24 மே, 2013

அட்லீஸ்ட் வெறும் ஆண்

எப்போதோ படித்த பாலகுமாரனின் சிறுகதை ஒன்று. ஒரு சினிமா பத்திரிகையாளன். ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரைப் பற்றி எப்பவுமே மோசமாக கிசுகிசு எழுதுவான். குறிப்பாக சகநடிகைகளோடு அவரை இணைத்து வக்கிரமாக கற்பனையிலேயே கதைகளாக எழுதித்தள்ளுவான். ஊரிலிருந்து பத்திரிகையாளனின் டீனேஜ் மச்சினிச்சி லீவுக்கு வந்திருப்பாள். மாமா பெரிய சினிமா பத்திரிகையாளர் என்பதால் ஷூட்டிங் பார்க்கவேண்டுமென்று அடம்பிடிப்பாள். ஸ்கூட்டரில் இவன் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்வான்.

படப்பிடிப்புத் தளத்தில் திடீரென்று மச்சினிச்சி வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவாள். என்ன ஏதுவென்று புரியாமல் இவன் குழம்பிப்போய் கிடப்பான். அது அந்த சூப்பர் ஸ்டார் நடிக்கும் படப்பிடிப்பு. உடனடியாக நிலைமையை உணர்ந்த நடிகர் தன் மனைவியை அழைத்து, அந்தப் பெண்ணை கவனிக்கச் சொல்லி, பத்திரமாக காரில் அனுப்பி வைப்பார். இவரைப் பற்றிப் போய் இப்படியெல்லாம் கிசுகிசு எழுதினோமே என்று பத்திரிகையாளன் நொந்துப்போவதாக கதை முடியும்.

திடீரென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கும் மச்சினிச்சியைப் பார்த்து கை, கால் உதற பத்திரிகையாளன் திணறி முழிக்கும் கட்டத்தை பாலா அவருக்கேயுரிய வர்ணனைகளோடு அசத்தியிருப்பார்.

அக்கம் பக்கம் வீடுகளிலோ, உறவினர் வீடுகளிலோ நாம் தூக்கி கொஞ்சி வளர்த்த குழந்தைகள் திடீரென்று ‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டதென்று தகவல் வரும். பாலகுமாரனின் கதையில் வரும் நாயகனை மாதிரி பதட்டம் அடைவோம். “அது குழந்தைதானே. பண்ணெண்டு, பதிமூணு வயசிருக்குமா. அதைப்போயி இப்படி சொல்றாங்களே?” என்று குழம்பிவிடுவோம். நீ தூக்கி வளர்த்த குழந்தையே பெரிய மனுஷின்னா, உனக்கு ஏழு கழுதை வயசாவுதுடா தடிமாடு என்று சப்கான்சியஸாக நம்முடைய மூளை சிந்திக்கத் தொடங்கிவிடுவதால்தான் இந்த பதட்டம்.

அடுத்த முறை அந்த குழந்தையை பார்க்கும்போது ஒருமாதிரி மருண்ட பார்வையோடு நம்மை வெறிப்பாள். பொருள் புரிபடமுடியாத பார்வை அது. அப்பார்வையில் தெரிவது அச்சமா, நாணமா, பாசமா ஒன்றுமே புரியாது. நாமெல்லாம் அட்லீஸ்ட் வெறும் ஆண்கள்தானே. ஆண்களின் ஜீன்களிலேயே இவன் அசட்டு அம்மாஞ்சி என்று விதியை அறிவியல் எழுதிவிடுகிறது. மயிலாக வளரும் பெண்குழந்தை பருவமடைதலின் மூலம் மானாக பரிணமிக்கிறாள். மாறாக தேவாங்கு மாதிரி வளரும் ஆண்குழந்தையோ பருவத்தில் குரங்காக மாறுகிறான்.

‘தோனி’ திரைப்படத்தில் ஒரு காட்சி. குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மகள் திடீரென்று பெரிய மனுஷியாகிவிடுவாள். பிரகாஷ்ராஜ் தடதடத்துவிடுவார். அவருக்கு மனைவி இல்லை. அக்கம் பக்கம் பெண்கள் சேர்ந்து சடங்கு செய்வார்கள். புடவை கட்டிய தன் குழந்தையைப் பார்த்து நெகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார். இவரைப் பார்த்து குழந்தை வெட்கப்படும். முட்டைக் கண்களை உருட்டி, உருட்டி முழிப்பார்.

சமீபத்தில் இதேமாதிரியான மனநிலையோடு நண்பர் ஒருவரை சந்தித்தோம். பொதுவாக நண்பரது முகத்தில் எந்த உணர்ச்சியையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. எப்போதுமே ஒரேமாதிரி முகபாவம்தான். அன்று ஒருமாதிரியான சோர்வான பூரிப்பை அவர் முகத்தில் காணமுடிந்தது. “தங்கச்சி பொண்ணு வயசுக்கு வந்துட்டா பாஸ். செம்ம செலவு” வெயிட்டாக தாய்மாமன் சீர் செய்துவிட்டு வந்திருந்தவர், செலவைப்பற்றி கவலைப்பட்டதைப் போல கொஞ்சம் சோகமாக சொல்லும் தொனியில் பேசினாலும், குரலின் ஊடாக மறைந்துத் தொக்கி நின்றது ஓர் உற்சாகம், பெருமை. பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தை அது. அன்று அவரது கண்களில் ஒரு தாய் தெரிந்தாள். ‘தாய்’மாமன் என்று இந்த உறவுக்கு சும்மாவா பெயர் வைத்திருக்கிறார்கள். ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியக் குடும்ப வாழ்க்கைமுறை இதுபோன்ற சில சுவாரஸ்யங்களால்தான் இனிக்கிறது.

11 கருத்துகள்:

 1. "இந்தியக் குடும்ப வாழ்க்கைமுறை இதுபோன்ற சில சுவாரஸ்யங்களால்தான் இனிக்கிறது"
  Amanga!!!

  பதிலளிநீக்கு
 2. மகாநதி படத்தில் ஓர் அற்புதமான தருணம் வரும். சிறைக்கம்பிக்குப் பின்னால் நிற்கும் கமல் பார்க்க வந்த மாமியாரிடம் ’காவேரி வரலையா’ என்பார். அந்தக் குழந்தை (ஷோபனா) பாட்டிக்குப் பின்னாலிருந்து மெதுவாக எட்டிப் பார்க்கும். அதுவரை பாவாடை சட்டை அணிந்திருந்த குழந்தை தாவணிக்கு மாறியிருக்கும். மனுப்போட்டுவிட்டு கைதிகளைப் பார்க்க வந்திருக்கும் பெரும் கூட்டம்; கிருஷ்ணா(கமல்) ’எப்போ’ என்பார். கேட்டுவிட்டு முகத்தை மூடிக் கொண்டு அமைதியாக அழுவது பார்க்கும் அனைவரையும் கலங்க வைக்கும்

  பதிலளிநீக்கு
 3. மகா நதி படத்தில் கூட இதை உணரமுடியும்

  பதிலளிநீக்கு
 4. இது போன்ற பலரின் பல அருமையான பதிவுக்காகவே மற்றவை எல்லாமும் தவறாமல் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. TRUE YUVA SIR.."சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
  சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு"

  பதிலளிநீக்கு
 6. தாய் மாமன் உறவு...அது தங்கைக்கும் மகளுக்கும் மட்டுமே தெரியும் உன்னதமான உறவு..

  பதிலளிநீக்கு
 7. அழகான பதிவு யுவா. கலக்கிட்டீங்க!!

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு உங்கள் எழுத்து நடை அருமை தொடரட்டும் உங்கள் பணிவாழ்த்துகள்!!!!!!

  பதிலளிநீக்கு