26 பிப்ரவரி, 2016

என்னப்பா இப்படி பின்னுறீங்களேப்பா...

வெகுஜன மனநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்.

1950களின் மத்தியில் அக்கட்சி தேர்தல் பாதைக்கு திரும்பியபோதே, மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருந்த சினிமாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அக்கட்சியின் நிறுவனர் அண்ணாவில் தொடங்கி, இளம் தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள் படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் மறைமுகமாக திமுகவின் கருத்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தினர்.

அக்கட்சி சார்பு நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் திமுக அடையாளங்களை காட்ட தவறியதில்லை.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவு பரவலாக கிடைக்கத் தொடங்கிய காலத்தில் ஏராளமான பத்திரிகைகள் நடத்தியும், பிரசுரங்கள் வெளியிட்டும் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்தார்கள். பிற்பாடு தொலைக்காட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டபோதும் அதையும் தனக்கு சாதகமான ஊடகமாக மாற்றிக்கொள்ளவும் திமுக தவறவில்லை.

இதுபோன்ற மக்கள் தொடர்பு பணிகள் ஏற்படுத்திய தாக்கத்தை தேர்தல் நேரத்தில் விளம்பரங்கள் மூலமாக தங்களுக்கு ஆதரவான அலையாக மாற்றுவது திமுக பாணி.

அரசியல் மேடைகளில் நல்ல தமிழை கொண்டு வந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான திமுகவினர், தேர்தல் விளம்பரங்களிலும் ‘நச்’சென்று நடுமண்டைக்கு ஏறும் விதமாகவும் வண்ணமயமான வாசகங்களை உருவாக்குவதில் வல்லவர்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்பதில் தொடங்கி, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ வரையிலுமான அவர்களது விளம்பரத் தொடர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பிரபலம்.

‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

‘ஊழல் பெருச்சாளிகளுக்கா உங்கள் ஓட்டு?’ என்கிற 96 தேர்தல் வாசகம், ஜெயலலிதாவை அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே மண்ணை கவ்வ வைத்தது. ‘சசிகலாபுரமா சமத்துவபுரமா?’ என்றெல்லாம் திமுக விளம்பரங்கள் மக்களை நோக்கி கேட்ட கேள்வி போயஸ் தோட்டத்தை நடுநடுங்க வைத்தது.

பொதுவாக இதுபோன்ற விளம்பரங்களில் திமுக இரண்டு வழிமுறைகளையே பின்பற்றுகிறது.

அக்கட்சி ஆட்சியிலிருந்து சந்திக்கும் தேர்தல்களின் போது தன்னுடைய சாதனைகளை முன்வைத்து விளம்பரங்கள் செய்யும்.

எதிர்க்கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்கும்போது, ஆளுங்கட்சியின் தவறுகளை பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக அம்பலப்படுத்தும்.

இந்த மரபு, விளம்பரங்களுக்கு மட்டுமல்ல. அக்கட்சியின் பிரசார மேடைகளுக்கும் பொருந்தும்.

மற்ற சில்லறை விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல், இந்த இரண்டு உத்திகளையே தொடர்ச்சியாக தேவைக்கேற்ப பயன்படுத்துவதால்தான் உலகிலேயே அறுபது ஆண்டுகளை கடந்தும் உயிரோட்டமாக இருக்கும் ஒரே பிராந்திய இயக்கமாக திமுக இருக்கிறது.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் ஊடகப்பணி, இன்றைய ஃபேஸ்புக் காலம் வரை ஏராளமான வடிவங்களை கடந்து வளர்ந்திருக்கிறது. கருணாநிதி ஒவ்வொரு முறை அப்டேட் ஆகும்போதும் கூடவே அவரது கட்சியும் தன்னை டெக்னாலஜிக்கு ஏற்ப அப்டேட் செய்துக் கொள்கிறது.

இதற்கு உதாரணம்தான் திமுக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து வெளியிட்டு வரும் பரபரப்பான விளம்பரங்கள்.

திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் தமிழகம் எங்கும் 234 தொகுதிகளிலும் நடத்திய ‘நமக்கு நாமே’ பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த பயணத்தின் போது அவர் ஒவ்வொரு ஊரிலும் முழங்கிய வாசகம் ‘முடியட்டும் விடியட்டும்’. அதிமுக ஆட்சி முடியட்டும், திமுக ஆட்சி விடியட்டும் என்கிற பொருளில் கூறப்பட்ட இந்த வாசகத்தின் தொடர்ச்சியாக சமீபநாட்களாக ஊடகங்களில் பளிச்சிடும் விளம்பரங்கள், மக்களிடையே பேசப்படும் விவாதமாக உருவெடுத்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை மையப்படுத்தி சிறப்பு விவாதம் நடத்தும் அளவுக்கு வெளியான முதல் நாளே பூகம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

விளம்பரத்துறையில் teaser ad என கூறப்படும் சீண்டல் விளம்பரங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. திமுகவின் சமீப விளம்பரங்களும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா?’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை தாங்கி வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.

ஆளும் அதிமுக, அரசு செலவிலேயே நலத்திட்டங்கள் அறிவிப்புக்கான விளம்பரங்கள் என்கிற சாக்கில் பல கோடி ரூபாய்க்கு தேர்தல் பிரசார விளம்பரங்களாக தந்துவரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான திமுக எதிர்கொண்டிருக்கும் இந்த நூதன பாணி இந்தியாவெங்கும் பேசப்படும் பொருளாகி உள்ளது.

கடந்த 23ஆம் தேதி இந்த விளம்பரத் தொடரின் முதல் விளம்பரம் வெளியிடப்பட்ட அன்றே, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 6 லட்சம் முறை இந்த விளம்பரம் விவாதிக்கப்பட்டு வைரலாக மாறியது. இன்றும் பரவி வருகிறது. போலவே ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் போன்ற தளங்களிலும் இப்போது திமுக விளம்பரங்கள் குறித்துதான் பேச்சு. அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரம் ஒன்று சமூகவலைத்தள ஊடகங்களில் இந்தளவுக்கு முதன்மையான பேசுபொருளாக மாறியிருப்பது இதுவே முதன்முறை.

வருடாவருடம் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று விதவிதமாக போஸ்டர் ஒட்டி, விளம்பரங்கள் கொடுத்து அசத்துவார்கள்.

இந்த ஆண்டு அதிமுகவினரின் அந்த வழக்கமான கோலாகலம் பிசுபிசுத்துப் போனதற்கு திமுகவின் இந்த புதிய விளம்பரத் தொடரே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கனவே இணையதளங்களில் செயல்படும் திமுக ஆதரவாளர்களுக்கு, அக்கட்சி பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வரும் நிலையில் இந்த புதிய ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ வைரல் அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. இதே விளம்பர வாசகங்களை கொஞ்சம் முன்னே பின்னே மாற்றி, அதிமுக அரசை வெறுப்பேற்றி மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள்.

பாரம்பரியமான அச்சு ஊடக விளம்பரங்களில் திமுக கலக்கினாலும், இக்கால இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் ஊடகங்களிலும் முழு முனைப்பாக பிரசாரம் செய்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் தொடங்கி கட்சியின் ஊராட்சி கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள் (இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இதற்காக தேர்தல் வரை திமுக 24 X 7 மணி நேரமும் உழைக்கக்கூடியவர்களை நியமித்திருக்கிறது. தொழிற்முறையிலான சில ஏஜென்ஸிகளையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று தெரிகிறது.

அந்தவகையில் திமுக தலைவர் போன் மூலம் பிரசாரம் செய்யும் ‘மிஸ்ட் கால்’ முறை பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இதுவரை முப்பது லட்சம் பேர், மிஸ்ட்கால் முறையில் கருணாநிதியின் குரலை ஆர்வத்தோடு கேட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அளவிலான திமுகவினர், மாவட்டம் தோறும் பிரத்யேக வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதில் அதிமுக அரசின் சொதப்பல்களை பிரசாரம் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுகவால் 2016 தேர்தல் கலர்ஃபுல்லாக களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இதற்காக திமுக நிறைய செலவழித்திருப்பதாக ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. “இந்த விளம்பரம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை ஒப்பிட்டால், திமுக செலவழித்திருக்கும் தொகை மிக சொற்பமே” என்று JWT என்கிற விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த விளம்பர ஆய்வாளர் சொல்கிறார்.

திமுகவின் இந்த விளம்பர சுனாமியை அதிமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற ஆவல் அனைத்து மட்டங்களிலும் உருவாகி இருக்கிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்கிற மனப்பான்மை உறுதியாக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள்நல கூட்டணி, பாமக போன்ற மாற்று அணிகளின் பிரசாரம் சுத்தமாக கலகலத்துப் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் சாதகங்களை சொல்லி ஓட்டு கேட்காமல், அதிமுகவின் பாதகங்களை மட்டுமே சுட்டிக் காட்டுவது தார்மீகமான விளம்பரமுறைதானா என்றொரு கேள்வியை சமூகவலைதளங்களில் சிலர் எழுப்பி வருகின்றனர்.

“நாங்க இப்போதைக்கு ஒட்டியிருக்கிறது போஸ்டர்தான். அதுக்குள்ளே விமர்சனம் எழுதிட்டா எப்படி? இன்னும் டீசர் வரணும். டிரைலர் வரணும். ஆடியோ ரிலீஸ் அது இதுன்னு நிறைய இருக்கு. அதுக்கப்புறம்தான் படம். முதல்லே படம் ரிலீஸ் ஆகட்டும். நிச்சயமா பட்டையைக் கிளப்பும். அதைப் பார்த்துட்டு இந்த தார்மீகம், அறம் பற்றியெல்லாம் எழுதுங்க. விமர்சனங்களை வரவேற்கிறோம்” என்று ஜாலியாக இதற்கு பதில் சொல்லுகிறார் திமுக இளைஞரணி பிரமுகர் ஒருவர்.

(இந்த கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட வடிவம் இன்றைய ‘தினகரன்’ நாளிதழில் பிரசுரமாகியிருக்கிறது)

5 கருத்துகள்:

 1. /இன்னமும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக சமூகவலைத்தளங்களுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது/
  வரட்டும் வரட்டும்னு தானே காத்துகிட்டு இருக்கோம். தொவச்சு தொங்க விட்டிடனும்
  ஆனால் பாசிச எண்ணம் கொண்டோர் என்றைக்குமே மக்களிடம் நெருங்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 2. எப்படியோ எல்லாரும் பேசவேண்டும்.. அதை செய்துவிட்டார்கள்...

  பதிலளிநீக்கு
 3. பொன்.முத்துக்குமார்1:19 முற்பகல், பிப்ரவரி 27, 2016

  // ‘நாடு நலம்பெற.. நல்லாட்சி மலர..’ என்கிற ஒருவரி வாசகமே 89ல் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, அக்கட்சியின் பதிமூன்று ஆண்டுகால வனவாசத்தை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. //

  அப்படியா ? அது எம்.ஜி.ஆர் மறைந்ததால் அ.தி.மு.க பிளவுண்டதால் நிகழ்ந்தது என்றல்லவா நினைத்திருந்தேன். ஒருவேளை எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இந்த ஒரு வரி வாசகமே அப்போதும் திமுகவுக்கு பெருவாரியான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தந்து, ஆட்சியில் அமர்த்தியிருக்கும் என்றா சொல்கிறீர்கள் ?

  பதிலளிநீக்கு
 4. விளம்பரங்கள் மக்களை கவரலாம்! ஓட்டுக்களை கவருமா என்பது என் சந்தேகம்!

  பதிலளிநீக்கு
 5. நல்ல கட்டுரை. வரலாற்றை திரும்பிப் பார்க்க. ஆனால் ஒரு சார்பாகவே எழுதப்பதுபோல் இருக்கிறது. திமுக எதிர்க் கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சிக்கு எதிராக சொல்லப்பட்ட வாசகங்கள் வெற்றி தேடித்தந்தது என்றால், திமுக ஆளும் கட்சியாக இருந்தபோது சொன்ன வாசகங்கள் வெற்றி தேடித் தரவில்லை என்பதும் உண்மைதானே. திமுக, அதிமுக இரண்டும் மாறி மாறித்தானே வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல பொன். முத்துக்குமார் சொல்வதுபோல, எம்ஜிஆர் மறைவு திமுக விற்கு மறுவாழ்வு அளித்தது முற்றாக மறைக்கப் பட்டு விட்டது. அதுபோக அதிமுக வும், இறைட்டைப் புறா, இரட்டை சேவல் என இரண்டாக, ஜெயலலிதா, ஜானகி அம்மா தலைமையில் போட்டியிட்டதும் காரணம் அல்லவா?

  பதிலளிநீக்கு