அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மார்ச், 2016

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்

மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் திமுகவைவிட அதிமுகதான் பெரிய கட்சி என்று டிவி விவாதங்களிலும், அச்சில் கட்டுரை எழுதுகிறபோதும் சொல்லுகிறார்கள். அவ்வாறு சொல்வதற்கான ஆதாரமாக திமுகவைவிட அதிமுகவே அதிக வாக்குகள் வாங்குவதாக தேர்தலில் வாங்கும் வாக்குகளின் புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள். மூத்தப் பத்திரிகையாளர்கள் என்பதால் அவர்கள் அப்படிதான் சொல்லியாக வேண்டும். முன்பு எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக வென்றுக் கொண்டிருந்தபோது, உடன்பிறப்புகளுக்கு கலைஞர் இதுமாதிரி புள்ளிவிவரக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோது கிண்டலடித்தவர்கள்தான் இவர்கள்.

மூத்தப் பத்திரிகையாளர்களுக்கு ‘தொழில்’ சொல்லிக் கொடுக்குமளவுக்கு நமக்கு அனுபவம் இல்லையென்றாலும், ஒண்ணும் ரெண்டும் கூட்டினா மூணு என்று கணக்கு போடுமளவுக்கு கணிதவியல் அறிவு இருப்பதால் ஒரு சின்ன திருத்தத்தை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வாக்கு சதவிகிதம் என்பது ஒரு கட்சி ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறது என்பதை வைத்து சொல்லப்படும் புள்ளிவிவரம். பத்தே பத்து தொகுதியில் போட்டியிட்டு பத்திலும் ஒரு கட்சி வென்றிருந்தாலும்கூட 234 தொகுதிகளுக்கும் சேர்த்துதான் அக்கட்சியின் வாக்குசதவிகிதம் கணக்கிடப்படும். கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் அக்கட்சிக்கு வாக்குகள் இருக்கும் என்பதை தயைகூர்ந்து மூத்தப் பத்திரிகையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகளுக்கு விழுந்த வாக்குகளில் திமுக வாக்குகளும் உண்டு. மாறாக அங்கே திமுகவே இல்லை என்று பொருளல்ல. எனினும் ‘உதயசூரியன்’ நிற்காத தொகுதிகளில் விழுந்த திமுக வாக்குகள், அக்கட்சியின் வாக்குவங்கிக் கணக்கில் வராது.

கடந்த 2011 தேர்தலில் திமுக வாங்கியது 22.4 சதவிகிதம். இது அக்கட்சி போட்டியிட்ட 119 தொகுதிகளின் வாக்குகளில் கிடைத்த சதவிகிதம் மட்டுமே. மீதியிருக்கும் 115 தொகுதிகளிலும் அக்கட்சி நின்றிருந்தால், இந்த சதவிகிதத்தில் மேலும் ஒரு 8 சதவிகித அளவுக்காவது கூடுதலாக கிடைத்திருக்கலாம் என்பதை குமாரசாமியை தவிர வேறு யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வார்கள். திமுகவைவிட கூடுதலாக கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் நின்ற அதிமுகவுக்கு 38 சதவிகிதம் கிடைத்தது. ஒருவேளை அதிமுக 234ல் நின்றிருந்தாலும் கூடுதலாக 3 அல்லது 4 சதவிகிதம் கிடைத்திருக்கலாம்.

2006ஆம் ஆண்டு தேர்தலை எடுத்துக் கொண்டால்கூட வாக்கு சதவிகிதத்தில் அதிமுகவே திமுகவைவிட 6% கூடுதலாக இருந்தது. ஆனாலும், திமுகதான் ஆட்சி அமைத்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஏனெனில் திமுக வெறும் 132 இடங்களிலும், அதிமுக 188 இடங்களிலும் போட்டியிட்டிருந்தன.

கடந்த சில தேர்தல்களாக திமுக 150க்கும் குறைவான இடங்களில்தான் போட்டியிடுகிறது. அதிமுக, 150க்கு குறைவதில்லை (2001 விதிவிலக்கு). அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவதால் கூடுதல் சதவிகிதத்தை காட்ட முடிகிறது. திமுக குறைவான இடங்களில் போட்டியிடுவதால் அதிமுகவைவிட குறைவாக வாக்குகள் வாங்குவதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அவ்வளவே.

எனவே, மூத்தப் பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் வாக்குவங்கி கணக்கு என்பது அதிமுகவுக்கு ஆதரவாக ஏதேனும் பாயிண்டை முன்வைக்க வேண்டுமே என்கிற ஆர்வத்தில் சொல்லப்படுவதுதானே தவிர, கள நிலவரமோ உண்மையோ அல்ல.

குறைவான வாக்குகள் வாங்கிய கட்சி ஆட்சியே அமைக்க முடிகிறது (2006), அதிக வாக்குகள் பெற்ற கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெற முடியாத நிலைமை (2011) ஏற்படுகிறது என்றால், ஒருவகையில் அது நம்முடைய ஜனநாயக முறையின் பலகீனம். அதாவது ஒரே ஒரு வாக்கில் தோல்வியடைந்த வேட்பாளருக்கு விழுந்த வாக்குகள் கூட நம் ஜனநாயக அமைப்பில் கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளுக்கு ஒப்பாகும். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விழும் அந்த வாக்குகளுக்கு எப்படி மதிப்பு சேர்ப்பது?
அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கும் தீர்வு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் (proportional representation). இம்முறை ஒருவேளை நம் தேர்தல் ஜனநாயக அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்படுமேயானால் இந்த கூட்டணிக் குழப்பங்களோ, லெட்டர்பேடு கட்சிகளுக்கான தேவைகளோ களையப்படும் வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் குறையும். நிஜமான மக்கள் செல்வாக்கு கொண்டவர்கள் சட்டசபை, நாடாளுமன்றத்துக்குள் கட்சிகளின் ஆதரவின்றியே நுழையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கொள்கை சார்ந்த அரசியலுக்கான தேவை கூடுதலாகும்.

திமுக, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்தே அரை நூற்றாண்டுக்கும் மேலாக இம்முறையை வலியுறுத்தி வருகிறது. இந்த சிந்தனையை இந்திய அரசியலில் தோற்றுவித்து, பெரும் விவாதமாக மாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

இங்கிலாந்து காலனியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் தவிர்த்து, ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் மற்ற பெரும்பாலான நாடுகளில் இந்த முறைதான் அமலில் இருக்கிறது. ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கோ / சட்டமன்றத்துக்கோ அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது தீர்மானிக்கப்படுவதே இம்முறை.

ஏன் இந்த முறை இந்திய ஜனநாயகத்துக்கு தேவை?

உதாரணத்துக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டுமொத்தமாக 3.3 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. அதே அளவிலான வாக்குகளைதான் அதிமுகவும் பெற்றிருக்கிறது. ஆனால், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 37. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9. இந்த இரு கட்சிகளையும் விட அதிகமாக 4.1 சதவிகிதம் வாக்குகளை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதிநிதி யாருமே பாராளுமன்றத்தில் இல்லை.

அதுபோலவே பிஜூ ஜனதாதளம் பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதம் 1.70. திமுகவும் அதே வாக்கு சதவிகிதத்தைதான் பெற்றது. ஆனால் பிஜூ ஜனதாதளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20. திமுகவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட இல்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளையும் இடங்களையும் இதுபோல புள்ளிவிவர அடிப்படையில் ஆராய்ந்தோமானால் நம் ஜனநாயகம் எத்தகைய விசித்திரமான வடிவத்தில் இருக்கிறது என்பது புரியும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, தன்னுடைய ஜனநாயகத்தை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நிறைய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டாக வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்களை பொதுத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதித்து அதன் சாதக பாதகங்களை வல்லுநர்கள் ஆலோசிக்க வேண்டும்.

7 மார்ச், 2016

என்ன சொல்கிறது கூட்டணி வரலாறு?

பலமான கூட்டணியே வெற்றிக்கு அடித்தளம்
என்பதை நிரூபித்துள்ளது 1967 முதல் நடந்த தேர்தல்கள்...
தமிழகத்தில் 1952ல் நடந்த முதல் தேர்தல் மட்டுமே பலமுனை தேர்தலாக அமைந்திருந்தது. சென்னை மாகாணமாக இருந்தபோது சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளின் எண்ணிக்கை 375. இதில் 367 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 131 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் 62 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கிஸான் மஸ்தூர் பிரஜா, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, கிரிஷிகார் லோக், சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இரட்டை எண்ணிக்கையில் வென்றிருந்தன. இந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஆட்சியமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ‘ஆட்சியில் பங்கு’ ஆசை காட்டி, சில கட்சிகளை உள்ளே வாரி போட்டுக் கொண்டு, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. முதல் தேர்தலிலேயே ‘குதிரை பேரம்’ தமிழகத்துக்கு அறிமுகமாகி விட்டது.

1957ல் நடந்த இரண்டாவது தேர்தலில் காங்கிரஸுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. மொழிவாரிப் பிரிவினையின் காரணமாக சென்னை மாகாணத்தில் இம்முறை 206 இடங்களே இருந்தன. காமராஜர் தலைமையில் தேர்தலை சந்தித்த அந்த கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு, 151 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தமாகவே 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள். மாநில கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட திமுகவினர், 15 இடங்களில் வென்றனர்.

1962 தேர்தல்தான் முதன்முறையாக தமிழகத்தில் நடந்த இருமுனை தேர்தல். அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது. இத்தனைக்கும் அக்கட்சியில் இருந்து ராஜாஜி பிரிந்துபோய் சுதந்திரா கட்சியை நிறுவி போட்டியிட்டார். இம்முறை காங்கிரஸுக்கு பலத்த போட்டியை கொடுத்த கட்சி திமுக. 143 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 50 இடங்களை வென்று பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

திமுக முதன்முதலாக ஆட்சியைப் பிடித்த 1967 தேர்தல்தான், இன்றைய கூட்டணி கலாசாரத்துக்கு வித்திட்ட தேர்தல். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருந்த காங்கிரஸை வீழ்த்த புதிய உத்தி ஒன்றினை கைக்கொண்டார் அண்ணா. சுதந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர், ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், முஸ்லீம்லீக், பிரஜா சோஷலிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளை இணைத்து திமுக தலைமையில் மெகா கூட்டணியாக உருவாக்கினார். இந்த ஒற்றுமைக்கு தேர்தல் முடிவுகளில் நல்ல பலன் கிடைத்தது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 137 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 51 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. மேலும் அக்கட்சியின் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், பூவராகன், கக்கன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவுமளவுக்கு இந்த கூட்டணியின் வீரியம் இருந்தது.

1971ல் நடந்த தேர்தலை ஒருமுனை தேர்தல் என்றே சொல்லலாம். 1962ல் காமராஜர் பெற்ற வெற்றியை போன்றே கலைஞரும் வென்றார். காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்கிற பெயரில் காமராஜர் இயங்கினார். முந்தைய தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுதந்திரா கட்சி அவரை ஆதரித்தது. திமுக கூட்டணியில் இம்முறை சுதந்திராவுக்கு பதிலாக இந்திரா காங்கிரஸ் இணைந்தது. எனினும் தொகுதி எதுவும் அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட, அந்த இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வந்து சேர்ந்தது. இம்முறையும் திமுக கூட்டணியே அபார வெற்றியை பெற்றது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே மகத்தான சாதனையாக ஒரு தனிக்கட்சி வென்ற அதிக இடங்கள் (184 எம்.எல்.ஏ.க்கள்) என்கிற இன்றுவரை உடைக்க முடியாத சாதனையை திமுக படைத்தது. எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் - சுதந்திரா கூட்டணிக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த 1977 தேர்தல் நான்கு முனை தேர்தலாக அமைந்தது. இத்தேர்தலில் நெருக்கடி நிலையை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நெருக்கடி நிலையை ஆதரித்த அதிமுகவோடு அமைத்த கூட்டணிதான் தமிழகத்தின் முதல் பச்சை சந்தர்ப்பவாத கூட்டணி என்று அரசியல் ஆய்வாளர்களால் இன்றுவரை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ‘சர்க்காரியா கமிஷன், திமுக தலைவர்களை ஊழல் புகார்களுக்காக விசாரித்துக் கொண்டிருப்பதால் திமுக கூட்டணியில் இருக்க முடியாது’ என்கிற சப்பைக் கட்டை மா.கம்யூ தலைவர்கள் முன்வைத்தார்கள். ஆனால் இந்த தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே திமுகவோடுதான் கூட்டணி அமைத்து மா.கம்யூ போட்டியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்காரியா கமிஷன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே விசாரணை நடத்திக் கொண்டுதான் இருந்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட தனித்தே போட்டியிட்டது திமுக. காங்கிரஸ் –- இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணி, அதிமுக -– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு அணி, மத்தியில் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி தனி என்று நடந்த நான்குமுனை போட்டியில் அதிமுக 130 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.

1980 தேர்தலில் திமுக - இ.காங்கிரஸ் கூட்டணி உருவானது. காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், திமுக 112 தொகுதிகளிலும் ஏனைய சிறு கட்சிகளுக்கு மீதி தொகுதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக்கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சி, யார் முதல்வர் என்பதை தீர்மானிப்போம் என்று கூறப்பட்ட தெளிவில்லாத அறிவிப்புக்கு வாக்காளர்களிடையே வரவேற்பில்லை. மாறாக அதிமுகவோ இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், குமரி ஆனந்தனின் காமராஜர் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ், பழ.நெடுமாறனின் காமராஜர் காங்கிரஸ் என்று பலமான கட்சிகளை கூட்டணிக்கு வைத்திருந்தாலும் 168 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜனதா கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் கண்டதால் மும்முனை போட்டியே நடந்தது. அதிமுக கூட்டணியில் யார் முதல்வர் என்கிற தெளிவு இருந்ததால், அக்கூட்டணிக்கே வெற்றி கிடைத்தது. 129 தொகுதிகளில் அக்கட்சி வென்றது.

எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் இருந்தபடியே 1984 தேர்தலை சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸோடு, மாநில ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உறவு மலர்ந்திருந்தது. அதிமுக –- இ.காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியை எதிர்த்து திமுக, மா.கம்யூ, இ.கம்யூ, ஜனதா, தமிழ்நாடு பார்வர்ட் பிளாக், காமராஜ் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை பலமாக அணி திரண்டன. இருப்பினும் இந்திரா காந்தி கொலை, எம்.ஜி.ஆர் உடல்நலமின்மை போன்றவற்றால் ஏற்பட்ட அனுதாப அலைக்கு முன்பு திமுக கூட்டணியால் சமாளிக்க முடியவில்லை. திமுக - அதிமுக கட்சிகளுக்கு மாற்று என்று முதன்முறையாக ‘ஊழல் ஒழிப்புக் கூட்டணி’, அதிமுகவில் இருந்து பிரிந்திருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் இந்த தேர்தலில் களமிறங்கி காணாமல் போனது. இதே காரணத்தை சொல்லி இப்போதைய தேர்தலில் களமிறங்கி இருக்கும் மக்கள்நல கூட்டணிக்கு இதுவே முதல் முன்னுதாரணம் என்று சொல்லலாம்.

1989 தேர்தலில் திமுக, மா.கம்யூ, ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு அணி. இரண்டாக அதிமுக பிளவு பட்டிருந்தது. ஜெயலலிதா பிரிவு அதிமுகவோடு இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி. வி.என்.ஜானகி பிரிவு அதிமுகவோடு, சிவாஜிகணேசன் ஆரம்பித்த கட்சியான தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி. காங்கிரஸ் இம்முறை இரு திராவிடக் கட்சிகளோடு இணையாமல் தனி அணியாக நின்றது. அவ்வகையில் நான்கு முனை போட்டியாக நடந்த இத்தேர்தலில் 146 இடங்களில் வென்று திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

1991 தேர்தலில் அதிமுக மீண்டும் ஒன்றுபட்டது. அக்கட்சியோடு கூட்டணி வைத்த காங்கிரஸின் தலைவர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குண்டுவைத்து கொல்லப்பட்டார். திமுக கூட்டணியில் மா.கம்யூ, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்.திருநாவுக்கரசின் அண்ணா புரட்சித்தலைவர் திமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்து சந்தித்த முதல் தேர்தல் இதுதான். ராஜீவ் கொலை அனுதாப அலை வீசியதால் 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 164 தொகுதிகளில் வென்று எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளை வாரி சுருட்டியது.

1996ல் வித்தியாசமான களம். அதிமுக பலவந்தமாக காங்கிரஸோடு கூட்டணி வைக்க முயல, அக்கட்சி உடைந்து தமிழ்மாநில காங்கிரஸ் என்கிற புதிய கட்சி மூப்பனார் தலைமையில் உதயமானது. இக்கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக, தமாகா, இ.கம்யூ, பார்வர்ட் பிளாக் ஆகியவை பலமான கூட்டணியை அமைத்தன. திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுகவை தொடங்கியிருந்தார். திமுக - அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய அவரோடு மா.கம்யூ கூட்டணி கண்டது. இவர்களோடு ஜனதாதளமும் சேர்ந்துக் கொண்டது. முதலில் திமுக கூட்டணியோடு, பிற்பாடு மதிமுக கூட்டணியோடு பேசி உடன்பாடு காண முடியாத பாமக தனித்து நின்றது. நான்கு முனை தேர்தலாக நடந்ததில் எதிர்க்கட்சிகள் அத்தனையையும் முறியடித்து பிரும்மாண்ட வெற்றியை ருசித்தது திமுக. அக்கட்சி போட்டியிட்ட 182 இடங்களில் 173 தொகுதிகளை வென்றது. ஜெயலலிதா, வைகோ போன்ற தலைவர்கள், அப்போது அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தோல்வியடைந்தனர். பாஜக, தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக தன்னுடைய கணக்கை துவக்கிய தேர்தல் இதுதான். மதிமுகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுயேச்சையாக வென்றார். பிற்பாடு ‘புதிய தமிழகம்’ கட்சியை உருவாக்கினார்.

2001ல் நடந்த முந்தைய தேர்தலை போன்ற பலமான கூட்டணியை திமுகவால் ஏற்படுத்த முடியவில்லை. மதிமுக கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டு தனித்துப் போய் நின்றது. பாஜக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, தமாகாவில் இருந்து பிரிந்து புதுக்கட்சி கண்ட ப.சிதம்பரத்தின் தமாகா ஜனநாயகப் பேரவை, கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி என்று இக்கூட்டணி வலுவில்லாததாக அமைந்தது. மாறாக அதிமுகவோ காங்கிரஸ், தமாகா, பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலமான கூட்டணியை அமைத்து வென்றது. 141 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அதிமுக, 132 இடங்களில் வென்றது.

2006ல் முதன்முறையாக தேமுதிக தனித்து களமிறங்கியது. இரு கட்சிகளுக்கும் மாற்று என்று விஜயகாந்த் முழங்கினார். திமுக, காங்கிரஸ், பாமக, இ.கம்யூ, மா.கம்யூ என்று பலம் வாய்ந்த கூட்டணி. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, கடைசி நேரத்தில் போயஸ் தோட்டத்துக்கு போய் பொக்கே கொடுத்து அதிமுக கூட்டணியில் இணைந்தது. விடுதலை சிறுத்தைகளும் அதிமுக அணியில் சேர்ந்தார்கள். பாஜக தனித்து தேர்தலை சந்தித்தது. கடுமையான பொட்டியில் 132 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக 96 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. 1952க்கு பிறகு தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை கூட்டணிக் கட்சிகளின் உதவியோடு அமைத்தது.

2011ல் அதிமுகவோடு தேமுதிக, மா.கம்யூ, இ.கம்யூ கட்சிகள் கூட்டணி அமைத்தன. கடைசிநேர தொகுதிப் பங்கீடு பிரச்சினையில் ஒற்றை இலக்க சீட்டுகள்தான் கொடுக்கிறார்கள் என வெறுத்துப்போய் இக்கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறினாலும், அதிமுகவுக்கு சங்கடம் கொடுக்கக்கூடாது என்று தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது. திமுகவோடு காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. பாஜக தனித்துவிடப்பட்டது. அதிமுக - திமுக கூட்டணி சமபலத்தோடு மோதுவது போன்ற தோற்றம் தெரிந்தாலும், தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் அதிமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றியது.

இதோ 2016 தேர்தல் வந்துவிட்டது. திமுக, காங்கிரஸ், முஸ்லீம்லீக் கூட்டணி உறுதிப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று தெரிகிறது. கண்ணுக்கு தெரிந்த தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று இதுவரை முழங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதிமுக கூட்டணிக்கு தயார் என்று சமீபமாக சிக்னல் காட்டியும் பலமான கட்சிகள் எதுவும் அவரோடு சேர விருப்பமாக இல்லை. முந்தைய தேர்தல்களில் திமுக - அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி அமைத்து எப்படியோ சட்டமன்றத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கட்சிகள், இப்போது இரு கட்சிகளுக்கும் மாற்று என்று களமிறங்கி இருக்கின்றன. இரு கட்சிகளுடனான கடந்தகால தேர்தல் உறவுகளே, அவர்களுக்கு மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவில்லை.

1967ல் தொடங்கி பார்த்தோமானால், தேர்தலில் பல பிரச்சினைகள் எதிரொலித்தாலும் கூட பலமான கூட்டணிதான் ஆட்சியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது என்பது வரலாறு. இந்த தேர்தலிலும் அதே போக்கு தொடருமா என்பது இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

(நன்றி : தினகரன்)

3 மார்ச், 2016

மிஸ்டர் ராங்!

தமிழக அரசியல் வரலாற்றில் சரியான சந்தர்ப்பத்தில் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்கக் கூடியவர் என்று மற்ற கட்சியினரால் தொடர்ச்சியாக கிண்டலடிக்கப்படுபவர் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

1993ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்கினார். 1996ல் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதாதளம் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தது. வைகோவே கூட விளாத்திகுளம் தொகுதியில் தோல்வி அடைந்தார். சிவகாசி பாராளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட அவர் அங்கும் மூன்றாவது இடம் பெற்று படுதோல்வி அடைந்தார். 177 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. “காட்டாற்று வெள்ளத்தில் சந்தனமரங்களும் அடித்துச் செல்வது இயல்புதான்” என்று தன்னுடைய படுதோல்வியை இலக்கியத்தரமாக விமர்சித்து ஆறுதலடைந்தார்.

96 தேர்தலில் மிகக்கடுமையாக அதிமுகவையும், ஜெயலலிதாவையும் விமர்சித்த வைகோ, அடுத்த இரண்டே ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டார். 1998 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “அதிமுகவும், மதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்” என்று அவர் உருகியதை கண்டு மதிமுக தொண்டர்களே முகம் சுளித்தார்கள்.

ஜெயலலிதாவால் ஓராண்டிலேயே வாஜ்பாய் அரசு கவிழ்ந்துவிட 1999ல் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல். இம்முறை, எந்த கட்சியிலிருந்து பிரிந்தாரோ அதே திமுகவுடன் மதிமுக கூட்டணி. இந்த முடிவு கட்சிசாரா வாக்காளர்கள் மத்தியில் மதிமுகவின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று முழங்கிய வைகோ அடுத்தடுத்து அதே கட்சிகளோடு வெற்றிக்காக கூட்டணி அமைத்தது அவரது தலைமைப் பண்பையே கேலிக்குரியதாகவும் ஆக்கியது.

அடுத்து வந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் வைகோ எடுத்த முடிவு அவரது அரசியல் தற்கொலை முயற்சியாக பார்க்கப்படுகிறது. இரண்டு சீட்டுக்காக சண்டை போட்டு திமுக கூட்டணியிலிருந்து விலகிப்போய் தனித்து நின்றது மதிமுக. மீண்டும் திமுக, அதிமுக இரு கட்சிகளையும் மிக கடுமையாக விமர்சித்த வைகோ, இனி எந்த காலத்திலும் இந்த கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்றார். 211 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, டெபாசிட்டையே விரல்விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில்தான் திரும்பப் பெற்றது.

1998ல் தேசியளவில் பாஜகவோடு மதிமுகவுக்கு ஏற்பட்ட கூட்டணிக்கு வைகோ மிகவும் விசுவாசமாக இருந்தார். பாஜக அரசு பொடா சட்டம் கொண்டுவந்தபோது அதை ஆதரிக்கவும் செய்தார். 2001ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக, பாஜகவுக்காக வைகோ ஆதரித்த அதே பொடா சட்டத்தை பயன்படுத்தி அவரையே சிறையில் தள்ளியது. அந்த சந்தர்ப்பத்தில் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக கோரியது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே, வேலூர் சிறையில் இருந்த வைகோவை நேரில் இருமுறை பார்த்து ஆறுதலும் சொன்னார்.

இதையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணிக்கு 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு வந்தது மதிமுக. “தந்தையைப் பிரிந்து தனிக்குடித்தனம் போன தனயன் திரும்பி வந்திருக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் வைகோ. ஒரு வார இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், “என் வாழ்வில் நான் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் வார்க்கப்பட்டேன். வளர்க்கப்பட்டேன். காலம் எங்களை காயப்படுத்தியது. அதே காலம்தான் எங்கள் காயங்களுக்கு களிம்பும் தடவியது. சிறையிலிருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர். அவர் என்னை வந்துப் பார்த்ததால் என் மனச்சுமை குறைந்துப் போனது. அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால் இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது வைகோவின் வழக்கப்படி அப்படியே ‘யூ டர்ன்’ அடித்தார். கேட்ட தொகுதிகளை திமுக தரவில்லை என்றுகூறி, அதிமுக கூட்டணிக்கு தாவினார். சிறையில் இருந்து வெளியே வந்தபோது, “பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை தூக்கியெறிவோம்” என்று அவர் முழங்கிய கோஷத்துக்கு மாறாக, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அவர் அமைத்த கூட்டணி, அரசியலில் வைகோ மீதான நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாகவே குலைத்தது. அவரை பொடாவில் உள்ளே வைத்து சித்திரவதை செய்த ஜெயலலிதாவை, ‘அன்பு சகோதரி’ என்று விளித்ததை, வைகோவின் தாயாரே எதிர்த்தார் என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. 2006ல் வைகோ இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணி தோல்வியடைந்து, திமுக ஆட்சிக்கு வந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக தான் இடம்பெற்ற கூட்டணியிலேயே இரண்டாம் முறையாகவும் வைகோ தொடர்ந்தார். ஆனால், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வைகோவே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அடுத்து வந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை என்றுகூறி வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தார் வைகோ. “ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டார்” என்று கூறிய அவர், தேர்தலிலும் போட்டியிடாமல், அதிமுகவுக்கு எதிர்க்கட்சியான திமுகவுக்கு ஆதரவளிக்காமல் தேர்தலையே ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்.

அடுத்துவந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் பாஜகவோடு சேர்ந்தார். நாடு முழுக்க மோடி அலை வீசியபோதும் கூட, ஏழு இடங்களில் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட வெல்ல முடியவில்லை. வழக்கம்போல விருதுநகரில் வைகோவே தோல்வியை தழுவினார்.

இப்போது 2016 தேர்தலில் இதுவரை தான் கூட்டணி கண்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக அத்தனை கட்சிகளும் மாற்று இயக்கம் என்றுகூறி ‘மக்கள் நல கூட்டணி’யில் இணைந்திருக்கிறார். பெரிய கட்சிகளின் கூட்டணி சுனாமியில் மக்கள் நல கூட்டணி தேர்தல் வரை தாங்குமா என்கிற சந்தேகத்தை அரசியல் ஆய்வாளர்கள் எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை மக்கள் நல கூட்டணி சிதையுமேயானால், வழக்கம்போல தனித்துவிடப் படுவது வைகோவாகதான் இருப்பார்.

கடந்தகால வைகோவின் செயல்பாடுகளால் வெறுத்துப்போய் மதிமுகவில் இருந்து மீண்டும் தாய்க்கழகமான திமுகவுக்கே அவரோடு வந்தவர்கள் போய்விட்டார்கள். என்ன செய்வது? வைகோ உப்பு விற்க போனால் மழை அடிக்கிறது, மாவு விற்க போனால் காற்றடிக்கிறது. இந்த அளவுக்கு அதிர்ஷ்டமே கொஞ்சமும் இல்லாத தலைவர் இந்திய அரசியலிலேயே வேறு யாரும் இல்லை என்று கிண்டலாக சமூகவலைத் தளங்களில் இவரை விமர்சிக்கிறார்கள் நெட்டிஸன்கள்.

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

26 பிப்ரவரி, 2016

என்னப்பா இப்படி பின்னுறீங்களேப்பா...

வெகுஜன மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்.

1950களின் மத்தியில் அக்கட்சி தேர்தல் பாதைக்கு திரும்பியபோதே, மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருந்த சினிமாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அக்கட்சியின் நிறுவனர் அண்ணாவில் தொடங்கி, இளம் தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் மறைமுகமாக திமுகவின் கருத்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தினர்.

அக்கட்சி சார்பு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் திமுக அடையாளங்களை காட்ட தவறியதில்லை.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவு பரவலாக கிடைக்கத் தொடங்கிய காலத்தில் ஏராளமான பத்திரிகைகள் நடத்தியும், பிரசுரங்கள் வெளியிட்டும் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்தார்கள். பிற்பாடு தொலைக்காட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டபோதும் அதையும் தனக்கு சாதகமான ஊடகமாக மாற்றிக்கொள்ளவும் திமுக தவறவில்லை.

இதுபோன்ற மக்கள் தொடர்பு பணிகள் ஏற்படுத்திய தாக்கத்தை தேர்தல் நேரத்தில் விளம்பரங்கள் மூலமாக தங்களுக்கு ஆதரவான அலையாக மாற்றுவது திமுக பாணி.

அரசியல் மேடைகளில் நல்ல தமிழை கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான திமுகவினர், தேர்தல் விளம்பரங்களிலும் ‘நச்’சென்று நடுமண்டைக்கு ஏறும் விதமாகவும் வண்ணமயமான வாசகங்களை உருவாக்குவதில் வல்லவர்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்பதில் தொடங்கி, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ வரையிலுமான அவர்களது விளம்பரத் தொடர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பிரபலம்.

‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

‘ஊழல் பெருச்சாளிகளுக்கா உங்கள் ஓட்டு?’ என்கிற 96 தேர்தல் வாசகம், ஜெயலலிதாவை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மண்ணை கவ்வ வைத்தது. ‘சசிகலாபுரமா சமத்துவபுரமா?’ என்றெல்லாம் திமுக விளம்பரங்கள் மக்களை நோக்கி கேட்ட கேள்வி போயஸ் தோட்டத்தை நடுநடுங்க வைத்தது.

பொதுவாக இதுபோன்ற விளம்பரங்களில் திமுக இரண்டு வழிமுறைகளையே பின்பற்றுகிறது.

அக்கட்சி ஆட்சியிலிருந்து சந்திக்கும் தேர்தல்களின் போது தன்னுடைய சாதனைகளை முன்வைத்து விளம்பரங்கள் செய்யும்.

எதிர்க்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும்போது, ஆளுங்கட்சியின் தவறுகளை பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அம்பலப்படுத்தும்.

இந்த மரபு, விளம்பரங்களுக்கு மட்டுமல்ல. அக்கட்சியின் பிரசார மேடைகளுக்கும் பொருந்தும்.

மற்ற சில்லறை விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், இந்த இரண்டு உத்திகளையே தொடர்ச்சியாக தேவைக்கேற்ப பயன்படுத்துவதால்தான் உலகிலேயே அறுபது ஆண்டுகளை கடந்தும் உயிரோட்டமாக இருக்கும் ஒரே பிராந்திய இயக்கமாக திமுக இருக்கிறது.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் ஊடகப்பணி, இன்றைய ஃபேஸ்புக் காலம் வரை ஏராளமான வடிவங்களை கடந்து வளர்ந்திருக்கிறது. கருணாநிதி ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும்போதும் கூடவே அவரது கட்சியும் தன்னை டெக்னாலஜிக்கு ஏற்ப அப்டேட் செய்துக் கொள்கிறது.

இதற்கு உதாரணம்தான் திமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து வெளியிட்டு வரும் பரபரப்பான விளம்பரங்கள்.

திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் தமிழகம் எங்கும் 234 தொகுதிகளிலும் நடத்திய ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த பயணத்தின் போது அவர் ஒவ்வொரு ஊரிலும் முழங்கிய வாசகம் ‘முடியட்டும் விடியட்டும்’. அதிமுக ஆட்சி முடியட்டும், திமுக ஆட்சி விடியட்டும் என்கிற பொருளில் கூறப்பட்ட இந்த வாசகத்தின் தொடர்ச்சியாக சமீபநாட்களாக ஊடகங்களில் பளிச்சிடும் விளம்பரங்கள், மக்களிடையே பேசப்படும் விவாதமாக உருவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை மையப்படுத்தி சிறப்பு விவாதம் நடத்தும் அளவுக்கு வெளியான முதல் நாளே பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

விளம்பரத்துறையில் teaser ad என கூறப்படும் சீண்டல் விளம்பரங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. திமுகவின் சமீப விளம்பரங்களும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா?’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை தாங்கி வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.

ஆளும் அதிமுக, அரசு செலவிலேயே நலத்திட்டங்கள் அறிவிப்புக்கான விளம்பரங்கள் என்கிற சாக்கில் பல கோடி ரூபாய்க்கு தேர்தல் பிரசார விளம்பரங்களாக தந்துவரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான திமுக எதிர்கொண்டிருக்கும் இந்த நூதன பாணி இந்தியாவெங்கும் பேசப்படும் பொருளாகி உள்ளது.

கடந்த 23ஆம் தேதி இந்த விளம்பரத் தொடரின் முதல் விளம்பரம் வெளியிடப்பட்ட அன்றே, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 6 லட்சம் முறை இந்த விளம்பரம் விவாதிக்கப்பட்டு வைரலாக மாறியது. இன்றும் பரவி வருகிறது. போலவே ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் போன்ற தளங்களிலும் இப்போது திமுக விளம்பரங்கள் குறித்துதான் பேச்சு. அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரம் ஒன்று சமூகவலைத்தள ஊடகங்களில் இந்தளவுக்கு முதன்மையான பேசுபொருளாக மாறியிருப்பது இதுவே முதன்முறை.

வருடாவருடம் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று விதவிதமாக போஸ்டர் ஒட்டி, விளம்பரங்கள் கொடுத்து அசத்துவார்கள்.

இந்த ஆண்டு அதிமுகவினரின் அந்த வழக்கமான கோலாகலம் பிசுபிசுத்துப் போனதற்கு திமுகவின் இந்த புதிய விளம்பரத் தொடரே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கனவே இணையதளங்களில் செயல்படும் திமுக ஆதரவாளர்களுக்கு, அக்கட்சி பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வரும் நிலையில் இந்த புதிய ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ வைரல் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இதே விளம்பர வாசகங்களை கொஞ்சம் முன்னே பின்னே மாற்றி, அதிமுக அரசை வெறுப்பேற்றி மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள்.

பாரம்பரியமான அச்சு ஊடக விளம்பரங்களில் திமுக கலக்கினாலும், இக்கால இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் ஊடகங்களிலும் முழு முனைப்பாக பிரசாரம் செய்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் தொடங்கி கட்சியின் ஊராட்சி கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் (இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இதற்காக தேர்தல் வரை திமுக 24 X 7 மணி நேரமும் உழைக்கக்கூடியவர்களை நியமித்திருக்கிறது. தொழிற்முறையிலான சில ஏஜென்ஸிகளையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று தெரிகிறது.

அந்தவகையில் திமுக தலைவர் போன் மூலம் பிரசாரம் செய்யும் ‘மிஸ்ட் கால்’ முறை பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இதுவரை முப்பது லட்சம் பேர், மிஸ்ட்கால் முறையில் கருணாநிதியின் குரலை ஆர்வத்தோடு கேட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அளவிலான திமுகவினர், மாவட்டம் தோறும் பிரத்யேக வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதில் அதிமுக அரசின் சொதப்பல்களை பிரசாரம் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுகவால் 2016 தேர்தல் கலர்ஃபுல்லாக களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்காக திமுக நிறைய செலவழித்திருப்பதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. “இந்த விளம்பரம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை ஒப்பிட்டால், திமுக செலவழித்திருக்கும் தொகை மிக சொற்பமே” என்று JWT என்கிற விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த விளம்பர ஆய்வாளர் சொல்கிறார்.

திமுகவின் இந்த விளம்பர சுனாமியை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற ஆவல் அனைத்து மட்டங்களிலும் உருவாகி இருக்கிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்கிற மனப்பான்மை உறுதியாக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள்நல கூட்டணி, பாமக போன்ற மாற்று அணிகளின் பிரசாரம் சுத்தமாக கலகலத்துப் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் சாதகங்களை சொல்லி ஓட்டு கேட்காமல், அதிமுகவின் பாதகங்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தார்மீகமான விளம்பரமுறைதானா என்றொரு கேள்வியை சமூகவலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

“நாங்க இப்போதைக்கு ஒட்டியிருக்கிறது போஸ்டர்தான். அதுக்குள்ளே விமர்சனம் எழுதிட்டா எப்படி? இன்னும் டீசர் வரணும். டிரைலர் வரணும். ஆடியோ ரிலீஸ் அது இதுன்னு நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் படம். முதல்லே படம் ரிலீஸ் ஆகட்டும். நிச்சயமா பட்டையைக் கிளப்பும். அதைப் பார்த்துட்டு இந்த தார்மீகம், அறம் பற்றியெல்லாம் எழுதுங்க. விமர்சனங்களை வரவேற்கிறோம்” என்று ஜாலியாக இதற்கு பதில் சொல்லுகிறார் திமுக இளைஞரணி பிரமுகர் ஒருவர்.

(இந்த கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட வடிவம் இன்றைய ‘தினகரன்’ நாளிதழில் பிரசுரமாகியிருக்கிறது)

24 பிப்ரவரி, 2016

நூத்தி பத்து... அம்மா.. அம்மா...!

அதிமுகவினரின் அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று. காவடி தூக்குவது, பால்குடம் சுமப்பது, தீச்சட்டி ஏந்துவது, வேப்பிலை ஆடை உடுத்துவது, நாக்கில் வேல் குத்திக் கொள்வது, நெருப்பு மிதிப்பது, அங்கபிரதட்சணம் செய்வது என்று ஆயிரத்தெட்டு பகுத்தறிவு வழிமுறைகளில் இந்நன்னாள் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருந்தாலும் தமிழனுக்கு கொண்டாட்டம் என்றால் தமிழ் கலாசார செயல்பாடாக பாரம்பரியமாக நடைபெறுவது பட்டிமன்றம்தான். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பயா டிவி’யில் நடைபெறும் கற்பனை காமெடி பட்டிமன்றம் வாசகர்களுக்காக லைவ்வாக...
பட்டிமன்றத் தலைப்பு, ‘டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியின் சாதனையாக விஞ்சி நிற்பது தமிழகமெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களா? அல்லது உலகமே வியந்து போற்றும் நூத்திப்பத்து அறிவிப்புகளா?’

நடுவராக சபாநாயகர் தனபால். ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், சரத்குமார் ஆகியோர் வாதிடுகிறார்கள்.

தனபால் : அம்மா என்றாலே சாதனைதான். அம்மா என்றாலும் மூன்றெழுத்து. சாதனை என்றாலும் மூன்றெழுத்து (பலத்த கைத்தட்டல்). இருந்தாலும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஐ.நா.சபையே வியக்கும் வண்ணம் அவரது சாதனைகள் ஸ்டிக்கராக உலகம் முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன. அதிக ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சி என்று கின்னஸ் புத்தகமே பாராட்டுகிறது. அதுபோல அமெரிக்க அதிபர் மாளிகையிலே கூட அம்மாவின் நூத்திப் பத்து அறிவிப்புகளை பிட்டு அடித்து அதே மாதிரியான அறிவிப்புகளை ஒபாமா வெளியிட ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இப்படி பிரபஞ்சமே பாராட்டும் புரட்சித்தலைவி அவர்களின் முத்தாய்ப்பான இந்த இரண்டு சாதனைகளில் எது பெரிய சாதனை என்று வாதிட நம் பேச்சாளர்கள் துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டா கணக்காக தயாராக இருக்கிறார்கள்.

முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா அல்லது திருப்பதி மொட்டையா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

(பலமான கைத்தட்டல்)

சரத்குமார் பேசவருகிறார். பின்னணியில் ‘நாட்டாமை பாதம் பட்டா...’ பாடல் ஒலிக்கிறது.

சரத்குமார் : மாண்புமிகு நடுவர் அவர்களே. நான் ஸ்டிக்கர் அல்ல. கருவேப்பிலை. எனவே நூத்தி பத்துக்காக பேசுகிறேன். அகில இந்திய சமத்துவக் கட்சி, அதிமுகவுக்காக அதிமுகவினரை விட அதிகம் குனிந்த கட்சி. அப்படியிருக்க ஆட்சியின் முடிவில் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு 110 அல்ல 111 (மூன்று விரல்களை நாமம் போல போட்டு காட்டுகிறார்) என்பதை நடுவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே 110 அறிவிப்பில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ரெண்டு சீட்டு கொடுக்கப்படுமேயானால்...”

தனபால் : வரம்பு மீறி பேசுகிறீர்கள். உங்களுக்கு பேசக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. உட்காருங்கள்.

வளர்மதி : சரத்குமார் எங்களைவிட புரட்சித்தலைவி அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாக குறிப்பிடுவது நித்தமும் அம்மாவின் காலில் விழுந்து சேவித்து எழும் எங்களையெல்லாம் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.

(ஆவேசமாக)

செவுரு இருக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டுகிறது. உனக்கேன் ஸ்பெஷலாக அறிவிக்க வேண்டும் நூத்தி பத்து? எங்களை போல நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாயா? பசை தடவினாயா? பஞ்சர் ஒட்டினாயா? எவரோ கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களுக்கு எல்லாம் எம் ரத்தத்தின் ரத்தங்கள் ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடியபோது கூடமாட உட்கார்ந்து ஒட்டாமல் எங்கே போயிருந்தாய்? டெபாசிட் இல்லாதவரே... நீ என்ன எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரா? வார்டு கவுன்சிலரா? நீ ஏன் கேட்கிறாய் 110 அறிவிப்பு? ஓட்டு இல்லாத ஓடப்பரே, அம்மாவின் காலில் விழுந்து எழுந்து மக்களிடம் ஓட்டு கேட்கும் அதிமுக மறவர் கூட்டம் உன் அசமகவினரின் அஞ்சாறு ஓட்டுகளையும் எங்கள் ஓட்டுகளாக தேர்தலில் குத்திவிடும். ஜாக்கிரதை.

(விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது. கரவொலி காதை கிழிக்கிறது. நடுவர் தனபாலே தனக்கு முன்னிருக்கும் பெஞ்சை தட்டி ஒலி எழுப்புகிறார்)

சரத்குமார் : நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்..?

தனபால் : நீங்கள் என்ன சொல்லுவது? அம்மா சொல்லுவார் உங்களைப் பற்றி. வரம்புமீறி பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதை நான் நீக்குகிறேன். ஒழுங்காக பட்டிமன்ற மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநடப்பு செய்யுங்கள். இல்லையேல் காவலர்களை வைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே எறிந்து தமிழர்களின் மானத்தை காப்பேன்.

நத்தம் விஸ்வநாதன் : சரத்குமார் வீட்டின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு, மிச்சமாகும் மின்சாரம் ஏழைபாழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுமென புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க அறிவிக்கிறேன். இதனால் ஏழு கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். அம்மா வாழ்க. புரட்சித்தலைவி வாழ்வாங்கு வாழ்க. தங்கத்தலைவி நீடுழி வாழ்க.

ஓ.பன்னீர் செல்வம் : சரத்குமாரை அழைத்ததற்கு பதிலாக மாஃபா பாண்டியராஜனையோ, செ.கு.தமிழரசனையோ பேச அழைத்திருக்கலாம். தேர்தலில் சீட்டு கொடுக்காவிட்டாலும் விசுவாசத்தில் நம்மையும் மிஞ்சி, நம்மைவிட மிகசிறப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ்பாடும் தகுதி பெற்றவர்கள் அவர்கள்தான்.

நத்தம் விஸ்வநாதன் : இதை நான் வழிமொழிகிறேன். அம்மா வாழ்க. ஸ்டிக்கர் வாழ்க. பேனர் வாழ்க. வெள்ள நிவாரணம் வாழ்க. மின்தடை வாழ்க.

தனபால் : பட்டிமன்றம் மிக அருமையாக நடக்கிறது. மக்களுக்கு பயன் தரக்கூடிய இதுபோன்ற விவாதங்கள் அம்மாவை பற்றி பேசும்போதுதான் அர்த்தம் பெறுகிறது. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’ என்று கவிஞன் சும்மாவா பாடினான்?

வளர்மதி : ஆலுமா டோலுமா ஸ்டிக்கர் ஒட்டுனா போதும்மா

ஓ.பன்னீர்செல்வம் : டேரா டேரா டேரா பைட்டா ஸ்டிக்கர் இருக்கு. பிட்டு பிட்டா ஒட்ட ஒட்ட ஏறும் கிறுக்கு. நூத்தி பத்து. அம்மா... அம்மா.. நூத்தி பத்து. அம்மா.. அம்மா.. லெட் அஸ் கெட் எ நூத்தி பத்து.. அம்மா... அம்மா.... ( ‘செல்ஃபீ புள்ள’ ராகத்தில் டேபிளை தட்டியபடியே பாடுகிறார்)

தனபால் : அடடா.. அடடா.. சும்மா அள்ளுதே. தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி..

(திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வருகிறார் நாஞ்சில் சம்பத்)

நாஞ்சில் : அப்படியெல்லாம் சட்டுபுட்டுன்னு தீர்ப்பு கீர்ப்பு சொல்லிடக்கூடாது. அம்மா வரட்டும். காத்திருப்போம்.

(செம்பரம்பாக்கம் வெள்ளம் வந்தபோது, அம்மா வரட்டும் என்று நாடே காத்திருந்ததை போல பட்டிமன்ற அவை மொத்தமும் அப்படியே காத்திருக்கிறது)

நன்றி : தினகரன் தேர்தல் களம்

22 பிப்ரவரி, 2016

வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் 26,000த்துக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்திருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 8,000 மனுக்கள் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரும் விருப்பமனுக்கள்.

உலக வரலாற்றிலேயே எந்த கட்சியோடும் ஒப்பிட முடியாத வித்தியாசமான கட்சியான அதிமுகவில் விருப்பமனு போட்டவர்களுக்கு, ‘நேர்காணல்’ என்றொரு சம்பிரதாயம் நடக்கும். ஆனால், ஏற்கனவே வேட்பாளர்களை ‘அம்மா’ தேர்வு செய்துவிட்டிருப்பார் (அந்தப் பட்டியலைதான் கையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் சசிகலா சாமி கும்பிட்டுவிட்டு வருவதாக சொல்கிறார்கள்). இருந்தாலும் ஒப்புக்குச் சப்பாணியாக, ஊருக்கு ஒப்பேற்ற அதிமுக தேர்தல் குழுவினர் நடத்தும் நேர்காணல் எப்படியிருக்கும் என்றொரு ஜாலி கற்பனை. ஓவர் டூ லாயிட்ஸ் ரோடு அதிமுக தலைமைக் கழகம்...
நேர்காணலுக்கு வந்தவர் : புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க. அகிலாண்டேஸ்வரி வாழ்க. அகிலம் காக்கும் அன்னிபெசண்ட் அம்மையார் வாழ்க. அன்னை தெரசா வாழ்க. அம்மா வாழ்க.


ஓ.பன்னீர்செல்வம் (இடைமறித்து) : கேட்குற எனக்கே மூச்சு வாங்குது. சொல்லுற நீங்க பூஸ்ட் அடிச்சாமாதிரி தெம்பா இருக்கீங்க. கண்டினியூ யுவர் கபடி கபடி.

நே.கா. வந்தவர் : கழகத்தின் நிரந்தப் பொதுச்செயலாளர் வாழ்க. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க. நாளைய பாரத பிரதமர் வாழ்க. நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் வாழ்க. உலகத் தலைவி வாழ்க. அண்டசராசரங்களை ஆளும் தைரியலட்சுமி வாழ்க.

நத்தம் விஸ்வநாதன் : போதுங்க... போதுங்க... பொதுஅறிவு உங்களுக்கு பிரமாதமா இருக்கு. ஆனா சட்டசபைக்கு போறதுக்கு வேற சில தகுதிகள் வேணுமே?

நே.கா. வந்தவர் : எங்க ஊர்லே இஞ்ச் இடுக்கு பாக்கியில்லாமே எல்லா இடத்துலேயும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கேனுங்க. ரோட்டுலே நடந்தாகூட அம்மா ஸ்டிக்கரை மிதிச்சமாதிரி ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டு மக்களெல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாங்க.

தப்பித்தவறி மிதிச்சிட்டா காலை எடுத்துடுவோமில்லே? அவ்வளவு ஏனுங்க. ஜனங்க முதுகுலே கூட ஏப்ரல் ஃபூல் முத்திரை அடிக்கிற மாதிரி அம்மா படத்தை பெருசா ஒட்டிட்டேனுங்க. பிய்க்கவே முடியாதபடி அமெரிக்கன் டெக்னாலஜி பசை போட்டு ஒட்டிட்டேன். என் முதுகை கூட பாருங்க.

(சட்டையை கழற்றி திரும்புகிறார். 20 இன்ச் விட்டத்துக்கு ரவுண்டாக ஒட்டப்பட்டிருக்கும் அம்மா ஸ்டிக்கர் பளபளப்பாக பர்மணெண்ட் பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது)

ஓ.பன்னீர்செல்வம் : வெரி இண்டரெஸ்டிங். சட்டைய மாட்டிக்குங்க. அப்புறம்?

நே.கா. வந்தவர் : செம்பரம்பாக்கத்துலே வெள்ளம் வந்தப்போ கூட எங்க ஊருக்குள்ளே பொட்டுத்தண்ணி வராம இருந்ததுக்கு காரணம், ஊரை சுத்தி பாதுகாப்பா இடைவெளியே இல்லாம சீனப்பெருஞ்சுவர் கணக்கா நான் வெச்ச அம்மா பேனருங்க தானுங்க. வெள்ளத்தை தடுத்ததாலே மக்களெல்லாம் அம்மாவை மனசார பாராட்டினாங்க. ‘நானும் வெள்ளத்தை தடுத்த வெனிஸ் நகரமே!’ன்னு அதுக்கும் ஒரு பேனர் வெச்சேன்.

வளர்மதி (உணர்ச்சிவசப்பட்டு) : சுனாமியே எங்க அம்மா கட்டவுட்டை பார்த்துட்டு சுருட்டிக்கிட்டு போயிடிச்சி. செம்பரம்பாக்கம் வெள்ளம் எங்கம்மாவுக்கு எம்மாத்திரம்?

(சட்டென்று ஒரு கற்பூரத்தை கையில் ஏற்றி அப்படியே வாயில் போட்டு பபிள்கம் மாதிரி மெல்ல ஆரம்பிக்கிறார் வளர்மதி. நேர்காணல் எடுக்கும் அத்தனை அதிமுக தலைவர்களும் பேச்சு மூச்சின்றி பயபக்தியோடு எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)

மதுசூதனன் : தியரி டெஸ்டுலே நீ டபுள் ஓக்கேப்பா. பிராக்டிக்கலா எப்படின்னு தெரியணுமே?

(நேர்காணலுக்கு வந்தவர் சட்டென்று எழுந்து நிற்கிறார். நாற்பத்தைந்து டிகிரி முதுகு வளைத்து, அந்நிலையிலேயே கையை மேலே தூக்கி, இராணுவ வேகத்தில் கும்புடு போட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்கிறார். சட்டென்று யாரும் எதிர்பாரா வண்ணம் எகிப்து பிரமிடுகளில் பதம் செய்யப்பட்ட மம்மி கணக்காக உடம்பை விரைப்பாக்கி தூண் போல நிற்கிறார். இரண்டே நொடிகளில் அனாயசமாக அப்படியே தொம்மென்று தரையில் விழுந்து நமஸ்கரிக்கிறார். ஹெலிகாஃப்டர் பறப்பதை போல மிமிக்ரி செய்துக்கொண்டே, கோபுரதரிசனம் பார்க்கும் பக்தனை போல வானத்தை பார்த்து கச்சிதமான கும்பிடு போடுகிறார். சட்டென்று நாற்காலியில் அமர்ந்து தனக்கு முன்பாக இருக்கும் மேஜையை ‘கிங்காங்’ பாணியில் படபடவென்று தட்டுகிறார். அறைக்குள் சடக்கென்று சட்டசபை அட்மாஸ்பியர் தோன்றுகிறது. தேர்வுக்குழுவினர் அத்தனை பேரும் இந்த வித்தைகளை கண்டு பிரமை பிடித்த நிலையில் படபடவென்று கை தட்டுகிறார்கள்)

கோகுல இந்திரா : தேர்தல் பிரச்சாரத்துலே என்ன பேசுவீங்க?

நே.கா. வந்தவர் : இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த புரட்சித்தலைவி அம்மாவுக்கு ஓட்டு போடுவீங்களா? இல்லேன்னா இரண்டாம் உலகப் போர் நடத்தி மக்களை கொன்ற ஸ்டாலினுக்கு ஓட்டு போடுவீங்களான்னு ஜனங்களை கேட்பேன்.

கோகுல இந்திரா : இரண்டாம் உலகப்போரா? அதை நடத்தினது ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆச்சே?

வளர்மதி : இருந்துட்டு போவட்டுமே. அவர் பேரும் ஸ்டாலின்தானே? அதுக்கும் கருணாநிதிதான் பொறுப்பேத்துக்கணும்.

நத்தம் விஸ்வநாதன் : நீங்க செஞ்ச மக்கள் பணிகளில் வேறெதாவது குறிப்பா சொல்ல முடியுமா?

நே.கா. வந்தவர் : அம்மா பேனரை கிழிப்பேன்னு டிராஃபிக் முனுசாமின்னு ஒரு கிழவரு வந்தாரு. அவரை ஓட ஓட விரட்டி ரத்தம் தெறிக்க அடிச்சி துரத்துனேன். அதே பேனரை போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்குன்னு எடுத்துட்ட இன்ஸ்பெக்டரை போனில் கூப்பிட்டு கழுவி கழுவி ஊத்தினேன். அம்மாவை பொய்வழக்குலே பெங்களூர் ஜெயில்லே கருணாநிதி வெச்சப்போ அதை கண்டிச்சி நீளமா தாடி வளர்த்தேன். அம்மா ரிலீஸ் ஆனப்போ மொட்டை அடிச்சி காது குத்திக்கிட்டேன். கூணாளம்மன் கோயிலுக்கு கூழ் ஊத்தினேன். தீச்சட்டி ஏந்தினேன். தீ மிதிச்சேன். மண்சோறு சாப்பிட்டேன். காவடி தூக்கினேன்...

ஓ. பன்னீர் செல்வம் : ஆஹா... ஆஹா... பக்தா உன் பக்தியை மெச்சினோம். நீ எம்.எல்.ஏ பதவிக்கு மட்டுமில்லே. அமைச்சர் பதவிக்கே லாயக்கான ஆளுதான். அம்மா கிட்டே அப்படியே சொல்லிடறோம். அம்மா நல்ல முடிவா எடுத்து கடுதாசி போடுவாங்க. காத்திருங்க.

(புரட்சித்தலைவி வாழ்க. பொன்மனச்செல்வி வாழ்க. தங்கத்தாரகை வாழ்க. ஆதிபராசக்தி வாழ்க என்று மீண்டும் கோஷமிட்டுக் கொண்டே கிளம்புகிறார் நேர்காணலுக்கு வந்தவர்)

(நன்றி : தினகரன் தேர்தல் களம்)

4 ஜனவரி, 2016

நாஞ்சில் சம்பத்!

‘நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை’ என்பது கலைஞரின் ஃபேமஸான பஞ்ச் டயலாக். நாஞ்சில் நாட்டில் என்றுமே திமுக கொஞ்சம் வீக்குதான். மொழி, இன உணர்வு மாநிலம் முழுக்க கொழுந்துவிட்டு எரிந்தாலும் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என்று நாஞ்சில் நாடு மட்டும் தேசியநீரோட்டத்தில் டெல்லிரூட்டில்தான் என்றுமே பயணிக்கும்.

‘அண்ணா’, ‘தென்னகம்’ பத்திரிகைகளில் ‘ஆற்றல்மிகு அடலேறே!’ என்று அதிமுக தொண்டர்களை விளித்து நாஞ்சில் கி.மனோகரன் எழுதும் கடிதங்கள் எழுபதுகளில் திமுக தலைவர்களின் பி.பி.யை இஷ்டத்துக்கும் ஏற்றும். திமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது அவர் எழுதிய ‘கருவின் குற்றம்’ கவிதை ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சமல்ல.

நாஞ்சில் சம்பத்தைப் பொறுத்தவரை மனோகரன் அளவுக்கு பெரிய தலைவர் எல்லாம் அல்ல. திமுகவில் இருந்தவரை தீப்பொறி ரேஞ்சைவிட குறைந்த நிலையில் இருந்த பேச்சாளர்தான். மதிமுகவில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தாய்வீட்டுக்கு படையெடுக்க இவரது கேரியர் கிராப் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் ஏறத் தொடங்கியது. குறிப்பாக தொண்ணூறுகளின் இறுதியில் சம்பத்துக்கென்று கட்சி அபிமானங்களை தாண்டி நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.

பரங்கிமலை ஒன்றியம் என்றுமே பேச்சாளர்களின் கோட்டை. 67 மற்றும் 72 தேர்தல்களில் எம்.ஜி.ஆர் நின்று வென்ற தொகுதி பரங்கிமலை என்பதால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கவுரவப் பிரச்சினையான இடம். மாவீரன் மிசா ஆபிரகாம் இருந்தவரை அதிமுகவினரை திமுகவினர் ஓட ஓட விரட்டிய களம். பிரசித்தி பெற்ற செங்கை மாவட்டத்தின் கிழக்கு எல்லை.

மதிமுக உருவானபோது மதுராந்தகம் ஆறுமுகம், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் என்று கழக செயல்வீரர்கள் பலரும் மதிமுகவுக்கு இடம்பெயர்ந்ததால் சென்னையின் சுற்றுப்புற வட்டாரத்திலேயே மதிமுக கொடி சொல்லிக் கொள்ளும்படி இந்த ஏரியாவில்தான் பறந்தது. 2000ஆம் ஆண்டு பிறந்தநாளில் மிகச்சரியாக இரவு 12.00 மணிக்கு வைகோ ‘மில்லெனியம் புத்தாண்டு வாழ்த்துகள்’ சொன்னதே மடிப்பாக்கம் கூட்ரோடு பொதுக்கூட்டத்தில்தான்.

பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலிருந்த திடல் (மதி தியேட்டர் எதிரே) ரொம்ப ஃபேமஸ். தமிழக அரசியலில் கோலோச்சிய அத்தனை தலைவர்களுமே ஒருமுறையாவது அங்கே பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பார்கள். குறிப்பாக வெற்றிகொண்டானுக்கு அது ஹோம்கிரவுண்டு மாதிரி. தென்சென்னை தொகுதி எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா ஏற்பாட்டின் பேரில் அங்கே சுரங்கப்பாதை பணிகள் தொடங்கிய காலத்தில் இந்த திடல் பறிபோனது.

இதன் பின்னர் ஆயில்மில் பஸ்நிலையம் அருகே சர்ச்சுக்கு பக்கத்திலிருந்த காலிமனையில்தான் கட்சி பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடக்கும் (இப்போது அங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது). கட்சி வேறுபாடில்லாமல் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களின் பேச்சை இங்கே நடந்த பொதுக்கூட்டங்களில்தான் செவிமடுத்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பறிபோன பொதுக்கூட்ட திடல்களை பற்றி தனியாக ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கே இந்து முன்னணி கூட்டமும் நடக்கும். அடுத்த வாரமே ஆராதனைப் பெருவிழாவும் நடக்கும். காளிமுத்து வந்து பேசுகிறார் என்றால் அடுத்த வாரமே துரைமுருகன் வருவார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக தொண்டர்களின் –- ரசிகர்களின் என்டெர்டெயின்மெண்டுக்கு கட்சிகள் நல்ல தீனி போட்டு வந்தன.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சை முதன்முதலாக இங்குதான் கேட்டேன். அனேகமாக 2002 ஆக இருக்கலாம். சில நாட்கள் முன்புதான் நாகர்கோயிலில் இருந்த அவரது பாரம்பரிய வீட்டை ஆக்கிரமிப்பு என்றுகூறி அதிமுக அரசு இடித்துத் தள்ளியிருந்தது. அன்றைக்கு நாஞ்சில், மேடையில் நடத்திக் காட்டியது ஒரு துன்பவியல் நாடகத்தின் உருக்கமான காட்சிகள். கருப்புத்துண்டை திடீரென்று இழுத்துப் பிடித்து வாள் மாதிரி உயரத் தூக்கிக் காட்டுவார். சட்டென்று அதே துண்டையெடுத்து வாய்பொத்தி கதறி கதறி அழுவார். வைகோவின் டிரேட்மார்க்கான ‘கிரேக்கத்திலே கலிங்கத்திலே’ பேச்சை அப்படியே இமிடேட் செய்தார். சங்கத்தமிழ் தண்ணி பட்ட பாடு. மாற்றுக் கட்சியின் எந்தத் தலைவருக்குமே மரியாதையில்லை. ‘அவன், அவள்’தான். அவருடைய பேச்சை முதன்முதலாக கேட்டதுமே தோன்றியது. “இவரிடம் சரக்கு சுத்தமாக இல்லை. ஆனால் கேட்பவர்களை கவரக்கூடிய ஈர்ப்பு இருக்கிறது”.

பின்னர் சில முறை மதிமுக தலைமையகமான தாயகத்தில் சந்தித்திருக்கிறேன். “இவங்களுக்கு டீ கொண்டாந்து கொடுப்பா” என்பதைகூட மேடையில் பேசும் பாவத்தில் உணர்ச்சிபூர்வமாகதான் சொல்லுவார்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் நடந்தபோது வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றிருந்தோம். வைகோ வீட்டுக்குள் ஓய்வில் இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சம்பத்தான் உபசரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச முயன்றபோது, “சாயங்காலம் சங்கரன்கோயில் பஸ் ஸ்டேண்ட் கிட்டே பேசறேன். அங்கே வந்துருப்பா” என்றார்.

பஸ்ஸ்டேண்ட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நல்ல கூட்டம். உணர்ச்சிபூர்வமாக நெசவாளர்களின் துயரை பண்டைய கிரேக்கக் காலத்திலிருந்தே அடுக்கிக்கொண்டு வருகிறார். நெசவாளர்கள் நிறைந்த சங்கரன்கோயிலில் நன்கு எடுப்பட்ட பேச்சு அது. அப்போது திடீரென்று திமுக கொடி கட்டிய ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக போகிறது. மைக்கில் ‘சங்கரன்கோயில் பஸ் நிலையம் அருகே பிரச்சார பீரங்கி குஷ்பு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்’ என்று ஆட்டோவில் கட்டப்பட்ட ஹாரனில் அறிவிப்பு. கூட்டம் சலசலத்தது.

பேசிக்கொண்டிருந்த நாஞ்சில் அப்படியே பேச்சை நிறுத்துகிறார். கூட்டத்தைப் பார்க்கிறார். “எவனெல்லாம் அவளைப் பார்க்கணும்னு நெனைக்கிறீயோ, அத்தனை பேரும் அப்படியே போயிடு. இங்கே உட்காராதே. எனக்கு அருவருப்பா இருக்கு”. பாதி கூட்டம் அப்படியே அம்பேல்.

“மேக்கப் போட்ட ஒரு நடிகை வார்றான்னா, அப்படியே போறீங்களேய்யா. ஒண்ணரை லட்சம் பேரு செத்திருக்கான். இன்னும் நீ சினிமா பார்த்துட்டு, வடநாட்டு நடிகைகளை வாயைப் பிளந்து ரசிச்சிக்கிட்டு இருக்கே. இந்த நாடு உருப்படுமா. தமிழினம் வாழுமா. நமக்கெல்லாம் எதுக்குய்யா கொள்கை, புடலங்காய். பேசாம நாமள்லாம் அந்த நடிகை நடத்துற கட்சியிலேயே போயி சேர்ந்துடலாம்”

கொஞ்ச நாட்களிலேயே சம்பத், அதிமுகவுக்கு போய்விட்டார்.

18 மே, 2015

அம்மா ரசிகர் மன்றம்!

தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தபோது அவருக்கு ரசிகர் மன்றம் இருந்ததோ என்னமோ.

அந்த குறை நீங்க இப்போது பத்திரிகையாளர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. ‘பொழைப்பு’ காரணமாக ஐடி கார்டு இல்லாமல், விசிட்டிங் கார்டு மட்டும் வைத்திருப்பவர்கள் செய்வதை புரிந்துக் கொள்ள முடிகிறது. மற்றவர்கள்?

கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக்கொண்டு கல்லடிப்பது கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கிறது. எனினும், எவ்வளவு நாளைக்குதான் ‘நடுநிலை’ நாயகர்களை சகித்துக்கொண்டிருக்க முடியும். தங்களுடைய சார்பை வெளிப்படையாக முன்வைத்துவிட்டு எழுதும் பத்திரிகையாளர்கள் ‘அவன் திமுகவாச்சே?’, ‘அவன் அதிமுகவாச்சே?’, ‘அவன் கம்யூனிஸ்ட் ஆச்சே?’, ‘அவன் ஆர்.எஸ்.எஸ் ஆச்சே?’ என்று ஆட்டையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ‘நடுநிலை’ போர்வை உடுத்தியவர்களை ஒப்பீனியன் மேக்கர்களாக ஒரு சிலராவது நம்புகிறார்கள்.

மிக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மே 11 அன்று காலையில் ‘ஜெ. விடுதலை’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டதில் தொடங்கி, அடுத்தடுத்து குமாரசாமியின் தீர்ப்பை நியாயப்படுத்தும் சில கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தார். நீதியரசரின் உலகப் புகழ்பெற்ற ‘கணக்கு மிஸ்டேக்’ வெளிவரும் வரை இது தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஒரு பத்திரிகையாளர் மிக முக்கியமான தீர்ப்பு வரும்போது அது தொடர்பான பதிவுகளையும், தன்னுடைய சொந்த கருத்துகளையும் பதிவது இயல்பானதுதான்.

ஆனால்-

ஆர்வம் தாங்காமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று அவர் என்ன ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் என்று தேடிப்பார்த்தேன். மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை விமர்சனம் செய்த ஒருவரின் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்ததோடு கடமையை முடித்துக் கொண்டுவிட்டார். அன்றைய அவருடைய மற்ற இரண்டு ஸ்டேட்டஸ்களில் ஒன்று கூகிளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறது. சி.பி.எஸ்.ஈ பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் தமிழை வாசிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை பற்றி மற்றொரு ஸ்டேட்டஸ். அவ்வளவுதான்.

இன்னொரு மூத்த பத்திரிகையாளர். பெண் பத்திரிகையாளர் ஒருவர் குமாரசாமியின் தீர்ப்பை விமர்சிப்பவர்களை நோக்கி பார் கவுன்சில் மிரட்டியிருந்த செய்தியை அப்படியே எடுத்துப் போட்டிருந்தார். அங்கே கமெண்டில் போய் நம் மூத்தப் பத்திரிகையாளர் கேட்கிறார். “ஸ்டாலினின் ஊழல் கதையை உங்கள் பத்திரிகையில் போட்டதின் விளைவா? அப்படியே முரசொலி எழுத்தாளர் ஆகிவிட்டீர்களா?”. அவ்வளவுதான். பிரச்சினையை பேசுவதைவிட்டு பெண் பத்திரிகையாளர் தன் நடுநிலைமையை அந்த மூத்தப் பத்திரிகையாளருக்கு நிரூபிக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று.

இன்னொரு இளம் பத்திரிகையாளர், நண்பர்தான். தீர்ப்பு வந்த குஷியில் வரிசையாக அம்மா புகழ் மேளா. கமெண்டில் போய் சண்டை போட்டு நீதி கேட்க ஆரம்பித்தேன். மறுநாள் கணக்கு குளறுபடி விவகாரம் வந்தபிறகுதான் அவர் மீண்டும் நடுநிலை பாதைக்கு வரமுடிந்தது.

ஒரு மாதமிருமுறை பத்திரிகையின் போஸ்டர் வாசகம் “தீயசக்திகளை வென்ற தெய்வசக்தி”.

ஒரு வாரப்பத்திரிகையின் தலையங்கம் பார்த்தேன். அதிமுக தலைமைக்கழகத்தின் அறிக்கை மாதிரி இருக்கிறது.

‘ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல. மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும்’ என்று ஒரு நாளிதழ் கட்டுரை ஜனநாயகம் பேசுகிறது. பர்சனலாக, இது எனக்கு ஏற்புடைய கருத்துதான் என்றாலும்கூட அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் எல்லாம் எதற்கு இருக்கிறது. கோழி திருடியவனையும், பிக்பாக்கெட் அடித்தவனையும் விசாரிக்க மட்டும்தானா என்கிற அடிப்படைக் கேள்வியும் எழுகிறது.

அந்த நாளிதழ் கட்டுரையின் தொடக்கம் விசித்திரமானது. “எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று.” திருச்செந்தூரில் அம்மாவுக்காக ராஜினாமா செய்வேன் என்று அனிதாராதாகிருஷ்ணனே கூட ‘பூடகமாக’தான் சொன்னார். இந்த கட்டுரை அவ்வளவு வெளிப்படையானது.

அதே கட்டுரை ஸ்ரீமான் நரேந்திர மோதி அவர்கள் பதவியேற்ற ஓராண்டிலேயே இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக ‘தகுதி’ பெற்றிருக்கிறது என்று இன்னொரு மாங்காயும் அடிக்கிறது. தமிழக சட்டமன்றம் அத்தகைய மாண்பினை பெறாமல் போனதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது. கட்டுரையின் நடுநிலை தவறிவிடக்கூடாது என்று முதல்வரும், அரசாங்கமும், ஆளுங்கட்சியும் உறைநிலையில் இருக்கிறார்கள் என்று தீர்க்கமாக விமர்சிக்கப்படுகிறது. நன்கு கவனிக்கவும். புரட்சித்தலைவி, எதிர்க்கட்சிகளின் பொய்வழக்கால் இதெல்லாம் முடங்கிப் போயிருக்கிறது. அவர் வந்துவிட்டால் சரியாகிவிடும் என்பதை நாம் between the linesல் தான் வாசித்தாக வேண்டும். ஏனெனில் கட்டுரையாளர் ஏற்கனவே ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து இறங்கி விட்டதால்தான் (அவராகவே இறங்கினார் என்பதை போன்ற தொனியில்) எல்லாம் முடங்கிவிட்டது என்று தெளிவாகவே எழுதுகிறார்.

சட்டமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகளுக்கு போதிக்கும் அந்த கட்டுரையாளர், சபை உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் 110 விதியின் கீழ் 110 அறிவிப்புகளையாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சமர்ப்பித்திருப்பார் என்பதை அறிவாரா? மாண்புமிகு சபாநாயகர் தனபால் அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நடத்துகிறார் என்பதை டிவியிலாவது பார்த்திருப்பாரா?

மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கொடுத்திருக்கும் தீர்ப்பிலேயே கூட்டல் தப்பாக இருக்கிறது. அதைப்பற்றி எந்த கவலையுமில்லாத கட்டுரையாளர் எதிர்க்கட்சிகளை வர்ணிக்க கீழ்க்கண்ட சில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

  • விஜயகாந்த் - செயல்படா எதிர்க்கட்சித் தலைவர் (முன்பு புரட்சித்தலைவி நரசிம்மராவை செயல்படா பிரதமர் என்று விமர்சித்தது நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)
  • திமுக – பெயருக்கு போராட்டம் நடத்தும் / போராட மறந்துவிட்ட கட்சி
  • காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள், பாஜக – அறிக்கை அரசியல்; பாவனை அரசியல்; உள்ளேன் ஐயா அரசியல்
  • ஜெயலலிதா விடுதலைக்குப் பின் மேல் முறையீடுக்காக கர்நாடகத்துக்கு ‘காவடி தூக்குவது’ அரசியல் அவலம்
  • ஜெயலலிதா இல்லாத இடத்தில் அரசியல் கட்சிகள் கம்பு சுற்ற ஆசைப்படுகின்றன
  • ஜெயலலிதா வழக்கையே அரசியல் கட்சிகள் கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது
- ஜெயலலிதா என்பதற்கு பதில் டாக்டர் புரட்சித்தலைவி என்று குறிப்பிடாதது ஒன்று மட்டும்தான் குறை. இதெல்லாம் நாஞ்சில் சம்பத் ஜெயாடிவியில் பேசியவை அல்ல. ஒரு ‘நடுநிலை’ நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள்.

இப்படியாகதான் பெரும்பாலான பத்திரிகைகயாளர்கள் நமது எம்.ஜி.ஆர் நிருபர்களாகவும், ஜெயா டிவி செய்தியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

தோழர்களே, புரட்சித்தலைவி பேரவையில் சேரும் உரிமை நம்மில் ஒவ்வொருவருக்குமே உண்டு. ஆனால் அந்த பணிகளை அங்கு சேராமலேயே பசுத்தோல் போர்த்திக்கொண்டு மக்கள் மத்தியில் செய்வது அநியாயம். பாவம், மக்களை அரசியல்வாதிகளில் தொடங்கி ஆட்டோகாரர் ஏற்கனவே ஏமாற்றி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் நட்டநடு சென்டர் மீடியா பர்சனாலிட்டிகளும் சேரவேண்டுமா?

11 மே, 2015

தீர்ப்பு யாருக்கு சாதகம்?

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

ஜெ, விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது (திமுக தலைவருக்கும் அப்படிதான் இருக்குமென்று யூகிக்கிறேன்).

இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலை இன்று நிச்சயமாக இல்லை. பலகீனமான நீதித்துறை என்று ஜெ.வுக்கு தண்டனை அளித்தபோது நாம் விமர்சித்தபோது நம்மை திட்டித் தீர்த்தவர்கள், இன்று அதை ஒப்புக் கொள்வார்கள். பதினெட்டு ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கு செல்லுமேயானால் இறுதித் தீர்ப்பினை பெற இன்னும் நூற்றி எண்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.

இந்தியாவில் ‘நக்சல்பாரிகள்’ உருவாவதற்கான அத்தனை நியாயங்களையும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே உருவாக்கி வைத்திருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் வந்திருக்கும் குமாரசாமியின் தீர்ப்பு, தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னமாதிரியான சாதகபாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பார்ப்போம்.

இது, அதிமுகவுக்கு ஆதரவான தீர்ப்பாக அதிமுகவின் அடிமைகள் (தொண்டர்கள் என்கிற சொல், இக்கட்சியைப் பொறுத்தவரை சரியான பொருளில் வராது) எண்ணலாம். மாறாக, இத்தீர்ப்பால் அதிக பலன்களை அறுவடை செய்ய இருப்பது திமுகவே என்று தோன்றுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு எதிராக பிரயோகித்த ஆயுதம் ஊழல். திமுக அதனாலேயே படுதோல்வி அடைந்து, அக்கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்கள் நிலஅபகரிப்பு / சொத்துக்குவிப்பு வழக்குகளை மாவட்டம் தோறும் சந்தித்து வருகிறார்கள். தேசிய அளவில் 2ஜி உள்ளிட்ட கத்திகளும் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டு அவ்வப்போது அச்சமூட்டுகிறது. இந்த வழக்குகளோடு தேர்தலில் மக்களை சந்திக்க நேரவேண்டிய சங்கடம், குமாரசாமியால் அடியோடு துடைக்கப்பட்டிருக்கிறது.

அம்மா ‘உள்ளே’ எனும் நிலை இருந்தால், 91ல் ஏற்பட்டிருந்த அனுதாப அலையை போன்ற சுனாமியை எதிர்கொண்டாக வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு இருந்திருக்கும். “ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பொம்பளையை கருணாநிதி உள்ளே தள்ளியிருக்கக் கூடாது” என்கிற தமிழர்களின் இரக்க மனோபாவத்தை வெல்ல திமுக ஏழு கடல், ஏழு மலையை கடக்கவேண்டிய சிரமத்தை அடைந்திருக்கும். இப்போது அம்மாதிரி தொல்லைகள் இல்லாமல், கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் அவலங்கள், ஊழல் முறைகேடுகள், வளர்ச்சியற்று ஸ்தம்பித்துவிட்ட நிர்வாகம், விலைவாசி உயர்வு என்றெல்லாம் மக்களுக்கு ‘பிடித்தமான’ சப்ஜெக்ட்டுகளை பிரச்சாரத்தில் பேசக்கூடிய சுதந்திரம் அக்கட்சியினருக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஸ்டாலின் சலங்கை கட்டி ஆடுவார். இத்தீர்ப்பு வெளிவந்திருக்கும் சூழலில் ருத்திரத் தாண்டவம் ஆடக்கூடிய வாய்ப்பு அவருக்கு.

அதிமுகவைப் பொறுத்தவரை அம்மா வெளியே வந்துவிட்டார் என்பதுதான் லாபம். அம்மா, நீதியை வென்று வெளியே வந்தார் என்று அவர்களால் மக்களுக்கு நிரூபிக்க முடியாது. “கோர்ட்டில் பணம் விளையாடிடிச்சி...” என்று பேசும் மக்களிடம், தங்களை நிரூபிக்கவே அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு தாவூ தீரும்.

திமுகவுக்கு எதிராக மாறிக்கொண்டிருந்த தமிழ் நடுத்தர வர்க்கத்து மனோபாவம், இந்த தீர்ப்பால் திடீர் தடை பெற்றிருப்பதுதான் அதிமுகவுக்கு நிஜமான இழப்பு. குமாரசாமியின் தீர்ப்பினை, ஊழலற்ற இந்தியா கனவில் மிதக்கும் ‘ஜெய் ஹோ’ தலைமுறை ரசிக்கப் போவதில்லை. கடந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இந்த மாபெரும் கூட்டம், இரட்டை இலைக்கு வாக்கு இயந்திர பொத்தான்களை சரமாரியாக அமுக்கித் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமாக இந்த சூழலில் அமோக அறுவடை செய்யவேண்டியது, சட்டமன்ற எதிர்க்கட்சியான தேமுதிகதான்.

ஆனால்-

கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் வெல்ல முடிந்தது என்கிற பொதுக்கருத்தை தவறென்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. அதற்காக தனியாக போட்டியிட்டு, ‘கெத்து’ காட்ட நினைத்தால், நிலைமை என்னாகும் என்று விஜயகாந்துக்கும் தெரியும், பிரேமலதாவுக்கும் தெரியும்.

பாஜக கூட்டணியில் இன்னமும் தேமுதிக நீடிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்த கூட்டணி வலுவானது அல்ல. அதற்காக திமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டால், எதிர்காலத்தில் எப்போதுமே முதல்வர் கனவு காணமுடியாது. அப்படியொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் இன்றைய பாமகவுக்கான இடம்தான் எதிர்காலத்தில் தேமுதிகவுக்கும்.

எப்படிப் பார்த்தாலும் இந்த தீர்ப்பை சாதகமாகவோ/பாதகமாகவோ எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையில் தேமுதிக இல்லை. அரசியல் ஆற்றில் அதுவாக அடித்துச் செல்லப்படும் தேமுதிக எதைப் பிடித்து கரையேறும் என்பது சஸ்பென்ஸ். ஒருவேளை கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி காட்டாமல் தனியே நின்றிருந்தால், இன்றைய நிலைமை தேமுதிகவுக்கு அட்டகாசமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கும்.

காங்கிரஸைப் பொறுத்தவரை இம்முறையும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை சொல்ல வித்வான் வே.லட்சுமணன் தேவையில்லை. திமுக அல்லது அதிமுக என்று இரண்டு பிராதனக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றோடு கூட்டணி சேர முடிந்தாலே, அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்யக்கூடிய உலகசாதனையாக இருக்கும்.

அகண்ட பாரத கொள்கை கொண்ட பாஜகவால், இன்னமும் அகண்ட பாஜக ஆவதற்கே முட்டுக்கட்டையாக நிற்பது தமிழகம்.

ஜெயலலிதா விடுதலை ஆனது மோடியின் கைங்கர்யம் என்று சாதாரண மக்கள் நம்புகிறார்கள். அருண் ஜெட்லி, போயஸ் கார்டனுக்கு வந்து சொத்துக்குவிப்பு குற்றவாளியாக ஜாமீனில் இருந்த ஜெயலலிதாவை ‘மரியாதை நிமித்தம்’ சந்தித்துவிட்டுச் சென்றதிலிருந்து மாறிய காட்சிகளை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்கு பிரதியுபகாரமாக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கூடுதல் இடம் கொடுத்து தன் கூட்டணியில் அதிமுக சேர்த்துக் கொள்ளும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜக இணையும் பட்சத்தில், 96ல் நரசிம்மராவ் தமிழகத்தில் பெற்ற படுதோல்வியையே மோடி பெறவேண்டியிருக்கும். இங்கே ஓரளவுக்கு துளிர்த்திருக்கும் பாஜகவை ஒட்டுமொத்தமாக பட்டு போகவைக்கும். இது தமிழக அளவிலான அக்கட்சியின் தலைவர்களுக்கு தெரிகிறது என்றாலும், அதை கட்சி மேலிடத்தலைவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாமக உள்ளிட்ட குட்டிக் கட்சிகளை இந்த ஆட்டத்தில் சேர்க்க வேண்டியதில்லை. எது எப்படி நடந்தாலும் இந்த கட்சிகளுக்கு சாதக/பாதகம் என்பது கடைசி நேரத்தில் எந்த கட்சியோடு போய் ஒட்டிக் கொள்கிறார்கள் என்பதில் மட்டும்தான் இருக்கிறது.

மக்கள் முதல்வராக இருந்து மாநில முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு முன் இப்போது இருக்கும் பெரிய சவால், தான் பெற்றிருக்கும் இந்த தீர்ப்பு நேர்மையான முறையில் பெற்றது என்பதை நிரூபிப்பதுதான். இதற்குப் பிறகே மற்ற விஷயங்களை பிரச்சாரம் செய்து, அதிமுகவின் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆயினும், இது சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கடைசியாக-

குமாரசாமி கொடுத்திருக்கும் ‘நேர்மையான’ தீர்ப்பின் காரணமாக நிஜமாகவே விடுதலை ஆகியிருப்பவர் நிரந்தர மக்கள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்தான். முதல்வராக கத்தி மேல் பேலன்ஸ் செய்து நடந்த அவருடைய அரசியல் எதிர்காலம் படு இருட்டாக இருந்தது. இப்போது கண்ணுக்குப் பழகிய இருட்டாக மாறியிருக்கிறது.

19 மார்ச், 2015

கணக்குலே ஃபெயிலு!

+2வில் கணக்கில் ஃபெயிலு. அட்டெம்ப்ட்டும் முன்பைவிட படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்தது.

எனவே, நமக்கு ‘கணக்கு’ பண்ணத் தெரியாது.

ஆனால்- பி.காம்., எம்.காம்., சி.ஏ., மாதிரி பெரிய கணக்கு படிப்பெல்லாம் படித்தவர்கள்தான் சி.ஏ.ஜி.யில் வேலை செய்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுவும் தப்பு போலிருக்கிறது. அங்கேயும் நம்மைபோல ‘கணக்குப் புள்ளைகள்’தான் இருக்கிறார்களோ என்னமோ?

‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய சி.ஏ.ஜி. ரிப்போர்ட் குறிப்பிட்ட வருமான வரி இழப்பு அரசுக்கு என்ன?

முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராசா அவர்களது காலத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இராணுவத்திடம் இருந்த ஸ்பெக்ட்ரம் பெறப்பட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.

வினோத்ராய் அவர்களது அறிக்கைப்படி…

52.7 MHz அளவுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் 12,385 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், வினோத்ராயின் மதிப்பீட்டின் படி ஒரு MHz ஸ்பெக்ட்ரம் 3,350 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு விற்கப்பட்டிருந்தால் வரக்கூடிய தொகைதான் 1.76 லட்சம் கோடி.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாயை இப்படிதான் தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போனார் என்று ஊடகங்களும், அடிவருடிகளும் தொடர்பிரச்சாரம் செய்தார்கள்.

தற்போது பாஜகவின் ராமராஜ்ஜியத்தில் 380.75 MHz அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை ஆகியிருக்கிறது. சிஏஜியின் மதிப்பீட்டின் படி விற்கப்பட்டிருக்க வேண்டுமானால் 380.75 x 3350 என்று கணக்கு போட்டு 12.75 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், 1.1 லட்சம் கோடிக்குதான் விற்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு MHz ஸ்பெக்ட்ரம் ரூ.267.51 கோடி ரூபாய்க்குதான் விற்பனை ஆகியிருக்கிறது.

இதைதான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். சிஏஜியின் உத்தேச மதிப்பீடு என்பது ‘கோழி மோசடி’ கணக்குதான்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பதினொன்றரை லட்சm கோடி வருமான இழப்பு என்று சிஏஜி அறிக்கை தரப்போவதில்லை.

ஊடகங்களும் பத்து லட்சம் கோடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று கட்டுரைகள் வெளியிடப் போவதில்லை.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஊழல் செய்துவிட்டார் என்று யாரும் டிவிக்களில் அனலைஸ் செய்யப் போவதில்லை. அவர் திகாருக்கும் திக்விஜயம் செய்ய வேண்டியதில்லை.

அடிவருடிகளோ வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் என்ன ஸ்கோர் என்று நெட்டை நொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அ.ராசாவுக்கு எதிரான அநியாயத்தை ‘பார்ப்பன மோசடி’ என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை ‘சாதிவெறியன்’ என்று முத்திரை குத்துகிறார்கள். சாதியை எதிர்ப்பவர்களும் சாதிவெறியர்கள் என்று விளங்கிக் கொள்ளப்படும் வித்தியாசமான டிக்‌ஷனரிகள் இந்தியாவில் மட்டுமே அச்சாகின்றன.

15 டிசம்பர், 2014

ஒடுக்கப்படுவது யார்?

பொதுவாக ஜெயமோகனை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.

ஏனெனில் அவர் பத்து பொய்களை எழுதும்போது இடையிடையே ஓரிரண்டு உண்மைகளை லாவகமாக செருகிவிடுவார். சாருநிவேதிதா அப்படியல்ல. சொன்னால் முழுக்க உண்மையை சொல்வார். அல்லது நூறு சதவிகிதம் பொய்யை மட்டுமே சொல்வார். எனவேதான் சாருவை சுலபமாக மறுத்துவிட முடியும். ஜெயமோகனை அவ்வாறு மறுக்க அச்சப்படும் குழப்பம் தோன்றும்.

உதாரணத்துக்கு, ‘அண்ணாதுரை போன்றவர்கள் வீட்டில் கூட தெலுங்கு பேசினார்கள்’ என்று பாரதிதாசன் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் என்று ஒரு போடு போட்டுவிடுவார். எந்த கட்டுரையில் என்று அவருக்கு எதிர்கருத்து சொல்பவர்கள் தேடித்தேடி தாவூ தீர்ந்துவிடுவார்கள். அந்த கட்டுரை எதுவென்று அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே வாழ்க்கையே முடிந்துவிடும். இதுபோன்ற அப்பட்டமான அவதூறுகளை முன்வைக்கும்போது தரவுகளை சரியாக வைக்கவேண்டும் என்பது ஒரு விமர்சகனுக்கான குறைந்தபட்ச அளவுகோல். ஜெயமோகனை ஒரு சமூகவிமர்சன அறிவுஜீவியாக, ‘நிஜமான’ அறிவுஜீவிகள் தமிழ்ச்சூழலில் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால், அவரிடம் இந்த அளவுகோல்களை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

யாரேனும் மிகச்சரியாக ஜெயமோகனை துணிச்சலோடு சரியான தரவுகளோடு மறுக்கும்போதும் விஷ்ணுபுரமே அலறும். “பார்த்தீங்களா அநியாயத்தை. ஆசான் ஓபனா பேசுன உண்மையை, மனசாட்சியே இல்லாம மறுக்கிறாங்க” என்கிற ஒரே ஒரு உண்மையைத் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடும்.

அப்படி ஆசானை ‘சுருக்’கென்று குத்தக்கூடிய எதிர்வினைகளை, ஆசானும் அசால்டாக, ‘பொருட்படுத்தத்தக்கதல்ல’ என்கிற ஒற்றை வார்த்தையில் கடந்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆசானின் லேட்டஸ்ட் பார்ப்பனச் சார்பு கட்டுரைக்கு ராஜன்குறையின் எதிர்வினையை அவர் கடந்துச் செல்லும் அழகே அழகு. ராஜன்குறை பொருட்படுத்தத்தக்க வாசகர் அல்ல என்றால் வேறு யார் ஆசானுக்கு பொருட்படுத்தத் தக்கவர்கள். அவருக்கு நித்தமும் ‘ஜால்ரா’ தட்டும் ரசிகக்குஞ்சு கூட்டமா?

பத்ரி சேஷாத்ரியின் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ கட்டுரையிலிருந்து நான்கு முக்கியமான கருத்தாங்களை ஆசான் தொகுத்து மதிப்பீடு செய்கிறார். பத்ரி, இந்த அடிப்படையில்தான் கட்டுரை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், ஆசான் இப்படிதான் அதை பார்க்க விரும்புகிறார்.

ஒன்று : தமிழ் பிராமணர்கள் அதிகாரத்தில் இருந்து மெல்ல மெல்ல விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

தமிழ் பார்ப்பனர்கள் நேரடி அரசியல் அதிகாரத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் படித்தவர்களாக பார்ப்பனர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள் என்பதால், அப்போராட்டங்களை அவர்கள்தான் இங்கே தலைமை தாங்கி நடத்த வேண்டிய நிலை இருந்தது. அவ்வகையில் உருவான தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள்.

ஆனால், அரசர்கள் காலத்திலிருந்தே அதிகாரத்தில் இருக்கும் பொம்மையை ஆட்டுவிக்கும் வேலையை பின்னிருந்து செய்வதுதான் அவர்களது விருப்பமாக இருந்திருக்கிறது. எனவே, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதிகாரத்தை எது உறுதிசெய்கிறதோ, அந்த தளத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றுகிறார்கள். மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இன்றைய சூழலில் நிதி தொடர்பான விஷயங்களே அதிகாரத்தை ஆட்சி செய்கிறது. எனவேதான் பார்ப்பனர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பதைக் காட்டிலும், சி.ஏ., படிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை உலகளவில் நிதியின் விதியை தீர்மானிக்கும் துறையாக இருப்பதால் அந்த துறையை குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள்.

தேசியளவிலான இடஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் கூடுதலான இடப்பங்கீட்டினை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தரும் வழக்கம் தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலமாக இருக்கிறது. எனவே முன்னெப்போதும் பார்ப்பனர்கள் சந்தித்திராத சவாலான சூழலை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தளங்களில் இப்போது சந்திக்கிறார்கள். தமிழகம் நூற்றாண்டாக பேசிவரும் சமூகநீதி ஓரளவுக்கு வெற்றிகளை குவித்திருப்பதையே பத்ரியின் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்கிற குணாவின் பார்வைக்கு மிகச்சரியான நேர் எதிர்வினையை பத்ரி எழுதியிருக்கிறார்.

இரண்டு : தமிழ் பிராமணர்கள் சமூகத் தளத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்

பார்ப்பனர்கள் மட்டுமல்ல. சாதியை சுமப்பவர்கள், அதை பெருமையாக பேசுபவர்கள் அனைவருமே அவமதிக்கதான் படுவார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் சமூகத்தளத்தில் சந்தித்திராத அவமானங்களையும், அடக்குமுறைகளையுமா பார்ப்பனர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்?

தங்கள் சாதி அடையாளம், தங்களது ஆளுமையை தாண்டி துருத்திக்கொண்டு தெரியுமளவில் நடந்துக் கொள்பவர்கள் – பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் பாரபட்சமின்றி – இத்தகையை அவமானத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

இன்றைய சூழலில் சாதி என்பது சமூக அடையாளமாக ஒரு மனிதனுக்கு தெருவில் நடக்கும்போது எவ்விதமான பங்களிப்பையும் செய்ய இயலாத சூழலில் (ஆனால் அது அரசியல் அடையாளமாக மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் உதவுகிறது. இது இயல்பானதுதான்… எஸ்.வி.சேகர் போன்றோர் பொருளாதார நிலையில் தாழ்ந்திருக்கும் பார்ப்பனர்களுக்கு இப்படியான அரசியல் அடையாளம் வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறார்கள், அவ்வகையில் வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம்) அதை முதுகில் சுமக்க நினைப்பது அறிவுடைமையான செயலே அல்ல.

அலுவலகச் சூழலிலோ அல்லது பல்வேறு தரப்பினர் பங்குகொள்ளும் தளங்களிலோ ‘நூல்’ மட்டுமே ஒரு குறிப்பிட்ட க்ரூப்பை இணைக்கிறது எனும்போது தனித்து விடப்படுபவர்கள் இத்தகைய எதிர்வினைகளை மேற்கொள்வது தவிர்க்க இயலாதது.

இதே சமூகத்தளத்தில் குழுவாக இணையும் பார்ப்பனர்கள் சமதர்மமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்? மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் நாசுக்கான மேனரிஸத்தை பார்ப்பனர்களிடம் உணரமுடியாதவர்களுக்கு நுண்ணுனர்வே இல்லையென்றுதான் பொருள்.

மூன்று : தமிழ் பிராமணர்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

வடிகட்டிய பொய். வருடாவருடம் நவராத்திரிக்கு கொலு வைப்பதை யார் தடுத்தார்கள்? ஹோமம், கீமம் என்று கோயிலுக்கு கோயில் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை எந்த போலிஸ் ஸ்டேஷனிலாவது தடை செய்திருக்கிறார்களா?

பார்ப்பனர்கள் அவர்களாகதான் பஞ்சகச்சத்தையும், மடிசாரையும் தங்கள் வசதி சார்ந்து துறந்தார்களே தவிர, டிராஃபிக் ராமசாமி மாதிரி யாரோ போய் இந்த எழவு பண்பாட்டையெல்லாம் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு போய் தடையாணை பெறவில்லை.

‘குடுமி அறுக்கறான்’ ‘குடுமி அறுக்கறான்’ என்று இவர்களாக சும்மா கூப்பாடுதான் போட்டார்களே தவிர, அப்படியொரு சம்பவம் நடந்ததாக எங்கேயும் எஃப்.ஐ.ஆர். கூட போட்டதில்லை. இவர்களே குடுமியை சிரைத்து ரஜினி ஹேர்ஸ்டைலுக்கு மாறிவிட்டு, “அய்யய்யோ… எங்களை குடுமி வெக்க விடலை” என்று வேஷம் போடுவது யாரை ஏமாற்ற?

மூன்று : இந்நிலை காரணமாகதான் தமிழ்பிராமணர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

வெளியேறி போய் துபாயில் ஒட்டகம் கழுவுகிறார்களா. கக்கூஸ் கழுவும் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்கிறார்களா. தொழிற்நிலையங்களில் இரும்படிக்கிறார்களா.

வற்றிய குளத்திலிருந்து வளமான குளத்துக்கு இடம்பெயரும் பறவைகளின் வேலையைதான் பார்ப்பனர்கள் பார்க்கிறார்கள். விவசாயத்தில் வருமானமில்லை என்றபோது, அந்தகாலத்தில் மன்னர்களிடம் தானமாக பெற்ற நிலங்களை நல்ல விலைக்கு விற்றார்கள். மயிலாப்பூருக்கும், நங்கநல்லூருக்கும் வந்து செட்டில் ஆனார்கள். ஆடிட்டராக, மருத்துவராக, என்ஜினியராக தங்கள் வாரிசுகளை தரமுயர்த்தினார்கள்.

வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலத்தை விலைக்கு விற்ற வன்னியனெல்லாம் இன்று சென்னைக்கு வந்து கல் உடைத்துக் கொண்டிருக்கிறான், கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பார்ப்பனர்களின் இடப்பெயர்வு என்பது அவர்களது வாழ்க்கையினை மேலும் செழிப்பு ஆக்கிக்கொள்ளதானே தவிர. மற்றவர்கள் அவர்களை விரட்டியடிக்கிறார்கள் என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அக்ரஹாரங்கள் இன்று காலியாகிவிட்டது என்றால், வசதியான அப்பார்ட்மெண்டுகளுக்கு அவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஓக்கே. ஆசானுக்கு வருவோம்.

‘முற்போக்கு பிராமணர்கள்’ படையாக கிளம்பி பார்ப்பனீயத்தை எதிர்க்கும் போக்கு ஆசானை நடுநடுங்க வைக்கிறது. ஏனெனில் இதற்கு ஓர் அண்மைக்கால வரலாறு இருக்கிறது. 1957ல் முதன்முதலாக சென்னை ரிப்பன் கோட்டையில் திமுக கொடியை ஏற்றியதற்கு காரணமாக இருந்தவர்கள் மயிலை, திருவல்லிக்கேணிவாழ் பார்ப்பனர்கள். தமிழகம் முழுக்கவே ஒரு தரப்பு பார்ப்பனர்களிடம் திராவிட இயக்கக் கருத்துகள் பெரும் அதிர்வை உண்டாக்கியது.

தங்களது சனாதன அடையாளங்களை அழித்துவிட்டு ‘தமிழன்’ என்கிற அடையாளத்தில் தங்களை இணைத்துக் கொண்ட முதல் தலைமுறையினர் இவர்கள். பெரியாரின் முற்போக்கு கருத்துகளை ஏற்றுக்கொண்டு தங்கள் வீட்டுப் பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதித்தவர்கள் இவர்கள். கலப்பு மணம் என்றால் தலை வாங்கும் குற்றமல்ல என்று தமிழகத்துக்கு பாடம் போதித்தவர்கள் இவர்கள்.

தேசிய அளவில் அம்பேத்கர், பிராந்திய அளவில் பெரியார் என்று பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தி வந்த சூழலில் மனச்சாட்சி உள்ள பார்ப்பனர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். திராவிட இயக்க ஆதரவாளர்களாகவும், மார்க்சிய சிந்தனை கொண்டவர்களாகவும் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் தங்களை சமூகநோக்கில் இணைத்துக் கொண்டனர்.

ஆசானுக்கு ‘நைட் மேர்’ ஆன திராவிடத்தையும், மார்க்சியத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதாலேயே அவர்கள் ஆசானுக்கு பொருட்படுத்தத்தக்க இயலாதவர்களாக மாறிவிட்டார்கள். என்றைக்காக இருந்தாலும் ‘நீ பார்ப்பான் தானே?’ன்னு சொல்லி அவர்களை துரத்தியடிப்பார்கள். அப்போது வட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறார்.

ஆசான் இந்த விவகாரத்தில் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பது தலித்துகளின் குரலை. ஆசானின் பார்வையில் தலித்துகள் என்றால் காலச்சுவடின் செல்லப் பிள்ளைகள். ஸ்டாலின் ராஜாங்கம், ராஜ்கவுதமன், 2005க்கு முந்தைய ரவிக்குமார் போன்றவர்கள். இல்லையேல் ஆசானின் விஷ்ணுபுரத்தை ஏற்றுக்கொள்ளும் அவரது நண்பர்களான அலெக்ஸ் போன்றவர்கள்.

ஆசான், அப்படியே தன்னுடைய குரலுக்கு எத்தனை தலித்துகள் லைக் போட்டிருக்கிறார்கள், ஷேர் செய்திருக்கிறார்கள் என்பதையும் கணக்கெடுக்கலாம். ஹரன்பிரசன்னா, அராத்து போன்ற தலித்துகளின் ஆதரவுக்குரல் விண்ணையெட்டும் தலித் ஆதரவுக் கோஷத்தோடு ஒலித்திருப்பது அவருக்கு புரியும்.

‘திராவிடத்தை எப்பவுமே நாம மட்டும் திட்டிக்கிட்டிருந்தா மக்கள் நம்பமாட்டாங்க’ என்று பார்ப்பனீயம் ஸ்பெஷலாக சில தலித்களை அப்பாயிண்ட்மெண்ட் செய்திருக்கிறது. அம்மாதிரி ஆட்கள் பத்ரிக்கு ஏதேனும் எதிர்வினை செய்திருக்கிறார்களா என்று ஆசான், இணையத்தில் தேடியிருக்கிறார். பி.ஏ.கிருஷ்ணன், கல்யாணராமன் போன்ற இணைய தலித் போராளிகளிடமே கேட்டிருந்தால், ஸ்டாலின் ராஜாங்கம் போல எத்தனை தலித் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் என்று பெரிய லிஸ்ட்டும், அவர்களுடைய திராவிடர்களை சந்தோஷமாக திட்டும், பெரியாரை அம்பலப்படுத்தும் எதிர்வினைகளுக்குமான லிங்கும் ஆசானுக்கு கிடைத்திருக்கும்.

தமிழக அரசியல் மைய நீரோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என்று அரசியல் கட்சிகளின் வாயிலாக இணைந்திருக்கும் தலித்கள் இதைப் பற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது? அவர்களெல்லாம் காலச்சுவடிலா கட்டுரை எழுதப்போகிறார்கள் அல்லது ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றப் போகிறார்களா. இல்லையேல் ஆசானே என்று விளித்து ஆசானுக்கு மெயில்தான் அனுப்பப் போகிறார்களா?

பார்ப்பனீயம் கருத்தியல்ரீதியாக அவமதித்ததும், அடக்குமுறைக்கு உள்ளாக்கியதும் பார்ப்பனரல்லாத பிற சாதிகளையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் சேர்த்துதான். குறிப்பாக தம் மீது சுமத்தப்பட்ட சாதிய இழிவு நீங்குவதற்காக மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடும் தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் பார்ப்பனீய ஒடுக்குமுறை இயந்திரம் எப்படி நடத்துகிறது என்பதை சேரிகளிலும், குப்பங்களிலும் வாழ்பவர்கள் அறிவார்கள். மதமாற்றம்தான் நாட்டின் பெரிய பிரச்சினை என்று கருதும் ஜெயமோகன்களுக்கு இந்த கோணமெல்லாம் எந்த காலத்திலும் கண்ணுக்கு படவே போவதில்லை.

ஆசான், சமூகப்பிரச்சினையை அணுகுவதெல்லாம் ‘நான்’ கண்ணாடியில்தான்.

‘நான் கேட்டதே இல்லை’ என்பார். சைதாப்பேட்டை மார்க்கெட்டில் மீன் விற்பவர், ஆசானுக்கு போன் செய்தா பேசுவார்?

‘தனிப்பேச்சுகளில் கூட’ என்பார். ஆசானுடைய விஷ்ணுபுர வாசகர் வட்டத்தில் எத்தனை தலித்கள் இருக்கிறார்கள். இவரிடம் வந்து தனிப்பட்ட முறையில் பேசி, பார்ப்பனீயத்தால் தாங்கள் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என்று முறையிட.

கிறிஸ்டோபர் நோலன் எப்படி உலக சினிமா இயக்குனர் இல்லை என்பதை அஜிதன் வாயிலாக ஆசான் கண்டுபிடித்தாரோ, அதைப் போலவே சைதன்யா மூலமாகவே பெரியாரிய ஞானமரபு எப்படி பார்ப்பனர்களை பலியாடு ஆக்குகிறது என்பதையும் பார்வதிபுரத்தில் அமர்ந்தவாறே கண்டுபிடித்துவிட்டார்.

அப்புறம், திராவிட இயக்கத்தின் தோற்றமே வடுகர்களின் கசப்புதான் என்கிற ஆசானின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு முக்கியமானது. ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் கொள்கை விளக்கப் பாடத்தை எழுத ஆசானே இதன் வாயிலாக ஆகப்பெரும் தகுதி உடையவர் ஆகிறார்.

தமிழர் vs வடுகர் என்று நாம் பாட்டுக்கு மடை மாற்றிவிட்டு போனோமானால், பார்ப்பனரை இரு தரப்பும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற இந்த பழைய டெக்னிக் இப்போதெல்லாம் ஒர்க்கவுட் ஆவதில்லை ஆசானே. தமிழ்நாட்டை வெறும் முன்னூறு ஆண்டுகள்தான் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்கு ஆசானிடம் என்ன தரவு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற வடுகமன்னர்களை கூட தமிழர்கள் தமிழராக்கிக் கொண்டார்கள் என்பதற்கான தரவுகள் சினிமாவில் கூட வந்துவிட்டது. நாயக்கர்கள் உருவாக்கிய கோட்டை கொத்தளங்களை, கோயில்களை தமிழ் மன்னர்களுடைய சாதனைகளாகதான் தமிழர்கள் பார்க்கிறார்கள். ஆசான் ப்ளீஸ், ஜியோ பாலிடிக்ஸிலும் நீங்க ஸ்ட்ராங்க் ஆகணும். பிராந்திய மொழிரீதியான பிரிவினை 1956ல் உருவானது. அதற்கு முன்னாடி தென்னிந்தியாவே ‘திராவிடஸ்தான்’தான்.

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் தமிழர் அல்ல என்று போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போவது என்பது பார்ப்பனர்கள் திராவிடத்தை தோற்கடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் தூக்கிப்பிடித்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தமிழர் அல்ல என்கிற வாதத்துக்கு சப்பைக்கட்டுதான். கலைஞரை தமிழர் அல்ல என்றெல்லாம் டைப் செய்வதை, டைப் செய்யப்பட்ட கீபோர்டு கூட நம்பாது எனும்போது, அந்த அரதப்பழசான டெக்னிக்கு பதிலாக புதியதாக ஏதேனும் கண்டுபிடிக்கலாம்.

ஒரே ஒரு கட்டுரையில் ஜெயமோகனுக்குதான் எத்தனை வேஷம்?

தலித்குரலை அவர்தான் ஓங்கி ஒலிக்கிறார். அதே நேரம் பார்ப்பனர்கள் பாவம் என்கிற கரிசனமும் அவருக்குதான் இருக்கிறது. வடுகர் ஆதிக்கத்தை எதிர்க்கும் தனித்தமிழ் தேசியவாதியாக திராவிடத்தின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இப்படியாக திரிசூலம் சிவாஜி மாதிரி த்ரிபிள் ஆக்டிங்கில் ஆசான் அசத்த, அரங்கசாமி மட்டும்தான் விசில் அடிக்கிறார்.

ஜெயமோகனின் வாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அம்சம் இடைநிலை சாதிகள், தலித்கள் மீது செலுத்தக்கூடிய அடக்குமுறை குறித்தது. ஆனால் அதை பேசி சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தலித்களும், அவர்கள் மீது அடக்குமுறை செய்யக்கூடிய இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்களும். இரு தரப்பையும் ஏகபோகமாக கருத்தியல்ரீதியாக அடக்குமுறை செய்யக்கூடிய பார்ப்பனீயமோ அல்லது அந்த பார்ப்பனீயத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் சப்பைக்கட்டு கட்டக்கூடிய ஜெயமோகனோ அல்ல.

பார்ப்பனர்கள் இடையிடையே தலித் ஆதரவு கொடி தூக்கிக் காட்டுவது என்பது, தங்களை சமூக அந்தஸ்துரீதியாக நெருங்கிக் கொண்டிருக்கும் பிற சாதியினரை மட்டுப்படுத்ததானே தவிர, தலித்கள் மீதான அக்கறையால் அல்ல. இம்மாதிரி ஆதரவுக்குரல் எழுப்பும் பார்ப்பனர்களை உற்றுநோக்கினால், அவர்களேதான் பத்ரி ஒலித்திருக்கும் ‘பார்ப்பனர்களை ஒடுக்குகிறார்கள்’ என்கிற புலம்பல்குரலுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.

‘பார்ப்பனர்களும் ஒடுக்கப்படுகிறார்கள், சாதிய இழிவுக்கு உள்ளாகிறார்கள்’ என்று பத்ரி சொல்வதையோ, அதை ஜெயமோகன் endorse செய்வதையோ ஒப்புக்கொள்ள முடியாது. சேரியில் வசிக்கும் ஒரு தலித் சொல்லட்டும். அப்போது திராவிட இயக்கம் தேவையா இல்லையா என்று பேச ஆரம்பிப்போம்.

பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்களையும் பழங்குடியினரையும் கூட இங்கே திராவிடக் கவசம்தான் காக்கிறது என்றுதான் நம்புகிறோம். ஏனெனில் திராவிடக் கருத்தாக்கம் என்பது பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இருவருக்கும் இணைந்தேதான் உருவானது. இந்தியாவின் எந்த மாநிலத்தையும் காட்டி தமிழகத்தில் SC/ST மக்களின் வளர்ச்சி என்பது விரைவாக இருப்பதற்கு அதுவே காரணம்.

எனவேதான் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதோர் என்பதை பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதோர் vs தலித் என்று முக்கோணமாக மாற்றம் செய்யும் முயற்சிகள் நடக்கிறது. பார்ப்பனரல்லாதோரில் தலித்களும், சிறுபான்மையினரும்கூட அடக்கம் என்பதுதான் திராவிடம். அந்த ‘திராவிடம்’ என்கிற சொல்லை அகற்றிவிட்டால், அவாளுக்கு எல்லாமே ஈஸி. ஏற்கனவே பார்ப்பன + தலித் கூட்டணியை சும்மாவாச்சுக்கும் உருவாக்கி, உ.பி.யில் தலித்களை முற்றிலுமாக முடக்கியாயிற்று. அங்கே இனி தலித்கள், பிற்படுத்தப்பட்டோருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் செய்தாயிற்று. அதே நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என்பதுதான் அவர்களது திட்டம். பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களை இந்த திட்டத்தில் இணைத்துக் கொண்டால் இன்னும் கொஞ்சம் சப்தமாக ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷத்தை ஒலிக்கலாம்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருப்பது அவரது ‘திராவிட அலர்ஜி’ மட்டுமேதானே தவிர, அது தலித் ஆதரவுக்குரலோ அல்லது தமிழக சமூக பண்பாட்டு ஆராய்ச்சியோ அல்ல.

3 நவம்பர், 2014

பினாமி ஆட்சி

முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ பட்டம் வழங்கிய ஸ்டாலின், இம்முறை ‘பினாமி ஆட்சி’ என்கிற சொல்லை பிரபலப்படுத்தி வருகிறார். அப்பாவின் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கிறது. வெகுஜன அரசியலில் இதுபோன்ற கவர்ச்சியான word coining ஒரு தலைவருக்கு எப்பவும் அவசியம். ஆனாலும் அதிமுக முன்வைக்கும் ‘மக்களின் முதல்வர்’ கான்செப்ட்தான் டாப்.

* * * * * * *
ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன்’ கடைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே வாசித்த கதைகள்தான் என்றாலும் தொகுப்பாக வாசிக்கும்போது ஷோபாவின் வீச்சு இன்னும் வலிமையாக மூளையை தாக்குகிறது. விடுதலைப்புலிகள் vs சிங்கள ராணுவம்; இருவருக்குமிடையே சாண்ட்விச்சாக மாட்டிக்கொண்ட மக்களின் மனவியல்தான் அவரது ஏரியா.

சோகம் பிழியப்பிழிய ‘துலாபாரம்’ மாதிரி சொல்லவேண்டிய கதைகளை, ‘தெனாலி’ மாதிரி காமெடியாக எழுதுகிறார். உற்றுநோக்கினால், ஷோபாவின் கதைகளுக்கு ஒரே டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதைசொல்லியே தொணதொணவென்று (ஆனால் ரசிக்கும்படியாக) பேசிக்கொண்டு இருப்பார். நாம் பரிதாபப்பட்டு ‘உச்சு’ கொட்டவேண்டிய மனிதர்களை அபத்தமானவர்களாகதான் காட்டுவார். அதே நேரம் வில்லன்களான விடுதலைப்புலிகளையும், சிங்கள ராணுவத்தையும் டபுள் அபத்தமாய் முன்வைப்பார். முடிக்கும்போது கடைசி பாராவில் நீங்கள் அடையவேண்டிய மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, புரட்சி, எழுச்சி, புட்டு, பொடலங்காய் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் ஏற்படுத்திவிடுவதில்தான் ஷோபாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லி ஷோபாசக்தி. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய அபாரமான சிறுகதைகளின் தொகுப்பு கண்டிவீரன்.

ஏற்கனவே கலைஞரை தமிழின விரோதியாக தமிழ் தேசியர்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழின துரோகியான ஷோபாசக்தி, இந்த நூலை கலைஞருக்கு வேறு சமர்ப்பணம் செய்துத் தொலைத்திருக்கிறார். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று தமிழ் ஜோசியர்களுக்கு தெரியாதா என்ன. இதற்கும் கலைஞரின் தலைதான் உருளப் போகிறது. அவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் போதாதா?

நூல் : கண்டிவீரன்

பக்கங்கள் : 192

விலை : ரூ.160

வெளியீடு : கருப்புப் பிரதிகள்
மொபைல் போன் – 9444272500
மின்னஞ்சல் : karuppupradhigal@gmail.com

* * * * * * *

நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லாத சம்பவங்கள் எப்படிதான் நடைபெறுகின்றனவோ என்று செய்தித்தாளை வாசிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது.

கோவையில் ஏதோ ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பத்தொன்பது வயது பெண் அவர். ஆந்திராவைச் சேர்ந்தவர். ஊருக்கு ஏதோ திருவிழாவென்று சொந்தக்காரர்கள் சிலரோடு ஆந்திரா நோக்கி ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். சேலத்துக்கு அருகில் ஒரு ஆற்றுப் பாலத்தை கடக்க ரயில் நிற்கிறது. திடீரென அந்தப் பெண்ணுக்கு தலைசுற்ற, கதவுக்கு அருகில் வந்து குனிந்து வாந்தியெடுக்கிறார். கையில் இருந்த பர்ஸ் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுக்க இறங்குகிறார். ரயில் கிளம்பிவிடுகிறது.

இவரைப் போலவே அதே ரயிலில் ஓர் இருபத்துநான்கு வயது இளைஞர். ரயிலில் ஏறும்போதே நன்கு ‘ஸ்ருதி’ ஏற்றிக் கொண்டிருக்கிறார். வாந்தி பிரச்சினையால், போதையில் ரயிலில் இருந்து இறங்கிவிட்டிருக்கிறார்.

அந்த அதிகாலையில் ஆளரவமற்ற அந்தப் பகுதியில் இவர்கள் இருவர் மட்டும். போதையில் இருக்கும் இளைஞர் அந்தப் பெண்ணை மிரட்டி, புதர்பக்கமாக அழைத்துச் சென்று…

அதிகாலையில் டிராக் வழியாக இருவரும் நடந்து அருகிலிருக்கும் ரயில்நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தப் பெண் அழுதுகொண்டே அத்தனையையும் சொல்லியிருக்கிறார். போலிஸை அழைத்து அந்த இளைஞரை கைது செய்யவைத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அப்போதுதான் போதை தெளிந்த இளைஞன் சொல்லியிருக்கிறான். “போதையிலே என்ன நடந்துச்சின்னே தெரியல்லைங்க. அப்படி ஏதாவது தப்புதண்டா நடந்திருந்தா நானே அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்”

* * * * * * *

மரம் நடுவது குறித்த மானமுள்ள கவிஞர் நண்பர் வா.மணிகண்டன் அவர்களுடைய பதிவினைப் பார்த்தேன். அனேகமாக இன்னும் இரண்டு மாதத்தில், சென்னை புத்தகக் காட்சி அரங்கில், ’கத்தி’ ஜீவானந்தத்துக்கு ரோட்டரி க்ளப் பாராட்டு விழா நடத்தியதைப் போன்ற ஒரு பாராட்டுவிழாவை இவருக்கு நாம் நடத்த வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. மரம் நடுவிழா நடத்துகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இதையாவது நடத்தலாமே. என்ன சொல்லுகிறாய் தமிழ் அன்னையே?

கென்யாவைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய் இப்படிதான் சுற்றுச்சூழலுக்காக போராடி நோபல் பரிசெல்லாம் வென்றார். நம் இணைய, இலக்கிய உலகில் இருந்து அப்படியொருவர் நோபல் பெற்றால் நமக்கெல்லாம் பெருமைதானே?

நிசப்தமாக இருக்க வேண்டாம். அசப்தமாக இருப்போம். nobel causeக்கு கை கொடுக்கலாம் தோழர்களே!

* * * * * * *
‘நெருங்கி வா முத்தமிடாதே’ பார்த்தேன். லோபட்ஜெட் குறைகளையும் தாண்டி, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் intelligent படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. ஏற்கனவே ஓரிரு ரோட் ட்ரிப் ஸ்டோரி தமிழில் வந்திருக்கிறது. ஆனாலும் மசாலா கலக்காத அசலான ‘ரோட் ட்ரிப்’பாக இதை சொல்லலாம். ‘ஹைவே’ எல்லாம் வரும்போது வரட்டும்.

‘திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக எங்குமே பெட்ரோல் டீசல் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்’ என்று தடாலடியாக படம் ஆரம்பிக்கிறது. நாட்டுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்கிற பில்டப்போடு. இரண்டாம் பாதியில் அந்த பில்டப் படுமோசமாக பிசுபிசுத்துப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இடையில் லாரி ஓட்டத்தின்போது செருகிய காட்சிகளும், பாத்திரங்களும் அபாரம். குறிப்பாக விஜிசந்திரசேகரின் கதை அட்டகாசம். நைசாக திவ்யா-இளவரசன் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடைசியில் “விளைவுகளைப் பற்றி யோசிக்காம நீங்க பாட்டுக்கும் காதலிச்சிடறீங்க” என்கிற கீறல்விழுந்த அட்வைஸ்தான்.

நாடு ஸ்தம்பித்துவிட்டால் நாம் மட்டுமல்ல. ரோட்டோரத்தில் லாரிக்கு கைகாட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கூட வாழ்வாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்றெல்லாம் யோசித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஷேக் ஹேண்ட். முதல் பாதிக்கு சீன் யோசித்த அளவுக்கு, இரண்டாம் பாதிக்கு யோசிக்க முடியாத அவரது சோம்பேறித்தனத்துக்கு தலையில் குட்டு. தம்பி ராமையா மாதிரி பிஸி ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய மொக்கை காமெடியை எல்லாம் அப்படியே வைக்காமல் எடிட்டித் தள்ளியிருக்கலாம்.

இதைவிட நூறு மடங்கு அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் அட்டக்கத்தியாக இருக்கும்போது, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ கொஞ்சம் ஷார்ப்பாகதான் இருக்கிறது. ஒருமுறை நெருங்கி முத்தமிடலாம் (படத்தை).

7 அக்டோபர், 2014

பாரு மீது சொத்து குவிப்பு வழக்கு!

பாரிஸ், அக். 7 : உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பாருசிவேதிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் பரபரப்பான தீர்ப்பினை பாரிஸ் இலக்கிய நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதனால் பதினெட்டு ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

சுமோ வழக்கு

பாருசிவேதிதாவின் சக போட்டி எழுத்தாளரான சுயமோகன் இந்த வழக்கினை தொடர்ந்து இருந்தார். ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கி அக்கவுண்டு எண் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பாருசிவேதிதா வாங்கிக் குவித்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பாருவுக்கு பரிசாக வந்த செமிமார்ட்டின் மதுபாட்டில்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது அல்ல என்கிற வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டது.

தீர்ப்பு விவரம்

முதல் குற்றவாளியான பாருசிவேதிதாவுக்கு நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், கூடுதலாக அவர் எழுதிய சாமபேத கதைகளை நூறு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்று அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை மிகக்கடுமையானது என்று பாரு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தபோது, சாமபேத கதைகளை நூறு முறை வாசிக்கும் கொடூரமான தண்டனை குறைக்கப்பட்டது. பதிலாக ‘ஓ என் கடவுளே’ என்று ஒரு லட்சம் முறை பாருசிவேதிதா இம்போசிஸன் எழுதவேண்டும்.

அடுத்தடுத்த குற்றவாளிகளான சராத்து, வணேஷ் கொம்பு, பெல்பம் ஆகியோருக்கு தலா நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், ‘சக்ஸைல்’ நாவலை நானூறு முறை வாய்விட்டு வாசிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறைத்தண்டனை கூட ஓக்கே, ஆனால் சக்ஸைல் நாவலை வாசிக்கும் மரணத்தண்டனை மட்டும் வேண்டாம் என்று நீதிபதி முன்பாக குற்றவாளிகள் கதறினார்கள். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கியையே இழுத்து மூடவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கோர்ட் வாசலில் பரபரப்பு

பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி ஜவ்வாக இழுக்கப்பட்ட இந்த இலக்கிய வழக்கில் பாருசிவேதிதா எப்படியும் விடுதலை ஆகிவிடுவார் என்கிற நம்பிக்கையில் பாருவின் நண்பர் சாபாகத்தி தலைமையில் வாசகர்கள் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். தீர்ப்பை கேள்விப்பட்டதும் அவர்கள் சோகமாகி, கையோடு கொண்டுவந்த சரக்கை அங்கேயே தண்ணீர் கலக்காமல் கல்ப்பாக அடித்து வாந்தியெடுக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பாரிஸ் போலிஸார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாந்தியை எல்லாம் கழுவி வாசகர்கள் மீதே ஊற்றி, அவர்கள் மீது சாகஸலீலா புத்தகத்தை வீசியெறிந்து துரத்தினார்கள். ஒன்றரை கிலோ எடையில் கருங்கல் மாதிரி கனமாக இருந்த புத்தகம் மேலே விழுந்ததில் நான்கு பேருக்கு மண்டை உடைந்தது. கை கால் எலும்பு முறிவும் பலருக்கும் ஏற்பட்டது.

சுமோ விளக்கம்

இந்த தீர்ப்பு பற்றி வழக்கு தொடர்ந்த சுயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் கருத்து சொல்லியிருக்கிறார். இந்திய ஞானமரபிலும், வேதங்களிலும் ஜே.சி.ஜே.சி.ஐ. என்றொரு வங்கியே கிடையாது என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இல்லாத வங்கி மூலமாக பாரு சொத்து குவித்து வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவரது குரு பத்யநித்ய பூபதி கனவில் வந்து வலியுறுத்தியதாலேயே தான் வழக்கு தொடரவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் வழக்கின் தீர்ப்பு இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருப்பதால் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கட்டுரையை கூகிள் ப்ளஸ்ஸில் ‘ஷேர்’ செய்து, ‘ஆசான் ராக்ஸ்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் தொழிலதிபர் பரங்கசாமி.

கை கொடுத்த சாட்சி

வழக்கில் பாருவுக்கு தண்டனை கிடைக்க ராஸ்கர் பாஜாவின் சாட்சியே பிரதானமாக இருந்தது. கி.பி.2011ஆம் ஆண்டு சென்னை பாமராஜா அரங்கில் நடந்த சக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா மிக ஆடம்பரமாக நடந்தது. லட்சக்கணக்கான வாசகர்கள் கலந்துக்கொண்ட அந்த விழாவில் பாருவின் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தவர் ராஸ்கர் பாஜா. அந்த பீருக்கு காசு எப்படி வந்தது என்று தோண்டி துருவி விசாரிக்கப்பட்டதிலேயே நடந்த குற்றம் தெளிவாக தெரிந்தது. ராஸ்கர் பாஜா அரசுத்தரப்பு சாட்சியாக அப்ரூவர் ஆகி அளித்த சாட்சியமே வழக்கில் உறுதியாக நின்று, இன்று பாரு உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.

கருத்து மோதல்

பாருவுக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து இருவேறு நேரெதிர் கருத்துகள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய எழுத்தாளர் பாநி, “சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது” என்றார். அவருக்கு பதிலடி கொடுத்த கவிஞர் கனுஷ்ய முத்திரன், “பாரதியாருக்கு வளைந்த சட்டம் பாருவுக்கு வளையாதது ஏன்?” என்று கிடுக்கிப்பிடி போட்டார். இதே விவாதத்தில் கலந்துக்கொண்ட சிந்தனையாளர் சத்ரி, “வழக்கின் தீர்ப்பு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி பக்கங்களுக்கு பிரெஞ்சில் இருக்கிறது. அதை மேற்கு பதிப்பக மொழிப்பெயர்ப்பாளர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முழுக்க படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்” என்று கருத்து சொல்லியிருக்கிறார். இந்த தீர்ப்பு பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் “மாங்கா காமிக்ஸ் : ஓர் அறிமுகம்!” என்று எழுத்தாளர் ரஸ்.ஏமகிருஷ்ணன் கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் எங்கே தீர்ப்பு பற்றிய கருத்து இருக்கிறது என்று வாசகர்கள் தேடித்தேடி அலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் மிமலாதித்த வாமல்லன் ‘இலக்கிய சிலுக்கு என்னாச்சி வழக்கு?’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று புரியாமல் விளக்கம் கேட்ட வாசகர்களிடம், “எழுதின எனக்கே புரியலை. உனக்கு புரிஞ்சு என்னாகப் போவுது?” என்று ட்விட்டரில் காட்டமாக பதிலளித்தார் வாமல்லன். மாலச்சுவடு இதழும் ‘அறம் மீறும் இலக்கியம்’ என்று தலையங்கம் எழுதியிருக்கிறது. மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரான மா.வணிகண்டன், “இப்படித்தான் 1979லே பாப்பநாயக்கன் பாளையத்திலே” என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

வலுக்கிறது போராட்டம்

பாருவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அநீதியானது என்றுகூறி அவருடைய வாசகர்கள் சீலே, பிரஸீல், அர்ஜெந்தினா, கூபா, இந்தியா, தமிழ்நாடு ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை வாசல் ஒன்றில் ச்யோவ்ராம் வேந்தர் எனும் பாரு அபிமானி மொட்டையடிக்கும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். டாஸ்மாக்கின் உள்ளே கணிஜி உள்ளிட்ட பாருவின் தீவிரவாத வாசகர்கள் சாகும்வரை குடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கூறி பாட்டிலை ஓபன் செய்திருக்கிறார்கள். இவர்களது வசதிக்காக போராட்டம் நடக்கும் டாஸ்மாக் கடைகள் மட்டும் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்று தமிழக அரசு சலுகை அறிவித்திருக்கிறது. சச்சைக்காரன், சவகிருஷ்ணா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பதினெட்டு பேர் பார்க்குவேஸ், மார்த்தர், ஷெமிங்வே, சுயமோகன், வலைஞர், மணிமொழி ஆகியோரின் கொடும்பாவியை பாரிஸ் கார்னரில் எரித்து போராட்டம் நடத்தி கைதானார்கள். பாருவின் வழக்கை சீலே நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் எழுத்தாளர் முருக விநாயகன் தலைமையில் “துக்கம் தொண்டையை அடைத்தது” என்று கோஷம்போட்டு பாரிஸ் நீதிபதியை கண்டித்து தொண்டையில் அடித்துக் கொண்டு கதறும் போராட்டம் நடந்தது.

சென்னை மே.மே.நகர் பிஸ்லெரி புக் பேலஸ் வளாகத்தில் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இலக்கியவாதி சமிர்தம் ஆர்யா தலைமையில் கண்டனக்கூட்டம் நடந்தது. இதில் கவிஞர் சுமா பக்தி, நத்மஜா பாராயணன், மஜய விகேந்திரன் உள்ளிட்டோர் காரசாரமாக பாரிஸ் நீதிபதியை பேசினார்கள்.

பாரு விடுதலை ஆகும்வரை புறநாழிகை புத்தக உலகத்தில், பாரு எழுதிய நூல்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று புறநாழிகை வெண். பாசுதேவன் அறிவித்திருக்கிறார். விஷயம் அறிந்த வாடிக்கையாளர்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.

கருப்புச்சட்டை வழக்கு

போராட்டக்காரர்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து போராடிவருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் தங்கள் யூனிஃபார்மை பயன்படுத்துவதா என்று திகவினர் கண்டன அறிக்கை விட்டதோடு இல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி திகவினரை தவிர வேறு யாரும் கருப்பு உடை அணிய தடைவிதிக்குமாறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கு 2027ஆம் ஆண்டு, அக்டோபர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தள்ளி வைத்திருக்கிறது.

கொண்டாட்டம்

ஒரு பக்கம் போராட்டம் என்றால், மறுபக்கம் கொண்டாட்டமும் நடக்கிறது. பாருசிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் அதன் ஆதரவாளர்கள் ஜாக்கி ஜட்டி அணிந்து வருவோர் போவோருக்கெல்லாம் ‘கட்டிங்’ வழங்கி தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள். “இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” என்று அவ்வமைப்பின் தீவிர ஆதரவாளரான சுமாசகேஸ்வரன் லாவோ தாசு நம்மிடம் சொன்னார். “மற்றவர் சோகத்தை நாம் கொண்டாடுவது தவறு” என்று அவ்வமைப்பின் அமைப்பாளர் இந்த கொண்டாட்டங்களை கடிந்துக் கொண்டாலும், ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் அவரும் இந்த அவலமான தீர்ப்பை கொண்டாடி வரிசையாக ஸ்டேட்டஸ்கள் போட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி : தினபிந்தி)

30 ஜூன், 2014

இலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?

“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பவுத்த பிக்குகளால் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்களை அவ்வறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டிருந்தது. இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மதமோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

அளுத்கமாவில் வெடித்த கலவரம்

இலங்கையின் மக்கள்தொகையில் இஸ்லாமியர் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக நெடுங்காலமாகவே பவுத்த பிக்குகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இவர்களது பிடியில் இலங்கை போய்விடக்கூடாது என்று வலியுறுத்தி ஆங்காங்கே கூட்டங்கள், பேரணிகள் நடத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலமாக சென்று அவர்களுக்கு எதிராக கோஷம் இட்டு வந்தனர். இப்படிதான் இருதரப்புக்கும் இடையே மோதல் சமீபமாக தொடங்கியது.
ஒரு ஞாயிறு மாலை அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியிலிருக்கும் அளுத்கமா, பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் நடந்த பேரணியில் கடுமையான வன்முறை ஏற்பட்டது. மூன்று முஸ்லிம்கள் பலியாகினர். எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மசூதிகள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடக்க சிதறி ஓடினர்.

வேடிக்கையான முரண் என்னவென்றால், மத வன்முறையால் ஆங்காங்கே மோதல்களும், நாடு முழுக்க மக்கள் மத்தியில் மனதளவிலான பதட்டமும் நிலவிவரும் இதே வேளையில் பொலிவியாவில் ராஜபக்‌ஷேவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. அங்கிருந்தபடியே கூலாக “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று அதிபர் அறிவிக்கிறார்.

யார் தூண்டியது?

வலதுசாரி புத்தமத குழுவான ‘போது பல சேனா’ (புத்த வீரப்படை) என்கிற அமைப்புதான் இப்பகுதியில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்திருக்கிறது. இவர்கள் நடத்திய பேரணியில்தான் இஸ்லாமியரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த பேரணியில் புத்த வீரப்படையின் தலைவர் கலகோடா அத்தே ஞானசரா, மதவெறுப்பு தொனிக்க படுமோசமாக பேசியிருக்கிறார். “எந்த இஸ்லாமியராவது இனி சிங்களர்கள் மீது கைவைக்க நினைத்தால் – குறிப்பாக புத்த துறவிகளை சீண்டினால் – அதுதான் இஸ்லாமியர்களின் இறுதிநாளாக இருக்கும்” என்று அவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இவரது பேச்சை கேட்டதுமே வெறிபிடித்த கூட்டம் அப்படியே இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு போய் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏராளமானோர் வீட்டை விட்டு வெளியேறி அங்கிருக்கும் மசூதியில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர்.

குரான் எரிப்பு

“ஒவ்வொரு இரவையும் அச்சத்தோடே கடக்கிறோம். காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை” என்று அப்பகுதி இஸ்லாமியர் சர்வதேச ஊடகங்களிடம் குமுறுகிறார்கள்.
“எங்கள் வீட்டை அடித்து நொறுக்கியவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் எங்களை ஆபாசமாக ஏசினார்கள். வீட்டுக்குள் இருந்த குரானை கொண்டு போய் நடுரோட்டில் போட்டு எரித்தார்கள்” என்று கண்கலங்குகிறார் எண்பது வயது பன்சியா ஃபைரூஸ்.

கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம்களில் இருவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருக்கிறது. நான்காவதாக கொல்லப்பட்ட ஒருவர் தமிழர். ஒரு இஸ்லாமியரின் நிறுவனத்தில் காவல்காரராக பணிபுரிந்த அவர்மீதும் கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த வன்முறை வெடித்ததற்கு முந்தைய நாள் ஒரு புத்தமத துறவி மீது இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தாக்கினார்கள் என்றொரு தகவல் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“புத்த வீரப்படை இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும் அமைப்பில்லை. இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். அன்று எங்கள் தலைவர் கொஞ்சம் காட்டமாக பேசியது உண்மைதான். ஆனால் வன்முறையை தூண்டவில்லை. எல்லா மக்களும் அமைதிவழியில் வாழவேண்டும் என்றுதான் அவர் கேட்டுக்கொண்டார்” என்று புத்தவீரப்படையின் தலைமை செயலரான திலந்தா வித்தனாகே அவசர அவசரமாக மறுத்திருக்கிறார்.

அரசியல் ஆகிறது மதம்

மியான்மரை போலவே இலங்கையிலும் பவுத்தமதம் அரசியலில் ஆளுகை செலுத்த முயல்கிறது. அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு நெருக்கமானவர்கள், அமைச்சரவை சகாக்களே கூட மதவன்முறையை ஊதிப்பெருக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இலங்கை அரசின் சட்டத்துறை அமைச்சரான ஹக்கீமே கூட இச்சம்பவங்களை குறிப்பிட்டு, “பவுத்தர்கள் நடத்திய தாக்குதலை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இலங்கை அரசில் அங்கம் வகிப்பதற்காக நான் அவமானப்படுகிறேன்” என்று குமுறினார்.

அமைதியை விரும்பும் புத்த துறவியான வடாரகா விஜிதா தெரோ இருதரப்பு மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை புத்த வீரப்படையின் ஞானசரா வெளிப்படையாகவே அவரது அமைதிப்பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். சில வாரங்களுக்கு முன்பாக உடல் முழுவதும் ஆழமான வெட்டுக்காயங்களோடு கொழும்புவின் புறநகர் சாலை ஒன்றில் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடந்தார் விஜிதா தெரோ.
புத்த வீரப்படைக்கு அதிபர் ராஜபக்‌ஷேவின் மறைமுக ஆசி இருக்கிறது என்று வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை அதை அதிபரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்த கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என்று சுமார் முன்னூறு பேர் புத்தவீரப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஞானசராவின் மதவெறி பேச்சுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்றுகோரி கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள்.

பொலிவியா நாட்டின் ஜி-77 சந்திப்பு முடிந்ததுமே நாடு திரும்பிய ராஜபக்‌ஷே பாதிக்கப்பட்ட இஸ்லாமிய கிராமம் ஒன்றுக்கு நேரில் சென்றார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடுநிலைமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதிகூறினார். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருக்கிறோம் என்று காவல்துறையும் அறிவித்திருக்கிறது.
ஆனால், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. புத்த வீரப்படை மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று அரசினை நோக்கி கேட்கிறார்கள் இஸ்லாமியர்கள். அரசு எதுவும் செய்யக்கூடிய எண்ணத்தில் இல்லை என்பதுதான் கடைசிக்கட்ட நிலவரம்.

(நன்றி : புதிய தலைமுறை)