July 28, 2014

காசு மிச்சம்!

இயக்குனர் சேரன் அறிவித்திருக்கும் ‘வீட்டுக்கே சினிமா’ திட்டம் திரையரங்கங்களின் அநியாய கட்டணக் கொள்ளையிலிருந்து மக்களை காக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்குகிறது.

சினிமாக்காரர்கள் திருப்பி அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வீடியோ கேசட் காலத்திலிருந்தே வீடியோ பைரஸிகாரர்களுக்கும், சினிமாக்காரர்களுக்கும் தொடர்ந்து வரும் போர்தான். நியாயமாக சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறியளவிலான லாபத்தை கூட பைரஸி குண்டர்கள் அபேஸ் செய்துக் கொண்டிருந்தார்கள். இதற்காக சினிமாத்துறையினர் அவ்வப்போது ஏதாவது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவார்கள். கோட்டைக்கு போய் முதல்வரிடம் மனு கொடுப்பார்கள். க்ரூப் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

கமலஹாசன் போன்றவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது, அதை பைரஸி ஆட்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு பதிலாக நாமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீண்டகாலமாக கொடுத்து வரும் குரலுக்கு திரையுலகினர் செவி சாய்த்ததில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை நேரிடையாக டி.டி.எச். முறையில் வெளியிட்டு பரவலாக கூடுதல் மக்களிடம் கொண்டு சென்று லாபம் பார்க்கும் திட்டத்தை அறிவித்தார். திரையரங்கு உரிமையாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதை செயல்படுத்த முடியவில்லை.

அவரவர் படத்துக்கு பாதிப்பு எனும்போது திருட்டு வீடியோவுக்கு எதிராக கொதித்தெழுபவர்கள், அப்புறம் அதோடு அப்படியே அடங்கிப் போய்விடுவார்கள். இதுதான் திரையுலக சம்பிரதாயம். படம் திரையரங்கில் வெளியிடப்படுவதற்கு முன்பேகூட திருட்டு டிவிடியாக மக்களிடையே கொண்டுவந்து பைரஸி குண்டர்கள் அபார சாதனை படைத்ததும் உண்டு. இத்தனைக்கும் தமிழ் திரையுலகில் சக்திவாய்ந்த மனிதராக கருதப்படும் சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ திரைப்படமே கூட திரைக்கு வருவதற்கு முன்பாக திருட்டு டிவிடியாகதான் வெளிவந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பைரஸி போரை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர் சேரன் முடிவெடுத்திருக்கிறார்.

சேரனின் திட்டம் என்ன?

கமல்ஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்துக்காக டி.டி.எச். என்கிற தளத்தை மட்டும்தான் பயன்படுத்த நினைத்தார். C2H (Cinema to Home) என்று பெயரிட்டு சேரன் முன்வைக்கும் திட்டத்தில், ஒரு சினிமாப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் அதே நேரத்தில் டி.டி.எச்., இன்டர்நெட், கேபிள் டிவி முறைகளிலும், உரிமம் பெற்ற ஒரிஜினல் டிவிடியாகவும் வெளியிடப்பட்டு வீடுகளுக்கே நேரடியாக சப்ளை செய்யும் திட்டம் இது.

இந்த ஆண்டு மொத்தமாக 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. அதில் 159 திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. மீதி படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள், பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும்/வினியோகிக்கும் திரைப்படங்கள் தவிர்த்து மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை. எடுத்து முடித்த படத்தை வெளியிட முடியாவிட்டால் தயாரிப்பாளருக்கு பெரியளவில் இழப்பு ஏற்படும். பைனான்ஸ் வாங்கி படமெடுத்தவர்கள் வட்டி கட்டியே ஓய்ந்துப் போகிறார்கள். இந்த பிரச்சினையை C2H மூலம் தீர்க்க முடியுமென்று சேரன் சொல்கிறார்.

ஒரு திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்திலேயே அப்படத்தின் ஒரிஜினல் டிவிடியை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறோம் என்று சேரன் கூறுகிறார். இதற்காக தமிழகம் முழுக்க 7000 முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஏஜெண்டும் சுமார் 4000 வீடுகளுக்கு டிவிடிகளை வினியோகிப்பார்கள்.

C2H திட்டம் அறிவிக்கப்படும்போதே அதில் சேரன் இயக்கியிருக்கும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, அண்ணே, சிவப்பு எனக்கு பிடிக்கும், மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல் போன்ற திரைப்படங்கள் இணைந்திருக்கின்றன. இப்படங்கள் அனைத்துமே திரையரங்கில் மட்டுமல்லாது டிவிடி வெளியீடாகவும் மக்களுக்கு சுடச்சுட கிடைக்கும்.

மக்களுக்கு என்ன லாபம்?

நிறைய காசு மிச்சம். இதுதான் லாபம். திரையரங்குகள் எல்லாவகையிலும் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள் என்பதை புதிய தலைமுறை ஜூன் 2014ல் வெளியான அட்டைப்படக் கட்டுரையில் விரிவாக வெளியிட்டிருந்தோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மதிக்காமல், அரசின் வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு கூட மக்களிடமிருந்து இன்னமும் அநியாயமாக காசு பறித்துக் கொண்டிருக்கும் திரையரங்குகளின் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும். பார்க்கிங் கட்டண கொள்ளை, அதிகபட்ச சில்லறை விலையை கண்டுகொள்ளாத கேண்டீன் கொள்ளை என்று தியேட்டர்கள் மக்களுக்கு மொட்டையடிக்கும் போக்கினை C2H மாற்றும் என்று நம்பலாம். ஐம்பது ரூபாய்க்கு ஒரிஜினல் டிவிடி வாங்கி குடும்பமே படம் பார்க்க முடியும் என்பது நல்ல விஷயம்தானே?

வரவேற்பும், எதிர்ப்பும்!

ஹாலிவுட்டின் வீடியோ ஆன் டிமாண்ட் போன்ற நல்ல முயற்சி இது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இப்படியொரு வாய்ப்புக்காகதான் காத்திருக்கிறார்கள் என்கிறார் திரைப்பட ஆய்வாளரும், எழுத்தாளருமான ‘கருந்தேள்’ ராஜேஷ்.

“கமல் ஏற்கனவே விசுவரூபத்துக்கு இதன் சற்றே மாறுபட்ட வடிவத்தை முயன்றார். தியேட்டரில் வெளிவர வாய்ப்பே இல்லை என்று முடங்கிவிட்ட பல திரைப்படங்கள் (எந்த சிப்பிக்குள் முத்து இருக்கும் என்று யாருக்கு தெரியும்) மக்களை சென்றடையும். திருட்டு டிவிடி, டாரண்ட் பிரிண்டுகளை இனி புறக்கணித்து படமெடுத்தவர்களின் அனுமதியோடு வரும் இந்த படங்களை குடும்பத்தோடு அமர்ந்து வீட்டில் பார்த்து மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக தமிழ்ப்படங்களை வெளியானவுடனேயே பார்க்க முடியாத அயல்நாட்டு தமிழர்கள் இம்முயற்சிக்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.

சினிமாவில் புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதை தக்கவைத்துக் கொள்வதில்தான் சேரன் கவனம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் தரமான படங்கள் இருக்குமாறு அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். மோசமான படங்கள் நிறைய வந்துவிடும் பட்சத்தில் சேரன் தொடங்கியதின் நோக்கம் நிறைவேறாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது” என்கிறார் ராஜேஷ்.

கனடாவில் வசிக்கும் நட்ராஜ் ஸ்ரீராம், இந்த திட்டத்தால் எதுவும் மாறப்போவதில்லை என்கிறார்.

“அமெரிக்கா, கனடா நாடுகளில் வசிக்கும் பாதி தமிழர்களின் வீடுகளில் ஐ.பி.டிவி இருக்கிறது. தமிழ் டிவி சேனல் நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றை இங்கே நாங்களே தேர்ந்தெடுத்து பார்த்துக்கொள்ள முடிகிறது. தமிழ் மூவிஸ் என்றொரு சேனல் வைத்திருக்கிறார்கள். அதில் எல்லா படத்தையுமே வெளிவந்து ஒன்று, இரண்டு வாரங்களுக்குள் பார்த்துவிடுகிறோம்.

ஐ.பி. டிவிக்கு மாதாமாதம் பணம் செலுத்திவிடுவதால் அவர்கள் உரிமம் பெறாமல் படங்களை ஒளிபரப்பினாலும் அது எனக்கு எவ்வித குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்த போவதில்லை. அது போலவே தகுந்த உரிமம் பெற்ற டிவிடியை பார்ப்பதால் பெருமிதம் எதுவும் கூடுதலாக ஏற்படுமென்றும் தோன்றவில்லை.

யூட்யூப் மாதிரி வீடியோ ஷேரிங் தளங்களை சேரன் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை. இவர் கொடுக்கும் ஒரிஜினல் டிவிடியின் ஒரு காப்பியை அப்படியே இண்டர்நெட்டில் ஏற்றி, உலகத்துக்கே ஓசியாக கொடுக்கப் போகிறவர்களை எப்படி சமாளிக்கப் போகிறார்?” என்று இத்திட்டம் குறித்து கொஞ்சம் அவநம்பிக்கையோடே பேசுகிறார் நட்ராஜ்.

சுற்றுச்சூழலுக்கு கேடு?

மக்களுக்கு நேரிடையாக டிவிடி விநியோகிக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ‘பகீர்’ கிளப்புகிறார் எஸ்.கே.பி. என்ஜினியரிங் கல்லூரியின் தலைவரான எஸ்.கே.பி.கருணா.

“சேரன் என்னுடைய நண்பர்தான். திரையுலக நன்மைக்காக அவர் முன்னெடுக்கும் முயற்சியை வரவேற்கிறேன். ஆனால் அவரே சொல்லுவதை போல ஒரு திரைப்படத்துக்கு 25 லட்சம் டிவிடி வினியோகிக்கப்படுமானால், நூறு படத்துக்கு 25 கோடி டிவிடிக்கள். இந்த எண்ணிக்கையில் பாதி நிறைவேறினாலும் 12 கோடி டிவிடி குப்பைகள் தமிழகத்தில் குவிந்துவிடும். ஆறு மாதத்துக்கு 100 படம் என்றால் வருடத்துக்கு 24 கோடி டிவிடிகள்.

டிவிடி என்பது மனிதனுக்கு, நிலத்துக்கு, நீர்நிலைகளுக்கு கடும் அபாயம் விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்களை கொண்டது. C2H திட்டம் மூலம் உருவாக்கப்படும் கோடிக்கணக்கான டிவிடிக்கள் நம்முடைய கிராமப்புற, சிறுநகர சாலையோரக் குப்பைகளிலும் குளம் குட்டைகளிலும் கொட்டப்படும் அபாயம் இருக்கிறது. குப்பை மேலாண்மை, நீர் நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு போன்ற அத்தியாவசியமான பல விஷயங்களுக்கு இன்னமும் அர்த்தமே தெரியாத அரசும், மக்களும் இருக்கும் நமது மாநிலத்தில் இது போன்ற திட்டம், நாமே வலியச் சென்று வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய தற்போதைய சவால், ஈ வேஸ்ட் எனப்படும் லட்சக்கணக்கான செல்போன்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர், டெலிவிஷன், எல்சிடி திரைகள், கீ போர்டுகள், டிவிடி, சிடிக்கள் போன்ற குப்பைகளை பத்திரமாக சேகரித்து, பொதுமக்களிடம் இருந்து அப்புறப் படுத்தி, அவற்றை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்பதே? வழக்கம் போலவே, இதில் நாம் பெரிய தோல்வியை கண்டு வருகிறோம். ” என்று எச்சரிக்கிறார் கருணா.

தியேட்டர்கள் நிலை?

இதுபோல முன்பு முயற்சிக்கப்பட்ட திட்டங்களை எதிர்த்து, எப்படியெல்லாமோ தடுத்து நிறுத்திய தியேட்டர் உரிமையாளர்கள் நடப்புகளை கவனமாக உற்றுநோக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இம்முறை தயாரிப்பாளர்களும், படைப்பாளிகளும் சேரனுக்கு உறுதியான ஆதரவினை வெளிப்படையாக முன்வைத்திருப்பதால் அவசரப்பட்டு எதிர்நிலை எடுத்துவிட வேண்டாம் என்று தியேட்டர்காரர்கள் நினைத்திருக்கலாம். 3டி, ஐமேக்ஸ், டி.டி.எஸ், நவீன புரொஜெக்டர் திரையிடல் என்று விரைவாக தொழில்நுட்பரீதியில் மேம்பட்டு வரும் திரையிடல் தொழிலை வீட்டுக்கே சினிமா திட்டம் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு C2H கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை மாதிரிதான். பிறக்கட்டுமே, பார்ப்போம்.

------------------------------------------------------------------

எல்லாரும் நல்லா இருப்போம்!
இயக்குனர் சேரன் பேட்டி
தியேட்டர்களின் அதிகாரத்தை படைப்பாளிகள் கட்டுப்படுத்த நினைக்கிறீர்களா?

எவ்வகையிலும் தியேட்டரின் வியாபாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை. திரையரங்கில் படங்கள் வெளிவந்தாலும், இப்போதும் திருட்டு டிவிடி பரவலாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரி தியேட்டர் தாண்டி வெளியிடங்களில் எங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட, குறைக்க நினைக்கிறோம். ஏற்கனவே ‘லைசென்ஸ்’ இல்லாமல் நடைபெறும் தொழிலுக்கு, ‘லைசென்ஸ்’ வழங்கி திரையுலகில் ஏற்பட்டுவிட்ட ஓட்டையை அடைப்பதால் யாருக்கும் பாதிப்பு இருக்கப்போவதில்லை. இதுவரை திரையரங்கு தொடர்பானவர்கள் யாரும் எங்களை எதிர்க்கவில்லை. அப்படியிருக்கையில் இது எப்படி அவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது பெரிய திரையை மனதில் வைத்து உருவாக்கப்படுவது. அதை பரவலாக சின்னத்திரைக்கு கொண்டுச் செல்ல சினிமாக்காரர்களே முயற்சிப்பது சரியா?

ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு படத்தில் ஒரு கதை சொல்கிறோம். பெரிய திரை, சின்னத்திரை அனைத்திலும் மக்களை கவரும் விதமாகதான் ஒரு நல்ல படைப்பாளி சிந்திக்கிறான். திரை சிறியதாக இருந்தால் எங்கள் கலையின் தரம் குறையுமென்று நான் நம்பவில்லை.

இப்போதே டிவியில் திருட்டு டிவிடி வழியாகவோ, சேனல் வழியாகவோ பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படாத இந்த படைப்பு தொடர்பான கலை நெருடல், நாங்கள் முறைப்படி தயாரிப்பாளரின் அனுமதியோடு கொண்டுவரும்போதுதான் ஏற்படும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல.

தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே டிவிடி கொண்டுவந்து விட்டால் சேட்டிலைட் ரைட்ஸ் மதிப்பு படங்களுக்கு குறைந்துவிடாதா?

ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இருக்கிற படங்களுக்குதான் தியேட்டரும் கிடைக்கிறது. சேட்டிலைட் ரைட்ஸில் நல்ல தொகையும் கிடைக்கிறது. இப்போது சிறிய படங்களுக்கு என்ன தொகை சேட்டிலைட் ரைட்ஸில் கிடைக்கிறதோ, அதே தொகைதான் C2H திட்டத்தில் சேர்ந்தாலும் கிடைக்கும். யாரும் யாருக்கும் அள்ளி அள்ளி கொடுத்துவிடுவதில்லை. நாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய லாபத்தை நாங்கள் நியாயமான முறையில் பெற விரும்புகிறோம். திருட்டு டிவிடியில் பரவலாக விற்கப்பட்ட படங்களுக்கு சேட்டிலைட் ரைட்ஸ் விலை குறைக்கப்பட்டதாக ஏதாவது உதாரணம் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். நாங்கள் ஒரு முயற்சியை முன்னெடுக்கும் போது மட்டும் ஏன் இவ்வளவு லாஜிக் பார்க்கிறீர்கள்?

இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென்று ஏன் இந்த திட்டம்?

எல்லோருமே தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. இப்போதுகூட நீந்த முயற்சிக்காவிட்டால், எப்போதுமே நாங்கள் எதையும் செய்ய முடியாமல் போய்விடும். தமிழ் சினிமா துறை ஆரோக்கியமாக இல்லை. கடந்த ஆண்டு வெளியான படங்களில் வெறும் பத்து சதவிகித படங்கள்தான் லாபம் பார்த்தது அல்லது இழப்பை சந்திக்காமல் இருந்தது. நாங்கள் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அனைத்துத் தரப்பினரிடம் கலந்து பேசி நல்ல முடிவாக எடுத்திருக்கிறோம். C2H மூழ்கிக் கொண்டிருக்கிறவர்களை கரை சேர்க்கும் என்று நம்புகிறோம். நாங்கள் வாழ நாங்களே உருவாக்கியிருக்கும் திட்டம். இது யாருக்கும், எதற்கும் எதிரான திட்டமல்ல என்பதை அனைவரும் புரிந்துகொண்டால் போதும்.

மக்களுக்கு என்ன லாபம்?

படம் பார்க்கும்போது, பார்த்துக் கொண்டிருப்பது திருட்டு டிவிடி அல்ல என்கிற உணர்வோடு சந்தோஷமாக பார்க்கலாம். இந்த உரிமைகள் எல்லாமே படத்தின் தயாரிப்பாளருக்கே என்பதால், அவருக்கு நல்ல லாபம் கிடைத்து மக்களுக்கு நல்ல படங்களை தொடர்ந்து தர முயற்சிப்பார். நேரமில்லாததால்தான் நிறைய பேர் தியேட்டருக்கு வருவதில்லை என்று எங்கள் ஆய்வாளர்கள் சொன்னார்கள். அவர்களுக்கு நேரம் இருக்கும்போது, அவர்கள் விரும்பும் படம் தியேட்டரில் இருப்பதில்லை. மக்களுக்கும், சினிமாவுக்கும் இருக்கும் இடைவெளி எங்கள் திட்டத்தால் குறையும்.

------------------------------------------------------------------

திட்டம் குறித்த சினிமா பிரபலங்களின் கருத்து :

சீமான்
எடுத்த படத்தை திரைக்கு கொண்டுவருவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. சிதைந்து அழிந்துக் கொண்டிருக்கும் திரையுலகை காப்பாற்ற வேண்டும். இந்த திட்டம் மூலமாக சேரன் மிகப்பெரிய புரட்சியை முன்னெடுக்கிறார்.

பாரதிராஜா
என்னுடைய படங்கள் வந்த தடம் தெரியாமல் போவதற்கு காரணம் தியேட்டர்களில் நடக்கும் அரசியல்தான். படைப்பாளி என்பவன் சுதந்திர சிந்தனையாளன். நாம் எதை கொண்டு வந்தோம். அதை இழக்க. இது புதிய முயற்சி. முயற்சித்து வெற்றி காண்போம்.

பாக்யராஜ்
பூனைக்கு மணி கட்டி இருக்கிறார் சேரன். சினிமா மோசமான சூழலில் இருக்கிறது. சினிமா எடுப்பவர்கள் படுமோசமான நிலையில் இருக்கிறார்கள். அனைவரும் கரை சேரவேண்டும். இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

அமீர்
இது யாரையும் எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட முயற்சி இல்லை. வெளிவராமல் அவதிப்படும் திரைப்படங்களை இதன் மூலம் வெளியிட முடியும். திரையரங்கு கிடைக்காத படங்களை C2H தான் காப்பாற்ற முடியும்.

கேயார்
அருமையான பாதையை அமைத்திருக்கிறார் சேரன். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது.

(நன்றி : புதிய தலைமுறை)

6 comments:

 1. எஸ்.கே.பி.கருணா முன்வைக்கின்ற ஈ-வேஸ்ட், குப்பை மேலாண்மை, நீர் நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளை கண்டிப்பாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். C2H திட்டம் இப்பிரச்சனைகளையெல்லாம் மேலும் முற்ற வைத்துவிடும் அபாயமும் உள்ளது. வருடத்துக்கு 50 கோடி டிவிடிக்கள் குப்பைகளாக மாறும்போது, இத்திட்டம் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதில் ஐயமில்லை.
  எனக்கு மிகவும் பயமாக உள்ளது...... :(

  ReplyDelete
 2. //குப்பை மேலாண்மை, நீர் நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு போன்ற அத்தியாவசியமான பல விஷயங்களுக்கு இன்னமும் அர்த்தமே தெரியாத அரசும், மக்களும் இருக்கும் நமது மாநிலத்தில் இது போன்ற திட்டம், நாமே வலியச் சென்று வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகும்.//

  அருமையான கருத்து!

  ReplyDelete
 3. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 4. //எஸ்.கே.பி.கருணா முன்வைக்கின்ற ஈ-வேஸ்ட், குப்பை மேலாண்மை, நீர் நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளை கண்டிப்பாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.//

  நாம் புது gadgetகள் வாங்கும்போது ஈ-வேஸ்ட், குப்பை மேலாண்மை, நீர் நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளை கண்டிப்பாக ஆராய்ந்து பார்க்கயோசிக்கிறோமா என்பதும் கேள்வி.

  //யூட்யூப் மாதிரி வீடியோ ஷேரிங் தளங்களை சேரன் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை. இவர் கொடுக்கும் ஒரிஜினல் டிவிடியின் ஒரு காப்பியை அப்படியே இண்டர்நெட்டில் ஏற்றி, உலகத்துக்கே ஓசியாக கொடுக்கப் போகிறவர்களை எப்படி சமாளிக்கப் போகிறார்?”//

  டிவி ரிப் ஐ.பி.எல் வீடியோக்கள், கிரிக்கெட் ரசிகர்களால் யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டபோது, உரிய காப்புரிமை பெற்ற சான்றுகளை ஐ பி எல் அதிகாரிகள் யூடியூபில் அளித்து அத்தகைய விடியோக்களை 24 மணி நேரத்தில் நீக்கினர். மேலும் youtube சேனல் ஒன்றை உருவாக்கி ஐ பி எல் நிர்வாகத்தின் கீழ் ஐ பி எல் விடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டன. C2H ஐ ஆதரிக்க குரல் எழுவது போல தங்களுக்கே உரிய Youtube சேனலை உருவாக்க சினிமா உலகத்தினர் ஆதரவு எழுப்ப முன் வரலாம்.

  ReplyDelete
 5. இப்போதைக்கு C2H கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை மாதிரிதான். பிறக்கட்டுமே, பார்ப்போம்.

  ReplyDelete
 6. இதுபோன்ற முயற்சிகளை விட டிக்கெட் விலை குறைப்பு நடிகர்களின் சம்பளக் குறைப்பு போன்றவற்றை மேற்கொண்டாலே நிச்சயம் பலன் தரும்.

  ReplyDelete