1 நவம்பர், 2014

இதழோடு இதழ் வைத்து

நம்ம பக்கத்து ஊரான கேரளாவில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நமக்குதான் தெரியாமல் போச்சு. உலகெங்கும் இன்று இதுதான் பேச்சு.

விஷயம் இதுதான்.

போன மாசம் கோழிக்கோடு நகரில் இருந்த காபிஷாஃப் ஒன்றினை கலாச்சார காவலர்கள் – அதாவது ஆர்.எஸ்.எஸ். மெண்டாலிட்டி அம்பிகள் - அடித்து நொறுக்கினார்கள். வன்முறைக்கு அவர்கள் சொன்ன நியாயம் முத்தாலிக் டைப். இங்கே கூடும் காதலர்களும், தம்பதிகளும் ஒருவருக்கொருவர் பப்ளிக்காக முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த சம்பவத்தை அடுத்து கேரளாவின் இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்றொரு அமைப்பினை ஃபேஸ்புக்கில் உருவாக்கினார்கள். ‘முத்தம் நமது பிறப்புரிமை’ என்று இணையப் புரட்சி செய்தார்கள். அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் முத்தமிடுங்கள் என்று மக்களுக்கு தங்கள் புரட்சி அறிவிப்பினை செய்ததோடு இல்லாமல், முத்த நாளுக்கு முகூர்த்தமாக நவம்பர் இரண்டினை குறித்தார்கள். பல்லாயிரக்கணக்கில் கிஸ்ஸுகளை -அதாவது- லைக்குகளை அள்ளினார்கள்.

‘மாலை ஐந்து மணிக்கு கொச்சி மரைன் ட்ரைவ் பீச்சுக்கு துணையோடு வாருங்கள். முத்தமிட்டுக் கொள்ளலாம்’ என்கிற இவர்களது கவர்ச்சி அறிவிப்புக்கு ஏகத்துக்கும் ரெஸ்பான்ஸ். லவ்வர் இல்லாத பசங்கள்தான் பாவம். வாடகைக்கு ஏதாவது தேறுமா என்று தேடிக் கொண்டிருக்கிறார். கொச்சியின் சுத்துப்பட்டி பதினெட்டு ஊரிலும் இப்போது இதழ்களுக்குதான் ஏகத்துக்கும் டிமாண்ட். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ‘இதழாளர்கள்’ ஏகத்துக்கும் ரேட்டை ஏத்திவிட்டு விட்டார்களாம். ஒரே ஒரு இதழாளர் பத்து, பதினைந்து பேரிடம் அட்வான்ஸ் வாங்கி போட்டுக்கொண்ட ஊழல்கூட நடந்துவிட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த மாஸ் கிஸ்ஸிங் நிகழ்வுக்கு எப்படியும் ஒரு பத்தாயிரம் ஜோடிகளாவது தேறுவார்கள் என்று ஆர்கனைஸர்கள் நம்புகிறார்கள். இந்த ஒட்டுமொத்த முத்த நிகழ்வு, கலாச்சாரக் காவலர்களுக்கு நாங்கள் கொடுக்கும் ரெட் சிக்னல் என்று கொக்கரிக்கிறார்கள். முத்த நாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்திருக்கிறதா என்று இதுவரை தெரியவில்லை. பெங்களூரில் இருக்கும் சாஃப்ட்வேர் க்ரூப்புகள், வீக்கெண்டை என்ஜாய் செய்ய ஜோடி ஜோடியாக (ஓரினச் சேர்க்கையாளர்கள் உட்பட) கொச்சிக்கு காரை கிளப்பிவிட்டார்கள்.

கொச்சி டெபுடி கமிஷனரான நிஷாந்தினிக்குதான் ஏகத்துக்கும் தலைவலி. “(முத்தத்துக்காக) மொத்தமாக மக்கள் கூடுவதை எங்களால் தடுக்க முடியாது. ஆனால் இதனால் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அப்போதுதான் நடவடிக்கை எடுப்போம்” என்று வெட்கப்பட்டுக் கொண்டே மீடியாக்களிடம் சொல்கிறார். பாவம். அவரும் இளம்பெண் தானே?

இந்த முத்த மாநாட்டுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் எந்த தொல்லையும் கொடுக்காது என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். அனேகமாக இந்த கலாச்சார காவல் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும் ரகசியமாக கலந்துக் கொள்வார்களோ என்று அவர்களது மேலிடம் சந்தேகப்பட்டு கவலைக்கு உள்ளாகியிருக்கிறது. தேன்கூட்டில் அவசரப்பட்டு கல்லெறிந்துவிட்டோமோ என்று வருத்தப்படுகிறார்கள்.

கடவுளின் சொந்த தேசம் ஏகத்துக்கும் சூடாக இருக்கிறது. நம் இதழ்களுக்கு வெறும் ‘கோல்ட் ப்ளேக் கிங்ஸ்’தான் வாய்க்கிறது. நம்மூர் மெரினாவில் எப்போதுதான் இப்படியெல்லாம் சுபகாரியங்கள் நடக்குமோ தெரியவில்லை. தமிழனாக பிறந்ததுதான் நாம் செய்த பாவமா?

5 கருத்துகள்:

 1. மெரினாவில் எப்போதுதான் இப்படியெல்லாம் சுபகாரியங்கள் நடக்குமோ தெரியவில்லை. தமிழனாக பிறந்ததுதான் நாம் செய்த பாவமா?////

  உன் உதட்டை நீயே கடிச்சுக்கோ.

  பதிலளிநீக்கு
 2. நீங்க ஆரம்பியுங்க, நாங்க ஆதரவு தர்றோம்......

  பதிலளிநீக்கு
 3. கலாச்சாரத்தை விட்டொழியுங்கள் .பிரெஞ்சு நடுத்தெரு நடவடிக்கை இப்போ ஏன் இங்கே ?

  பதிலளிநீக்கு
 4. Why only stop with kissing? Please let them proceed to do further activities, I am sure there would be many willing participants and viewers from all over India.

  பதிலளிநீக்கு