11 ஜூன், 2013

மழைக்காதலர்

தொண்ணூறுகளின் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வாழ்வின் அதிகபட்ச லட்சியமாக அது இருந்தது. யமஹா. அவருக்கும் அதுதான் கனவு. செகண்ட் ஹாண்டிலாவது ஒரு பைக் வாங்கிவிட வேண்டும். கிடைத்த சொற்ப சம்பளத்தின் ஒரு பகுதியை யமஹாவுக்காக சேமிக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் எங்காவது பைக் விற்பனைக்கு வருகிறதா என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த திடீர் திருமணம். அவருடன் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஒரு நண்பரின் காதல் திருமணம். நண்பரிடம் திருமணச் செலவுகளுக்கு நயா பைசா இல்லை.

“செலவுக்கு என்னடா பண்ணுவே? இதை வெச்சுக்க. முடியறப்போ திருப்பிக் கொடு” தன் கனவுக்காக சேர்த்து வைத்த பணத்தை, எந்த நெருடலுமின்றி அப்படியே எடுத்துக் கொடுத்தார்.

கேள்விப்பட்ட கதைதான். ஆனாலும் உண்மைக்கதை. இதுமாதிரி அவரைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. சசிகுமார் நடிக்கும் படங்களைப் பார்க்கும்போது, இம்மாதிரி கேரக்டர்கள் நிஜமாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று சந்தேகம் வரும். இவரைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் எனும்போது நட்பு, செண்டிமெண்ட் எல்லாம் சினிமாவில் மட்டும் இல்லை. நம் வாழ்விலும் இவரைப் போன்றவர்களிடம் இருக்கிறது என்கிற நம்பிக்கை பிறக்கும். உலகத்தில் இன்னும் மனிதர்கள் வாழ்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் அவர் அவுட்ஸ்டேண்டிங் ஜர்னலிஸ்ட். அவருடன் சமகாலத்தில் அதே திட்டத்தில் பணியாற்றியவர் சொன்னார். “நிறைய எழுதினாதான் அவுட்ஸ்டேண்டிங்கா செலக்ட் பண்ணுவாங்கன்னு நானெல்லாம் நம்பிக்கிட்டிருந்தேன். அதனாலே கிடைச்ச மேட்டரையெல்லாம் தேத்தி நிறைய எழுதினேன். என்னோட பீரியட்லே எண்ணிக்கையிலே நான் செஞ்சுரியைத் தொட்டேன். ஆனா அவன் எழுதினது ரொம்ப குறைவு. அதிகபட்சம் பதினஞ்சி கட்டுரை இருக்கலாம். ஆனா அதுலே பெரும்பாலானவை கவர்ஸ்டோரி. நான் எதிர்ப்பார்த்த மாதிரியே எனக்கு அவுட்ஸ்டேண்டிங் கிடைச்சுது. வொர்க் குவாலிட்டிக்கு மரியாதையா அவனும் அவுட்ஸ்டேண்டிங்கா வந்தான்” மாணவப் பருவத்திலேயே தகுதியான பத்திரிகையாளர் அவர்.

இளைஞர்களிடம் நட்பு பாராட்டுவதிலும், உரையாற்றுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். எந்தவொரு வெற்றிகரமான பத்திரிகையாளரிடமும் இதே பண்பு இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். அனுபவத்திலும், வயதிலும் குறைந்தவர்களிடம் உரையாற்றுவதைவிட அலுப்பான விஷயம் வேறெதுவுமில்லை. பெரும்பாலும் நாமறிந்த செய்திகளையே நம்மிடம் அபத்தமான வடிவில் சொல்வார்கள். ஆனால் அதற்காக அலுத்துக் கொள்பவர்கள் ‘ஜெனரேஷன் கேப்’ வியாதியால் பீடிக்கப்பட்டு விரைவில் காணாமலும் போய்விடுவார்கள். அவரிடம் படு அபத்தமாக உரையாற்றியிருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் இன்றுவரை அதே பாசத்தினை சுருதி மாறாமல் காட்டி வருகிறார். அவருடைய ஆயுதமே அன்புதான். அன்பைவிட வன்முறையான ஆயுதம் வேறு ஏது. எதிரிகளை மட்டுமல்ல. சமயத்தில் நண்பர்களையும் தாக்கும் ஆயுதம் இது. பதில் தாக்குதலுக்கு வாய்ப்பேயில்லை. சரண்டர் ஆவது மட்டுமே ஒரே வழி.

பத்திரிகைப் பணி என்பது ரிலே ரேஸ் மாதிரி. நம்முடைய ஓட்டத்தை முடித்துக்கொண்டு, அடுத்தவனிடம் டார்ச்சை சரியான நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். அவரிடம் ‘டார்ச்’ வாங்கி இப்போது இத்துறையில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். கால் மேல் கால் போட்டு வேடிக்கை பார்க்கக்கூடிய உயர்நிலைக்கு உயர்ந்தபிறகும், அவரும் கூடவே கையில் டார்ச்சோடு ஓடிவந்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

‘உலகம் ஒரே கிராமம்’ காலக்கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இச்சூழலில் சுயநலமே பிரதானம். எம்.ஜி.ஆர் படங்களில் வில்லன்களாக வந்தவர்கள்தான் இப்போது ஹீரோக்கள். தலைமுறை தலைமுறையாக நமது கலாச்சாரம் காத்துவந்த அடிப்படை மனித மதிப்பீடுகளுக்கு இப்போது எந்த மதிப்புமில்லை. ‘வெல்விஷர்’ என்கிற கேரக்டரே இப்போது யார் வாழ்விலும் இல்லை. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் ஏராளமானோருக்கு இவர் இன்னமும் வெல்விஷராக இருக்கிறார் என்பதுதான் அவரது சாதனைகளிலேயே உச்சபட்ச சாதனை.

முன்பெல்லாம் மழை வந்தால் மயில்தான் ஞாபகத்துக்கு வரும். இப்போது கண்ணன் சார் நினைவுக்கு வருகிறார். எல்லாவற்றுக்கும் ரசிகர். குறிப்பாக மழைக்கு மகாரசிகர்.

பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணன் சார்!

6 கருத்துகள்:

 1. /***எம்.ஜி.ஆர் படங்களில் வில்லன்களாக வந்தவர்கள்தான் இப்போது ஹீரோக்கள்.***/
  great..

  பதிலளிநீக்கு
 2. "‘வெல்விஷர்’ என்கிற கேரக்டரே இப்போது யார் வாழ்விலும் இல்லை" - :)

  பதிலளிநீக்கு
 3. நல்ல நேர்த்தியான அன்பு கட்டுரை யுவா..

  கண்ணா, இனிய நெஞ்சம் நிறை பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. ரசிச்சு எழுதறீங்க.................

  பதிலளிநீக்கு
 5. இதை வெச்சுக்க. முடியறப்போ திருப்பிக் கொடு.....பிறக்கும் அனைவருமே மனிதர்கள் இல்லை.வாழ்க பல்லாண்டு..

  பதிலளிநீக்கு
 6. ஆமாம் யார் இந்த கண்ணன் !!!!! கண்ணா நீர் எங்கு இருந்தாலும் வளமுடன் வளர்க!!!!

  பதிலளிநீக்கு