28 ஏப்ரல், 2014

வாயை மூடி பேசவும்

‘உனக்கு எது சரின்னு படுதோ, அதை செய்’ படம் சொல்லும் மெசேஜ் இதுதான். எனவே இயக்குனருக்கு சரியென்று பட்டதை எடுத்திருக்கிறார்.

பனிமலை என்றொரு பச்சைப்பசேல் ஊர். பேசினால் பரவும் வியாதி திடீரென்று வருகிறது. எனவே இங்கு பேச்சுரிமைக்கு அரசு தடை விதிக்கிறது. காமிக்கலான கலக்கல் ஒன்லைனர். வாயாடிகளை கலாய்ப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இயக்குனர் களமிறங்கி விட்டதால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆடி தீர்க்கிறார். இந்த ஐடியா மட்டுமே கரை சேர்த்துவிடுமென்று அவருக்கு மூடநம்பிக்கை.

திருவாரூர் தேர் மாதிரி முதல் பாதியில் படம் நகரவே மறுக்கிறது. ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். இயக்குனரே அறிவிப்பாளராய் ‘நடித்திருக்கும்’ டிவி க்ளிப்பிங், நடிகர் பூமேஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் நல சங்கம் என்கிற எழவெல்லாம் எதற்கென்றே தெரியவில்லை. ‘மொழி’ மாதிரி உணர்ச்சிப்பூர்வமான படமாக வந்திருக்க வேண்டியது, இந்த கந்தாயங்களால் ‘தெனாலிராமன்’ ஆகிவிட்டது.

துல்ஷார் துடிப்பாக இருக்கிறார். சிநேகமாக சிரிக்கிறார். நன்றாக நடிக்க அவரது அப்பா கொஞ்சம் டிரைனிங் கொடுக்க வேண்டும். இந்த சப்பை கேரக்டர் செய்ய நஸ்ரியா தேவையா? ஹீரோயினைவிட ஹீரோயினின் சித்தியாக வரும் மதுபாலாவை பார்த்து, யூத் விசில் அடிக்கிறார்கள். இந்திய இளைஞர்களிடையே வெகுவாக பரவிவரும் இந்த ‘ஆண்டிமேனியா’தான் நமோ அலையின் ஒரே சாதனை போலிருக்கிறது.

சார்லி சாப்ளின் பட பாணியில் நகரும் இரண்டாம் பாதி சுவாரஸ்யம். ஆனால் இதைவிட முழுநீள சுவாரஸ்யமாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பாகவே கமல் – சிங்கீதம் கூட்டணி ‘பேசும்படம்’ படத்தில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்கள்.

சின்ன சின்ன சிறுகதை மாதிரி நல்ல குட்டி ஐடியாக்கள். இந்த படம் எடுப்பதற்கு பதிலாக இயக்குனர், நான்கைந்து குறும்படங்கள் எடுத்திருந்தால், மக்களிடம் நன்றாக பேசப்பட்டிருப்பார்.

டைம்பாஸுக்காக ஒரு முறை பார்க்கலாம். ஒருவேளை கோடைவிடுமுறை குழந்தைகளுக்கு பிடிக்குமோ என்னவோ?

5 கருத்துகள்:

 1. //டைம்பாஸுக்காக ஒரு முறை பார்க்கலாம். ஒருவேளை கோடைவிடுமுறை குழந்தைகளுக்கு பிடிக்குமோ என்னவோ? //
  சரி, என் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. நமோவின் மேலுள்ள வெறுப்பு "ஆன்டிமேனியா "வாக வெளிப்படுகிறது. ......

  பதிலளிநீக்கு
 3. இந்த ‘ஆண்டிமேனியா’தான் நமோ அலையின் ஒரே சாதனை

  பதிலளிநீக்கு
 4. எல்லா கட்டுரகைளிலும் உங்கள் "தீரா விட " பற்று வெளிப்படுகிறது.

  பதிலளிநீக்கு