December 16, 2013

பத்ரியின் அழும்பு

‘தமிழ் ஊடகங்களின் அழும்பு’ என்று பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) அருமையாக எழுதியிருக்கிறார். காமன்மேனாக அதை வாசித்ததுமே எனக்குள்ளும் எரிமலை வெடித்தது. ஆனால், இதை பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) எழுதியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியத்தை தருகிறது. ஊடகங்கள் எப்படி இயங்குகிறது என்பதின் இன்னொரு பக்கத்தையும் அறிந்தவர் அவர். என்னைப் போன்ற ஏராளமான ஊடகத் தொழிலாளிகளோடு நெருக்கமாக பேசக்கூடியவர்.

க்ரிக் இன்ஃபோ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் அவர். ‘லைவ்’வில் தங்களுடைய ‘லோகோ’ தெரியவேண்டும் என்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு கோடி செலவழிக்கிறது என்பது பத்ரிக்கு (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) தெரியாமல் இருக்காது. Branding குறித்த பரவலான அறிவு அவருக்கு இருக்கிறது. நான் கிழக்குக்காக எழுதிய புத்தகமான ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ நூலை மிகச்சிறப்பாக எடிட் செய்தவரே அவர்தான்.

மேலும் அவரே ‘ஆழம்’ என்றொரு பத்திரிகையையும் நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான புத்தகங்களை ‘நியூ ஹாரிசன் மீடியா’ குழுமத்தின் சார்பாக பதிப்பித்த பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்), அப்புத்தகங்களின் பின்னட்டையில் எழுத்தாளர்களுக்கு தரும் அறிமுகத்தின்போது, எழுத்தாளர்கள் பணியாற்றும், நடத்தும் நிறுவனத்தின் பெயரையும் சேர்த்து பதிப்பித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) குறிப்பிட்டிருக்கும் விஷயம் நிகழ்ந்தது குங்குமம் தோழி பத்திரிகையில். பத்ரியின் (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) சட்டையில் இருந்த கிழக்கு லோகோவை அழிக்கச் சொல்லி நிச்சயமாக தினகரன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ரமேஷ் சொல்லியிருக்க மாட்டார். தோழியின் ஆசிரியரான வள்ளிதாசனுக்கு, பத்ரியின்  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) சட்டையில் இருந்த லோகோ பற்றி தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. உண்மையில் பத்திரிகையின் மேல்மட்டத்தில் இயங்குபவர்களுக்கு இதெல்லாம் ‘சில்லி’ மேட்டர். அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) இப்படி ஒரு விதிமுறையை விதித்திருக்கிறார் என்று என்னைப் போன்ற நடுவாந்திர பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் கூட இதைப்பற்றியெல்லாம் அவர்களிடம் பேசமுடியாது. இம்மாதிரி சில்லி மேட்டரை ஒரு பெரிய பிரச்சினையாக எடிட்டோரியல் மீட்டிங்கில் விவாதிக்க முற்பட்டோமானால், “நீயெல்லாம் வேலைக்கே லாயக்கு இல்லே” என்று துரத்திவிடுவார்கள்.

என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. அங்கு பணிபுரியும் லே-அவுட் ஆர்ட்டிஸ்டிடம் எப்போதோ ஏதோ ஒரு நிறுவனத்தின் சின்னத்தை அழிக்க சொல்லியிருப்பார்கள். அதற்கு தகுந்த காரணம் இருந்திருக்கும். அந்த லே-அவுட் பணியாளர் இதையே தன் பணிக்கான standardising ஆக எடுத்துக் கொண்டிருப்பார். எந்த போட்டோ வந்தாலும், அதில் ஏதாவது ‘லோகோ’ இருக்கிறதா என்று உற்றுப்பார்த்து, அதை அழித்துவிடுவார். அல்லது லே-அவுட்டில் ஒரு படத்தை இடும்போது வண்ணச்சேர்க்கைக்கு ஒட்டாமல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட இடத்தில் திருத்தங்கள் செய்வது அவரது உரிமை. பத்திரிகை தயாரிக்கும் பணியில் இருக்கும் issue incharge (பொதுவாக பொறுப்பாசிரியர்கள், துணை ஆசிரியர்கள் இப்பொறுப்பில் இருப்பார்கள்) கூட இதையெல்லாம் கேள்வி கேட்க மாட்டார். கண்டுகொள்ள மாட்டார். பல பத்திரிகைகளில் அரசியல்வாதிகளின் கரைவேட்டியின் ‘கரை’ கூட வாசகர்களுக்கு உறுத்தும் என்று அழிப்பதுண்டு. இது வழக்கமான நடைமுறைதான். இதற்குப் பின்னால் பத்திரிகை நிர்வாகத்துக்கு ஏதேனும் பாலிசியோ, உள்நோக்கமோ இருக்குமென்று சந்தேகிப்பதில் அர்த்தமேயில்லை.

தினகரன் குழுமமும் ‘சூரியன் பதிப்பகம்’ என்கிற பெயரில் ஒரு பதிப்பகம் நடத்துகிறது. எனவே தங்களது போட்டி நிறுவனங்களின் ‘லோகோ’ advertorial எனப்படும் paidnewsகள் மற்றும் விளம்பரங்கள் தவிர்த்த வாசகர்களுக்கான பக்கங்களில் இடம்பெறக்கூடாது என்று ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

நீங்கள் நாளிதழ்களில் வரும் சினிமா விளம்பரங்களில் இதை கண்டிருக்கலாம். “அருமையான ஆக்‌ஷன் திரைப்படம் – நன்றி ஒரு நாளிதழ்” என்று போட்டிருப்பார்கள். அது தினகரனில் வெளிவந்த விளம்பரமாக இருக்கும்பட்சத்தில், மேற்கோள் காட்டப்பட்ட திரைவிமர்சனம் தினத்தந்தியிலோ அல்லது தினமலரிலோ வந்திருக்கக்கூடும். இது பல்லாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம்தான். விளம்பரம் பெறுவதிலேயே கூட இம்மாதிரி விதிமுறைகள் பத்திரிகைகளின் விளம்பர ஏஜெண்டுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதிரி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பிரத்யேகமாக சில கொள்கைகள் இருக்கக்கூடும். எங்களது ‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் வெளிவரும் பேட்டியாளர்களின் படங்கள் எல்லாமே கண்ணியமான தோற்றத்தில்தான் இருக்கும். ஒருமுறை பேட்டியளித்த ஒரு பெண் பிரபலம் ஸ்லீவ்லெஸ் அணிந்த போட்டோ இருந்தது என்பதால், அந்த கட்டுரையே அச்சுக்கு செல்லுவது நிறுத்தப்பட்டு தாமதமானது என்கிற அளவுக்கு கடுமையான வழிகாட்டு நெறிகள் எங்களுக்கு இருக்கிறது. இவ்வளவு ஏன்? எனக்கு தெரிந்து ‘உடலுறவு’ என்கிற வார்த்தையேகூட, புதிய தலைமுறை இருநூறு இதழ்களை கடந்த நிலையில் ஒரே ஒருமுறைதான் (தவிர்க்க இயலாத வகையில் கலாப்ரியாவின் தொடரில் வந்துவிட்டது) எங்கள் பத்திரிகையில் இடம்பெற்றிப்பதாக ஞாபகம்.

சரி. இப்போது பத்ரிக்கு (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) வருவோம். எந்த ஒரு முதலாளிக்கும், நிர்வாகிக்கும் தன்னுடைய நிறுவனத்தின் பெயர் பிரபலப்பட வேண்டும் என்கிற ஆசை இருப்பது நியாயமானதுதான். எனக்கு ‘உயிர்மை’ நிறுவனத்தின் ‘சுஜாதா விருது’ வழங்கப்பட்டபோது, “நீங்க ‘புதிய தலைமுறை’யில் வேலை பார்க்குறீங்கன்னு அவங்க குறிப்பிட்டிருக்கலாமே?” என்றுதான் எங்கள் ஆசிரியரும் கேட்டார். மனுஷ்யபுத்திரனை போய் கேட்கவா முடியும்? மனுஷ்யபுத்திரன் எங்கள் பத்திரிகைக்கு எழுதும்போது கவிஞர், எழுத்தாளர் என்றுதானே அடைமொழி இட்டிருக்கிறோம். எங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட அதேமாதிரி அடைமொழிகள்தான் அவருக்கு தரப்படுகிறது. ஆனால் உயிர்மை சம்பந்தப்பட்ட ஒருவருக்கு பெருமை கிடைக்கிறது எனும்போது, அதில் ‘உயிர்மை’ என்கிற பெயருக்கு ஓரிடத்தை மனுஷ்யபுத்திரன் எதிர்ப்பார்ப்பது இயல்பானதுதான். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்பதுதான் தெரியவில்லை. எங்கள் ஆசிரியரின் கட்டுரையோ, பேட்டியோ வெளி இதழ்களில் வெளிவரும்போதும் எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தவிர்க்க முடியாத பொருத்தமான இடங்களில் மட்டுமே அவர் எந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் என்று குறிப்பிடப்படுகிறது. பத்ரி  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்)  பதிப்பகத்தொழில் தொடர்பான ஒரு கட்டுரையிலோ, பேட்டியிலோ பேசும்போது பதிப்பாளர் என்கிற அடைமொழிதான் அவரது நிறுவனத்தின் பெயரோடு சேர்த்து குறிப்பிடப்படும். நாங்களே கூட குறிப்பிட்டிருக்கிறோம்.

எங்களுடைய பத்திரிகை தொடங்கியதிலிருந்தே பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) எங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருபவர். குறைந்தபட்சம் பத்து முறையாவது அவரது படம் எங்கள் பத்திரிகையில் அச்சாகியிருக்கிறது. உலகின் சர்வ பிரச்சினைகளிலும் அவருக்கு ஒரு ஆழமான கருத்து இருக்கிறது. அவரே பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை அடைமொழிகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம். எங்கள் இதழைப் பொறுத்தவரை பத்ரி விதிக்கும் இந்த புதிய விதிமுறையால் எதுவும் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறேன். ஆனால் மற்ற ஊடகங்களில் நிலைமை எப்படியோ தெரியாது.

பத்ரியைப்  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) போலவே எல்லாரும் இதே விதியை விதிக்க ஆரம்பித்துவிட்டால் என்னாகும்? ஊடகங்களின் பாலிசி மாறிவிடுமென்று யாரும் நினைத்துவிடாதீர்கள். என்னை மாதிரி பத்திரிகை தொழிலாளிகளின் பொழைப்புதான் டப்பா டான்ஸாகிவிடும் :-(

12 comments:

 1. சாதரணமா "கிழக்கு" அப்படின்னு போடலன்னா பரவாயில்லை. ஆனா, லோகோவை தேடிப்பிடிச்சு அழிக்கறது எல்லாம் டூ மச்.

  எல்லா எடுத்துலேயும் "கிழக்கு"ன்னு போட்டீங்க. தலைப்புல போட மறந்துட்டீங்களே :-)

  ReplyDelete
 2. fine yuva, Mr. badri must be happy after reading you, for mentioning his reference made properly in your article, may be he might redirect your article as an example to all his future endeavors

  ReplyDelete
 3. //‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் வெளிவரும் பேட்டியாளர்களின் படங்கள் எல்லாமே கண்ணியமான தோற்றத்தில்தான் இருக்கும். ஒருமுறை பேட்டியளித்த ஒரு பெண் பிரபலம் ஸ்லீவ்லெஸ் அணிந்த போட்டோ இருந்தது என்பதால், அந்த கட்டுரையே அச்சுக்கு செல்லுவது நிறுத்தப்பட்டு தாமதமானது என்கிற அளவுக்கு// பெயர் புதிய தலைமுறை என்று வைத்துவிட்டு ஸ்லீவ்லெஸ் அணிந்திருந்தவரை புறக்கணித்தது முரணாய் தோன்றுகிறதே யுவா!!

  ReplyDelete
 4. எல்லாம் ரைட்டும்.. அவரை கலாய்க்க இப்படியான அவர் பெயர் குறிப்பிடும் போதெல்லாம் பதிப்பாளர் கிழக்கு பதிப்பகம் என்று போட வேண்டும்????

  ReplyDelete
 5. குமுதத்தில் பத்ரிக்கு நடந்தது வருத்தத்துக்குரியது...
  அனால் தொலைகாட்சியிலோ அல்லது பத்திரிக்கையிலோ ஒருவரின் வேலையை அல்லது தொழிலை பற்றியோ போடுவது அந்த செய்தியோ அல்லது நிகழ்ச்சியை பொருத்தது....
  புத்தகங்களையோ அல்லது அதை சார்ந்த துறையை பற்றியோ பேசும் பொழுது அங்கே பதிப்பாளர் கிழக்கு பதிப்பகம் என்று போடுவது பொருத்தமானது...அதுவே அரசியலை பற்றியோ அல்லது வேறு துறையை பற்றி பேசும் பொழுது அது தேவையற்றது..,
  ------சந்துரு

  ReplyDelete
  Replies
  1. //குமுதத்தில் பத்ரிக்கு நடந்தது வருத்தத்துக்குரியது...//
   வெளங்கிரும்!

   Delete
 6. யோவ் யுவா, அப்பிடியே 'கலைஞர்' குசும்பு.

  ReplyDelete
 7. // எங்களது ‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் வெளிவரும் பேட்டியாளர்களின் படங்கள் எல்லாமே கண்ணியமான தோற்றத்தில்தான் இருக்கும். ஒருமுறை பேட்டியளித்த ஒரு பெண் பிரபலம் ஸ்லீவ்லெஸ் அணிந்த போட்டோ இருந்தது என்பதால், அந்த கட்டுரையே அச்சுக்கு செல்லுவது நிறுத்தப்பட்டு தாமதமானது என்கிற அளவுக்கு கடுமையான வழிகாட்டு நெறிகள் எங்களுக்கு இருக்கிறது. இவ்வளவு ஏன்? எனக்கு தெரிந்து ‘உடலுறவு’ என்கிற வார்த்தையேகூட, புதிய தலைமுறை இருநூறு இதழ்களை கடந்த நிலையில் ஒரே ஒருமுறைதான் (தவிர்க்க இயலாத வகையில் கலாப்ரியாவின் தொடரில் வந்துவிட்டது) எங்கள் பத்திரிகையில் இடம்பெற்றிப்பதாக ஞாபகம்.///

  புதிய தலைமுறை என்ன குடும்ப மலரா? இது இளம் தலைமுறையிருக்கானது தானே . ஸ்லீவ்லெஸ் எப்போலேர்ந்து கண்ணியமற்றதா மாறுச்சு? உடலுறவுன்னு குறிப்பிடுறதுல என்ன பெரிய கண்ணியமின்மை. அதிகபட்சம் 4/5 முறை தான் பு.த இதழ் படிச்சிருப்பேன். அதையும் பொதுபுத்தி இதழ் தான்னு காட்டி படிக்கிற வேலைய மிச்சம் பண்ணீட்டீங்க. நன்றி :-)

  ReplyDelete
 8. பத்ரியின் அழும்பு என்ன, அவர் வகுத்த விதி என்ன, கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே, தோழர். ஊகித்தது சரிதானா என்றாவது தெரிந்துகொள்ள வேண்டாமா? லிங்க் போனால் திறக்க மறுக்கிறது.

  ReplyDelete
 9. ”ஸ்லீவ்லெஸ் அணிவது கண்ணியக் குறைவா?” என்கிற கேள்வி கவர்ச்சியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. ஏதேனும் டிவியில் சொல்லி ‘டாக் ஷோ’ நடத்தலாம். டி.ஆர்.பி. எகிறும் :)

  அதே நேரம் என் தனிப்பட்ட கருத்தை சொல்லிவிடுகிறேன். ‘கண்ணியம்’ தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அவர்களே வரையறுத்த கருத்தாக்கமாக இருக்குமென்று நினைக்கிறேன். டூ பீஸ் கூட கண்ணியமான உடையென்று நீங்கள் கருதலாம். அப்படியே சமூகம் பொதுவான கருத்தாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவசியமில்லை. கண்ணியமான தோற்றம் என்று நான் கருதுவது திண்டுக்கல் பாலபாரதி, வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்கள் ஊடகங்களில் எப்படி தோன்றுகிறார்களோ, அது மாதிரி தோற்றத்தை. இதையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இது என்னுடைய கருத்து. அவ்வளவுதான்.

  ’புதிய தலைமுறை’ அப்பாக்களின், ஆசிரியர்களின் பத்திரிகை. அப்பாக்கள் எந்த மனக்கிலேசமும் இன்றி எங்கள் பத்திரிகைகளை அவர்களது குழந்தைகளுக்கு வாங்குகிறார்கள். தமிழ்நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வாராவாரம் எங்கள் பத்திரிகையை அவர்களது வகுப்பறைகளில் பாடம் நடத்துவதைப் போல வாசிக்கிறார்கள்.

  கிராமப்புற இளைஞர்களிடையே வலுவான செல்வாக்கை அடைந்திருப்பவர்கள் நாங்கள். எங்களது பத்திரிகையில் இடம்பெறும் பிரபலங்கள் அரட்டை அடிப்பதில்லை. எங்கள் வாசகர்களுக்கு கருத்து சொல்கிறார்கள், அல்லது ஆலோசனை சொல்கிறார்கள். ஒரே ஒரு இளைஞனாவது எங்கள் பத்திரிகையில் இடம்பெற்ற ஒரு படத்தை பார்த்து வேறு மாதிரியாக ‘கமெண்ட்’ அடித்துவிட்டால், எங்கள் நோக்கம் தோற்றுவிடும்.

  எங்கள் பத்திரிகையில் இது இதுவெல்லாம் இருக்கிறது என்றுதான் எல்லா பத்திரிகைகளுமே விற்கிறார்கள். நாங்களோ இது, இதுவெல்லாம் எங்களிடம் நிச்சயமாக இல்லை என்று சொல்லி விற்கிறோம். எங்கள் அணுகுமுறையும் தமிழ் ஊடக வரலாற்றிலேயே முதன்முதலாக அதிர்ஷ்டவசமாக ஜெயித்திருக்கிறது. நாங்களும் பெரிய ஊடகங்களைப் போலவே லட்சங்களில் விற்கிறோம். லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறோம். எல்லோரும் எங்களை கிண்டல் செய்யலாம். செய்கிறார்கள். ஆனால் நாங்கள் அடைந்த வெற்றியை அவர்கள் அடைந்ததில்லை. அடையவும் முடியாது :)

  ReplyDelete
 10. திரு யுவகிருஷ்ணா (பிரபல பதிவர், பிரபல வலைப்பதிவாளர், பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், புதிய தலைமுறை) அவர்களே..

  திரு பத்ரி [சேஷாத்ரி ] (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம், ப்ராடிஜி பதிப்பகம், தவம் பதிப்பகம், வரம் பதிப்பகம், நலம் பதிப்பகம், ஆசிரியர், ஆழம், நிறுவனர் , டயல் ஃபார் புக்ஸ் etc) அவர்களின் பெயரை முழுமையாக பத்ரி சேஷாத்ரி என்று குறிப்பிடாதது உங்கள்அழும்பைக் காட்டுகிறது. மென்மையாக, மன்னிக்கவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  இவண்
  அனானி (செயலாளர், மொக்கை கமெண்டர்கள் சங்கம், கே.கே.நகர்)

  ReplyDelete
 11. பத்ரி இதிலும் தன் வியாபார புத்தியை காட்டி விட்டார். ஐயோ! ஐயோ!!

  ReplyDelete