June 29, 2015

விருது கேட்டு விசித்திர வழக்கு

இன்று சென்னையில் பிரசித்தி பெற்ற அந்த விருது விழா நடக்கிறது. யாருக்கு விருது, எந்தப் படம் சிறந்த படமென்று நாமினேட் ஆனவர்கள் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்-

கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் மட்டும் வயிறு எரிந்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அவர் இயக்கிய ‘ஹக்கட கோனே’ (கயிறுக்கு முடிவு) திரைப்படம் முதன்முதலாக திரையிடப்பட்டது. அதையடுத்து சர்வதேச அளவிலும் பல திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பாராட்டப்பட்டது. கன்னட ஊடகங்களும் கடந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் என்று ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் பாராட்டுப் பத்திரம் வாசித்தன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் மேடையேறிய நாடகம் ஒன்றினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட படம். மரணத் தண்டனை கைதி ஒருவனின் கடைசி நாட்கள்தான் கதை. தன்னுடைய இந்த நிலைமைக்கு யாரெல்லாம் காரணம் என்று நினைக்கிறானோ, அவர்களிடமெல்லாம் சில கேள்விகளை முன்வைக்கிறான். தன்னை இப்படி ஆக்கியது சமூகம்தான் எனும்போது தனக்கு மட்டும் ஏன் தண்டனை என்கிற வினாவுக்கு விடை தேட முயலுகிறான். தனக்கு மரணத் தண்டனை சரியென்றால், தான் செய்த கொலையும் சரிதான் என்று வாதிடுகிறான். இப்படியாக சிந்திக்கத் தூண்டும் காட்சிகள், வசனங்கள் வழியாக நகர்கிறது படம். நீதி என்பது குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை தருவதா அல்லது அவர்களை சீர்த்திருத்துவதா என்கிற விவாதத்தை வலுவாக முன்வைக்கிறது ‘ஹக்கட கோனே’.

துரதிருஷ்டவசமாக இன்று நடைபெறும் விருதுவிழாவின் இறுதிச் சுற்றுக்கு இப்படம் நடுவர்களால் பரிந்துரைக்கப்பட வில்லை. ‘திருஷ்யம்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரங்காச்சாரி’, ‘உக்ரம்’, ‘உளிடவாரு கண்டதே’ ஆகிய படங்கள்தான் தேர்வாகி இருக்கின்றன. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட எந்த பிரிவுகளிலுமே தன் படத்துக்கு இடமில்லை என்றதும் கொதித்துப் போனார் இயக்குனர் தயாள் பத்மநாபன். உலகமே பாராட்டும் படத்துக்கு உள்ளூரில் அவமானமா என்று சீறினார்.

தயாள், நம் விழுப்புரத்து ஆள்தான். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, மிக ஏழ்மையான நிலையில் வளர்ந்து இந்த நிலைக்கு வந்தவர். ‘மர்ம தேசம்’ நாகாவிடம் சினிமா கற்றவர். கன்னட சினிமாவுக்கு இடம்பெயர்ந்து கதாசிரியரானார். இயக்குனர், தயாரிப்பாளர் என்று படிப்படியான வளர்ச்சி. சுயமரியாதையை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற கொள்கை உடையவர்.

எனவேதான், கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். “என் படத்தை நீதிமன்றமே பார்க்கட்டும். விருதுக்கு பரிந்துரைக்கப்படக்கூட தகுதியில்லாத படமா என்று நீதிபதிகள் தீர்ப்பு சொல்லட்டும்” என்று கிளம்பியிருக்கிறார். எத்தனையோ வழக்குகளை சந்தித்த நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசித்திரமானது. ஏனெனில் இதுவரை யாருமே, ஒரு தனியார் வழங்கும் விருதில் நீதிமன்றத்தை தலையிட சொல்லி வழக்கு போட்டதில்லை.

தமிழ் சினிமாவில் ஊடகங்கள் தங்கள் படங்களை நியாயமாக விமர்சிக்கவில்லை என்று ‘கற்றது தமிழ்’ ராம், தங்கர்பச்சான் போன்றவர்கள் பொங்கியிருக்கிறார்கள். ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில், தன் படத்தின் பாடல் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று அந்த விழா மேடையிலேயே கூட ராம் பொரிந்துத் தள்ளியிருக்கிறார்.

ஆனால்-

யாருமே இம்மாதிரி பிரச்சினைகளுக்காக இதுவரை நீதிமன்றத்தை நாடியதில்லை. ஒருவேளை தயாள் பத்மநாபனுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்தால், அவார்டு கொடுப்பவர்களின் கதி இனி அதோகதிதான்.

கடந்த 26-6-15 அன்று தினகரன் இணைப்பிதழான ‘வெள்ளி மலர்’ இதழில் நாம் எழுதியிருந்த சிறு கட்டுரை இது.

விருதுகளுக்காக ஒரு இயக்குனர் கோர்ட் படி ஏறினார் என்பது ஊடகங்களுக்கு அல்வா மாதிரி மேட்டர். ஏன் இந்த செய்தி தீயாக பரவவில்லை என்று தெரியவில்லை (எனக்குத் தெரியும், ஆனால் வெளிப்படையாக சொல்ல மாட்டேன்). எது எப்படியோ, குறைந்தது நாம் மட்டுமாவது ‘நியூஸ் வேல்யூ’ அறிந்து, அம்பலம் ஏற்றிவிட்டோம்.
இயக்குனர் தயாள் பத்மநாபன், இச்செய்தியை தினகரனில் வாசித்துவிட்டு வெள்ளிமலர் ஆசிரியர் குழுவினரிடம் தொலைபேசியில் பேசினார். தன்னுடைய தன்மான உணர்வை, தாய்மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகை அங்கீகரித்தது குறித்த நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.

அந்த செய்தியின் ‘ஃபாலோ-அப் நியூஸ்’ என்னவென்றும் போனில் தெரிவித்துவிட்டு, ஆதாரமாக சில கோர்ட்டு ஆவணங்களை மின்னஞ்சல் செய்திருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், இந்த விசித்திரமான வழக்கில் வெற்றி இயக்குனருக்கே.

பெங்களூர் சிவில் கோர்ட்டு (CCH-32), 24-06-2015 அன்று கொடுத்திருக்கும் தீர்ப்பில் ‘ஹக்கட கோனே’ திரைப்படத்தை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது.

அனேகமாக, உலக அளவிலேயே இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வந்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும். இந்த தீர்ப்பு திரையுலகில் இயங்கும் படைப்பாளிகளுக்கு, எதிர்காலத்தில் உதவக்கூடும். விமர்சனம் செய்யும் / விருது வழங்கும் ஊடகங்களும், நிறுவனங்களும் இனி கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால்-

26ந்தேதி மாலை சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில், கோர்ட்டின் ஆணை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.

தயாள் பத்மநாபன் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. Our fingers crossed!

No comments:

Post a Comment