20 மே, 2013

யார் அந்த முகேஷ்?


உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு ஒன்று. இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் நூற்றுக்கு எழுபத்தாறு படங்களில் புகையிலை பயன்பாடு இடம்பெறுகிறது. நம் நாட்டில் புகைப்பழக்கத்துக்கு பலியாகும் குழந்தைகளில் ஐம்பத்தி இரண்டு சதவிகிதம் பேர், திரைப்படங்களின் தாக்கத்தாலேயே அதை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுகாதார அமைச்சகத்துக்கு பெரும் தலைவலியாகி விட்ட பிரச்சினை இது.

2005ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். நடிக, நடிகையர் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்று, அமைச்சரவைக் கூட்டங்களில் போராடத் தொடங்கினார். “ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை கோடி பேர், இந்திப் படங்களை மட்டும் பார்க்கிறார்கள். புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கும் பட்சத்தில், பல லட்சம் பேர் இப்பாழும் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க முடியும்” என்று வலியுறுத்தினார். புகைக்காட்சிகளுக்கு அரசு தடை விதிக்க முடிவெடுத்ததை அடுத்து, திரையுலகம் பொங்கியெழுந்தது. ஒரு பாத்திரம் புகை பிடிப்பதையோ, குடிப்பதையோ காட்டுவது காட்சிகளின் நம்பகத்தன்மைக்காகதானே தவிர, அப்பழக்கத்தை பார்வையாளர்களுக்கு ‘ஃபேண்டஸி’ ஆக்கிக்காட்டும் நோக்கத்துடன் அல்ல என்று வாதாடினார்கள். வேண்டுமானால் அம்மாதிரி காட்சிகள் வரும்போது எச்சரிக்கையாக ‘புகைப்பிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்கு தீங்கானது’ என்கிற பிரச்சார வாசகத்தை இடம்பெறச் செய்கிறோம். படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் புகைக்கு எதிரான வாசகங்களை ‘ஸ்லைட்’ ஆக காட்டுகிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார்கள்.
                                                 end
சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்தாலும் கூட படங்களில் புகை பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் வராமலில்லை. புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் பின்னணி லாபி அத்தகைய செல்வாக்கு கொண்டதாக இருக்கிறது. தடை என்று அறிவித்து விட்டார்களே தவிர, அதை முழுமையாக கண்காணிக்க ஓர் ஏற்பாட்டை அரசு செய்யவில்லை. ஊழல்மயப்பட்ட நம் அரசு சாதனங்களுடைய மெகா சைஸ் ஓட்டைகளை அடைக்காமல், உருப்படியாக கொலை கூட செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம்.

சில சினிமாக்காரர்களும், புகை நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்தாலும் கூட எதிர்பாராவிதமாக நம் மக்களிடையே, இந்த தடை பெரும் வரவேற்பைப் பெற்றது. விவேக் ஓபராய், ஊர்மிளா மடோண்ட்கர் போன்ற கலைஞர்கள் புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை தாங்கள் நடிக்கும் படங்கள் வாயிலாக செய்ய முன்வந்தார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு துண்டுப்படங்களிலும் நடித்தார்கள் (சமீபத்தில் வெளியாகிய கோ, கோவா, கான் திரைப்படத்தில் சாயிஃப் அலிகான் படம் தொடங்குவதற்கு முன்பாக புகைப்பழக்கத்தின் தீமைகளை இரண்டு நிமிடங்களுக்கு உரையாற்றுகிறார்).

sabanaazmi
சபனா ஆஸ்மி போன்ற முற்போக்கு இயக்குனர்கள் இத்தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று வாதிட்டார்கள். “சினிமா என்பது வாழ்வை பிரதிபலிப்பது. நிஜவாழ்க்கையில் புகைப்பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சினிமாவிலும் இடம்பெறுவதுதானே நியாயம். புகைப்பிடிப்பவரோ, குடிப்பவரோதான் கதைக்கு தேவையென்றால், அக்காட்சிகளை வேறு எப்படி எடுக்க முடியும்” என்று கேட்டார்கள். இவ்வளவு அக்கறை இருக்கும் அரசாங்கம், நாடு முழுக்க புகைப்பொருட்கள் தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க வேண்டும். அதைவிட்டு சினிமாக்காரர்களை நோண்டிக்கொண்டிருக்கக் கூடாது என்கிற சினிமாக்காரர்களின் வாதத்திலும், நியாயம் இருக்கவே செய்கிறது. அரசின் தடையை எதிர்த்து சிலர் நீதிமன்றங்களுக்கும் சென்றார்கள்.  ஒரு வழக்கின் தீர்ப்பில் இத்தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்பதுமாதிரி டெல்லி உயர்நீதிமன்றமும் கருத்து தெரிவித்தது. இவ்வாறாக, நாளாக நாளாக நாட்டுமக்களின் நலன் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் முயற்சித்த முயற்சிகள் வலுவிழந்து விழலுக்கு இறைத்த நீரானது.


ஆனால் உலக சுகாதார நிறுவனம் வளரும் நாடுகளை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து ஐநூறு பேர் புகையிலைப் பழக்கத்தால் மட்டுமே மரணமடைகிறார்கள். இருபத்தைந்து கோடி பேர் இந்தியாவில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது. தர்மசங்கடத்துக்கு உள்ளான அரசாங்கம் இம்முறை தடை என்றெல்லாம் முயற்சிக்காமல், சினிமாக்காரர்களுக்கு கொஞ்சம் தொந்தரவாவது கொடுக்கலாமா என்று யோசித்தது.
                               530x230 copy                                  
போன முறை போல இல்லாமல் இம்முறை சென்சார் போர்ட் வாயிலாக பிரச்சினையை அணுகியது. படத்தில் ஏதேனும் புகைப்பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் வரும் பட்சத்தில், அக்காட்சி ஏன் முக்கியம் என்று தயாரிப்பாளரோ, இயக்குனரோ விளக்கம் அளித்தாக வேண்டும் என்று கெடுபிடி விதிக்கப்பட்டது. சம்பந்தமேயில்லாமல் இம்மாதிரி காட்சிகள் இடம்பெற்றால் ‘யூ’ சான்றிதழ் வழங்கமுடியாது என்றும் தணிக்கைத்துறை எகிற, இம்முறை சினிமாக்காரர்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்தார்கள். புகைபிடிக்கும் காட்சி இருந்தால், அதை சமப்படுத்தும் வகையில் படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையிலும் புகைக்கு எதிரான பிரச்சாரத்தை நுழைத்துவிடுகிறோம் என்று சென்சார் போர்டை தாஜா செய்தார்கள்.
                                              
இப்போது திரையரங்குகளில் படம் தொடங்கும்போதும், இடைவேளையின் போதும் ‘முகேஷ்’ தோன்றுவதன் வரலாறு இதுதான். இன்று பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கை விட முகேஷ் இந்தியாவில் பிரபலம். ஏதேனும் சினிமா தியேட்டர்களில் இந்த விழிப்புணர்வு விளம்பரங்களை வெட்டி விட்டு படம் திரையிட்டால், அத்திரையரங்கின் ‘லைசென்ஸ்’ கூட திரும்பப்பெறப்படும்.

lungs
‘புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது’ என்று கட்டைக்குரலில் தொடங்கும் தொடர் விளம்பரங்கள் தொந்தரவாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் கருதினாலும், நாடு முழுக்க இந்த முயற்சிக்கு நல்ல பலன் இருப்பதாகவே தகவல். இந்தியாவில் பதினாறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு, அந்தந்த மொழிப்படங்களின் தொடக்கத்திலும், இடைவேளையும் இவை ஒளிபரப்பப்படுகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் புகையிலைப் பழக்கம் கொண்டிருப்பவர்களில் அறுபத்தி மூன்று சதவிகிதம் பேர் இந்த விளம்பரங்களை முழுமையாக நினைவுபடுத்தி சொல்லும் அளவுக்கு பார்த்திருக்கிறார்கள். அவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர், இந்த விளம்பரத்தின் தாக்கத்தால் குற்றவுணர்வு கொண்டிருக்கிறார்கள். இப்பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடவேண்டுமென்று விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட புகையிலை எதிர்ப்பு விளம்பரத் தொடர்களில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக இது அமைந்திருக்கிறது.


இந்த விளம்பரப் படத்தின் நாயகன் முகேஷ் ஹரானே, மகாராஷ்டிராவின் புசாவல் என்கிற ஊரைச் சேர்ந்தவர். குட்கா பழக்கத்தால் இளம் வயதிலேயே வாய்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு விளம்பரப் படங்களுக்கு முழுமனதோடு ஒப்புதல் அளித்து நடித்தார் முகேஷ். படம் எடுக்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே சிகிச்சை பலனின்றி, அநியாயமாக இருபத்திநான்கே வயதில் மரணமும் அடைந்துவிட்டார்.

tobacco
பத்திரிகை, ரேடியோ, விளம்பரப் பலகைகள், டிவி என்று பல்வேறு வடிவங்களில் பல ஆண்டுகளாக வந்துக்கொண்டிருக்கும் முகேஷின் விளம்பரம் சமீபமாகதான் திரைப்படங்களிலும் இடம்பெறுகிறது. “மும்பை சாலை ஹோர்டிங்குகளில் முகேஷை பார்ப்பது கடுமையான மனவலியை ஏற்படுத்துகிறது” என்கிறார் அவரது தம்பி மங்கேஷ். ஆனாலும் இது முகேஷின் முடிவு என்பதால், அதை ஆட்சேபிக்க குடும்பத்தினர் விரும்பவில்லை. விளம்பரங்களில் முகேஷை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தாலும், இதற்காக காசு எதையும்கூட கோரவில்லை. “முகேஷின் நிலைமை வேறு யாருக்கும் வராமல் இருந்தாலே போதும்” என்கிறார் கூலித்தொழிலாளியான அவரது அப்பா சங்கர்ராவ்.


தன்னுடைய தம்பி மங்கேஷை அவுரங்காபாத்துக்கு அனுப்பி படிக்க வைத்தது முகேஷ்தான். தம்பியின் படிப்புக்காகவே கடுமையாக வேலை பார்த்து, காசு சம்பாதிக்க தொடங்கியிருந்தார். முகேஷின் இழப்பு பொருளாதாரரீதியாகவும், அந்த குடும்பத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இறந்தும்கூட மற்றவர்களுக்கு பயன்படும் வாழ்க்கையைதான் வாழ்ந்திருக்கிறார் முகேஷ். ஆனால், அவரது குடும்பம்தான் பாவம்.
                                     end1
(நன்றி : cinemobita.com)

1 கருத்து:

  1. இதை பார்ப்பவர்களுக்கு குற்ற உணர்ச்சியை உருவாக்குகிறது என்பது உண்மைதான்

    பதிலளிநீக்கு