25 ஜூன், 2015

நிலவை முத்தமிடு

சீனு, கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டில் இருக்கிறான். அம்மா, அப்பா, அக்கா என கச்சிதமான குடும்பம்.

அப்பா, எழுபதுகளின் ஜாக்கிரதை உணர்வுகளோடே வாழ்க்கையை எதிர்கொள்கிறவர். பாட்டனும், பூட்டனும் சும்மாவா சொல்லியிருப்பான். எல்லாத்துக்கும் ஓர் அர்த்தம் இருக்கும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்ட டெம்ப்ளேட் வாழ்க்கையை நிதானமாக வாழ்ந்து முடிக்க நினைக்கும் அந்த காலத்து ஆள். மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்.

சீனுவோ, உலகமயமாக்கலின் விளைவு. நாலு ரவுண்டு ஆடினால், ஜோக்கர் நிச்சயம் வந்துவிடும். ரிஸ்க்கே எடுக்காமல், வருமுன் காப்போம் என்று வழவழா கொழகொழாவென்று வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைப்பவன். கல்லூரி நாடக விழாவில் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல் பரிசினை வென்ற படைப்பாளி. மூன்றாவது முறையும் கோப்பையை வென்றுவிட்டால், நிரந்தரமாக அவனிடமே கோப்பை இருக்கும்.

அப்பாவுக்கு படிப்பு தவிர்த்த மகனின் மற்ற செயல்பாடுகளில் ஒப்புதல் இல்லை. எனவே, தன்னுடைய நாடக ஆர்வத்தை அப்பாவிடமிருந்து மறைக்கிறான் சீனு.

தான் பெற்ற மகன், தான் விரும்பும் வகையில்தான் வளரவேண்டும் என்று நினைக்கிறார் அப்பா. ஏனெனில் அவர், அவருடைய அப்பா விரும்பிய வகையில்தான் வளர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தனக்கு தனித்துவம் இருக்கிறது என்று நம்புகிறான் சீனு. அப்பாவின் நிழலில் ஆடு மாதிரி பாதுகாப்பாக வளர்ந்து கல்யாணம் கட்டி, குழந்தை பெற்று தானும் அதே அப்பா மாதிரி வாழ்வதை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கலைத்துறைதான் தன்னுடைய வாழ்வின் அர்த்தமென்று கருதுகிறான்.

வென்றது சீனுவா, அவனுடைய அப்பாவா என்பதுதான் கதை.
1995ஆம் ஆண்டு ‘பாக்யா’ வார இதழில் தொடராக பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘நிலவை முத்தமிடு’.

வர்ணனைகள் எதுவுமின்றி வெறும் வசனங்களால் மட்டுமே இருநூறு பக்கங்களுக்கும் மேலான முழுநாவலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் இந்த வடிவில் வேறு ஏதேனும் நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால்- வெறும் வசனங்களால் மட்டுமே தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர்கதை இதுதானென்று பட்டுக்கோட்டை பிரபாகர் முன்னுரையில் சொல்கிறார்.

வர்ணனைகள் இல்லாத இழப்பை வசனங்களில் புத்திசாலித்தனமாக ஈடுகட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டை. எனினும் அதற்காக திரும்பத் திரும்ப பாத்திரங்களின் பெயர்கள் எல்லா வசனங்களிலும் இடம்பெறுவது வாசிக்க கொஞ்சம் இடையூறாக இருக்கிறது. சீனுவின் நண்பன் அத்தியாய ஆரம்பத்தில் ‘சீனு’ என்று பெயர் சொல்லி அழைப்பது ஓக்கே. ஆனால், அவன் ஒவ்வொரு முறை இவனிடம் பேசும்போதும் “டேய் சீனு” “இங்க பார்றா சீனு” “என்னடா சொல்றே சீனு” என்று திரும்பத் திரும்பப் போடும் சீன் கொஞ்சம் தொல்லைதான். ஆனால்- இதைத் தவிர்த்திருந்தாலும் வர்ணனைகள் இல்லாத நாவலில், சில இடங்களில் வாசகனுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வாசகனுக்கு வலிக்கக்கூடாது என்கிற அக்கறையில் தன்னுடைய எழுத்துவன்மையை மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார் பிரபாகர்.

நாவலின் முடிவு, அபாரம். அனுபவமும் மண்ணை கவ்வுகிறது. துணிச்சலான இளமைத்துடிப்பும் வெற்றிவாய்ப்பை இழக்கிறது. நம்பிக்கைக்கான கீற்று நட்சத்திர ஒளியாய் தென்பட, அவர்களது பயணம் தொடர்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய இளைஞர்களையும், அவர்களது பெற்றோரையும் பற்றிய கதை. இந்த கால ஃபேஸ்புக் தலைமுறை, இக்கதையை வாசித்தால், “வீட்டுலே காலேஜிலே எல்லாம் இப்படிதான் பக்கம் பக்கமாவா வசனம் பேசுவாங்க?” என்று நம்பாமலேயே போகலாம்.

ஆனால்-

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிதான் தமிழ் சமூகம் இருந்தது. வாயைத் திறந்தாலேயே எவனும் மூடமாட்டான். சிவாஜிக்கு ஆரூர்தாஸ் எழுதிய வசனங்கள் மாதிரி பக்கம் பக்கமாக பேசி தீர்த்த தலைமுறை அது. எல்லா வீடுகளுமே எப்போதும் சத்தமாகதான் இருக்கும். தாகம் எடுத்தால், “தண்ணி கொண்டு வா” என்று மணிரத்னம் படம் மாதிரி சுருக்கமாக கேட்டுத் தொலைக்க மாட்டார்கள். “தவிச்ச வாய்க்கு தண்ணி” என்று ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்கு உவமானம், எடுத்துக்காட்டு, அழகியல் என்று மொழியின் எல்லா எழவு சாத்தியங்களையும் பயன்படுத்திவிட்டு, கடைசியாக “கொஞ்சம் தண்ணி கொடேன், தாகமா இருக்கு” என்று முடிப்பார்கள்.

என் அப்பாவெல்லாம் அப்படிதான் பேசுவார். “படிச்சித் தொலையேண்டா” என்று சிம்பிளாக சொல்ல மாட்டார். “காமராஜர் படிச்சதில்லை, கலைஞர் படிச்சதில்லை, எம்.ஜி.ஆர் படிச்சதில்லை. ஆனா நாவலரும், பேராசிரியரும்...” என்று ஆரம்பித்து அவரது அரசியல் வரலாற்று சமூக அறிவினை எல்லாம் கொட்டி பத்து நிமிடங்களுக்கு தாலியறுத்து, “ஒழுங்காப் படிச்சி உருப்படுடா” என்று முடிப்பார். கிரிக்கெட் பேட்டை எடுத்து அப்படியே வழுக்கை மண்டையில் நாலு போடு போடலாமா என்று வெறிவரும்.

அப்பாவாவது பரவாயில்லை. அம்மா இன்னும் மோசம். பேச ஆரம்பித்தால், துலாபாரம் சாரதா மாதிரி குடும்பக் கஷ்டம், சரீரக் கஷ்டம், பெண்ணியம், லஷ்மி தொடர்கதை என்றெல்லாம் காண்டெக்ஸ்ட்டே இல்லாமல் நான்ஸ்டாப்பாக பேசிக்கொண்டே இருப்பார். இப்போது மெகாசீரியல்களில் ஏன் பெண்கள் பக்கம் பக்கமாக பேசுகிறார்கள் என்றால், மெகாசீரியல் எழுதும் எழுத்தாளர்கள் எண்பதுகள்/தொண்ணுறுகள் தலைமுறை. நல்லவேளையாக இந்த சீரியலையெல்லாம் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், இப்போதைய பெண்கள் இப்படி பேசி புருஷன்களை/மகன்களை சாகடிப்பதில்லை.
அனேகமாக, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துதான் தன் எதிர்காலம் என்று முடிவெடுத்தபோது, அவரது அப்பா நூறு, நூற்றி ஐம்பது பக்கங்களுக்கு வசனம் பேசியிருப்பார் என்று கருதமுடிகிறது.

‘நிலவை முத்தமிடு’ என்னுடைய டீனேஜ் வயதுகளை நினைவுறுத்துகிறது. அப்பாவோடு நான் போட்ட சண்டைகள், அம்மாவை டபாய்த்த சமயங்கள் எல்லாம் அப்படியே மாண்டேஜ் ஷாட்டுகளாக வந்து போகிறது.

இந்த நாவலின் கருமையம்தான் ‘இந்தியன்’ திரைப்படம் என்று தோன்றுகிறது. ஷங்கர் காப்பி அடித்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டவில்லை. பட்டுக்கோட்டையாரும், ஷங்கரும் ஒரே தலைமுறையினர்தானே? எனவே ஒரே மாதிரியாக சிந்தித்திருக்கலாம். அப்பா-மகன் முரண் என்கிற மைக்ரோ ஸ்டோரி மீது தேசத்தை உறிஞ்சும் ஊழல் என்று மேக்ரோ பிரச்சினையை பெயிண்ட் அடித்ததுதானே ‘இந்தியன்’ கதை. இந்த நாவலில் வரும் அகிலா எனும் அக்கா கேரக்டரை, ‘இந்தியன்’ படத்தில் வரும் கஸ்தூரியோடு அப்படியே பொருத்த முடிகிறது.

எனினும்-

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் ஒன்லைன் சத்தியமாக இதிலிருந்துதான் உருவப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ‘பொம்மரிலு’ பாஸ்கர் நிச்சயமாக இந்த கதையை வாசித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

நாவலின் நடுவில் நாடகம் போடுவது பற்றி டிஸ்கஷன் செய்யும்போது வரும் ஒரு குட்டிக்கதை, அப்படியே ‘நீ வருவாய் என’ (99 தானே, இந்த நாவல் 95) படத்தின் ஒன்லைனராக இருப்பது இன்னுமொரு ஆச்சரியம்.

இதெல்லாம் யதேச்சையாகவும் நடந்திருக்கலாம். ஆனால் தோழர்களே, தமிழில் சமகால இலக்கியம் என்று நம்பப்படும் கதைகளை எல்லாம் சினிமாவாக்கினால் படுதோல்விதான். மாறாக இதுபோன்ற வெகுஜனக் கதைகளில் இருந்து எடுக்கப்படும் கரு, மக்கள் மத்தியில் நன்றாக எடுபடும். மேலே நான் ஒப்பிட்டிருக்கும் மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள் என்பதை கவனியுங்கள். இலக்கியம், சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டு நிற்கிறது?

நூல் : நிலவை முத்தமிடு
எழுதியவர் : பட்டுக்கோட்டை பிரபாகர்
பக்கங்கள் : 228
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்
விலை : ரூ.45

2 கருத்துகள்: