14 செப்டம்பர், 2013

தூக்குத்தண்டனையை தூக்கில் ஏற்றுவோம்

காட்டுமிராண்டித்தனமான மரணத்தண்டனை நாகரிக உலகில் நீடிக்கக் கூடாது. நிர்பயா வழக்கு, ராஜீவ் கொலை வழக்கு என்று தனித்தனியாக வழக்கு வாரியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக மரணத்தண்டனையை எதிர்ப்பதே நாகரிகம் பெற்ற மனிதனின் நிலைப்பாடாக இருக்க முடியும்.

டெல்லி பாலியல் குற்றத்தில் நான்கு பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு கலைஞர் கருத்து கூறியிருக்கிறார். “தூக்குத்தண்டனை குறித்து எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், இந்த குறிப்பிட்ட குற்றத்தை பொறுத்தவரை நீதிபதிகள் சரியான தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள்” என்று அவர் நேற்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் அரசியல்வாதி. இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சியை வெற்றிபெற செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே பொதுமக்களின் செண்டிமெண்டுக்கு எதிரான எந்த கருத்தையும் இச்சூழலில் அவரால் சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி நிர்ப்பந்தங்கள் இல்லாத சூழலில் அவர் ஏற்கனவே சொல்லியிருப்பதைதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். “தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு, சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று அழுத்தம் திருத்தமாக மரணத்தண்டனை குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தூக்குத்தண்டனையை ஆதரிப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த ஒரு கொடூர குற்றத்தையும் கண்டவுடனேயே, கேட்டவுடனேயே “இவனையெல்லாம் நடுத்தெருவுலே வெச்சி நாய் மாதிரி சுட்டுக் கொல்லணும்” என்கிற கருத்தினை உடனடியாக உச்சரிப்பவர்கள். இது அறிவுபூர்வமான எண்ணமாக நிச்சயம் ஆகாது. உணர்வுபூர்வமான முடிவுகள் எப்போதுமே வரலாற்றில் கறையாகதான் பதிவாகும்.

நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிப்பது அறமல்ல. ஆனாலும் சில காலமாக நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளைப் போலவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பளிப்பதாக தோன்றுகிறது. பாபர் மசூதி விவகாரத்திலிருந்து, நேற்றைய நிர்பயா பாலியல் கொலை வழக்கு வரை இதற்கு நிறைய உதாரணங்களை காட்டமுடியும். நீதி தேவதை மூளையால் சிந்திக்க வேண்டும். மனசு சொல்வதை கேட்டு தீர்ப்பளிக்கக்கூடாது.

அடுத்து சில சட்டமன்றத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸுக்கு நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிம்மதியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே மத்திய அரசின் டி.ஆர்.பி. இறங்கிக் கொண்டிருக்கும்போது, கசாப் தூக்கிலிடப்பட்டு மீண்டும் டி.ஆர்.பி. எகிறியதை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

அவ்வப்போது இம்மாதிரி தீர்ப்புகள் வரும்போது சீசனலாக மட்டுமே மரணத்தண்டனையை எதிர்க்காமல், கொடூரமான காட்டுமிராண்டித்தனமான.. அதேநேரம் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற இத்தண்டனையை ஒட்டுமொத்தமாக மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டோர் எதிர்த்தாக வேண்டும். மரணத்தண்டனையை ஒழிப்போம் என்று குரல் கொடுப்போரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். மரணத் தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தாக வேண்டும்.

மரணத்தண்டனையை ஒழிக்கக் கோருவது குற்றவாளிகளுக்கு ஆதரவான செயல்பாடு அல்ல என்று பிரித்தறிந்து அனைவரும் பொருள் கொள்ள வேண்டும். கொடூரமான குற்றம் செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனால் அந்த அதிகபட்சத் தண்டனை என்பது மரணத்தண்டனை அல்ல என்பதே நம் கருத்து.

மரணத்தண்டனை குறித்த முந்தைய சில பதிவுகள் :

மரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்!

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

10 கருத்துகள்:

 1. உங்கள் தலைவர் போலில்லாமல் எப்பொழுதும் ஒரே கொள்கையில் நிற்பதற்கு ஒரு வணக்கம்.

  பதிலளிநீக்கு
 2. "கொடூரமான குற்றம் செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனால் அந்த அதிகபட்சத் தண்டனை என்பது மரணத்தண்டனை அல்ல என்பதே நம் கருத்து."
  எனில் அந்த அதிகபட்ச தண்டனை தினம் ஒரு சித்தைரவதையாக இருக்கலாமா?
  எல்லா குற்றங்களுக்கும் மரணதண்டனை எனபது ஏற்கமுடியாவிட்டாலும் பெண்களுக்கு எதிராய் அவர்களின் உடல் பலவீனத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் ஒரேமாதியாக இத்தகைய குற்றங்களை குறைக்கவேண்டுமானால் ஏதாவது ஒரு புள்ளியில் இத்தகைய தீர்ப்பு தேவைப்படத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 3. அதிகபட்ச தண்டனை ஆயுள் அல்லது இரட்டை ஆயுளாக இருக்கலாம். தினம் ஒரு சித்தைரவதை என்றால் குற்றவாளியின் மனநிலைக்கு நாம் போவதாக அர்த்தம்.

  பதிலளிநீக்கு
 4. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் நிலையில் இருந்து பார்த்தால் அந்த நால்வரையும் முதலில் சித்திரவதை செய்து, மயக்கமருந்து கொடுக்காமலே காயடித்து அதன்பிறகு தூக்கிலிடப்படவேண்டும் என்றே தோன்றுகிறது. இவர்களெல்லாம் மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத கொடியவர்கள், அவர்களை மனிதர்களுக்கான தராசில் வைத்து பார்க்கக்கூடாது. இது மாதிரியானவர்களுக்காகவேணும் மரணதண்டனை என்பது இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 5. Think the victim is your daughter or sister.

  பதிலளிநீக்கு
 6. //ஆனால் அந்த அதிகபட்சத் தண்டனை என்பது மரணத்தண்டனை அல்ல என்பதே நம் கருத்து.//

  appadiye ethu thandanai appadingara unga karuththaiyum solli irukkalaame...!

  பதிலளிநீக்கு
 7. Dear Krishna sir,
  I can fully understand your thoughts and views about death sentence and its association towards human civilization. But how do we encounter these uncivilized inhuman nature?
  The law even allows the victim to kill the abusers to protect themselves while they are threatened for life. So lets imagine that the poor girl has killed all these four men in the process of protecting herself. Will that help you to convince yourself with the justice?

  பதிலளிநீக்கு
 8. இந்த வழக்கு நீதிபதிகளால் "exceptionally exceptional" வகையை சேர்ந்ததாக அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சமுதாயத்தில் தற்போது நிலவிவரும் பெண்களுக்கான ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையும், குற்றத்தின் கொடூரத்தன்மையும், நூறு சதவீதம் தண்டனையை ஜஸ்டிபை செய்கிறது.

  ஒரு உயிரை எடுக்கும் அதிகாரம் இயற்கையை தவிர வேறு எந்த ஒரு சக்திக்கும் இந்த மண்ணுலகில கிடையாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், இயற்கை இந்த மனித சமுதாயத்தை ஒழுங்கு படுத்துவதில்லை. நம்முடைய சமுதாயத்தை நெறிப்படுத்தும் உரிமை நம்மிடையே மட்டும் உள்ளது. பல குண பன்முக சமுதாயத்தை சீர்படுத்த, அங்கே ஒரு ஒழுக்கத்தை பேண , பலவீனமான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்க்கும் இது போன்ற கொடூரத்தன்மை கொண்ட வழக்குகளை மட்டும் exceptionally exceptional எனக்கொண்டு மரண தண்டனை வழங்குவதில் தவறில்லை.

  இந்த நான்கு குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தூக்கு நாட்டில் ஒரு அப்பாவி பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவினால் கூட இந்த தண்டனைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்து நியாயப்படுத்திவிடுகிறது. இன்றைய மீடியாக்களால் ஆளப்படு சமுதாயத்தில் இது போன்ற தகவல்கள் மூலை முடுக்கெல்லாம் சென்று POTENTIAL குற்றவாளிகளின் காதுகளை எண்ணங்களை எட்டி அவர்களின் குற்ற உணர்வுகளுக்கு நிச்சயம் ஒரு செக் வைக்கும் என்பதை மறுக்க முடியாது.இங்கே ஒரு INNOCENT உயிரை காப்பதற்கான சூழ்நிலை உருவாகிறது. இதை விட பெரியதா அந்த நான்கு குற்றவாளிகளின் உயிர் ??? இதை நீங்கள் ஏதிர்த்து சரியான வாதத்தை வைக்கமுடிந்தால் ஏன் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

  இங்கே வைக்கப்படும் செக்கை இந்த நகர்தல் (தூக்கு) அன்றி வேறு எந்த நகர்தலும் தர இயலாது. நம்முடைய பிள்ளைகள், சகோதிரிகள், வாழ்க்கை துணைவி , நாளைய உலகை ஆளப்பிறந்த பெண்கள் ஆகிய இவர்களின் பாதுகாப்பை பேணுவது/POTENTIAL குற்றங்களை தடுப்பதற்கு PREVENTIVE ACTION எடுப்பது இந்த சமுதாயதின் கடமை அல்லவா ???

  சில வேலைகளில் மட்டும் இந்த exceptionally exceptional ஆயுதத்தை எடுப்பது அவசியம் ஆகிறது.

  பதிலளிநீக்கு