6 ஆகஸ்ட், 2013

சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா?

ஏழைகள் என்பவர்கள் யார் என்பதை வரையறுக்க பல நூறு கோடி செலவுகள் செய்து பல்லாயிரக்கணக்கான பொருளாதார நிபுணர்கள் இரவும் பகலுமாக பல வருடமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து திட்டக்குழுவின் வரையறையின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் மாதத்துக்கு ரூ.1,000/-, கிராமப்புறங்களில் ரூ.816/-க்கு வருமானம் பெறுபவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வரமாட்டார்கள் என்கிற கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் நாடு முழுக்க யார் ஏழைகள் என்கிற விவாதம் பொருளாதார ஆர்வலர்களிடையே சூடு பிடித்திருக்கிறது. திட்டக்குழுவின் வரையறையை பலர் வழக்கம்போல எதிர்க்கிறார்கள். பலர் வழக்கம்போல ஆதரிக்கிறார்கள். இந்த விவாதங்களே அர்த்தமற்றவை. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படித்த பொருளாதார நிபுணர்கள், பல்லாயிரம் கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்டிருக்கும் வரையறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற கருத்துக்கே இடமில்லை.

தோழர் பத்ரிசேஷாத்ரி ‘ஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?’ என்று ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். ஒரு நாளைக்கு ரூ.30/-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத்தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியுமென்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தார். இதை ஏற்றுக்கொள்ளாமல் வாடகை, கல்வி, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், ஆடை, தொலைபேசி, இத்யாதி இத்யாதிக்கெல்லாம் ஆகும் செலவு என்ன என்று வினவு தோழர்கள் கணக்கு கேட்கிறார்கள். இதையடுத்து பத்ரி மீண்டும் தன்னுடைய ஆய்வை மீளாய்வு செய்யும் விதமாக சுர்ஜித் பல்லாவின் கட்டுரை அடிப்படையில் இன்று ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் சுமாரான ஏழை மக்கள் ஒரு நாளைக்கு உணவுக்காக ரூ.12/-தான் செலவழிக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. பணக்கார நகரகப் பகுதிகளிலேயே கூட ரூ.40/-தான் செலவழிக்கப்படுகிறதாம். நிலைமை இப்படியிருக்கையில் வினவுதோழர்களின் கேள்விகளையும், பதிவையும் நாம் கேலிக்குரியதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

உண்மையில் ரூ.12/- என்பதே அதிகமென்றுதான் நமக்கு தோன்றுகிறது. இந்தியாவில் ஏராளமான காடுகள் இருக்கின்றன. அங்கே கிழங்குகளும், பழங்களும் இலவசமாகவே காய்க்கின்றன. அவற்றை பறித்து உண்பதை விட்டுவிட்டு மக்கள் தொழிற்சாலைகளிலும், நிலங்களிலும் இயந்திரங்கள் மாதிரி உழைத்து பிழைப்பது என்பது இயற்கைக்கு முரணானதும், வெறும் ஆடம்பர மோகமுமே ஆகும். கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ், ஓலை கூரைகளுக்கு கீழேதான் வசிக்கவேண்டும் என்று மக்கள் அடம்பிடிப்பது நியாயமுமல்ல. மலையிலும், காடுகளிலும் குகைகள் அமைத்து ஐந்து பைசா வாடகைச்செலவு இல்லாமல் வசிக்க முடியுமே? போத்தீஸிலும், சென்னை சில்க்கிலும் ஆடி தள்ளுபடியில் உடைவாங்கி அணிந்தால்தான் உடையா.. ஆதிமனிதன் அப்படிதான் உடை அணிந்தானா.. இலைகளும், தழைகளும் இலவசம்தானே? நதிகளும், குளங்களும், குட்டைகளும் ஓசியில்தானே அமைந்திருக்கின்றன... அவற்றில் நீர் அள்ளிக் குடித்தால் தாகம் அடங்காதா?

ஏழை மக்கள் எனப்படுகிறவர்கள் டாஸ்மாக், சினிமா, பீடி, சிகரெட்டு, பாக்கு என்று ஆடம்பரமாக வீண்செலவு செய்வதால்தான் இன்று நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. அரை பவுன் தங்கத்தில் தாலி செய்துப் போட்டால்தான் அவர்களுக்கு தாலிபாக்கியம் நிற்குமா? ஏன்.. வெள்ளி, பித்தளையெல்லாம் வேலைக்கு ஆகாதா.. டைரக்டாக ஹீரோதானா?

பத்ரி பெரிய மனது வைத்து, ஏழைகளுக்கு விலையுயர்ந்த உணவு தரவேண்டும் என்பது வெறுங்கனவு என்று சொல்லியிருக்கிறார். ஏழைகளுக்கு வீடு, கல்வி, போக்குவரத்து, லொட்டு லொசுக்கெல்லாம் கூட அனாவசியமான கனவுதான். ஆரண்ய காண்டத்தில் ராமபிரான் எப்படி வாழ்ந்தார்.. அவருக்கென்ன உணவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12/-ஆ தேவைப்பட்டது.. அவரும் சீதைபிராட்டியும், லட்சுமணனும் ஆயிரக்கணக்கில் செலவு செய்தா வாழ்ந்தார்கள்... அவர்களை மாதிரி அனைவரும் மனது வைத்தால் வாழ முடியாதா... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் ஏழைகள் மட்டுமல்ல, யாருமே வசிக்க, உயிர்வாழ பணமே தேவையில்லை என்பதுதான் நிதர்சனம். இது புரியாமல், இந்திய அரசாங்கமும் அதன் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களும் மிகத்தாராளமாக நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டை எதிர்ப்பது முட்டாள்த்தனம்.

13 கருத்துகள்:

 1. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படித்த பொருளாதார நிபுணர்கள், பல்லாயிரம் கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்டிருக்கும் வரையறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற கருத்துக்கே இடமில்லை. - சொன்னவர் யாரு, அமைச்சர் நாராயணசாமியா இருக்குமோ?

  பதிலளிநீக்கு
 2. நீண்ட நாட்களுக்குப் பிறகு அட்டகாசமான ஒரு பதிவு! நிச்சயம் திருவாளர். பத்திரிக்கு இது புரியாது! ஓட்ஸ் கஞ்சி குடித்தால் மூளை வளர்ச்சி குன்றும் என்பது எனது சமீபத்திய கண்டுபிடிப்பு! காப்பி ரைட்ஸ் வாங்க காத்துக்கொண்டிருக்கிறேன்!

  அன்புடன்,
  'நியுட்' நண்டு

  பதிலளிநீக்கு
 3. சக ஊடகவியலாளர் பத்ரியோட கட்டுரையை நேர்மையாக வாசித்து கருத்து சொல்ல முடியாத நீங்க ஒரு பத்திரிகையாளரா. இதை வாசித்து கருத்து சொல்லுங்க.

  http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1860:2013-07-31-18-39-25&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

  பதிலளிநீக்கு
 4. ஆட Supperrr நீங்களும் இறங்கியாச்ச

  வினவுதோழர்களின் கேள்விகளையும், பதிவையும் நாம் கேலிக்குரியதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

  உங்களுங்கும் வினவு அடுத்த பதிவில் இருக்கிறது கச்சேரி.......... பிரதர்

  பதிலளிநீக்கு
 5. உண்மையில் ரூ.12/- என்பதே அதிகமென்றுதான் நமக்கு தோன்றுகிறது. இந்தியாவில் ஏராளமான காடுகள் இருக்கின்றன. அங்கே கிழங்குகளும், பழங்களும் இலவசமாகவே காய்க்கின்றன. அவற்றை பறித்து உண்பதை விட்டுவிட்டு மக்கள் தொழிற்சாலைகளிலும், நிலங்களிலும் இயந்திரங்கள் மாதிரி உழைத்து பிழைப்பது என்பது இயற்கைக்கு முரணானதும், வெறும் ஆடம்பர மோகமுமே ஆகும். கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ், ஓலை கூரைகளுக்கு கீழேதான் வசிக்கவேண்டும் என்று மக்கள் அடம்பிடிப்பது நியாயமுமல்ல. மலையிலும், காடுகளிலும் குகைகள் அமைத்து ஐந்து பைசா வாடகைச்செலவு இல்லாமல் வசிக்க முடியுமே? போத்தீஸிலும், சென்னை சில்க்கிலும் ஆடி தள்ளுபடியில் உடைவாங்கி அணிந்தால்தான் உடையா.. ஆதிமனிதன் அப்படிதான் உடை அணிந்தானா.. இலைகளும், தழைகளும் இலவசம்தானே? நதிகளும், குளங்களும், குட்டைகளும் ஓசியில்தானே அமைந்திருக்கின்றன... அவற்றில் நீர் அள்ளிக் குடித்தால் தாகம் அடங்காதா?

  பதிலளிநீக்கு
 6. எனக்கு ஒரு நாள் சமையல் செலவு முப்பது ஐந்து ரூபாய் ஆகிறது.
  இது காய்கறி, அரிசி, மளிகை பொருள் & கியாஸ் செலவு மட்டும்.

  இதில் பால், அசைவம், சோப்பு, காஸ்மெடிக்ஸ் சேர்க்கவில்லை.

  இது இல்லை என்பவர்கள், செலவு கணக்கு எழுதாதவர்கள் அல்லது எழுதியதை பார்க்காமல் உணர்ச்சி மிகுந்து மறுப்பவர்கள்.

  பதிலளிநீக்கு
 7. யுவகிருஷ்ணா, நீங்கள் பதிந்தது நக்கலாக தோன்றினாலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதில் பல உண்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.

  இந்த கட்டுரையை படித்துப் பார்க்கவும்: http://www.thehindu.com/opinion/columns/Kalpana_Sharma/naturally-rich/article4985247.ece

  பதிலளிநீக்கு