December 29, 2014

ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதில்லை

 இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை.

எனவேதான் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வந்தது. ஒருவேளை முன்பே வாசித்திருந்தால் கோபப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. ‘மாதொருபாகன்’ நாவலுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கும் ஆதரவான இயக்கங்களில் பங்குகொள்ள தயாராக இருப்பதாக சில நண்பர்களிடம் ஒப்புக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆதரவை முற்றிலுமாக ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்.

நண்பர் ஒருவர் அந்நாவலின் 'objectionable content' என்னவென்பதை முகநூலில் இட்டிருந்தார். சற்றுமுன்புதான் அதை பார்த்தேன். அந்த இரு பக்கங்களையும் வாசித்தபோது திருச்செங்கோடுவாழ் நண்பர்களுக்கு எவ்வளவு கோபமும், வன்மமும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. மடிப்பாக்கத்தில் இப்படியொரு ‘தேர்த்திருவிழா’ நடந்தது என்று ஏதேனும் ஒரு படைப்பாளி, தன் கருத்துச் சுதந்திரத்தின் வாயிலாக புனைந்திருந்தாலும் எனக்கும் இப்படிதான் இருந்திருக்கும்.

ஆதாரமில்லாமல் வாய்வழியாக சொல்லப்படுகிற ஒரு கதையை, இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்யப்படும்போது அது வரலாறாக நம்பப்பட்டு விடுகிற ஆபத்து இருக்கிறது. புராண இதிகாசப் பாத்திரங்களையே கூட மக்கள் அப்படிதான் நம்பி தொலைத்துக்கொண்டு நம் கழுத்தை அறுக்கிறார்கள் இல்லையா? இன்னமும் ராமர்பாலம் இருக்கிறது, அதை ராமரின் ப்ளான்படி குரங்குகள் போட்டது என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் மத்திய அரசேகூட நம்புகிறதுதானே?
ஏதோ காரணங்களால் குழந்தைப்பேறு தள்ளிப்போகும் அல்லது நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களை ‘மலடி’ என்று இழிவுப்படுத்துவதைவிட மோசமான இழிவுப்படுத்துதலை ‘மாதொருபாகன்’ செய்திருக்கிறது. பெண்ணியவாதிகள், எப்படி இந்த நாவலை ஆதரித்து பேசுகிறார்கள் என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவர்களும் இன்னமும் என்னைப்போலவே நாவலை வாசித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

இப்படியொரு ‘கூட்டுக்கலவி’ சித்தரிப்பு, அந்த நாவலுக்கு அவசியமாக வேண்டுமென்கிற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு கற்பனையூரில் நடைபெறுவதாக எழுதியிருக்கலாம். அப்படியும்கூட குழந்தை இல்லாத பெண்களுக்கு இப்படியொரு வாய்ப்பினை கொடுத்தார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவை. ஆதாரமற்ற அவதூறுகளை முற்போக்கின் பெயரால் ஆதரிக்க முடியாது. ‘தேவடியா பையா’ என்று திட்டினால் முற்போக்காளனாக இருந்தாலும், அவனுக்கும் கோபம் வருவதுதானே யதார்த்தம்?

“எல்லா விஷயங்களுக்கும் எழுத்துப்பூர்வமான ஆதாரத்தை வழங்க முடியாது” என்கிறார் பெருமாள் முருகன். இது தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற பதில்.

வரலாற்று ஆய்வறிஞரான அ.கா.பெருமாள், தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சில தகவல்களை சொன்னார்கள் என்றும் அவர் சொல்கிறார். ஆதாரப்பூர்வமாக அவர்கள் ஏதேனும் சொன்னார்களா, அல்லது வாய்வழி வார்த்தையாக பரப்பப்பட்ட தகவல்களா என்று தெரியவில்லை.

மேலும் இந்த தேர்த்திருவிழா சித்தரிப்புகளுக்கு வாய்வழியாக சொன்னவர்கள்தான் ஆதாரம், அவர்களை அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பு இருக்காது என்றும் சொல்கிறார். வாய்வழி வார்த்தைகள் எப்படி வரலாறு ஆகும்?

அதுவுமின்றி 2011ல் வெளியான நாவலுக்கு ஏன் 2014ல் போராட்டம் என்பது புரியவில்லை. மூன்று ஆண்டுகளாக இதை திருச்செங்கோடுகாரர்களோ, ஜாதிய அமைப்புகளிலோ அல்லது இந்து அமைப்புகளிலோ ஒருவர்கூடவா வாசித்ததில்லை. எங்கோ லாஜிக் ‘லைட்டாக’ உதைப்பது போலதான் இருக்கிறது. ‘மாதொருபாகன்’ நாவலின் இருகோண முடிவு தனித்தனியாக இரண்டு நாவலாக ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ என்று இப்போது காலச்சுவடு வெளியிடப் போகிறதே, அதற்கான டிரைலரா இது?

31 comments:

 1. அந்த அத்தநாரீக்கே விழா நடத்தப்பட்டாலும் இறுதிநாளில் அவரது திருமணம் நடைபெறுவதே இல்லை! அதற்கான காரணங்களைப்பற்றி அன்பர் பெருமால்முருகன் ஆய்வுசெய்திருக்கலாம்! அந்த மலைமீது ஒரு மண்டபம் தேவரடியார் மண்டபம் என உள்ளது! அம்மண்டபத்துக்கு ஏன் தேவரடியார் மண்டபமென்று பெயர் வந்தது? அதையாவது ஆய்வுசெய்திருக்கலாம்! அத்தோடு அந்த மண்டபத்தின் உள்ளே என்ன காரணத்தால் அர்த்தநாரீ செல்வதில்லை என்பதையாவது ஆய்வுசெய்திருக்கலாம்! மேலும் ஒன்று; அம்மலை செங்கோட்டு மலை என்றுதானே இருந்தது; "தெய்வத்திருமலைச் செஙோட்டில் வாழும் செழும் சுடரே வைவைத்த வானவனே .. .." .என்றுதான் செங்கோடனைப் பலரும் பாடியுள்ளார்கள்! செங்கோடனான செவ்வேல் முருகனின் மலைமீது அர்த்தநாரீ எப்படி இடம்பிடித்தார் என்கிற புதிரையாவது விடுவித்திருக்கலாம்! அவரை ஏன் செங்கோடனின் தாய் திருமணம் செய்துகொள்ளாமல் ஒவ்வொரு ஆண்டும் திரும்பிச்செல்கிறார்? அதைப்பற்றிக்கூட ஆய்வுசெய்திருக்கலாம்! அவர் மாதௌபாகனா அல்லது ஒருமுலை அறுத்த திருமா பத்தினியா? அல்லது ஒருமுலை இழந்த திருமா உண்ணியா? என்பதையாவது மக்களுக்கு எடுத்துச்சொல்லியிருக்கலாம்! ஒரு முனைவரிடமிருந்து மக்களும் மாணவர்களும் இத்தகைய ஆய்வுகளைத்தானே எதிர்பார்க்கிறார்கள்!

  ReplyDelete
 2. அவர் எழுதியதோடு நீங்கள் உடன்படலாம் அல்லது முரண்படலாம். மாற்றுக் கருத்தை முன்வைத்து ஒரு புத்தகமே எழுதலாம். அவர் எழுதிய புத்தகத்தை தடை செய்யக்கூடாது. அவ்வளவுதான். ஒருவரது கருத்து சுதந்திரத்தை வலியுறுத்த நீங்கள் அவர் கருத்தோடு ஒத்தப்போக வேண்டி அவசியம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. If I'm to write a reply or a book in opposition, can I apply the same logic if somebody beats me.

   Will the law permit me slapping him back once or twice depending on my strength

   Delete
 3. அந்த லைட்டான லாஜிக் உரசல்தான் எனக்கும் உதைத்தது.. என்ன கொடுமையெனில், இந்த சம்பவத்திற்குப்பின் என் நண்பர்களுள் சிலர் வாசிக்கும் முதல் நாவலாக மாதொருபாகன் ஆகவிருக்கிறது.. ஃபிலிப்கார்ட்'ல ட்ரென்டிங்க் எதுவும் இருந்தா தெரிஞ்சுடும் இந்த விளம்பரம் எவ்வளவு தூரத்துக்கு ரீச் ஆகீருக்குன்னு..

  புத்தக கண்காட்சிக்குள் 140 ஓவாயும் 200 ஆக மாறலாம்...

  btw, நானும் இன்னும் வாசிக்கல. வாசிப்பதாய் எண்ணமுமில்ல..

  ReplyDelete
 4. பட், தி.மு.க பற்றி இந்த பதிவுல நீங்க பேசல.. அட்டைல, கருப்பு, செவப்பு, வெள்ளை மூனுமே இருக்கே... just reminding... :)

  ReplyDelete
 5. யுவா எழுதப்படாத எதுவும் வரலாறல்ல என்றால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல இனங்களுக்கும் இனக்குழுவுக்கும் வரலாறிருக்காது.

  ReplyDelete
  Replies
  1. But all ugly imaginations cannot be history

   Delete
  2. Histories are written by victors, or by the historicans commissioned by the victors. Such histories tell us about all that compel us hero worship the commissioned king, or call his period Golden. We never know how the poor lived and died then, how the ordinary masses were oppressed; how the women were treated. If written, they are the so called ugly sides, which you will quickly call it ugly imaginations :-)

   Delete
 6. சிறில், வரலாறு என்பது ஆதாரப்பூர்வமான செய்திகளின் வாயிலாக உருவாவது. தொல்காப்பியத்தில் இருந்துதான் தமிழரின் வரலாறு ஒப்புக்கொள்ளப் படுகிறது. அதற்கு முன்பாக நடந்ததாக சொல்லப்படுவதை ஒரு தரப்பு ஏற்கும் மறு தரப்பு மறுக்கும் நிலைதான் இருக்கிறது. இன்னமும் ’லெமூரியா’ உறுதிப்படுத்தப்படவில்லை என்பதில் இருந்து இதை புரிந்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. When you yourself admit that one side will accept, but the other side will reject, it is better you remain prepared to read both sides, but won't call either names. Here, you take position and support one side only. What a neutrality indeed!

   Delete
 7. துவரகாசாமிநாதன்10:41 AM, December 31, 2014

  என்ன தோழரே நீங்கள் நிறைய படிப்பீங்க அப்படின்னு நம்பி ஏமந்துட்டன் பாவம் உஙளுக்கு வரலாறு படித்த அனுபவமும் பத்ல மாதொரு பாகன் நாவல் மனிதன் குழுவாக வாழ்ந்த காலத்தில் இது நடந்தது மட்டுமில்லை திருவிழாவின் நோக்கமே கட்டற்ற் காமத்தை குறைக்கவும் அனுபவிக்கவுமே மேலும் கூத்தாண்டவர் கோயில், முருகன் கோயில் , திருச்சங்கோடு திருவிழவும் உண்டு இப்படி நிறைய கோயிலில் தேவரடியார்கள் இருந்து இத்தொண்டை செய்த்தற்கு கள ஆய்வுகள் உள்ளன...... நீங்க என்ன ஜய ஜய மோகன ராகத்தை ஆதரிப்பவரோ...... அவர் இதைப்பற்றி இன்ன சொல்லிருக்காறு அன்னாத்த......

  தாங்கள் நிச்சயம் ஏங்கல்சின்'குடும்பம், அரசு, தனிச்சொத்து' புத்தகம் வாங்கி படித்துவிட்டும் ஏதாவது ஆதராம் கிடைக்குதன்னு பாருங்க தோழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

  துவரகாசாமிநாதன்

  ReplyDelete
 8. இன்னும் நூலைப் படிக்கவில்லை. இவ்விமர்சனத்தைப்படித்தால் நாவலில் வரும் கதையின் சுவராசியம் மங்கிப்போகிவிடுமென்பதால் இவ்விமர்சனத்தையும் படிக்கவில்லை. Will come back after reading. Waiting for the post from flipkart.

  ReplyDelete
 9. திருச்செங்கோட்டில் பல நூற்றாண்டுகளாக இந்துக்களின் உயிரிலும் உணர்விலும் கலந்த ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரையும், கோயிலுக்கு வரும் அடியார்களையும், பெண்களையும், பண்டிகை மரபுகளையும் மிக கேவலமாக சித்தரித்து பெருமாள் முருகன் என்ற முற்போக்கு கம்யூனிச கைத்தடி (உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு என்று பொய்யைப் புளுகி) நாவல் எழுதினார்.

  ஹிந்துக்களுக்காக, என்று கூறிக்கொள்ளும் ஹிந்துத்வ சித்தாந்தம், இயக்கங்கள், கட்சிகள், எழுத்தாளர்கள், மீடியாக்கள் அனைவரும்தான் முதலில் இந்த சர்ச்சையை எதிர்த்து போராடியிருக்க வேண்டும். ஆனால், அதை தவறியது மட்டுமின்றி எதிர்த்த திருசெங்கோட்டு மக்களையும், சில இயக்கங்களையும் கண்டித்தும் கேவலப்படுத்தியும் ஹிந்துத்த்வர்களே எழுதிகிறார்கள். ஹிந்து தலைவர்கள் மவுனம் காக்கிறார்கள். பெருமாள் முருகனுக்கு சாமரம் வீசி பாராட்டு விழா எடுக்காததுதான் குறை.

  மாதொருபாகன் திருசெங்கோட்டு சம்பவம் பற்றி அறிய:
  http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html

  இந்த சம்பவம் மூலம், ஹிந்துத்வதுக்கும், பாரதத்தின் கிராம மக்களுக்கும் எவ்வளாவு இடைவெளி (மட்டுமல்ல, துரோகிகள்) என்பதை உணர்ந்துவிட்டோம். எங்கள் தெய்வத்தையும், பெண்களையும், மரபுகளையும் சேறு வாரி தூற்றுபவர்களையும் சகித்துக் கொண்டுதான் இந்த வெக்கங்கெட்ட துரோகிகள் பின்னால் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மதம் – அரசியல் பிழைப்பு, இவை அனைத்தைவிட தர்மமே பிரதானம். இதுவரை திருச்செங்கோட்டில் நாங்கள் செய்த எந்த வேலைக்கும் எந்த ஒரு ஹிந்துத்வ இயக்கங்களும் ஆள் பலம-அரசியல் பலம-சட்ட உதவி-பொருளாதார உதவி-மீடியா உதவி என்று எதுவும் செய்ததில்லை. நாங்க உயிரை பணயம் வைத்து செய்யும் வேலைகளின் அரசியல் பலனை அனுபவிக்க ஹிந்துத்வம் தவறவில்லை. எங்களை ரவுண்டு கட்டி வெட்ட வந்து நாளிதழ்களில் செய்தி வந்த போதும் எந்த ஹிந்து தலைவர்களும் ஏன் என்று கூட கேட்க வில்லை. இனியும் இந்த போலி இயக்கங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டுமா என்று பிற வட்டாரத்தில் வேலை செய்யும் உணர்வுள்ள ஹிந்துக்கள் சிந்திக்கவும்.. மனம் நொந்த நிலையில் எழுதிகிறேன் இதை..

  ReplyDelete
 10. திருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)

  * மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.

  * இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.

  * திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?

  *நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?

  * மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.

  புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அந்த எல்லைகளை யார் வரைவது என்பதுதான் பெரிய கேள்வி. உஙக்ளுக்குப்பிடித்தவாறு ஒரு வரையறை. இன்னொவருக்குப் பிடித்தவாறு இன்னொரு வரையறை என்றால், இலக்கியத்துக்கு எந்த வரையறையை ஏற்பது?

   பதில்: இலக்கியத்து வரையறை கிடையாது. போர்னோகிராஃபி என்றும் இலக்கியம் என்றும் தனியாக மட்டுமே பிரிக்க முடியும். ஆனால் அந்த வரையறை எழுத்தே தீர்மானிக்கிறது. அதாவது எல்லாவற்றையும் ஓபனாகக் காட்டினால், அது போர்னோகிராஃபி, அதையே இலை மறை காயாகக்காட்டினால் அது இலக்கியம். Art lies in concealing art.

   மாதொருபாகனில் ஒருவன் தன்னைத் தொட்டான்; அவனோடு சென்றேன் என்று முடித்துவிடுகிறார். போர்னோகிராஃபி அதற்குப்பின் என்ன செய்தார்கள்? எப்படி செய்தார்கள் என விலாவரியாக விவரிக்கும்.

   இறுதி பக்கத்தில் தற்கொலை செய்தான் என்றிருக்காது. மாறாக,

   //அப்படியே கீழே சாய்ந்தான்.போரிலிருந்து சோலைத்தட்டு உருவிக்கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுத்தியது. மேலே பார்த்தான். பூவரசங் கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன//

   பூவரசமரம் அவன் வைத்தது. ஆனால் இன்று அது விரிந்து பரவிவிட்டது என்பதில் அவள் மனைவி அவனை விட்டு வேறிடத்திடத்தில் பரவிவிட்டாள் எனபதை அவன் புரிந்து கொண்டான் என்று காட்டுகிறார். கயிறு அழுத்த மேலிருந்த கிளைகள் தெரிய என்று முடித்ததில் அவன் தற்கொலை வாசகர்களால் உணரப்படுவது. Art lies in concealing art. உணரப்படுவதே இலக்கியம்.

   நாவலில் கடைசி வரிகள் மற்றும் முதல் வரிகளும் அம்மரத்தைப்பற்றியே. ஆக, பூவரச‌ மரம் ஒரு துயரகரமான சின்னமாக நம்முன் நின்று நம்மை ஆட்கொள்கிறது. கதை நெடுக வரும் உரையாடல்கள்; கிளைக்கதைகள். சின்னங்கள். உவமைகள், உவமேயங்கள், நாட்டார் வழக்குகள், மக்களின் அக்கால கிராமீய வாழ்க்கை முறைகள்; நெறிகள், அவற்றை மூறுவோர் படும் துயரங்கள்; அனைத்தும் சொல்லப்பட்ட விதம் - எல்லாமே நம்மை வியக்க வைக்கின்றன‌ - இதுதான் இலக்கியம் என்று சொல்லாமல் இருக்கமுடியவில்லை. எல்லைகள் எங்கே வந்தன இங்கே?

   Delete
 11. இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there),
  விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்.
  என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).

  எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை.
  திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா.
  இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம்.
  என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. நான் உங்கள் பின்னூட்டத்தை என் பக்கத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறேன். தவறிருந்தால் தெரிவிக்கவும்.

   http://adimurugan.blogspot.in/2015/01/blog-post.html

   Delete
  2. மதிப்பிற்குரிய சகோதரி உங்கள் மன உணர்வுகள் புரிகிறது.
   நம் சமூகம் கதையில் வரும் சம்பவங்களை தனிமனித சுய வாழ்வில் பொருத்திப்பார்க்கும் அவலம் முதலில் நிற்க வேண்டும்.

   ஒரு பதிவரை அனானி ஆக்கியது சமூகம எழுத்தாளரா?
   ஆயிரம் கேள்விகள்.
   உங்கள் உணர்வுகள் எனக்கும் வேதனையானவையே .

   Delete
  3. It is tragic you have married a person who changes his opinion on reading a fiction. Teach him how to read a novel as a novel. Tell him that we should judge things independently and not become pawns in the hands of others. If he does not change, then he will suspect your integrity based on a remote hearsay. The fault does not lie with the novel, but with your husband.

   Delete
 12. அர்த்தநாரீஸ்வரருக்கே விழா நடந்தாலும் அவர் திருமணம் நடைபெறுவதில்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. 14 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழாவில் 9ம் நாள் அர்த்தநாரீஸ்வரர் திருமணம் நடந்தபின்புதான் அவர் தேரில் வைத்து பின்புதான் அனைத்து தேர்களும் இழுக்கப்படும். பெருமாள் முருகனுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒரு முறையாவது தேர்த்திருவிழாவிற்கு வந்து 14 நாட்கள் நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு கருத்து எழுதுங்கள்

  ReplyDelete
 13. இதுதான் இலக்கியம் -னா நாங்க "கள்ளக்காதல் கொலை" யை சொல்லும் தந்தியையும் காமகதை சொல்லும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியையுமே படித்து பார்த்துவிட்டு போகலாமே...மனித வாழ்வை நெறிப்படுத்துவது தான் இலக்கியம் -என்று யாரோ தப்பா சொல்லிட்டாங்க போல....

  ReplyDelete
  Replies
  1. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த இலக்கியத்தால் முடியாது. முடியுமென்றால், இன்றைய தமிழகத்தில் கொலை, கொள்ளை, என்றே இருக்காது. ஏனென்றால், அவ்வளவு நீதிநூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன தமிழில் திருக்குறள் முதற்கொண்டு.

   இலக்கியம் வாழ்க்கையை உள்ளவாறே புதினமாக எடுத்துக்காட்டிவிட்டு, முடிவை வாசகர்களிடம் விடுவது. புனைவாக வாழ்க்கையைக்காட்டுவது மட்டுமே இலக்கியம். நீதிநூல்கள் அவை சொல்லும் நீதிகளுக்காக இலக்கியாமவில்லை. நீதிகளைச்சொன்ன முறைக்காக, தமிழுக்காக இலக்கியாமின்றன. திருக்குறளில் சொன்ன நீதிகளை இன்னொருவர் வேறுவிதமாகச் சொல்லியிருந்தால் எவருமே படிக்க மாட்டார்கள்.

   Delete
 14. "கன்னி" மரியாள் என்னும் திருமணமாகாத கண்ணி வெறும் பரிசுத்த ஆவியால் கர்ப்பமாகிறாள், இந்நிலையில் உடற்சேர்க்கை இல்லாமல் ஒருவர் எப்படி கர்ப்பமாக முடியும் அல்லது பிள்ளை பெற முடியும் என்பதனை யாரும் கேட்பதும் இல்லை கேட்டதும் இல்லை கேட்க போவதும் இல்லை..காரணம் இறை நம்பிக்கை (கடவுள்) என்பதே ஒரு வித நம்பிக்கையில் கட்ட பட்ட பிம்மம் தானே அல்லது நம்பிக்கை தானே என்னும் அடிப்படையில் தான். ஆக வெறும் பரிசுத்த ஆவியால் ஒருவர் கர்பமாக முடியுமா என்பதை இந்த முற்போக்குவாதிகள் தான் நம்புகிறார்களா அல்லது கேள்வி கேட்க துணிவு தான் இருக்குமா?

  நிலைமை இப்படி இருக்கும் பொது ஒரு குறிப்பட்ட மதத்தில் மட்டும் பிள்ளை பிறந்தால் அது மட்டும் எப்படி தப்பான வழியில் பிறந்ததாக போகும்? ஏன் பொன்னாவுக்கு கடவுள் பிள்ளை கொடுக்க மாட்டாரோ? கடவுள் என்பதே ஒரு வித நம்பிக்கை தானே என்னும் நிலையில் பொன்னாவுக்கு கடவுளின் அருளால் பிள்ளை வந்தது என்று எழுதி தொலைதிரூக்க வேண்டியது தானே?

  ஏன் ஒரு பிரிவு மக்களின் நம்பிக்கையை கொச்சை செய்யும் விதமாக இந்த எழுத்தாளர் எழுத வேண்டும்.. இவர் இப்படி கொச்சையாக எழுதி இருப்பது அவரின் உள்நோக்கத்தை தானே காட்டுகிறது. இந்த செயலுக்கு வெறும் நூல் மட்டும் தான் எரிப்பா? அல்லது இந்த முருகனும் 14 இன்காம் திருவிழாவில் கடந்து கொண்டதால் பிறந்தவராக இருக்கும் என்று சகித்து கொண்டார்களா? தமிழர்களின் சகிப்பு தந்தமையை பாராடியே ஆக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நாடாரே! முற்போக்கு என்பது ஆணும் பெண்ணும் உடலால் இணையாமல் குழந்தை வராது என்பதை உறுதியாக நம்புவது. எனவே மரியாள் ஆணில்லாமல் கருத்தரித்ததாகச் சொல்லப்படுவதை முற்போக்கு வாதிகள் ஏற்பதில்லை.

   Delete
 15. HE IS A SOCIAL WRITER ? OR SEXUAL WRITER..?..முற்ப்போக்கு எழுத்தாளர் இவருக்கு ....மார்பக்கதின் மீதும் ,லீலைகள் மீதும் பெணகளின் உறுப்புக்கள் பற்றியும் எழுதுவது தான் முற்போக்கு சிந்தனையோ ......இதுதான் சமூக புரட்சியோ ....தமிழ் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கு சீமான் போன்றவர்களும் அதரவா ...அக்கா தங்க்கை படிப்பார்களா .......இது மட்டுமா .......கெட்ட வார்த்தை பழகலாம் போன்ற இவர் நூல்கள் ஆபாச குப்பைகள் .....வாழ்க உங்கள் முற்போக்கு....

  ReplyDelete
 16. எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை மட்டுமே. இந்த நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூட அந்த 14 ன்காம் நாள் தேர் திருவிழாவின் காரணமாக பிறந்திருக்கலாம் அதனால் தான் எந்த ஆய்வும் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடையாளபடுத்தி சொல்லுகிறார்.

  தன் படைப்பில் கூறிய கருத்துக்களுக்கான ஆணித்தரமான வரலாற்று உண்மைகளை அவரால் எடுத்து வைக்க முடிய வில்லை. உண்மையை எழுதுவது எப்போதும் ஆரோக்கியம், ஆனால் உண்மையை புனைந்து எழுதுகிறேன் என்ற பெயரில் எதையாவது எழுதுவது இருக்கும் சுதந்திரத்திற்கு வைக்கும் சுயகொள்ளி என்னும் நிலையில் இது போல நூல்களை நிச்சயமாக தீக்கு தான் உணவாக அளிக்க வேண்டும்..

  கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் இது போன்ற கேவலங்களை எழுதி புரட்சி ஏற்படுத்தியாக பெருமை பட்டு கொள்ளுவதும் அதை பெரியாரிசம் என்று சொல்லி கொள்வதும் , தங்களை தாமே முற்போக்கு வாந்திகள் என்று சொல்லு கொள்ளுவதும் ஒரு விதமான மன நோய் அன்றி வேறெதுவும் இல்லை. எந்த மதமானாலும் அவரவர்க்கு உள்ள நம்பிக்கையை மிக கேவலமா சித்தரிப்பது தவறான அணுகு முறை இன்றி வேறு எது ? தெய்வங்களையும் நிகழ்ச்சிகளையும் சரியாக குறிப்பிட்டு கற்பனை என சொல்வதை மிருக மனிதர்கள் மட்டுமே ஆதரிப்பர். அதை ஒரு வித நம்பிக்கை என்று சொல்லி முடிக்க வேண்டியது தானே .. நம்பிக்கை தானே இறைவன் .. அந்த பகுதி மக்களின் அருகதையை மிகவும் கொச்சைபடுத்தி விட்ட இந்த பெருமாள் முருகன் எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் இந்த அருவருப்பு செயலுக்கு நியாயம் ஆகாது என்னும் நிலையில் எரிக்க பட வேண்டியது வெறும் நூல் தானா என்றும் கேள்வி இயல்பாகவே எழுகிறது....

  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதி விட முடியுமா? இந்த மண்னின் பெருமையை எந்த எழுத்து அடுத்த மண்ணுக்கும், அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்கிறதோ அதுதான் சிறந்த எழுத்து. அதுதான் முற்போக்கு எழுத்து. எந்தவிதமான ஆதாரமும் இல்லாத வழக்கம் ஒன்றை இருந்தது என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த மக்களை இழிவாக்குவது எந்த விதத்தில் நியாயம்? சொல்வழி தவிர திட ஆதாரம் எதையும் இந்த முற்போக்கு எழுத்தாளரால் தரமுடியுமா? வியாபார யுத்திக்காக எந்த கருமத்தையும் எழுதி அதை 'கருத்து சுதந்திரம்' 'முற்போக்கு எழுத்து' என்றழைத்து அதை சப்பை கட்டு
  கட்ட நன்கு படித்த முட்டாள்கள் நான்கு பேரை விட்டு பேச சொல்லும் கேவலமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். புடுங்குனது எல்லாம் தேவை இல்லாத ஆணி தான் இதில் அவர் இனி மேல் ஆணி புடுங்க மாட்டாராம்,,,பெருமாள் முருகன் போன்ற இந்த பேமாளிகள் இனி வரும் காலங்களில் எழுதவில்லை என்றால் நான் இந்த சமூகத்துக்கு நல்லது .

  ReplyDelete
  Replies
  1. //அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை மட்டுமே. //

   சுதந்திரம் என்பதென்ன? உங்களுக்கு எது சுகமாக இருக்குமோ அதைப்பற்றி மட்டுமே பேசுவதா? சுதந்திரம் என்பது கரிப்பையும் இனிப்பையும் சேர்த்தோ, தனித்தனியாகவோ பேசுவதே. காயப்படுத்தாமல் சுதந்திரம் இருக்க முடியாது.

   Delete
 17. கீழ்க்கண்ட என் பக்கத்தில் உங்களின் இந்த பக்க கருத்துக்களையும், இருவரின் பின்னூட்டத்தையும் இணைத்துள்ளேன். தவறிருந்தால் தெரிவிக்கவும்.

  http://adimurugan.blogspot.in/2015/01/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. என் பின்னூட்டங்களையும் உங்கள் வலைபதிலேற்றுங்கள். ஒரு தெளிவு பிறக்கும்.

   Delete
 18. அது எப்படி நாவலைப் படிக்காமலேயே ஆதரவு தருவதாக வாக்களிப்பது! இப்போது வாபஸ் பெறுவது?...//புராண இதிகாசப் பாத்திரங்களையே கூட மக்கள் அப்படிதான் நம்பி தொலைத்துக்கொண்டு நம் கழுத்தை அறுக்கிறார்கள் இல்லையா? இன்னமும் ராமர்பாலம் இருக்கிறது, அதை ராமரின் ப்ளான்படி குரங்குகள் போட்டது என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் மத்திய அரசேகூட நம்புகிறதுதானே?//மாதொருபாகன் என்ன ராமயணமா? அல்லது காவிய அந்தஸ்து பெறக்கூடிய பெரும் படைப்பா? நானும் மாதொருபாகன் நாவலை சர்ச்சை செய்தேன்னு எத வேணாலும் எழுதிடறதா?

  ReplyDelete
 19. மாதொருபாகன் நாவல் பற்றி பெருமாள் முருகனின் கூற்றுக்களை விமர்சானம் செய்ய தகுதி, ஆய்வு, கள-அனுபவம் உடையவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை வீடியோ ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இதைப்பார்க்கவும். முற்போக்கு மாபியாவின் கூச்சலில் உண்மை இறந்துவிடாது..

  http://www.karikkuruvi.com/2015_04_01_archive.html

  ReplyDelete