6 மே, 2014

புரட்சி படும் பாடு

சில மாதங்களுக்கு முன்பாக நடந்த புரட்சிகர கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். புரட்சிகரமாக பேசிக்கொண்டிருந்த தோழர், முத்தாய்ப்பாக ஒரு புரட்சிகர கருத்தினை முன்வைத்தார். புரட்சிகர கூட்டம் அப்படியே மூக்கின் மேல் விரல் வைத்து புரட்சிகரமாக அதிசயித்தது.

“ஆதிசங்கரர் ஒரு கம்யூனிஸ்ட்”

இதை சொன்னதோடு மட்டுமில்லாமல் தன் கூற்றுக்கான புரட்சிகர ஆதாரங்களையும் அசைக்க முடியாத தர்க்க திறனோடு எடுத்துவைத்து பேசினார். இந்த தகவல் மக்கள் சீனத்தை எட்டி, அங்கே ஆதிசங்கரர் குறித்த புரட்சிகர ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்களில் நடந்து வருவதாக தகவல்.

மார்க்ஸ், லெனின், மாவோ படங்களையடுத்து ஆதிசங்கரரின் படத்தையும் சேர்த்து அச்சிட்டு தொலைக்கவேண்டுமோ என்று புரட்சிகரத் தோழர்கள் பகீர் ஆகிக்கொண்டிருந்த நிலையில், தோழர் ஆறுதலாய் இன்னொரு கூடுதல் கருத்தையும் சொன்னார். “ஆதிசங்கரர் கம்யூனிஸ்ட்டு என்பதற்காக சங்கரமடம் பொதுவுடைமைப் பாதையில் புரட்சிகரமாக செயல்படுவதாக அர்த்தமில்லை. அது பார்ப்பன பாசிஸ வதைக்கூடம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”

புரட்சிகர தோழரை புரட்சிகர பெருமையோடு பார்த்து புரட்சிகரமாக மெய்சிலிர்த்தேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சித்தமிழன், புரட்சிக்கலைஞர், புரட்சிதாசன், புரட்சிவெறியன், புரட்சிநேசன் என்று தமிழ்நாட்டில் புரட்சி தண்ணீர் பட்ட பாடாகிவிட்டாலும் இன்னமும் புரட்சி வருமென்ற நம்பிக்கை நமக்கு இல்லாமல் போய்விடவில்லை.

அதே புரட்சிகர தோழரின் அடுத்த புரட்சிகர கூட்டம் போன வாரம் நடந்தது. புரட்சிகர வேட்கையோடு குழுமியிருந்தோம். புரட்சிகர மைக்கை பிடித்த தோழர் புரட்சிகர ஆவேசத்தோடு புரட்சிகர கருத்துகளை தொடர்ச்சியாக புரட்சியாக முழங்கிக் கொண்டே இருந்தார். இந்த புரட்சிகர கூட்டத்திலும் ஒரு புரட்சிகர பிரகடனத்தை அறிவித்தார்.

“புரட்சி வராதுன்னு தெரியும். ஆனாலும் புரட்சி வரும்னு சொல்லி நாம மக்களை திரட்டி போராடிக்கிட்டு இல்லையா? அதுமாதிரிதான் இதுவும்....”

இந்த புரட்சிக் கூட்டத்திலாவது புரட்சிக்கான தேதியை அறிவிப்பார் என்கிற புரட்சிகர எதிர்ப்பார்ப்பில் புரட்சிகரமாக கூடியிருந்த தோழர்கள் சிலருக்கு இந்த புரட்சிகர அறிவிப்பு புரட்சிகர அதிருப்தியை தோற்றுவித்தது. உடனடியாக புரட்சிகர வெளிநடப்பு செய்து, அருகிலிருந்த தோழர் டீக்கடையில் (நாயர்கள் பெரும்பாலும் தோழர்கள்தான்) புரட்சிகர தேநீரும், புரட்சிகர சிகரெட்டும் அடித்தவாறே அடுத்தக்கட்ட புரட்சிகர நடவடிக்கைகளை புரட்சிகரமாக ஆலோசித்தார்கள்.

ஒரு தோழர் முன்வைத்த புரட்சிகர யோசனைதான் ஹைலைட்.

“பேசாம புரட்சித்தலைவியோட இயக்கத்துலே இணைஞ்சிடலாமா?”

5 கருத்துகள்:


 1. உண்மையிலேயே சங்கரர் புரட்சி செய்தவர் தான் .
  ஊர் எதிர்ப்பை மீறி தன் பூணூல் உபநயன வைபவத்தை
  தன விதவைத் தாய் கொண்டு செய்தவர்.
  பொதுவான மரபு, தந்தை/ தாத்தா தான் பூணூல் போடும் பையனுக்கு
  காதில் மும்முறை காயத்ரி மந்திரம் கற்றுக் கொடுப்பார்.

  ஆனால், ஒரு கட்டுடைப்பவராக , புரட்சி யாளராக சங்கரர்
  தன் விதவைத் தாயை காயத்ரி மந்திரம் கற்றுக் கொடுக்கச் செய்தவர் .

  இன்னொரு புரட்சி, ஊர் எதிர்ப்பை மீறி, தன வீட்டின் பின் புறமே ஆற்றைக் கொண்டு வந்தவர் 

  பதிலளிநீக்கு
 2. உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையா ??? But U r Rocking யுவா...

  பதிலளிநீக்கு
 3. கம்முநிச்டோ இல்லையோ இட ஒதுக்கீட்டின் தந்தை ஆதி சங்கரர் தான்

  1200 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் தான் பிறந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்த பத்ரிநாத் கோவிலில் முழு ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தியவர்.இன்று வரை அவர் சாதியினர் மட்டும் தான் அங்கு தலைமை குருக்கள்.
  அவர் ஆரம்பித்த மடங்களிலும் இன்றுவரை குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முழு இடஒதுக்கீடு பின்பற்ற படுகிறது.
  உலகில் வேறு எங்கும் குறிப்பிட்ட சாதிக்கு என்று இட ஒதுக்கீடு கிடையாது.குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் குறிப்பிட்ட பதவி எனபது தான் இருந்தது.சாதிக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர் ஆதி சங்கரர்

  பதிலளிநீக்கு
 4. ஆதிசங்கரர் செய்த புரட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் திரு. ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்

  பதிலளிநீக்கு