15 மார்ச், 2016

மறுபக்கத்தையும் பேசுவோம்

கண்டனம் தெரிவிக்காதது ஆணவக்கொலைகளை ஆதரிப்பதாகாது. பெயரிலாவது திராவிடத்தை கொண்டிருப்பவர்கள் சாதிவெறியை எந்நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதிமுக ஆளும் கட்சி. திமுக ஆண்ட ஆளப்போகும் கட்சி. ஒரு சம்பவம் நடந்ததுமே அதன் முழுப்பின்னணியும் தெரியாமல், அடுத்தக்கட்ட எதிர்வினைகளை கண்காணிக்காமல் உடனடியாக கண்டிப்பதோ, ஆதரிப்பதோ நடைமுறை சாத்தியமில்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் இவர்களுக்கு பாடம் கற்பித்திருக்கின்றன. ப்ளாஷ் நியூஸ் கணக்காக இவற்றை கண்டிக்க வேண்டிய அல்லது ஏதோ ஒரு கருத்தை உடனடியாக தெரிவித்து டி.ஆர்.பி. ஏற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஊடகங்களுக்கு இருப்பதை போல இந்த கட்சிகளுக்கு இல்லை. அவற்றை டெபாசிட் கூட வாங்க வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் மநகூ போன்றவர்கள்தான், நாம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதை போல செய்யமுடியும். ஒருவேளை திமுக, அதிமுகவுக்கு நிகரான செல்வாக்குக்கு மதிமுகவோ, விடுதலை சிறுத்தைகளோ உயர்ந்தாலும்கூட இதுபோன்ற சூழல்களில் இன்ஸ்டண்ட் கருத்து தெரிவிக்க முடியாது என்பதுதான் கள அரசியல்.

உடுமலை ஆணவக்கொலை குறித்து அதிமுகவின் நிலை என்னவென்பதை மாஃபா பாண்டியராஜனோ, சி.ஆர்.சரஸ்வதியோ டிவி விவாதங்களில் “எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க” என்று விளக்கமளிப்பார்கள்.

திமுகவை பொறுத்தவரை மத்தளம் கதைதான். கருணாநிதி மதத்தை, சாதியை எதிர்க்கிறாரே... இவர்களது ஓட்டெல்லாம் தனக்கு வேண்டாமென்று வெளிப்படையாக அறிவிப்பாரா என்று வருடம் முழுக்க சவால் விட்டுக்கொண்டே இருப்பார்கள். சாதியக்கலவரமோ, மதக்கலவரமோ, ஆணவப்படுகொலைகளோ நடக்கும் சந்தர்ப்பத்தில் திமுகவை குறிப்பிட்ட மதத்தோடு, சாதியோடு தொடர்பு படுத்திப் பேசுவார்கள். கொடுமை என்னவென்றால் கோயமுத்தூர் குண்டுவெடிப்பின் போது திமுகவை இந்துமத வெறி பிடித்த கட்சி என்றுகூட கூறினார்கள். ஆனால் எச்.ராஜாக்களோ திமுகவின் இந்துமத எதிர்ப்புக்காக அக்கட்சியின் தலைவர்களை தூக்கிலிட்டால்கூட மகிழ்வார்கள்.

சாதியை ஒழிக்க வேண்டுமானால் அகமணமுறையை அழிக்க வேண்டும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். சமூக மாற்றத்தை சட்டம் கொண்டு செய்வது கடினம். அப்படி செய்வதாக இருந்தால் சுயசாதி திருமணத்தை இந்திய அரசியல் சட்டத்திலேயே தடை செய்திருப்பார் அம்பேத்கர்.

பெரியார் பாணி பிரச்சாரம் ஒன்றே ஒரே வழி. இனப்பெருக்கம் செய்ய ஓர் ஆண், ஒரு பெண் தேவை. இவர்கள் இணைந்து குழந்தை பெற்றால் குடும்பம். பத்து பதினைந்து குடும்பங்கள் இணைந்தால் சமூகம். பல சமூகங்கள் இணைவதுதான் இனம். பல இனங்கள் இணைந்துதான் இந்திய தேசியம். இதில் மதத்துக்கோ, சாதிக்கோ மருந்துக்கும் இடமில்லை என்பதை அறிவியல்பூர்வமாக மக்களை நம்பவைப்பதே நடைமுறை சாத்தியமான வழி. நாளையே இது நடக்குமென்று எதிர்ப்பார்ப்பது மூடத்தனம். இரண்டாயிரம் வருட மூடநம்பிக்கைகளை ஒழிக்க இருநூறு ஆண்டுகளாவது தேவை.

மதத்துக்கும், சாதிக்கும் இடமில்லாத சீர்த்திருத்த திருமணங்களை நாம் சட்டரீதியாக அங்கீகரித்தே இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை.

அதேநேரம்-

காதல் பற்றிய புரிதலையும் சமூகத்துக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உடல்ரீதியாக.. சட்டரீதியாக பெண்ணுக்கு பதினெட்டு வயதும், ஆணுக்கு இருபத்தோரு வயதும் வந்துவிட்டாலே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதே மகா அபத்தம். திருமணம் செய்துக் கொண்டவர்களுக்காவது இந்த உண்மை தெரியவேண்டும். பாலியல் தேவை என்பது தம் அடிப்பதோ, டீ குடிப்பதோ போன்ற மிகசாதாரணமான அன்றாடத் தேவைகளில் ஒன்றுதான். திருமணம் என்பது அதற்கு மட்டுமேயான தீர்வல்ல. காதலிக்க காசு தேவையில்லை. ஆனால் கல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பம் நடத்த வலுவான பொருளாதார அடித்தளம் அவசியம். பொருளாதாரரீதியாக வலுவடையாத நிலையில் இருக்கும் இருவர் அகமணரீதியாகவோ அல்லது கலப்புமண முறையிலோ இணைவது என்பது இருவருக்குள்ளும் ஏகப்பட்ட முரண்களை உருவாக்கி இறுதியாக விவாகரத்தை நோக்கிதான் செல்லும். உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கும் அதிகமாக வெறுக்கக்கூடிய நிலை ஏற்படுவது சற்றும் சகிக்க இயலாதது. இம்மாதிரி வலுவற்ற திருமண பந்தங்கள் உருவாவது உருப்படியான குடும்பங்களை உருவாக்காது. உருப்படாத குடும்பங்கள், இலட்சிய சமூகத்தின் அங்கங்களாக மாறாது.

சாதி-மத எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள், காதலை ஆதரிப்பவர்கள் சரியான துணையை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் செய்ய வேண்டும். கண்டதும் காதல் என்பதெல்லாம் வெறும் ஃபேண்டஸி. காதலர்கள் சினிமாவுக்கோ, தீம்பார்க்குக்கோ போகும்போதெல்லாம் காசு பிரச்சினையில்லை. கல்யாணம் செய்து கர்ப்பமானபிறகு மாதாமாதம் செக்கப்புக்கு போகும்போது டாக்டருக்கு கொடுக்க காசு இல்லையென்றால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

அடுத்து, காதலிப்பவர்கள் கல்யாணத்துக்கு பெற்றோரை எப்படி கன்வின்ஸ் செய்வது என்பதையும் காதலிப்பதற்கு முன்பாகவே திட்டமிட வேண்டும். ‘ஓடிப்போதல்’ என்பது சம்பந்தப்பட்ட காதலன், காதலியோடு முடிந்துப் போய்விடுவதில்லை. ஒரு குடும்பம், அவர்களது சொந்தபந்தங்கள் உள்ளிட்டவர்களை பாதிக்கக்கூடிய முடிவு இது. நகர்ப்புறங்களில் பரவாயில்லை. கிராமப்புறங்களில் ஓடிப்போன ஒரு பெண்ணின் குடும்பம் தொடர்ச்சியாக அந்த ஊரில் வாழமுடியாது என்பதே நிலை. உண்மைதானே?

படிக்கும் காலத்தில் காதல் சரிதானா? இப்போது கவுசல்யாவுக்கு பிறந்த குடும்பத்தின் ஆதரவு இல்லை. புகுந்த குடும்பத்துக்கு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமோ, கடமையோ இல்லை. படிப்பு தடைபடும். இந்த ஆணவக் கொலையை ஒரு வாரத்துக்கு கண்டித்து ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, கட்டுரை எழுதிவிட்டு கவுசல்யாவை நாம் (அதாவது சமூகம்) மறந்துவிடப் போகிறோம். கவுசல்யாவின் எதிர்காலம் என்ன?

முற்போக்காக இருப்பதே பிற்போக்காக ஆகிவிடக்கூடிய அவலம் நேர்ந்துவிடக்கூடாது. ஆணவக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. அது தொடர்பான மற்ற ஹைப்பர்லிங்க் இஷ்யூக்களையும் சேர்த்து பேசியாக வேண்டும். பேசுவோம்.

15 கருத்துகள்:

 1. இதே கருத்தைத்தான் நானும் கொண்டிருக்கிறேன்.கூலிப்படைகளின் கொடூரக்கொலையை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.அதே சமயம் அற்கான பின்புலத்தையும் கூர்ந்து பார்க்கவேண்டும். நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. காதலிப்பதற்கும், கல்யாணம் செய்வதற்குமான ஆலோசனைகளை இந்தக் கணத்தில் பேசுவது என்பது ஒரு பேரவலம். யோசிக்காமல் கல்யாணம் செய்து பிச்சை எடுக்கட்டும், விவாகரத்து வாங்கட்டும், எப்படியோ போகட்டும். அதை ஒரு கொலை நடந்த சம்பவத்தோடு இணைத்து சொன்னால் என்ன அர்த்தம் ?

  ஓடிப்போனவர் குடும்பத்தை சமுதாயம் ஒதுக்குமா ? சரி. இதற்குக் காரணம் யார்? எப்படி சரி செய்வது? இந்த சமுதாயம் மனம் மாறும் வரை கலப்புத் திருமணத்தை தடை செய்து விடுவது தீர்வாகுமா?


  // திமுக, அதிமுகவுக்கு நிகரான செல்வாக்குக்கு மதிமுகவோ, விடுதலை சிறுத்தைகளோ உயர்ந்தாலும்கூட இதுபோன்ற சூழல்களில் இன்ஸ்டண்ட் கருத்து தெரிவிக்க முடியாது என்பதுதான் கள அரசியல் // 'கள அரசியல்' என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்திற்கு செல்லப்பெயர். பெரியாரைப் போற்றும் ஒருவர் இப்படியா சுரணையற்றுப் பேச வேண்டும் ?

  பதிலளிநீக்கு
 3. Very disappointing to see this article coming from you.

  பதிலளிநீக்கு
 4. தோழர்களே!

  முந்தைய ஆணவக்கொலை சம்பவங்களில் பேசப்பட்ட இளவரசன் துணைவியார் திவ்யா, கோகுல்ராஜின் காதலி சுவாதி போன்றவர்களை குறித்த நம்முடைய ஃபாலோஅப் என்ன? பத்துநாள் கழித்து கவுசல்யாவுக்கும் அதேதானே?

  ஒரு புரட்சியை (?) செய்கிறோம் என்றால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கே பலனில்லை என்றால் நம் கருத்துகள் வெத்துத் தோட்டாக்களா? ஏதோ சாதிவெறியை நாமும் கண்டித்தோம் சுயதிருப்தி அடைந்துவிட்டுச் செல்வதில் என்ன பொருள்?

  பதிலளிநீக்கு
 5. ஆம் எந்த ஒரு விஷயத்திலும்
  மறுபக்கத்தையும் ஆராய்வதே , யோசிப்பதே
  அறிவுப் பூர்வமானது.
  இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியமே
  வாழ்த்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
 6. It seems that you are justifying the murder, you are opposing and expressing condemn on death penalty in your previous articles so how can you accept this murder, also there is no single word in your article about the people those who were involved in this murder.I totally disagree with you and I think you are trying to defend DMK in this matter.

  பதிலளிநீக்கு
 7. இது விட வருந்த தக்க விசயம் என்னவெனில் ...சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர்கூட காப்பாற்ற முன்வரவில்லை..ஏன் முயற்சிக்க கூட இல்லை ...வருத்தம்

  பதிலளிநீக்கு
 8. ஒரு.கெரலையைை.ஓட்டுக்காக.கண்டிக்காத.தலை.வர்கள்.
  நாட்டுக்கு.வேண்டுமா..சங்கர்.குடும்ப.நிலை.எண்ணுக
  கெரல்ல.ஒருவருக்கும்.உரிமை.இல்லை
  மேரசமான.கட்டுரை

  பதிலளிநீக்கு
 9. dmk and admk ruled by backward communities such as dmk is of vanniar and reddy and admk is of gounder and mukuladhor ...but during dmk pweiod this type of violence happend less than jj period ... ambedkar asked separate nation for sc/st .... u should point out that ....

  பதிலளிநீக்கு
 10. Unfortunate article from u sir :( never expected u behaving like typical politician - skk

  பதிலளிநீக்கு
 11. I think that you are confused lot... you yourself are not sure what you want to say... dont post an article because you have to... if you have stuff kindly write... address the issue directly.. yes this is one of the worst article feom you.

  பதிலளிநீக்கு
 12. சபாஷ். தி.மு.க.வின் வழவழ கொழகொழா ஜாதி எதிர்ப்பை நியாயப்படுத்த மறுபக்கம் என்ன எல்லாப் பக்கத்தையும் சுத்தி சுத்திப் பாத்துக்கிட்டே இருக்கலாம். எடுத்தேன், கவிழ்த்தேன்னு கருத்து சொல்லி வீரம் காட்ட இதென்ன பிறாமணாள் சாப்பாடு ஹோட்டலின் பேரை மாற்றுகிறதுபோலத் தலைபோகும் விஷயமா? அதில் இருக்கும் புரட்சி, புண்ணாக்கு எதுவும் இதில் இல்லையே? போயிருப்பது வெறும் மனித உயிர்தானே? சரி, சரி, இதுதானே பெரியார் காலத்திலருந்தே நடந்துக்கிட்டிருக்கு? நடத்துங்க....

  பதிலளிநீக்கு
 13. periar karuna veramani kolathur mani kovai rama..suba veera... ramdoss etc had targeted brahmins only for all issues the net result is acute divisions between various castes were on the rise during dravidian regime.....resulting in murgers in intercaste marriages.
  i know of a dravidar kazhaga leader who advocated appointment of brahmin priest in their area temple than any priest from other castes...he hails from a dominant non brahjmin caste does not like any priest of lower caste than his own...

  பதிலளிநீக்கு