30 ஏப்ரல், 2015

மிஸ்டர் மிடில் க்ளாஸ்!

கீழ்க்கண்டவற்றுக்கு ஆம்/இல்லை என்று பதில் சொல்லவும்.

 • உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் காய்கறி கடையிலேயே வெண்டைக்காய் கிலோ ரூ.30/-க்கு கிடைக்கிறது. ஆனால் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் சந்தையில் ரூ.25/-க்கு விற்கிறது என்பது தெரிந்து டூவீலரில் போய், நாலு கிலோ மொத்தமாக வாங்குகிறீர்கள்.
 • சென்னைக்கு மிக அருகில் செய்யாறுக்கு பக்கத்தில் வீட்டு மனை சதுர அடி ரூ.250/- என்று நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை விரும்பி வாசிக்கிறீர்கள். உடனே கால்குலேட்டர் எடுத்து கால்கிரவுண்டு வாங்க எவ்வளவு ஆகுமென்று கணக்கு போடுகிறீர்கள்.
 • டூவீலரோ/சிறியரக காரோ வைத்திருக்கிறீர்கள். அதற்கு மாதாமாதம் தவணை செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
 • டூவீலராக இருந்தால் கட்டாயம் ஹெல்மெட், காராக இருந்தால் மறக்காமல் ‘சீட் பெல்ட்’ போடுகிறீர்கள். பாதுகாப்புக் காரணத்தைவிட போலிஸிடம் மாட்டினால் ‘கப்பம்’ கட்டவேண்டுமே என்றுதான் கூடுதல் அச்சம்.
 • இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ஐம்பது பைசா ஏறுகிறது என்று டிவியில் ஃப்ளாஷ் நியூஸ் போட்டதுமே, அவசர அவசரமாக பெட்ரோல் பங்குக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று ‘டேங்க் ஃபுல்’ செய்துக் கொள்கிறீர்கள்.
 • ஊழல் செய்திகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. “இவனை எல்லாம் நடுரோட்டுலே நிறுத்தி யாராவது இந்தியன் தாத்தா மாதிரி ஆளுங்க சுட்டுத் தள்ளணும் சார்” என்று சக நண்பர்களிடம் அரசியல் பேசுகிறீர்கள். இதே ஆவேசத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் ஸ்டேட்டஸ்களிலும் காட்டுகிறீர்கள்.
 • உங்கள் மொத்த வருவாயில் பெரும்பகுதி உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவே செலவிடப் படுகிறது. செலவுகளை சமாளிக்க தம்பதிகள் இருவரும் பணியாற்றுகிறீர்கள். அப்படியும் மாதாமாதம் பற்றாக்குறை பட்ஜெட்தான்.
 • மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்தோடு மால் விஜயம். சும்மா ‘விண்டோ ஷாப்பிங்’தான். வந்ததற்கு அடையாளமாக ஒரு ஃபேன்ஸி கம்மலோ, ஃப்ரண்ட்ஸ் பேண்டோ வாங்குகிறீர்கள். அங்கிருக்கும் திரையரங்கில் ஏதோ ஒரு மசாலாப்படம் பார்க்கிறீர்கள். இடைவேளையில் பாப்கார்ன் நிச்சயம் உண்டு.
 • பர்சனல் லோன்/ஹோம் லோன் இவற்றுக்கு எந்த வங்கி குறைந்த வட்டி வாங்குகிறது போன்ற தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறீர்கள். எப்போதும் ஏதோ ஒரு லோன், தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டே இருக்கிறது.
 • மொபைல் போனோ, கலர் டிவியோ வாங்குவது எதுவாக இருந்தாலும், “ஏதாவது ஸ்பெஷல் ஆஃபர் இருக்கா?” என்று கூச்சநாச்சமில்லாமல் கேட்டு, குறைந்தபட்சம் ஒரு துணிப்பையையாவது இலவசமாக வாங்கிக்கொண்டுதான் வருவீர்கள்.
 • இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய்.. இரண்டில் ஒன்றுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறீர்கள்.
பட்டியலிட்டுக் கொண்டே போனால் குறைந்தது நூறு பாயிண்டுகள் தேறும். அதை விடுங்கள். பெரும்பாலானவற்றுக்கு ‘ஆம்’ சொல்லியிருக்கிறீர்களா. கையைக் கொடுங்கள். இந்த கட்டுரையின் ஹீரோ நீங்கள்தான். உங்களுக்கு ‘மிஸ்டர்/மிஸஸ் மிடில்க்ளாஸ்’ பட்டம் வழங்கி கவுரவிப்பதில் பெருமையடைகிறோம்.
மிடில்க்ளாஸ் ஆட்களை மாதிரி அல்லோலகல்லோலப் படுபவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. குடிசையுமில்லாமல், பங்களாவுமில்லாமல்.. இங்குமில்லாமல், அங்குமில்லாமல் நானூற்றி ஐம்பது சதுர அடி ஃப்ளாட்டில் நெரிசலாக நான்கைந்து பேர் இடித்துக்கொண்டு திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்பவர்கள். அரசாங்க கஜானா காலியாகிக் கொண்டிருக்கிறது என்றால் முதலில் வரிபோட்டு சாகடிப்பது இவர்களைதான். மக்கள் தொகையில் இருபதிலிருந்து முப்பது சதவிகிதம் பேர்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்காக வருமான வரியில் தொடங்கி, கார்ப்பரேட் டாக்ஸ், ரோட் டாக்ஸ், பிராப்பர்ட்டி டாக்ஸ் என்று ஆண்டு முழுக்க எது எதுவென்றே தெளிவாக தெரியாமல் ஏதோ ஒன்றுக்காக வரி வரியாக வரி கட்டியே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். வருடத்துக்கு ஒருமுறை கொஞ்சமே கொஞ்சமாய் சம்பளம் ஏறினாலும், அதையும் பெட்ரோல் டீசல், பால், பஸ் ரயில் டிக்கெட், மருத்துவம், கல்வி, மின்சாரம் என்று இவர்களது அடிப்படை ஆதாரங்களின் விலையை ஏற்றி ஈஸியாக அரசாங்கங்கம் பிடுங்கிக் கொள்கிறது. சுருக்கமாக சொன்னால் இந்திய அரசாங்கத்தின் ஏ.டி.எம். கார்டு, நம்முடைய மிடில் க்ளாஸ் மாதவன்கள்தான். என்ன செய்வது, குருவித்தலையில் பனங்காயை வைத்துதான் நாட்டை நடத்த வேண்டியிருக்கிறது.
ஜனகனமன பாடும்போது அட்டென்ஷனில் சிலிர்த்துக்கொண்டு நிற்பதற்காகவும், பாரதம் கிரிக்கெட் கோப்பைகளை வெல்லும்போது, டிவிக்கு முன்பாக குடும்பத்தோடு ஜெய்ஹிந்த் சொல்லும்போது குரலில் தானாகவே வந்து சேரும் பெருமிதத்துக்காகவும் இந்த தியாகங்களை திருவாளர் நடுத்தரம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. குடியரசுத் தினத்துக்கும், சுதந்திர தினத்துக்கும் மறக்காம சட்டையில் தேசியக்கொடி குத்திக்கொண்டு நாட்டை பெருமைப்படுத்துவது யார். நம்ம மிடில்க்ளாஸ்தானே? இந்தியனாக இருப்பதற்கு இன்னும் ஏராளமான துன்பங்களையும், அழுத்தங்களையும் சகித்துக்கொள்ள வேண்டியதாக போகிறது. பாழாய்போன அமெரிக்காவில் முன்புமாதிரி ஈஸியாக வேலை கிடைத்து தொலைக்க மாட்டேங்கிறது சார். ஒபாமா ஓவரா ஸ்ட்ரிக்ட் பண்ணுறார்.
அப்படியிருந்தாலும் பாருங்கள். நடுத்தர வர்க்கத்துக்கு நல்ல பெயரே இல்லை. நாட்டில் எது நடந்தாலும் முதலில் அறிவுஜீவிகளும், ஊடகங்களும் திட்டுவது நம்மைதான். ‘middle class morons’ என்று ஆரம்பித்து, நடுத்தர வர்க்கத்து மனோபாவம்தான் நாட்டின் எல்லா சீரழிவுகளுக்கும் காரணமென்று பத்தி, பத்தியாக எது எதையோ எழுதுகிறார்கள். மூச்சு விடாமல் மூன்று மணி நேரம் கருத்தரங்குகளில் பேசுகிறார்கள். ஏழைகளை பற்றி அக்கறை இல்லை. என்கவுண்டரை மனிதநேயமில்லாமல் ஆதரிக்கிறார்கள். மேன் ஈட்டரான புலியை அதிரடிப்படை சுட்டுக்கொன்றதை சுற்றுச்சூழலியல் அறிவின்றி வரவேற்கிறார்கள் என்றெல்லாம் எல்லாத்துறை பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி, மிடில் க்ளாஸ் மாரோன்கள் எப்படி இயற்கைக்கும், இயல்புக்கும், அறத்துக்கும், அறிவுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் வாழ்கிறார்கள் என்றெல்லாம் சுட்டிக் காட்டுகிறார்கள். உற்றுக் கவனித்தால் இம்மாதிரி எழுதுபவர்களும் பேசுபவர்களும் கூட ‘மிடில் க்ளாஸ்’ ஆகதான் இருக்கிறார்கள். என்ன, நாம் டிகிரியில் அரியர்ஸ் வைத்திருப்போம். அறிவுஜீவிகள் பன்ணென்டாங்கிளாஸ் பாஸ் செய்திருப்பார்கள். பாஸ் பெருசா ஃபெயில் பெருசா தர்க்கத்தில் போட்டு நம்மை தாலியறுக்கிறார்கள்.
ஏதோ முக்கியமான ஆய்வு மாதிரி ஆரம்பித்து, கலாய்ப்பது மாதிரி போகிறதா கட்டுரை? சரி, சட்டென்று சீரியஸாகி விடுவோம்.
அறுபதுகளில் தமிழ்நாட்டில் பாதி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்து வந்தோம். குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, பெண்களுக்கு கல்வி, கிராமங்கள் வரை மருத்துவம் என்று பல்வேறு காரணங்களால் கட்டுக்குள் வந்த மக்கள் தொகை பெருக்கத்தால், இன்று நாட்டிலேயே நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. எனவே இந்த வர்க்கத்தினரின் பிரச்சினை என்பது மாநிலத்தின் பிரச்சினையும் கூட.
வாழ்க்கை முழுக்கவே பொருளாதார, சமூக அழுத்தங்களால் உந்தப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருப்பவன் என்பதுதான் மிஸ்டர் மிடில்க்ளாஸின் அசலான அடையாளம். அவனுடைய கனவு எந்த தொல்லையுமில்லாத வாழ்க்கை. துரதிருஷ்டவசமாக அது கடைசிவரை கனவாகவே ஆகிவிடுகிறது. அடிப்படை வசதிகளை பெற்றுவிட்ட நடுத்தர வர்க்கம், தனக்கு சுலபத்தில் எட்டாத வசதிகளுக்கு எம்பி, எம்பி முயற்சித்துக் கொண்டிருப்பதே அவர்களுடைய வாழ்க்கை முறையை சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. சவால்களை எதிர்கொள்ள ‘ரிஸ்க்’ எடுக்க விரும்புவதில்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை இன்னும் சில படிகள் மேலே கொண்டுவர ஏதேனும் ‘ரம்மி’ விளையாடி, ‘ஜோக்கரே’ வராமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையை சஞ்சலத்துக்கு உள்ளாக்குகிறது.
அரசியல் தலைவர்களை பொறுத்தவரை ‘நடுத்தர வர்க்கம்’ என்பதை ஓட்டு போடும் இயந்திரமாகதான் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு இவர்களை சீண்டுவார் இல்லை. ஆட்சியை தக்கவைக்க ஏழைகளுக்கு இலவசத் திட்டங்கள். அதிகாரத்தை தக்கவைக்க பணக்காரர்களுக்கு சலுகைகள். இடையில் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக விழுந்துக் கொண்டிருப்பது நாமம்தான்.
அனாயசமாக ஆங்கிலம் பேசக்கூடிய, பட்டம் பெற்ற, பல்வேறுதுறைகளில் தொழில்நுட்ப அனுபவமும் தகுதியும் கொண்ட நடுத்தர வர்க்கம் நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. கலை மற்றும் அறிவுசார் துறைகளிலும் இந்தியா உலகளவில் உயர்ந்து வருவதற்கு நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்களே பிரதான காரணமாக இருக்கிறார்கள். ஆனால் நாடு இவர்களை எந்தளவுக்கு பொருட்டாக எடுத்துக் கொள்கிறது என்பது கேள்விக்குறிதான்.

முதுகு வளைந்துவிட்ட திருவாளர் நடுத்தரம் நிமிர்ந்து நடக்க முயற்சிக்கிறார் என்றே சமீபகாலமாக எண்ணத் தோன்றுகிறது. அரசியல், நாட்டு நடப்பு குறித்து வெறுமனே கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்ற எண்ணத்துக்கு நடுத்தர வர்க்கம் வந்திருப்பதாக தோன்றுகிறது. பார்ப்போம். பவர் ஆஃப் மிடில்க்ளாஸ்ஸை அவ்வளவு சுலபமாக எடைபோட்டுவிட முடியாது.

2 கருத்துகள்:

 1. கிரிக்கட் விளையாட்டில் கூட முக்கியமான கட்டங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் காலை வாரிவிட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கி முக்கி போராடிதோற்றுப் போனால் மிடில் ஆர்டர் சரியில்லை என்று பேர் வாங்கிக் கொள்வார்கள் அல்லவா?
  காக்காமுட்டைக்காக கண்ணீர் சிந்துவதும் மிடில் கிளாஸ்தான்

  பதிலளிநீக்கு