Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

November 10, 2014

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்

நவம்பர் 8, 2014 அன்று சென்னை பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ந்த, தாமிராவின் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசியதின் வரிவடிவம் :

எல்லாருக்கும் வணக்கம்.

பேச்சுன்னா எனக்கு கலைஞரைதான் பிடிக்கும். மனசுலே நினைக்கிற வேகத்துலே மைக் முன்னாடி அவராலே பேசமுடியும். எந்த நெருக்கடியிலும் கச்சிதமா எடிட் பண்ணிப் பேசுவாரு. தான் உச்சரிக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன விளைவு ஏற்படும்னு அவராலே ஜோசியம் பார்த்துட்டு பேசமுடியும். ஆனா நான் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவோட ஜெனரேஷன். திட்டமிடாம பேசினா எதையாவது உளறிக் கொட்டிடுவோமோன்னு பயம். அதனாலேதான் முன்னாடியே எழுதிவெச்சிக்கிட்டு பார்த்து பேசுறேன். மன்னிக்கவும்.

நாலஞ்சி வருஷம் முன்னாடி இருக்கும். கற்பு பத்தி குஷ்பூ தைரியமா பேசியிருந்த டைம் அது. வழக்கம்போல தமிழ்நாடே கொந்தளிச்சிடிச்சி. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலேயே கற்போடு வாழ்ந்த தமிழரின் பெருமையை ஒரு வடக்கத்திப் பொண்ணு இப்படி கேவலப்படுத்தினா, புலியை முறத்தாலே விரட்டின இனம் சும்மா இருக்குமா?

அந்த டயமில் ஒரு படம் வந்தது. அதிலே ஒரு குட்டிப் பாப்பாவோட பேரு குஷ்பூ.

“குஷ்பூ நீ பேசாதே!”

“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”

“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”

அட. இப்படியெல்லாம் கூட சினிமாவில் சமூக அரசியலை பேசலாமான்னு ஆச்சரியம்.

நானும் தமிழன்தான். இருந்தாலும் இந்த தமிழ் அடையாளத்தை வெச்சிக்கிட்டு ஒரு நூறு வருஷமா நாம பண்ணுற அலம்பல் நமக்கே புரியுது. அதை தைரியமா ஒத்துக்கிட்டவர் என்கிற முறையில் தாமிராவை அப்போதான் எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. அதுவரை அவரோட கதை சிலதை ஆனந்தவிகடனில் படிச்ச நினைவு. ஆனா, அவரு பேரு ரொம்ப ஸ்ட்ராங்கால்லாம் ரெஜிஸ்டர் ஆகலை. ‘ரெட்டச்சுழி’ படம் வந்தப்போ, அதை ஆதரிச்சி ரொம்ப பாசிட்டிவ்வா இண்டர்நெட்டுலே எழுதினது அனேகமா நான் மட்டும்தான்னு நெனைக்கிறேன்.

லேயர் லேயரா ரெட்டச்சுழியிலே தாமிரா வெச்சிருந்த உள்குத்துகள் வழக்கம்போல தமிழர்களுக்கு புரியலைன்னு தோணுது. அவங்களுக்கு டைரக்டா ‘பஞ்ச் டயலாக்’ சொல்லி, வயிறு நிறைய நாலு இட்லி சாப்பிட்டுட்டு எக்ஸ்ட்ராவது அஞ்சாவது இட்லி ஆர்டர் பண்ணுறவன் பூர்ஷ்வான்னு பப்பரப்பான்னு பேசுனாதான் புரியும்.

“அவுரு கட்சி ஆபிசுக்கு போயே பத்து வருஷம் ஆச்சி. அவராண்டே வந்து ராட்டையை காட்டிக்கிட்டு”ன்னுலாம் டயலாக் வச்சா அது எவ்ளோ பெரிய sattire. அதிர்ஷ்டவசமா இன்னிக்குவரைக்கும் அது காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. புதுசா வந்திருக்கிற தமிழ்மாநில காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. நல்லவேளை. தாமிரா தப்பிச்சார். இல்லேன்னா வேட்டி கிழிஞ்சிருக்கும்.

அண்ணன் தாமிராவோட எனக்கு பெருசா பழக்கவழக்கம் எதுவுமில்லை. ஓரிரு முறை அகஸ்மாத்தா பாத்துக்கிட்டப்போ கூட லேசா புன்னகை பண்ணியிருக்கேன். அவ்ளோதான். எனவே அப்போ ரெட்டைச்சுழியை பாசிட்டிவ்வா எழுதினதுக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லைங்கிறதை இப்போ சொல்லிக்கறேன். அப்புறம் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்கிற இந்த சிறுகதை தொகுப்பை பத்தியும் பாசிட்டிவ்வாதான் பேசப்போறேன். ஏதாவது தேடிக்கண்டுபிடிச்சி நெகட்டிவ்வா சொன்னா மட்டும்தான் அது விமர்சனம்னா, அப்படியொரு கலையே நமக்கு தேவையில்லை.

தாமிராவோட சில கதைகளை பத்திரிகைகளில் படிச்சப்பவும் சரி. ரெட்டச்சுழி படம் பார்த்தப்பவும் சரி. அவரோட அரசியல் என்னன்னு ரொம்ப சப்டிலா காமிக்கிறார். தமிழ் ஐடெண்டிட்டி மேலே எல்லாம் அவருக்கு பேரன்பு இருக்கு. ஆனா, ‘தமிழ், தமிழன்’னு சொல்லி கும்மி அடிச்சிக்கிட்டு மொழியை, இனத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்துறவங்க மேலே பெருங்கோபம் இருக்கு. இது நானா அவரைப்பத்தி guess பண்ணி வெச்சிருந்த இமேஜ்.

இந்த தொகுப்போட முன்னுரையை படிக்கறப்போ, அது கரெக்ட்டுதான்னு தோணுது.

பொதுவா எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அனேகமா அது மூடநம்பிக்கையா கூட இருக்கலாம். அதாவது படைப்பாளியோட படைப்புலே அவங்களோட பணிசார்ந்த தாக்கம் கண்டிப்பா இருக்குன்னு நம்பறேன்.

உதாரணத்துக்கு சொல்லணும்னா, சுந்தர ராமசாமியை படிச்சோம்னா அவ்வளவு பர்ஃபெக்ட்டா வார்த்தைகள் கட் பண்ணியிருக்கும். ஒவ்வொரு sentenceலேயும் எக்ஸ்ட்ராவாவும் இருக்காது. கம்மியாவும் இருக்காது. துணிக்கடையிலே ரெண்டு மீட்டர் துணி கேட்டோம்னா, ஒரு இஞ்ச் அப்படியும், ஒரு இஞ்ச் இப்படியுமா இல்லாமே ரொம்ப நறுக்கா வெட்டி கொடுப்பாங்க இல்லையா? அந்த கறாரான அளவீடு அவரோட எழுத்துகளில் இருக்கும்.

பத்திரிகையிலே வேலை செய்யுறவங்க கதை எழுதினாங்கன்னா அதுலே ரிப்போர்ட்டிங் வாசனை நிச்சயமா அடிக்கும். தினத்தந்தியிலே வேலை பார்க்குறவங்க எழுதுறப்போ ‘சதக், சதக்’, ‘கதற கதற’ ஆட்டோமேடிக்கா வந்துடும்னு எனக்கு தோணும்.

இதை கிண்டலுக்காக எல்லாம் சொல்லலை. நாம புழுங்கற மனுஷ்யங்களோட / ஏரியாவோட தாக்கம் நம்மோட கனவுகளிலேயே வர்றப்போ, கதைகளில் வர்றது ஆச்சரியமில்லை இல்லையா. ஒருவகையிலே கதைகளும் அந்த எழுத்தாளனோட கனவுகள்தானே?

படைப்பை பணிசார்ந்த அம்சம் தாக்கப்படுத்துது என்பதாலேதான் சமகால நவீன, பின்நவீனத்துவ தமிழிலக்கியத்துக்கு ஒரு குமாஸ்தா தன்மை இருக்குன்னு நெனைக்கிறேன்.

இதுக்கெல்லாம் புள்ளிவிவரம் எதுவும் எங்கிட்டே இல்லை. இது நானே உட்கார்ந்து சொந்தமா ரூம் போட்டு யோசிச்சப்போ தோணுச்சி. ஒருவேளை இதை யாராவது இண்டெக்ஸ் போட்டு, ஆராய்ச்சி பண்ணினா அனேகமா அவங்களுக்கு டாக்டர் பட்டம் கூட ஏதாவது பல்கலைக்கழகத்தாலே வழங்கப்படலாம்.

ஓக்கே. மேட்டருக்கு வர்றேன்.

தாமிராவோட கதைகளில் அவரோட பணியான சினிமா நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதை சொல்லதான் இப்படி காதை சுத்தி மூக்கை தொட்டிருக்கேன்.

ஒவ்வொரு பாராவும் ஒரு ஷாட்டா இருக்கு.

ஒவ்வொரு கதையும் ரெண்டு இல்லைன்னா மூணு சீன்.

கதைகளைப் படிக்கிறப்போ எனக்கு ரீரெக்கார்டிங் கூட கேட்குது. கன்ஃபார்மா மியூசிக் இளையராஜாதான். டவுட்டே இல்லை.

இடையிடையிலே பொருத்தமான இடங்களில் பாட்டு கூட போடுறாரு.

‘அமிர்தவர்ஷினி’ கதையை படிக்கிறப்பவே மழை வந்து நாம நனைஞ்சுட்ட ஃபீலிங்.

அதிலும் கேரக்டர் இண்ட்ரொடக்‌ஷனெல்லாம் பக்கா சினிமா.

‘அடிப்படையில் குமார் ஒரு நாத்திகர். ஆனால் அவரது நாக்கில் எப்போதும் சனி குடிகொண்டிருக்கும்’னு சொல்றப்பவே இந்த கேரக்டர் மணிவண்ணனுக்குன்னு தோண ஆரம்பிச்சிடுது.

சில கதைகளில் தாமிராவோட உருவகம் அநியாயத்துக்கு மிரட்டுது.

“யூனிஃபார்மை போட்டுக்கிட்டு ஒரு கல்லறையிலேருந்து இன்னொரு கல்லறைக்கு என்னாமா ஓடுதுங்க”ன்னு சொல்றப்போ பக்குன்னு இருக்கு. திருநெல்வேலி சுடலைக்கு நகரம் மொத்தமாவே நரகம்தான். கான்க்ரீட் வீட்டை கல்லறைன்னு சொல்றான். ஸ்கூலும் கான்க்ரீட்தானே. அதுவும் இன்னொரு கல்லறை. “வாக்கரிசையை கூட இனிமே இறக்குமதிதாண்டா பண்ணனும்னு” அவன் சொல்றப்போ நெஜமாவே நாமள்லாம் சுடுகாட்டுலே அலையற ஆவிங்களோன்னு டவுட்டு வருது.

சாட்டிங், பேஸ்புக்கு, வாட்ஸப்புன்னு மாறிட்ட நவீன உலகத்துலே நுணுக்கமான மனித உறவுகளோட பொசிஸன் என்னன்னு ‘மியாவ்… மனுஷி’ங்கிற கதையிலே ஆராயறாரு. அந்த கதையிலே இண்டர்நெட்டுக்கு தாமிரா கொடுத்திருக்கும் தமிழாக்கம் அட்டகாசம். ‘வலைவனம்’. கதை இப்படி முடியுது… “வலைவனங்களெங்கும் ஏதோ ஒரு பூனை மியாவ் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது”. நாமல்லாம் ரோபோவா மாறுகிற வரைக்கும் நம்மோட ஆதாரமான ஆதிகுணங்களை இழந்துட மாட்டோம்னு இந்த கதையோட மெசேஜை எடுத்துக்கிட்டேன்.

எப்பவும் தற்கொலைக்கு முயற்சிக்கிற தட்சணோட முயற்சிகள் ஊத்திக்குது. இருபத்தஞ்சி வாட்டிக்கும் மேலா அவனுக்கு மரணம் கண்ணாமூச்சி காமிக்குது. கடைசியிலே ஒருத்தன் அவங்கிட்டே வந்து புலம்பறான். “என்னை மன்னிச்சிடுங்க. உங்க கிட்டே தோத்துட்டேன். வெளியே சொல்லிடாதீங்க. மானம் போயிடும்”னு அழுவறான். அவன் தான் மரணம். சடார்னு சுஜாதா நினைவுக்கு வந்தாரு. ஒருமாதிரி குறுகுறுப்புலே மறுபடியும் கதையை முதல்லேருந்து படிச்சிப் பார்த்தோம்னா, கிறிஸ்டோபர் நோலன் லெவல் கிளாசிக். கதையோட பின்னிணைப்பா தாமிரா எழுதியிருக்கிற மரணசாசன கவிதை தீபாவளிக்கு டபுள் போனஸ் கிடைச்சமாதிரி இருக்கு.

தாமிராவோட உலகப் புகழ்பெற்ற கதை ‘ரஜினி ரசிகன்’. ரொம்ப நேரிடையான அட்டாக். பாப்புலர் லேங்குவேஜ்லே ஒரு சொசைட்டியோட ஒட்டுமொத்த ஆன்மாவை அம்பலப்படுத்துற கதை. குறைந்தபட்சம் ஒரு கோடி காமுவாவது தமிழ்நாட்டில் இருக்காங்கன்னு தோணுது. நம்பளைப் பத்தி நம்பளைவிட யாருக்கு ரொம்ப நல்லா தெரியும். நாம பொய் பேசுவோம். நாம பொறாமைப் படுவோம். நாம கோள் மூட்டுவோம். நமக்கு பர்சனலா நிறைய வீக்னஸ் இருக்கு. இதெல்லாம் மத்தவங்களுக்கு தெரியாது. நமக்கு மட்டும்தான் தெரியும்னு நெனைச்சிப்போம். ஆனா, “தம்பி. இதெல்லாம்தான் உன்னோட கேரக்டர்”ன்னு ஒருத்தரு புட்டுப்புட்டு வெச்சா எவ்ளோ கோவம் வரும். இந்த கதையை படிக்கிறப்போ அப்படிதான் எல்லாருக்கும் கோவம் வரணும். எனக்கு வரலை. நல்லவேளையா நான் கமல் ரசிகன். கமலைப் பத்தி அண்ணன் ஏதாவது எழுதினாருன்னாதான் டென்ஷன் ஆவேன்.

பொதுவா இதுமாதிரி சினிமாப் பைத்தியங்களை பத்தி வெளியிலேருந்து நிறைய பேர் விமர்சிச்சிருக்காங்க. குறிப்பா பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும். ஆனா ஒரு சினிமாக்காரரே ரொம்ப தெகிரியமா தன்னோட துறையின் சூப்பர்ஸ்டாரை, பலமான ஆதாரங்களை வெச்சிக்கிட்டு அம்பலப்படுத்துறது ரொம்ப துணிச்சலான முயற்சி. ரஜினி கிட்டே கால்ஷீட் வாங்கி, படமெடுக்கிற எண்ணமே அண்ணனுக்கு இல்லைன்னு தோணுது.

எல்லாத்தையும் விட தொகுப்போட க்ளைமேக்ஸ் கொடுக்குற அற்புத அனுபவம்தான் இந்த புத்தகத்தை தலைமேலே தூக்கிவெச்சி என்னை கொண்டாட சொல்லுது. எனக்கு வைரமுத்துவை ரொம்ப பிடிக்கும். இளையராஜாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அனேகமா காது கேட்குற தமிழனில் தொண்ணூறு சதவிகிதம் பேருக்காவது இவங்களை சேர்த்துவெச்சி பிடிக்கும். அவங்க சேர்ந்திருந்த ஆறேழு வருஷம் தமிழ் திரையிசையின் பொற்காலம் என்பதை யாரும் மறுத்துட முடியாது. இந்த பிரிவுக்கு என்ன காரணம்னு ஒவ்வொருத்தனுக்கும் இருவத்தஞ்சி வருஷமா மண்டை காய்ஞ்சிக்கிட்டிருக்கு. தமிழனோட இந்த உணர்வை சைக்காலஜிக்கலா அணுகற கதை அது.

ஒட்டுமொத்தமா இந்த தொகுப்பை பத்தி சொல்லணும்னா, பதினைஞ்சி படத்தை அடுத்தடுத்து பார்த்த இனிமையான அனுபவத்தை எனக்கு கொடுக்குது. பிழியப் பிழிய டிராமா பண்ணவேண்டிய விஷயங்களைகூட ‘லைட்டர் வெர்ஷனில்’ கொடுக்கிறாரு. சமகால அரசியல் சமூக அங்கதம் அங்கங்கே அழகா விரவியிருக்கு. குறிப்பா கடவுள், மரணம்னு விடை தெரியாத விஷயங்களுக்கு… அறிவியலால் ஒப்புக்கொள்ளப்படவோ, நிராகரிக்கப்படவோ முடியாதது பத்தின அலசல் அடிக்கடி வருது.

தான் எழுதுறது இலக்கியங்கிற கான்சியஸ் எல்லாம் இல்லாமே இயல்பான வெளிப்பாடா எழுதியிருக்கிறாரு. ஒரு கதை இலக்கியம்னு ஒப்புக்கப்படணும்னா அதுக்கு நிறைய சங்கேதவார்த்தைகளை அங்கங்கே மானே, தேனேன்னு தூவணும்னாதான் இப்போ ஒத்துக்கிறாங்க. அதிலும் கதையை படிச்சதுமே வாசகனுக்கு புரிஞ்சிடக் கூடாதுன்னு எழுத்தாளர்கள் ரொம்ப தீவிரமா இருக்காங்க. சில கதைகளை படிக்கிறப்போ இந்த கதை எழுதினவருக்கே புரியுமான்னுகூட எனக்கு அப்பப்போ சந்தேகம் வரும். அந்த மாதிரி பாவனைகள் எதுவுமே இல்லாம நேரடியாக வாசகனோட மானசீகமா உரையாடுது தாமிராவோட எழுத்து.

லேங்குவேஜோட கொஞ்சம் இண்டெலெக்ச்சுவல் ஃபார்ம் - ‘மொழியின் அறிவுப்பூர்வமான வெளிப்பாடு’தான் இலக்கியம்னு நம்பறேன். அந்த வகையில் தாமிராவோட இந்தத் தொகுப்பு இப்போதைய சூழலுக்கு அவசியமான இலக்கியம் என்கிற எண்ணம் எனக்கிருக்கு. பரவலாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் என்கிற அபிப்ராயம் உருவாகியிருக்கு. முக்கியமா தாமிரா இனி எழுதற கதைகளையும் மோசமா அவராலே எழுதவே முடியாதுங்கிற ஸ்ட்ராங் ஃபீலிங் வந்திருக்கு.

இந்த கதைகளில் அவருக்கு கிடைச்சிருக்கிற ப்ளாக்பஸ்டர்ஹிட் விரைவில் சினிமாவிலும் கிடைக்கணும்னு, அவரோட முதல் படத்தை இன்னமும் நேசிக்கிற தரைடிக்கெட் ரசிகனாக வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.
நூல் : தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்
ஆசிரியர் : தாமிரா
விலை : ரூ. 100
வெளியீடு : நாளந்தா

November 5, 2014

காகிதப்படகில் சாகசப்பயணம் : நூல் வெளியீட்டு விழா உரை!

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுபவர்கள் (அதாவது எழுதுபவர்கள்), லைக் போடப்போகிறவர்கள், கமெண்ட் போடப்போகிறவர்கள், நிஜமாகவே வாசிக்கப் போகிறவர்கள், பார்த்துவிட்டு சும்மா போகிறவர்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு என் சிற்றுரையை தொடங்குகிறேன்.
நாளைக்கு சச்சின் புக் ரிலீஸ்.

இன்றைக்கே கருணாகரன் புக் ரிலீஸ்.

(விசில் சத்தம்)

சச்சின் கிரிக்கெட்டுக்கு வந்த அதே காலக்கட்டத்தில்தான் கருணாகரனும் பத்திரிகையுலகத்துக்கு வருகிறார். பேட்டை பிடித்தவனுக்கு உடல் ஒத்துழைப்பதை நிறுத்தினால் ரிடையர் ஆகிவிடலாம். பேனாவைப் பிடித்தவன் இதயம் துடிப்பதை நிறுத்துவதுவரை நாட் அவுட் பே(இங்கே ‘ட்’ போடணுமா ‘ன்’ போடணுமா)ஸ்மேனாக முடிவேயில்லாத டெஸ்ட்டில் விளையாடித்தான் ஆகவேண்டும். எல்லாருக்கும் கேரியர் என்பது 56, 58, 60 என்கிற வயதுகளில் முடிந்துவிடும். பேனா பிடித்தவன் மூச்சை விடும்போதுதான் அவனுடைய கேரியர் முடிவுக்கு வரும் என்பது சாபக்கேடு அல்லது வரம். இதுநாள் வரையிலான கால்நூற்றாண்டு கேரியரை பெரிய வம்பு, தும்பு இல்லாமல் முடித்த கருணாகரன் சாருக்கு முதலில் வாழ்த்துகள்.

உலக பதிப்புலக வரலாற்றிலேயே முதன்முறையாக இணையத்திலேயே வெளியீட்டுவிழா காணும் நூல் ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ என்றுதான் நினைக்கிறேன். இந்த வெளியீட்டு விழாவில் பேச (அதாவது எழுத) எனக்கு அருகதை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில் இப்போது உங்கள் கையில் தவழும் புத்தகத்தை வரிவரியாகதான் நீங்கள் அனைவரும் படிக்கிறீர்கள். இந்த நூலில் இருக்கும் மொத்த வார்த்தைகளையும் (இந்த நூலைவிட ஐந்து மடங்கு கூடுதலான டெக்ஸ்ட்டையும்) நூலாசிரியரின் வாய்வழியாகவே கடந்த ஐந்தாண்டுகளாக நேரிடையாக கேட்டிருப்பவன் என்கிற தகுதி எனக்கு இருக்கிறது.

நவம்பர் தொடங்கினாலே இப்படிதான் உற்சாகமடைந்துவிடுவேன். கலைஞருக்கு பிறகு அதிகம் மதிக்கும் ஆளுமையான கமலஹாசனின் பிறந்தநாள் வருகிறது என்பதால். எனவே கமல் மாதிரி கொஞ்சம் அப்படி, இப்படி சுற்றி உளறிதான் இந்த வெளியீட்டு விழாவில் focus இல்லாமல் பேசி (அதாவது எழுதி) சமாளிக்க இருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பொறுத்துக்கொண்டு வாசிக்கவும்.

ஒரு சீனியர் தன்னுடைய ஜூனியருக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவத்தை எனக்கு கருணாகரன் சார் கொடுத்திருக்கிறார், அவருடைய புத்தகத்தை வாழ்த்திப்பேச அழைத்ததின் மூலம். இந்த கவுரவம் என்கிற சொல் பிரபஞ்சனை அடிக்கடி புரட்டுவதால் வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘நல்லதொரு காலைப்பொழுதை காஃபி குடித்துதான் கவுரவப்படுத்தமுடியும்’ என்று கவித்தெறிப்போடு எங்கோ அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ‘லாங் சர்வீஸ்’ செய்த ஊழியர்களை நிறுவனங்கள் கவுரவப்படுத்தும். மற்ற தொழில்களுக்கு சரி. பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. நம் மக்களைப் பொறுத்தவரை தினமும் காலையில் அவர்களுக்கு பேப்பர் போடும் பையனும் ஒன்றுதான். அந்த பேப்பரில் எழுதியிருப்பவனும் ஒன்றுதான். இதற்காக பேப்பர் போடும் பையனை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. அவன்தான் ஒவ்வொரு எழுத்தையும் எண்ட் பாய்ண்டுக்கு கொண்டுச்சென்று கவுரவப்படுத்துபவன்.

ஓக்கே. எங்கே விட்டேன். பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே பத்திரிகையாளன் தன்னைத்தானே கவுரவப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. கருணாகரன் சார், அதைத்தான் செய்திருக்கிறார். கடந்துபோன தன்னுடைய இருபத்தைந்து ஆண்டுகால சொந்தவாழ்க்கையின் பெரும்பகுதியை பத்திரிகைப்பணிகள் எப்படியெல்லாம் பறித்துக் கொண்டது என்பதை ஏகப்பட்ட முறை, பல சம்பவங்களை சொல்லி சொல்லியிருக்கிறார். எல்லாருமே அவரவர் பணிரீதியான அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்றாலும், இத்துறை பலி கேட்கும் விஷயங்கள் கொஞ்சம் கொடூரமானவை. உண்மையில் இந்த நூலில் இந்த விஷயத்தை அவர் லேசாகதான் கோடிட்டுக் காட்டியிருக்கிறாரே தவிர, முழுக்க சொல்லவில்லை. சொல்லவும் விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.

நாற்பதை எட்டியவர்களுக்கு சொல்ல நிறைய இருக்கிறது. இருபதை தாண்டியவர்களுக்கு கேட்க நிறைய இருக்கிறது. நாற்பதை எட்டியவர்கள் சொல்ல தயாராக இருந்தாலும், இருபதை எட்டியவர்கள் பெரும்பாலும் காது கொடுக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். கவுதம் சாரிடம் நான் கற்றுக்கொண்ட பண்பு, வாயை திறக்கிறோமோ இல்லையோ. இரண்டு காதுகளையும் எப்போதும் திறந்துவைத்திருக்க வேண்டும். தேவையோ தேவையில்லையோ. எல்லாவற்றையும் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் சீர்செய்து தேவையில்லாதவற்றை தூக்கி ரீசைக்ளிங் பின்னில் போட்டுக் கொள்ளலாம். முற்போக்கானவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினாலும் எனக்கு குருகுலக் கல்வியில் உள்ளூர நம்பிக்கையுண்டு.

முதன்முதலாக கருணாகரன் சாரை நான் சந்தித்தது ராயப்பேட்டையில் இருந்த ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில். கவுதம் சாரை அவர் சந்திக்க வந்திருந்தார். அப்போது நான் கவுதமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். “இவர்தான் பெ.கருணாகரன்” என்று கவுதம் சொன்னதுமே, “காதல்தோல்வி கதைகள் எழுதினவர்தானே?” என்று கேட்டு கைகுலுக்கினேன். இருபதாண்டுகள் கழித்து தன்னுடைய எழுத்துகளை ஒருவன் நினைவுகூர்வது எந்தவொரு எழுத்தாளனுக்கும் உவப்பான விஷயம்தான். என்னை இவனுக்கு ஏற்கனவே எழுத்துகள் வாயிலாக தெரியும் என்கிற எண்ணமே அவருக்கு என் மீது கூடுதலான அன்பை ஏற்படுத்தியிருக்கலாம். பின்னர் சில மாதங்கள் கழித்து, ‘புதிய தலைமுறை’ இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்ப ஊழியர்களாக ஒரே அலுவலகத்தில் இருந்தோம். ‘அ’னா போட்டு ஓர் இதழ் துவக்கப்படும்போது அதில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள், மற்ற பெரிய இதழ்களில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை காட்டிலும் கொஞ்சம் ‘ஒஸ்தி’தான். அனுபவமிக்க மாலன் சார், கருணாகரன் சார், உதயசூரியன் சார் போன்றவர்களின் வழிகாட்டலில் ஆரம்பத் திணறல்களை வெகுசுலபமாகவே எங்களால் கடக்க முடிந்தது.

கருணாகரன் சார் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மனைவியிடம் பேசியதைக் காட்டிலும் என்னிடம்தான் அதிகம் பேசியிருப்பார் என்று கருதுகிறேன். ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் இது சாத்தியமானது. அலுவலகத்தில் டீ குடிக்க மாட்டோம். வெளியேதான் இருவரும் போவோம். டீ குடிக்க ஐந்து, பத்து நிமிடம் ஆகிறதென்றாலும் ஒவ்வொரு பிரேக்கிலும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். இதழ் தயாரிப்பு, கட்டுரைகள் முதலானவற்றை தாண்டி பர்சனல் லைஃப் குறித்தும் பேசியிருக்கிறோம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் விகடனில் தொடங்கிய தன்னுடைய பத்திரியுலகப் பணிகளை பேசத் தொடங்கினார். கிசுகிசுக்கள் கேட்பதில் ஆர்வம் கொண்ட நான் (இது முக்கியமான வெகுஜனப் பண்பு) கேள்விப்பட்டவற்றை சரியா, தவறா என்று அவரிடம் கேட்பேன். அது தொடர்பாக அவருக்கு தெரிந்த விஷயங்களுக்கு ஹைப்பர்லிங்க் கொடுத்து கொஞ்சம் விஸ்தாரமாக சொல்வார். இதன் வாயிலாக நான் பணிபுரிந்திருக்கா விட்டாலும் குமுதம், விகடன், நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் எப்படி இயங்கின, அங்கு யாரெல்லாம் பணிபுரிந்தார்கள், அவர்களுடைய குணநலன்கள் என்று கருணாகரனின் ப்ளாஷ்பேக்கில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பல.

குறிப்பாக குமுதம் – கமல் மோதல் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்பேன். ஏற்கனவே அவர் விலாவரியாக சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே புதியதாக கேள்விப்படுவது போல மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கேட்பேன். இவனிடம்தான் சொல்லிவிட்டோமே என்று சலித்துக் கொள்ளாமல் மீண்டும் ஆதியிலிருந்து அந்தம் வரை சொல்வார். போலவே பாபா காலத்து ரஜினி பற்றியும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்போது தமிழ் வெகுஜன இதழ்கள் குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அது தொடர்பான நூல்கள் வெகுகுறைவாகவே இருக்கின்றன என்கிற எண்ணம் ஏற்பட்டிருந்தது. “இதையெல்லாம் நீங்கள் எழுதலாமே சார்?” என்று கேட்டால், “எழுதினா யார் படிப்பா?” என்பார்.

ஃபேஸ்புக்கில் அவர் அக்கவுண்டு தொடங்கிய அந்த சுபயோக சுபதினத்தின் முகூர்த்த நேரம்தான் இன்று ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூல் வெளிவரவே காரணமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் மொக்கைதான் போட்டுக் கொண்டிருந்தார். இளங்கோவன் பாலகிருஷ்ணன் திடீரென்று அவர் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் தான் தன்னுடைய ப்ளாஷ்பேக்கை எழுதலாம் என்கிற எண்ணம் கருணாகரன் சாருக்கு வந்தது.

ஆரம்பத்தில் நூலாக தொகுக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. இந்த ஸ்டேட்டஸ்களுக்கு பெரியளவில் இணைய வாசகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நூலாக வெளியிடவேண்டும் என்கிற கோரிக்கைகளும் அவருக்கு வைக்கப்பட்டபோதுதான், ஏன் நூலாக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தார். ‘நூல்’ என்கிற எண்ணம் வந்தபிறகு, மிகவும் கவனமாக எழுத ஆரம்பித்தார் என்பதை கவனித்திருக்கிறேன்.

எழுத நினைத்து அவர் எழுதாமல் விட்ட சம்பவங்கள் ஏராளமாக இருக்கிறது. ஃபாஸிட்டிவ்வான விஷயங்களைதான் ஃபோகஸ் செய்யப்போகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ஆனால் எழுதுவதற்கு முன்பாக அது தொடர்பான நெகட்டிவ்வான விஷயங்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்த நூலால் யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்று ரொம்பவும் கவனமாக இருந்தார். புத்தகத்தை வாசிக்கும்போது அவரிடம் அந்த ஓர்மை எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரமுடிகிறது.

(சோடா ப்ளீஸ்)


உடன்பணிபுரிந்த சகாக்கள் பற்றி எழுதவேண்டுமா என்று அவருக்கு தயக்கம் இருந்தது. எழுதலாம் என்று ஊக்கம் கொடுத்தது நான்தான். இப்போது புத்தகத்தை வாசிக்கும்போது அந்த அத்தியாயம் கொஞ்சம் சோடை போனது போலதான் தோன்றுகிறது. காரணம் அவருடைய நெடும்பயணத்தில் எல்லாரையும் குறிப்பிட முடியவில்லை. போலவே, சில முக்கியமான விடுபடுதல்கள் இருப்பதாக தோன்றியதும் அவரிடம் தொலைபேசியில் கேட்டேன். “அவங்கள்லாம் முக்கியமானவங்கதான். ஆனா நீங்க குறிப்பிடறவங்களில் சிலரோட நான் வேலை கூட பார்த்ததில்லை. என்னோட அனுபவங்கள் என்கிறப்போ என்னோட பழகாதவங்களை பத்தி என்னன்னு எழுதறது. சில பேரை எனக்குத் தெரியும். ஆனா நினைவுப்படுத்திக்கிற மாதிரி முத்தாய்ப்பான சம்பவம் எதுவும் அவங்க தொடர்பா இல்லாததாலே எழுத முடியலை” என்றார். அந்த அத்தியாயம் கொஞ்சம் சுமார் என்று எழுத்தாளர் சுபா (சுரேஷ்) இன்று காலை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்ததை கவனித்தேன். இந்த பாவம் என்னையே சாரும்.

புதிய தலைமுறை பத்திரிகையாளர் திட்டத்தின்போது வாசித்த இரண்டு கட்டுரைகளை சேர்த்திருக்கிறார். அதை பின்னிணைப்பாக கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். சுவாரஸ்யமான நாவலுக்கு இடையே இரண்டு கட்டுரைகளை அத்தியாயமாக செருகியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

நூலில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் நக்கீரன் அண்ணாச்சியைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’. அண்ணன் கோபால் அவர்களைப் பற்றி கருணாகரன் சார் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட பல விஷயங்களே ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு தேறும். அந்த அளவுக்கு அண்ணன் மீது அளவில்லா அன்பும், அளப்பறியா மரியாதையும் கொண்டவர் கருணாகரன். இந்த அத்தியாயத்தை அவர் ஃபேஸ்புக்கில் எழுதியபோது அவ்வளவு பாராட்டுகள். பிற்பாடு இந்த அத்தியாயம் அப்படியே ‘இனிய உதயம்’ இதழிலும் பிரசுரமானது. குமுதம் வரதராசன் குறித்து அவர் எழுதியிருக்கும் அத்தியாயமும் அபாரம். தன்னுடைய சீனியர்கள் பெரும்பாலானவர்கள் மீது கருணாகரன் சாருக்கு மரியாதையும் பக்தியும் உண்டு. மாலன் சார் குறித்து எழுதியிருக்கும் அத்தியாயத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையுமே, மாலனிடம் பணிபுரிந்த அத்தனை பேரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரே ஒருவரி கூட மிகையாக இருக்காது.

மற்ற பணிகள் மாதிரி இல்லாமல் பத்திரிகையாளன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் பணி அனுபவங்கள் unique ஆனது. உலகில் வேறெவருக்குமே கிடைக்காத அனுபவங்கள் அவனுக்கு மட்டும்தான் சாத்தியம். பத்திரிகையுலகில் நீண்டகாலம் பணிபுரிந்த மூத்தப் பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த மனிதர்களையும் இதுபோல நூலாக எழுதவேண்டும். தங்கள் அடுத்த தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு என்றில்லாமல் இது அனைவருக்கும் பயன்படக்கூடிய விஷயம்தான். தான் வாழும் காலத்தைதான் ஒவ்வொரு பத்திரிகையாளனும் தன்னுடைய பணியாக பதிவு செய்கிறான். அதுவே எதிர்கால வரலாறாகவும் ஆகிறது. நமக்கு பின்னால் எத்தனையோ ஆண்டுகள் கழித்து எவனோ ஒருவன் வரலாற்றை தொகுக்க தேடும்போது, இம்மாதிரி நூல்கள் அவனுக்கு வெகுவாக உதவும்.

அந்த கால கல்கியை தெரிந்துக்கொள்ள வாண்டுமாமாவின் ‘எதிர்நீச்சல்’, குமுதத்தை அறிந்துக்கொள்ள ‘எடிட்டர் எஸ்.ஏ.பி’, சாவியை உணர ‘சாவியில் சில நாட்கள்’ என்று பத்திரிகையாளர்களுக்கென்றே பிரத்யேகமாக முன்னுதாரண நூல்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்தவரிசையில் வரும் ‘காகிதப்படகில் சாகசப் பயணம்’ நூலும் மாபெரும் வெற்றி காணும் என்று வாழ்த்தி என்னுடைய நீண்ட உரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பேச (எழுத) வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி!

(பலத்த கைத்தட்டல்)

நூல் : காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர் : பெ. கருணாகரன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : குன்றம் பதிப்பகம்,
73/31, பிருந்தாவனம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
ஃபேஸ்புக் : https://www.facebook.com/perumal.karunakaran.1
மின்னஞ்சல் : pekarunakaran@gmail.com

October 27, 2014

பஞ்சாபி லஸ்ஸி

“சார் போஸ்ட்!” என்று வாசலில் தபால்காரரின் சப்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த அம்புஜம் போட்டது போட்டபடியே ஓடினாள் – என்று எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆயிரக்கணக்கானோரால் சிலிர்ப்பாக வாசிக்கப்பட்ட தமிழ் சிறுகதைகள் கடந்த இருபது ஆண்டுகளில் அடைந்திருக்கும் பரிணாமம் பாராட்டத்தக்கது.

கே.என்.சிவராமன் தினகரன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் ‘தேங்க்ஸ்’ கதையின் தொடக்க வரியே இவ்வளவுதான் “காரணம். அம்மா”.

வர்ணனைகள் இல்லை. கதாசிரியரின் தத்துவ சிந்தனை கோட்பாட்டு அலசல் இல்லை. வாசகனுக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்யும் விளக்கங்கள் அறவே இல்லை. ‘நறுக்’கென்று கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து ஒரே ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.

சுஜாதா செத்துப்போன பிறகுதான் அவர் சொல்லியபடி கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.

* * * * * * * * * *

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று அந்த ஆசை தோன்றியது. மொத்த ஷெல்ஃபையும் அலசிப் போட்டு அந்த புத்தகத்தை தேடியெடுத்து விடியும் வரை படித்தேன். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’. மறுநாள் இரவு ஒரு பிரஸ்மீட்டில் இருந்தபோது குறுஞ்செய்தி வந்தது. “சுஜாதா காலமானார்”.

போனவாரம் எஸ்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது என்று கேள்விப்பட்டு, கடைக்கே வராத புத்தகம் வேண்டும் என்று நியூபுக்லேண்ட்ஸ் முன்பு தர்ணா செய்து, மேனேஜர் சீனிவாசன் எங்களுக்காக எப்படியோ புத்தகத்தை வரவழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து நடு இரவில் புத்தகத்தைப் புரட்டினேன். மறுநாள் முற்பகலில் வந்த செய்தி. “எஸ்.எஸ்.ஆர் இறந்துவிட்டார்”

பயமாக இருக்கிறது. எனக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி திடீரென்று ஏற்பட்டிருக்கிறது.

* * * * * * * * * *

‘ஃபெஸ்டிவல் மூட்’ என்றொரு ‘மாஸ் மெண்டாலிட்டி’ இருக்கிறது. சினிமா, பத்திரிகை என்று வெகுஜனத் தளங்களில் பணிபுரிபவர்கள், மக்களின் இந்த மனோபாவத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும். எம்.ஜி.ஆரும், ரஜினியும், குமுதமும், சரவணா ஸ்டோர்ஸும் அடைந்த மகத்தான வெற்றிகளுக்கு, மாஸ் மீதான அவர்களது ஆழ்ந்த புரிதலே காரணம்.

தீபாவளிக்கு ஷாருக் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை காணும்போது, வடஇந்தியாவில் மக்கள் கூட்ட கூட்டமாக ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ரிலாக்ஸான மனநிலையில் இருக்கும் மக்களின் மத்தியில் அன்பேசிவமோ, விவசாய சிறப்பிதழோ எடுபடாது. பர்ஸ்ட் நைட் ஸ்பெஷலாக எந்த மாப்பிள்ளையாவது நங்கநல்லூர் போய் ஆஞ்சநேயரை வழிபடுவாரா?

* * * * * * * * * *

சேகுவேரா ஒரு டெர்ரர். இதயத்துடிப்பை நிறுத்திவிட்ட சே-வின் கண்கள் மட்டும் திறந்துக் கிடந்தன. அவரது உடலை கைப்பற்றப் போன அமெரிக்க வீரர்கள் சே-வின் உயிரோட்டமான பார்வையை பார்த்து மரணபயத்தை உணர்ந்தது வரலாறு. சே மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் அமெரிக்கர்கள் சே-வை பார்த்து பயந்து பயந்து சாகிறார்கள். இறந்த பின்னாலும் ஒரு மனிதன் தன்னுடைய எதிர்தரப்பினரை ஆயுளுக்கும் ராவில் பயத்தில் உச்சா போக வைக்க முடியுமா?

நம்மூரில் பெரியார் இன்னமும் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.

* * * * * * * * * *

“இந்தி திணிக்கப்பட்டால் மொழிப்போர் வெடிக்கும்” என்று ‘நாம் தமிழர்’ சீமான், மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்.

இன்னமும் தமிழர்கள் மீது சீமானுக்கு இவ்வளவு நம்பிக்கை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் முதல்வருக்கு நீதி கிடைக்க அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைக்கும் வரை மொழியோ, இனமோ, ஊனோ, உறக்கமோ தமிழர்களுக்கு பொருட்டே அல்ல.

* * * * * * * * * *

ஸ்ருதிஹாசன், சமந்தாவையெல்லாம் மறந்துடுங்க. டோலிவுட்டே இப்போது ரகுல் ப்ரீத் சிங்கைதான் கொண்டாடுகிறது. இருபத்து நாலு வயசு இளமைப் பெட்டகம். திக்கான பஞ்சாபி லஸ்ஸி.

2009ல் ‘7ஜி ரெயின்போ காலனி’ கன்னடத்தில் ரீமேக்கப்பட்டபோது அனிதாவாக அறிமுகம். தமிழில் ‘தடையறத் தாக்க’வில் செகண்ட் ஹீரோயின், ‘புத்தகம்’ மற்றும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் ஹீரோயின். இதுமாதிரி லோ மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களில் காமாசோமோவென்றுதான் நடித்துக் கொண்டிருந்தார். ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ஸில் இவரது கிளாமர் பச்சக்கென்று டாலடிக்க, “இந்த பொண்ணு கிட்டே ‘என்னமோ ஏதோ’ இருக்கு” என்று அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்கள் இவரை புக் செய்தார்கள்.

லேட்டஸ்ட் ஹிட்டான கோபிசந்த் நடித்த ‘லவுகியம்’தான் ஜாக்பாட். படத்தில் இவர் தோன்றும் முதல் காட்சியே க்ளோஸ் அப்பில் ‘தொப்புள் தரிசனம்’தான். பத்து நொடிகள் தோன்றும் அந்த ஷாட்டை திரும்பத் திரும்ப பார்ப்பதற்கென்றே தெலுங்கு ரசிகர்கள் பத்துக்கும் மேற்பட்ட தடவை திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள்.

மனோஜ் மஞ்சுவின் ‘கரண்ட் தீகா’வில் சன்னிலியோனுக்கு சவால்விடும் அளவுக்கு கவர்ச்சி விருந்து. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜாவின் கிக்-2 படத்திலும் ஹீரோயின். வருட தொடக்கத்தில் பாலிவுட்டிலும் ‘யாரியான்’ மூலம் கணக்கை தொடக்கியிருக்கிறார். அடுத்து ரமேஷ்சிப்பியின் ‘சிம்லா மிர்ச்சி’. பவன் கல்யாணின் கப்பார் சிங்-2விலும் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள்.

இந்தியத் திரையுலகை புரட்டிப்போட கிளம்பியிருக்கும் இந்த புயல், தமிழ்நாட்டை மீண்டும் எப்போது தாக்கும் என்று தெரியவில்லை. சிம்பு மாதிரி யாராவது மனசு வைக்கணும்.

* * * * * * * * * *

2006லிருந்து 2010 வரை. தமிழில் வலைப்பதிவுகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ட்விட்டர், ஃபேஸ்புக் என்று மைக்ரோப்ளாக்கிங் சிஸ்டம் வந்து வலைப்பதிவுகளை விழுங்கிவிட்டது. ஆனாலும் இன்னமும் ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் நடக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. எனக்கெல்லாம் ப்ளாக்கில்தான் வசதியாக ஆற, அமர ஆடமுடிகிறது. அதனால்தான் நேரமே இல்லையென்றாலும், மூளையில் சரக்கே இல்லையென்றாலும் வவ்வால் மாதிரி வலைப்பதிவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ப்ளாக் எழுதுபவர்கள் சிக்கன நடவடிக்கையாக 2000 – 3000 வார்த்தைகளில் எழுதாமல் 500 – 700 வார்த்தைகளில் சுவாரஸ்யமாக எழுதிப்பழக வேண்டும் என்று ஏதோ ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் ‘மூத்தப் பதிவர்’ என்கிற முறையில் அட்வைஸ் செய்திருந்தேன். வாசகர்களை (!) துடிக்க துடிக்க கொல்லக்கூடாது இல்லையா? நிறைய இளம்பதிவர்கள் அப்போது எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிண்டல் அடித்தார்கள். அனேகமாக அந்த பதிவர்களும் இப்போது 50 – 100 வார்த்தைகளில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போதும் சொல்கிறேன். வலைப்பதிவுகள் முற்றிலுமாக பிராணனை விட்டுவிடக் கூடாது என்றால், மைக்ரோப்ளாக்கிங் தரும் சுவாரஸ்யத்தை மேக்ரோப்ளாக்குகளும் தரும் விதத்தில் எழுதவேண்டும். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்திருப்பது மட்டும் போதாது. கட்டுரைகளின் வடிவ நேர்த்தியும் அவசியம். கவிதை, சினிமா விமர்சனம், கதை, அரசியல், இலக்கியம் என்று எதை எழுதினாலும் லேசாக ‘மீறி’ பார்க்கலாம். நாலு தோசை சுட்டுப் பார்த்தால்தான் ஒரு தோசையாவது உருப்படியாக வரும்.

September 6, 2014

வாழ்த்துகள் நண்பா!

ஆரம்பத்தில் சாருவின் வாசகராகதான் அந்த நண்பர் அறிமுகமானார். எப்போதுமே கார்ப்பரேட் டிரெஸ் கோடில் பளிச்சென்றுதான் இருப்பார். நிறைய பேசுவார். பேச்சுக்கு இடையே ‘டக் டக்’கென்று ஏதாவது ஒரு வித்தியாசமான கேள்வியைப் போடுவார். அந்த கேள்விக்கு பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பேச்சை வளர்த்து மேலும் சில கேள்விகளை போடுவார். அவரது பேச்சில் ஒரு faculty தன்மை இருக்கும்.

பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக ‘நமஸ்காரம்’ என்பார். போனில் கூட ‘ஹலோ’வுக்கு பதிலாக ‘நமஸ்காரம்’தான். என் வாழ்க்கையிலேயே எனக்கு ‘நமஸ்காரம்’ மூலம் வினோதமாக வணக்கம் தெரிவிக்கும் ஒரே மனிதர் இவர்தான். கடந்த நூற்றாண்டிலேயே வழக்கொழிந்துப்போன ‘நமஸ்காரம்’ இவருக்கு மட்டும் எங்கிருந்து ஒட்டிக் கொண்டது என்று தெரியவில்லை.

சாருவின் நூல்களில்தான் அவருக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது என்றாலும், பிற்பாடு சாரு அறிமுகப்படுத்திய இலக்கியவாதிகளை வாசித்து தன்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டார். குறிப்பாக ஜெயமோகனின் தீவிர வாசகர் ஆகிவிட்டார். ‘அறம்’, ‘புறப்பாடு’ சீரியஸ்களின் தீவிர வாசகர். “அவரோட மகாபாரதம் சட்டுன்னு புரியலைன்னா கூட, மொழியிலே ஒரு வசீகரம் இருக்கு தலைவா” என்பார்.

பின்னர் எங்களோடு மொக்கை ஃப்லிம் க்ளப் படங்களுக்கு வர ஆரம்பித்தார். பைலட் மாதிரி தரை டிக்கெட் ரேஞ்ச் தியேட்டர்களோடு செட் ஆகாமல் சங்கடப்படுவார். “அடிக்கடி தெலுங்கு படம் போறீங்களே? அப்படி அதுலே என்னதாங்க இருக்கு?” என்று கேட்டு ஜூனியர் என்.டி.ஆரின் ‘பாட்ஷா’வுக்கு கூட வந்தார். படம் மட்டுமல்ல. படம் பார்த்த ஆடியன்ஸும் அவரை மிரட்சிப்படுத்தி விட்டார்கள் போல. அதிலிருந்து படம் பார்ப்பதையே விட்டுவிட்டார். “டிவியிலே கூட சினிமா போட்டா பார்க்குறதில்லைங்க” என்கிறார்.

ஒரு மாதிரி மிடுக்கான நடை, உடை, பாவனையோடு இருந்த அவரை ‘பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்’ என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தோம். பொதுவாக எங்கள் செட் நண்பர்கள், மற்றவர்களின் ‘டூ பர்சனலான’ தகவல்களில் தேவையின்றி ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரம் போக்கு சரியில்லை என்றால் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை.

ஏனோ தெரியவில்லை. ஒரு நாள் டீக்கடை சந்திப்பில் மனம் திறந்து பேச ஆரம்பித்தார்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டம் ஒன்றில் பிறந்தவர். அப்பா லாரி டிரைவர். படுமோசமான ஏழ்மை. பள்ளியில் நன்றாக படித்திருந்தாலும், கல்லூரியில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதியில்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை. பெட்ரோல் போடும் நேரம் போக மற்ற கணக்கு வழக்குகளிலும் முதலாளிக்கு உதவியிருக்கிறார். ‘டிகிரி படிச்சவன் மாதிரி வேலை பார்க்குறானே’ என்று ஆச்சரியப்பட்ட முதலாளி விசாரித்திருக்கிறார். குடும்பச்சூழல் காரணமாக மேற்படிப்புக்கு வாய்ப்பில்லை என்று இவர் சொன்னதும், ‘ஏதோ கம்ப்யூட்டர்னு சொல்றாங்களேப்பா, அதுலே ஏதாவது கோர்ஸ் படியேன்’ என்பது மாதிரி அறிவுறுத்தியிருக்கிறார்.

அப்படிதான் ஏதோ ஒரு ஷார்ட் டெர்ம் டிப்ளமோ கோர்ஸில் சேர்ந்தார். இவருடைய சின்சியாரிட்டியை பார்த்த அந்த இன்ஸ்டிட்யூட், இவரது கோர்ஸ் முடிந்ததும் இவரையே ஃபேகல்டியாக பணிக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வகுப்பு முடிந்ததும் கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருப்பார். இண்டர்நெட்டில் தேடித்தேடி நிறைய தளங்களை பார்த்து புரோகிராமிங் கற்றார். மேலும் அறிவு பெறுவதற்காக ஏதோ கோர்ஸில் இணைந்து codingல் விற்பன்னர் ஆனார்.

சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் சொற்ப சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. சம்பளத்தை பற்றிய பிரக்ஞையை மறந்து சின்சியராக வேலை பார்க்க, துறையில் சொல்லிக் கொள்ளும்படி பெயர் பெற்றார். டிகிரியே இல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பெற்ற அனுபவம் அவரை உயர்த்தியதின் காரணமாக இன்று இன்னொரு மென்பொருள் நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கிறார். நல்ல சம்பளம் என்பதைத் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

ஊரில் இருந்த குடிசைவீட்டை அகற்றி மாடிவீடு கட்டினார். சகோதரிக்கு திருமணம் செய்துவைத்தார். பெற்றோரை நன்கு பார்த்துக் கொள்கிறார். பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த குடும்பச் சூழலையே மாற்றி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

இவரது கதையை கேட்டதுமே, “பாஸ், எங்க பத்திரிகைக்கு பேட்டி கொடுங்களேன்” என்று முந்திரிக்கொட்டை தன்மையாக கேட்டேன். ‘பெட்ரோல் பங்க் ஊழியர் இன்று சாஃப்ட்வேர் நிறுவன உயர் அதிகாரி’ என்று டப்பென்று ஒன்லைனர் ரெடி ஆனது. ‘நமஸ்காரம்’ சொல்லி, “ஆளை விடுங்க” என்று எஸ்கேப் ஆனார். “போட்டோவெல்லாம் பெருசா போடுவோம் தலைவரே” என்றாலும் வேண்டாமென்று மறுத்துவிட்டார். “தன்னம்பிக்கை கதைதான்னாலும் அனுதாபம் தேடறமாதிரி ஆயிடும். ஒவ்வொருத்தனும் இதுமாதிரி போராடித்தானே முன்னுக்கு வர்றான், நான் மட்டும் என்ன ஸ்பெஷல்?” என்று மறுத்துவிட்டார். அதனால் என்ன? இதோ இங்கே எழுதிவிட்டேனே.

சென்னையிலேயே நீண்டகாலம் தனியாகதான் வசித்து வந்தார். “கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா?” என்று கேட்போம். “பார்த்துக்கிட்டிருக்காங்க. ஜாதகம் எதுவும் செட் ஆகமாட்டேங்குது. நமக்கு லவ்வு பண்ணவும் துப்பு இல்லே” என்று நொந்துக் கொள்வார்.

நடுவில் எங்களுக்குள் கொஞ்சம் கேப். அவருக்கு பணிரீதியாக அநியாயத்துக்கு பளு. திடீரென ஒருநாள் அலுவலகம் வந்தவர் தன்னுடைய திருமணப் பத்திரிகையை வெட்கத்தோடு நீட்டினார். நாளைக்கு கல்யாணம். இதோ கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் நண்பா!

August 7, 2014

சதுரங்க வேட்டை

வானத்தின் கன்னம் கருத்திருந்திருந்தது. முணுக்கென்றால் பிரளயமாய் பெருமழை கொட்டிவிட தயாராய் இருந்த கருமாலைப் பொழுது. என்னைப் பார்க்க அலுவலகத்துக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு விருந்தோம்பல் செய்யும் பொருட்டு அலுவலக வாசலில் இருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கடைக்குள்ளே நான்கைந்து திருநங்கையர் பஜ்ஜி, சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

டீ மாஸ்டர் அவர்களை ஏதோ பச்சையாக கலாய்த்துக் கொண்டிருக்க, அவர்களும் பதிலுக்கு கலகலப்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு தேநீர்க் கோப்பைகளோடு வெளியே வந்தோம். சற்று தள்ளிப்போய் நின்று ஜிகர்தண்டா, பின்நவீனத்துவம் என்று பேசிக்கொண்டே தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.

கடை வாசலில் திடீர் சலசலப்பு. திருநங்கையரில் சிலர் வெளியே நின்றிருந்தவர்களின் தலையில் கை வைத்து ஏதோ மந்திரம் மாதிரி முணுமுணுத்து காசு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து அவர்களை விரட்டினார்கள். வேறு சிலர் அவர்கள் தங்களை தொட்டுவிடக் கூடாதே என்று ஒருமாதிரியான அருவருப்பும் உணர்வோடு இருப்பது மாதிரி விலகி ஓடினார்கள். சிலர் அவர்களை கிண்டல் செய்து, வழக்கமாக அவர்களை வசைபாடும் வார்த்தைகளை கூறி ஆபாசமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இருபது வயது பையன் ஒருவனை ஆசிர்வதித்து காசு கேட்க, அவன் நெருப்பை மிதித்தது போல பரபரவென்று வாகனங்களுக்கு இடையே ஓடி சாலையின் மறுபுறம் நோக்கி ஓடினான்.

அவனை துரத்திக்கொண்டு ஓடிய திருநங்கைக்கு நாற்பது வயது இருக்கும். கரேலென்று தாட்டியாக இருந்தார். சிகப்பு ஜாக்கெட். மஞ்சள் புடவை. நெற்றியில் பெரிய அளவில் வட்டமாக குங்குமம். பையன் தப்பித்துவிட்டதால் பரிதாபமாக நாங்கள் இருந்த பக்கமாக வந்தார். எங்களை நெருங்கியவர் சடாரென்று திரும்பிப் பார்த்து, சட்டென்று என் தலையில் கைவைத்து ஏதோ மந்திரம் சொல்லத் தொடங்கினார்.

“எம் மவன் நல்லா வரணும் நீயி” என்று சொல்லிவிட்டு கைநீட்டி காசு கேட்டார்.

அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய சராசரிகளை போல நானும் நடந்துகொள்ள முடியாது. ஏனெனில் நான் சராசரி அல்ல. முதன்மையாக இணையப் போராளி. ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்கர், லிங்க்ட் இன், ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ உள்ளிட்ட ஏராளமான இணையத் தளங்களில் எனக்கு அக்கவுண்டு உண்டு. தற்போது தமிழில் எழுதப்படும் இலக்கியங்களை படிக்கிறேனோ இல்லையோ எது எதுவெல்லாம் இலக்கியம், யார் யாரெல்லாம் இலக்கியவாதிகள் என்று தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். மாதாமாதம் சில இலக்கியப் பத்திரிகைகளை படிக்கிறேன். நண்பர்களோடு சாதாரணமாக எதையாவது பேசும்போது, “அயன் ராண்ட் இதைப்பத்தி என்ன சொல்றாங்கன்னு பார்த்தீங்கன்னா...” என்று ஆரம்பித்து, அவர்களை தாழ்வுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறேன். சகட்டுமேனிக்கு மார்க்ஸ், நோம்சாம்ஸ்கி, சீமான் தெ பொவார், ஜே.கிருஷ்ணமூர்த்தி, பெரியார் என்று பெயர்களை உச்சரிப்பதால் நான் கொஞ்சம் ஸ்பெஷல். எனவே நான் உண்மையாகவே அப்படி இல்லையென்றாலும், நான்கைந்து பேராவது என்னை இண்டெலெக்ச்சுவல் என்றோ அல்லது நிறைய வாசித்து பண்பட்ட தரமான இலக்கிய வாசகன் என்றோ மூடத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட நான் மற்ற சராசரிகளை மாதிரி அவரை அணுகுவது சரியல்ல என்று என் இலக்கிய மனதுக்கு பட்டதால், பாக்கெட்டில் இருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து, சுற்றும் முற்றும் பந்தாவாக நோட்டம் விட்டு அவரிடம் கொடுத்தேன். நான் எதிர்ப்பார்த்த மாதிரியே அங்கே இருந்த சராசரிகள் அசந்துவிட்டார்கள்.

இருபது ரூபாயை நோட்டை வாங்கியவர், அதை எடுத்து என் முகத்தை சுற்றி திருஷ்டி மாதிரி கழித்தார். முணுமுணுவென்று ஏதோ மந்திரங்களை உதிர்த்தார்.

“அய்யோ. எம் புள்ளைக்கு பணத்தோட அருமையே தெரியலையே?” என்று வேதனைப்பட்டு விட்டு, “எனக்கு இந்த காசு வேணாம். பத்து ரூபாய் மட்டும் இருந்தா கொடு” என்றார்.

பணத்தின் மீது எந்த பிரேமையும் சற்றும் இல்லாத அந்த திருநங்கை, எனக்கு ருஷ்ய பேரிலக்கிய நாவல் ஒன்றின் கதாபாத்திரம் மாதிரியே தோன்றினார். சிலிர்த்தமாதிரி தோளை குலுக்கிக் கொண்டு பெருந்தன்மையாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னேன்.

“பரவால்லக்கா. வேற காசு இல்லை. வெச்சுக்கங்க”

“அப்படின்னா எனக்கு இந்த காசே வேணாம். செவ்வாய்க்கிழமை அதுவுமா இவ்ளோ பெரிய மனசோட புள்ள கொடுத்திருக்கே. நீ நல்லா இருக்கணும். காலத்துக்கும் லஷ்மி உங்கூடவே இருக்கணும். உதவி செய்யுற இந்த மனசு சாகுறவரைக்கும் உனக்கு அப்படியே அமையணும்”

அக்கா எனக்கு சிண்ட்ரெல்லா மாதிரி தேவதையாக தெரிந்தார். இம்முறை நிஜமாகவே மெய்சிலிர்த்துவிட்டேன். பக்கத்தில் இருந்த நண்பரும் இதே மாதிரி மெய்சிலிர்த்தார். அவரும் இலக்கியவாதிதானே? சட்டென்று ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அக்காவிடம் நீட்டினார்.

“அம்மா செவ்வாய்க்கிழமை அதுவுமா மந்திரிச்சி கொடுக்கறேன். இந்த காசை செலவு பண்ணாமே பத்திரமா வெச்சிருக்கணும். காலத்துக்கும் உன் பர்ஸுலே காசு நிக்கும். பர்ஸை காட்டு, நானே வெச்சிடறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

என்னதான் திராவிட இயக்கத்து பகுத்தறிவு நம் ரத்தத்தில் ஊறியிருந்தாலும், நாம் இதுவரை வாழ்க்கையில் சந்தித்தே இராதவர் அடுத்தடுத்து, நம்மை வள்ளல் ரேஞ்சுக்கு அவ்வளவு பேர் மத்தியில் ஒரு பொதுஇடத்தில் புகழ்ந்துக்கொண்டே இருந்தால் ‘ஜிவ்’வென்று இருக்கத்தானே செய்யும்? அனிச்சையாக பர்ஸை எடுத்தேன். பட்டென்று பிடுங்கினார். பர்ஸைப் பிரித்தார். உள்ளே நான்கு நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது. கையில் எடுத்தார்.

திடீரென்று நிகழ்ந்துவிட்ட இந்த அசம்பாவிதத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. “காசை எடுக்காதே!” என்று கத்தினேன்.

“இரு மகனே. இதையும் மந்திரிக்கணும்” என்று சொல்லியவாறே, பர்ஸை என் கையில் கொடுத்துவிட்டு சட்டென்று மொத்த ரூபாயையும் (நாலு நூறு ரூபாய் நோட்டு, தலா ஒரு இருபது மற்றும் பத்து என்று மொத்தம் நானூற்றி முப்பது ரூபாய்) இரு கைகளுக்கும் நடுவில் வைத்து, கால்களை விரித்து தொடைகளுக்கு நடுவே வைப்பது மாதிரி வைத்து, “என்னோட யோனியில் (இலக்கிய அந்தஸ்துக்காக இந்த சொல்லை பயன்படுத்தினேன். அவர் உண்மையில் சொன்னது இந்த உறுப்பை விளிக்கும் கொச்சையான சொல்தான்) வெச்சிட்டேன். அம்மனுக்கு போயிடிச்சி. ஊர்லே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம். கெடா வாங்கி விட்டிருக்கேன். அதுக்கு சரியா போச்சி இந்த காசு!” என்றார்.

இந்த உளவியல் தாக்குதலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்படி எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.

“யக்கா. இன்னும் சம்பளம் கூட வரலை. செலவுக்கு இந்த காசுதான் இருக்கு. நூறு ரூபாய் எடுத்துக்கிட்டு மீதியை கொடுத்துடு”

அவர் கொடுப்பதாக தெரியவில்லை. நான் கொஞ்சம் குரலை உயர்த்தி பேச ஆரம்பித்தேன். அவரது சகாக்கள் வரிசையாக அவர் பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள். ஒரு கேங்ஸ்டர் படத்தில் ‘டான்’ ஓபனிங் சீன் மாதிரி இருந்தது அந்த காட்சி. என் குரல் தாழ்ந்து, மீண்டும் கெஞ்சல் தொடங்கியது.

என் கெஞ்சலை தாங்கமுடியாத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, பெரிய மனசு வைத்து இருநூறு ரூபாயை மட்டும் திருப்பித் தந்தார். “டேய், அம்மனுக்கு காசுன்னு கேட்டாகூட முழு மனசா கொடுக்க மாட்டேன்றே பாடு!” என்று சொல்லிவிட்டு, வேறு சில வசைச்சொற்களை உதிர்த்தவாறே வேகமாக இடத்தை காலி செய்தார்கள்.

ஆக, என்னுடைய மனிதநேயத்தை காட்டிக்கொள்ள நேற்று நான் செய்த செலவின் குறைந்தபட்ச சில்லறை விலை (வசைகள் உட்பட) ரூபாய் இருநூறு மட்டுமே.

May 15, 2014

முதலாளித்துவத்தை எப்படி புரிந்துகொள்வது?

இது நடந்து பத்து, பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். அப்போது சகோதரியின் திருமணத்துக்காக நிறைய கடன் வாங்கியிருந்தேன். சம்பளத்தின் பெரும்பகுதி அலுவலகத்தில் வாங்கிய லோனில் கழிந்துக் கொண்டிருந்தது. வெளியே வட்டிக்கு வாங்கிய கடன், நகை அடகு வைத்தது என்று கழுத்து நெறிபட்டுக் கொண்டிருந்தது. எனவே கூடுதலாக சம்பாதிக்கும் பொருட்டு, வலிந்து நானாக ‘ஓவர்டைம்’ செய்துக் கொண்டிருந்தேன். எட்டு மணி நேர வேலைக்கு போக மீதி நேரம் செய்யும் வேலையெல்லாம் ஓ.டி.யில் ஒன்றரை மடங்கு கூடுதல் சம்பளமாக கிடைக்கும். தொடர்ச்சியாக முப்பத்தியாறு மணி நேரமெல்லாம் கண்விழித்து ஓ.டி. செய்திருக்கிறேன்.

ரொம்ப அலுப்பாக இருந்த ஒரு நாளில் இரவு ஒன்பது மணிக்கு கிளம்பலாம் என்று முடிவெடுத்தேன். எம்.டி. அவரது அறைக்கு அழைத்தார். எம்.டி., பிரெசிடெண்ட், சேர்மேன் என்று இன்று நிறைய பெயர்கள் சொல்லி அழைத்தாலும் முதலாளி முதலாளிதான். ஒரு பெரிய ஃபைலை கையில் கொடுத்தார். “நாளைக்கு காலையிலே பத்தரை மணிக்கு பிரசண்டேஷன். எல்லாத்தையும் ரெடி பண்ணிடு”. புரட்டிப் பார்த்த எனக்கு உலகமே தலைகீழானது. ஒரு வார உழைப்பை கோரும் வேலையை ஒரே இரவில் முடித்தாக வேண்டும்.

நேராக ஒர்க் ஸ்டேஷனுக்கு வந்தேன். இலக்கில்லாமல் கீபோர்டுகளை தட்டினேன். இது ஒரு எளியவழி. ஒரு வேலையை எப்படி தொடங்குவது என்று தெரியாவிட்டால், இம்மாதிரி கன்னாபின்னாவென்று கீபோர்டை தட்டிப் பாருங்கள். எங்கோ ஒரு பொறி கிளம்பி, வேலையை எளிதாக முடிக்க ‘ஐடியா’ தோன்றும்.

அன்று பொறியோ, நெருப்போ கிளம்பவில்லை. “...............பசங்க. தூங்கவே விட மாட்டானுங்க”, என்று முதலாளியின் அம்மாவுடைய கற்பை கேள்விக்குள்ளாக்கும் அந்த வசைச்சொல்லை சத்தமாக சொல்லிவிட்டு, பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சக ஊழியரைப் பார்த்தேன். திகில் படத்தில் வரும் ஹீரோயின் மாதிரி விழிபிதுங்க, முடியெல்லாம் நட்டுக்கொள்ள பீதியாக காட்சியளித்தார். சட்டென்று திரும்பிப் பார்த்தால் எம்.டி. நின்றுக் கொண்டிருந்தார்.

எப்படி ’ரியாக்ட்’ செய்வதென்று தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் அலுவலகத்தில் இருந்து ஓட்டமும், நடையுமாக கிளம்பினேன். கீழே தேநீர்க்கடைக்கு போய் என் எதிர்காலத்தை சிந்திக்க ஆரம்பித்தேன். கடன் பட்டார் நெஞ்சம் எப்படி கலங்குமென்று அன்றுதான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். தேநீரின் இனிப்பும், புகைமூட்டமுமான அச்சூழலில் “எது நடந்தாலும் நன்மைக்கே” என்கிற கீதையின் உபதேசத்தை ஏற்றுக்கொண்டு அலுவலகப்படி ஏறினேன். பக்கத்து சீட்டு ஊழியர், “எம்.டி. நாலஞ்சி வாட்டி போனில் கூப்பிட்டாரு” என்றார். அடிவயிற்றில் மீண்டும் அச்சப்பந்து எழுந்தது.

அமைதியாக போய் அவர் முன்பாக நின்றேன்.

“கிச்சு கண்ணா வாடா” அன்பொழுக அழைத்தார். சுனாமியை எதிர்ப்பார்த்துச் சென்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.

“சாப்பிட்டாச்சா? வேலை ரொம்ப டைட்டா இருக்கோ? ஒருவாரமா முகத்துலேயே டென்ஷன் தெரியுது. பிரச்சினையில்லை. உதவிக்கு ப்ரீலான்ஸுக்கு யாராவது கிடைக்கிறாங்களான்னு பாரு”

“ஓக்கே சார்”

“பீர் அடிக்கிறியா? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்” சொல்லிவிட்டு “ராஜா... ராஜா...” என்று ஆபிஸ்பையனை அழைத்தார்.

“அதெல்லாம் வேணாம் சார். வேலை நிறைய இருக்கு”

ராஜா வந்தான். “ஆபிஸ்லே எல்லாருக்கும் என்னென்ன வேணும்னு கேட்டு நல்ல ஃபுட் வாங்கிட்டு வா” என்று சொல்லி, நான்கைந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தார். டேபிள் டிராயரை திறந்தார். எதையோ எடுத்து என்னவோ கிறுக்கினார். கிழித்து என்னிடம் தந்தார். செக். என்னுடைய ஒரு மாத சம்பளம் அதில் எழுதப்பட்டிருந்தது.

“முன்னாடியே கொடுக்கணும்னு நெனைச்சேன். மறந்தே போயிட்டேன். ஹார்ட் ஒர்க்கர்ஸை எப்பவுமே நம்ம கம்பெனி நல்லா கவனிக்கும். உங்கிட்டே செல்போன் இல்லை இல்லையா. நல்ல போன் ஒண்ணு வாங்கிட்டு பில்லை அக்கவுண்ட்ஸில் கொடுத்துடு. செட்டில் பண்ணிடறேன்” என்றார்.

சில நிமிட நேரத்துக்கு முந்தைய என் செய்கைக்கு வெட்கப்பட்டுக் கொண்டு, வேதனைப்பட்டுக் கொண்டு குற்றவுணர்ச்சியோடு நகர்ந்தேன். “ச்சே... நம்ம முதலாளியைப் போய் அப்படி பேசிட்டோமே....”. அன்றிரவு எந்திரன் சிட்டி ரோபோ மாதிரி அசுரவேகத்தில் அனாயசமாக வேலை பார்த்தேன்.

அப்போதைக்கு என்னை ‘ஹேப்பி’ செய்த எம்.டி. அடுத்த இரு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவரது ‘கெத்’தை காட்ட ஆரம்பித்தார். எவ்வளவுதான் பர்ஃபெக்டாக வேலை செய்தாலும், அதில் ஏதோ ஒரு குறையை கண்டுபிடித்து எல்லார் முன்பாகவும் கத்துவார். ஆனால் தனிமையில் பேசும்போது லீவே போடாமல் அலுவலகத்துக்கு வரும் என் சின்சியாரிட்டியை பாராட்டுவார். நேரம் காலம் பார்க்காமல் உழைப்புக்கு தயாராக இருக்கும் என்னுடைய தன்மையை கொண்டாடுவார். அந்த ஆண்டு சம்பள உயர்வு, ஓபி அடிப்பவர்களுக்கு எல்லாம் ஓஹோவென்று விழ எனக்கு பெயருக்கு ஏதோ ஒரு சொற்பத்தொகைதான் போடப்பட்டது.

இதுதான் முதலாளித்துவம்.

இதே மாதிரி –ஆனால்- வெவ்வேறான அனுபவம் பல்வேறு நிறுவனங்களிலும் எனக்கு கிடைத்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் லட்சக்கணக்கான பக்கங்களில் முதலாளித்துவத்தை தியரிட்டிக்கலாக விளக்குகிறார்கள். ஆனால் உங்களுக்கு இம்மாதிரி கிடைக்கும் தனிப்பட்ட அனுபவங்களில்தான் முதலாளித்துவத்தின் முழுவீச்சை உணரமுடியும். எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற நம்பிக்கையை ஒரு நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது. காண்ட்ராக்ட் காலம் முடிந்த நிலையில் ஒப்பந்தத்தை அவர்கள் நீட்டிக்கவில்லை. அந்நிலையில் ஒரு சிறு உதவிக்காக வைஸ் பிரெசிடெண்டுக்கு அனுப்பியிருந்த மடலுக்கு எப்படி பதில் வந்தது தெரியுமா. “நீங்கள் எங்கள் ஊழியராக இல்லாதபோது நாங்கள் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்?”

“சாப்பிட்டீர்களா?” என்று விசாரித்த முதலாளிகள் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறார்கள். “தூங்கினீர்களா?” என்று இதுவரை யாருமே கேட்டதில்லை. அப்படி கேட்ட முதலாளி யாருக்காவது வாய்த்திருக்கிறார்களா? – இந்த கேள்விக்கான பதிலை சொல்ல சிந்திக்கும்போதுபோது, மேலதிகமாக உங்கள் நினைவுக்கு வரும் சம்பவங்களின் அடிப்படையில் உங்களுக்கு ஓரளவுக்கு ‘முதலாளித்துவம்’ புரிபடலாம்.

உங்களை இரண்டே இரண்டு கேட்டகிரியில்தான் அடைக்க முடியும். ஒன்று நீங்கள் கம்யூனிஸ்டாக இருப்பீர்கள் (அது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்). அல்லது நீங்கள் முதலாளியாக இருப்பீர்கள் (அதுவும் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்). உலகமயமாக்கல் மிக புத்திசாலித்தனமாக இந்த இருவர்க்க நேரெதிர் வேறுபாட்டினை நாமே அறியாதவகையில் ஏராளமான அடுக்குகளை இடையில் ஏற்படுத்தி உருவாக்கியிருக்கிறது. இதுவரை நாம் அறிந்ததிலேயே வெகு சிறப்பான நரித்தந்திர சோசியல் என்ஜினியரிங் கட்டுமானம் உலகமயமாக்கல்தான். மனிதவள மேலாண்மை என்கிற சொல்லைவிட பெரிய ஏமாற்றுவேலையோ, புரட்டோ வேறு எதுவுமில்லை. முழுக்க முழுக்க முதலாளிகளின் நிர்வாக வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் இவை.

முதலாளிகள் முதலாளிகளாக இருப்பதற்கு அவர்களுடைய தர்மப்படி சில நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை நான் முதலாளியாக மாறினால் அது எனக்கும் புரிபடலாம்.

May 6, 2014

புரட்சி படும் பாடு

சில மாதங்களுக்கு முன்பாக நடந்த புரட்சிகர கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். புரட்சிகரமாக பேசிக்கொண்டிருந்த தோழர், முத்தாய்ப்பாக ஒரு புரட்சிகர கருத்தினை முன்வைத்தார். புரட்சிகர கூட்டம் அப்படியே மூக்கின் மேல் விரல் வைத்து புரட்சிகரமாக அதிசயித்தது.

“ஆதிசங்கரர் ஒரு கம்யூனிஸ்ட்”

இதை சொன்னதோடு மட்டுமில்லாமல் தன் கூற்றுக்கான புரட்சிகர ஆதாரங்களையும் அசைக்க முடியாத தர்க்க திறனோடு எடுத்துவைத்து பேசினார். இந்த தகவல் மக்கள் சீனத்தை எட்டி, அங்கே ஆதிசங்கரர் குறித்த புரட்சிகர ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்களில் நடந்து வருவதாக தகவல்.

மார்க்ஸ், லெனின், மாவோ படங்களையடுத்து ஆதிசங்கரரின் படத்தையும் சேர்த்து அச்சிட்டு தொலைக்கவேண்டுமோ என்று புரட்சிகரத் தோழர்கள் பகீர் ஆகிக்கொண்டிருந்த நிலையில், தோழர் ஆறுதலாய் இன்னொரு கூடுதல் கருத்தையும் சொன்னார். “ஆதிசங்கரர் கம்யூனிஸ்ட்டு என்பதற்காக சங்கரமடம் பொதுவுடைமைப் பாதையில் புரட்சிகரமாக செயல்படுவதாக அர்த்தமில்லை. அது பார்ப்பன பாசிஸ வதைக்கூடம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”

புரட்சிகர தோழரை புரட்சிகர பெருமையோடு பார்த்து புரட்சிகரமாக மெய்சிலிர்த்தேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர், புரட்சிதாசன், புரட்சிவெறியன், புரட்சிநேசன் என்று தமிழ்நாட்டில் புரட்சி தண்ணீர் பட்ட பாடாகிவிட்டாலும் இன்னமும் புரட்சி வருமென்ற நம்பிக்கை நமக்கு இல்லாமல் போய்விடவில்லை.

அதே புரட்சிகர தோழரின் அடுத்த புரட்சிகர கூட்டம் போன வாரம் நடந்தது. புரட்சிகர வேட்கையோடு குழுமியிருந்தோம். புரட்சிகர மைக்கை பிடித்த தோழர் புரட்சிகர ஆவேசத்தோடு புரட்சிகர கருத்துகளை தொடர்ச்சியாக புரட்சியாக முழங்கிக் கொண்டே இருந்தார். இந்த புரட்சிகர கூட்டத்திலும் ஒரு புரட்சிகர பிரகடனத்தை அறிவித்தார்.

“புரட்சி வராதுன்னு தெரியும். ஆனாலும் புரட்சி வரும்னு சொல்லி நாம மக்களை திரட்டி போராடிக்கிட்டு இல்லையா? அதுமாதிரிதான் இதுவும்....”

இந்த புரட்சிக் கூட்டத்திலாவது புரட்சிக்கான தேதியை அறிவிப்பார் என்கிற புரட்சிகர எதிர்ப்பார்ப்பில் புரட்சிகரமாக கூடியிருந்த தோழர்கள் சிலருக்கு இந்த புரட்சிகர அறிவிப்பு புரட்சிகர அதிருப்தியை தோற்றுவித்தது. உடனடியாக புரட்சிகர வெளிநடப்பு செய்து, அருகிலிருந்த தோழர் டீக்கடையில் (நாயர்கள் பெரும்பாலும் தோழர்கள்தான்) புரட்சிகர தேநீரும், புரட்சிகர சிகரெட்டும் அடித்தவாறே அடுத்தக்கட்ட புரட்சிகர நடவடிக்கைகளை புரட்சிகரமாக ஆலோசித்தார்கள்.

ஒரு தோழர் முன்வைத்த புரட்சிகர யோசனைதான் ஹைலைட்.

“பேசாம புரட்சித்தலைவியோட இயக்கத்துலே இணைஞ்சிடலாமா?”

May 2, 2014

மணப்பெண் போல வெட்கம்!

தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜே.சி.நந்தகோபாலை அணுகினோம். “ஆளே இல்லாம அவஸ்தை பட்டுக்கிட்டிருந்தேன் சார். தாராளமா வாங்க” என்று நம் கையைப்பிடித்துக்கொண்டு பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார். எவ்வளவு நாளைக்குதான் வாக்குச்சாவடிகளின் வெளியே வெயிலில் நின்றுக்கொண்டு கழுகு மாதிரி அலைவது. பூத்தில் ஏஜெண்டாக அமர்ந்து, வாக்குப்பதிவை கவனித்தால் என்ன. தேர்தலுக்கு முந்தைய நாள் திடீர் ஐடியா. நந்தகோபாலின் அனுமதிப்படிவம் கிடைத்தவுடனேயே ஏஜெண்டாக ஒரு வாக்குச்சாவடியில் அமர்ந்தோம்.


 • அதிகாலை ஆறு மணிக்கே வரச்சொல்லியிருந்தார்கள். ஐந்து ஐம்பத்தி ஒன்பது மணிக்கே அங்கிருந்தோம். கட்சியின் ஏஜெண்டுகள் எல்லாம் சாவகாசமாக ஏழு மணிக்கு மேல்தான் வந்தார்கள். வாக்குப்பதிவை தொடங்குவதற்கு முன்பாக ஏஜெண்டுகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி செயல்படும். எண்ணும்போது எப்படி எண்ணப்படும் என்று இயந்திரத்தில் செயல்முறை விளக்கம் செய்துக் காட்டினார்கள். ‘கண்ட்ரோல் பேனல்’ எனப்படும் இயந்திரத்தில் வாக்குகள் எண்ணிக்கையை எண்ணக்கூடிய பொத்தான்களை அரக்கு கொண்டு ‘சீல்’ வைத்தார்கள். “இனிமேல் வாக்கு மட்டும் பதியப்படும். இதில் வேறெதையும் செய்யமுடியாது” என்று அதிகாரி உறுதியளித்தபிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.
 • வேட்பாளர் பெயருக்கு அருகில் இருக்கும் நீலக்கலர் பொத்தானை அழுத்தியதுமே ‘கீய்ங்’ என்று நீண்ட சப்தம் எழுகிறது. அவ்வளவுதான் வாக்குப்பதிவு. வாக்களிப்பது என்றால் என்னவோ, ஏதோவென்று ஆவலோடு வந்த முதன்முறை வாக்காளர்களுக்கு இம்முறை ‘சப்’பென்று இருக்கிறது. “அவ்வளவுதானா.. முடிஞ்சிடிச்சா?” என்று சந்தேகமாக ஒன்றுக்கு இருமுறை கேட்டுவிட்டு அதிருப்தியோடு கிளம்புகிறார்கள்.
 • ஃபுல் மேக்கப்பில் வந்த இளம்பெண் ஒருவர், “நெயில் பாலிஷை டிஸ்டர்ப் பண்ணாமே ‘மை’ வைங்க” என்று கேட்டுக்கொண்டார். குறும்புக்கார தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே அவரது விரலில் நீளமாக மையை இழுத்துவிட, “என்னங்க, இப்படி பண்ணிட்டீங்க. வீட்டுக்குப் போய் அழிச்சிடலாமா. நெயில்பாலிஷ் ரிமூவரை யூஸ் பண்ணா போயிடுமா?” என்று புலம்பிக்கொண்டே வாக்களித்து விட்டுச் சென்றார்.
 • பொதுவாக கணவர் வாக்களிக்கும் வேட்பாளருக்கு, மனைவி வாக்களிப்பதில்லை போலிருக்கிறது. தம்பதிசமேதரராய் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சண்டை போட்டுக்கொண்டேதான் வீடு திரும்புகிறார்கள்.
 • அம்மா, அப்பாவோடு வாக்களிக்க வரும் குட்டீஸ், தங்கள் விரல்களிலும் ‘மை’ வைக்க வேண்டும். தாங்களும் பொத்தானை அமுக்க அனுமதிக்க வேண்டும் என்று வாக்குச் சாவடியில் திடீர் கு(ட்)டியுரிமை பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் தேர்தல் அதிகாரிகளுக்கு போதும், போதுமென்று ஆகிவிடுகிறது.
 • பலமுறை வாக்களித்தவர்களுக்கு கூட இன்னமும் வாக்களிக்கும்போது பதட்டம் ஏற்படுகிறது. பூத் ஸ்லிப்பை உரிய அதிகாரிகளிடம் காட்டாமல் பூத் ஏஜெண்டு, முதன்மை அதிகாரி, வீடியோ எடுக்கும் கல்லூரி மாணவர்கள் என்று ஒவ்வொருவரிடமாக திருவிளையாடல் தருமி மாதிரி காட்டிக்கொண்டே நுழைகிறார்கள்.
 • இருபது வயது இளம்பெண் ஒருவர் சிரித்துக்கொண்டே வந்தார். வாக்களித்து முடித்ததும் நாணத்தால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தார். வெளியில் இருந்து அவரது தோழிகள் கலாய்த்துக் கொண்டிருக்க, கட்டுக்கடங்காத வெட்கம் பூத்து புது மணப்பெண் மாதிரி ஓடினார்.
 • இன்னொரு இளம்பெண் ஒருவருக்கு அவருக்கு பதிலாக வேறு ஏதோ ஒரு ஆயாவின் போட்டோ வந்துவிட்டது. “நான் நாப்பது வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருப்பேன்னு உங்க எலெக்‌ஷன் கமிஷன் கிராஃபிக்ஸ் பண்ணி போட்டோ போட்டிருக்காங்க” என்று கோபத்தோடு சொல்லிக்கொண்டே, வாக்களித்துவிட்டுச் சென்றார். பட்டியலில் போட்டோ மாற்றம், பெயர் மாற்றம் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். ஒரு தெருமுழுக்க இருந்த வாக்காளர்களுக்கு கணவர் பெயர்/தந்தை பெயர் பகுதியில் ஒரே ஒருவரின் பெயரே இடம்பெற்றிருந்தது. “இதனாலே வீட்டுலே பெரிய பிரச்சினைங்க” என்று அவர் மூக்கால் அழுதுக்கொண்டே புகார் சொல்லிவிட்டு வாக்களித்தார். வாக்காளர் அட்டை இருக்கிறது, ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை மாதிரி ஏகப்பட்ட புகார்கள்.
 • எண்பத்தேழு வயது வாக்காளர் ஒருவர் தள்ளாடியபடியே வந்து மனைவியின் உதவியோடு (அவருக்கும் தள்ளாட்டம்தான்) வாக்களித்தார். “ஐம்பத்தி ஏழுலே இருந்து ஓட்டு போடறேன். வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி நாலா மடிச்சி பெட்டியில் போடற முறையிலே இருக்குற திருப்தி இந்த மெஷின் போலிங்க்லே இல்லை” என்று குறைபட்டுக் கொண்டார்.
 • கட்சி வேறுபாடு காரணமாக ஆரம்பத்தில் இறுக்கமாக இருக்கும் பூத் ஏஜெண்டுகள், கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆகி, ஒருவருக்கொருவர் ஜாலியாக கமெண்டு அடித்து சிரித்துப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுக்கு தெரிந்த வாக்காளர் உள்ளே நுழையும்போது ‘சலாம்’ வைத்துவிட்டு, “இது எங்க ஓட்டு” என்று பக்கத்திலிருப்பவரிடம் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். “நீங்க சுயேச்சை ஏஜெண்டா. பாவம். உங்களை யாரும் பெருசா கவனிக்க மாட்டாங்க. கவலைப்படாதீங்க. எங்களுக்கெல்லாம் பிரியாணி வரும். எல்லாரும் ‘ஷேர்’ பண்ணி சாப்பிடலாம்” என்று நம்மை ஆறுதல்படுத்தினார் மனிதாபிமானமிக்க ஏஜெண்டு ஒருவர். தேசியக்கட்சியின் ஏஜெண்டைப் பார்த்து, மாநிலக் கட்சியின் ஏஜெண்டு சவால் விட்டுக் கொண்டிருந்தார். “இந்த மெஷின்லே மட்டும் உங்களுக்கு பத்து ஓட்டு விழுந்துடட்டும். நான் ஒரு பக்க மீசையே எடுத்துக்கறேங்க”. சரியான இடைவெளிகளில் டிஃபன், கூல்டிரிங்க்ஸ், சாப்பாடு, டீ-யென்று தங்கள் பூத் ஏஜெண்டுகளையும், தேர்தல் அதிகாரிகளையும், போலிஸ்காரர்களையும் நல்ல விருந்தோம்பலோடு கவனித்துக் கொண்டார்கள் அரசியல் கட்சியினர்.
 • காலையில் கறாராக இருந்த பாதுகாப்புக்கு வந்திருந்த போலிஸார், மதியத்துக்குள் ஜாலியாகி விட்டார்கள். “உங்களுக்கெல்லாம் ஆறு மணிக்கே ட்யூட்டி முடிஞ்சிடும். மெஷினை எல்லாம் பாதுகாப்பா அனுப்பி, மே பதினாறாம் தேதி வரைக்கும் பாதுகாத்து, வாக்கு எண்ணிக்கை முடியறவரைக்கும் எங்களுக்கெல்லாம் டென்ஷன்தான். தேர்தல் நல்லா நடந்தா எல்லாரும், எல்லாருக்கும் நன்றி சொல்லுவாங்க. எங்களுக்கு மட்டும் இதுவரைக்கும் யாருமே தேங்க்ஸ் சொன்னதில்லை” என்றார் நம் பூத் வாசலில் நின்ற போலிஸ்காரர்.
 • மதியத்துக்கு மேல் கெடுபிடிகள் குறைய கருப்பு பேண்ட், வெள்ளைச்சட்டை யூனிஃபார்மில் கட்சிகளின் ‘அல்லக்ஸ் பாண்டியன்கள்’ களமிறங்கினார்கள். ஏன், எதற்கு என்று அவர்களுக்கே காரணம் தெரியாமல் ஆங்காங்கே மனம்போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். சும்மாவாச்சுக்கும் கையில் ஒரு நோட்பேடை வைத்துக்கொண்டு, ‘எவ்வளவு போலிங்?’ என்று சம்பந்தமில்லாதவர்களிடமெல்லாம் விசாரித்துக்கொண்டு, எதையோ கிறுக்கிக் கொண்டு நகர்ந்தார்கள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்து பூத் ஏஜெண்டுகளிடம் ‘பந்தா’ காட்டுவதற்காக, ரொம்ப அடிப்படையான விஷயங்களை (ஆளை பார்த்து உள்ளே விடுங்க, வெளியே வர்றப்போ டிக்ளரேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வாங்க) அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஓவராக லந்து செய்துக்கொண்டிருந்த ‘அல்லக்ஸ்’ ஒருவரை கழுத்தாமட்டையில் ஒரு போடு போட்டு வெளியே இழுத்துச் சென்றார் போலிஸ்காரர் ஒருவர்.
 • தென்சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் பூத், பூத்தாக உள்ளே வந்து தேர்தல் எப்படி நடக்கிறது என்று கண்காணித்துக் கொண்டிருந்தார். கட்சி வேறுபாடு இல்லாமல் பூத் ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் பார்த்து “எல்லாரும் சாப்பிட்டீங்களா? எங்க ஆளுங்க நல்லா கவனிச்சுக்கறாங்களா?” என்று விசாரித்தார். போலவே, திமுகவின் முன்னாள் சென்னை மேயரான மா.சுப்பிரமணியமும் ஒவ்வொரு பூத்துக்கும் நேரடி விசிட் அடித்துக் கொண்டிருந்தார்.
 • சரியாக ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. நாமிருந்த வாக்குச்சாவடியில் ஐம்பத்தி ஐந்து சதவிகிதம்தான். “படிச்சவங்க அதிகம் வசிக்கிற பகுதியில்லே? அதனாலேதான் வாக்கு போடணும்னு இவ்வளவு விழிப்புணர்வு!” என்று சக ஏஜெண்ட் ஒருவர் கிண்டலாக கமெண்ட் அடித்தார். கண்ட்ரோல் மெஷினை இயக்க முடியாதவாறு அதிகாரிகள், ஏஜெண்டுகள் முன்னிலையில் ‘சீல்’ வைத்து, ஒழுங்காக தேர்தல் நடந்தது என்கிற உறுதிமொழிப்படிவம் வந்து எல்லா ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஒரு காப்பியை நமக்கும் தந்தார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் என்பது இவ்வளவுதான்.
  (நன்றி : புதிய தலைமுறை)

March 18, 2014

டிஜிட்டல் தீண்டாமை

இணையத்தளங்களில் ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள்.

1998ல் தொடங்கி ’டயல்அப் மோடம்’ காலத்திலிருந்து இணையத்தில் புழங்குகிறேன். சமூகத்தில் இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாத பார்ப்பனர்களின் சாதிப்பற்றை இணையத்தில் மறைமுகமாகவேனும் வெளிப்படுத்துவதை, இந்த பதினாறு ஆண்டுகளாக உணர்ந்திருக்கிறேன். இந்த டிஜிட்டல் பார்ப்பனீயத்தை யாரேனும் சுட்டிக் காட்டும்போது அவர்களுக்கு ‘சுர்’ரென்று கோபம் எழுவது இயல்புதான்.

1) குழு சேர்ந்து பார்ப்பனரல்லாதவர்களை கிண்டல் செய்வது. முதல் தலைமுறையாக கல்விகற்று இணையத்துக்கு வருபவர்களை நக்கல் அடித்து துரத்தி அடிப்பது. பிறப்பு, வளர்ப்பு குறித்த inferiority complex ஏற்படுத்துவது.

2) இடஒதுக்கீடு போன்ற விவாதங்கள் வரும்போது ‘தகுதி’ பேசுவது. தகுதி என்பது பூணூலா என்று பதில் கேள்வி கேட்டால், ‘அய்யய்யோ... சாதிவெறி புடிச்சவன்’ என்று கூப்பாடு இடுவது.

3) ‘லைக்’ இடுவது, ‘கமெண்டு போடுவது’, ‘விவாதிப்பது’ போன்ற விஷயங்களில் இருக்கும் partiality. நீண்டகால இணைய விவாதங்களில் நீடிப்பவர்கள் இதை தெளிவாக உணரமுடியும்.

4) மோடி, ஜெயலலிதா என்று அவர்களது தேர்வுகள், எந்த தேசத்தில் வசிப்பவர்களாக இருந்தாலும் unique ஆக இருக்கும். தேசம் கடந்து எப்படி எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள், இவர்களை இணைக்கும் ‘சக்தி’ எதுவென்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

5) ‘ஈழம்’ மாதிரி பிரத்யேகப் பிரச்சினைகளில் எப்போதும் மெஜாரிட்டியான தமிழர்களுக்கு எதிரான வாதங்களையே முன்வைப்பார்கள். அதுவே பார்ப்பனரல்லாத தலைமைக்கு எதிராக திரும்பும் சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால், அதையும் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் முன்பு பேசிவந்தவற்றிலிருந்து அப்படியே ‘யூ டர்ன்’ அடிப்பார்கள்.

6) தமிழர்களை ‘பொறுக்கி’ என்றே இணையத்தில் எப்போதும் விளிக்கும் சுப்பிரமணிய சாமி போன்றவர்களை இவர்கள் கண்டித்ததில்லை. பதிலுக்கு ரீட்விட்டு, லைக்கும் தூள்பறக்கும். ஏனெனில் அந்த விளிப்பு தங்களுக்கு பொருந்தாது என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அதே மொழியை எதிர்விவாதம் செய்பவர்கள் பயன்படுத்திவிட்டால், ‘அய்யய்யோ... நாகரிகம் அற்ற காட்டுமிராண்டிகள்’ என்று கூப்பாடு போடுவார்கள். அயல்நாட்டில் எல்லாம் படித்த பேராசிரியர், லஜ்ஜையே இல்லாமல் தன்னை சாதியடையாளத்தோடு சமூகத்தில் முன்வைத்துக் கொள்கிறாரே என்றெல்லாம் யோசிப்பதேயில்லை.

7) ஊழல்தான் நாட்டின் முதன்மைப் பிரச்சினை என்று வாதாடுவார்கள். சாதி, மதவாதப் பிரச்சினைகளை பேசும் விவாதங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் (லாலு, ராசா மாதிரி) பெயர்களை அடுக்குவார்கள். அதாவது இவர்கள் அதிகாரத்துக்கு வரும் பட்சத்தில், இதுதான் நடக்கும் என்பார்கள். இஸ்ரோவிலும் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு என்று சி.ஏ.ஜி. சொல்லியிருக்கிறதே என்று சுட்டிக் காட்டினால் அப்படியே லீஸில் விட்டுவிடுவார்கள். ஊழல் எதிர்ப்பிலும் கூட இவர்களுக்கு ‘தேர்வு’ இருக்கிறது.

8) ‘பெரியார்’ என்கிற பெயரை தினமும் தேடுபொறி இயந்திரங்களில் தட்டச்சி தேடுவார்கள். மறைந்து நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆன தலைவரை கற்பனை செய்யவியலா வார்த்தைகளில் அர்ச்சிப்பார்கள். ’பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்கிற ஹெச்.ராஜாவின் பேச்சு அதனால்தான் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் அதைவிட மோசமான, ஆபாசமான வார்த்தைகளை அவர் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன்.

9) சாதிய அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம் கொண்டவர்களோடு, அவர்கள் எந்த சாதி, மதம் என்கிற பாகுபாடெல்லாம் காட்டாமல் தற்காலிக கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். அப்போதைக்கு முற்போக்காளர்கள் மூடிக்கொண்டு போகவேண்டும், அவ்வளவுதான் நோக்கம். ‘விஸ்வரூபம்’ பிரச்சினையின் போது இந்த போக்கை நீங்கள் கண்டிருக்கலாம்.

10) இவர்களோடு ஒத்துப் போகிறவர்களை அடிவருடிகளாக மாற்றிக் கொண்டு, எதிர்நிலை விவாதம் பேசுபவர்களை தேடி அடிக்கும் அடியாட்களாக மாற்றுவது. உதாரணங்கள் தேவையில்லை. அடிபட்டவர்களுக்கு புரியும்.

பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தீண்டாமை சில இந்திய நகரங்களில் முற்றிலும் ஒழிந்திருக்கலாம். அதன் தாக்கம் சமூகத்தில் குறைந்திருக்கலாம். ஆனால் களம் மாறியிருக்கிறது. ’டிஜிட்டல் தீண்டாமை’ சத்தியமாக இங்கே நிலவுகிறது. உணராதவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதற்கு அவர்களே பலியாகப்போவது உறுதி!

March 14, 2014

ஆயிரத்தில் ஒருவன்

“வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முதலில் நின்றிருந்தோம். ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.
நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.
சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். நாடோடி மன்னனுக்கு பிறகு, அதை மிஞ்சும் வெற்றி எம்.ஜி.ஆருக்கு நீண்டகாலமாக அமையாமல் இருந்தது. இடையில் சிவாஜி ஏகப்பட்ட மாபெரும் வெற்றிப்படங்களாக நடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார். அம்மாதிரி பெரும் வெற்றியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.

January 29, 2014

நடுப்பக்கம்

‘ராணி’யைத் தவிர வேறெந்த பத்திரிகையும் தன்னை குடும்பப் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் குமுதம் நிஜமாகவே குடும்பப் பத்திரிகையாகதான் ஒரு காலத்தில் இருந்தது. எண்பதுகளின் குடும்பங்களை ‘குமுதம் குடும்பம்’ என்றே சொல்லலாம். குமுதம் வாங்காத குடும்பங்களே இல்லை என்ற நிலை. அட்டை டூ அட்டை பக்கா மிக்ஸர். லேசாக அரசியல். பல்சுவை அரசு பதில்கள். குழந்தைகளுக்கு ஆறு வித்தியாசங்கள். அவ்வப்போது சித்திரக் கதைகள். ஆன்மீக வாதிகளுக்கு பிரார்த்தனை க்ளப். இல்லத்தரசிகளுக்கு ஏராளமான சிறுகதைகள் மற்றும் தொடர்கதை. கன்னித்தீவு ரேஞ்சுக்கு எப்போதும் குமுதத்தில் ‘சாண்டில்யன்’. சினிமா நட்சத்திரங்களின் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி. கிசுகிசு. ‘லைட்ஸ் ஆன்’ வினோத் என்று எல்லாமே குமுதத்தில் இருக்கும்.

குறிப்பாக கதைகள். எல்லா genre (செக்ஸ் உட்பட) கதைகளும் வருமாறு இதழ் வடிவமைக்கப்படும். “நல்ல கதையை படிக்கும் வாசகன் அதை ‘நல்ல கதை’ என்று சொல்லக்கூடாது. ‘குமுதமான கதை’ என்று சொல்ல வேண்டும்” என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆணையிட்ட அளவுக்கு நிலைமை இருந்தது.

குமுதத்தில் எல்லாமே இருந்தாலும், அவர்களுக்கு ஒரு ‘சீக்ரட் வெப்பன்’ இருந்தது. ‘நடுப்பக்கம்’. குமுதத்தின் ‘இளமை இமேஜ்’ இந்த ஒரு பகுதியால்தான் கொடிகட்டிப் பறந்தது. எந்த ஒரு பத்திரிகையை வாங்கினாலும், அதில் முதலில் பார்க்க வேண்டிய பகுதி என்று ஒவ்வொரு வாசகருக்கும் ஏதோ ஒரு பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சிலர் கார்ட்டூனை முதலில் பார்ப்பார்கள். தலையங்கம், தொடர்கதை, கடைசிப்பக்கம் என்று ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்துவமான ரசனை இருக்கும். சொல்லி வைத்தாற்போல குமுதம் வாசகர்கள் வாங்கியதுமே பிரித்துப் பார்ப்பது நடுப்பக்கத்தைதான். பெண்களும் கூட நடுப்பக்கத்தைதான் முதலில் பார்ப்பார்கள். நடுப்பக்க படத்துக்கு ஜாடிக்கேத்த மூடியாய் கச்சிதமாக எழுதப்பட்ட கமெண்டை படித்துவிட்டு, “நாசமாப் போறவன் இந்த குமுதம்காரன்” என்று வெளிப்படையாக திட்டுவார்கள். ஆனால் முகத்தில் கோபமோ, கடுகடுப்போ இருக்காது. நாணத்தால் முகம் சிவந்திருப்பார்கள். ஜெயப்ரதா ரேஞ்சுக்கு அழகாக இருந்த ரோகிணி அக்கா அம்மாதிரி முகம் சிவந்ததை நிறையமுறை பார்த்திருக்கிறேன்.

நான் குழந்தைப் பருவத்தில் குமுதத்தில் பொம்மை பார்க்க ஆரம்பித்து (பெரும்பாலும் சிலுக்கு, அனுராதா பொம்மைகள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்), ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்து வெகுவிரைவிலேயே –அதாவது எட்டு, ஒன்பது வயது வாக்கில்- நடுப்பக்கத்துக்கு வந்துவிட்டேன். அப்பா ஆன்மீகவாதியாக இருந்தாலும், முதலில் நடுப்பக்கத்தை தரிசித்துவிட்டுதான் ‘பிரார்த்தனை க்ளப்’புக்கே வருவார். தனக்கு போட்டியாக குடும்பத்தில் இன்னொருவனும் நடுப்பக்கத்தை ஆராதிப்பவனாக வளர்வது அவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த குமுதம் இதழில் நடுப்பக்கம் மட்டும் இல்லாமல் இருந்தது. தன்னுடைய அடையாளத்தை இழந்துநின்ற அந்த இதழ்களை வாசிக்கும் ஆர்வமே எனக்கு போய்விட்டது. ஆரம்பத்தில் குமுதமே நடுப்பக்கத்தை வாசகர்களின் பாசாங்கு கண்டனங்களுக்கு பயந்து நிறுத்திவிட்டதோ என்று நினைத்திருந்தேன். பிற்பாடு கால்குலேட் செய்து பார்த்ததில் பக்க எண் இடித்ததில், இது அப்பாவுடைய சதியென்று அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி உணர்ந்துகொண்டேன். அதனாலென்ன அக்கம் பக்கம் வீட்டு இதழ்களுக்குப் போய் குமுதத்தின் நடுப்பக்கத்தை வாசித்து, என் இலக்கிய அறிவு நாளொரு ‘மேனி’யும், பொழுதொரு நடிகையுமாக வளர ஆரம்பித்தது.

இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த ‘நடுப்பக்கம்’ எப்போதிலிருந்து குமுதத்தில் காணாமல் போனது என்று சரியாக நினைவில்லை. அந்த ‘சேவை’யை குமுதம் நிறுத்தியிருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலை. இதனால் இளைஞர்களின் எழுச்சி தாமதப்பட்டு, புரட்சி தேவையில்லாமல் சில நூற்றாண்டுகள் தள்ளிபோடப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை. எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி?

இந்த வார குமுதம் நடுப்பக்கத்தை பார்த்தேன். என் மகள் தமிழ்மொழி போட்டோவை போட்டிருக்கிறார்கள். இப்படியே போனால் இன்னும் கொஞ்சநாளில் குமுதம், ‘பூந்தளிர்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘ரத்னபாலா’, ‘அம்புலிமாமா’, 'பாலர் மலர்’ ரேஞ்சுக்கு குழந்தைகள் இதழாக பரிணமித்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் என்னை ஆட்டிப் படைக்கிறது.

December 17, 2013

கர்ணனோடு நாற்பது வாரங்கள்

ஜனவரி 1, 2013. அண்ணன் சிவராமனும், நண்பர் விஸ்வாவும் சோளிங்கர் மலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “குங்குமத்துலே ஒரு தொடர் எழுதணும். கரு சிக்கவே மாட்டேங்குது” என்று கொஞ்சநாட்களாக சொல்லிக் கொண்டிருந்தார் சிவராமன். அன்று காமிக்ஸ், அரசியல், சமூகம், சொந்த வாழ்க்கை, காதல், சினிமாவென்று கலந்துகட்டி மனசுவிட்டு பேசினோம்.
விஸ்வா ஏதோ ஒரு மொக்கை இந்திப்படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். “படம் பெருசா போகலை. ஆனா நல்ல ஐடியா” என்றார். அந்த ஐடியாவை அவர் சொன்னதுமே, சிவராமன் பிடித்துக் கொண்டார். “இந்த லைனை நான் கதை எழுத எடுத்துக்கட்டுமா?” என்று விஸ்வாவிடம் அனுமதி கேட்டார். “எங்கிட்டே ஏன் சார் கேட்குறீங்க. நானா படம் எடுத்தேன்” என்று விஸ்வா ஜோக் அடித்தார்.
கர்ணனின் கவசம் பிறந்தது.
ஆரம்பத்தில் எனக்கு இந்த டைட்டிலில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. ‘கர்ண கவசம்’தான் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘னின்’ தேவையில்லாமல் உறுத்திக் கொண்டிருப்பதாக தோன்றியது. ஆனால் போகப்போக இந்த டைட்டிலே சிறப்பானதாக இருப்பதாக பட்டது.
மயிலாப்பூர் தினகரன் அலுவலக வாசலில் இருக்கும் டீக்கடைதான் டிஸ்கஷன் ரூம். நண்பர் நரேனும், நானும் துணை இயக்குனர்கள் மாதிரி சிவராமனோடு பேசிக்கொண்டிருப்போம். கதை எங்கே ஆரம்பிக்க வேண்டும், எப்படி நகரவேண்டும், வசனங்கள் எப்படி அமையவேண்டும் என்று ஒரு பக்காவான சினிமாவுக்கு ப்ளான் போட்டோம்.
உண்மையில் நாங்கள் திட்டமிட்டிருந்ததில் ஐம்பது சதவிகிதம் கூட கர்ணனின் கவசமாக வரவில்லை. தண்டகாரண்யா, நக்சல்பாரிகள் எல்லாம் கதையில் பிரதானமாக வருவதை போல ஆரம்பகால திட்டம். பாரதத்தின் பரம்பரைச் சொத்தை அபகரிக்க வெளிநாட்டு சதி என்பதுபோலெல்லாம் இண்டர்நேஷனல் லெவலில் டிஸ்கஷன் செய்தோம். கதை தொடங்கி, அதன் போக்கில் ஓடிவிட்டது. முதலில் நாங்கள் பேசிய லைனையே கூட மீண்டும் சிவராமன் எழுதலாம்.
கதையில் வரும் களத்துக்காக சில இடங்களுக்கு லொக்கேஷனை நேரில் சென்று பார்க்க விரும்பினோம். துரதிருஷ்டவசமாக முடியவில்லை. காஞ்சிபுரம் மட்டும் போய், யாத்ரிகர்கள் அவ்வளவாக அறியாத ஜீனகாஞ்சியில் கள ஆய்வு செய்தோம். கைலாசநாதர் கோயிலில் நிறைய நேரம் செலவிட்டோம்.
அசிஸ்டண்ட் டைரக்டர் போல அசிஸ்டண்ட் ரைட்டராக பணிபுரிந்த இந்த நாற்பது வாரங்கள் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலக்கட்டம். சிலிர்ப்பான நாட்கள். ஒரு வேளை இந்த வாய்ப்பு எனக்கு சில வருடங்களுக்கு முன்பாக கிடைத்திருந்தால், இந்நேரம் நானும் நாலு பேர் பேசக்கூடிய நான்கு நாவல்களை எழுதியிருக்க முடியும். ஏற்கனவே எழுதிய அழிக்கப் பிறந்தவனை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும். வேறு சில முக்கியமான எழுத்தாளர்களிடமும் இதுமாதிரி அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ள முடியுமா என்று வாய்ப்பு கேட்க வேண்டும். கதையென்று எதையாவது கீபோர்டில் தட்டும்போது, கொஞ்சம் அச்சமாக இருக்கும். இப்போது 2014ல் உருப்படியாக ஒரு நாவல் எழுதிவிட முடியுமென்று தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.
திங்கள் மதியம் சாப்டர் மெயிலுக்கு வரும். வாசித்துவிட்டு உடனடியாக போனில் நிறை, குறைகளை அலசுவோம். நான் குறிப்பாக ‘கண்டினியூட்டி’ கவனித்துக் கொண்டிருந்தேன். கதையின் ஆரம்ப நாட்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியும், பாத்திரங்களின் பெயர்களும் எதுவும் மாறிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இல்லாவிட்டால் வாசகர் கடிதங்களில் பல்லிளித்துவிடும். ஐந்தாவது சாப்டரில் ஆதித்த கரிகாலனாக இருந்தவர், முப்பத்தியெட்டாவது சாப்டரில் ஆதித்த‘க்’ கரிகாலனாக மாறிவிடுவார். இதையெல்லாம் மிகக்கவனமாக பழைய சாப்டர்களை ‘ரெஃபர்’ செய்து திருத்த வேண்டும்.
ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘எப்படி கதை எழுதுவது?’ நூலை நிறைய பேர் வாசித்திருக்கலாம். ‘கர்ணனின் கவசம்’ முழுக்க முழுக்க அந்த நூல் அறிவுறுத்தும் ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாற்பது வாரங்களும் சிவராமன் மிக ரிலாக்ஸாகவே இருந்தார். ஞாயிறு முழுக்க யோசிப்பதை, திங்கள் காலையில் எழுதிவிடுவார். அத்தியாயத்துக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வரை வார்த்தைகள் இருக்கும். ஓவியருக்கு முன்கூட்டியே வரப்போகும் அத்தியாயத்தில் இருந்து ஒரு காட்சியை சொல்லிவிடுவார்.
தொடர் வந்துக்கொண்டிருந்த கட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று நிறைய படங்கள் பார்த்தோம். கர்ணனின் கவசத்தில் குறைந்தபட்சம் பத்து படங்களின் பாதிப்பாவது இருக்கிறது. ‘கிராவிட்டி’ படத்தின் ஒரு காட்சிகூட கதையில் வருகிறது. அவ்வளவு ஈஸியாக யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், டிவி நிகழ்ச்சிகள், செய்திகள் என்று சமகால சங்கதிகள் சகலத்தின் தாக்கமும் கதையில் வெளிப்படுகிறது.
வாயால் எவ்வளவு வேண்டுமானாலும் வடை சுடலாம். ஆனால் தொழில் கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. அசாத்திய பொறுமையும், கடுமையான உழைப்பும் அவசியம். எப்படி காட்சிகளை யோசிப்பது, அவற்றை எப்படி கதைக்குள் பொருத்தமான இடத்தில் செருகுவது என்று ஏராளமான எழுத்து நுட்பங்களை பிராக்டிக்கலாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்த அண்ணன் சிவராமனுக்கும், உடன் பணியாற்றிய தோழர் நரேனுக்கும் நாற்பது வாரங்கள் முடிந்த நிலையில் நெகிழ்ச்சியோடு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தொடர் தொடர்பாக பேசும் இடங்களில் எல்லாம் தவறாமல் என்னையும், நரேனையும் மறக்காமல் உச்சரித்துக் கொண்டிருக்கிறார் சிவராமன். அது அவருடைய பெருந்தன்மை. எங்கள் மீதான அன்பு. உண்மையில் நாங்கள் அணில்கள். பாலம் அமைத்து லங்காவை வென்றவர் அவர்தான். இந்நூலுக்கு உரிய பெருமை முழுக்க முழுக்க அவரைதான் சாரும்.


இன்னும் சில நாட்களில் ‘கர்ணனின் கவசம்’ தடிமனான நூலாக, சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. நானும் பணியாற்றினேன் என்பதற்காக அல்ல. நாற்பது வாரங்கள் தவறாமல் வாசித்த வாசகனாக சொல்கிறேன். இந்த கதை உங்களுக்கு தரப்போவது இதுவரை நீங்கள் அனுபவிக்காத அனுபவத்தை. வரலாறு ஒரு பாத்திரமாக உங்களையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் அதிசயத்தை உணர்வீர்கள். புராண களத்தில் நீங்கள் அறிந்திருக்கும் புகழ்பெற்ற பாத்திரங்களோடு தோளோடு தோள் உரசி நடப்பீர்கள். குறிப்பாக, ஹாரிபாட்டர் மாதிரியெல்லாம் தமிழில் யாரு சார் எழுதறாங்க என்று அலுத்துக்கொள்ளும் ‘என்னத்த கன்னய்யா’ வாசகர்கள், தயவுசெய்து ஒருமுறை ‘கர்ணனின் கவசம்’ நூலை தவறாமல் வாசியுங்கள்.

’கர்ணனின் கவசம்’ தொடங்கியபோது எழுதிய பதிவை வாசிக்க இங்கே க்ளிக்குங்கள்...

October 12, 2013

தரிசனமும், மன எழுச்சியும்!

டிவி வந்த புதுசில் அதை யாரோ ஐரோப்பிய புண்ணியவான் ‘இடியட் பாக்ஸ்’ என்று விமர்சித்தாராம். நல்லவேளை அவர் இண்டர்நெட்டை பார்க்காமலேயே இறைவனடி போய் சேர்ந்துவிட்டார். அபத்தங்களும், முட்டாள்தனங்களும், அற்பவாதிகளும் நிறைந்த இடமாக இணையத்தை சமூக வலைத்தளங்கள் மாற்றி அமைத்திருக்கிறன. கட்டற்ற சுதந்திரம், வெளிப்படையான ஜனநாயகம் போன்ற உன்னதமான உருவாக்கங்களுக்கு வேறொரு முகமும் உண்டு. அதைதான் இப்போது எல்லோரும் ‘தரிசித்து’க் கொண்டிருக்கிறோம். லைக்குக்காக, ரீட்விட்டுக்காக, கமெண்டுக்காக கொலையும் செய்வார்களோ இவர்கள் என்று அஞ்சும் வண்ணம் இணையக் கலாச்சாரம் பரிணாமம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

வம்புக்கு இழுப்பது, வசைபாடுவது என்பதையெல்லாம் தாண்டி மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டியாக இமேஜ் பில்டப் செய்து, ஒரு திருட்டு வாழ்க்கையை ஒருவன் வாழ்வதற்கு சமூகவலைத்தளங்கள் வாய்ப்பளிக்கின்றன. போகிற போக்கில் டிராஃபிக் சிக்னலில் குழந்தை பிச்சையெடுப்பதை பார்த்த ஒரு காட்சியில் ‘படிமம்’ உருவாக்குகிறார்கள். மழை பொழியும் இரவில் ‘மனவெழுச்சி’ கொள்கிறார்கள். யாரோ ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் எழுதிய ஏதோ ஒரு பிட்டுக்கதையை வாசித்துவிட்டு ‘தரிசனம்’ அடைகிறார்கள். ஆண்மை எழுச்சிக்கு வழிகாட்டும் போஸ்டரை லேம்ப் போஸ்டில் ஒட்டுவது மாதிரி ஆகிவிட்டது ஃபேஸ்புக்கும், ட்விட்டரும், கூகிள்ப்ளஸ்ஸும்.

‘தரிசனம்’, ‘மனவெழுச்சி’ மாதிரி வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உண்டு. போகிற போக்கில் சப்பை மேட்டருக்கெல்லாம் இதை பயன்படுத்துகிறோமே என்று எந்த குற்றவுணர்ச்சியுமில்லை. ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு மனவெழுச்சியும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாழ்க்கைத் தரிசனமும் கிடைத்துவிடுகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு சகட்டுமேனிக்கு இதெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கிற இந்த போக்குக்காக ஜெமோக்களையும், எஸ்ராக்களையும்தான் சுட்டுத் தள்ள வேண்டும். எழுச்சியோ அல்லது தரிசனமோ கிடைக்க நமக்கு போதிமரம் கூட தேவையில்லாமல் போய்விட்டது. அப்படியாப்பட்ட கவுதம புத்தருக்கே வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் இந்த தரிசனமும், எழுச்சியும் கிடைத்தது. நம் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு சம்பவத்தின் போது எழுச்சியோ, தரிசனமோ கிடைத்தால் பரவாயில்லை. தினம் தினமா அமாவசை சோறு கிடைத்துக் கொண்டே இருக்கும்?

சாதாரணப் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படாத இம்மாதிரி வார்த்தைகளை வைத்து, இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரையை மாதிரி சப்பைக் கட்டுரையில் ஆங்காங்கே மானே, தேனே போட்டு தூவிவிட்டால் அதற்கொரு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுவதாக எழுதிக் கொண்டிருக்கும் மொக்கைக்கு ஒரு காட்சிப்பிழை மூளையில் படிமமாகிவிடுகிறது. வாசிக்கும் மொக்கைகளும் அச்சொற்களின் உண்மையானப் பொருளுக்கான மதிப்பை உணராமல் அனிச்சையாக லைக் போட்டுவிட்டு, ‘அபாரமான எழுத்தாற்றல்’ என்று கமெண்டுபோட்டு உசுப்பேற்றி விடுகிறார்கள். எழுதுபவனும் மொக்கை, வாசிப்பவனும் மொக்கை எனும்போது கொஞ்சமாவது சூடு சொரணையோ, மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான அறிவோ, நாகரிகமோ பின்னுக்கு தள்ளப்பட்டு மலடான ஒரு அறிவுக்குருடு சமூகத்தை நம்மையறியாமலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் படிக்கும்போது பாடம் புரியவில்லை என்றால் சந்தேகம் கேட்போம். இணையத்தில் எவனாவது எதையாவது சந்தேகமாக கேட்டு பார்த்திருக்கிறீர்களா? அவனவனுக்கு தெரிந்ததை பீற்றிக் கொள்ளவும், எவனாவது இளிச்சவாயன் மாட்டினால் முழம், முழமாக உபதேசிக்கவும்தான் தயாராக இருக்கிறோம். புரியாமல் பேசுபவனை சமூகத்தில் உளறுவாயன் என்போம். மெய்நிகர் உலகமான இணையத்திலோ அவ்வாறு உளறிவைப்பவனை அறிவுஜீவி என்கிறோம். அவன் பேசுவது நமக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதெல்லாம் அடுத்தப் பிரச்சினை. ஏதோ ஒன்றினை புரியவில்லை என்று ஒப்புக்கொள்வதே நமக்கு பெரிய கவுரவ இழப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அறிவுப் பகிரல் எப்படி சாத்தியமாகும்?

பாவனைகளால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். நான் இதையெல்லாம் படிக்கிறேன். நான் இதையெல்லாம் பார்க்கிறேன் என்று உட்டாலக்கடியாக நம் இமேஜை ஏற்றிக் கொள்வதிலேயே நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும் செலவிடுகிறோம். ஸ்டான்லி க்யூப்ரிக்கின் ஒரு படத்தைக்கூட பார்க்காதவன் என்ன முட்டாளா. ஒரான் பாமுக்கை படிக்காதவன் எல்லாம் தற்குறியா. இம்மாதிரி டப்பென்று ‘நேம் டிராப்பிங்’ செய்துவிட்டால் போதும். பெரிய இண்டெலெக்சுவல் போலிருக்கே என்று இணையம் மூக்கின் மேல் விரல்வைக்கும். நியாயமாகப் பார்த்தால் இந்த போக்குக்காக சுஜாதாவையும், சாருநிவேதிதாவையும் தூக்கில் போடவேண்டும்.

பாவனைகளாலேயே வாழ்பவன் முதலில் மற்றவர்களை ஈர்க்க கஷ்டப்பட்டு இம்மாதிரி பாவனை செய்யத் தொடங்குகிறான். மற்றவர்களாகவே சேர்ந்து அவனை பெரிய வாசிப்பாளி, அறிவாளி என்று இமேஜை உருவாக்கிக் கொள்கிறார்கள். பொய்யான அந்த தோற்றத்தை சுமந்தவன், ஒரு கட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று நிஜமாகவே நம்ப ஆரம்பித்துவிடுகிறான். உண்மையாகவே விஷயம் தெரிந்த ஒருவனிடம் அவன் உரையாடும்போது, வெறும் ஐந்து நிமிடத்திலேயே அவன் கஷ்டப்பட்டு கட்டி உருவாக்கிய கோட்டை பொடிப்பொடியாய் உதிர்கிறது. அப்போது உளவியல்பூர்வமாக தற்கொலை செய்துக் கொள்கிறான். வாழ்க்கை குறித்த நிஜமான ‘தரிசனம்’ ஒருவேளை அப்போது அவனுக்கு கிடைக்கலாம். தான் ஒரு முட்டாள் என்பதை ஒரு முட்டாள் உணரும் தருணம்தான் அவனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ‘மனவெழுச்சி’யாக இருக்கக்கூடும்.

புத்திசாலியாக நடிப்பது ரொம்ப ஈஸி. ஆனால் நாம் நிஜமான நாமாகவே இருப்பதில் இருக்கும் சவுகர்யத்துக்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை.

maintaing innocence throughout the journey is the toughest task of the life

September 25, 2013

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!

இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன். ‘பொட்’டென்று பொன்வண்டு சைஸுக்கு ஒரு மழைத்துளி. தலையில் குட்டு மாதிரி விழுந்தது. கொஞ்சநாட்களாக மழையின் வடிவமே மாறிவிட்டது. நமக்கு முன்னெச்சரிக்கை தரும் விதமாக மிதமான தூறல், ஊதக்காற்று எல்லாம் மிஸ்ஸிங். டைரக்டாக அடைமழைதான்.

சிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.

பெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

மழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.
“தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு”

“உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”

ஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

“ஆனா... இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.

“இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.

“நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.

இதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.

நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.

அந்த கதை என்னவென்றால்...?

‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.

திராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.

எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண்ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.

திண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

“நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”

“நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”

“திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”

“பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.

“தோ வரேன். ரெடியா இரு”

தோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.

மறுநாளும் போன்.

“திண்டுக்கல்லே எங்கே இருக்கே?”

“அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”

“நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”

வரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.

“ஹலோ தோழர்... கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது...”

“சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்?”

மூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.

“வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.

“டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”

“சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”

“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”

வரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.

“தலை... எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.

“அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.

மறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.

“சென்னைக்கு வந்திருக்கேன் லக்கி”

“என்ன திடீர்னு”

“அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.

ஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

“கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.

மதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.

“பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.

“இதுக்கு மேலேயும் வருவான்னு நம்பிக்கை இருக்கா தோழர்?”

“கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”

மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.

“சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு ‘ஒரு ரூவா காய்ன் பூத்’தில் இருந்து ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா...” என்று அடுத்த சில நாட்களுக்கு வரவனை கதறிக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் இரவுகளில் அவருக்கு வந்த கனவுகளில்கூட நமீதா வந்ததில்லையாம். ஒரு ரூபாய் போன் பூத்துதான் அடிக்கடி வருமாம். ஆனால் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடிடமிருந்து அதற்குப்பிறகு போன் வந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று சோகம். பதிலுக்கு வரவனையின் ப்ளாக்கில் அனானிமஸ் கமெண்டாக “உன் ஏரியாவை சொல்லுடா, அட்ரஸை கொடுடா” என்று மட்டும் கொஞ்ச நாட்களுக்கு ரெகுலராக கமெண்டுகள் வந்துக் கொண்டிருந்தது.