6 நவம்பர், 2013

எங்க சின்ன ராசா

போனவாரம் ஏதோ ஒரு சேனலில் நைட்ஷோவாக ‘எங்க சின்ன ராசா’ பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே கிளுகிளுப்பை உண்டாக்கும் தன்மை வேறெந்த படத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு துல்லியமான விவரணைகள் கொண்ட காட்சிகளை அமைக்கும் இயக்குனர் இனிமேல் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் பாக்கியராஜ்.

பாக்கியராஜின் சின்னம்மாவாக நடித்த சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டுகள் கழித்தும் இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டே இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை. எனக்கு ஃபேவரைட், க்ளைமேக்ஸ் ஜில்பான்ஸான ‘தென்பாண்டி சீமை ஓரமா’தான். மியூசிக் சேனல்களில் காணக்கிடைக்காத இந்த பாட்டுக்காகவே எப்போது படம் போட்டாலும் முழுசாக பார்த்துவிடுவது உண்டு. பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.

ரொம்ப நாட்களாகவே இப்படத்தின் இசை இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகதான் இருக்கும் என்கிற பொதுப்புத்திக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சங்கர் கணேஷ் என்று கொஞ்ச வருஷம் முன்புதான் தெரிந்தது. ‘கொண்டச்சேவலாக’ ஹிட்டடித்ததைவிட, இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகதான் அந்த ட்யூன் மரண ஹிட்.
முதன்முதலாக இந்தப் படத்தை பார்த்தபோது (அப்போ பத்து வயசு தான்), ராதாவின் இளமைக் கொந்தளிப்பை கண்டு வியந்து அசந்து விட்ட ஜொள்ளின் ஈரம் இன்னமும் காயவில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது அதே அளவிலான ஜொள்ளு வடிகிறது எனும்போது என் இளமை மீதான தன்னம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘தாலி குத்துது. கழட்டி வைடி’ என்று பாக்யராஜ் சொல்லும்போது புரியாமல், சின்ன வயசில் ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தது. பின்னாளில் அனுபவப்பூர்வமாக அதே சூழலை எதிர்கொள்ள நேரிட்டபோதுதான், பாக்யராஜ் ஏன் எண்பதுகளில் தமிழ்ப்பெண்களின் ‘ஐடியல் ஹஸ்பண்ட்’ ஆக பார்க்கப்பட்டார் என்பது புரிகிறது.

வயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இண்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதை பார்க்கும்போது இப்போதும் வெட்கம் வருகிறது. க்ளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக். “யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா”

யதேச்சையாக இன்று ‘எங்க சின்ன ராசா’வை கூகிளிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம். 1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்.
1981ல் ஜீதேந்திரா – ஹேமமாலினி ஜோடியாக நடித்து ‘ஜோதி’யாக இந்தியிலும் வந்திருக்கிறது. நம்மாளு ‘எங்க சின்ன ராசா’வாக்கி எட்டுத் திக்கும் வெற்றிமுரசிட்ட பிறகு மீண்டும் இந்தியில் அனில்கபூர், மாதுரிதீக்‌ஷித் நடிப்பில் ‘பேட்டா’வானது (‘தக்கு தக்கு கர்னே லகா’ மார்பை தூக்கி தூக்கி மாதுரி பாடும் பாட்டு நினைவிருக்கிறதா? அப்போதெல்லாம் சூப்பர்ஹிட் முக்காப்புலாவில் எப்பவுமே டாப்பில் இருக்கும்). தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா நடித்து ’அப்பாய்காரு’, கன்னடத்தில் மீண்டும் ரவிச்சந்திரன்-மதுபாலா இணைந்து ‘அன்னய்யா’, கடைசியாக 2002ல் ’சந்தன்’ என்று ஒரியாவிலும் இதே ஸ்க்ரிப்ட் தேய தேய ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். ஒரே ஸ்க்ரிப்ட் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, எடுக்கப்பட்டபோதெல்லாம் ‘ஹிட்’டிக்கொண்டே இருந்திருக்கிறது என்பது இமாலய ஆச்சரியம். மறுபடியும் யாராவது இன்றைய வடிவில் ரீமேக்கினாலும் ஹிட்டு நிச்சயம்.

மிக சாதாரணமான ஒன்லைனரை கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால்,  மிகச்சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். செண்டிமெண்ட் + க்ரைம் + செக்ஸ். இந்த சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்துக் கொள்ளலாம்.

7 கருத்துகள்:

 1. புட்டண்ணா சினிமால தவிர்க்க முடியாத சக்தி...... பாலு மகேந்திராட மூன்றாம் பிறை, அவர்ட 'மானச சரோவரா'ட தழுவல்..... பாரதிராஜா அவர்ட்ட அசிஸ்டண்டா வேலை பாத்துருக்கார்.......பாலசந்தர் தன்னோட மானசீக குறு எண்டு அவர குறிப்பிட்டு அவர் அறிமுகப்படுத்தின நடிகர் பலரை உபயோச்சிருக்கார்

  பதிலளிநீக்கு
 2. 80's யில் இந்தப்படம் பார்க்க எங்கப்பா எங்களை அனுமதிக்கவில்லை. படு செக்ஸி என்று தடுத்துவிட்டார். இப்படிச் சொன்னால் நாங்கள் எப்படியாவது பார்த்துவிடுவோமே. தோழியின் வீட்டில், பள்ளி முடிந்து, வீடியோ கடையில் வீடியோ டேப் வாங்கிக்கொண்டு, ஒளிந்து ஒளிந்து பார்த்தோம். நல்ல படம். இருப்பினும் வசனம் சில இடங்களில் கவர்ச்சிதான். இன்று பார்க்கின்றபோதும் சில வசனங்கள் முகஞ்சுளிக்கவைக்கிறது என்பதனை ஏற்கத்தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. திரைக்கதை வித்தகரான பாக்கியராஜ் அந்த ஒரு வரி கதையையோ அல்லது பழைய படத்தின் கதை கருவியோ தன் அளவில் ஒரு வெற்றி திரைக்கதையாக மாற்றி இருக்கிறாரா அல்லது முழுமையான தமிழ் பிரதியா? ஏனனில் இந்த திரைக்கதைதான் மீண்டும் இந்தியில் வெற்றி பெற்றது. இந்தியின் முதல் பிரதி வெற்றி பெற்றதாக தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்........SUPER YUVA SIR

  பதிலளிநீக்கு
 5. இருபத்தி ஆறு வருடம் கழித்தும் " எங்க சின்ன ராசா"வுக்கு விமரிசனம் எழுதி வியக்கவைத்த எங்க யுவ கிருஷ்ணா வாழ்க!

  பதிலளிநீக்கு
 6. உண்மையிலயே நல்ல படம் அப்படின்னு நினைக்கிறேன்..! எனக்கு அந்த ஆத்தா ஆத்தா னு கூப்பிடுவது ரொம்ப பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 7. எல்லாரும் ரம்பத்த பத்தி ஆகா ஓஹோ ன்னு விமர்சனம் பண்ணிட்டு இருக்கும் பொது நீங்க மட்டும் இன்னும் பழச மறக்காம இருக்கீங்க பாருங்க. அதுக்காகவே உங்கள பாராட்டலாம்.

  பதிலளிநீக்கு