8 நவம்பர், 2013

எழுத்துரு விவாதம்

தமிழின் எழுத்துருவை ரோமன் வடிவில் எழுதலாம் என்று ஒரு நாளிதழில் யோசனை கூறியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். முதலில் ‘எழுத்துரு’ என்று ஜெயமோகன் பயன்படுத்துவதே தவறு. எழுத்துரு என்பது font. இதை பலர் சுட்டிக் காட்டிய பிறகும் இன்னமும் எழுத்துருவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன் ஒரு புது யோசனையை சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறோமா இல்லையாவென்று விவாதிப்போம் என்று அவரது அபிமானிகள் சொல்லி வருகிறார்கள். மிக ஜாக்கிரதையாக ‘டிஸ்கி’ போட்டு ‘ஜெயமோகனின் கருத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால்’ என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அரங்கசாமி போன்ற விஷ்ணுபுர பக்தர்களை குறை சொல்ல எதுவுமில்லை. ‘வெள்ளை காக்கா பறக்கிறது’ என்று ஆசான் சொன்னால், ‘ஆமாம்’ போட்டுவிட்டு செல்கிறவர்கள்தான்.

ஜெயமோகனை போலவே நான் ஒரு யோசனை சொல்கிறேன். இதை விவாதிப்போமா நண்பர்களே?

புவி சூடேறுதல் காரணமாக வருடாவருடம் வெயில் ஏறிக்கொண்டே போகிறது. கடுமையான வெக்கையில் உடைகள் உடலுக்கு பெரும் துன்பமாக படுகிறது. எனவே தமிழ் சமூகம் உடையணிய வேண்டுமா என்று தோன்றுகிறது. அந்தமானில் கூட பழங்குடி சமூகத்தினர் உடை அணிவதில்லை.

‘உடைகள் வேண்டாம்’ என்று நான் கூறியிருப்பது புது யோசனை. பைத்தியக்காரத்தனமான யோசனைதான். கேட்டதுமே என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்றுகூட நான்கு பேருக்கு தோன்றும். ஆனாலும் அந்தமானில் உடை அணிவதில்லை, ஆப்பிரிக்காவில் மேலாடை கிடையாது என்று உதாரணங்கள் காட்டி என்னுடைய கேணைத்தனமான யோசனைக்கு தர்க்கரீதியாக சில பக்கங்களுக்கு என்னால் பலம் சேர்க்க முடியும். ஜெயமோகன் செய்துக் கொண்டிருப்பது இதைதான். இந்த விவகாரத்தில் மட்டுமல்ல. அவர் எந்த சிந்தனையை முன்வைத்தாலும் இப்படி அரைகுறையாகதான் இருக்கும். ஏனெனில் ஜெயமோகன் தன்னை சிந்தனையாளர் என்று கருதிக்கொள்ளும் சராசரி. எழுதத் தெரிந்தாலே சிந்தனையாளர் ஆகிவிடலாம் என்கிற அபத்தமான ஆபத்தான முடிவுக்கு நிறையபேர் வந்துவிட்டதுக்கு இவரொரு முக்கிய காரணம். புண்ணாக்கு விற்பவரெல்லாம் தொழிலதிபர் என்று சொல்லிக்கொள்கிற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சிந்தனையாளர் என்றால் இந்தியாவில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள்தான். ஜெயமோகன்கள் இந்த லெவலா என்று உங்கள் மனச்சாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

தமிழுக்கு பெரும் பங்காற்றியவர் என்று ஜெயமோகன் அவரை அவரே சொல்லிக் கொள்கிறார். சமகால தமிழிலக்கியத்தில் அவர் தவிர்க்கமுடியாதவர் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஜெயமோகனின் நாவல்களும், சிறுகதைகளும் சிறப்பானவை. வேறெவரையும் விட அதிகமாக உழைத்து அசுரவேகத்தில் நிறைய பக்கங்களை எழுதிக் குவிக்கிறார். இன்னும் ஒரு இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு சிறுபத்திரிகை வாசகர்கள் ஜெயமோகனை நினைவு வைத்திருப்பார்கள். ஆனால் இது மட்டும் தமிழுக்கு பெரும் பங்கு ஆற்றிவிட்டதற்கு போதுமானதல்ல. வெறும் எழுத்து மட்டுமே பங்களிப்பாகிவிடாது இல்லையா? எழுத்தை தாண்டி பாரதியார், உ.வே.சா போன்றவர்கள் பங்களித்தார்கள் என்றால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கது. எழுத்தின் மூலம் சில நிரந்தர வாசகர்களை ஜெயமோகன் பெற்றிருக்கிறார். சினிமாவில் எழுதி நிறைய பணம் சம்பாதிக்கிறார் என்பதைத் தாண்டி ஜெயமோகனால் தமிழ் என்ன வளம் பெற்றிருக்கிறது. தெருத்தெருவாக சைக்கிள் ஓட்டி குழந்தைகளுக்கு தமிழ் கணிமை சொல்லிக் கொடுக்கும் புதுவை பேராசிரியர் இளங்கோவன் போன்றவர்கள்கூட இவ்வளவு கர்வமாக தமிழுக்கு பங்காற்றியதாக சொல்லிக்கொள்வதில்லையே?

சில குறிப்பிடத்தக்க நாவல்களையும், சிறுகதைகளையும், அச்சுபிச்சுவென்று அரசியல் பேசும் கட்டுரைகளையும் எழுதியிருப்பதால் மட்டுமே தமிழுக்கென்றிருக்கும் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லும் தகுதி ஜெயமோகனுக்கு வந்துவிடவில்லை. தமிழ் மொழியை சீர்த்திருத்தவும், அடுத்தடுத்த தளங்களுக்கு எப்படி கொண்டுச் செல்லலாம் என்கிற கவலையையும் கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் ஏற்கனவே பல்லாண்டுகளாக பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக யோசித்து வருகிறார்கள். பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்தும் வருகிறார்கள். முகுந்த், நாகராஜன் மாதிரி தமிழ் படித்த அடுத்த தலைமுறை இளைஞர்கள், தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி எதிர்கால எந்திரங்களில் எப்படியெல்லாம் தமிழை சாத்தியப்படுத்தலாம் என்றும் உழைத்தும் வருகிறார்கள். எனவே தமிழின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு, ஜெயமோகன் முழு ஈடுபாட்டோடு மலையாளப் படங்களுக்கு வசனம் எழுதும் வேலையை பார்க்கலாம்.

பெரியார் தொடங்கி வா.செ.குழந்தைசாமி வரை இதே யோசனையை சில வேறுபாடுகளுடன் முன்பே சொல்லி விவாதிக்கப்பட்ட கருத்து என்று வடிகட்டிய புளுகுமூட்டையை வேண்டுமென்றே அவிழ்த்துவிடுகிறார் ஜெயமோகன். பெரியார் எங்குமே தமிழுக்கு பங்காற்றப் போவதாக சொல்லி எழுத்துச் சீர்த்திருத்தத்தை அமல்படுத்தவில்லை. அவர் பத்திரிகை நடத்தி வந்தவர். அச்சுக் கோர்ப்பதில் ஏற்படும் வீணான செலவையும், நடைமுறை சிக்கல்களையும் உத்தேசித்தே ‘பெரியார் தமிழ்’ உருவானது. ரோமன் போதும். தமிழ் வரிவடிவம் வேண்டாமென்று பெரியாரா சொன்னார்? பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் யோசனை எழுத்து வடிவம் தொடர்பானது. கொம்பு, சுழி போன்றவற்றை நீக்கி எழுத்துகளை எளிமைப்படுத்தும் பட்சத்தில் கற்றல் எளிமையாக இருக்கும். கணினி தொடர்பான எந்திரங்களுக்கு தமிழை கொண்டுவருவதற்கு உதவியாகவும் இருக்குமென்பது பேராசிரியரின் யோசனை. அவர்களுக்கு இணையாக தன்னையும் தானே ஒப்பிட்டுப் பேசுவது அற்பத்தனமின்றி வேறில்லை. சீண்டுவதற்காக சொன்னேன் என்று சொல்லுபவரிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?

அடுத்து இந்த யோசனையை சொல்லியதற்காக தமிழகமே பற்றியெரிவது போன்ற மாயையை ஜெயமோகனும், அவரது சிஷ்யக்கோடிகளும் திட்டமிட்டு இணையத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை எங்குமே ஜெயமோகனின் கொடும்பாவி எரிக்கப்படவில்லை. பேரணி நடத்தி ‘ஜெயமோகன் ஒழிக’ என்று யாரும் கோஷமிடவில்லை. இதெல்லாம் நடக்கும் என்பதுதான் ஜெயமோகனின் எதிர்ப்பார்ப்பு. ‘அவர் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டார், அவ்வளவு ஒர்த்தும் இல்லை’ என்று வெறும் கண்டனத்தோடு தமிழர்கள் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இந்துமுன்னணி ஜெயமோகனை அச்சுபிச்சுவென்று வெறேதோ விவகாரத்துக்காக திட்டி வைத்த ஒரு பேனரை தன் வலைத்தளத்தில் போட்டு, என்னை எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் பாருங்கள் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டின் அலுவலகத்துக்கு கூட்டமாகப் போய் கலாட்டா செய்தார்கள், வன்முறை செய்தார்கள் என்றெல்லாம் காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய தத்துவ மரபின் பிள்ளைகள். பதினைந்து பேர் என்பதை கூட்டமென்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியுமென்றே தெரியவில்லை. இவர்களது ‘சிகரெட் பிடிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது’ சுவிசேஷக் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தின் எண்ணிக்கையை பார்த்து பழகிவிட்டவர்களுக்கு பதினைந்து பேர் என்பதும் பெரும் கூட்டமாக தெரிகிறது. தமிழுக்காக அணி திரளவேண்டுமென்றால் லட்சங்களில்தான் தமிழர்கள் அணிதிரள்வார்கள் என்பது வரலாறு.

தங்களுக்கு மடத்தனமாக பட்ட ஒரு யோசனையை கண்டித்து சம்பந்தப்பட்ட கட்டுரையை வெளியிட்ட நாளேட்டின் ஆசிரியரிடம் கண்டனக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள் சுபவீ தலைமையிலான தமிழார்வலர்கள். இது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைதான். இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்று ஒரு கோஷ்டி ஊளையிடுகிறது. தி ஹிந்து நாளேட்டின் ஆசிரியருக்கு, அன்று கடிதம் கொடுக்க வந்த அனைவருமே பழக்கமானவர்கள்தான். அந்த பத்திரிகையே கூட பதினைந்து பேர் கொண்ட பெரும் கூட்டம் தங்களை அச்சுறுத்தியாக கூறவில்லை. கண்டனக் கடிதம் கொடுக்கவந்தவர்களை மதித்து ஆசிரியரே நேரில் பெற்றுக் கொண்டிருக்கிறார். இம்மாதிரி சர்ச்சைக்குரிய கட்டுரைகளோ, கருத்துகளோ வரும் சமயங்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போனிலோ, நேரிலோ எதிர்வினையை யாராவது செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘நடிகையின் கதை’ தொடர் வந்தபோது, குமுதம் அலுவலகத்துக்கு சண்டை போடும் நோக்கில் வந்த நடிகர்-நடிகையரை அப்போதைய ஆசிரியர் மாலன் வரவேற்று, அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டறிந்தார். சமீபத்தில் புதிய தலைமுறை அலுவலகத்துக்கு கூட முன்னூறு பேர் கொண்ட கும்பல் மொத்தமாக லாரியில் வந்திறங்கியது. அவர்களை அழைத்து தன்மையாக பேசி, அவர்கள் தரப்பை கேட்டறிந்து அனுப்பினார்கள். இது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம்தான். ‘மாட்டுக்கறி’ மேட்டரில் நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவமாக பதினைந்து பேர் கூடி கடிதம் கொடுத்ததை ஜெயமோகனின் கும்பல் ஒப்பிட்டுப் பேசுவது விளம்பரவெறியே தவிர வேறல்ல.

திடீரென்று பெரியாரின் பகுத்தறிவு என்னானது என்று ஜெயமோகனுக்கு பெருங்கவலை ஏற்பட்டிருக்கிறது. அதை பெரியாரின் விசுவாசிகள் பட்டுக் கொள்வார்கள். ஏதாவது ‘தத்துபித்து’வென்று உளறிக்கொட்டி, அந்த அபத்தத்தை கண்டு ஊரெல்லாம் கைக்கொட்டி சிரிக்கும்போதெல்லாம் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி ‘நானும் ரவுடிதான்’ என்று ஜீப்பில் ஓடிப்போய் ஏறிக்கொள்வார் ஜெயமோகன்.

எதிர்வினை நாகரிகமாக இருக்கவேண்டுமென்று திரும்பத் திரும்ப ஜெயமோகனின் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், யாராவது அநாகரிகமாக திட்டுங்களேன் என்று கெஞ்சுவதைப் போல இருக்கிறது. ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. அந்த வரலாற்றை கொச்சைப்படுத்துவதைப் போன்ற கருத்தை வேண்டுமென்றே சீண்டலுக்காக சொல்லுவது என்பது, எப்படியோ தன் பெயரை நல்லபடியாகவோ, கெட்டபடியாகவோ யாராவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அற்ப எதிர்ப்பார்ப்பே தவிர வேறில்லை.

செத்த மொழியான சமஸ்கிருதத்தை இப்போது இந்திய ஞான மரபாளர்கள் ஆங்கில லிபியில் வாசித்து, மனப்பாடம் செய்கிறார்கள். அப்படியிருக்கையில் தமிழை மட்டும் தனி வரிவடிவத்திலேயே தமிழர்கள் இன்னும் வைத்திருக்கிறார்களே என்கிற பொச்செரிச்சல்தான் இந்த ‘எழுத்துரு’ யோசனைக்கு பின்னாலிருக்கும் நிஜமான சூட்சுமம் என்று நாம் கருத வேண்டியிருக்கிறது.

23 கருத்துகள்:

 1. நண்பரின் இந்த கருத்துக்களை முழுமையாக் ஆதரிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. தமிழை ஆங்கில வரிவடிவத்தில் எழுதலாம் என்ற கருத்து கொண்ட அறிவுசீவிகளுக்கு இந்த சிறுவனின் கேள்வி: இங்கிலீசுக்கு தமிழில் ஆங்கிலம் என்று பெயர்..தமிழுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்????


  பதில் சொன்னால் மேற்கொண்டும் பேசலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Fit to be yuvakrishna's disciple or equal!

   நீக்கு
  2. யப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே; ஏனுங்க, இங்கிலீசுக்கு ஏன் ‘ஆங்கிலம்’ னு பேர் , தமிழிலே? அதைத் தெரிஞ்சுகினா, மேற்கொண்டு பேசவே வேணாம். என்னா சோதனைடா, சாமி!

   நீக்கு
  3. "ஆங்கிலம்" என்று வேறெந்த மாநிலத்திலோ நாட்டினிலோ போய் சொல்லிப்பாருங்கள்! அவர்களுக்குப் புரிந்தால் மேற்கொண்டு பேசலாம். உங்களை போன்ற வாசகர் கிடைத்ததற்கு யுவகிருஷ்ணா தவம் செய்திருக்க வேண்டும்!

   நீக்கு
 3. "தமிழுக்கென்றிருக்கும் வரிவடிவம் வேண்டாம் என்று சொல்லும் தகுதி ஜெயமோகனுக்கு வந்துவிடவில்லை."

  இதற்கெல்லாம் என்ன தகுதி வேண்டியிருக்கிறது? யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தோன்றியதைச் சொல்லி விட்டுப் போகலாம். அது முக்கியத்துவம் பெறுவது அதை யார் சொன்னார்கள் என்பது. நீங்களெல்லாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது அவரது முக்கியத்துவத்தை இன்னும் கூட்டுகிறது. அதுதான் அவரது குறிக்கோள். அதில் வெற்றியும் பெற்று விட்டார்.

  பதிலளிநீக்கு
 4. அவரது விளம்பர வியபாரத்தை அம்பலப்படத்தும் கட்டுரை.

  பதிலளிநீக்கு
 5. "ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. அந்த வரலாற்றை கொச்சைப்படுத்துவதைப் போன்ற கருத்தை வேண்டுமென்றே சீண்டலுக்காக சொல்லுவது என்பது, எப்படியோ தன் பெயரை நல்லபடியாகவோ, கெட்டபடியாகவோ யாராவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற அற்ப எதிர்ப்பார்ப்பே தவிர வேறில்லை." - முற்றிலும் மெய்... :)

  பதிலளிநீக்கு
 6. // ... காட்டுமிராண்டிக்குழு ... // உங்களுக்கு உறுதியாக தெரியுமா ?

  பதிலளிநீக்கு
 7. அருமையான உவமானத்துடன், முதிர்ச்சியுடன் எழுதியிருக்கிறீர்கள் யுவா, வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 8. கட்டுரையின் பொதுவான கருத்த்தோடு ஒப்புகொள்கிறேன். ஆனால்:

  "சிந்தனையாளர் என்றால் இந்தியாவில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள்தான். "

  சந்தடிசாக்கில் உங்களோட பொதுபுத்‌தி கலந்துவிட்டீர்கள். வாழ்க!

  பதிலளிநீக்கு
 9. ஜெயமோஹன் கருத்துக்களுக்கு ஒவ்வொன்றாக அந்தக் கருத்து தமிழை எப்படிப் பாதிக்கும் என்று சொல்பவர்கள் யாரும் இல்லையா? தமிழ் இறந்துபடும் என்பவர்கள் அதற்கான சரித்திர, விஞ்ஞான பூர்வ ஆதாரங்களைக் கொடுக்க வேண்டுகிறேன். சுப. வீ இதற்கு முற்றிலும் தகுதி பெற்ற பேரறிஞர்

  பதிலளிநீக்கு
 10. @ஏவிஎஸ்,

  // நீங்களெல்லாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது அவரது முக்கியத்துவத்தை இன்னும் கூட்டுகிறது.//

  லக்கி எதிர்கட்டுரை எழுதியிருக்கிறார் என்பதற்கெல்லாம், அவரது தவளைச்சத்தத்தை தமிழ்ச்சமூகம் பொருட்படுத்தியிருக்கிறது என்று அர்த்தமாகாது நண்பரே!

  :-))))))))))))))

  பதிலளிநீக்கு
 11. 1978ல் நான் 8 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எங்கள் தமிழ் அசிரியை மிகவும் வேகமாக dictate செய்யும் நோட்ஸை எழுத முடியாமல் rough noteல் ஆங்கில வரி வடிவில் விரைவாக எழுதிக் கொண்டு வீட்டுக்கு வந்து தமிழ் நோட்டில் எழுதிக் கொள்வேன். I had always felt silly about it and never mentioned it to anyone (Even now I wish to remain anon). But now a leading "writer" suggesting this?..... Ridiculous!

  பதிலளிநீக்கு
 12. // ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. //

  #அருமையான வரிகள்..

  பதிலளிநீக்கு
 13. ஒரு நல்ல கெட்ட வார்த்தை சொல்லி திட்டலாம்

  பதிலளிநீக்கு
 14. கதை கவிதை என சிறந்த படைப்புகளாக சொல்லபடுபவை மட்டுமே ஒரு மொழி வளரவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் பயன்படாது. எந்த காலக்கட்டத்திலும் நடைமுறை வாழ்விற்கும், பொருள் ஈட்டவும் ஏற்றதாக உள்ள மொழி மட்டுமே காலம் காலமாக நிலைத்து நிற்கும். இல்லாவிட்டால் சமஸ்கிருதம் போன்று வெறும் ஓலை சுவடிகலோடு நின்று போக வேண்டியதுதான்.

  அந்த வகையில், எவ்வளவோ பெயர் தெரியா இளைஞர்கள் அறிவியலையும் தொழில்நுட்பவியலையும் தமிழில் மொழி பெயர்த்து இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் எந்த விதமான ஆதாயமும் எதிர்ப்பார்க்காமல். இவர்கள் செய்யும் முயற்சிகள் முன்னாள் இந்த ஜெயமோகன்கள் எல்லாம் சுண்டைக்காய் போன்றவர்கள்.

  பணத்தேவையை தாண்டி தமிழின் வளர்ச்சிக்காய் சிறு துரும்பை கூட கிள்ளிப் போடாத இவர்களை எல்லாம் என்ன செய்தாலும் தகும்.

  பதிலளிநீக்கு
 15. ஒரு காட்டுமிராண்டிக்குழு நாகரிகம் பெற்று, அவர்களுக்குள் மொழி உருவாகி, அது சீர்பெற்று, எழுத்துவடிவம் தோன்றி, இலக்கணம் உருவாகி, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளில் இயங்கி, தாள்களில் எழுதப்பட்டு, தட்டச்சில் தட்டப்பட்டு, கணினிகளில் உள்ளீடப்படுவது வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் வாழ்வது என்பது ஒரு மகத்தான வரலாறு. // super..

  பதிலளிநீக்கு
 16. ஜெயமோகன் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டடியதில்லை; ஏன் ஏற்றுக்கொள்ள தகுந்ததல்ல என்ற காரணங்களை, வாதங்களை முன் வைத்து விமர்சிக்கலாம்; ஆனால், the so called சாதி மறுப்பாளர்கள், தூய பெரியாரிஸ்டுகள் என்ன சொன்னார்கள்? 'நாயர், மலையாளி' போன்ற உன்னத வாதமுறையை அல்லவா பயன்படுத்தி விமர்சித்தார்கள்! ஆனால், அவர்கள் 'லெவல்' அதுதான் - ஆசான் எவ்வழி சீடர்கள் அவ்வழி!

  சரி, சந்தடி சாக்கில் சிந்தனையாளர்களென்று புத்தர், பெரியார், அம்பேட்கர் என்று ஒரு 'லெவல்' படுத்திவிட்டீர்களே இதில் ஈவேரா எங்கே வந்தார்? ஏன் உங்கள் 'லெவல்' இப்படியானது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I too disagree with jeyamohan. The words used by the so-called purist Tamils show their legacy of "Historical Political discourse" which is defined by personal attacks, character assassination etc . Shamelessly Yuva krishna supports such kind of vitriolic language . Ennavo Ivanga mattumthan Thamizhukku urimaikarargal pol murukkudan pesugirargal . A language is not individuals possession alone . Whoever loves it can suggest, you have a decent way of negating it.

   நீக்கு
 17. ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் என்பது விவாதத்துக்கு விடப்பட்ட கருத்து மட்டுமே. ஆனால் விவாதத்துக்கு இடையே ஆளுமைக் கொலை நடப்பதைப் பார்க்கும்போது உங்களுடைய எதிர்வினை எழுத்துரு சமபந்தமானது மட்டுமல்ல என்றே புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகனின் இப்பரிந்துரை வருவதற்கு முன்னரே குறுந்தகவலில், முகநூலில், டிவிட்டரில் ஆங்கில எழுத்துருவில் தமிழில் உரையாடுவது நடைமுறையில் இருக்கிறது. ஏன் என் தமிழ் தெரியாத நண்பருக்கு ஆங்கில எழுத்துருவில் காதல்கடிதம் எழுதியவரையும் பார்த்திருக்கிறேன். இவ்வளவும் நடந்துகொண்டிருக்கும்போது ஜெயமோகனின் பரிந்துரை நோக்கி கனைவிடுவது கேணத்தனமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு