31 மார்ச், 2014

லெஜெண்ட்

கால்கள் இரண்டையும் சேர்த்துவைத்து நேராக நிமிர்ந்து நிற்கமுடியாவிட்டால் உங்களை ஸ்கூல் என்.சி.சி.யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாருங்கள். பாலகிருஷ்ணா சாமியின் ரீமேக்கான லக்‌ஷ்மி நரசிம்மாவில் டெபுடி கமிஷனர். பரமவீர சக்ராவில் இராணுவ மேஜர். ரசிகர்களும் அவரை போலிஸாகவும், இராணுவ மாவீரனாகவும் ஏற்றுக்கொண்டு கொண்டாடி தீர்க்கிறார்கள். உங்களுக்கு என்ன சாமி போச்சு?

பாலகிருஷ்ணாவுக்கு வயது ஐம்பத்தி மூன்று. இருபத்தைந்து வயதை எட்டிவிட்ட பெண்கள் கூட அவருக்கு ஹீரோயினாக முடியாது. சுமோவை சுண்டுவிரலால் தூக்கியடிக்கிறார். கிராபிக்ஸோ கேமிரா டெக்னிக்கோ அல்லது என்ன எழவோ. மைக்கேல் ஜாக்ஸனைவிட சிறப்பாக மூன்வாக் செய்கிறார். அவரது விரல் லேசாக தொப்புளில் பட்டதுமே நயன்தாராவே விரகதாபம் கொள்கிறார். பாலைய்யா தொடையை தட்டினால் ஆகாயத்தில் பறக்கும் விமானமே ஆட்டம் காண்கிறது. கண்ணசைவில் கடல் கொந்தளிக்கிறது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை வரிசைகட்டி வந்து இவரிடம் பிச்சையெடுக்கச் சொல்லுங்கள்.

சென்னையில் பிறந்துவளர்ந்த பாலகிருஷ்ணா தன்னுடைய அப்பா என்.டி.ஆரின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பா ஆரம்பித்த கட்சியான தெலுங்குதேசம் அவருக்கு உயிர். தன்னுடைய மூத்த மகளை அக்கா மகனுக்கே மணம் முடித்து கொடுத்தார். சம்பந்தி வேறு யாருமல்ல. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். அவருடைய பின்னணி புரியாமல் அவரது படத்தை பார்க்கும் மாபாவிகள் மொக்கை என்று விமர்சிக்கிறார்கள். பாலைய்யாவின் பாத்திரங்களை ஆந்திர அரசியல், சமூக சூழல் புரிந்தவர்களால் மட்டுமே ரசிக்க முடியும். அவர் ஏன் ஆரஞ்சு கலரில் பேண்ட் போடுகிறார், கிளிப்பச்சை கலரில் சட்டை அணிகிறார், ஊதா கலரில் பெல்ட் மாட்டியிருக்கிறார் என்பதன் பின்னாலெல்லாம் நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை. நரம்பு புடைக்க, கன்னத்து தசைகள் அதிர அவர் பேசும் வசனங்கள் வெறும் சினிமா வசனங்கள் அல்ல. ஒவ்வொரு ஆந்திர குடிமகனின் உள்ளத்துக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு. இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத தமிழ் ஸ்டுடியோ அருண்கள் ‘சினிமா பாரடைஸோ’விலேயே தங்கிவிடலாம். தெலுங்கு படங்களை பார்க்கும் தற்கொலை முயற்சியில் குதிக்கவேண்டியதில்லை.

‘லெஜெண்ட்’ பாலையாவின் தொண்ணூற்றி எட்டாவது படம். நேற்றைய மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் அரசியல் பஞ்ச் பேசி க்ளாப்ஸ் அள்ளிக் கொண்டிருக்கையில், வெயிட்டான பேக்கிரவுண்ட் வைத்திருக்கும் பாலைய்யாவுக்கு சமீபமாக சொல்லிக்கொள்ளும்படி ஹிட் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலுக்கு வெளிவந்து பாக்ஸ் ஆபிஸை சுக்குநூறாக்கிய சிம்ஹாதான் கடைசி ஹிட். என்.டி.ஆருக்கு பிறகு உருவெடுத்த சிரஞ்சீவி, நாகார்ஜூனா, பவன்கல்யாண், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் என்று தெலுங்கு சினிமாவின் அடுத்தடுத்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஒரே ஒருவர்தான் நிரந்தர போட்டி. தி ஒன் அண்ட் ஒன்லி பாலைய்யா.

ஆந்திரா இரண்டாக பிரிக்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படிப்பட்ட பாலைய்யா என்ன செய்யவேண்டுமோ அதைதான் லெஜண்டில் செய்திருக்கிறார். காட்டுத்தனமான கொலைவெறியாட்டம். சிம்ஹாவில் பாலைய்யாவுக்கு ரீலைஃப் கொடுத்த அதே பொயப்பட்டி சீனுதான் இயக்குனர். ஒரு மாஸ் ஹீரோவை எப்படி புரொஜெக்ட் செய்யவேண்டும் என்கிற நாடி தெரிந்த இயக்குனர். ரவிதேஜாவை தன் அறிமுகப்படமான பத்ராவிலேயே ஷார்ப்பாக தீட்டியவர். ஜூனியர் என்.டி.ஆரின் மிருகவெறிப் படமான ‘தம்மு’தான் அவருடைய முந்தைய படைப்பு.

தெலுங்கில் இப்போது புது டிரெண்ட். ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள். இவ்வருட தொடக்கத்தில் இந்த ஃபார்மேட்டில் வெளிவந்த ராம்சரணின் ‘எவடு’ சூப்பர்ஹிட். ‘லெஜண்ட்’டும் அதே வடிவம்தான். டோலிவுட் படங்களில் ஹீரோவின் அறிமுகக் காட்சிக்குதான் கிரியேட்டிவ்வாக இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் டிஸ்கஷனில் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். களேபரமாக, இதுவரை உலக சினிமாவில் வந்திருக்காத காட்சியாக அந்த பில்டப் அமைந்தால்தான் ரசிகர்களிடம் எடுபடும். லெஜண்டில் ஒவ்வொரு சண்டைக் காட்சியின் தொடக்கத்திலும் ஒன்றுக்கு ஆறாக அதகள பில்டப். பாலையாவுக்கு மட்டுமல்ல, காமெடியன் பிரம்மானந்தத்துக்கு ‘பாட்ஷா’ லெவல் (பாட்ஷா லெவலென்ன, பாட்ஷாவேதான்) பிளாஷ்பேக் வைத்து அமர்க்களம் செய்திருக்கிறார்கள்.

பாலையா டேன்ஸில் கொஞ்சம் கூடுதலாக காண்சன்ட்ரேட் செய்யக்கூடியவர். பாடல் காட்சிகள் வித்தியாசமான லொகேஷன்களில், செம தீமில், அட்டகாசமான நடன அசைவுகளோடு அமையவேண்டும் என்று ஆசைப்படக்கூடியவர். ஆனால் ஆந்திராவின் இளையதலைமுறை ரசிகர்கள் இவரது நடனத்தை காமெடிக் காட்சியாகதான் பார்க்கிறார்கள். இந்த வரலாற்று சோகத்தையும் முற்றிலுமாக துடைத்தெறிந்திருக்கிறது லெஜண்ட். இப்படத்தில் ஆடுபவர் பாலகிருஷ்ணாவா அல்லது ஜூனியர் என்.டி.ஆரா என்று கையை கிள்ளி பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது முதுமையையும் தாண்டி ரிஸ்க் எடுத்து, டூப் போடாமல் அசுரத்தனமான அசைவுகளை அனாயசமாக செய்திருக்கிறார்.

இங்கே ‘தல’யோட பைக்கை காட்டினாலேயே விசில் அடிக்கிறார்கள். ‘தல’க்கு மட்டும்தான் பைக்கே ஓட்டத்தெரியும் என்று தமிழர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை. பாலைய்யா பைக், கார், ரயில், குதிரை, ஹீரோயினையெல்லாம் அசால்டாக ஓட்டுகிறார். ப்ளைட் மற்றும் கப்பல் ஓட்டக்கூடிய காட்சிகள் இல்லாததுதான் படத்தின் ஒரே குறை.

கதை?

அதை விட்டுத்தள்ளுங்கள். இங்கே கே.எஸ்.ரவிக்குமார், ஹரியெல்லாம் நிறைய செய்துவிட்ட கதைதான். ஆனால் ட்ரீட்மெண்ட் பின்னி பெடல் எடுக்கிறது. பரபர திரைக்கதை. போதுமான இடைவெளிகளில் சூப்பர் பாடல்கள். ரொமான்ஸ். ஆக்‌ஷன் என்று அமர்க்களமான மசாலா. பி அண்ட் சி ஏரியாவின் அதிரடி பேட்ஸ்மேனான பாலகிருஷ்ணா இம்முறை மல்ட்டிப்ளக்ஸிலும் சிக்ஸர்களாக விளாசியிருக்கிறார். தன்னுடைய அரசியல் மூவ் அடுத்து என்னவென்று இறுதியில் ரசிகர்களுக்கு க்ளூவும் கொடுத்திருக்கிறார். Balaiah rules the tollywood summer!

லெஜண்ட் : மரண கொண்டாட்டம்!

6 கருத்துகள்:

 1. வார்த்தையிலே படத்தின் தீவிரம் தெரிகிறது ! இவையாவும் உண்மையாகும் பட்சத்தில் உங்களுக்கும் வெற்றிதான் !

  பதிலளிநீக்கு
 2. நாளைக்குப் போட வேண்டிய பதிவு !

  பதிலளிநீக்கு
 3. Night Shiftல பாலையாவின் அதிரடி சண்டை காட்சிகளை youtubeல் பார்த்து ரசித்து (சிரித்து) ob அடித்து கொண்டு இருந்தது நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
 4. எனக்கு நினைவுத் தெரிந்து பல வருடங்களுக்கு முன் ஒரு பாலகிருஷ்ணா படம் பார்த்தேன்.படத்தின் பெயர் தெரியவில்லை,அதில் அவர் தன் தோடையைத் தட்டி ஒரு ரயிலயே திருப்பி அனுப்புவார்.அப்ப தல தெறிக்க ஓடிவந்தவன் தான் அதற்குப் பிறகு தெலுங்குப் படங்கள் பக்கமே போகவில்லை.

  பதிலளிநீக்கு
 5. என்ன ஆச்சு யுவா? உங்ககிட்டே இருந்து பதிவே காணோமே ? நிறைய எழுதுங்க ப்ளீஸ் . நான் உங்களுடைய தீவிர ரசிகை.

  பதிலளிநீக்கு
 6. நான் படித்த உங்களின் முதல் பதிவு இது.. உங்களின் நடை இயல்பாக இருக்கிறது.. ஒரு சின்ன சந்தேகம் ......நீங்கள் பாலையாவை புகழ்கிறீர்களா??? கலாய்க்கிறீர்களா???

  பதிலளிநீக்கு