13 ஏப்ரல், 2013

மரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்

“தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று மரணத்தண்டனை குறித்த திமுகவின் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கலைஞர்.

மரணத்தண்டனை குறித்த அச்சத்தை மத்தியில் இருக்கும் அரசும், குடியரசுத்தலைவரும் ஏற்கனவே விதைத்து விட்டார்கள். அதை ஊதிப்பெருக்கும் விதமாக சமீபமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்திய அரசியலின் மூத்தத் தலைவரான கலைஞரின் இக்கருத்து மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் தரக்கூடியது.

மத்திய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு மரணத்தண்டனையாக நிறைவேற்றிக் கொண்டே வருவதை காணும்போது, அடுத்து எங்கே பாசக்கயிறு வீசப்போகிறார்கள் என்பதை சுலபமாகவே யூகிக்க முடிகிறது. ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணத்தண்டனை உறுதியான நால்வரில் நளினிக்கு மட்டும் 2000ஆம் ஆண்டு திமுக அரசு தண்டனையை குறைத்தது. முன்னதாக தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவர்களின் மரணத்தண்டனையையும் திமுக அரசு மாற்றியமைத்திருக்கிறது. சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கும் 2006-11 ஆட்சிக்காலத்திலாவது கலைஞர் பெரிய மனது வைத்து தண்டனையை குறைத்திருக்கலாம். ஆனால் கலைஞர் என்கிற விக்கிரமாதித்தனின் முதுகில் காங்கிரஸ் என்கிற வேதாளம் அல்லவா ஏறிக்கொண்டிருந்தது?

கலைஞர் செய்யத் தவறியதை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அவர்களாவது உடனடியாக செய்துக்காட்ட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் இதுவரை போடப்பட்ட தீர்மானங்களால் உருப்படியாக எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. பொதுவாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் போட்டுவிட்டு, பந்தை மத்திய அரசின் பக்கமாக தள்ளிவிடுவதுதான் அம்மாவின் சமீபகால மோஸ்தராக இருக்கிறது.

அப்படியில்லாமல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவருக்குமான மரணத்தண்டனையை குறைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முன்பு திமுக அரசு இப்படித்தான் சிலருக்கான மரணத்தண்டனையை மாற்றியமைத்திருக்கிறது. இந்த தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ள நெருக்கடி தரவேண்டும். வரலாற்றிலேயே முதன்முறையாக அம்மாவுக்கும், ஒரு ஆளுநருக்கும் பிரச்சினை இல்லாமல் இருப்பது இதுதான் முதன்முறை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நித்தமும் அம்மா புகழ் பாடி புண்ணியம் தேடிக்கொள்ளும் ஊடகங்களும், வைகோசீமாதாபா பஜனைக் கோஷ்டியினரும் இதற்காக வேண்டுகோளோடு நிறுத்திவிடாமல் புரட்சித்தலைவிக்கு நெருக்கடி தந்து, தங்களுக்கும் நிஜமாகவே தமிழுணர்வு இருக்கிறது என்பதை  நிரூபிக்க வேண்டும்.

தமிழக அரசை சங்கடப்படுத்திவிடக் கூடாது, அதே நேரம் தமிழுணர்வு இமேஜுக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்று இரட்டை வேடம் போடும் வேடதாரிகளுக்கு இது அக்னிப்பரிட்சை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிஜமாகவே ஈழத்தாய் தானா என்பதை உரசிப்பார்க்கும் சோதனையும் கூட.

எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்.


மரணத்தண்டனை குறித்த நமது முந்தைய கதறல்கள் :

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

3 கருத்துகள்:

 1. the analogy of vikraman-vedhaalam - didnt karunanidi know that it was vedhaalam on his back for so many years ? if he could reduce nalini's sentence, why couldn't he reduce everyone else's as well ?

  the objective of this blog seems to be more to bring JJ down than against death sentence.

  பதிலளிநீக்கு
 2. www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1795:2013-04-14-17-02-43&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

  பதிலளிநீக்கு
 3. மரணதண்டனை தான் சரி. மரணத் தாக்குதல் என்பதும் சரி.

  பதிலளிநீக்கு