21 ஜூலை, 2015

பாகுபலி மீது பாலியல் வழக்கு?

பாகுபலி என்னவெல்லாம் அநியாயத்தை அவந்திகாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள். அவந்திகா அறியாமலேயே அவளுடைய கைகளில் ஓவியம் வரைகிறான். Intruded her privacy.

பாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான். கத்தி காட்டி மிரட்டுவதை போல பாம்பை காட்டி மிரட்டியிருக்கிறான்.

இச்சையை வெளிப்படுத்தும் நடனம் ஆடுகிறான். அவள் கூந்தலை கலைக்கிறான். உடுத்தியிருந்த ‘போராளிக்கான’ உடையை அவிழ்க்கிறான். ‘பெண்மை’ புலப்படுமளவுக்கு அவளது உடையை செதுக்குகிறான் (அவந்திகா என்ன சிற்பமா?). சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்கு சாயம் பூசுகிறான். அவளை பெண்மை (?) செய்கிறான். அவளை நாணப்படுத்துகிறான். அவனது இறுக்கத்தில் அயர்ந்துப் போகிறாள். உச்சக்கட்டமாக விலங்கை போல ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள்.

நம் அறிவுஜீவிகள் கொஞ்சம் அட்வான்ஸாகதான் சிந்திக்கிறார்கள்.

ஆனானப்பட்ட பல்லாலதேவனையே சமாளித்துவிட்ட பாகுபலியால் நம்மூர் இண்டெலெக்ச்சுவல்களை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் நாயகன், நாயகியின் இடுப்பைப் பிடித்து வலுக்கட்டாயமாகதான் இழுக்க வேண்டுமா என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, என்னுடைய ஒருநாள் இரவு தூக்கத்தை முற்றிலுமாக பறித்துக் கொண்டிருக்கிறது.

‘அவந்திகா, துணிச்சல்மிகு போராளி’ என்று போடப்பட்ட பன்ச்சிலேயே ‘பணால்’. ‘போராளி’ என்கிற வார்த்தையை கேட்டதுமே/வாசித்ததுமே இணையப் போராளிகள் போர்ப்பரணி பாடத் தொடங்கிவிட மாட்டார்களா?

நிச்சயமாக பாலியல் குற்றம்தான். பாகுபலி மீது இ.பி.கோ 375 பாய்வதுதான் நியாயம். முடிந்தால் இந்த ஆபாசமான காம வெளிப்பாட்டை படம் பிடித்த ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் மீதும் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.

இதோடு நிறுத்திவிடக்கூடாது. ‘சண்டிராணியே எனக்கு கப்பம் கட்டு நீ’ என்று பாடிக்கொண்டே வாளை நீட்டி அச்சுறுத்தி, விஜயசாந்தியை பணியவைத்த சூப்பர் ஸ்டாரில் தொடங்கி ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ ஹரிதாஸ் வரைக்கும் நம் சினிமாவில் நடந்த அத்தனை பாலியல் பலாத்காரங்களையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு இந்த கடமை இருக்கிறது. ஓர் அவந்திகாவுக்கு நடந்த அவலம் இனிமேல் இன்னொரு அவந்திகாவுக்கு நடக்கக்கூடாது என்றால், அவந்திகாவை மாதிரியே நாமெல்லாம் போராளிகளாக, ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களாக (குறைந்தபட்சம் ஃபேஸ்புக்கிலாவது) மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்.

அட்லீஸ்ட் இதுபோல இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆயிரக்கணக்கான சினிமாக்களில் நடந்த பாலியல் பலாத்காரங்களை, மோட்டுவளையை பார்த்து சிந்தித்து கண்டுபிடித்து நாம் வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு தற்கொலை மூடில் இருந்த ரேகாவை வலுக்கட்டாயமாக இழுத்து உதட்டோடு உதடு கிஸ் அடித்த கமல்ஹாசனை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு ஸ்டேட்டஸாவது போடவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் முன்னூறு கமெண்டு, மூவாயிரம் ‘லைக்’காவது விழுந்தால்தான் ஆண்மய்யப்பட்ட இந்திய சமூக விழுமியங்களின் மீது நாம் சிறுநீராவது கழித்த அறிவுலகச் செயல்பாட்டினை நிகழ்த்த முடியும்.

எருதினை அடக்கும் காட்சிக்கு கூட கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட காட்சியைதான் காட்டியாக வேண்டும் என்கிற அறம், ஏற்கனவே இந்தியாவில் இருக்கிறது. விலங்குகள் காட்சிகளில் இடம்பெறுமாயின், ‘இந்தப் படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்று ஸ்லைடு போட்டு காட்டவேண்டியது அவசியம் என்று இந்திய தணிக்கைத்துறை வலியுறுத்துகிறது.

நிலைமை அப்படியிருக்கையில் விலங்கினைவிட பெண்கள் மட்டமா என்கிற அடிப்படைக்கேள்வி நமக்கு இங்கே எழுகிறது. முதற்கட்டமாக இனிமேல் சினிமாக்களில் இதுபோன்ற பாலியல் பலாத்கார காதல் காட்சிகள் இடம்பெறுமாயின், அவை கணிப்பொறியில் சித்தரிக்கப்பட்ட இமேஜ்களாகதான் இருக்கவேண்டும் என்கிற கோரிக்கையை நோக்கி நம் போராட்டம் துவங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம்பெறக்கூடிய அவ்வாறான காதல் காட்சிகளில் ‘புகை பிடிப்பது புற்றுநோயை வரவழைக்கும்’ என்பதுபோல, ‘பெண்ணை வலியுறுத்தி காதல் செய்வது, இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும்’ என்கிற எச்சரிக்கை திரையின் கீழே பொறிக்கப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு.

இந்த சீரிய சிந்தனையை தூண்டிய கட்டுரை : 'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக