27 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
 • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
 • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
 • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
 • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.

நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.
உங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.
நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
 • புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்
  • தமிழ்த் தட்டச்சு
  • தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
  • விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல்
  • விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
 • ஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்
  • சிறப்பாக பரப்புரை செய்வது எப்படி?
  • சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி?
  • தானியங்கிகள் பயன்படுத்துவது எப்படி?
  • சிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
 • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
 • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
 • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
 • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
 • நன்றியுரை (3 நிமிடங்கள்)
சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

25 செப்டம்பர், 2013

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!

இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன். ‘பொட்’டென்று பொன்வண்டு சைஸுக்கு ஒரு மழைத்துளி. தலையில் குட்டு மாதிரி விழுந்தது. கொஞ்சநாட்களாக மழையின் வடிவமே மாறிவிட்டது. நமக்கு முன்னெச்சரிக்கை தரும் விதமாக மிதமான தூறல், ஊதக்காற்று எல்லாம் மிஸ்ஸிங். டைரக்டாக அடைமழைதான்.

சிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.

பெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

மழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.
“தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு”

“உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”

ஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

“ஆனா... இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.

“இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.

“நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.

இதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.

நோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.

அந்த கதை என்னவென்றால்...?

‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.

திராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.

எவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண்ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.

திண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

“நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”

“நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”

“திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”

“பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.

“தோ வரேன். ரெடியா இரு”

தோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.

மறுநாளும் போன்.

“திண்டுக்கல்லே எங்கே இருக்கே?”

“அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”

“நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”

வரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.

“ஹலோ தோழர்... கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது...”

“சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்?”

மூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.

“வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.

“டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”

“சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”

“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”

வரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.

“தலை... எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.

“அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.

மறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.

“சென்னைக்கு வந்திருக்கேன் லக்கி”

“என்ன திடீர்னு”

“அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.

ஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

“கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.

மதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.

“பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.

“இதுக்கு மேலேயும் வருவான்னு நம்பிக்கை இருக்கா தோழர்?”

“கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”

மேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.

“சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு ‘ஒரு ரூவா காய்ன் பூத்’தில் இருந்து ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா...” என்று அடுத்த சில நாட்களுக்கு வரவனை கதறிக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் இரவுகளில் அவருக்கு வந்த கனவுகளில்கூட நமீதா வந்ததில்லையாம். ஒரு ரூபாய் போன் பூத்துதான் அடிக்கடி வருமாம். ஆனால் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடிடமிருந்து அதற்குப்பிறகு போன் வந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று சோகம். பதிலுக்கு வரவனையின் ப்ளாக்கில் அனானிமஸ் கமெண்டாக “உன் ஏரியாவை சொல்லுடா, அட்ரஸை கொடுடா” என்று மட்டும் கொஞ்ச நாட்களுக்கு ரெகுலராக கமெண்டுகள் வந்துக் கொண்டிருந்தது.

24 செப்டம்பர், 2013

யார் குருடர்?

“சிதம்பரத்துலேருந்து ரவிச்சந்திரன் பேசுறேன் சார்” என்றுதான் ஆரம்பிப்பார். புதிய தலைமுறையின் முதல் இதழில் இருந்தே தீவிரமான வாசகர். அவருடைய எண் செல்போனில் ஒளிர்ந்தால், எந்த சூழலிலும் போனை எடுக்கத் தவறியதே இல்லை. ஆரம்பத்தில் சில கட்டுரைகளை வாசித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொள்ள எண்களை கேட்பார். இந்தப் பழக்கத்தில் எனக்கு தனிப்பட்ட முறையிலும் நண்பர் ஆனார். அவர் வாசிக்கும் பிற பத்திரிகைகள், புத்தகங்களை பற்றி மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தார்.
நீண்ட காலத்துக்கு என்னைப் பற்றி அவரோ, அவரைப் பற்றி நானோ பெயரைத்தவிர வேறெதுவும் கூடுதலாக அறிந்திருக்கவில்லை. நான் பத்திரிகையில் பணிபுரிகிறேன் என்கிற அளவுக்குதான் அவருக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதைத்தாண்டி எனக்கு வேறெதுவும் தெரியாது.
பிற்பாடு பேசும்போது தெரிந்தது. அவரது வகுப்பு மாணவர்களுக்கு பாடம் தவிர்த்து பத்திரிகைகள் - புத்தகங்கள் வாசிப்பது, இணையத்தில் என்னென்ன தளங்களை பாவிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார். பத்திரிகைகளில் வரும் புத்தக அறிமுகங்களை இடைவிடாமல் வாசித்து, அந்த புத்தகங்களை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார். எங்கள் பத்திரிகையின் தலையங்கத்திலோ, கட்டுரைகளிலோ அடிக்கடி ஏதாவது புத்தகத்தை ஆசிரியர்ரெஃபர்செய்வதுண்டு. அதை வாசித்துவிட்டு, அந்த புத்தகம் எந்த பதிப்பகம், என்ன விலை என்றெல்லாம் போன் செய்து விசாரித்து தெரிந்துக் கொள்வார்.
ஒருமுறை ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு அதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
சீக்கிரமா படிச்சிடுங்க சார். ரொம்ப நல்ல புக்குஎன்றேன்.
ஸ்டூடண்ட்ஸுக்கு எக்ஸாம் லீவு சார். அவங்க வந்துதான் எனக்கு படிச்சி காமிக்கணும்என்றார்.
எனக்கு புரியவில்லை. “நீங்க படிக்கிறதுக்கும், அவங்க லீவுக்கும் என்ன சார் சம்பந்தம்?” என்றேன்.
எனக்கு முற்றிலுமா பார்வை இல்லைங்க. நான் ஏதாவது வாசிக்கணும்னா, மத்தவங்க வாய்விட்டு படிச்சி காமிக்கணும்என்றார்.
அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் மேல்நிலை மாணவர்களுக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர். பார்வையற்ற ஒருவர் மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி இருக்க முடியும்?
ஆரம்பத்தில் ரவிச்சந்திரனுக்கு பார்வை இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பிரச்சினையால் பார்வை போக போக மங்கி முற்றிலுமாக போய்விட்டது. ஆனால், பார்வைக்குறைபாடு தன்னுடைய பணியை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணித்தரமாக நிரூபித்து பணியில் நீடிக்கிறார். பார்வை இருந்தபோது பணிபுரிந்ததைவிட மிகக்கடினமாக இப்போது உழைத்துக் கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி பத்திரிகையில் எழுதவேண்டும் என்று விரும்பியபோது, நாகரிகமாக மறுத்தார். “சிதம்பரத்துக்கு வாங்க, நண்பரா சந்திப்போம்” என்றார். அவரை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை (கடைசியாக போன் மாற்றியபோது அவருடைய எண், பழைய போனில் மாட்டி அழிந்துவிட்டது. இனி அவராக பேசினால்தான் உண்டு).

கடந்த ஒரு வாரமாக வேலைவாய்ப்பு கோரி பார்வையற்ற பட்டதாரிகள் போராடிக் கொண்டிருப்பதும், அவர்களை காட்டுமிராண்டித்தனமாக காவல்துறை நடத்திக்கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது சிதம்பரம் ரவிச்சந்திரன் நினைவுக்கு வருகிறார்.
அவர் மட்டுமல்ல.
விழிகள் பொய்த்தாலும், மனதால் உலகைப் பார்ப்பவர்கள் இவர்கள். இவர்களைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர்?
 “ப்ளையண்ட் எல்லாம் எதுக்கு சார் வேலை கேட்கிறாங்க.. டெலிபோன் பூத்து வைக்கலாம். இல்லைன்னா டிரெயினிலே ரேஷன் கார்ட் கவர் விற்கிறதை தவிர வேறென்ன வேலை அவங்க செஞ்சிட முடியும்?” என்று கொழுப்பெடுத்துப்போய் பஸ்ஸிலும், ரயிலிலும் டைம்பாஸுக்கு பேசும் நாம் குருடர்களா.. தன்னம்பிக்கையோடு, ‘அரசு வேலை கொடுங்கள்.. சிறப்பாக செய்கிறோம்’ என்று தெருவுக்கு வந்து போராடும் இவர்கள் குருடர்களா?

23 செப்டம்பர், 2013

6 மெழுகுவர்த்திகள் : மனித வணிகம்

‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் 2004ஆம் ஆண்டு ‘அடுத்த வீட்டுப் பெண்கள்’ (the girls next door) என்கிற பெயரில் ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியானது. மனித வணிகம் குறித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டுரை, சினிமாக்காரர்களையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இக்கட்டுரையை தழுவி ‘TRADE’ என்கிற பெயரில் 2007ஆம் ஆண்டு ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் முழுநீள சினிமா ஒன்று வெளிவந்தது. கடத்தப்படும் ஒரு பெண். அவளை கடத்திய நிழல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதுதான் படம். விமர்சகர்களும், ரசிகர்களும் இப்படத்தை வெகுவாக கொண்டாடியதாக தெரியவில்லை. ஆனால், வாழ்நாளில் ஒரு படமாவது இந்த கருவில் எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் இருக்கும் திரைப்பட இயக்குனர்களை ஈர்த்தது. விளைவாக நம் தமிழிலும் கூட TRADEஐ அச்சு அசலாக பிரதியெடுத்து ‘விலை’, ‘ஆண்மை தவறேல்’ என்று சில படங்கள் வெளிவந்தன. பெரியதாக ஓடி வசூலைக் குவிக்கவில்லை என்றாலும், இப்படங்களை எடுத்த இயக்குனர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
TRADE வருவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த கதையை, நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். மகாநதி. ஒரு சிறுதவறால் சிதறிவிடுகிறது கமலின் குடும்பம். காணாமல் போன தன்னுடைய மகளை கமல் தேடுவது ஒரு கிளைக்கதையாக விரிகிறது. கமலை ஏமாற்றி சிறைக்கு அனுப்பியவரே, அவருடைய மகளையும் விற்றுவிடுகிறார். ‘ரூட்’ பிடித்துப்போய் கமல் தன்னுடைய மகளை கடைசியில் கல்கத்தாவில் மீட்கிறார். கமல்ஹாசன் கில்லாடி. எழுத்தாளர்களை சினிமாவுக்கு எந்தளவுக்கு உறிஞ்சிக்கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு ரகசியமாக உறிஞ்சிக் கொள்வார். வெளியே அவர்களது பெயர் தெரியவே தெரியாது. மகாநதியில் உறிஞ்சப்பட்டவர் ரா.கி.ர., (தேவர்மகனில் ம.வே.சிவக்குமாரின் பங்கு என்னவென்பது யாருக்காவது தெரியுமா என்ன?)
குழந்தைகளை கடத்தும் மனிதவியாபாரிகள் அவர்களை என்ன செய்கிறார்கள்? ஒன்று; பெண்குழந்தையாக இருந்தால் பாலியல் அடிமைகளாக மாற்றி, அத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இரண்டு; ஆண் குழந்தையாக இருந்தால் பிச்சையெடுக்க வைக்கிறார்கள், அடியாட்களாக, அல்லக்கைகளாக மாற்றுகிறார்கள். மூன்று; ஆணோ, பெண்ணொ.. அவர்களை சிகப்புச் சந்தையின் கச்சாப்பொருள் ஆக்குகிறார்கள் (இதைப்பற்றி விரிவாக அறிய புதிய கலாச்சாரம், மார்ச் 2012 இதழில் வெளிவந்த The Redmarket : மனித உடல் உறுப்புகளின் சந்தை’ கட்டுரையை வாசிக்கவும்).
‘6 மெழுகுவர்த்திகள்’ மனித வணிகம் குறித்த விரிவான பதிவினை தமிழில் உருவாக்கியிருக்கிறது. ஆறாவது பிறந்தநாள் அன்று காணாமல் போன மகனை தேடி கண்டுபிடிக்கும் அப்பாவின் உணர்ச்சிப் பயணம். இந்தப் பயணத்தில் நாயகன் உரசிச்செல்லும் நிழல் மனிதர்கள், அவர்களுடைய பின்னணி என்று பார்வையாளனுக்கு அச்சமூட்டும் கலவரம். படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் இருந்து விழிகளில் நீர் திரையிட, மங்கலாகவே படம் முடியும்வரை காட்சிகள் தெரிகிறது. ஷாம், துரை, ஜெயமோகன் கூட்டணி கண்டிருக்கும் இந்த உச்சம், தமிழ் சினிமாவின் தற்காலப் போக்குக்கு அவசியம்.
‘தங்க மீன்கள்’ பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் ராமுடன் பேசியபோது சொன்னார். “ரெண்டு விதமா தமிழில் படம் எடுக்கலாம். முதலாவது ஜனங்களுக்கு உடனே பிடிச்சி நல்லா ஓடுற படம். ஆனா ஓடி முடிச்சதுமே மறந்துடுவாங்க. ரெண்டாவது உடனே அவ்வளவா ஓடாது. ஆனா ஒரு இருவது, இருவத்தஞ்சி வருஷம் கழிச்சியும் அந்தப் படத்தை மக்கள் நினைவுப்படுத்தி பேசிக்கிட்டிருப்பாங்க. எனக்கு முதலாவது டைப்பில் படமெடுக்க தெரியலை. இரண்டாவது வகை படங்களைதான் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்”. துரை இயக்கியிருக்கும் ‘6 மெழுகுவர்த்திகள்’ இரண்டாவது டைப் படம்தான்.
ஷாம் நடித்த படங்கள் வேண்டுமானால் இதுவரை மொக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் சிறந்த நடிகர்தான். தன்னை நிரூபித்துக்கொள்ளும் வாய்ப்பாக இப்படத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். உடல்மொழி, முகபாவங்கள், உடை, ஒப்பனை என்று அதிகபட்சமான தன்னுடைய உழைப்பை செலுத்தியிருக்கிறார். இனிமேல் வெயிட்டான கருவை சுமந்துக்கொண்டு அலையும் புதுமுக இயக்குனர்களுக்கு ஷாம் நல்ல சாய்ஸ்.
இயக்குனர் துரையும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார். ‘6’ அவர் தோள்மீது பேயாய் ஏறிக்கொண்டு, இறங்கிக் கொள்ளாமல் அடம் பிடித்திருக்கிறது. பொறுமையாய், காலம் எடுத்துக்கொண்டு (படப்பிடிப்பு மட்டுமே ஒன்றரை வருடங்களாம்) நுணுக்கமாக செதுக்கி, செதுக்கி சிறப்பான கலைப்படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். எத்தனை மனிதர்கள், எத்தனை காட்சிகள், எவ்வளவு ஊர்கள். மீனுக்கு காத்திருக்கும் கொக்காக மாறியிருக்காவிட்டால் இப்படத்தை இயக்கும் சாத்தியமே இல்லை.
ஜெயமோகனோடு கூட்டணி அமைத்தது துரையின் சாமர்த்தியம். இந்த நிழலுலக மனிதர்களை சித்தரிப்பதில் அவர் மாஸ்டர். ஏழாவது உலகத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்குலை நடுங்குகிறது. ‘6’-ல் காட்டப்படும் நிழலுகம் ஏழாம் உலகத்திலிருந்து ஓரளவு மாறுபட்டது என்றாலும், அம்மனிதர்களின் குணாதிசயங்களை அசலாக சித்தரிப்பதில் மீண்டும் ஒருமுறை ஜெயமோகன் வெற்றி கண்டிருக்கிறார். வசனம் எழுத பேனாவில் மைக்கு பதிலாக குரூரத்தையும், வன்மத்தையும் ஊற்றியிருக்கிறார். ஜெயமோகனின் பாத்திரங்களில் யாரும் கெட்டவர்கள் அல்ல. அதே நேரம் விக்கிரமன் பட கேரக்டர்களும் இல்லை. அவரவருக்கான நியாய தர்ம, அற விழுமியங்களோடு அவரவர் இருக்கிறார்கள். பிள்ளை பிடித்துக் கொடுக்கும் கடைநிலை பிச்சைக்காரனில் தொடங்கி, போபாலில் வாழும் நெ.1 கடத்தல்காரன் வரை தன்னுடைய வேலையில் இயல்பானவனாக, தன் வேலை குறித்த எவ்விதக் குற்றவுணர்ச்சியோ இல்லாதவனாகவே இருக்கிறார்கள். “பாவம் பண்ணிட்டுதான் இப்படி ஆகியிருக்கேன். இனிமே எனக்கு பாவ புண்ணியம் ஏது?” மாதிரி வசனங்கள் போகிறபோக்கில் வந்தாலும், மிகக்கூர்மையான சமூக விமர்சனங்களை கொண்டிருக்கிறது.
‘தொலைஞ்சுப்போன ஒரு பையனுக்காக ஒருத்தன் இவ்ளோதூரம் மெனக்கெடுவானா?’ மாதிரி விமர்சனங்களை இணையத்தில் காணமுடிகிறது. விபத்திலோ, உடல்நலக் குறைவாலோ குழந்தை இறந்துப் போயிருந்தால் கூட அதை ஏதோ ஒருவகையில் பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியும். தன் உயிரணுவில் பிறந்தவன், தன் ஆண்மையை கவுரப்படுத்தியவன். உயிரோடு எங்கேயோ பிச்சையெடுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு அப்பன் எப்படி ஜீரணிக்க முடியும்? இதை வெறும் சினிமாவென்று கடந்துப்போய்விட முடிந்தால், நம் இதயம் வெறும் இயந்திரம் என்பதாகி விடும்.

‘6 மெழுகுவர்த்திகள்’ உணர்ச்சிகரமான திகில் பயணம். பார்வையாளனுக்கு அவசியமான அனுபவம். இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி டிரெண்டில் நிற்காமல் தனித்துத் தெரிகிறது. இப்போது வேண்டுமானால் ராஜா ராணிக்களின் அலையில் இது அடித்துக்கொண்டுப் போய்விடலாம். ஆனாலும் தமிழின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இப்படத்துக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு.

19 செப்டம்பர், 2013

மூடர் கூடம்

“மூடர் கூடம் சிரிப்புப் படம்னு சொன்னாங்க. எனக்கு சூது கவ்வும் அளவுக்கு சிரிப்பே வரலைப்பா” என்று அலுத்துக் கொண்டார் நண்பர் ஒருவர்.
“அது ரொம்ப சீரியஸ் படம் பாஸ். உங்களுக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க”
“என்னவோ போ. சந்தானமோ, சூரியோ இல்லைன்னா இப்போல்லாம் சிரிப்பே வரமாட்டேங்குது” என்றார்.
நண்பரை போலதான் பலரும் மூடர்கூடத்தை ஏதோ காமெடிப்படம் என்று நினைத்து, தியேட்டருக்கு போய் ஏமாந்துவிடுகிறார்கள். அறிவுஜீவி திரைவிமர்சகர்களும் கூட அபத்த நகைச்சுவை, கருப்பு நகைச்சுவை என்றெல்லாம் சொல்லி, கொஞ்சநஞ்சமாவது படம் ஓட இருந்த வாய்ப்புகளையும் முற்றிலுமாக பறித்துவிட்டார்கள். ஒருவேளை இது இண்டெலெக்சுவல்களின் படமோவென்று வெகுஜன ரசிகர்கள் படத்தை பார்க்கவே அச்சப்படுகிறார்கள். மூடர் கூடம், எந்த மேக்கப்புகளும் இல்லாத இயல்பான படம்.
ஏன் விலங்குகளை பாத்திரங்களாக வைத்து கதை எழுதினீர்கள் என்று கேட்டபோது ஈசாப் சொன்னாராம். “நான் எழுதிய கதைகள் எல்லாமே நான் பார்த்த மனிதர்களுக்கு நடந்த சம்பவங்கள். அக்கதைகளை மனிதர்களை வைத்து எழுதினால், சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள்”. நவீன் ஒரு நவீன ஈசாப். படம் பார்க்கும் உங்களையும், என்னையும் மூடர் என்று சொல்வதற்கு வேறு யார் யார் கதையையோ காட்டி ஏமாற்றியிருக்கிறார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ‘Watched Moodar Koodam. Will review tommorrow” என்று ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் போடுகிறோம். என்னவோ நம்முடைய ரிவ்யூ நெட்டில் வந்துவிட்டால் ஒபாமா, சிரியா மீது போர் தொடுக்கும் முடிவை கைவிட்டு விடப்போகிறாரா அல்லது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி நின்றுவிடப் போகிறதா. இல்லையேல் முப்பது கோடி பேர் இந்த ரிவ்யூவை படித்து திருந்திவிடப் போகிறார்களா.. இவ்வளவு அல்பமாக, அபத்தமாக நடந்துகொள்ளும் நம்மைவிட பெரிய மூடர் வேறெவராவது இருந்துவிட முடியுமா. ‘மூடர் கூடம்நாம் மூடர்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் படம்.
இயக்குனர் சொல்லவிரும்பும் கருத்தை நேரடியாக சொல்லாமல், பார்வையாளர்களாகவே தேடி கண்டுபிடித்து ரசித்துக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பலன் என்னவென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் இது ஜனநாயகம். பார்வையாளனை இப்படிதான் படம் பார்க்கவேண்டும் என்று பொம்மை மாதிரி ஆட்டுவிக்கும் இயக்குனர்தான் சர்வாதிகாரி. மூடர்கூடம் இந்த சர்வாதிகார மரபை தமிழில் உடைத்திருக்கும் முதல் படம். சுருக்கமாகச் சொன்னால் இப்படம் ‘மாடர்ன் ஆர்ட்’ மாதிரி. குவென்டின் பாணி படங்கள் என்று இதற்கு முன்பாக ஓரம்போ, ஆரண்ய காண்டம், நேரம், சூதுகவ்வும் மாதிரி சில படங்களை சொன்னார்கள். அச்சு அசலாக குவென்டினை தமிழுக்கு கொண்டுவந்திருக்கும் முதல் இயக்குனராக நவீனைப் பார்க்கலாம். இது அட்டைக்காப்பி அல்ல. பர்ஃபெக்ட் இன்ஸ்பிரேஷன்.
“நாலு திருடங்க. ஒரு வீட்டை கொள்ளை அடிக்க வர்றாங்க...” பாணியில் ஊன்னா தான்னா தனமாக மூடர்கூடத்தை புரிந்துக் கொண்டால், அது மொக்கைப்படமாகவே தெரியும். படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இடம்பெறும் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடல்தான் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் வெளிப்பாடு. அந்த பொம்மைதான் வாழ்வில் நாம் தேடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியின் குறியீடு. நேரடியாகவே அந்த பொம்மையில் HAPPY LIFE என்று இயக்குனர் க்ளூ கொடுத்தும் புரிந்துகொள்ள முடியாத நாமெல்லாம் ஒன்றுகூடும் திரையரங்கம்தான் மூடர்கூடம். மகிழ்ச்சி நம்மிடையேதான் இருக்கிறது. அதை கண்டுகொள்ள முடியாத மூடர்களாக, அறிவுக் குருடர்களாக இருக்கிறோம் என்கிற எளிமையான மெசேஜைதான் இயக்குனர் தருகிறார். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம் ஞானத்தங்கமே’ என்கிற பாடல்தான் படத்தின் தீம்.
படத்தில் தலைகீழாக நிற்கும் தண்டனையை ஜெயப்பிரகாஷ் குடும்பத்தாருக்கு நாலு திருடர் கும்பல் தருவதெல்லாம் சும்மா நாம் சிரிக்க வைக்கப்பட்ட காட்சியல்ல. எதையாவது தலைகீழாக பார்ப்பதும் ஒரு பரிமாணம்தான். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும், சவால்களையும் ஒருவேளை தலைகீழாக பார்த்தால் சுலபமாக தீர்வுக்கு வந்துவிடலாம். எதிக்ஸ் திருடன் தனக்கு எழுதித்தரப்பட்ட எழுத்துகளை தலைகீழாக பார்ப்பது, அவனை பலமுறை தலைகீழாக நிற்கவைத்தும் அவனால் அந்த பொம்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாதது, யதேச்சையாக பொம்மையை தலைகீழாக பிடித்திருக்கும்போது அவன் கண்டுகொள்வது... இதையெல்லாம் ஒருமுறை மறுபடியும் ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கும்போது, இயக்குனர் தேவையில்லாமல் எதையுமே படத்தில் நுழைக்கவில்லை என்பது புரியும்.
ஒரு பாத்திரமாக நடித்திருக்கும் நவீன் அவ்வப்போது மார்க்சிஸம் பேசிக்கொண்டே இருக்கிறார். இதென்ன தேவையில்லாத இடைச்செருகல் என்று முதலில் சலிப்பாக தோன்றியது. மூடர்கூடம் நம்மை, நம் வாழ்க்கையை சுட்டும் படமென்பதால் வாழ்வியல் குறித்த சிறந்த சித்தாந்தமான ‘மார்க்சிஸம்’ இடம்பெறுவது பொருத்தமானதுதான் என்பதை படம் முடியும்போது உணரமுடிகிறது.
படத்தில் எல்லா கேரக்டர்களுமே அவரளவில் சீரியஸானவர்கள்தான். மூன்றாம் மனிதராக நாம் பார்க்கும்போது ‘காமெடி’யாக தோன்றுகிறார்கள். இப்படிப் பாருங்கள். நமக்கு நம்மைவிட சீரியஸான ஆள் வேறு யாரையும் தெரியாது. நம்மை உற்றுநோக்கும் மற்றவர்களுக்கு அது காமெடியாக தெரியலாம் இல்லையா?
உதாரணத்துக்கு ஆட்டோ குமார் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். “ஏய். எங்க பேட்டையிலே நான் எப்படி தெரிம்மா... அசால்ட் ஆயிடுவே” என்று ரவுசு கொடுப்பவரை பார்க்கும்போது எனக்கு நரேந்திரமோடி நினைவுக்கு வருகிறார். புதுப்பேட்டை ஏரியாவில் தான் எப்படி என்று ஆட்டோகுமார் செய்யும் பில்டப்புக்கும், குஜராத்தில் தான் எப்படி என்று மோடி செய்யும் பில்டப்புக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன?
ஆட்டோகுமாரின் சீனியர் தாதாவான ‘வக்கா’வை பார்த்தால் வைகோ நினைவுக்கு வருகிறார். க்ளைமேக்ஸில் கார்ப்பரேட் ரவுடியான சலீம்பாய், வக்காவை நோக்கி துப்பாக்கி நீட்டிக் கொண்டிருக்கிறார். வக்காவோ மரபான வன்முறை ஆயுதங்களான அரிவாள், மம்பட்டி சகிதம் எதிரில் நிற்கிறார். இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் துப்பாக்கி நீட்டுகிறார். மூவருக்குமே உள்ளுக்குள் உதறல். “நான் சுடமாட்டேன்” என்று சலீம்பாய் முதலில் வாக்குறுதி கொடுக்கிறார். இன்ஸ்பெக்டரும் “நானும் சுடமாட்டேன்” என்று ஒப்பந்தத்துக்கு வருகிறார். வக்காவும் “அப்போன்னா நானும் சுடமாட்டேன்” என்கிறார். கூட இருக்கும் அல்லக்கை “தல நம்ம கையிலேதான் துப்பாக்கியே இல்லையே” என்கிறான். “சுடுறதுக்கு தாண்டா துப்பாக்கி வேணும். சுடமாட்டேன்னு சொல்றதுக்கு எதுக்கு?” என்கிறார். 2016ல் முதல்வர் என்று தமிழருவி பஜனைக் கோஷ்டிகள் வைகோவை முன்னிறுத்துவதும், காலாவதியாகிப் போன கட்சியை வைத்துக்கொண்டு தானும் அதை சீரியஸாக நம்புவதுமாக இருக்கும் வைகோ, வக்காவுக்கு இணையானவர்தான் இல்லையா?

சும்மா உதாரணத்துக்குதான் மோடியும், வைகோவும். மூடர் கூடம் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரமும் உங்களையும், என்னையும்தான் பிரதியெடுத்திருக்கிறது. நீங்களும், நானும், நம்மைப் போன்ற மற்ற மடையர்களும் சேர்ந்ததுதான் உலகம் என்றால் இந்த உலகமே மூடர்கூடம்தானே?

18 செப்டம்பர், 2013

வேடிக்கை வெறியர்கள்

நேற்று மாலை ஆறரை மணியளவில் நண்பர் ஒருவரை அண்ணாசாலையில் சந்திக்க திட்டம். ஆனால் சுமார் ஐந்து மணிக்கு வானம் இருட்டி, அடைமழை கொட்டி ‘உதார்’ காட்டிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் மட்டுமே மழையின் ஆதிக்கம். வானம் மெல்ல வெளுக்க நண்பரை சந்திக்க கிளம்பினேன்.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் அரண்டு விட்டேன். ஈக்காடுதாங்கல் பாலம் முழுக்க மனிதத்தலைகள். மெட்ரோ ரயில் புண்ணியத்தில் சாதாரண நாட்களிலேயே வாகனங்களால் பிதுங்கும் பாலம், திடீர் கூட்டத்தால் திக்குமுக்காடி போயிருந்தது. சில கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனவரிசை நீண்டிருந்த்து. தரைப்பாலமும் வாகனங்கள் நிரம்பி, சில இன்ச்சுகள் முன்னேறுவதற்குள்ளாகவே தாவூ தீர்ந்து டவுசர் கயண்டது. நடப்பதற்கு கூட வழியில்லாமல் டிராஃபிக் ஜாம் ஆகும் ஒரே நகரம் சென்னையாகதான் இருக்க முடியும். ஒன்றாவது கீரிலேயே கிளட்சை பிடித்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிலேட்டர் கொடுத்து, பிரேக் பிடித்து கையெல்லாம் மரத்துப்போனது.
எல்லோருமே ஆற்றுக்கு நடுவில் மெட்ரோ ரயிலுக்கு அமைக்கப்பட்ட தூண்களுக்கு அருகில் அமைந்திருந்த அடிப்பகுதியை மையமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாகன ஓட்டிகள் பலரும் நடுரோட்டில் வண்டியை ‘பார்க்’ செய்து, ஒரு பயலும் முன்னேற முடியாதபடி வன்முறையில் ஈடுபட்டார்கள்.
அடையாறு ஆற்றில் ஏதோ கலவரம் என்று புரிந்துகொண்டேன். சில வருடங்களுக்கு முன்பாக நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒரு கதிர்வீச்சு கருவி வீசப்பட்டு, சென்னைவாசிகள் உயிரைப் பிடித்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்படி இல்லையாயின் யாரோ ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்க வேண்டும். அடையாறு மேம்பாலத்தில் மாதத்துக்கு ஒருவராவது குதித்து உயிர் மாய்த்துக்கொள்வது சமீபகாலமாக சென்னையில் புதியதாக ஏற்பட்டிருக்கும் மரபாகி விட்டது. யாரோ ‘ஸ்பாட்’ மாறி உயிர்நீத்திருக்கிறார்களோ என்றும் யூகித்தேன்.
இவ்வளவு கூட்டம் கூடி அமளிதுமளி ஆகிக்கொண்டிருக்கிறது, ப்ளாஷ் நியூஸ் பித்தம் தலைக்கு ஏறிப்போன ஒரு செய்தி சானல் கூட இன்னும் ஸ்பாட்டுக்கு வரவில்லையே என்று தொழில்நிமித்தமான கவலை வேறு. செல்போனில் கேமிரா வந்துவிட்டதால், சிட்டிஸன் ஜர்னலிஸ்டுகள் ஆகிவிட்ட மக்களே ஆற்றை விதவிதமான கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். செல்போனிலும் கேமிரா என்று சிந்தித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும். போனில் படம் பிடித்து ப்ளாக்கில் போடலாமா என்று எனக்கும் யோசனை வந்து, உடனே சோம்பல் மேலெழுந்து அந்த யோசனையை கைவிட்டேன். இப்போதிருக்கும் செல்போன் வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதில் இருபது படங்கள் எடுத்திருந்தாலே ஆச்சரியம்தான்.
பாலத்துக்கு மேலே சுவரை ஒட்டி எப்படியும் ஒரு ஐநூறு பேர் நின்றிருப்பார்கள். ஆற்றுக்கு நடுவே மெட்ரோ ரயில் பால வேலைக்காக அமைக்கப்பட்ட திட்டு ஒன்றில் ஒரு நூறு பேராவது நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். போலிஸ் படை தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தும், வேடிக்கை வெறியில் மக்கள் யாருமே போலிஸை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை.
நானும் ஆர்வமாக எல்லோரும் பார்க்கும் அதே பகுதியை உற்று, உற்றுப் பார்த்து எதுவும் தென்படாமல் மனம் சலித்துக்கொண்டே முன்னேறிக் கொண்டிருந்தேன். போலிஸ்காரர் ஒருவர் தடியால் என் வண்டியை தட்டி, “நிக்காம போய்யா.. போய்க்கிட்டே இருக்கு” என்று அச்சுறுத்தினார்.
“என்ன சார், என்ன பிரச்சினை?”
“ஒண்ணும் இல்லை. நீ கெளம்புய்யா”
என் கற்புக்கு அடையாளமாக தாலி மாதிரி தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையை நீட்டி, “ப்ரெஸ்ஸு சார்.. என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றேன்.
“அதான் சொல்லிட்டேனே சார். ஒண்ணுமே இல்லைன்னு. ஒரு துணி மூட்டை ஆத்துலே அடிச்சிக்கிட்டு வந்திருக்கு. எவனோ விவரம் கெட்ட விருந்தாளிக்குப் பொறந்த பய ஒருத்தன் வேலைக்கொண்டையை (வார்த்தைப்பிழை) எல்லாம் விட்டுப்போட்டு வேடிக்கை பார்த்திருக்கான். அவனைப் பார்த்து நாலு பேர் வேடிக்கை பார்க்க, நாலு நாற்பதாகி, நாற்பது நானூறு ஆயிடிச்சி” கவுண்டமணி காமெடியில் வரும் ‘கிணத்துலே பாடி’ கதைதான்.
முன்பெல்லாம் பஸ்ஸில் பயணிக்கும்போது நண்பர்கள் ஒரு ‘டெக்னிக்’கை பயன்படுத்துவோம். பஸ் எங்கேயாவது சிக்னலில் நிற்கும்போது, சும்மாவாச்சுக்கும் ஜன்னலைப் பார்த்துவிட்டு ‘ச்சோச்சோ...’ என்று சப்தம் எழுப்புவோம். பஸ் மொத்தமும் என்னவோ ஏதோ என்று ஜன்னலை எட்டிப் பார்க்கும். அங்கே ஒன்றுமேயில்லை என்று தெரிந்தாலும், ஏதாவது தெரியுமாவென்று ஆவலோடு எட்டிப் பார்க்கும். இம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் சுமார் ஃபிகர்களாவது நம்மை சட்டை செய்து, பொருட்படுத்தி பார்ப்பார்கள் என்பதைத்தவிர இந்த விளையாட்டுக்கு வேறெந்த உள்நோக்கமும் இருந்ததில்லை.
ஒன்றுமே இல்லாத ஒன்றை கூட்டம் கூட்டி, வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு வெறித்தனமாக வேடிக்கை பார்க்கும் கூட்டம் உலகில் வேறெங்காவது இருக்குமா என்பது சந்தேகமே. முதல் எறும்பு எந்த வழியில் போகிறதோ, அதே வழியை பின் தொடர்ந்து வரும் நூற்றுக்கணக்கான எறும்புகள் போவதை போலதான் மூடநம்பிக்கையோடு வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறோம். பேசத்தெரிந்த ஆட்டு மந்தைகள் நாம். போஸ்டரில் காட்டப்படும் ’பிட்டு’ தியேட்டரில் நிச்சயம் இருக்காது என்கிற யதார்த்த உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும், ஏதோ ஒரு மூடநம்பிக்கையில் திரும்பத் திரும்ப அஜால் குஜால் திரையரங்குகளுக்கு படையெடுக்கும் தமிழனின் மனோபாவத்தை எப்படிதான் வரையறுப்பது?
‘சூனியத்தைதான் உலகம் உற்று உற்றுப் பார்க்கும்’ என்கிற வாழ்வியலின் மிகச்சிறந்த தத்துவத்தை நேற்று உணர்ந்துக் கொண்டு, ஓரளவுக்கு சீரான போக்குவரத்தில் கலந்து நண்பரைப் பார்க்க விரைந்தேன்.

17 செப்டம்பர், 2013

பலூன்

“அனாதையாய் சாலையில் பறந்துகொண்டிருக்கும் பலூன்களை கண்டிருக்கிறீர்களா. குறிப்பாக வாரயிறுதி இரவுகளில் வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு நிற பலூன்களை பார்க்கலாம். அவை கல்யாண வரவேற்புக்கோ, பிறந்தநாள் விழாவுக்கோ சென்று வந்த குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டவையாக இருக்கக்கூடும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு திரும்பும்போது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சாண்ட்விச்சாய் அமர்ந்திருக்கும் குழந்தை தூக்கக்கலக்கத்தில் தவறவிடும் பலூன்களே அவை.

வீட்டுக்குப் போனதும், தூக்கம் களைந்த எரிச்சலிலும் பலூனை தொலைத்த கையாலாகத்தனத்தை எண்ணியும் குழந்தை எப்படியும் அழும். புது பலூன் வேண்டும் என்று அடம்பிடிக்கும். முன்னேற்பாடான பெற்றோர் என்றால் வீட்டிலேயே ஸ்டாக் வைத்திருக்கும் பலூனை ஊதிக்கொடுத்து சமாளிப்பார்கள். அல்லது அடம் பிடிக்கும் குழந்தை செம சாத்து வாங்கி, கேவிக்கொண்டே தூங்கும்.

ஒரு சப்பை மேட்டருக்கு இத்தனை ஆராய்ச்சி தேவையா என்று கேட்காதீர்கள். இனிமேல் இரவுப் பயணங்களில் இம்மாதிரி பலூன்களை பார்த்ததுமே நீங்களும் இப்படித்தான் என்னை மாதிரியே ஆராய்ந்து மன உளைச்சல் அடையப் போகிறீர்கள். ஏனெனில் உங்கள் கண் முன்னால் பறந்துப் போவது வெறும் பலூன் அல்ல. ஒரு குழந்தையின் தற்காலிக மகிழ்ச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

நானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு செம கைத்தட்டல். நண்பரின் பொம்மைக்கடை திறப்புவிழா. திறந்துவைத்து பேச ஒப்புக்கொண்ட நடிகை, திடீரென்று ஏதோ ஷூட்டிங்குக்கு மும்பை போய்விட்டாராம். விழாவை ஒப்பேற்ற விருந்தினராக வந்த என்னை மாதிரி இரண்டு மூன்று பேரை பேசவைத்து சமாளித்தார் நண்பர். எதையாவது பேசவேண்டுமே என்பதால் திட்டமிடப்படாத இந்த திடீர் உரையை பேசினேன். உண்மையில் என் உரையில் அமைந்திருந்தது மாதிரி எனக்கு பெரிய பலூனாபிமானமோ, குழந்தைகள் மீது அக்கறையோ எதுவுமில்லை. வந்திருந்தவர்களை ஈர்க்க வேண்டுமே என்று வலிய திணித்த உணர்ச்சிகள் இவை.

நண்பர் அருமையான இரவு உணவை ஏற்பாடு செய்திருந்தார். சாப்பிடும்போது என்னை பாராட்டாத ஆளே இல்லை. எனக்கு கிடைக்கும் இந்த பெருமையை எல்லாம் பக்கத்தில் நின்று பார்க்க என்னுடைய மனைவியையும், மாமியாரையும் அழைத்துவரவில்லையே என்று நொந்துகொண்டேன். எல்லாம் முடிந்து கிளம்பும்போது நேரம் இரவு பத்தை தாண்டியிருந்தது. பல்ஸரை கிக்கி சீறவிட்டேன்.

இரவு பன்னிரெண்டுக்கும் கூட நெரிசலாக இருக்கும் அண்ணாசாலை ஏனோ அன்று வெறிச்சோடிப் போயிருந்தது. எழுபதில் வண்டி அனாயசமாக பறந்தது. முகத்தில் மோதிய காற்று உற்சாகமளித்தது. சைதாப்பேட்டையை தாண்டும்போது வானம் இருட்டத் தொடங்குவதாக உணர்வு. தூரத்தில் மின்னல் பளிச்சிட்டது. காற்றில் ஈரத்தை உணர, அடுத்த அரை மணி நேரத்தில் வானம் பிளந்து பேய்மழை கொட்டப் போகிறது என்று யூகித்தேன். லேசான ரம்மியமான மண்வாசனை. விரைவாக வீடு சேரும் அவசரத்தில் ஆக்ஸிலேட்டரை கூடுதலாக முறுக்கினேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் கிண்டியை தொட்டேன். பாலத்துக்கு அருகிலிருந்த நட்சத்திர ஓட்டல் வாசலில் கசகசவென்று போக்குவரத்து நெரிசல். பணக்காரர்களுக்கு பார்ட்டிக்குப் போவதைத் தவிர வேறு வேலையே இல்லை.

வீட்டுக்கு போக வேண்டிய அவசரத்தில் இருந்த நான் பாலத்தில் ஏறினேன். ஒரு சுற்று சுற்றி தாம்பரம் போகவேண்டிய வழியை அடைந்தேன். பாலத்தில் இருந்து இறங்கும்போதுதான் கவனித்தேன். வெள்ளை நிற பலூன் ஒன்று காற்றில் இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தது. ஏதோ இனம்புரியாத உணர்வு உள்ளத்தை உந்த, வண்டியின் வேகத்தை குறைத்தேன். இண்டிகேட்டரை இயக்கி பலூனுக்கு அருகாக வண்டியை ஓரங்கட்டினேன். அந்த பலூனை எடுத்து வழியில் எதிர்படும் முதல் குழந்தையிடம் கையளிக்க வேண்டும். அந்த பிஞ்சு முகத்தில் ஏற்படும் குதூகலத்தை ரசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நல்லவிதமாக வாழ்க்கையில் இதுவரை நான் யோசித்ததே இல்லை. ஒரே நாளில் ஏன் இப்படி மாறிவிட்டேன்?

அலைந்துக்கொண்டிருந்த பலூனை இரு கை நீட்டி தொட்டதுதான் தாமதம். தலை கிறுகிறுக்கத் தொடங்கியது. கால்கள் பிடிமானம் இல்லாமல் தரை நழுவியது. பாலம் இடிந்து விழுந்துக் கொண்டிருக்கிறதா. சென்னையில் பூகம்பமா. இல்லை, நான் மயங்கிக் கொண்டிருக்கிறேனா. எதுவுமே புரியவில்லை.

கண்விழித்து, மலங்க மலங்க நான் பார்த்தபோது வெள்ளைச்சட்டையும், நீலநிற பேண்டும் அணிந்திருந்த கருப்பான ஒருவன் என் எதிரில் நின்றிருந்தான். விகாரமாக சிரித்தான். முட்டைக்கண், தெத்துப்பல் என்று அவனை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

“இப்படித்தாம்பா எனக்கும் ரெண்டு நாளைக்கு முன்னால போரூர் சிக்னலாண்ட ஆச்சி. நல்லவேளையா நீ தொட்டியா. நான் தப்பிச்சேன். உன்னையும் எவனாவது இளிச்சவாயன் தொடுவான். அதுவரைக்கும் வெயிட் பண்ணு” சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பேய் மாதிரி ஓட ஆரம்பித்தான். அவன் சொன்னது எக்கோவாக திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.

யெஸ். நம்பினால் நம்புங்கள். நானே பலூனாக மாறிவிட்டேன்.

14 செப்டம்பர், 2013

தூக்குத்தண்டனையை தூக்கில் ஏற்றுவோம்

காட்டுமிராண்டித்தனமான மரணத்தண்டனை நாகரிக உலகில் நீடிக்கக் கூடாது. நிர்பயா வழக்கு, ராஜீவ் கொலை வழக்கு என்று தனித்தனியாக வழக்கு வாரியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக மரணத்தண்டனையை எதிர்ப்பதே நாகரிகம் பெற்ற மனிதனின் நிலைப்பாடாக இருக்க முடியும்.

டெல்லி பாலியல் குற்றத்தில் நான்கு பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு கலைஞர் கருத்து கூறியிருக்கிறார். “தூக்குத்தண்டனை குறித்து எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், இந்த குறிப்பிட்ட குற்றத்தை பொறுத்தவரை நீதிபதிகள் சரியான தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள்” என்று அவர் நேற்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் அரசியல்வாதி. இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சியை வெற்றிபெற செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே பொதுமக்களின் செண்டிமெண்டுக்கு எதிரான எந்த கருத்தையும் இச்சூழலில் அவரால் சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி நிர்ப்பந்தங்கள் இல்லாத சூழலில் அவர் ஏற்கனவே சொல்லியிருப்பதைதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். “தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு, சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று அழுத்தம் திருத்தமாக மரணத்தண்டனை குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தூக்குத்தண்டனையை ஆதரிப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த ஒரு கொடூர குற்றத்தையும் கண்டவுடனேயே, கேட்டவுடனேயே “இவனையெல்லாம் நடுத்தெருவுலே வெச்சி நாய் மாதிரி சுட்டுக் கொல்லணும்” என்கிற கருத்தினை உடனடியாக உச்சரிப்பவர்கள். இது அறிவுபூர்வமான எண்ணமாக நிச்சயம் ஆகாது. உணர்வுபூர்வமான முடிவுகள் எப்போதுமே வரலாற்றில் கறையாகதான் பதிவாகும்.

நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிப்பது அறமல்ல. ஆனாலும் சில காலமாக நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளைப் போலவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பளிப்பதாக தோன்றுகிறது. பாபர் மசூதி விவகாரத்திலிருந்து, நேற்றைய நிர்பயா பாலியல் கொலை வழக்கு வரை இதற்கு நிறைய உதாரணங்களை காட்டமுடியும். நீதி தேவதை மூளையால் சிந்திக்க வேண்டும். மனசு சொல்வதை கேட்டு தீர்ப்பளிக்கக்கூடாது.

அடுத்து சில சட்டமன்றத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸுக்கு நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிம்மதியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே மத்திய அரசின் டி.ஆர்.பி. இறங்கிக் கொண்டிருக்கும்போது, கசாப் தூக்கிலிடப்பட்டு மீண்டும் டி.ஆர்.பி. எகிறியதை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

அவ்வப்போது இம்மாதிரி தீர்ப்புகள் வரும்போது சீசனலாக மட்டுமே மரணத்தண்டனையை எதிர்க்காமல், கொடூரமான காட்டுமிராண்டித்தனமான.. அதேநேரம் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற இத்தண்டனையை ஒட்டுமொத்தமாக மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டோர் எதிர்த்தாக வேண்டும். மரணத்தண்டனையை ஒழிப்போம் என்று குரல் கொடுப்போரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். மரணத் தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தாக வேண்டும்.

மரணத்தண்டனையை ஒழிக்கக் கோருவது குற்றவாளிகளுக்கு ஆதரவான செயல்பாடு அல்ல என்று பிரித்தறிந்து அனைவரும் பொருள் கொள்ள வேண்டும். கொடூரமான குற்றம் செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனால் அந்த அதிகபட்சத் தண்டனை என்பது மரணத்தண்டனை அல்ல என்பதே நம் கருத்து.

மரணத்தண்டனை குறித்த முந்தைய சில பதிவுகள் :

மரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்!

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

9 செப்டம்பர், 2013

வருத்தப்படுங்கள் வாலிபர்களே!

தமிழ்ப் படங்களிடம் குறிப்பாக மசாலாப் படங்களிடம்- லாஜிக்கோ, சமூக பொறுப்புணர்வையோ அல்லது வேறு ஏதேனும் கருமாந்திரத்தையோ நாம் எதிர்ப்பார்க்க வேண்டியது அவசியமில்லை. சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள் தரத்தில் சுமாராக இருந்தாலும் கூட அவற்றை குறைகூறி விமர்சிப்பது நம் கொள்கையல்ல. குமுதம் நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் இது. ஆனால், தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றினை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் செய்திருக்கிறது எனும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.
தர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். வடமாநிலங்களில் வழக்கத்திலிருக்கும் கவுரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டி கலாச்சாரம் சமீபமாக தமிழகத்திலும் அதிகரித்திருக்கிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தைதான் நகைச்சுவையாகப் பார்க்கிறார் அறிமுக இயக்குனர் பொன்ராம்.
வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. எம்.ஏ., எம்.பில் (?) படித்து வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது ரொமான்ஸ் எதுவும் வரவில்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் க்ளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பை கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.
படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கவுரவத்துக்காக தன் பெண்ணை கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜ் அறிமுகப்படுத்தப் படுகிறார். அவருடைய அடியாட்கள் இந்த கொலையை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை சத்யராஜ் கவுரவமாக கருதுகிறார். கடைசிக் காலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா பக்திப்படங்களாக நடித்துத் தள்ளியதைப் போல, பெரியார் கொள்கைகளுக்கு எதிரான வேடங்களையே இனமான நடிகரான சத்யராஜ் தற்போது தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நம் விரலை கொண்டேதான் நம் கண்களை குத்திக் கொள்கிறோம்.
படத்தில் சத்யராஜ் என்ன சாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் பழனி வட்டார கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. மூன்று பெண்களுக்கு அப்பா. யாருடனாவது ஓடிவிடுவார்களோ என்கிற அச்சத்தில் தன் பெண்களுக்கு படிக்கும் வயதிலேயே திருமணம் செய்துவிடுகிறார். அவருடைய கடைசிப் பெண்ணுக்கும் அம்மாதிரி கல்யாணம் செய்ய முயற்சிக்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஹீரோவின் சாதி பற்றிய விவரங்களை யூகிப்பது சிரமம். சத்யராஜின் சாதிதான் என்பது மாதிரி தெரிந்தாலும், ஹீரோவின் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.
இந்தப் பின்னணிகளைக் கொண்டுதான் முழுக்க முழுக்க காமெடி வசனங்களோடு (ஒவ்வொரு காட்சியும் படுநீளம். அடுத்த படமெடுக்க வாய்ப்பு கிடைக்குமோ என்னவோவென்று எல்லா கதையையும் இதிலேயே சொல்லிவிட இயக்குனர் முயற்சித்திருக்கிறார்) மூன்று மணி நேர நகைச்சுவைக் காவியமாக வந்திருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடு என்றால் பாமகவினரின் எதிர்ப்பும், வாதமும் முழுக்க முழுக்க நியாயமானவையே. காதல் திருமண விவகாரம் குறித்து பாமகவினரின் கருத்துகளில் கீழ்க்கண்ட அம்சங்கள், அதிலிருக்கும் வார்த்தை கவர்ச்சிக்காக புகழ்பெற்றவை  (பாமகவினர் இவ்விவகாரத்தில் பேசும் சில கருத்துகளை பரிசீலித்து விவாதிக்க வேண்டும். They have proper data &  statistics. ஒட்டுமொத்தமாக பாமகவை கழுவில் ஏற்றுவது கண்மூடித்தனமான பாசிஸம்) :
 • பணக்கார / பெரிய இடத்துப் பெண்களாக பார்த்து காதலிக்கிறார்கள். பிற்பாடு பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.
 • ஜீன்ஸ் பேண்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.
 • மைனர் பெண்களை காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்
இப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.

கவுரவக் கொலை பின்னணியை காமெடியாகப் பார்ப்போம் என்கிற லட்சியத்தோடு வந்திருக்கிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்கும் சோசியல் நெட்வொர்க் புரட்சியாளர்கள் “நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்” என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டை தண்ணி வரண்டுப் போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், இரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை ‘சூப்பர்’ என்று படம் பார்த்துவிட்டு வரும்போது நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் ஹிட் உறுதி. தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு ‘கருத்து’ என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்பதுதான் நம் கேள்வி.

7 செப்டம்பர், 2013

மிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.

இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.

செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.

இது நடக்கும்போது நான் சிறுவனாக இருந்திருப்பேன். விகடனோடு பரிச்சயம் இருந்ததா என்றும் நினைவில்லை. எனவே சம்பவம் பற்றி தெரியவில்லை. ’தங்கமீன்கள்’ திரைப்படம் குறித்து விகடன் எழுதிய விமர்சனத்துக்கு, எதிர்வினையாக இயக்குனர் ராம் எழுதிய பதிவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மூத்தப் பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை சொன்னார். தங்கமீன்கள் விமர்சனம் குறித்த ராமின் தரப்பையும், விகடனின் விளக்கத்தையும் அடுத்தவாரம் விகடன் பிரசுரிக்கப் போகிறது என்று ராம் எழுதியிருக்கிறார். ஐ யாம் வெயிட்டிங்.

மிருதங்க சக்கரவத்தி காலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில், அதையும் தங்கமீன்கள் குறித்த விளக்கம் வரும் இதழிலேயே, விகடன் பொக்கிஷம் ஆட்கள் மீள்பிரசுரித்தால் சுவையாக இருப்பதோடு, விகடனின் பாரம்பரியப் பெருமையையும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும்.