16 பிப்ரவரி, 2015

எம்.ஜி.ஆரின் வயது என்ன?

1987 டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் இறந்தார்.

டிவியில் அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.

முகத்தை குளோஸப்பில் காட்டும்போது, “எண்பது வயசு மாதிரியா இருக்காரு வாத்தியாரு” என்று பார்த்தசாரதி மாமா சொன்னார்.

எங்கப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது. “சட்டுன்னு பத்து வயசு ஏத்திட்டியே மாமா” என்றார்.

“லச்சிம்பதி, உனக்கு விஷயம் தெரியாது. எம்.ஜி.ஆர் சினிமாவுலே ரொம்ப லேட்டாதான் பிக்கப் ஆனாரு. ஹீரோயினெல்லாம் சின்னப் பொண்ணுங்குறதாலே சங்கடப்பட்டுக்கிட்டு பத்து வயசு குறைச்சு சொல்லிட்டாரு”

அதாவது 1917, ஜனவரி 17 என்பது அஃபிஷியலாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். பார்த்தசாரதி மாமாவின் கணக்குப்படி பார்த்தால் அவர் பிறந்தது 1907. பழைய வாத்தியார் ரசிகர்கள் நிறையபேர் இந்த கூற்றினை ஒப்புக் கொள்கிறார்கள்.

உண்மையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அவருக்கே தெரியாது என்பார்கள். சினிமாவில் புகழ்பெற்ற பிறகு குன்ஸாக ஏதோ ஒரு வருடத்தை சொல்லவேண்டுமே என்று யோசித்தவர், இந்திராகாந்தி பிறந்த வருடத்தையே தன்னுடைய பிறந்தவருடமாக சொல்லிவிட்டார் என்றும் சிலர் சொல்வதுண்டு.

எம்.ஜி.ஆருக்கு நிறைய மர்மங்கள் உண்டு. அவற்றில் ஒன்று அவரது வயது.

எம்.ஜி.ஆரின் சாதி பற்றிகூட இதுமாதிரி ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் உலவுவது உண்டு.

பிறப்பால் ஈழத்தை சார்ந்தவர். அவரது அப்பா கோபாலமேனன் கேரளத்தில் பிறந்தவர். அந்த காலத்திலேயே தலித் பெண் ஒருவரை (அன்னை சத்யா) காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு ஊர்விலக்கத்துக்கு உள்ளானார். எனவே பிழைப்புக்காக இலங்கை சென்று, கண்டியில் அரசுப்பணி புரிந்தார் என்பது ஊரறிந்த வரலாறு.

அப்படியில்லை. ‘மேனன்’ என்பது கோபாலனுக்கு கொடுக்கப்பட்ட கவுரவப் பட்டம், சாதியல்ல. அவரது முன்னோர் பழனிக்கு அருகில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ‘மன்றாயர்’ சாதி என்று சொல்வோரும் உண்டு. எம்.ஜி.ஆரை மலையாளி என்றுகூறி தமிழகத்தில் தமிழ் அரசியல் நடந்தபோது, தானும் தமிழன்தான் என்று நிரூபிக்க எம்.ஜி.ஆர் உருவாக்கிய தியரி இதுவென்றும் சொல்வார்கள்.

கொங்கு பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு உலகறிந்தது. அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் எம்.ஜி.ஆரை ‘கவுண்டர்’ என்று நிரூபிக்க மெனக்கெட்டதும் உண்டு.

எம்.ஜி.ஆர் மேனனா, மன்றாயரா, கவுண்டரா என்று உறுதிப்படுத்த இன்று ஆட்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். போலவே அவரது பிறந்த வருடமும் 1907-ஆ அல்லது 1917-ஆ என்று துல்லியமாக ஆதாரப்பூர்வமாக சொல்லக்கூடியவர்களும் இல்லை. எனவே அதிமுகவினர் வருடாவருடம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை 1917ல் கணக்கில் வைத்தே கொண்டாடுவதால், அதையே நாமும் ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயதான சோதிடரை மடிப்பாக்கம் ஐயப்பன் கோயில் அருகில் சந்தித்தேன். சொந்த பந்தங்களில் யாருக்காவது வரன் பார்ப்பதாக இருந்தால் இவரிடம்தான் அம்மா ஜோடிப்பொருத்தம் பார்ப்பார். இப்போது சோதிடர் எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

பேச்சுவாக்கில், எம்.ஜி.ஆருக்கு சோதிடம் பார்த்திருக்கிறேன் என்றார். ஆலந்தூர் மார்க்கெட் அருகில் அப்போது சோதிடர் இருந்திருக்கிறார். 1971 தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த எம்.ஜி.ஆர், அப்பகுதியில் பிரபலமான சோதிடராக அப்போது இருந்த இவரிடம், தன்னுடைய எதிர்காலம் குறித்து சோதிடம் கேட்டதாகவும், தான் மிகத்துல்லியமாக கணித்துச் சொன்னதாகவும் சொன்னார். “இன்னும் ஆறே வருஷத்தில் நீங்கதான் நாட்டை ஆளப் போறீங்க” என்று  சொன்னபோது எம்.ஜி.ஆர் நம்பாமல் புன்சிரிப்பு சிரித்தாராம். அவர் ஆட்சிக்கு வந்தபின் ஆள் விட்டு தன்னை தேடியதாகவும், அதற்குள்ளாக தான் இடம்மாறி விட்டதாகவும் கூடுதல் தகவல் தந்தார். “ஒருவேளை அப்போ எம்.ஜி.ஆர் ஆளுங்க என்னை கண்டுபிடிச்சி இருந்தாங்கன்னா, இப்போ என்னோட நிலைமையே வேற. நம்ம தலையில் அப்படி எழுதிவெச்சிருக்கு, நாமென்ன செய்யமுடியும்” என்று நொந்துக் கொண்டார்.

சட்டென்று எனக்குள் பல்பு எரிந்தது. “எம்.ஜி.ஆர் உங்களிடம் சோதிடம் பார்த்திருந்தால், அவருடைய பிறந்த வருடம் உங்களுக்கு சொல்லியிருப்பாரே?” என்று கேட்டேன்.

“ஆமாம், சொன்னாரு. அறுபத்தியாறாவது வயசுலே அவர் நாட்டை ஆளுவாருன்னுதான் கணிச்சேன். 1911தான் அவரோட பிறந்தவருஷம். ஏடிஎம்கே காரங்க தப்பா கொண்டாடுறாங்க” என்றார்.

ஜோதிடர்கள் அடித்துவிடுவார்கள்தான். இருந்தாலும் தேவுடா. இப்போது மூன்றாவதாக ஒரு வருடம் குதித்திருக்கிறது. எம்.ஜி.ஆரின் ரோலக்ஸ் வாட்ச் இன்னும் அவரது சமாதியில் ‘டிக் டிக்’கிக் கொண்டிருக்கிறது என்கிற மர்மத்தைபோல, அவர் பிறந்த வருடமும் மர்மத்துக்கு மேல் மர்மமாகிக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான (கிட்டத்தட்ட தமிழக அரசவை) ஜோதிடரான வித்வான் வே.லட்சுமணனும் கூட 1911ஐ கணக்கில் வைத்துதான் எம்.ஜி.ஆருக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார் என்று முன்னெப்போதோ கேள்விப்பட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது.

தமிழ் சினிமாவை முப்பதாண்டுகள் கட்டி ஆண்டவர். ஹாட்ரிக் தேர்தல் வெற்றியை அடைந்து தமிழகத்தை பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர். அவருடைய பிறந்த வருடம் எதுவென்று இன்னமும் துல்லியமாக நமக்கு தெரியாது.

1 கருத்து: