20 ஜூன், 2013

சாணக்கிய சரித்திரத் தலைவி

புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான். ராஜ்யசபா தேர்தலில் அவரது ராஜதந்திரத்தை தமிழக ஊடகங்கள் எப்படியெல்லாம் மெச்சுகின்றன என்பதைப் பார்த்தாலே அவரது புரட்சி என்னவென்று உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். அதனால் காலியாகும் எங்கள் ராஜ்யசபா சீட்டை எங்களுக்கே தரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரினார்கள். ஆனால் டெல்லி சென்ற புரட்சித்தலைவியோ ஐந்து இடங்களிலும் புரட்சித்தலைவரின் கழகமே போட்டியிடும் என்று அறிவித்தார். அது மட்டுமின்றி நாற்பதும் எனக்கே என்றுகூறி ஆறு பாலில் பண்ணிரெண்டு சிக்ஸர் அடித்தார். இதன் மூலமாக அகில இந்திய கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள் அவரை தேடிவந்து வாய்க்கரிசி.. மன்னிக்கவும் வாக்கு கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

சென்னைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது. ராஜ்யசபாவில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு முப்பத்தி நான்கு ஓட்டுகள் வேண்டுமாம். அப்படிப் பார்த்தால் ஐந்து x முப்பத்தி நான்கு = நூற்றி எழுபது. கழகத்துக்கு இருப்பதோ (சரத்குமார் மாதிரி உதிரிகளையும் சேர்த்து) நூற்றி ஐம்பத்து ஒன்று உறுப்பினர்கள்தான். சீமான், வைகோ, தாபா போன்றோர் ஓட்டுபோட அனுமதியில்லை என்று தேர்தல் கமிஷன் வேறு கழகத்திற்கு எதிராக காய் நகர்த்தியது. எப்படிப் பார்த்தாலும் ஐந்தாவது வேட்பாளர் தோற்பது உறுதி. இதையெல்லாம் கணக்கு போட்டுதான் ராஜதந்திரத்தோடு ஓர் உறுப்பினரை வாபஸ் பெறவைத்து, அவரை வாரியத்தலைவராக்கி தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனம் என்னவென்பதை உலகுக்கே பறைசாற்றினார். எனவேதான் ராஜ்யசபா தேர்தலில் குதிரைப் பேரத்தை ஒழித்த ஜான்ஸிராணி என்று வார இதழ் ஒன்று அவருக்கு ‘ராஜ்யபரணி’ பாடியிருக்கிறது. தேமுதிக என்கிற கட்சியில் ‘தொகுதிப் பிரச்சினைகளைப் பேச முதல்வரை சந்தித்த கோஷ்டி’ என்று புதுப்பிரிவை உருவாக்கியதன் மூலமாகவே குதிரைப்பேரத்தை அவர் ஒழித்திருக்கிறார் என்பதை அந்த இதழ் குறிப்பிட மறந்துவிட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலமாக ராஜ்யசபாவுக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் புரட்சித்தலைவியால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற நிலையை அகில இந்திய அளவிலும் புரட்சித்தலைவி ஏற்படுத்தியிருக்கிறார். கனிமொழி, ராஜா என்று யார் வென்றாலும் அவர்கள் புரட்சித்தலைவியின் தயவோடுதான் பாராளுமன்றத்துக்கு சென்றாக வேண்டும். அடுத்த முறை மன்மோகன் சிங் ராஜ்யசபாவுக்கு நிற்கவேண்டுமானால் கூட புரட்சித்தலைவியின் ஆதரவு இல்லாமல் அது முடியாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. கிங் மேக்கர், குயின் மேக்கர், மீல் மேக்கர் என்று எல்லா மேக்கராகவும் புரட்சித்தலைவியே நிலைபெற்றிருக்கிறார்.

இதையெல்லாம் விட புரட்சித்தலைவியின் மிகச்சிறந்த அரசியல் காய்நகர்த்தல் தற்போது நடந்திருக்கிறது. அரசியல் நோக்கர்களும், அரசியல் இதழாளர்களும் அதை இன்னும் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் உலக அரசியல் வரலாற்றின் புரநானூற்றை படைக்கும் புரட்சித்தலைவியை நிச்சயம் மெச்சியிருப்பார்கள். நாட்டுக்கு அவசியமான, சமகாலத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையைப் பற்றி அசாம் மாநில முதல்வருக்கு அம்மா கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் எங்கள் வண்டலூர் பூங்காவில் போதுமான காட்டெருமைகள் உள்ளன. உங்களுக்கு ஒரு ஜோடி காட்டெருமையை பரிசாக வழங்கவிருக்கிறோம். பதிலுக்கு நீங்கள் ஒரு ஜோடி காண்டாமிருகத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அசாம் முதல்வர் தருண்கோகாய் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை இங்கே மனதில் நிறுத்திக்கொண்டு இந்த அரசியல் நடவடிக்கையை நாம் பார்க்கவேண்டும். இதையடுத்து தருண்கோகாயும் அசாம் மாநில பிரச்சினைகளை தீர்க்கக்கோரி புரட்சித்தலைவியை கோட்டைக்கு வந்து சந்தித்து விடுவாரோ என்று டெல்லியும், இத்தாலியும் கலங்கிப் போயிருக்கிறது. காட்டெருமைக்குப் பதிலாக காண்டாமிருகம் என்கிற இந்த புதிய அரசியல் கணக்கு இதுவரை உலக அரசியல் சரித்திரம் சந்தித்திராதது.

முன்பாக இதே வண்டலூரில் பிறந்த புலிகளுக்கு புரட்சித்தலைவி பெயர் வைத்து தனக்கு தமிழின உணர்வாளர்களால் வழங்கப்பட்ட ஈழத்தாய் பட்டத்துக்கு நியாயம் செய்ததும் நமக்கு நினைவிருக்கலாம். மேலும் முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தி, யானை டாக்டர் என்று கதை எழுதிய ஜெயமோகன் மாதிரி தீவிர இலக்கியவாதிகளையும் தனக்கு ஆதரவான போக்குக்கு மடைமாற்றிய அவரது அரசியல் தொலைநோக்குப் பார்வையையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

நாட்டுக்கு மட்டுமல்ல. காட்டுக்கும்தான் தான் ராணி என்பதை இம்மாதிரி விலங்கின அரசியல் மூவ்கள் மூலமாக புரட்சித்தலைவி தொடர்ச்சியாக உறுதிசெய்து வருகிறார் என்று இந்தியாவே மூக்கின் மேல் விரல்வைத்து சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை அண்ணாந்து பார்த்த வண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தியாவில் எது நடந்தாலும் அது புரட்சித்தலைவியால் நடந்ததாகவே இருக்கும்.

8 கருத்துகள்:

 1. Super. அனைத்து விமர்சகர்களும்் அம்மாவிற்க்குஜால்ரா போடும்போடும்போது , நீங்கள் தைகிரியமாக விமர்சனம். செய்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. யாரங்கே? இந்த லக்கிலுக் தளத்தை உடனேதடைசெய்யுங்கள்!

  பதிலளிநீக்கு
 3. ‘தொகுதிப் பிரச்சினைகளைப் பேச முதல்வரை சந்தித்த கோஷ்டி’ என்று புதுப்பிரிவை உருவாக்கியதன் மூலமாகவே குதிரைப்பேரத்தை அவர் ஒழித்திருக்கிறார் என்பதை அந்த இதழ் குறிப்பிட மறந்துவிட்டது'

  உண்மையிலேயே சிந்திக்கவும் சிரிக்கவும் கூடிய வரிகள். நல்ல கட்டுரை.

  பதிலளிநீக்கு
 4. ....ஏப்பா...இப்பல்லாம் ஆட்டோ வாரதில்லங்கற தகிரியமா? மறுபடி ஆரம்பிக்கனுமா? இருந்தாலும் கொஞ்சம் குசும்பு அதிகம்தான் !

  பதிலளிநீக்கு
 5. நீங்க சொன்னது எல்லாம் சரி தான்... என்னென்னவோ காரணம் காட்டி, கூட்டணியில இருந்து வெளிய வந்தது 3 மாசத்துல மறுபடியும் போய் கால்ல விழுந்தது விட, இதெல்லாம் எவ்ளோ பெரிய தப்பு....!!!!

  பதிலளிநீக்கு