30 டிசம்பர், 2013

ஆ.ராசா எனக்கு அக்கா மகன்!

வருடத் தொடக்கமாக இருக்குமென்று நினைவு. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அந்த டீக்கடையில் அமர்ந்து, அண்ணன் சிவராமனோடு பேசிக்கொண்டிருந்தேன். கடை வாசலில் திடீரென்று விசில் சப்தம். “தெனந்தோறும் ரிச்சா ஓட்டி பொழைக்கிறேன்” கணீரென கானாவோடு கடைக்குள் நுழைந்தார் அந்த விசிலவன்.

கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார். இடையில் மட்டும் ஜட்டியா அல்லது டவுசரா என்று இனங்கண்டு கொள்ள முடியாத உடை. குள்ளமென்று சொல்ல முடியாது. நடுத்தரமான உயரம். நல்ல கருப்பு. எண்ணெய் காணாத தலை.

எங்களுக்கு அருகில் வந்து அமர்ந்தார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ஓடு ராஜா” வாத்யார் பாட்டை அச்சு அசலான டி.எம்.எஸ். குரலில் பாட ஆரம்பித்தார். “அந்த காலத்துலேயே என்னாமா பாடியிருக்காரு பாரு. அசீத், விசய்க்கெல்லாம் இப்படி பாடுறதுக்கு வக்கிருக்கா?” என்று ஆரம்பித்தார்.

“நல்லா பாட்டுலாம் பாடுவேன். டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., சிதம்பரம் ஜெயராமன்னு எல்லாரு வாய்ஸும் நம்ம தொண்டைலே வரும்” சொல்லிவிட்டு “வாராய், நீ வாராய்” என்று லேசாக நாக்கை மடக்கி, சுத்தமான ராகத்தில் பாடினார்.

இடையில், “மாஸ்டர் ஒரு டீ!”

“பழைய பாக்கி என்னாச்சி?”

“டேய், வாத்யார் இல்லைன்னா மலையாளத்தானுங்கள்லாம் இங்கே வந்து இந்த அதட்டல் போடுவீங்களா? ஒழுங்கா டீயை கொடுர்றா. எஸ்.ஐ. வந்ததுமே எல்லாத்தையும் செட்டில் பண்ணிடறேன்”

“அதெல்லாம் கிடையாது. பழசுக்கு பதில் சொல்லிட்டு, புதுசா டீ கேளு” மாஸ்டரும் விடுவதாக இல்லை. சிவராமன் தன் கணக்கில் அவருக்கு ஒரு டீ சொன்னார்.

“எங்கே வேலை பார்க்குறீங்க? இங்கன உங்களையெல்லாம் பார்த்ததே இல்லையே?” என்று பேச ஆரம்பித்தார்.

“என்னை இங்கே எல்லாரும் எம்.ஜி.யாருன்னு கூப்பிடுவாங்க. வாத்யார்னு அவ்ளோ வெறி. ஒரு பாட்டு விடாம மனப்பாடமா பாடுவேன். பாடிக்காட்டறேன் பார். இந்த பாட்டு வந்தப்போ, நீங்கள்லாம் அம்மாவோட வவுத்துக்குள்ளே கூட இருந்திருக்க மாட்டீங்க....”

“அச்..ச்..சம் என்ப்பது மடையடாஆஆ.... அஞ்சாமை திராவிடர் உடமையடா.... ஆஆஆஅ... அஞ்சாமை திராவிடர் உடமையடா... டொக்.. டொக்.. டொக்.. டொக்...”

டீ வந்ததுமே கல்ப்பாக அடித்தார். மந்திரிகுமாரி டயலாக் ஒன்றை அப்படியே ஏற்ற, இறக்கத்தோடு படித்தார். “கலிஞ்சரு மாதிரி எழுதுறதுக்கு எவன் இருக்கான்? தமிழு.. தமிழு.. அருவி.. சொற்பொழிவு... பொன்முடி பார்த்திருக்கியா? பாவேந்தர் வசனம். அப்படியே காதல் கொட்டும்” அந்தப் படத்திலிருந்தும் ஒரு டயலாக்கை எடுத்துவிட்டார்.

“படம்னா படம்.. அது ரத்தக்கண்ணீருதான். அடியே காந்தா...” எம்.ஆர்.ராதா வாய்ஸில் பேசினார்.

“சினிமான்னா அம்புட்டு ஆசை. வாத்யாருன்னா இவ்ளோ (கைகளை அகல விரித்துக்காட்டி) உசுரு. அதாலேதான் அப்பவே மெட்ராசுக்கு வந்தேன். ரிச்சா ஓட்டுனேன். எழுபத்திரெண்டிலே கலைஞ்சர் ஃப்ரீயா ரிக்ச்சா கொடுத்தாரு. வாத்யாரு ரெயின்கோட், ஷூவெல்லாம் வாங்கித் தந்தாரு. லவ் மேரேஜி. வைஃபுக்கு நடக்க வராது. விதவைங்க, ஊனமுற்ற பெண்களை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நல்லா இருக்குற இளைஞர்கள் தயாரா இருக்கணும்னு பெரியார் பேசினாரு. நான் அவரை ஃபாலோ பண்ணேன். நாந்தான் இப்படியிருக்கேன். என் பசங்க நல்லாதான் இருக்காங்க. வியாசர்பாடிலே வீடு. வீடு கிடையாது குடிசை”

வரிசைக்கிரமமாக இல்லாமல் விட்டு விட்டு பேசினார். இடையிடையில் பாடத்தொடங்கி விட்டார். “தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்.... வாத்யார் படத்துலே சூப்பரா கார் ஓட்டுவார். ஒரு சீக்ரட் சொல்றேன் கேட்டுக்கோ. நெஜத்துலே அவரு கார் ஓட்டுனதே இல்லை”

“இன்னொரு டீ சாப்புடலாமா?” சிவராமன் கேட்டார்.

“வாணாம். நா சொல்றதை கேளு. ஆ.ராசா தெரியுமா? அப்படி சொன்னா தெரியாது. ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னு சொன்னாதான் தெரியும். என் அக்கா மவன்தான். வேணும்னா யாரையா கேட்டு பாரு. நா சொல்றேன். என் மருமவன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது. அவ்ளோ பணம் சம்பாதிக்கிற ‘தெரவசு’ இருந்தா, ராசாவோட சொந்த பந்தமெல்லாம் ஏன் இப்படி இருக்கப் போறோம்? அநியாயமா பலி போட்டுட்டானுங்க”

எனக்கு ஆச்சரியம் அளவற்றுப் போனது. வெயிட்டான ஒரு ‘ஸ்டோரி’ ரெடியென்று பரபரப்பானேன். திடீரென்று ஏதோ ஒரு அறச்சிக்கல். இவரைப் போய் எதற்கு எக்ஸிபிஷன் ஆக்க வேண்டும் என்று தோன்றியது.

“இப்போ என்னண்ணா பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

“தோ.. இந்த ஸ்டேஷனுலேதான் வேலை பார்க்குறேன். பெருக்குறது, துடைக்கிறதுலே தொடங்கி எல்லா வேலையும் நான்தான். அய்யாமாருங்க டெய்லி துட்டு கொடுத்துடுவாங்க. ‘சரக்கு’ செலவு போவ மீதி காசு வூட்டுக்கு. இந்த ஸ்டேசனுக்கு வராத வி.ஐ.பி.ங்களே இல்லை. ஐஜிக்கெல்லாம் என்னை நல்லாத் தெரியும். வயசாயிடிச்சி. எனக்கு இன்னா வயசிருக்கும்னு நெனைக்கிறேன். எழுவது கிராஸ் பண்ணிட்டேன்னு நெனைக்கிறேன். ரிச்சா ஓட்டமுடியாது. ஆட்டோலாம் வந்ததுக்கப்புறம் ரிக்ச்சாவுக்கு கஸ்டமரும் கிடைக்கிறதில்லே”

சொல்லிவிட்டு மவுனமாக இருந்தார். நாங்களும் எதுவும் பேசவில்லை. மவுனத்தை உடைக்கும் விதமாக “காலங்களில் அவள் வசந்தம்” என்று பி.பி.எஸ்.ஸை பிரதியெடுத்து பாட ஆரம்பித்தார்.

“உலகத்துலேயே சந்தோஷமான மனுஷனை எங்காவது பார்த்திருக்கியா? இப்போ பார்த்துட்டே. நாந்தான் அது. ஸ்டேஷன்லே தேடுவாங்க. கெளம்புறேன். டீ வாங்கிக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்” பகபகவென சிரித்தவாறே சொல்லிவிட்டு கிளம்பினார்.

“அசல் திராவிடன்” என்றார் சிவராமன்.

பிற்பாடு இவரைப் பற்றி வெளியில் விசாரித்தேன். எங்கள் அலுவலக வாசலில் டீக்கடை வைத்திருப்பவர் பெரம்பலூருக்கு பக்கத்தில் குன்னத்தூர்காரர். அதிமுககாரர். அண்ணன் ஆ.ராசா பற்றி நிறைய பேசுவார். “நீ பார்த்தது அ.ராசாவோட தாய்மாமன்தான்னு நெனைக்கிறேன். மயிலாப்பூர் ஸ்டேஷனில்தான் இருக்காரு. வியாசர்பாடி ஊடுன்னு சொன்னதெல்லாம் கரெக்டுதான்” என்றார் அவர்.

இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் முகம்கூட சரியாக நினைவில்லை. ஆனால் இந்த ஆண்டு நான் சந்தித்த மனிதர்களிலேயே சிறந்த மனிதர் அவர்தான்.

10 கருத்துகள்:

 1. ஊடகங்களில் நாம் பார்ப்பதற்கும், அதன் உண்மைக்கும் நிறையவே இடைவெளி இருக்கிறது. இன்றைய அம்மா அரசில் அமைச்சருக்கு ஒப்பான பதவி அவருக்கு, 25 ஆயிரம் விளம்பரம் கொடுப்பதற்கு, பணம் இல்லாமல் பத்தாயிரம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி 15 ஆயிரத்தை பிறகு தருவதாக சங்கேஜத்துடன் கூறினார். இத்தனைக்கும் அவர் அலுவலகத்திற்கு சைரன் வைத்த வண்டியில்தான் வந்தார்....!

  ராசா பலி ஆடு என்பது ஊரறிந்த உண்மை...!

  பதிலளிநீக்கு
 2. அவர் கூட படம் எடுக்கலையா பொக்கிஷம் ஆயிருக்குமே

  பதிலளிநீக்கு
 3. பெரம்பலூர் அருகே உள்ள குன்னத்துகாரர் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த பெயரில்தான் அங்கே ஒரு ஊர் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. //பெரம்பலூர் அருகே உள்ள குன்னத்துகாரர் என்று இருக்க வேண்டும் //

  திருத்திட்டேன் சார்

  பதிலளிநீக்கு
 5. I thought of it. A.RASA is very good person.Media is trying to spoil the image of DMK ( incuding PT tv ) .Yuva, thanks for your timely write up. Arvind

  பதிலளிநீக்கு
 6. பெரிய பதவிகளை வகித்து விட்டு கடைசி காலத்தில் மிகப்பெரிய கெட்ட பெயரோடு ரிடையர் ஆன (நேர்மையாக அல்லது பொழைக்க தெரியாமல்) பல தலித் ராசாக்களை பார்த்திருக்கிறேன்.அவர் வீட்டிலேயே மரியாதை இருக்காது. சைடுல சம்பாரிக்க தனி தில் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. நான் போனவருடம் சென்னை மாநகர போக்குவரத்துகழக பேருந்தில் ஒரு டிரைவர் 'ஆ.ராசா என் சொந்தக்காரர்தான்...ஆனா ஒண்ணும் கண்டுக்கமாட்டான்'னு சொன்னது நினைவுக்கு வருது...

  பதிலளிநீக்கு
 8. It doesn't mean A.Raja has not looted money from Spectrum Allocation. It has violated the rules and when he has questioned about this he said "P.M and F.M knows about this". As a reasonable and prudent person he should have done some justice to his portfolio............

  பதிலளிநீக்கு