1 ஜூலை, 2016

ஏக் தோசை ஹை!

எஸ்.வி.சேகர் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர். சிறுவயதிலிருந்தே அவருக்கு ரசிகனாக இருக்கிறேன். எங்கள் ஊர் பிரின்ஸ் ஸ்கூலில் அவர் நடிப்பில் ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ பார்த்தபிறகு, கிட்டத்தட்ட அவரது அனைத்து நாடகங்களையும் சென்னை அரங்குகளில் நேரிலேயே கண்டிருக்கிறேன். பிற்பாடு ஆடியோ கேசட்டுகளாக அவை வந்தபோது அத்தனையையும் வாங்கினேன். ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ பதிப்பித்திருக்கும் அவரது நூல்கள் எல்லாமே என்னிடம் உண்டு. எஸ்.வி.சேகர் நடித்த சினிமாப்படங்களையும் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே பார்த்திருக்கிறேன். ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சிம்லா ஸ்பெஷல்’ படங்களில் அழுத்தமான நடிப்பில் கலக்கியிருப்பார். இராம.நாராயணன் படங்களில் எஸ்.வி.சேகர் நடித்த காலம் தமிழ் சினிமா காமெடியின் பொற்காலம். எந்தளவுக்கு எஸ்.வி.சேகரை பிடிக்குமென்றால், அவரது மகன் நடித்தார் என்கிற ஒரே காரணத்துக்காக ‘வேகம்’ என்கிற ரொம்ப சுமாரான படத்தைகூட முதல் நாளே தியேட்டருக்கு போய் பார்த்தேன்.

நிற்க.

நியூஸ்7 தொலைக்காட்சிக்காக சுவாதி கொலைகுறித்து அவர் கொடுத்த ஆவேசமான நேர்காணலினை யூட்யூப்பில் காண நேர்ந்தது. இந்த படுசோகமான சூழலிலும் அவருக்கு காமெடி மட்டும்தான் வருகிறது என்பது கொடுமை. சுவாதி கொலைக்கும், இந்திக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால், இந்தி தெரியாததால் சரவணபவனில் தோசைகூட வாங்க முடியவில்லை என்று உளறிக் கொட்டியிருக்கிறார். சுவாதி கொல்லப்பட்டதற்கே கூட காரணம், அவருக்கு இந்தி தெரியாததுதான் என்று சொல்லிவிடுவாரோ என்கிற அச்சத்தோடே அந்த நேர்காணலை முழுமையாக பார்த்தேன். இன்னும் அந்தளவுக்கு எஸ்.வி.சேகரின் நகைச்சுவை முதிர்ச்சி அடைந்துவிடவில்லை.

எழுபதுகளின் இறுதியில் பிறந்தேன். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். இந்தித் திணிப்பின் கொடுமையை நேரடியாக அனுபவம் பெறக்கூடிய வாய்ப்பு பள்ளிப் பருவத்தில் அமையவில்லை. எண்பதுகளின் இறுதியில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஓர் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது ஹைஸ்கூல் அண்ணன்கள் எங்கள் பள்ளிக்கு வந்து, “எல்லாரும் வீட்டுக்குப் போங்கடா...” என்று துரத்தியடித்து மறைமுகமாக எங்கள் அனைவரையும் அந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அதைத்தவிர இந்தித் திணிப்பு எதிர்ப்பில் எனக்கு வேறெந்த பங்குமில்லை. ‘தம்பி எழடா, எடடா வாளை’ என்று கலைஞர் அழைத்தபோதுகூட வாளை எடுத்துக் கொண்டு, இந்தி அரக்கியை வெட்ட கிளம்பியதுமில்லை. ஏனெனில், என்னிடம் வாளுமில்லை.

என்ன, தூர்தர்ஷன்தான் ஆரம்பத்தில் இந்தி நிகழ்ச்சிகளாக போட்டு தாலியறுத்தது. அதையும்கூட கொஞ்சநாளில் குன்ஸாக புரிந்துக்கொண்டு பார்ப்பதற்கு பழகிக் கொண்டேன்.

ஏழு கழுதை வயதான நிலையில் இந்தி கற்க நான் டியூஷனுக்கு கூடச் சென்றேன். கூட படித்த சக மாணவர்கள் ஒண்ணாவது, ரெண்டாவது படிக்கிற வயதில் இருந்தார்கள். அவர்கள் எதிரில் டீச்சரிடம் ஹோம்வொர்க் செய்யவில்லை என்று திட்டு வாங்குவதில் ஏற்பட்ட சங்கடத்தால்தான் ‘ஏக், தோ, தீன்’ கற்றுக் கொள்வதை ஆரம்பத்திலேயே விடவேண்டி இருந்தது. என் மனைவியின் விருப்பப்படி என் குழந்தைகள் இப்போது ஆர்வமாக தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியும் பயில்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு சமஸ்கிருதமோ, பிரெஞ்சு மொழியோ கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டால் அதற்கு தடையேதும் போடப்போவதில்லை.

இந்தி என்கிற மொழி மீது எனக்கோ, தமிழ்நாட்டில் வேறு யாருக்குமோ வெறுப்பு என்பது இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். தமிழகத்தில் இப்போது விருப்பப்பட்டவர்கள் இந்திப்படம் பார்க்கிறோம். இந்திப் பாடல்களை கேட்கிறோம். 'ஜவானி கி’ ரக படங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் என்ன ஓட்டம் ஓடியது என்று மறக்க முடியுமா. ஒரு மொழி மீது விரோதம் கொள்ளுமளவுக்கு தமிழனுக்கு மூளை பிசகிவிடவில்லை. “எந்த மொழி கற்றால் நீ பிழைக்க முடியுமோ, அந்த மொழியை கற்றுக்கொள்” என்றுதான் முதற்கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்கிய தந்தை பெரியாரேகூட சொல்லியிருக்கிறார்.

பிரச்சினை, திணிப்புதான். எனக்கு எஸ்.வி.சேகர் நடித்த ‘சகாதேவன் மகாதேவன்’, ‘தங்கமான புருஷன்’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘எங்க வீட்டு ராமாயணம்’ படங்களை பார்க்கதான் விருப்பமாக இருக்கிறது. இதற்கு மாறாக பவர்ஸ்டாரின் ‘லத்திகா’, ஜே.கே.ரித்தீஷின் ‘நாயகன்’ மாதிரி படங்களைதான் நான் பார்த்தே ஆக வேண்டும் என்று அரசு ஆணை போட்டு வற்புறுத்தினால் கடுப்பாகவே செய்வேன்.

இந்தி தெரியாததால் என் வாழ்க்கையே போயிற்று என்று ஒருவன் சொன்னால் அது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப்பொய். அந்த சோம்பேறி கற்றுக்கொள்ளவில்லை என்பது அவனுடைய பிரச்சினை. தமிழகத்தில் இந்தி கற்க எப்போதும் தடை இருந்ததில்லை. விருப்பப்பட்டவர்கள் கற்கலாம் என்றுதான் திராவிட இயக்கமும் சொல்கிறது. இந்தி கற்கக்கூடாது என்று யாரும் யார் கையையும் பிடித்து இழுத்ததில்லை. இந்தி கற்பிக்கிறார்களே என்று பண்டிதர்களின் குடுமியை அறுத்ததுமில்லை.

ஒருவனுடைய சிந்தனை அவனுடைய தாய்மொழியில்தான் அமைகிறது. நான் தமிழில்தான் சிந்திக்கிறேன் என்பதால், தமிழ் கற்பது அடிப்படையாகிறது. என் பிழைப்புக்கு ஆங்கிலம் தேவைப்படுவதால் அதையும் ஒரு பாடமாக கற்றுக் கொள்கிறேன். உலகம் முழுக்க பணி செய்து சம்பாதிக்கவோ, மேற்படிப்புகள் படிக்கவோ உலகமொழியான ஆங்கிலம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆங்கிலத்தையே பத்தாம் வகுப்பு தேர்வில் தட்டுத் தடுமாறிதான் பார்டரில்தான் பாஸ் செய்து வந்திருக்கிறோம். இந்த லட்சணத்தில் மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயமாக திணித்தால் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் பணி செய்ய செல்பவர்களுக்கு இந்தி பேசவும், எழுதவும் தெரியவேண்டியது அவசியம்தான். அம்மாதிரி இங்கிருந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர் மிகக்குறுகிய காலத்திலேயே சரளமாகப் பேசுகிறார்கள். எழுதவும் கற்றுக் கொள்கிறார்கள். இந்தி மட்டுமல்ல. சீனாவுக்கு போய் பணி செய்யக்கூடியவர்கள் மண்டாரின் கற்றுக் கொள்வதும், வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் அரபி பேசுவதும் இயல்பாகவேதான் நடந்துக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் போய் பார்த்தால் கடலை / மோர் விற்பனை செய்பவர்கள் கூட சுற்றுலாப் பயணிகளிடம் பேசிப்பேசி இந்தி, ஆங்கிலத்தில் விளாசுவதை காணலாம்.

ஒரு வாரம் டெல்லியில் இருந்தபோது இந்தியில் நானும் சில வார்த்தைகள் கற்றுக்கொண்டு சமாளித்தேன். ஆறு மாதம் இருந்திருந்தால் ஐஸ்வர்யாராயையே கரெக்ட் செய்திருப்பேன். மொழி தெரியாததால் சொல்லிக் கொள்ளும்படி எந்தப் பிரச்சினையுமில்லை. இன்னும் சொல்லப் போனால், எனக்கு புரியவைக்க வேண்டுமே என்றுதான் அங்கிருந்த இந்திக்காரர்கள் ரொம்ப மெனக்கெட்டார்கள்.

நிலைமை இப்படியிருக்க சரவணபவனில் தோசைகூட வாங்கி சாப்பிடமுடியவில்லை என்று எஸ்.வி.சேகர் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. 1930களின் இறுதியில் ராஜாஜி, இங்கே இந்தியை திணிக்க முயற்சித்ததற்கு காரணமே, பார்ப்பனர்களோடு தமிழர்கள் போட்டி போட்டுக்கொண்டு அரசுத்துறைகளுக்கு வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தால்தான். திராவிட இயக்க எழுச்சி காரணமாக பிற்படுத்தப்பட்டவர்களும் / தாழ்த்தப்பட்டவர்களும் பள்ளி, கல்லூரி என்று படிக்க ஆரம்பித்து அரசுவேலைகளில் பங்கு கேட்டு நிற்பதற்கு முட்டுக்கட்டை போடவே இந்தியை ஆயுதமாக கையில் எடுத்தார்கள். தமிழர்கள் ஒன்றுசேர்ந்து அந்த முயற்சியை முறியடித்தார்கள்.

சுதந்திரத்துக்கு பிறகு இங்கே இந்தியைத் திணிப்பது என்பது வடக்கத்தியர்களுக்கு கவுரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. அரசுவேலை என்கிற மசால்வடையை காட்டி தமிழனை இந்திமயமாக்க நினைத்தார்கள். அறுபதுகளில் நடந்த இரண்டாம் கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டு நேருவின் மும்மொழி திட்டம் படுதோல்வி அடைந்தது.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இந்தி கற்றுக் கொள்ளாததால் எங்களுக்கு அரசுவேலை கிடைக்கவில்லை என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், இந்திக்காரர்களே இப்போது வேலைக்கு தமிழகம் நாடிதான் வந்துக் கொண்டிருக்கிறார்கள் எனும்போது, சரவணபவனில் தோசைகூட கிடைக்கவில்லையென்றெல்லாம் தினுசு தினுசாக முகாரி பாடுகிறார்கள்.

அவர்களது நோக்கம் இந்தியை பரப்புவது அல்ல. அதைத் திணித்து தமிழனின் பிழைப்பில் மண்ணைப் போடுவதே. எப்போதும் பிழைப்புவாதமே அவர்களது குறிக்கோள். பூணூலை அறுத்துப் போட்டால்தான் அமெரிக்காவில் க்ரீன்கார்டு என்று அறிவித்தால், அதை ஆச்சாரிகள் எதிர்ப்பார்கள். இந்த ஆச்சாரியார்களோ அறுத்துப் போட்டுவிட்டு மவுண்ட்ரோடு தூதரகம் வாசலில் வரிசையில் நிற்பார்கள். இந்த உண்மையை தமிழன் புரிந்துக் கொள்ளாததால்தான் அவர்களுக்கு அடிவருடியாக மாறி, ‘இந்தி கற்காததால் ஒரு தலைமுறையே கெட்டது’ என்று ஆதாரமில்லாமல் குடிகாரன் மாதிரி எஸ்.வி.சேகர்களின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களுக்கு பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான்.

23 கருத்துகள்:

 1. ஒரு வன்னியர், நாயுடு, நாடார் சொல்லும் கருத்துக்கள், தனிப்பட்ட கருத்துகளாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு பிராமணரின் கருத்தை ஒட்டு மொத்த சமுதாயத்தின் கருத்தாக ஏன் பார்க்கீறீர்கள்?. உங்கள் தனிப்பட்ட வெறுப்பு மறைமுகமாக காரணமாக இருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வன்னியர், நாயுடு, நாடார்களுக்கு இம்மாதிரி சமூகக் கொள்கை சார்ந்த collective mentality கருத்துகள் இருப்பதாக தெரியவில்லை.

   சாதிக்கலவரம் மாதிரி பிரச்சினைகளின் போது நீங்கள் குறிப்பிடும் வன்னியர், நாயுடு, நாடார்களைதான் எதிர்க்கிறோம். பார்ப்பனர்களை எதிர்ப்பதில்லை.

   எதிர்ப்போ, ஆதரவோ அந்தந்த இஷ்யூ சம்பந்தப்பட்டது.

   நீக்கு
  2. Are you saying SV Sekar opinion is shared by all or most of the Brahmins? Do you search for opportunities to post against particular community? Some of your opinions directly or indirectly help to create aversion against community. ( பாம்பை கண்டால் விட்டு விடு, பார்ப்பனர்களின் ஒலம் கேட்கும்). Hope you will take it positively .

   நீக்கு
  3. There is no wonder Sir :) I am against casteism. Obviously against Bhramins. They are the route of varna system.

   நீக்கு
  4. நீங்கள் சாதிக்கு எதிரானவரா? வேறு எந்த சாதியினரை பற்றி விமர்சித்துள்ளீர்களா? உங்கள் எழுத்துக்கள் அவர்களை தனிப்பட்ட வித்த்தில் தாக்குவது போல் உள்ளது.

   நீக்கு
  5. Root or route
   Either way it is not true !

   None will changle his stand publically!!!

   நீக்கு
  6. ஆளுனர்கள் 30 அதில் பிராமணர்கள் 13
   உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 அதில் பிராமணர்கள் 9
   உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 அதில் பிராமணர்கள் 166
   வெளிநாட்டு தூதர்கள் 140 அதில் பிராமணர்கள் 58
   பல்கலைகழக துனைவேந்தர்கள் 98 அதில் பிராமணர்கள் 50
   மாெத்த நீதிபதிகள் 438 அதில் பிராமணர்கள் 250
   கலெக்டர்,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 அதில் பிராமணர்கள் 2376
   பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 அதில் பிராமணர்கள் 190
   ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 அதில் பிராமணர்கள் 89

   நாங்கல்லாம் படிச்சிட்டு மேல போறோம் !
   நாங்க உருவாக்கின ஜாதியால நீங்க அடிச்சிக்கிட்டு சாவுங்கடா !!
   இதுதானய்யா உங்க பர்மெனென்ட் அஜெண்டா !!!

   நீக்கு
  7. Super. Please forward it to brahmins association. I thought they (we) got wiped out from both political and admin spectra of India. Can you also help with stats regarding CA, IT and legal professionals. Thanks in advance. 😂

   நீக்கு
  8. Also there are some disturbing figures that do not go well with your analysis. Those may the number of Brahmins in communist parties, no of Brahmins in trade unions, no of Brahmins who participated in freedom struggle etc. We should treat all those folks as backward caste members😠

   நீக்கு
 2. யுவா..ஐஸ், நம்ம பக்கத்து மங்களூர் காரர் என்பதால் தமிழும் தெரியும் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் யூடியூப்பில் பார்க்கலாம் அதனால் நீங்கள் இப்போதும் கரெக்ட் செய்ய முயற்சிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐஸ்வர்யாவின் தாய்மொழி துளு திராவிட மொழிக்குடும்பம்தானே ;)

   நீக்கு
  2. எப்போ? அது முக்கால் கிழவி ஆன பின்னரா?

   நீக்கு
 3. கட்டூரை, விளக்கமான விலாசல்! மிக அருமை.

  பதிலளிநீக்கு
 4. எஸ்விசேகர் சொல்ல நினைத்தது இதுதான்... வடநாட்டவர்கள் இன்று பல்வேறு கடை ஹோட்டல்களில் தமிழ்நாட்டில் அதிகமாக குறைந்த ஊதியத்திற்கும் பணிபுரிய வந்துவிட்டார்கள்... அதனால் நமக்கு ஹிந்தி தெரிய வேண்டி வந்து விட்டது என்று.. அதை அவர் நகைச்சுவைக்காக சரவணபவன் தோசை என்று சற்று மிகைப்படுத்தி கூறியிருக்கிறார். அவ்வளவுதான்... பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களிலும் கூட இந்த நிலைதான். உங்களுக்கு அவர் சொல்ல வந்தது துளியும் புரியவில்லை என நன்றாக புரிகிறது. ஹிந்தி வந்தால் பார்ப்பன ஆதிக்கம் நிலைக்கும் என்ற கற்பனை மிக வேடிக்கை. நாட்டில் அறுபது சதவீதம் பேர் பேசும் மொழி கற்பதால் என்ன ஆபத்து ஏற்படும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார், உங்க பார்ப்பன விசுவாசத்துக்கு அளவே இல்லையா?

   சரவணபவனில் பத்து சப்ளையர் இந்தி பேசுறான் என்பதற்காக, தினமும் வந்து போகும் ஆயிரம் கஸ்டமர் இந்தி கத்துக்கணுமா?

   மராத்திக்காரன் மும்பையை இந்திக்காரனுக்கு தாரைவார்த்த மாதிரி சென்னையை தாரைவார்க்க சொல்லுறீங்களா?

   நீக்கு
  2. what 60% speak Hindi. No wonder why we call this paarpaneeyam, an unadulterated lie.

   -Dev

   நீக்கு
 5. தமிழ்நாட்டுக்கு பொழைக்க வர்றவங்களை
  தமிழ் கத்துக்க சொல்லுங்கடா வெண்ணைகளா!

  பதிலளிநீக்கு
 6. யுவ கிருஷ்ணா - வடுகர்கள் கோவை மாவட்டத்தில் மற்ற சாதி தொழில்களை எப்படி நசுக்கினர், நசுக்கிக்கிக்கொண்டு இருக்கிறன்றனர் என்று ஒரு கட்டுரை எழுதி விட்டால் உங்கள் நடுநிலை எல்லோருக்கும் தெரியும்.

  பதிலளிநீக்கு
 7. எனது பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்கள் சமீபத்தில் தங்களை அவர் தளத்தில் ஒரு முக்கியமான "சென்னை ஜாதிகள்(தலைப்பு சரியாக நினைவில் இல்லை)" பற்றி எழுதிய நானும் படித்த உங்கள் கட்டுரையை புகழ்ந்தார்கள்.நானும் அடிக்கடி ஒரு 'light reading' காக உங்களின் ஜனரஞ்சகமான கட்டுரைகளை படித்து ரசிப்பதுண்டு.ஆனால் இக் கட்டுரையில் "ஹிந்தி மொழி" எதிர்ப்பின் போது தமிழ்நாட்டில் ஒன்றுமே நடக்காது மாதிரிஎழுதி இருக்கிறீர்கள்(இந்தி கற்க எப்போதும் தடை இருந்ததில்லை. விருப்பப்பட்டவர்கள் கற்கலாம் என்றுதான் திராவிட இயக்கமும் சொல்கிறது. இந்தி கற்கக்கூடாது என்று யாரும் யார் கையையும் பிடித்து இழுத்ததில்லை. இந்தி கற்பிக்கிறார்களே என்று பண்டிதர்களின் குடுமியை அறுத்ததுமில்லை.)அதை உங்கள் எழுத்தில் சொல்வதானால் "பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப்பொய்" இதில் நீங்கள் எஸ்.வி.சேகரையும் விஞ்சி
  நிற்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 8. யுவா , நீங்கள் குறிப்பிடும் இந்தி அரக்கி என்ற வார்த்தை பிரயோகமே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து வெளிப்பட்டது தான். இந்தி எதிர்ப்பை வைத்து அரசியல் செய்த தமிழனத் தலைவரின் கதை நாடறியும். அது தங்களின் வாரிசுகளுக்கு டெல்லி அரசியல் செய்ய ஹிந்தி அறிய வைத்து தமிழனை குனிய வைத்த கதை. தயவு செய்து நடு நிலை தவறாமல் எழுதவும்.

  பதிலளிநீக்கு
 9. கட்டூரை மிக அருமை.

  பதிலளிநீக்கு
 10. MR YUVA WHATEVER SAID AND DONE YOU HAVE TO ADMIT THE BRAHMINS ARE DEFINETELY AHEAD OF OTHERS IN INTELLIGENCE PERSEVERANCE TOLERANCE AND PATIENCE
  THEY SCRUPULOUSLY FOLLOW VALLUVAR>>>> pulal marutthal hi man even the leather garments industry is dominated by brahmins soon all HAIR SALOONS ......

  பதிலளிநீக்கு