. ‘வாமனன்’ என்கிற படத்தை இயக்கினார். “தன் வாழ்நாளின் மாஸ்டர் பீஸ்” என்று இப்படத்தைதான் ஹீரோ ஜெய் முன்பு ஒருமுறை சொல்லி, அவரது மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். நல்ல மேக்கிங் என்று வாமனன் பெயர் வாங்கியிருந்தாலும், கல்லாப்பெட்டி மட்டும் நிரம்பவில்லை. அந்த குறையைப் போக்க ‘என்றென்றும் புன்னகை’ எடுத்திருக்கிறார்.

பானுமதி, சாவித்ரி, குஷ்பு, சிம்ரன் வரிசையில் த்ரிஷாவும் ஏன் இடம்பெறுகிறார் என்கிற கேள்விக்கு விடை இப்படத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஃபீல்டில் இருந்தாலும் அந்த மூஞ்சூறு முகத்தில்தான் இன்னமும் எவ்வளவு அழகு, இளமை, உணர்ச்சிகள். நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்ட ஜீவாவேகூட காம்பினேஷன் காட்சிகளில் த்ரிஷாவிடம் படுதோல்வி அடைகிறார்.

ஜீவாதான் ஹீரோ. ஆனால் ஹீரோக்குரிய இலக்கணங்கள் எதுவும் அவரிடமில்லை. வாழ்க்கை குறித்த எதிர்மறையான நம்பிக்கை. பெண்கள் என்றாலே பேய்கள் எனும் அவநம்பிக்கை. அளவுக்கதிகமான ஈகோ. கட்டுக்கடங்காத திமிர் என்று முற்றிலும் எதிர்மறையான பாத்திரம். ‘sorry’ என்கிற வார்த்தையை உச்சரிக்கவே மாட்டேன் என்று வீம்பு. படத்தின் எண்ட் கார்ட் போடும்போது ‘ஐ லவ் யூ’ சொல்லுவதில் மட்டுமே சமரசமென்று தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய பாத்திரப் படைப்பு. ஜீவாவின் கேரியரில் ஒரு முக்கியமான படம்.

சமீபமாக நொண்டி அடித்துக் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஃப்ரெஷ் ஆகியிருக்கிறார். பாடல்களில் இளமையும், இனிமையும் தாலாட்டுகிறது. போலவே சந்தானமும். “எங்கியாவது லேடீஸ் செருப்பைப் பார்த்தாகூட ஏறிடுவான்” மாதிரி பச்சையான டயலாக்குகள் இருந்தாலும், அது ஆபாசமாக தெரியாத அளவுக்கு சிறப்பான படமாக்கம். கிரேட் ஷோ. வாழ்த்துகள் அஹமத்!

December 12, 2013

கல்யாண சமையல் சாதம்

எவ்வளவு உருவினாலும்.. மன்னிக்கவும்.. உதைத்தாலும் ஸ்கூட்டர் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை என்பதுதான் படத்தின் ஒன்லைன். இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதே லைனை வைத்துக்கொண்டு காசிநாத்தின் ‘முதலிரவே வா வா’ கன்னடத்திலும், தமிழிலும் வூடு கட்டி அடித்து தயாரிப்பாளர் ஏக்நாத்தின் டப்பாவை கதற கதற ரொப்பியிருக்கிறது. ஆனால் காசிநாத்துக்கு இருந்த ‘தில்’ இயக்குனர் பிரசன்னாவுக்கு இல்லையென்பதால் வேலு மிலிட்டரியில் தயிர்சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டமாதிரி சப்பென்று ஆகிவிட்டது.

திரைக்கதையின் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு. வெற்றிகரமான எந்தவொரு படத்திலும் இதை நீங்கள் கவனிக்கலாம். முரணை மிகச்சரியாக இண்டர்வெல் ப்ளாக்கில்தான் சொருக வேண்டும். ஹீரோ பிரசன்னாவின் பேட்டரி ‘செல்ஃப்’ எடுக்கவில்லை என்பதை படம் ஆரம்பித்து, கொஞ்ச நேரத்திலேயே ‘லீக்’ செய்துவிடுவதால், முழுப்படத்துக்கும் சுவாரஸ்யமாக ‘சீன்’ பிடிக்கமுடியாமல், ‘ஃபோர்ப்ளே’ செய்தே க்ளைமேக்ஸ் வரை ஜவ்வடிக்க வேண்டியதாகி விட்டது.

படத்தின் டைட்டிலில் தொடங்கி ஏதோ ஆவணப்பட எஃபெக்டில் ஒரு பெண் குழந்தை எப்படி வளர்ந்து பெரியவளாகிறாள் என்று வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது. படம் முழுக்க ஆங்காங்கே யார் யாரோ வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார்கள். ரொம்ப ஓவர். கதை சொல்வது யாரென்று பிடிபடாமல் ஒரு மாதிரியாக ‘நான்லீனியராக’ குழம்பிப் போகிறோம். அவசரத்துக்கு ஒரு போன் செய்யவோ, தம் அடிக்கவோ ரெண்டு நிமிஷம் வெளியே போய்விட்டு வந்தால், வேறு யாரோ கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மிக தைரியமான ஒரு தீமை எடுத்துக்கொண்டு, ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்துவிடுவார்களோ என்கிற பயத்திலேயே மிக பலவீனமான படத்தை கொடுத்திருக்கிறார்கள். இறங்கி குத்து, குத்துவென குத்தியிருக்க வேண்டாமா? எஸ்.ஜே.சூர்யாவும், பாக்யராஜும் இதே கதையில் களமிறங்கி இருந்தால் தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே எப்படிப்பட்ட ‘எழுச்சி’ ஏற்பட்டிருக்கும்.

ஹீரோ பிரசன்னாவுக்கு இம்மாதிரி ‘எழுச்சி’ சாத்தியப்படாமல் போனதற்கு ‘பிட்ச்’ சரியில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாமென்று, சில குளோசப் ஷாட்களை கண்டபோது தோன்றியது. முந்தானை முடிச்சில் பாக்யராஜ் ஏன் தீபாவை போட்டார் என்பதை இளம் இயக்குனர்கள் ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்தால், அவர்கள் அனைவருமே வெள்ளிவிழா இயக்குனர்களாக பரிணமிக்கலாம்.

படம் ரொம்ப அந்நியமாக தெரிவதற்கு முக்கியமான காரணம், படத்தின் பார்ப்பனத்தன்மை. தமிழ்ச்சூழலில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் சின்சியராக இயக்குனர் பதிவு செய்ய நினைத்தாலும், ஏதோ உஸ்பெகிஸ்தான் படத்தை சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் பார்ப்பதைப் போன்ற எண்ணமே ரிச்சா வலிக்கும் முனுசாமிக்கு ஏற்படுகிறது. ஏற்கனவெ மேடைநாடகம், செவ்வாய்க்கிழமை தூர்தர்ஷன் நாடகம் என்று அடுத்தடுத்து பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து அந்த களங்களையெல்லாம் வெற்றிகரமாக சமாதி கட்டிவிட்டார்கள். எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான கதைக்கு பார்ப்பன குடும்பக்களம் (வியட்நாம் வீடு, ஆஹா போன்றவை உதாரணம்) இருந்தால் ஓக்கே. இப்படம் அமெரிக்கவாழ் பார்ப்பனர்கள் ‘ஹேப்பி’ ஆவதற்கு என்றே எடுக்கப்பட்டதுமாதிரி இருக்கிறது. ‘ஸ்கைப் வாத்தியார்’ மாதிரி சின்சியர் கிரியேட்டிவிட்டியை பார்த்து, தமிழ்நாட்டில் நூற்றுக்கு மூன்று பேர்தான் சிரிக்கிறார்கள். மீதி தொண்ணூற்றியேழு பேருக்கு வாத்யார் என்றால் எம்.ஜி.ஆரோ, சுஜாதாவோ அல்லது ஸ்கூல் வாத்யாரோதான்.

அடிக்கடி பிரசன்னாவின் வாய்ஸ் ஓவரில் கப்பல் கவிழ்ந்துவிட்டது மாதிரி ‘பெரிய பிரச்சினை’ ஏதாவது புதுசு புதுசாக சொல்லப்படுகிறது. ஏதோ சங்கீத்தோ என்ன எழவு சடங்கோ, அதில் காக்ராசோளி போடுவேன் என்று மணப்பெண் சொல்வதும், அதை மாமியார்காரி எதிர்ப்பதும் அவ்வளவு பெரிய பிரச்சினையா என்று தெரியவில்லை. க்ளைமேக்ஸில் ஹீரோயினை ஆச்சரியப்படுத்த, ஹீரோ எங்கேயோ படகில் அழைத்துப்போய் மெகாசீரியலுக்கு சீரியல் லைட் செட் போட்டமாதிரி தீவையெல்லாம் சுற்றிக் காட்டுகிறார். லோ பட்ஜெட் படமென்பதால் வேறு வழியில்லாமல் ஹீரோயின் ஆச்சரியப்பட்டு, ஹீரோவை செம லவ்வு லவ்வுகிறார் (ரோஜாவில் மதுபாலாவின் கண்களை மூடிக்கொண்டு போய், புதுவெள்ளை மழை சாங் ஸ்டார்ட் ஆகும்போது அரவிந்த்சாமி திறப்பாரே, மதுபாலா அப்படியே கவிழ்ந்திடுவாரே அதுமாதிரி). நமக்குதான் அக்கடாவென்று இருக்கிறது.

ஒரு வழியாக படம் முடியும் முடியுமென்று ஆத்திரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, டாய்லெட்டுக்கு போக முனையும்போது தேவையில்லாமல் பின்னிணைப்பாக காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருவழியாக ஹெலிகாப்டர் ‘ஷாட்’ அடித்து ஹீரோ பிரசன்னா ஆட்டத்தை முடிக்கிறார். நமக்குதான் முடியலை.

December 4, 2013

விடியும் முன் : மனநிலை பிறழ்ந்தவர்களின் சொர்க்கம்

இணையத்தின் வழியாக கட்டமைக்கப்படும் அபிப்ராயங்கள் ஏனோ எனக்கு பெருமளவு ஏமாற்றத்தையே வழங்குகின்றன. லேட்டஸ்டாக பல்பு வாங்கியது ‘விடியும் முன்’.

படம் பார்த்ததிலிருந்து ஒருமாதிரி மனம் நிலை கொள்ளாமல், இந்நொடி வரை பதட்டமாகவே உணர்கிறேன். ஒரு மாதிரியான மோசமான மனநிலை இது. எதிலும் மனதை முழுமையாக ஈடுபடுத்த முடியாதபடி தொந்தரவு செய்யக்கூடிய உளவியல் சிக்கல் இது. இந்நிலை உங்களில் யாருக்கும் வரவேண்டாம். தயவுசெய்து ‘விடியும் முன்’ படத்தை தியேட்டரிலோ, திருட்டு டிவிடியிலோ கூட பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திரைப்படங்களை பற்றி எழுதுவதற்கு எனக்கு முன்மாதிரியாக விளங்கும் அமரர் எஸ்.ஏ.பி.யின் திரைப்பட விமர்சனக் கொள்கைக்கு எதிர்மாறான கோரிக்கைதான் இது என்றாலும் வேறு வழியில்லை.

விடியும் முன் படத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஒன்று : காமக்கதை எழுதுபவனோ, நீலப்படம் எடுப்பவனோ கூட நம் சூழலில் ‘ஆண்டி’களை வைத்துதான் எடுப்பானே தவிர, குழந்தைகளை முன்வைத்து கற்பனை செய்யமாட்டான். குறைந்தபட்ச அறம் என்பது அயோக்கியனுக்கும் உண்டு. பிட்டு படங்களையோ, கதைகளையோ விரும்பி வாசிக்கக்கூடிய நம்மைப் போன்ற அயோக்கியர்களும் அதில் ‘குழந்தை’ சம்பந்தப்படுவதை விரும்புவதில்லை.

இரண்டு : விலை மாது ஒருத்தி பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க பெண்குழந்தையை ஒரு நாள் ஒப்பந்தத்துக்கு ஒரு பெரிய மனிதருக்கு கூட்டிக்கொடுக்க அழைத்து வருகிறாள். அந்த குழந்தைக்கு ஒப்பனை செய்யும் காட்சியை எல்லாம் காட்டுவது என்பது மனநிலை பிறழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு இயக்குனரின் கற்பனையில் மட்டுமே உதிக்கும். அப்போது குழந்தை கேட்கிறாள் : “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. விலைமாதுவின் பதில் : “இன்னைக்கு நீ தான் ராணி”

மூன்று : மேலே அறையில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்கிறது. கீழே இருக்கும் விலைமாது ஓடிப்போய் பார்க்கிறாள். குழந்தை கைகள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கிறாள். பெரிய மனிதர் கையில் க்ளவுஸ் அணிந்து, ஒரு ப்ளேடு வைத்திருக்கிறார். ஆபாசமாக எடுக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும், கண்ணியமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் என்று ஏதோ ஒரு விமர்சன மாகானுபவன் இணையத்தில் எழுதியிருந்தார். நேரடிக்காட்சிதான் ஆபாசமா? கையில் ப்ளேடு வைத்திருக்கிறார், அடுத்து அவர் என்ன செய்ய உத்தேசித்திருப்பார் என்று ரசிகனை யூகிக்க வைப்பதை மாதிரி ஆபாசம் நேரடியான உடலுறவுக் காட்சியில் கூட வெளிப்படாது. நேரடிக் காட்சிகளில் உருவாகும் கிளர்ச்சியின் பாதிப்பு சில மணி நேரத்துக்குதான்.  ஆனால் இதுபோன்ற காட்சிகள் சாதாரணர்களையும் வக்கிரர்களாக மாற்றக்கூடிய ஆபத்தான ஆயுதங்கள்.

இந்தப் படத்தை ‘ஆகா, ஓகோ’வென்று பாராட்டுபவர்கள் எதற்காக பாராட்டுகிறார்கள் என்றே புரியவில்லை. தொழில்நுட்பரீதியாக இதைவிட பன்மடங்கு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்த நடுநிசிநாய்களை கழுவிக் கழுவி ஊற்றியவர்கள் இவர்கள்தான். அதே மாதிரி.. இல்லை இல்லை.. அதைவிட மோசமான உள்ளடக்கத்தோடு கூடிய ஒரு குப்பையை ஏன்தான் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. இதெல்லாம் நடப்பதே இல்லையா, நடப்பதைதானே சினிமாவில் காட்டுகிறார்கள் என்று வாதாடுபவர்களுக்கு மாஸ் மீடியாவை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லையென்று அர்த்தம். மகாநதியிலும் இதேமாதிரி காட்சி உண்டு. அதை எப்படி கலை ஆக்கினார்கள், எவ்வகையில் சமூக அக்கறையை நோக்கும் காட்சியாக உருமாற்றினார்கள் என்பதை மீண்டும் அப்படத்தை பார்த்துதான் உணரவேண்டும்.

விலங்குகளை கூட திரைப்படங்களில் பயன்படுத்துவதை ஆட்சேபிக்கும் தேசம், குழந்தைகளை மோசமான முறையில் படம் பிடித்துக் காட்டும் ‘விடியும் முன்’ போன்ற திரைப்படங்களை எப்படி சகித்துக் கொள்கிறது? காரணகாரியமில்லாமல் கண்டதையும் வெட்டும் ‘சென்சார்’ எனும் மனமகிழ் அமைப்புக்கு ‘மூளை’ என்றொரு வஸ்து இருக்கிறதா? இந்த படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த அதிகாரிகள் யாருமே, அந்த பதவியில் இருக்க லாயக்கற்றவர்கள்.

November 25, 2013

இரண்டாம் உலகம்

நல்ல ஐடியா. எல்லோருக்குமே குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகம் என்பது கனவாக இருக்கக்கூடும். அல்லது மனப்பிறழ் காரணமாக தாமே உருவாக்கிக்கொள்ளக் கூடிய இன்னொரு உலகாகவும் இருக்கலாம். சுலபமாக மற்றவர்களுக்கு வார்த்தையால் கூட சொல்லி புரியவைக்க முடியாத இரண்டாம் உலகத்தை திரையில் காட்சிகளாக்கி காட்டுவது என்கிற சவாலை செல்வராகவன் முயற்சித்திருக்கிறார்.

கனவுலகம் எல்லாருக்குமே பாதுகாப்பான உலகம். அந்த உலகின் இயக்கத்தை கனவு காண்பவன் தன் கையில் இருக்கும் ரிமோட்டால் கட்டுப்படுத்தலாம். நாம் நினைத்த பெண்ணை காதலிக்கலாம். நமக்கு பிடிக்காதவனை ரஜினி ஸ்டைலில் பறந்து பறந்து அடிக்கலாம். ஆடி காரில் உலா வரலாம். தம் அடிக்கலாம். பீர் குடிக்கலாம். அயல்நாட்டு அழகிகளோடு ஜல்சா செய்யலாம். கனவு காண பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா. கனவுகள் அந்தரங்கமானவை. கனவு முடிந்து விழித்தபிறகு பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. தான் கண்ட கனவு என்று யாராவது விடும் கதை அனேகமாக புனைவாகதான் இருக்கும். முக்கியமாக கனவுக்கு வண்ணமில்லை. கருப்பு வெள்ளையில்தான் கனவு இருக்குமென்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனக்கெல்லாம் கனவு வந்தே கால் நூற்றாண்டு இருக்குமென்பதால், அது கருப்புவெள்ளையா, வண்ணமா, சினிமாஸ்கோப்பா என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. மேலும், கனவில் ‘ஒலி’ உண்டா என்கிற குழப்பமும் இருக்கிறது. இப்படியிருக்கையில் அப்துல்கலாம் போன்றவர்கள் கனவுகாண சொல்லும்போது, அது எப்படி இந்திய இளைஞர்களுக்கு சாத்தியமாகும் என்று அயர்ச்சிதான் ஏற்படும்.

இது ஒரிஜினல் கனவு. பகல் கனவு என்றொன்று உண்டு. சும்மா உட்கார்ந்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, பைக்கில் பயணிக்கும்போதோ, டாய்லெட்டில் இருக்கும்போதோ சுய இன்பம் மாதிரி நாமாக ‘விஷூவல்’ அமைத்து, சிந்தனையிலேயே ஓட்டும் ஃபிலிம் இன்னொரு வகை கனவு. ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவ்வகை கனவுகள் அவர்களது பாலியல் வறட்சிகளுக்கு பசுமை பாய்ச்சக்கூடிய தன்மை கொண்ட கனவுகளாகவே இருக்கக்கூடும். இம்மாதிரி கனவிலேயே காலத்தை ஓட்டினால், பொழைப்பு நாறிவிடுமென்று பாலகுமாரன் அடிக்கடி எழுதுவார்.

செல்வராகவன் காட்ட விரும்பிய இரண்டாம் உலகம் கனவாகவோ அல்லது மனப்பிறழ்வாகவோ இருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தேன். அப்படியும் படம் ஓக்கே ரகம் கூட இல்லை.

இது நிஜமாகவே ‘பண்டோரா’ மாதிரி கிரகம் என்று அவர் எடுத்திருந்தால் அதற்கான உழைப்போ, ரசிகனுக்கு பரிமாறப்பட வேண்டிய ஃபேண்டஸியான உணர்வோ திரையில் தென்படவில்லை. ‘அவதார்’ எடுப்பதற்கான டெக்னாலஜி வரும்வரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு கருவை அடைகாத்து சுமந்து, அதுவரை திரைக்கதையை செதுக்கிக் கொண்டிருந்தார் கேமரூன் என்பார்கள். செல்வராகவன் இரண்டாம் உலகத்துக்காக இன்னும் சிலவருடங்கள் பிள்ளைத்தாய்ச்சியாகவே இருந்திருக்கலாம்.

படம் பார்த்த கவிஞர் ராஜசுந்தரராஜன் புது ‘கான்செப்ட்’ சொன்னார். ஒரு உலகம் திராவிட உலகம். மற்றொன்று ஆரிய உலகம். அனுஷ்காவுக்கு அதனால்தான் ‘வர்ணா’ என்று பெயர் என்றார். அவரது இந்த பார்வைக்காகவே இன்னொரு முறை ஆரிய-திராவிட அரசியல் படமாக இதை அணுகிப் பார்த்தால் வேலைக்காகுமா என்று பார்க்கவேண்டும்.

அனுஷ்கா ஆண்ட்டி ஆகிவிட்டார். தொப்பை குலுங்க அவர் ஓடியாடி சண்டை போடுவதை காண அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது. ஒருவேளை அதனாலேயே கூட படம் பிடிக்கவில்லையோ என்னவோ?

October 30, 2013

சுட்ட கதை

மன்னர் பீமா, அழகி பிந்து, இன்ஸ்பெக்டர் ஆசாத், சம்பல் பள்ளத்தாக்கு, மார்ஷல், ஷெரீப், செவ்விந்தியர், ‘வோ’, டால்டன் பிரதர்ஸ், இரவுக்கழுகு, பழிவாங்கும் பாவை, முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ்... இதெல்லாம் உங்களுக்கு பரிச்சயமானவையாக இருக்கிறதா? முதலில் கையைக் கொடுங்கள். உங்களுக்கு ‘சுட்ட கதை’ ரொம்பவும் பிடிக்கும்.

ஜெய்சங்கர் – கர்ணன் காம்பினேஷனில் சில படங்கள் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன. ஹீரோ, வில்லன், துணைபாத்திரங்கள் எல்லாருமே பதினெட்டாம் நூற்றாண்டின் அமெரிக்கப் பாணியில் இருப்பார்கள். இசையும் கூட மேற்கத்திய ஸ்டைல்தான். ‘பழிக்குப் பழி’ என்கிற கவுபாய் காமிக்ஸ்களின் ஆதாரமான ஒன்லைனரையும், ஒட்டுமொத்த ‘லுக்’கையும் தவிர்த்து, இப்படங்களில் பெரிய காமிக்ஸ் தாக்கம் இல்லை. ஒருமாதிரியாக தமிழர் கலாச்சாரத்துக்கு விசுவாசமான படங்களே அவை.
முல்லை தங்கராசன் என்றொருவர் ஒரு காலத்தில் இருந்தார். 1972ல் முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்டபோது பதிப்பாசிரியராக இருந்தவர். பின்னர் முத்து காமிக்ஸில் இருந்து விலகி தனியாக நிறைய காமிக்ஸ் இதழ்களை உருவாக்கினார். குழந்தைகளுக்காக இதழியல் துறையில் இரவும் பகலுமாக உழைத்தார். தமிழ் சித்திரக்கதை உலகின் தவிர்க்க முடியாத மனிதரான அவருக்கு ஓர் ஆசை இருந்தது. காமிக்ஸ் பாணியில் ஒரு சினிமா. எழுபதுகளின் இறுதியில் பக்காவாக ஸ்க்ரிப்ட் ரெடி செய்துவிட்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் அலைந்தார். ஒரு தயாரிப்பாளரும் அவரை சீண்டவில்லை. மும்பைக்கு டிரெயின் ஏறினார். கடுமையான அலைச்சலுக்குப் பிறகு அவருக்கு இந்தியில் வாய்ப்பு கிடைத்தது. அவரது வாழ்நாள் கனவு நிறைவேறப் போகிறது என்கிற குஷியில் இருந்தபோது, அன்றிரவே ஒரு விபத்தில் அகாலமாக மரணம் அடைந்தார்.

அதன்பிறகு இந்தியாவில் யாருக்கும் காமிக்ஸில் சினிமா இருப்பதாக தோன்றவில்லை. எண்பதுகளில் இறுதியிலும், தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் டோலிவுட்டில் மெகாஸ்டார் ஆகிவிட்ட சிரஞ்சீவியை பில்டப் செய்ய இந்திய புராண மரபுக்கதைகள் போதவில்லை. எனவே இயக்குனர்களின் பார்வை ஐரோப்பிய, அமெரிக்க காமிக்ஸ்கள் மீது பாய்ந்தது. ஸோரோ, ராபின்ஹூட், டெக்ஸ்வில்லர் என்று காமிக்ஸ் ஹீரோக்களின் கலவையாக சிரஞ்சீவியின் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. கவுபாய் தொப்பி அணிந்திருப்பார். ஸோரோவின் உடை. ராபின்ஹூட்டின் குணநலன்கள் என்று மிக்சராக சில படங்களில் சிரஞ்சீவி தோன்றினார்.
1990ல் வெளியான ‘கொண்டவீட்டி தொங்கா’ தெலுங்கில் உருவான இந்த காமிக்ஸ் தாக்கத்தின் உச்சம். தெலுங்கின் ஆல்டைம் ப்ளாக் பஸ்டரான இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் எவர்க்ரீன் ஹிட். ‘சுபலேகா ராசுக்குன்னா’வை யூட்யூப்பில் தேடி கேட்டுப் பாருங்கள். ஐஸாக உருகிவிடுவீர்கள். தமிழிலும் இது ‘தங்கமலை திருடன்’ என்று டப்பப்பட்டு, பி & சி தியேட்டர்களில் நல்ல டப்பு பார்த்தது. அதன்பிறகு டோலிவுட் ஹீரோக்களுக்கு இந்த கவுபாய் கெட்டப் மீது பயங்கர மோகம். ஆனாலும் யாரும் சிரஞ்சீவி சாதித்ததில் பாதியை கூட எட்டமுடியவில்லை. 2009ல் ராஜேந்திரபிரசாத் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘குயிக் கன் முருகன்’ ஓரளவுக்கு நல்ல முயற்சி.

தொடர்ச்சியாக 2010ல் தமிழில் வெளிவந்த ‘இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சரமாரியாக சக்கைப்போடு போட்டது. தீவிரமான காமிக்ஸ் ரசிகரும், சில சிறப்பான காமிக்ஸ் கதைகளை வரைந்து, எழுதி உருவாக்கியவருமான சிம்புதேவன், முல்லை தங்கராசனின் கனவை நிஜமாக்கினார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளிவந்த கவுபாய் திரைப்படம் இதுதான். ஜெய்சங்கர்புரம், அசோகபுரம் என்று அவர் உருவாக்கிய பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்க கிராமங்களை, மில்லெனியம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காமிக்ஸ் ரூட்டை கரெக்ட்டாக பிடித்து, வெற்றி கண்டு சிம்புதேவன் நிரூபித்துவிட்ட பிறகும் கூட நம் இயக்குனர்களுக்கு ஏனோ காமிக்ஸில் ‘கதை’ இருப்பதாக தோன்றவில்லை.

காமிக்ஸ் வெறியரான மிஷ்கின், தன் பால்யகாலத்து ஹீரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ‘முகமூடி’ என்று தன் படத்துக்கு டைட்டில் வைத்தார். இப்படத்தின் ஆரம்பத்தில் ‘முத்து காமிக்ஸ்’ வழங்கும் ‘முகமூடி’ என கிரெடிட் கொடுக்கப் போகிறார் என்றுகூட கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. ஆனால் அப்படம் ஹாலிவுட், சைனீஸ் படங்களின் தாக்கத்தில் இருந்ததே தவிர, காமிக்ஸ் வாசனையற்றதாகவே வந்தது. இத்தனைக்கும் மிஷ்கினின் மற்ற படத்தின் ஷாட்கள், உற்றுப்பார்த்தால் காமிக்ஸ் கட்டங்களின் கோணத்தில்தான் படமாக்கப்படுகிறது என்பதை உணரலாம். இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இந்தியில் சைப்அலிகானின் ‘ஏஜெண்ட் வினோத்’ போன்ற படங்களில் 007 காமிக்ஸ் எஃபெக்ட்டை ஓரளவுக்கு உணரலாம் (அந்தப் படமே கூட காமிக்ஸ் வடிவில் புத்தகமாக வந்தது).
‘சுட்ட கதை’ இந்த வரலாற்றில் முற்றிலும் மாறுபாடான தன்மை கொண்ட திரைப்படம். இதுவரை வந்த படங்களுக்கு காமிக்ஸின் பாதிப்பு இருந்திருக்கிறதே தவிர, இப்படம்தான் முற்றிலும் காமிக்ஸாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காமிக்ஸ்களில் வரும் டயலாக் கட்டங்களுக்கும், ப்ளர்ப்புகளுக்கும் பழகியவர்கள் சுட்டகதையில் சுலபமாக நுழையலாம்.

டைட்டிலே ‘சில் அவுட்’ 2டி அனிமேஷனில் கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சிலந்தி என்கிற பெண் இசைக்கருவியை வாசிக்கும் டைட்டிலின் இறுதிக் கட்டம் 2டியிலேயே ரவுண்ட் ட்ராலி எஃபெக்ட்டில் அனிமேஷன் செய்யப்பட்டிருக்கிறது (அனிமேட்டர் யாரையாவது விசாரித்துப் பாருங்கள் இந்த காட்சியின் சிறப்பை). சராசரி திரைப்பார்வையாளனுக்கு இது எந்த வித்தியாசத்தையும் தராது. ஆனால் நீங்கள் காமிக்ஸ் ஆர்வலராக இருக்கும் பட்சத்தில் இதைக் கண்ட நொடியிலேயே விசில் அடிப்பது உறுதி. ஒவ்வொரு காட்சியுமே காமிக்ஸ் கட்டங்களாகதான் மாறுகிறது. இதுவரை நாம் சினிமாவென்று எதையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோமோ அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சுபு. தமிழுக்கு முக்கியமான வரவு இவர்.

கோரமலை என்றொரு கற்பனை கிராமம். இங்கே ஆறுவித மக்கள் இருக்கிறார்கள். முதலாம் வகை சோம்பேறி. இரண்டாம் வகை சோம்பேறி. மூன்றாம் வகை சோம்பேறி. நான்காம் வகை சோம்பேறி. ஐந்தாம் வகை சோம்பேறி. ஆறாம் வகை?
அதுவும் சோம்பேறிதான். ரொம்பவும் மொக்கையான காமெடிதான். வெடிச்சிரிப்பெல்லாம் உடனடியாக சாத்தியமில்லை. ஆனால் இந்தரக காமெடிகளுக்கு sustainable ஆன லைஃப் உண்டு. போதுமான காட்சித் தொடர்ச்சியோ, தர்க்கமோ, குறைந்தபட்ச பொதுப்புத்தியோடு ஒத்துப்போகும் காரணங்களோ இல்லாத இவ்வகை காமெடியை absurd comedy என்பார்கள். சுட்டகதை படம் முழுக்கவே இவ்வகை நகைச்சுவையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகள் உங்களை உடனடியாக சிரிக்கவைக்காது. அக்காட்சிகளை உங்கள் சொந்த அனுபவத்தில் கண்ட, கேட்ட காட்சிகளோடு ஹைப்பர்லிங்க் செய்துப் பார்த்தால்தான் சிரிக்க முடியும். இந்த ஞானப்பார்வை வந்துவிட்டால் absurd comedy ரக ஜோக்குகளையோ, காட்சிகளையோ பத்திரிகையிலோ, டிவியிலோ, சினிமாவிலோ பார்க்கும்போது அது கொடுக்கக்கூடிய அனுபவம் அலாதியானது. இதைதான் இலக்கியவாதிகள் ‘சர்ரியலிஸம்’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ‘தொங்காபுரம் ஜமீன்’. ஜமீனின் பெயருக்கு கீழே ‘ஆண்மை தவறேல்’ என்று எழுதியிருக்கும். சட்டென்று பார்த்தால் இதுவெறும் நேம் போர்ட்தான். உங்களுக்கு ‘அமலாபுரம்’ தெரிந்திருக்க வேண்டும். அதன் சிறப்புகளை அறிந்திருக்கும் பட்சத்தில் ‘ஆண்மை தவறேல்’ ஏன் இடம்பெற்றிருக்கிறது என்பது புரிந்து புன்னகைப்பீர்கள். தொங்காபுரத்தை எப்படி அமலாபுரத்தோடு ஹைப்பர்லிங்க் செய்யவேண்டுமென்றால் ‘தொங்கா’ என்கிற தெலுங்குவார்த்தைதான் க்ளூ. ஜமீன்களைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் பிம்பங்களோடு (காமவெறியர்கள் மாதிரி) இதைப் பொருத்திப் பார்க்கவேண்டும். பாரடைஸ் டீ ஸ்டால், ஆங்கிலத்தில் PARADESI TEA STALL என்று ஏன் எழுதியிருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இதையெல்லாம் வசனத்தில் இயக்குனர் சுட்டிக் காட்டமாட்டார். இப்படியெல்லாம் மூளைக்கு வேலை தர தயாராக இருக்கும் பட்சத்தில் ‘சுட்ட கதை’ பார்க்கலாம். இப்படத்தில் சீரியஸாக ஏதோ கதை இருக்குமென்று நம்பிப் பார்த்தால், படத்தில் வரும் மொக்கை கேரக்டர்களில் நீங்களும் ஒரு மொக்கையாக மாறிவிடுவீர்கள். கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்டுக்காக படத்துக்கு தொடர்பேயில்லாமல் செருகப்படும் டாக்குமெண்டரி, டிவி நிகழ்ச்சி பாணியிலான காட்சிகளையெல்லாம் என்னவென்று சொல்வது? அபாரம்.

ஹீரோக்களுக்கு ரஞ்சன் காலத்து மீசை. தபாங் ஸ்டைல் கூலிங் க்ளாஸ். உ.பி. போலிஸார் பாணி உடை. ஊரில் இருக்கும் சோம்பேறிகள் எப்பவும் வீட்டில் அடைந்து ‘மெட்டி ஒலி’ பார்க்கிறார்கள். டீ போடுபவனை தவிர்த்து ஒரு உழைப்பாளியையும் பார்க்க முடியாது. ஒட்டகம், சிலந்தி என்று மலைவாழ் பாத்திரங்களுக்கு விசித்திரமான பெயர்கள், பழக்கவழக்கங்கள். எல்லாவற்றையும் விட மேலாக சாம்பசிவம் க்ரைம் காமிக்ஸ்.
‘சுட்டகதை’ ஒட்டுமொத்தமாகவே எனக்கு வசீகரமாக தெரிந்தது. வாசிப்பின்பம் மாதிரி காட்சியின்பத்தை தந்தது. இதே வசீகர அனுபவத்தை முன்பொருமுறை பெற்றிருக்கிறேன். ஒரு நாவலை வாசிக்கும்போது. அது ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’