19 டிசம்பர், 2015

மீட்பர்

இன்று காலை காபியோடு தினத்தந்தியை பருகிக் கொண்டிருந்தபோது ‘சன் லைஃப்’ மியூசிக் சானலில் ‘பூங்காற்று’ நிகழ்ச்சி வரவேற்பரையை நிறைத்துக் கொண்டிருந்தது.

‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படத்திலிருந்து ‘சிறு கூட்டுலே’ பாட்டு. வாசித்துக் கொண்டிருந்த செய்திகள் மறந்து மனசு வேறெங்கோ பறக்க ஆரம்பித்தது. அடுத்து ‘அதிசயப் பிறவி’யில் இருந்து ‘உன்னைப் பார்த்த நேரம்’. சமையலறையிலிருந்து அம்மா குரல் கொடுத்தார். “இப்போவெல்லாம் யாரு இது மாதிரி பாட்டு போடுறாங்க.... இந்தப் படமெல்லாம் உங்க அப்பாவோட ரங்கா தியேட்டருலே பார்த்தேன்”. ‘அம்மன் கோயில் கிழக்காலே’விலிருந்து ‘பூவை எடுத்து ஒரு மாலை’. விஜய்காந்த் ரசிகையான அம்மா உருகிப் போனார். சமையலை மறந்துவிட்டு பாடல்களை கேட்க அமர்ந்துவிட்டார்.

இதெல்லாம் வெறும் பாடல்கள் அல்ல. நினைவுகள்!

டீனேஜில் இருந்தபோது ஒரு மழைக்கால நள்ளிரவு. மறுநாள் காலையில் நான் என்னவாக இருக்கப் போகிறேன் என்று தெரியாத நிச்சயமற்ற சூழல். எல்லா வகையிலும் தோற்றுப்போன எனக்கு எதிர்காலமே இல்லை என்பது மட்டும் தெரிந்திருந்தது. சூடாக தேநீர் அருந்திக் கொண்டே மண்ணாங்கட்டி மூளையின் துணைகொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டேப்ரிக்கார்டரை ஆன் செய்தார் டீ மாஸ்டர். ‘தாலாட்டுதே வானம்... தள்ளாடுதே மேகம்’. ஜெயச்சந்திரனின் குரலில் இளையராஜாவின் மேஜிக். பாடல் தொடங்கிய நொடியிலிருந்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. பாடல் முடிந்ததுமே, புதியதாக பிறந்தவனாய் உணர்ந்தேன். கடந்துப்போன பதினேழு வருடங்கள் அத்தனையையும் மறந்தேன். மழை நனைத்த வயலாய் மனசு பளிச்சென்று ஆனது. இன்று நான் நானாக இருப்பதற்கு அந்த நாலு நிமிடங்களே காரணம்.

புத்தனுக்கு போதிமரத்தின் அடியில் கிடைத்த ஞானம் இப்படியானதாகதான் இருந்திருக்க வேண்டும். பிற்பாடு பல நண்பர்களோடு பேசிப் பழகும்போது நிறைய பேர் இதே போன்ற அனுபவத்தை ஏதோ ஒரு பாடல் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது. அத்தனை பாடல்களுமே இளையராஜா இசையமைத்தவை என்பதுதான் ஆச்சரியமான ஒற்றுமை.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் என் வாழ்நாளின் படுமோசமான நாட்களை கடந்தேன். ஆகஸ்ட் 24 அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதையே ஃபேஸ்புக்கில் வந்து குவிந்த வாழ்த்துகள் மூலம்தான் உணர்ந்தேன். என் குடும்ப விளக்கு அணைந்துவிடுமோ, குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பதட்டத்தில் மனநலம் பிறழ்ந்து சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. தேக்கி வைத்த கண்ணீர், எந்நிமிடமும் அணையாய் உடைய தயாராக இருக்க நடைப்பிணமாய் ஆனேன். அந்த மனநிலையில் வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் எந்நேரமும் கூடவே இருந்தார் அண்ணன் சிவராமன்.

அவர் உடன் இல்லாத பொழுதுகளில் எந்நேரமும் மொபைலிலும், கணினியிலும் சேகரிக்கப்பட்டிருந்த இளையராஜாதான் ஹெட்செட் மூலமாக என்னை மீட்டார். என்னைப் பொறுத்தவரை இயேசுவை மாதிரி இளையராஜாவும் ஒரு மீட்பர். மிகைப்படுத்தி சொல்வதாக தோன்றலாம்.

ராகம், தாளம் என்று இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத பாமரனான எனக்கு தாயின் அன்பையும், தந்தையின் அக்கறையையும் இளையராஜாவின் இசை அளித்தது. குஞ்சுக்கு தாய்ப்பறவை தரும் கதகதப்பையும், பாதுகாப்பையும் வழங்கியது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? ஆனால், இதுதான் உண்மை. எழுதியோ, பேசியோ இந்த உணர்வுகளை யாருக்கும் கடத்தவே முடியாது. ஒவ்வொருவருமே இம்மாதிரி சூழலை எதிர்கொள்ளும் அனுபவம் மட்டுமே நான் சொல்லவருவதின் பேருண்மையை எடுத்துக் காட்டும்.

பல முறை இணையத்தளங்களிலும், நண்பர்களுடனான விவாதங்களிலும் எது எதற்கோ இளையராஜாவை லூசுத்தனமாக கிண்டலடித்திருக்கிறேன். கேணைத்தனமாக திட்டியிருக்கிறேன். அதற்காகவெல்லாம் இப்போது வருந்த வேண்டியதில்லை. என் தகப்பன் மீது நான் என்ன உரிமை எடுத்துக் கொள்வேனோ, அப்போதெல்லாம் அதே போன்ற உரிமையைதான் அவர் மீதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. என்னுடைய இரத்தத்திலும், உடலின் ஒவ்வொரு செல்லிலும் இளையராஜா இருக்கிறார் என்கிற புரிதலுக்கு இப்போது வந்திருக்கிறேன். அறுவைச்சிகிச்சை செய்துகூட அவரை என்னிடமிருந்து அகற்ற முடியாது.

இளையராஜாவுக்கு நாம் வெறும் ரசிகர்கள் அல்ல. அவரது இசை, ரசிப்பு என்கிற அற்ப எல்லையை எல்லாம் என்றோ தாண்டிவிட்டது. உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்துவிட்ட மேதைமை அவரது இசை. ஒவ்வொரு தமிழனுமே மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனுடைய மகிழ்ச்சியின் அளவை பன்மடங்கு கூட்டுவதும், துயரத்திலிருக்கும்போது அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வல்லமையும் இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இதை மறுப்பவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லையென்று அர்த்தம்.

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன் நான். நமக்கு கற்பிக்கப்பட்ட எந்த கடவுளுமே இதுவரை எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. நம் கண் முன்னால் ஒரு புல்லை கூட பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால், கடவுளைவிட மேன்மையான சொல் எந்த மொழியிலும் இல்லாததால் இளையராஜாவை இப்போதைக்கு கடவுள் ஸ்தானத்தில்தான் வைக்க விரும்புகிறேன். அவரை நாம் இழக்கும் நாள்தான் நிஜமாகவே தமிழ் சமூகம் ஈடு இணை செய்ய முடியாத இழப்பினை சந்திக்கும் நாளாக இருக்கும்.

சமீபத்தில் வெளிவந்த ‘CREED’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் ஓர் அபாரமான வசனத்தை பேசியிருப்பார். “காது கொடுத்து கேள். எப்போதும் நீ பேசிக்கொண்டே இருந்தால் எதையுமே கற்க முடியாது”. நம்முடைய இடியட் பாக்ஸ்கள் எப்போதும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அவையும் கற்பதாக தெரியவில்லை. அவற்றை உபயோகிப்பவனும் எதையும் கற்கமுடியுமென்று தோன்றவில்லை.

நம்மிடையே வாழும் கடவுளை அவமதிக்கும் எவனுக்கும் பரலோகத்திலும் கூட பாவமன்னிப்பு இல்லை!

23 கருத்துகள்:

 1. அன்புள்ள யுவா கிருட்ணா இந்த கட்டுரையை படித்து முடித்தப் பிற்பாடு என் கண்கள் கலங்கிவிட்டன. கல் நெஞ்சக்காரன் என்று நண்பர்கள் சொல்வார்கள். ஆனால் ராஜா அதை எப்போதும் என்னுள் கரைத்து வருகிறார். அதற்காகவே அவரை எதிரியாக பல வேளை பார்க்கிறேன். ஆனால் முற்றாக தோற்கிறேன். என்ன செய்ய..

  பதிலளிநீக்கு
 2. ஹாய் யுவ கிருஷ்ணா, அருமையான கட்டுரை.இளையராஜாவின் இசையில் கரைந்தவர்களில் நானும் ஒருவன் . என் தந்தையின் இழப்பில் இருந்து என்னை மீட்டெடுத்தவர் இளையராஜா ..

  பதிலளிநீக்கு
 3. பிரமாதமா சொல்லி இருக்கீங்க, கடல் கடந்து பணி புரிந்த நாட்களில் எத்தனையோ முறை இளையராஜாவின் பாடல்கள் சுற்றத்தாரின் நெருக்கத்தை கொடுப்பதை உண்ர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. நீண்ட நெடுஞ்சாலையில் அடிக்கடி பயணிப்பவர்களின் பாதுகாவலன் ராஜாதான். என்னுடன் வரும் பல வாகனஓட்டிகள் சொல்வது ராஜா பாடல்கள்களை கேட்கும்பொழுது பலவித எண்ணங்கள் வந்துமோதும் அப்போது தூக்கம் வர வாய்ப்பேயில்லை. எனக்கும் அதுபோன்ற சொந்த அனுபவங்கள் பல உண்டு.

  பதிலளிநீக்கு
 5. அர்புதம் சகோ நானும் ஒருமுறை தகப்பனின் தாலாட்டு இளையராஜா இசை என ஒரு டிவிட்டர் பதிவு போட்டு இருக்கேன் இப்போது உங்கள் பதிவை படிக்கும்போது எனக்கு அத்தனை கர்வமாக உள்ளது எத்தனை சிறப்பாக இளையராஜாவின் இசையை புரிந்திருக்கிறேன் என என்னை அவரிடம் சாக்கடைக்கு நிகரான பாடலை பற்றி இடம் பொருள் அறியாமல் கருத்துகேட்ட நிருபரை அவர் திருப்பிகேட்டதில் எந்த தவறும் இல்லை இதில் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என கத்திகொண்டிருக்கும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் உண்மையில் அவர்கள் பணத்துக்காக மட்டுமே அத்துறையில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர் இசையை தன் உயிர் மூச்சாக வாழும் இசைஞானியை கேள்விகேட்க கூட அருகதை அற்றவர்களே திரு கங்கை அமரன் அவர்களின் கேள்வியே நானும் கேட்கிறேன் "ரஜினியுடமோ, டி.ராஜேந்திரடமோ, அல்லது கலைஞர், முதல்வரிடமோ கேட்க்க தைரியம் உண்டா இவர்களிடம்" இதுவே அவர்களின் ஊடக தர்மம்

  பதிலளிநீக்கு
 6. அருமையான உணர்ச்சியை உணரக்கூடிய கட்டுரை
  'அவர் உடன் இல்லாத பொழுதுகளில் எந்நேரமும் மொபைலிலும், கணினியிலும் சேகரிக்கப்பட்டிருந்த இளையராஜாதான் ஹெட்செட் மூலமாக என்னை மீட்டார். என்னைப் பொறுத்தவரை இயேசுவை மாதிரி இளையராஜாவும் ஒரு மீட்பர்.'

  பதிலளிநீக்கு
 7. அட நம்மாளு
  (அதாவது என்னைப்போல் ஒருவன்)

  பதிலளிநீக்கு
 8. //பல நண்பர்களோடு பேசிப் பழகும்போது நிறைய பேர் இதே போன்ற அனுபவத்தை ஏதோ ஒரு பாடல் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது//

  எனது தில்லி நாட்கள் நினைவுக்கு வருகின்றன. தமிழும் உடைந்த ஆங்கிலமும் மட்டும் தெரிந்த நான் தில்லியில் இறங்கிய போது மாட்டை ஓட்டுவது போல் “ஹை ஹை” என்று வரவேற்றது தில்லி. தெரிந்தால் கூட ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். வேண்டுமென்றே அலுவலக கூட்டங்களில் இந்தியில் பேசி கடுப்பேற்றுவார்கள்.

  ”மதராஸி” என்று விளிக்கப்பட்டு கிட்டத்தட்ட தீண்டத்தகாதவனைப் போல் நான் நடத்தப்பட்ட நாட்கள் அவை. கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வு மனப்பான்மைக்கும் தொடர்ந்து டிப்ரஷனுக்குள்ளும் விழும் நிலையில் இருந்தேன். நான் ஏன் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்? முடியாது. என்று நான் தீர்மானமாக முடிவு செய்து விட்டேன்.

  தமிழன் என்றால் கேவலம் மதராஸி மட்டுமில்லையடா மாதர் சோத் என்று கத்த வேண்டும் போல் இருக்கும். எவனைக் கண்டாலும் வெறுப்பு. எவனைப் பார்த்தாலும் கடித்துத் துப்பி விடலாமா என்று உள்ளே எரியும்.. தமிழன்னா நீ பாத்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிர அளவுக்கு கோமாளிங்க இல்லடா.. நாங்கெல்லாம் நாங்கள் யார் தெரியுமாடா என்று கத்த வேண்டும் போல் இருக்கும்.

  ஒரு நாள் அலுவலகத்தில் எதேச்சையாக கணினியை நோண்டிக் கொண்டிருந்த போது இளையராஜாவின் பாடல்கள் வைத்திருந்த போல்டர் தட்டுப்பட்டது. ”மடை திறந்து தாவும் நதியலை” பாட்டை ஓட்டினேன். ஸ்பீக்கரில் வழிந்த பாடல் ஒலிக்கத் துவங்கியதும் சுற்றிலும் இருந்த பஞ்சாபிகள் சட்டென்று அமைதியானார்கள். பாடல் நின்ற போது ஓடி வந்து மீண்டும் போடச் சொன்னார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும்.
  ?
  திமிராக இருந்தது. த்தா எங்காளு பாட்டுடா கேளுங்கடா இந்திக்கார பரதேசிங்களா என்று தமிழில் சொன்னேன். அவர்களுக்குப் புரிந்திருக்கும். அதற்கு மேல் என்னை கேலி பேசவில்லை. அன்றிலிருந்து தினமும் அலுவலகத்தில் எனது கணினி ஸ்பீக்கரில் இருந்து இளையராஜாவின் இசை புறப்பட்டு மொத்த அலுவலகத்தையும் ஆட்சி செய்யத் துவங்கியது.

  தனிமையில், மொழி தெரியாத ஊரில் தமிழில் மனம் விட்டுப் பேசக் கூட யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை இளையராஜா மீட்டார். அப்போதெல்லாம் செல்போன்கள் கிடையாது.. இணையம் கூட இவ்வளவு பாப்புலர் இல்லை.

  அந்தக் காலத்தில் மனநோயில் விழுந்து பைத்தியமாகத் திரிந்திருக்க வேண்டிய எல்லா சாத்தியங்களும் எனக்கு இருந்தது. அதிலிருந்து என்னை காப்பாற்றியவர் ராஜா. தூங்கும் நேரம் கூட சி.டி ப்ளேயரில் பாட்டு ஓடிக் கொண்டே இருக்கும்.

  தில்லியில் இருந்த சில வருடங்களில் ஒரு வாக்கியம் பேசுமளவிற்கு கூட இந்தி கற்றுக் கொள்ளவில்லை. திமிர் தான், வேறென்ன. இப்போதும் வடநாட்டு நண்பர்கள் கேட்பார்கள்,

  “எப்படி இந்தி கற்றுக் கொள்ளாமல் தில்லியில் அத்தனை வருடங்கள் சமாளித்தாய்?”

  சிரித்துக் கொள்வேன்.

  இந்த முறை ராஜா கரெக்ட்டாகத் தான் பேசியிருக்கிறார்.. ஆனால், அடிக்கடி மொட்டை எதையாவது பேசத்தெரியாமல் பேசி சொதப்பி விடும் சந்தர்பங்களில் நண்பர்கள் என்னிடம் கிண்டலாக “என்னய்யா உங்காளு?” என்பார்கள்..

  “அப்படித்தான். என்னான்ற?” என்று விட்டுப் போய் விடுவேன்.

  அவர் ஆன்மீகவாதியாக இருப்பது பற்றியும், தத்துவம் பேசுவது பற்றியும் எனக்கென்ன கவலை? அந்த இசை ஒன்று போதும். இன்னும் ஏழெட்டு ஜென்மங்கள் தமிழனாகவே பிறந்து திரும்பத் திரும்ப ராஜாவின் மெட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்கும் வரம் மட்டும் போதும்.

  என் மகன் போன மாசத்திலிருந்து பேசத் துவங்கியுள்ளான் ”ஜாஜாவுக்கு ஜாஜா நாந்தா.. எனக்கு மந்திதி யாதும் வேந்தாம்” என்கிறான்.

  மீண்டும் ஒருமுறை சொல்ல வேண்டும் போல் உள்ளது

  ”அட, எங்க மொட்டைக்கு திமிரு ஜாஸ்தி தான். அவரு அப்படித்தான். இப்ப என்னாங்கடா வோணும் ஒங்களுக்கு. மூடிட்டு போங்கடா”

  பதிலளிநீக்கு
 9. பதிவிற்கு நன்றி. தமிழனாக இருப்பதில் பல நன்மைகள். அதில் முக்கியமான நன்மை இளையராஜாவின் இசையைக் கேட்கும் கொடுப்பினை. இளையராஜா இசையின் சாத்தியங்களில் எல்லா எல்லைகளையும் தொட்டுவிட்டார் என்று நினைக்குமளவுக்கு விதம் விதமான பாடல்கள். ஆனால் இதுவரை கேட்காத ஒரு இளையராஜா பாடலைப் புதிதாகக் கேட்கும் போது அது அவ்வளவு புதுமையாக என்னை ஆச்சரியப்படுத்தும். மற்ற மொழிகளில் அவர் போட்ட பாடல்களையும் நம் ஊடகங்கள் ஒலிபரப்பவேண்டும். இன்னும் அவருடைய சாத்தியங்கள்தான் என்ன? நம் சினிமா இண்டஸ்ட்ரியின் விரிவுக்கு ஏற்ப அவருடைய இசையின் வீச்சு அமைந்துவிட்டது. இன்னும் அவரிடமிருந்து பெறப்படாத பாடல்கள் எத்தனை? அவருக்கு வைத்தியம் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அவருடைய செல்களைக் கொஞ்சம் களவாடி டீப் ஃப்ரீஸில் பாதுகாக்க வேண்டும். வருங்காலத்தில் க்ளோனிங் அனுமதிக்கப்பட்டால் நமக்கு மேலும் பல இளையராஜாக்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

  பதிலளிநீக்கு
 10. Its 100 Percentage true ! Mean time M.S.V and Old songs also many times give same impact. One time in Kutraalam when I was roaming with only 24 Rs. for train ticket ....In Sengottai was trying to withdraw money from ATM..But not working ...one moment just sitting blindly...Lot of confusions about career too... I Happened to hear ...Oruthi Oruvanai ninathu vittaal...Kaaathallllllll......P.B.S Voice made some magic in me...Just listened full song...I cant explain the feel what it had given to me....I started to cry literally ...I felt I got some clarity in mind ...Came back to madurai somehow...But that moment ..after noon 2.30 in full hungry...That song ....I felt proud being a tamil known person. Thanks uvya ..nostalgic...Ilaiyaraja songs are good for long journeys...In Chandigarh now I cross my days with Ilaiyaraja's and old songs...Its give different feeling...Tamilnattu makkal kudutthu vaithavargal

  பதிலளிநீக்கு
 11. யோவ்....யுவா என்னையா இது.....

  எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம்/உணர்வும் தான் உங்களுக்கும்.
  நாம ரெண்டு பேரும் ஒரே வயது போல....எனக்கும் எப்போதும்
  அவரது பாடல்கள் தான் என்ர்ஜி டானிக்.

  ராஜாவின் பாடல்கள் இருக்கிற வரை நம்மை எந்த மன அழுத்தமும்
  எதுவும் செய்யாது, அதை எளிதில் கடந்துவிடலாம்.

  அன்புடன்
  மு. விஜயகுமார்

  பதிலளிநீக்கு
 12. I didnt have such kind of experience... but i can say that ILAIYARAJA IS BEST AND GOD OF MUSICCCCCCCCCCCCCCCCCCCCCC...

  பதிலளிநீக்கு
 13. படத்துக்கு தலைப்பு: அசலான அசத்தல் பாட்டுக்காரன்

  பதிலளிநீக்கு
 14. ராஜா ஒரு மிக சிறந்த இசை மேதை என்பதில் ஏதும் சந்தேகம் இல்லை.

  ஆனால் இந்த கட்டுரையில் சுட்டப்பட்டுள பல பாடல்களும் அவருடைய சிறந்த பாடல்கள் அல்ல. இது பெரும்பாலும் நமது இளவயது குறித்த ஞாபகம் அல்லது ஏக்கமே. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் 40 வயது எட்டிய பெருசுகள் MSV / TMS / சுசீலா / கண்ணதாசன் என்று சிலாகித்ததை கேட்டதுண்டு. இதுவும் அது போல தான்.

  இங்கு பின்னூட்டம் இட்ட ஒருவர் ஏதோ வட இந்தியர்கள் நல்ல இசையை கேட்டதே இல்லை என்று பொருள் வரும் தொனியில் எழுதி உள்ளார். ஆனால் ஹிந்தி சினிமா ஐம்பது அறுபது எழுபதுகளில் ராஜா போல பல இசை மேதைகளை கண்டுவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mr. ஸ்ரீராம், வட இந்தியர்களுக்கு நல்ல இசை கேட்டதில்லை என்பதல்ல எனது மறுமொழியின் அர்த்தம். சொந்த ஊரிலிருந்து வெளியே போய் தனிமையில் / புறக்கணிப்பில் / மன அழுத்தத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு “எங்கள் பெருமை” என்று என்னை / எங்கள் அடையாளத்தை / எங்கள் கலாச்சார வேரை மற்றவர்களிடம் பறைசாற்றிக் கொள்ளவும், அந்தப் பெருமிதத்தின் மூலம் புறக்கணிப்பையும் அது கொடுத்த மன அழுத்தத்தையும் கடந்து வரக் கிடைத்ததே இளையராஜாவின் இசை.

   வடக்கில் எவ்வளவோ அப்பாடக்கர்கள் இருந்து விட்டுப் போகட்டும். ஒரு பேச்சுக்காக இவர் அவர்களை விட இசை நுட்பரீதியில் குறைவானவராகவே கூட இருக்கட்டும்.. ஆனால், இவர் எங்களவர். எங்களது கலாச்சார வேர். அவ்ளோ தான்.

   நீக்கு
 15. Raja Rajathaan..No doubt.. Hope everything is alright now in your family.

  -Sam

  பதிலளிநீக்கு
 16. அற்புதம். மன நிறைவை தந்த சிறப்பான கட்டுரை. நிறைய பேர் குறிப்பாக 70 களின் கடைசி மற்றும் 80 s செட் இது போன்ற அனுபவங்களை வைத்து இருப்பார்கள். இவர் பாடலுக்காக சில படங்களை மறுபடியும் மறுபடியும் பார்பதுண்டு.

  பதிலளிநீக்கு