7 டிசம்பர், 2016

ஜெ.வின் முதல் ஹீரோ!


நாடகங்கள் வாயிலாக உருவான ஆளுமை சோ.
ஐம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் சென்னையில் ஏராளமான அமெச்சூர் நாடகக் குழுக்கள் இயங்கி வந்தன. சோ நடத்திய விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நாடகங்களுக்கு சபாக்களில் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு போடக்கூடிய அளவுக்கு வரவேற்பு இருந்தது.

இந்த நாடகக்குழுவை சோ ஆரம்பித்ததாக இன்று டிவி சேனல்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சோவின் தம்பி ‘அம்பி’ ராஜகோபால் அவர்களும், அவருடைய கல்லூரி நண்பர்களும் ஆரம்பித்த குழு இது. இடையில் புகுந்த சோ, அந்த குழுவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டார். இந்த நிகழ்வை சோவே, ‘கூடாரத்தில் புகுந்த ஒட்டகம்’ என்று தன்னை சுயபகடி செய்து குறிப்பிடுகிறார்.

ஒருமுறை நாடகம் போடும்போது, அதில் நடித்த முக்கிய நடிகர் ஒருவரை சோ, பிளாக்மெயில் செய்திருக்கிறார். “இந்த நாடகத்தில் சோ-வுக்கு கேரக்டர் கொடுக்கவில்லையென்றால் நான் நடிக்க மாட்டேன்” என்று அவர் வாயாலேயே சொல்லவைத்து, நாடகத்தில் அடமாய் இடம்பிடித்து நடிகர் ஆனார்.

ஆரம்பக் காலத்தில் சோ, ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ‘யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்’ குழுவின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஒய்.ஜி.பி. குழுவில்தான் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்துக் கொண்டிருந்தார். ரிகர்ஸலுக்கு அம்மாவோடு வந்த ஜெ.வும் சில நாடகங்களில் துண்டு - துக்கடா வேடங்களில் நடிப்பார்.

சோ வில்லனாக நடித்த நாடகம் ஒன்றில்தான் ஜெ. முதன்முறையாக மேடையில் தோன்றினார். அப்போது ஆங்கில நாடகங்களும் போடுவார்கள். சோவின் தமிழ் நாடகங்களுக்கும் கூட ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் வழக்கம் இருந்தது. எலைட் சொசைட்டி என்று சொல்லப்படுபவர்களுக்கான நாடகங்கள் இவை. சோவுக்கு ஆங்கிலம் தண்ணிபட்ட பாடு. ஆனால், ஆங்கிலம் பேசும் நடிகைகள் மிகவும் குறைவாக இருந்த நிலையில் ஜெ.வுக்கு அடித்தது ஜாக்பாட்.

பிற்பாடு சோ ஹீரோவாக நடிக்க, அவரது அழகுக்கு பொருத்தமாக இருந்த ஜெ. ஹீரோயினாக நடித்தார். 62-63 வாக்கில் இம்மாதிரி ஒரு நாடகத்தைப் பார்க்க வந்தபோதுதான் எம்.ஜி.ஆர், ஜெ.வை சினிமா ஹீரோயினாக ஆக்க முன்வந்தார் என்பார்கள். ஆனாலும், ஸ்க்ரீன் டெஸ்டில் எம்.ஜி.ஆரின் பர்சனாலிட்டிக்கு முன்பாக ஜெ. மிக சிறுப்பெண்ணாக தெரிகிறார் என்று முதலில் நிராகரிக்கப்பட்டார். ஸ்ரீதர், ‘வெண்ணிற ஆடை’ திரைப்படம் மூலமாக முந்திக்கொள்ள, அதன் பின்னரே எம்.ஜி.ஆர் மீண்டும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மூலமாக இவரை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பாகவே ஜெ. சில கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார்.
சோ-வை இங்கே அழகன் என்று குறிப்பிடுவது நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சிறுவயதிலேயே சோடாபுட்டி கண்ணாடி, ஒல்லியான உடல்வாகு, சினிமாக்களில் கோமாளி வேடம் என்று அவர் காமெடியாகவே மக்கள் மனதில் பதிந்துப் போயிருக்கிறார். உண்மையில் அவர் இளைஞராக இருந்தபோது மிகவும் அழகான தோற்றம் கொண்டவர். அது நாடகங்களிலோ, சினிமாக்களிலோ அவ்வளவாக வெளிப்படவில்லை.

‘முகம்மது-பின்-துக்ளக்’ திரைப்படத்தில் ஒரு மாதிரி வித்தியாசமான நடையில், அவர் நடக்கும்போதெல்லாம் சிரிப்பு வருவது மாதிரி கேரக்டரில் நடித்தார். ஆனால், அப்படத்தின் ப்ளாஷ்பேக் காட்சி ஒன்றில் பைஜாமா - குர்தா அணிந்து காளி சிலை முன்பாக சபதம் எடுக்கும் காட்சியில் கட்டழகுக் காளையாக ஜம்மென்று ஜொலிப்பார் சோ. அவரது முகம் அத்தனை களையாக இருக்கும். இந்த தோற்றத்தில் அவர் வேறு திரைப்படம் எதிலும் தோன்றியதாக நினைவில்லை.

டி.டி.கே. குழுமத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றிக் கொண்டே நாடகங்கள் நடித்து வந்தார். விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் குழுவில் இருந்த அத்தனை பேருமே ஆர்வத்தின் பேரில் பணியாற்றியவர்கள்தான். நாடகத்துக்கு என்று தனியாக சன்மானம் கிடையாது. கிடைக்கும் லாபத்தை அப்படியே சேர்த்து வைத்து வருடத்துக்கு ஒருமுறை அவரவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்த அரசியல் சூழலை சோ வெகுவாக கிண்டலடித்து தன்னுடைய நாடகங்களில் வசனமாக சேர்ப்பார். இது பரபரப்பாகும். அப்போதெல்லாம் நாடகம் நடத்த, நாடகத்தின் ஸ்க்ரிப்டை காவல்துறையிடம் சமர்ப்பித்து அனுமதி வாங்க வேண்டிய நடைமுறை இருந்தது.

பக்தவத்சலம் ஆட்சிக் காலம். அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவது குறித்த கிண்டல் ஏகத்துக்கும் ஒரு நாடகத்தில் இருந்தது. இந்த நாடகத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்க, வழக்கு தொடுத்து அனுமதி பெற சோ முயற்சித்தார். பிரச்சினை வேண்டாம் என்று அனுமதி கொடுத்து விட்டார்கள்.

ஒருமுறை இந்நாடகத்துக்கு காமராஜர் தலைமை தாங்கினார். மேடையில் பேசிய ஜெமினி கணேசன், ‘அரசு இந்நாடகத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை, ஆனால்- காமராஜரே தலைமை தாங்குமளவுக்கு சிறப்பான நாடகம்’ என்று கொளுத்திப் போட, காமராஜர் மேடையிலேயே நாடகத்தை கிழித்து தோரணம் கட்ட ஆரம்பித்து விட்டார். பதிலுக்கு சோவும் எதிர்த்துப் பேச, பாதியிலேயே காமராஜர் வெளிநடப்பு செய்தார். இந்த பரபரப்புதான் சோவை தமிழகம் எங்கும் பிரபலமாக்கியது. அதே காலக்கட்டத்தில் காமராஜரின் சீடரான சிவாஜியே சோவை சினிமாவுக்கும் அழைத்துச் சென்றது சுவையான முரண்.

சோ நாடக உலகில் உச்சத்தில் இருந்த அதே காலக்கட்டத்தில்தான் திமுக ஆட்சியை பிடித்தது. பார்ப்பனீய சிந்தனைகளின் முழு உருவமான சோவால் இந்த அரசியல் போக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரியார், அண்ணா போன்றோரை கிண்டலடித்து வசனங்கள் எழுதினார்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அவர் எழுதி நாடகமாக்கிய ‘முகம்மது-பின்-துக்ளக்’ பெரும் வெற்றி பெற்ற நாடகம். இது இந்திரா காந்தியைதான் அதிகம் விமர்சிக்கிறது என்றாலும், அதில் தொடப்பட்டிருந்த மொழிப்பிரச்சினை மாதிரி விஷயங்கள் திராவிட இயக்கத்தாரை வெகுண்டெழச் செய்தது. இந்த எதிர்ப்பே அந்நாடகத்துக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தது.

‘முகம்மது-பின்-துக்ளக்’ நாடகத்தை சினிமாவாக எடுக்க சோ முயற்சித்தார். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இத்தனைக்கும் அப்படத்தை தயாரித்தவர் எம்.ஜி.ஆரிடம் மேனேஜராக இருந்த நாராயணன். ‘இந்நாடகம் இஸ்லாமியரை கேவலப்படுத்துகிறது’ என்றொரு பிரச்சாரம் கிளம்ப, படத்தின் டைட்டில் பாடலாக ‘அல்லா.. அல்லா... நீ இல்லாத இடமே இல்லை.. நீதானே உலகின் எல்லை’ என்கிற பாடலை போட்டு அந்தப் பிரச்சாரத்தை முறியடித்தார்.

திராவிட சிந்தனைகளின் கோட்டையாக திகழ்ந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சி. அங்கிருந்த மாணவர்களில் சிலர், ‘உன்னால் ஒரு பத்திரிகை நடத்த முடியுமா?’ என்று சவால்விட, ‘நடத்திக் காட்டுகிறேன்’ என்று சவால் விட்டு, விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியனின் ஆதரவில்தான் ‘துக்ளக்’ தொடங்கினார்.

சில கட்டுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் பத்திரிகைகளுக்கு எழுதியிருந்தாரே தவிர அதுவரை சோவுக்கு நேரடி பத்திரிகை அனுபவங்கள் எதுவும் பெரியதாக இல்லை. ‘துக்ளக்’கின் முதல் இதழில் அப்படி இப்படியென்று 47 பக்கங்கள் தேத்திவிட்டார். ஒரு பக்கத்துக்கு என்ன போடுவது என்று தெரியவில்லை. பக்கம் முழுவதுமே ‘இந்தப் பக்கத்தை படிக்காதீர்கள்’ என்று எழுதிவைத்து ஒப்பேற்றினார். ‘மற்ற பக்கங்களை படித்து உங்களுக்கு என்ன பிரயோசனமோ, ஒன்றுமில்லாத இந்தப் பக்கத்தைப் படித்தாலும் உங்களுக்கு அதே பிரயோசனம்தான்’ என்கிற மாதிரி அடிக்குறிப்பும் எழுதினார்.

கலைஞர் 71ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்த நேரம். ‘துக்ளக்’ இதழ் பெரியாரை படுமோசமாக சீண்ட, திமுகவினர் துக்ளக் அலுவலகம் மீது தாக்குதல், இதழ்களை எரிப்பது என்று கிளம்பினார்கள். தானாகவே அணைந்திருக்க வேண்டிய விளக்கான ‘துக்ளக்’ இதன் காரணமாக பரபரப்பான இதழாக மாறியது (சோ ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த இன்னொரு ஆங்கில இதழ் படுமோசமாக தோற்றது என்பதையும் நாம் நினைவுகூற வேண்டும்) அதுவரை சினிமா டிக்கெட்தான் பிளாக்கில் விற்கப்படும். முதன்முதலாக ஒரு பத்திரிகை பிளாக்கில் வாங்கி படிக்கப்பட்டது. பிற்பாடு எமர்ஜென்ஸியின் போது இதே ‘துக்ளக்’ இதழை தன்னுடைய ‘முரசொலி’ அச்சகத்தில் அச்சிட கலைஞர் ஏற்பாடு செய்தார் என்பதும் இங்கே அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டிய வரலாறு.

எமர்ஜென்ஸியின் போதுதான் சோவுக்கு ஏராளமான அரசியல் தொடர்புகள் கிடைத்தது. அப்போது இந்திரா அரசுக்கு எதிராக அவர் காட்டிய துணிச்சல் என்றென்றும் போற்றப்பட வேண்டியது. எமர்ஜென்ஸி முடிந்த ஜனதா அரசு பொறுப்பேற்றபோதுதான் சோவின் அரசியல் புரோக்கர் பணிகள் தொடங்கின. மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், வாஜ்பாய், அத்வானி, சரண்சிங், ஹெக்டே போன்ற தலைவர்களோடு அவர் நெருக்கமாக பழகக்கூடிய வாய்ப்புகள் அமைந்தன. 77 தேர்தலில் நேரடியாக ஜனதாவுக்கு சோ தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.

பின்னர் என்.டி.ராமாராவின் ஆட்சி ஆந்திரத்தில் கவிழ்க்கப்படக்கூடிய சூழல் இருந்தபோதும் சோவின் அரசியல் பின்னணிப் பணிகள் சிறப்பாக நடந்தன. ராஜீவின் இந்திரா காங்கிரஸ் தோற்ற நிலையில், தன்னுடைய லட்சியமான இந்து ராஷ்டிரத்துக்கு வி.பி.சிங் முட்டுக்கட்டையாக வந்தபோது அவரையும் கடுமையாக எதிர்த்தார்.
ஆச்சரியப்படக்கூடிய விஷயம் ஒன்று என்னவென்றால், எம்.ஜி.ஆரின் அதிமுகவை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து கிண்டல் செய்துக் கொண்டிருந்தார். ‘துக்ளக்’கின் ‘ஒண்ணரைப்பக்க நாளேடு’, எம்.ஜி.ஆர். அளவுக்கு வேறு யாரையும் படுமோசமாக சேதாரப்படுத்தியதில்லை. ஆனால், தன்னுடைய அபிமான ஜெயலலிதா, அக்கட்சிக்கு தலைமையேற்றபோது அகமகிழ்ந்தார். இருப்பினும் ஜெயலலிதாவிடம் தான் எதிர்ப்பார்த்த முக்கியத்துவம் கிடைக்காத நிலையில் 96 தேர்தலில் யாருமே எதிர்பாரா வண்ணம் திமுக ஆட்சிக் கட்டில் ஏற உழைத்தார். பாஜக, திமுகவோடு கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியை தக்கவைக்க சோவின் பின்னணிப் பணிகளும் காரணம். இதற்கு பரிசாகதான் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.

ரஜினியை எப்படியாவது பாஜகவுக்கு கொண்டுச் சேர்த்துவிட வேண்டும் என்கிற அவரது முயற்சி படுதோல்வி அடைந்தது. சோவின் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியாக நரேந்திரமோடியை மட்டுமே சொல்ல வேண்டும். 2002 குஜராத் கலவரங்களின் போதே, ‘இது நம்ம ஆளு’ என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

கடைசி பத்து, பதினைந்து ஆண்டுகளாக தன்னை அரசியல் விமர்சகர் என்கிற நிலையிலிருந்து பார்ப்பன சாதிமுகமாக அவராகவே வெளிப்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘ராஜகுரு’ என்கிற அடைமொழி அவரை இழிவானப் பொருளில் குறித்தாலும், அதை தன்னுடைய பெருமையாகவே சோ கருதினார். குருமூர்த்தி போன்ற சாதிய சிந்தனையாளர்களை பிரபலமாக்க கடுமையாக உழைத்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திராவிட கோடரிக் காம்புகளை வளர்த்துவிட்டார். கடந்த தேர்தலில்கூட தேமுதிக, திமுகவோடு கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உடல் படுமோசமாக நலிவற்ற நிலையிலும் பின்னணியில் காய்களை நகர்த்தினார். சங்கராச்சாரியார் கைது போன்ற தனக்கு உவப்பில்லாத வேலைகளை ஜெ. செய்தபோதும்கூட அவரோடு சமரசமானார். இதற்கு பலனாக ‘மிடாஸ் இயக்குநர்’ போன்ற கவுரவங்கள் அவருக்கு கிடைத்தன.

வாழ்நாள் முழுக்க திராவிடத்தின் அழிவை கண்டு களிக்க கனவு கண்டு கொண்டிருந்தவர், அது பகல் கனவு ஆன நிலையிலேயே கண்ணை மூடியிருக்கிறார்.

3 கருத்துகள்:

  1. Disliking it to the core. You completely lost my respect. U were preaching earlier about how to behave in a funeral and now what have done. A complete hypocrite you are. First learn where to play you Jalara.

    பதிலளிநீக்கு
  2. திராவிடத்தின் அழிவை அல்ல, திராவிட கட்சிகளின் மூடத்தனத்தையும், பார்ப்பன வெறுப்பையும் அழிக்க முயன்றார்.

    பல பல தி.மு.க தலைவர்களை (அண்ணா, கருணாநிதி தவிர) விட சோ பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  3. சரியான, பாரபட்சமற்ற கருத்து; மரணம் கருதி புனிதப்படுத்தியிருந்தால்தான் தவறு.

    பதிலளிநீக்கு