17 ஏப்ரல், 2013

கர்ணனின் கவசம்

வாராவாரம் காத்திருந்து கடைசியாக வாசித்த தொடர்கதை எது? இரண்டு மூன்று நாட்களாக மூளையை கசக்கோ கசக்குவென்றி கசக்கி, தூக்கிப் போட்டு துவைத்ததின் காரணமாக சற்று முன்னர்தான் நினைவுக்கு வந்தது. விகடனில் இருவன் எழுதிய ‘ஒன்று’. மூன்று ஆண்டுகள் முழுசாக முடிந்துவிட்டது. இடையில் வேறு தொடர்கதை எதையும் பார்த்ததாககூட நினைவில்லை. ஒரு காலத்தில் ரஜினி சினிமா ரிலீஸ் மாதிரி புதுத்தொடர்கதைகளின் அறிவிப்பை கொண்டாடிய தமிழ் வாசக சமூகத்துக்கு என்னமாதிரியான சோதனை?

சிறுகதைகளுக்கே இடம் ததிங்கிணத்தோம் எனும்போது தொடர்கதைகளை எதிர்ப்பார்ப்பதில் நியாயமில்லைதான். ரெண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தபோது, ஏதோ சினிமா போஸ்டர் என்றுதான் முதலில் நினைத்தேன். மீண்டும் பார்த்தபோதுதான் அது தொடர்கதைக்கான அறிவிப்பு என்பதை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. சன்பிக்சர்ஸ் ஸ்டைலில் ஊரெல்லாம் டபுள் பிட் போஸ்டர் அடித்து அமர்க்களப் படுத்தியிருந்தது குங்குமம். கே.என்.சிவராமன் எழுதும் ‘கர்ணனின் கவசம்’. அடியில் சின்னதாக அமானுஷ்யத் தொடர். அமானுஷ்யம் மாதிரி வார்த்தைகளை வாசித்து எத்தனை வருஷம் ஆகிறது என்று குஷி.

ஒரு காலத்தில் குங்குமம் எங்கள் வீட்டில் ஃபேவரைட். கலைஞரின் தொடர்கதை ஏதாவது ஒன்றுக்கு பர்மணெண்ட் ஸ்லாட். அடிக்கடி பாலகுமாரனின் தொடர்களும் வரும். குட்டி குட்டியாக கிளுகிளுக்கதைகளை தைரியமாக போடுவார்கள் (ஆறாவது படிக்கும்போதே அந்தக் கதைகளில் கிளுகிளுப்பாக ஏதுமில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்). குமுதம், விகடனில் ‘மிஸ்’ ஆகும் விஷயங்கள் சில குங்குமத்தில் இருக்கும். ரெகுலராக வாசிப்பதில்லை என்றாலும், அவ்வப்போது புரட்டிப் பார்ப்பதுண்டு. முன்பு குங்குமத்தில் சில கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். கர்ணனின் கவசத்தை வாசிப்பதற்காகவே மீண்டும் தொடர்ச்சியாக குங்குமம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

அமானுஷ்யத் தொடர்கதை என்றதுமே இந்திரா சவுந்திரராஜன் பாணியில் ரெண்டு காதுகளிலும் முழம் முழமாக பூச்சுற்றப் போகிறார் சிவராமன் என்றுதான் நினைத்தேன். இவர் சயிண்டிஃபிக்காகதான் காது குத்துகிறார். பகுத்தறிவை விட்டு ரொம்ப விலகிடவில்லை என்பதால் மன்னிக்கலாம். இதுவரை வந்த ஆறு அத்தியாங்களை வாசித்தவரையில் இதில் இந்திரா சவுந்திரராஜனும் இருக்கிறார். சுஜாதாவும் இருக்கிறார். பாலகுமாரனும் இருக்கிறார். ராஜேஷ்குமாரும் இருக்கிறார். வசனநடையில் ரா.கி.ரங்கராஜன் எட்டிப் பார்க்கிறார். இன்னும் யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ தெரியவில்லை.

அமானுஷ்யக் கதை என்றாலே ஜமீன், பேய்பங்களா இருந்தே ஆக வேண்டும். அதில் இருந்து ‘கர்ணனின் கவசம்’ முற்றிலுமாக வேறுபடுகிறது. நாம் அறியாத, உலகின் காஸ்ட்லியான சமாச்சாரம் ஒன்றை புனைகிறது. பெட்ரோலை விட, தங்கத்தை விட காஸ்ட்லியான அது என்னவென்று வரப்போகும் அத்தியாயங்களில் தெரிந்துக் கொள்ளலாம். அனேகமாக ஏதோ தனிமமாக இருக்கலாம். அது இந்தியாவில் எங்கோ புதைந்திருக்கிறது. அதைத்தேடி சர்வதேசக் கும்பல் ஒன்று இங்கே தேடுதல் வேட்டை நடத்துகிறது. பரபரவென்று ஹாலிவுட் பாணியில் ஓடுகிறது திரைக்கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாலு பிரிவுகள். வெவ்வேறு பாத்திரங்கள், வெவ்வேறு லோக்கேஷன்.

தொடர்கதையின் அடிப்படை இது. எழுத்தாளர் அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஒரு தூண்டிலை போடவேண்டும். நான்கைந்து பக்கங்களில் முடிவதற்குள் நிச்சயமாக மீன் மாட்டியிருக்க வேண்டும். அடுத்த வார தூண்டிலுக்கும் கடைசி வரியில் அச்சாரம் இட்டிருக்க வேண்டும். வெற்றிகரமான எந்தவொரு தொடர்கதையிலும் இந்த பண்பினை நீங்கள் கவனிக்கலாம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிவராமன் ஒன்றுக்கு நாலாக தூண்டில் போடுகிறார். எனவே வாராவாரம் அவர் நாலு மீன் பிடித்தே ஆகவேண்டும். அதாவது ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நாலு ‘திடுக்’ ஏற்படுத்த வேண்டும். அந்த நாலு ‘திடுக்’கையும் லாஜிக்கலாக திடுக்கிடவைக்கும் வகையில் கதையின் போக்கினை ‘சுருக்’காக சுவாரஸ்யப்படுத்திட வேண்டும். கதை எழுதியவர்களுக்கும், எழுத முயற்சிப்பவர்களுக்கும் தெரியும் இது எவ்வளவு கடினமான முயற்சி என்று.

அவ்வகையில் கர்ணனின் கவசத்தை வெகுஜன தொடர்கதை பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான முயற்சியாக கருதலாம். இத்தொடர் வெற்றியடையும் பட்சத்தில் மற்றப் பத்திரிகைகளும் தொடர்கதைகளுக்கு இடமளிக்கும் (ராணி ஒரு மர்மத்தொடரை இவ்வாரம் ஆரம்பிக்கிறது). எழுதுவதையே மறந்துவிட்ட பழைய எழுத்தாளர்களும் மீண்டும் களம் காண்பார்கள். நம்மை மாதிரி கத்துக்குட்டிகளுக்கு ஏதோ சான்ஸு கிடைக்கும். அவ்வகையில் கர்ணனின் கவசம் ஒரு ஆரோக்கியமான போக்கினை தொடங்கியிருக்கிறது.

பிரும்மாண்ட விளம்பரங்கள் வந்தபோதே தொடர் பிரமாதமாக இருக்கப் போகிறது என்று யூகித்திருந்தேன். ஆனால் சர்ப்ரைஸ் போனஸ் ஒன்று கிடைத்திருக்கிறது. ராஜாவின் ஓவியங்கள். தினகரனில் சிறப்பு கட்டுரைகளுக்கு கிராஃபிக்ஸ் ஓவியங்கள் வரைந்துவருபவர். முதன்முறையாக ஒரு தொடர்கதைக்கு இப்போதுதான் படம் வரைகிறார். தீபிகா படுகோனே, ஜக்கிவாசுதேவ், லியானார்டோ டீகாப்ரியோ, ஜெட்லீ, ஹேராம் கெட்டப்பில் அர்னால்ட் என்று யார் யாரோ இவர் படங்களில் தெரிகிறார்கள். படங்கள் சூப்பர், ஆகா ஓகோவென்றெல்லாம் பாராட்டப் போவதில்லை. ஏனெனில் இம்மாதிரி வழக்கமான பாராட்டுகள் ராஜாவின் திறமைக்கு முன்பு ரொம்ப சாதாரணம். கீழே இருக்கும் ஓவியங்கள் தொடரில் இதுவரை வந்தவை. பார்த்துக் கொள்ளுங்கள். ராஜா எவ்வளவு ‘கெத்து’ என்று... படங்கள் இவ்வளவு பிரமாதமாக வந்திருந்தால், அதற்கு source ஆக கதை எப்படியிருக்கும் என்று நீங்களே guess செய்துக் கொள்ளுங்கள்.

5 கருத்துகள்:

 1. நன்றி லக்கி.

  ராஜாவின் ஓவியங்கள் தொடருக்கு ஒரு அசட். அவரது ஓவியங்களுக்கு தகுந்தபடி அத்தியாயம் எழுதுவது சவாலாகத்தான் இருக்கிறது.

  கோயில்கள் அனைத்துமே ஏதோ ஒன்றின் Back Upதான். சிற்பங்கள் அனைத்தும் சாப்ட்வேர்தான்... ஆதித்ய கரிகாலனை கொன்ற ரவிதாசன் உள்ளிட்ட அந்தணர்கள் மீண்டும் பிறவி எடுத்திருக்கிறார்கள்... இரண்டாம் உலகப் போரில் இட்லருக்கு உதவிய போர் விமாங்கள், பரத்வாஜ மகரிஷி உருவாக்கிய 'விமானிகா சாஸ்திரா' நூலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை... என்றெல்லாம் பல நூல்களை வைத்து கதையின் போக்கை அமைத்திருக்கிறேன்.

  தொடர் எப்படி வரும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

  உங்களின் இந்த போஸ்ட், தொடர்ந்து எழுத ஊக்கமளிக்கிறது. தேங்க்ஸ் எ லாட்.

  - கே.என்.சிவராமன்

  பதிலளிநீக்கு
 2. சரி.....சரி....நடுவில் இருந்தாவது ஆரம்பிக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி யுவா கிருஷ்ணா ...

  பதிலளிநீக்கு
 4. ங்கொய்யால ...யாருப்பா இந்த ராஜா ....பிரிச்சி மேஞ்சுருக்கான் ..
  தமிழ் புக் ஓவியத்துல ல நெக்ஸ்ட் trend செட்டர் ........

  பதிலளிநீக்கு