30 மார்ச், 2013

ராஜூமுருகன்

ஒன்றரை ஆண்டுகாலமாக ‘வட்டியும் முதலும்’ ஆனந்தவிகடனில் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே நினைத்தேன். இன்னும் இலக்கியவாதிகள் யாரும் ராஜூவுக்கு எதிராக ‘ரவுசு’ ஆரம்பிக்கவில்லையே என்று. நண்பர் அபிலாஷ் ஆரம்பித்திருக்கிறார். 

அபிலாஷுக்கு என்றல்ல. பொதுவாக இலக்கியவாதிகளுக்கே உரித்தான ஒரு பொதுக்குணத்தை அவதானிக்க முடிகிறது. வெகுஜனங்களால் பரவலாக ஆதரிக்கப்படும் ஒரு விஷயம் அபத்தமானதாகதான் இருக்கவேண்டும் என்கிற தீர்மானத்துக்கு வெகுவிரைவில் வந்துவிடுகிறார்கள். ஒருவேளை இவர்கள் மனதளவில் ரசிக்கும் ஒன்றை வெகுஜனங்களும் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தால், தங்கள் தனிப்பட்ட ரசனையை தியாகம் செய்து நேரெதிர் விபரீத நிலைப்பாடுக்கும் சென்றுவிடுகிறார்கள்.

நண்பர் அபிலாஷ் சூது வாது தெரியாதவர் என்பதால் வெளிப்படையாக இவ்விஷயத்தை பொதுவில் வைத்திருக்கிறார். இலக்கிய நண்பர்கள் சிலர் பொருமலாக தனிப்பட்ட பேச்சுகளில் இதே விஷயத்தை நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்கள். இதே நண்பர்களில் சிலர் முன்பாக விகடன், குமுதம் இதழ்களுக்கு கதையோ, கட்டுரையோ அனுப்பி நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ‘எட்டாத திராட்சை புளிக்கும்’ கதைதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

பொதுவாக ராஜூமுருகனின் (குறிப்பாக வட்டியும் முதலும்) எழுத்துகளைப் பற்றி வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, ‘ஆழமற்ற மேலோட்டமான வணிக எழுத்து’ என்பதுதான்.

எழுத்து என்பது ஆழமாகதான் இருந்துத் தொலைக்க வேண்டும் என்று யார் வரையறுத்தது. ஒரு வெகுஜன பத்திரிகையின் வாசகர் எல்லோரும் பட்டம் படித்தவர்களாக இருக்கவேண்டும் எப்படி எதிர்ப்பார்க்க முடியும். தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்தவனுக்கும் புரியும்படியான எழுத்துநடையை பின்பற்றுவதில் என்ன குற்றம் இருந்துவிட முடியும். சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஒரு செய்தியையோ, கட்டுரையையோ தினத்தந்தி நடையில் எழுதிப்பாருங்கள். எளிமையைப் பின்பற்றுவது எவ்வளவு கடினம் என்பது தெரியும், புரியும். ஆழமற்ற ஓர் அல்ப விஷயத்தை கூட அலங்கார மொழியில் வெளிப்படுத்துவது இலக்கியம் என்று ஆகிவிட்ட சூழலில், ஆழமான விஷயத்தைக்கூட அரிதாரமின்றி, நேர்மையாக தன்னை வாசிப்பவனுக்கு பேச்சுமொழி மாதிரியான அரட்டை நடையில் முன்வைப்பது அபத்தமாகதான் அறிவுஜீவிகளின் கண்களுக்கு புலப்படும். திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் அல்லவா?
ராஜூமுருகனின் எழுத்து வடிவத்தை சக பத்திரிகை நண்பர் ஒருவர் பீம்சிங்கின் படங்களோடு ஒப்பிடுவார் (பாசிட்டிவ்வான நோக்கில்தான்). தமிழ் சினிமாவில் பீம்சிங்காக இருப்பதுதான் கஷ்டம். ஒரு படத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்வார். எல்லா கதாபாத்திரங்களையும் முதல் பாகத்தில் அறிமுகப்படுத்துவார். அடுத்த பாகத்தில் அப்பாத்திரங்களுக்கு இடையே இடியாப்பச் சிக்கலை உருவாக்குவார். கடைசியாக அவரே உருவாக்கிய சிக்கலை காதை சுற்றி மூக்கைத் தொட்டு எப்படியோ அவிழ்ப்பார். சுபம். இந்த சூத்திரம் கேட்பதற்கு எளிமையானதாக இருக்கலாம். அதனால்தான் பீம்சிங் ஒரு mediocre இயக்குனராக பார்க்கப்பட்டார். ஆனால் பீம்சிங்குக்கு பிறகு வேறொரு பீம்சிங் தமிழ் சினிமாவில் உருவாகவே இல்லை. உருவாகவும் முடியாது என்பதுதான் அவரது சாதனை.

ராஜூமுருகன் ‘வட்டியும், முதலும்’ மூலமாக வெகுஜன நடைக்கும், இலக்கிய நடைக்கும் இடையிலான ஓர் இடைநிலை போக்கினை உருவாக்கியிருக்கிறார். முன்பாக க.சீ.சிவக்குமாரிடம் இதற்கு ஒப்பான ஒரு நடை இருந்தது. வாசிப்பதற்கு எளிமையாக இருப்பதால் இதை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும் என்பதில்லை. இந்நடையை தேடிக்கண்டு அடைவதற்குள் தாவூ தீர்ந்துவிடும். ராஜூவைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகள் பலவும் ‘மியாவ்’ என்றுதான் குரலெழுப்புகின்றன என்கிற அம்சத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அபிலாஷின் பதிவில் ஒரு விஷயத்தை தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கிறேன். ‘தேய்ந்த ரெக்கார்ட்’ மாதிரி ‘வட்டியும் முதலும்’ ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார். எனக்கும்கூட இப்போது வாசிக்க கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. ஆனால் இதுவும் கூட சினிமா மாதிரிதான். பாகவதரின் ஹரிதாஸ் தேய்ந்த ரெக்கார்டாகதான் மூன்று வருடங்கள் ஓடியது. வாசகர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு வெகுஜனப் பத்திரிகையுமே ஒரு தொடரை நீட்டிக்கத்தான் விரும்புமே தவிர, முடித்துக்கொண்டு அடுத்த புதுத்தொடருக்கு ‘ரிஸ்க்’ எடுக்காது.

வட்டியும், முதலுமுக்காக ராஜூ அவரது வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறார். இப்போது கிடைத்திருக்கும் பிரபலம் என்பது இத்தொடருக்கானது என்று மட்டும் நினைத்தால் அது முட்டாள்தனம். பல ஆண்டுகளாக இதே துறையில் சலிக்காமல் தோண்டிக்கொண்டே இருந்திருக்கிறார். இப்போதுதான் ஊற்று வந்திருக்கிறது. வாழ்த்துவோம்!

29 மார்ச், 2013

இதுவும் கல்யாணம்தான்!

அமைந்தகரையில் கல்யாணம். அமெரிக்க மாப்பிள்ளைக்கு லீவு இல்லை. அதனால் என்ன.. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்திவிடலாம். இண்டர்நெட்தான் இருக்கே?
மணக்கோலத்தில் பூனம் சவுத்ரி நியூயார்க்கில் மதச்சடங்குகள் செய்யும் அந்த அறையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு லேப்டாப். இண்டர்நெட்டில் ஸ்கைப் சாட்டிங் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தன்வீர் அகமது பங்களாதேஷில் ஒரு கல்யாண மண்டபத்தில் உறவினர் புடைசூழ அமர்ந்திருக்கிறார். கல்யாணம் செய்துவைக்கும் மதகுருமார் மந்திரங்களை ஓதுகிறார். அங்கும் ஒரு லேப்டாப், ஸ்கைப் சாட்டிங். அவ்வளவுதான். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சட்டப்படி பங்களாதேஷில் பதிவும் செய்யப்பட்டு விட்டது.

தகவல் தொழில்நுட்பத்தின் லேட்டஸ்ட் புரட்சி இந்த ‘ப்ராக்ஸி திருமணங்கள்’. மணமகனுக்கும், மணமகளுக்கு பல்லாயிரம் மைல் இடைவெளி இருக்கலாம். கல்வி, வேலை என்று பல காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வாழவேண்டிய கட்டாயம். இதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே போகமுடியுமா என்ன?

வரலாற்றில் கூட இம்மாதிரி ‘ப்ராக்ஸி’ திருமணங்கள் சட்டப்படி நடந்திருக்கின்றன. ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி அண்டோனியா என்கிற பெண் 1770 ஏப்ரலில் லூயிஸ் அகஸ்தே என்கிற பிரெஞ்சு இளைஞரை, அவரவர் நாட்டில் இருந்தபடியே திருமணம் செய்துக் கொண்டார்கள். சில அரசியல் காரணங்களால் வெளிப்படையாக இருவரும் இணைந்து மணக்கோலம் காணமுடியவில்லை. லூயிஸ் வேறு யாருமல்ல. பிரான்ஸை ஆண்ட மன்னர் லூயிஸ்XVIதான். மேரிதான் பட்டத்து ராணி என்பதையும் சொல்லவேண்டியதில்லை. அரசக்குடும்பத்திலேயே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயத் திருமணம் நடந்தேறியிருக்கிறது. டெலிகிராம் மூலமாக கூட திருமணங்கள் சில ஐரோப்பாவில் பதிவாகியிருக்கின்றன.

இந்த பிராக்ஸி திருமணங்கள் அமெரிக்காவில் சகஜம். இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் எங்காவது போர்முனையில் இருப்பார்கள். அங்கிருந்தே தங்கள் ஊரில் இருக்கும் காதலிகளை அவர்கள் கைப்பிடிக்க இம்மாதிரி திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இப்போது புலம் பெயர்ந்து வாழும் ஆசிய கண்டனத்தினரும் தங்கள் செண்டிமெண்டுகளை கைகழுவி இத்திருமணங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அயல்நாடுகளில் திருமணத்துக்கு ஆகும் செலவு, அவர்களை இம்முறைக்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.

இம்மாதிரி திருமணங்களை நியூயார்க்கில் நடத்தி வைக்கும் இமாம் முகம்மது கயூம், “ஆசியநாடுகளில் இருந்து இங்கு வந்து பணிபுரிபவர்கள், கல்வி கற்பவர்கள் நிறைய பேர் இப்போது இம்மாதிரியான திருமணத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களுடைய துணையை உறுதி செய்துக்கொள்ளும் திருப்தி அவர்களுக்கு கிடைக்கிறது” என்கிறார். மேற்கண்ட பூனம் – தன்வீர் திருமணத்தை நடத்திக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால் திருமணம் சட்டப்படி பங்களாதேஷில்தான் பதிவு செய்யப்பட்டதாம். அமெரிக்காவின் சில மாகாணங்கள் இத்திருமணங்களை பதிவு செய்துக் கொள்வதில்லை.

’பிராக்ஸி மேரேஜ் நவ்’ என்று ஒரு நிறுவனமே அங்கு இயங்குகிறது. வருடத்துக்கு நானூறு முதல் ஐநூறு திருமணங்களை இண்டர்நெட்டிலேயே வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறார்களாம். பதிவு செய்வது மாதிரி பின்னணி விஷயங்களையும் சட்டப்படி செய்துக் கொடுக்கிறார்கள். ஏழு வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஜார்ஜ் ஆண்ட்ரூஸ், “ஆரம்பத்தில் இராணுவத்தினருக்காக ஆரம்பித்த சேவை இது. இப்போது மற்றவர்களும் நிறைய பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார். அவருக்கு என்ன? ஒவ்வொரு திருமணத்தின் போதும் லம்பாக ‘ஃபீஸ்’ வாங்கிவிடுகிறார்.

ஆனால் இம்மாதிரி திருமணங்கள் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியாக போகிறது. திருட்டுத்தனமாக குடியுரிமை பெற நிறைய போலி திருமணங்கள் நடைபெற ஆரம்பித்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் ‘பிராக்ஸி திருமணம்’ செய்திருந்தால், பலத்த விசாரணைகளுக்கு பிறகே, பல விஷயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு குடியுரிமை வழங்குகிறார்கள்.

 
நிறைய இஸ்லாமியத் திருமணங்கள்தான் இம்முறையில் நடைபெறுகின்றன. ஏனெனில் ‘குரான்’ சாட்சியாக திருமணம் செய்துக் கொள்பவர்கள் கடவுளுக்கு விசுவாசமாக தங்கள் உறுதியை ஏற்கிறார்கள் என்கிறார் ஜமைக்கா முஸ்லீம் சென்டரை சேர்ந்த இமாம் ஷம்ஷி அலி. “ஸ்கைப் மட்டுமல்ல. கூகிள் ஹேங்-அவுட் மூலமாகவும் திருமணம் நடக்கிறது” என்று கூடுதல் தகவலையும் தருகிறார்.

இந்த திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழம் சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ‘கலிகாலம்’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம் என்கிற சொல்லின் அர்த்தத்தையே இது கேலிக்குரியதாக்குகிறது என்றும் ப்ராக்ஸி திருமணங்களுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

இருபத்தோரு வயது பூனம் சவுத்திரியும், முப்பத்தோரு வயது தன்வீர் அகமதும் திருமணம் முடிந்தவுடன் கேக்குகளை கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் முன்பாக ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்கிறார்கள். முன்னதாக பூனமின் அத்தை ஒருவர் இதேமாதிரிதான் இண்டர்நெட்டெல்லாம் வருவதற்கு முன்பாக டெலிபோன் மூலமாக திருமணம் செய்துக் கொண்டாராம்.

டெலிபோனில், இண்டர்நெட்டில் காதலிப்பதே கஷ்டமென்று நம்மூரில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அங்கே குடும்பமே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 மார்ச், 2013

மக்கள் ஃபீலிங்ஸ் – அதிரடி சர்வே

மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி ஆட்சி நடத்துகிறார்?
 • நன்றாக 
 • மிக நன்றாக
 • மிக மிக நன்றாக 

தமிழின துரோகியான கருணாநிதியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி? 
 • மோசம் 
 • படுமோசம் 
 • படுபடுமோசம் 

ஈழத்தமிழர், இந்தியத்தமிழர், மலேசியத்தமிழர், சிங்கப்பூர் தமிழர், தென்னாப்பிரிக்க தமிழர் மற்றும் உலகத்தமிழர்களுக்கு எல்லாம் விடிவெள்ளியாக காணப்படும் தமிழர் யார்?
 • வை. கோபால்சாமி 
 • வைக்கோ 
 • கலிங்கப்பட்டி வையாபுரி கோபால்சாமி 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா?
 • மாட்டேன் 
 • மாட்டவே மாட்டேன் 
 • கண்டிப்பாக மாட்டேன் 

அரசியல்சாரா தலைவர்களில் யார் தேர்தல் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் 
 • இயக்குனர் சீமான் 
 • நடிகர் சீமான் 
 • செந்தமிழன் சீமான் 

இந்த சர்வேயில் பங்குபெற உங்களது வாக்குகளை பின்னூட்டத்தில் அளிக்கலாம். வாக்களித்தவர்களின் பெயரை சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுப்போம். அவருக்கு பரிசாக “நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடல் காலர்ட்யூனாக வைத்துக்கொள்ள ‘ஏர்டெல்’லில் லக்கிலுக் ஆன்லைன் டாட் காம் சார்பாக காசு கட்டப்படும். ஆறுதல் பரிசு பெறுபவர்களுக்கு அதே பாடல் ரிங்டோனாக அனுப்பி வைக்கப்படும்.

25 மார்ச், 2013

நொச்சி வந்தாச்சி

அரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் ‘நொச்சி’.

நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சி செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்தைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே கூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டல பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும் கொடை நொச்சி செடி.

“இதென்ன புதுச்செடி?” என்று ஆச்சரியப்படாதீர்கள். வேலியோரங்களிலும், கிராமச்சாலைகளின் இருபுறங்களில் புதராக வளர்ந்த நொச்சிச் செடிகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். வெண்ணொச்சி, கருநொச்சி என்று இதில் இரண்டு வகை உண்டு. வெண்ணொச்சி சுமார் முப்பதடி வரை மரம் மாதிரி வளரக்கூடிய தன்மை கொண்டது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். ஆற்றங்கரையோரங்களில் புதர் மாதிரி வளரும். இதன் கிளைகள் ஒல்லியானதாக இருந்தாலும் வலிமையானவை. முன்பெல்லாம் வகுப்பறைகளில் மாணவர்களை மிரட்ட ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்பு பெரும்பாலும் நொச்சிப் பிரம்பாக இருக்கும். கிராமங்களில் இதன் இளம் கிளைகளை கொண்டு கூடை பின்னுவார்கள். இந்த கூடையில் வைக்கப்படும் பொருட்களை பூச்சிப்பொட்டு நெருங்காது. வயற்காடுகளுக்கு வேலியாக நொச்சி வளர்ப்பதுண்டு. வலிமையான வேலியாக கால்நடைகளிடமிருந்து பயிரை காக்கும். வெள்ளாடு கூட நொச்சி இலைகளை சாப்பிட விரும்புவதில்லை. நொச்சித்தழைகளை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்கக் காலத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழமன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணை வீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.

நொச்சியின் எல்லா பயன்பாடுகளை காட்டிலும் அதன் மருத்துவக்குணங்களே சிறப்பானதாக இருக்கிறது. இன்றும் கிராமங்களில் கொசுக்களையும், பூச்சிகளையும் விரட்ட நொச்சி இலைகளை எரித்து புகை போடும் பழக்கம் நீடிக்கிறது (நொச்சி இல்லாத இடத்தில் வேம்பு). சிறுநகரங்களில், ஈக்கள் மொய்க்கக்கூடிய பழங்களை விற்கும் வியாபாரிகள், இலைகளோடு கூடிய நொச்சிக்குச்சிகளை விசிறி அவற்றை விரட்டுவதை கவனித்திருக்கலாம். நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சுக்கு பதிலாக அடைத்து பயன்படுத்தினால் கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்காலத்து வைத்தியம். நொச்சி இலையை சாறெடுத்து கட்டிகளின் மீது தடவிவர கரைந்துவிடுமாம். எதற்கெல்லாம் தைலம் பயன்படுத்துகிறோமோ அந்த உபாதைகளுக்கு எல்லாம் நொச்சி இலை சாறை தைலத்துக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். குடிநீருக்கு வெட்டிவேர் பயன்படுத்துவதைப் போல நொச்சி வேரையும் பயன்படுத்தலாம். நொச்சிவேர் போட்டு நீர் காய்ச்சி குடித்தால் வயிற்றில் பூச்சித்தொல்லை தீரும். இவ்வாறாக நம்முடைய பாட்டிவைத்திய முறைகளில் இன்னும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நொச்சி தீர்வளிக்கிறது. நாட்டு மருத்துவர்கள் தயார் செய்யும் பல மருந்துகளில் நொச்சி கட்டாயம் இடம்பெறுகிறது. 
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நொச்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு, ஓடை, காடுகளில் கிடைக்கும் நொச்சிச் செடிகளை பெயர்த்தெடுத்து வந்து வளர்க்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள் நொச்சி வளர்க்க விரும்பினால், அருகிலிருக்கும் வனத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை உதவிக்கு நாடலாம். சில தனியார் நர்சரிகளிலும் நொச்சிச்செடி வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டோமானால், ஏற்பாடு செய்து தருவார்கள். அரசு சித்த மருத்துவ வளாகங்களில் நொச்சி வளர்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் நொச்சி வளர்ப்புத் திட்டம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில், இதற்கு வணிக அந்தஸ்தும் கிடைத்துவிடக்கூடும். யாருக்குத் தெரியும்? இப்போது கேட்பாரற்று ஆங்காங்கே வளரும் நொச்சியைக்கூட பயிர் செய்யக்கூடிய நிலைமை வந்தாலும் வரும்.

இயற்கைக் காடுகளை அழித்து கான்க்ரீட் காடுகளை ஏகத்துக்கும் உருவாக்கியதற்கு நாம் இன்னும் என்னென்ன விலைகளை தரப்போகிறோமோ? தற்போது கொசுவை ஒழிக்க நாம் பயன்படுத்தி வரும் கெமிக்கல் முறைகளை எதிர்க்கும் திறன் கொசுக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விட்டிருக்கிறது. எனவே இயற்கை ஏற்கனவே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஏற்பாடுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். என்ன இருந்தாலும் உலகம் உருண்டைதானே... வாழ்க்கை வட்டம்தானே?

(நன்றி : புதிய தலைமுறை)

23 மார்ச், 2013

சிங் vs கவுர்

தமிழ் படங்களுக்கான ஓவர்சீஸ் கலெக்‌ஷன் ஈழத்தமிழர்களை நம்பியிருக்கிறது. போலவே இந்திப் படங்களுக்கு பஞ்சாபிகள். நாம் என்னதான் சர்தார்ஜி ஜோக்குகள் சொல்லி அவர்களை நக்கலடித்துக் கொண்டிருந்தாலும் உலகம் முழுக்க பரவலாக காலூன்றியிருக்கிறார்கள் சிங்குகள். குறிப்பாக ஐரோப்பாவில் இந்தியர்கள் என்றாலே பஞ்சாபிகள்தான் எனும் வகையில் வணிகத்தில் கோலோச்சுகிறார்கள்.

இதைப் புரிந்துகொண்ட இந்தித் தயாரிப்பாளர்கள் அவர்களை குறிவைத்து கதைகளை உருவாக்க அயல்நாடுகளில் இந்திப்படங்கள் சக்கைப்போடு போட்டு வசூலை வாரி குவித்தன. பஞ்சாபியர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு ‘சிங்’ கேரக்டர் ஒவ்வொரு படத்திலும் உருவாக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கதையே பஞ்சாபில் நடப்பதைப்போல ‘சன் ஆஃப் சர்தார்’ மாதிரி படங்களும் வந்து நூறுகோடி வசூலை எட்டி சாதனை புரிந்தது. சற்று தாமதமாகவே முழித்துக்கொண்ட பஞ்சாபியர்கள், எதற்கு இந்திப் படங்களுக்கு குனியவேண்டும்.. நம் மொழியிலேயே நம்மாட்களுக்கு படங்கள் எடுக்கலாமே என்று சில ஆண்டுகளாக வரிசையாக படமெடுத்துத் தள்ளுகிறார்கள்.
                                              
1936லேயே முதல் பஞ்சாபிப்படம் கொல்கத்தாவில் தயாரானது. ‘ஷீலா’ என்கிற பெயரில் தயாரான அப்படம் லாகூர் மாகாணத்தில் வெளியானது (அப்போது ஒன்றுபட்ட இந்தியா). அப்படம் வெற்றியடைய அடுத்தடுத்து நிறைய படங்கள் பஞ்சாபி மொழியில் உருவாக்கப்பட்டன. 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது பஞ்சாபில் பாதி பாகிஸ்தானுக்கு போனது. அப்போது பஞ்சாபி சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள். அவர்கள் லாகூருக்கு இடம்பெயர்ந்து ’லாலிவுட்’ எனப்படக்கூடிய பாகிஸ்தான் திரையுலகை உருவாக்கினார்கள். நம்மூர் பஞ்சாபில் திரைமுயற்சிகள் குறைந்து, ஒரு கட்டத்தில் இந்திப்படம் பார்த்து மனசை தேற்றிக் கொண்டார்கள்.
                                                     s
எப்போதாவது அத்திப்பூத்தாற்போல பஞ்சாபி படங்கள் அரங்குக்கு வரும். தோராயமாக பார்க்கப்போனால் எழுபதுகளில் வருடத்துக்கு ஒன்பது படங்கள், எண்பதுகளில் எட்டு, தொண்ணூறுகளில் ஆறு, ஏழு என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. இரண்டாயிரங்களில் இந்திப் படங்கள் வெளிநாடுகளில் வசூலை அள்ளும்போது பொங்கியெழுந்த பஞ்ச்வுட் என்கிற பஞ்சாபி சினிமா சீறிப்பாய தொடங்கியது. 2002ல் மன்மோகன்சிங் (பிரதமர் அல்ல, இவர் இயக்குனர்) இயக்கத்தில் பாடகர் ஹர்பஜன் மான் நடித்த ‘ஜீ ஆயேன் நூ’ இமாலய வெற்றியை அடைய பஞ்சாபிய சினிமா மீண்டும் ஆட்டைக்கு வந்தது. ஹர்பஜன் – மன்மோகன் காம்பினேஷன் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களாக சுட்டுத் தள்ளினார்கள்.

rabba300

2010ல் மட்டும் பதினாறு படங்கள் வெளியானது. ஜிம்மி ஷெர்கீல் நடித்த ‘மெல் கராதே ரப்பா’ எல்லா சாதனைகளையும் உடைத்து பத்து கோடிக்கு மேல் வசூலித்தது. பஞ்சாபில் இவ்வளவு பெரிய பிசினஸ் செய்த முதல் படம் இதுதான். நாப்பத்தி இரண்டு வயதாகும் ஜிம்மி ஷெர்கீல் இப்போது அந்த ஊரின் சூப்பர் ஸ்டார். கடந்த ஆண்டு மட்டுமே இருபது படத்துக்கும் மேலே வெளியாகியிருக்கிறது. என்.ஆர்.ஐ. பஞ்சாபிகளை கவரும் விதமான கதை, காட்சியமைப்பு என்பதுதான் சமீபகால பஞ்சாபி படங்களின் தன்மை. கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாபி படங்களின் பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே போக பாலிவுட்டுக்குப் போன பஞ்சாபிகள் தங்கள் தாய்மண்ணுக்கே திரும்பவர தொடங்கினார்கள். ஜூஹிசாவலா இப்போது பஞ்சாபி படங்களில் நடிக்கிறார். எதிர்காலத்தில் குஷ்பு, சிம்ரன் போன்றவர்கள் நடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்வாசனை கமழும் படங்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எது எப்படியாயினும் காதல்-காமெடி வகைகளில் படங்களை எடுப்பதுதான் அவர்களது பர்ஸ்ட் சாய்ஸ்.sing569
சமீபத்தில் வெளியான சிங் vs கவுர் படத்தைப் பற்றி எழுதவந்து ஓபனிங் கொஞ்சம் நீண்டுவிட்டதற்கு மன்னிக்கவும். ஏனெனில் இந்த பஞ்சாபிப் படங்களை பற்றி பேசும்போது லேசாக இந்த பின்னணியை தெரிந்துவைத்துக் கொள்வதும் அவசியம். பத்து, பதினைந்து கோடியெல்லாம் பெரிய கலெக்‌ஷனா என்றால் பஞ்சாபியில் யெஸ் தான் சொல்லவேண்டும். கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டெல்லாம் வளர்ந்த பிள்ளைகள். பஞ்ச்வுட் தவழும் குந்தை.

பஞ்ச்வுட்டில் முதன்முறையாக ஒரு தென்னிந்திய படநிறுவனம் படம் தயாரித்திருக்கிறது என்பதுதான் சிங் vs கவுரைப் பற்றி நாம் தெரிந்துவைத்துக் கொள்வதற்கான நியாயமாக இருக்கிறது. தயாரிப்பாளர் வேறு யாருமில்லை. ‘வசந்தமாளிகை’ தயாரித்த நம்ம பக்கத்து ஊர் ராமாநாயுடுதான். அங்குள்ள உள்ளூர் தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து தயாரித்த இப்படத்தோடு ஒட்டுமொத்தமாக நம் சன்பிக்சர்ஸ் கணக்காக ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸும் களமிறங்கியது. நாலு கோடி ரூபாய் செலவில் பிரும்மாண்டமாக உருவான படம் என்பதே இப்படத்துக்கு உலகெங்கும் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கியது.

ஹீரோவாக நடித்த முப்பத்தியோரு வயது ஜிப்பி கிராவெல் அடிப்படையில் ஒரு பாடகர். பஞ்சாபி சினிமாவில் நடிப்பவர்கள் பெரும்பாலும் பாடகர்களாகவும் இருந்தாக வேண்டும். பாடத்தெரியாதவர்களை பஞ்சாப் ரசிகர்கள் மதிப்பதில்லை. மேலே குறிப்பிட்டிருக்கும் வசூல்சாதனை சரித்திரம் படைத்த படமான ‘மெல் கராதே ரப்பா’வில் அறிமுகம் ஆனவர் இவர். பஞ்சாபில் அதிகம் விற்கக்கூடிய இசை ஆல்பங்கள் ஏராளமானவை இவரது கைவண்ணம்தான். பாப்கார்னை வாயில் போடுவது மாதிரி பரபரவென்று நான்கு படங்கள் நடித்து (நான்குமே சூப்பர்ஹிட்), இது ஐந்தாவது படம். பஞ்சாபின் முதல் ஆக்‌ஷன் ஹீரோ என்று இவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பாலிவுட்டின் நூறுகோடி ஹீரோ அக்‌ஷய்குமார் அடுத்த படமொன்றில் தன்னோடு நடிக்க இவரை அழைத்திருக்கிறார்.
                               

ஹீரோ விரும்பாத ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஊர் கட்டாயப்படுத்துகிறது. இந்த தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு கனடா பெண்ணை காதலிப்பதாக சும்மாவாச்சுக்கும் டூப் அடிக்கிறார். நம்பகத்தன்மைக்காக இண்டர்நெட்டில் இருந்து அப்பெண்ணின் போட்டோவை பிரிண்ட் எடுத்தும் காட்டுகிறார். அந்த பெண்ணை நேரில் அழைத்துவரவேண்டும் என்று அம்மாவும், உறவினர்களும் கட்டாயப்படுத்த கனடாவுக்கு போகிறார். கனடாவில் அப்பெண்ணை இரண்டு மூன்று முறை கொலைவெறி தாக்குதலில் இருந்து காக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு பாடிகார்டாகவே ஆகிவிடுகிறார். ஊரில் இருந்து ‘அழுத்தம்’ வர வேறு வழியின்றி பொய்சொல்லி இந்தப் பெண்ணை ஊருக்கு அழைத்து வருகிறார். அடுத்தடுத்து பொய் சொல்வதும், அந்த பொய்யை மெய்யாக்க பாடுபடுவதுமாக படம் முழுக்க கிரேஸிமோகன் பாணி காட்சிகள். முதல் பாதி முழுக்க காமெடி, ஆக்‌ஷன் என்று களைகட்ட, இரண்டாம் பாதியில் அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகள்.

காமெடி-ரொமான்ஸ் படமாக வருமென்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு சிங் vs கவுர் மரண மசாலா ஆக்‌ஷன் படமாக வந்து ஆச்சரியமூட்டியது. பஞ்சாபில் ‘தபாங் சிங்’, ‘ரவுடி சிங்’ என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கல்லா கட்டுகிறார்கள். ராமாநாயுடுவின் தயாரிப்பு என்பதாலோ என்னவோ நிறைய தெலுங்கு மசாலா வாசனை. குத்துப்பாட்டு, டேன்ஸ், காமெடி, காதல், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் என்று பர்பெக்ட்டான காக்டெயில்.  

singh-vs-kaur1 copy

இப்படம் பஞ்சாபி சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது என்று அந்த ஊர் ஊடகங்கள் கொண்டாடுகிறது. சினிமாத் தொழிலில் பழம் தின்று கொட்டை போட்ட ஆட்கள் இனி பஞ்சாபி படங்களிலும் முதலீடு செய்ய பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. உள்ளூர், வெளியூர் என்று ரிலீஸ் ஆன அத்தனை சென்டர்களிலும் வசூல் சுனாமி. இப்படம் வெளியானபோது கூடவே வெளியான இந்தியின் சூப்பர்ஹிட் படமான ‘கை போ சே’ பஞ்சாபில் வசூலில் அடிவாங்க இப்படமே காரணம். ஐரோப்பாவில் ‘கோ ஃபார் ஜிப்பி’ என்று புதுகோஷமே ஜிப்பிகிராவெலுக்காக உருவாக்கப்பட்டு விட்டது.

முன்பே சொன்னதுபோல பஞ்ச்வுட்காரர்கள் தவழும் குழந்தைகள். வளரும் வரை ரசிப்போம். வளர்ந்தபின்னர் விமர்சிப்போம்.

(நன்றி : http://cinemobita.com)

22 மார்ச், 2013

மாரியம்மாள்

ஈழத்தமிழர்களுக்காக எண்ணற்ற போராட்டங்கள் தற்போது தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வைகோவின் தாயார் மாரியம்மாள் தள்ளாத வயதில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்கிறார். தொண்ணூறு வயது. எனக்கு மட்டுமல்ல. கட்சி மாச்சரியங்களைத் தாண்டி, திராவிடக் குடும்பங்களில் பிறந்த பலருக்கும் இது ஓர் உணர்ச்சிப்பூர்வமான காட்சி.

வைகோவின் தந்தை வையாபுரி நாயக்கர் அரசியலுக்காக தன்னுடைய பரம்பரை சொத்தை செலவழித்தபோது எந்த ஆட்சேபணையுமின்றி மகிழ்ச்சியோடு அனுமதித்தவர் மாரியம்மாள். எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் காலத்து அடக்குமுறைகளின்போது இவரது கலிங்கப்பட்டி இல்லம் திமுகவினருக்கு வேடந்தாங்கல். திமுகவின் வனவாசத்தின்போது தென்மாவட்டத்தில் கட்சியை கட்டிக்காத்த புண்ணியத்தலம். மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமின்றி, தேசியத்தலைவர்கள் பலரும் வருகை புரிந்த முக்கியத்துவமான இடம் கலிங்கப்பட்டி. வடலூர் சத்தியஞானசபையில் மட்டுமல்ல, கலிங்கப்பட்டி வீட்டிலும் அடுப்பு அணைவதேயில்லை.

வைகோவுடைய அரசியல் வாழ்வின் மகத்தான தியாகம் பொடாவில் சிறை சென்றது. அப்போது மாரியம்மாளின் எதற்கும் அஞ்சாத இதயம்தான் மதிமுகவை காத்தது. திராவிடத் தலைவர்களின் ஒவ்வொரு தியாகங்களுக்கும் பின்னணியில் இதுபோல லட்சக்கணக்கான மாரியம்மாள்கள் இருக்கிறார்கள்.

கண்களில் நீர்கசிய வணங்குகிறேன் தாயே!

20 மார்ச், 2013

பரதேசி

தமிழின் தலைசிறந்த படங்களில் ஒன்று என்று சொல்வதில் தயக்கம் ஏதுமில்லை. இவ்வாறு சொன்னால் ட்விட்டர் ரீட்விட்டுகளும், ஃபேஸ்புக் லைக்குகளும், ரீஷேர்களும் குறையும்தான். ஈடுசெய்ய முடியாத இழப்புதான். ஆனாலும் என்ன செய்ய.. எனக்கு அவ்வளவாக பிடிக்காதவராக இருந்தாலும் பாலா நாம் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு பர்ஃபெக்டாக படம் எடுத்திருக்கிறாரே?

படத்தில் லாஜிக் குறைகிறது, மேஜிக்கே இல்லையென்றெல்லாம் நிறைய விமர்சனங்களை வாசித்திருப்பீர்கள். விமர்சனமாக எழுத சரக்கில்லாதவர்கள் மொத்த கதையையே கூட விமர்சனமாக எழுதியிருப்பார்கள். எனவே படம் பார்க்காதவர்களுக்கும் கதை தெரிந்திருக்கும். இந்தப் பதிவுக்கு எந்தவிதமான தேவையும் இல்லையென்றாலும் ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாக பதிவு செய்துவிட விரும்புகிறோம். ‘பரதேசி பார்த்தே ஆகவேண்டிய திரைப்படம்’.

அவதார் படத்தில் ஜேம்ஸ் கேமரூன் புதியதாக ஓர் உலகத்தை சிருஷ்டித்ததை மாதிரி, பாலா இப்படத்தில் நாமறியாத ஒரு தமிழகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறார். படத்தின் டைட்டிலில் தொடங்கி எண்ட் கார்ட் வரை ஆச்சரியத்தில் வாய்பிளந்து பார்க்க இந்த அற்புத படைப்பாற்றலே காரணம். பாலா படைப்பாளிகளின் படைப்பாளி. இவரது சினிமா மொழி unique ஆன ஒன்று. இதுவரை யாரும் பயன்படுத்தாத புது மொழி. இவரை பார்த்து சூடு போட்டுக் கொள்கிறவர்கள், பாதி வெற்றியை அடைந்தாலேகூட அது சாதனைதான்.

இதுவரை எத்தனையோ இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். நாஞ்சில்நாடனை பாலா கவுரவித்திருப்பதைப் போல, இதுவரை யாரும் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நடிகர்களில் தொடங்கி, டெக்னிஷீயன்கள் வரை அத்தனைபேரையும் மிகச்சரியாக கண்ட்ரோல் செய்திருக்கிறார் பாலா. படத்தின் ஒரு ஃப்ரேம் கூட அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து மீறி துருத்தியதாக தெரியவில்லை. கேப்டன் ஆஃப் த ஷிப் எப்படியிருக்க வேண்டுமென்று ‘பரதேசி’ எடுத்துக் காட்டியிருக்கிறார் பாலா. குறிப்பாக க்ளைமேக்ஸ். மரணத்தைவிட கொடூரமான ஒரு தண்டனையை கதையின் நாயகனுக்கு தந்திருக்கிறார். சேது பார்த்தபோது கூட இவ்வளவு பாதிப்பில்லை. இதற்காகவே இன்னொரு முறை நிச்சயம் ‘பரதேசி’ பார்க்கவே மாட்டேன். இதுவரை வந்த தன்னுடைய படைப்புகளில் ஆகச்சிறந்ததாக இதை எடுத்திருக்கும் பாலாவுக்கு என்னால் அளிக்க முடிந்த எளிய பரிசு இதுதான்.

பாலாவின் தேவர்பாணி இந்துத்துவா மீது நமக்கு சில விமர்சனங்களும் உண்டு. இப்படத்திலும் அது வெகுவாகவே வெளிப்படுகிறது. குறிப்பாக மருத்துவர் பரிசுத்தம் பாத்திரத்தை அவர் வார்த்திருப்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். பரதேசியில் அப்பகுதி மட்டும் ஒட்டாமல், வேண்டுமென்றே திணித்ததாக கதையோட்டத்துக்கு தடையாக அமைந்திருக்கிறது. படத்தின் முற்பாதியில் பந்தி கவுரவத்தை காட்ட வசனம் எழுதிய நாஞ்சில் நாடனின் சிறுகதையை கடன் பெற்ற பாலா, பரிசுத்தம் பகுதிக்கு ஜெயமோகனிடம் கேட்டு ‘ஓலைச்சிலுவை’ சிறுகதையை கடன் வாங்கியிருக்கலாம். மகிழ்ச்சியாக கொடுத்திருப்பார். படம் இன்னும் பிரமாதமாக பரிணமித்திருக்கும்.

16 மார்ச், 2013

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவி

ஈழத்தமிழரின் இன்னலை தீர்க்க புரட்சித்தலைவி அறிக்கை விடும்போதெல்லாம் மூத்த திம்மி ஒரு தந்திரம் செய்வார். “1989ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அம்மையார் விடுத்த அறிக்கை” என்று ஓர் அறிக்கையை காப்பி & பேஸ்ட் செய்வார். ராஜீவ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று எந்த காலத்திலேயோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபடியும் சொல்லிக் காட்டுவார். மூத்த திம்மிக்கு மட்டுமல்ல, அண்டோமேனியா அரசின் அல்லக்கைகளான இன்றைய திம்மிகளுக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறோம். ‘அது போன நூற்றாண்டு. இது இந்த நூற்றாண்டு’

இந்த நூற்றாண்டில் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றி செவ்வாய் கிரகம், புதன் கிரகம் ஆகியவற்றில் வசிக்கும் தமிழர்களுக்கு எல்லாம் உரிமைக்குரல் கொடுக்கும் தமிழின சுனாமி நெடுமாறன் அய்யா, பொடாவை போடா என்று புறந்தள்ளிய இனமான புரட்சிப்புயல் வைகோ, தமிழை டம்ப்ளரில் ஊற்றி தமிழனுக்கு இன உணர்வை ஊட்டி வளர்க்கும் ‘வீ டம்ப்ளர்ஸ்’ ஸ்ரீமான் சீமான், வாழும் காரல்மார்க்ஸாகவும் புரட்சித்தலைவியை வசைபாடுபவர்களுக்கு காராசேவாகவும் திகழும் அய்யா தான்னா பான்னா போன்றோர் ஈழத்தாயாக-தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவியாக ஒப்புக்கொள்ளும் நம் புரட்சித்தலைவியை, இவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சங்கத்தமிழ் மறவர்கள் மட்டுமின்றி சொர்க்கம், நரகம் உள்ளிட்ட ஈரேழு உலகிங்கிலும் வாழும் தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ, க்யூசி ஓக்கே உள்ளிட்ட ஏராளமான தரச்சான்றுகள் பெற்ற ஒரே தலைவி புரட்சித்தலைவி பொன்னியின் செல்வி காவிரி தந்த கலைத்தாய் தங்கத்தாரகை மட்டுமே.

புலிகளின் மீது பாசமின்றியா புலிகளுக்கு பெயர் சூட்டுவார் புரட்சித்தலைவி என்று நாம் கேட்கவில்லை. திராவிட திம்மிகளை நோக்கி மக்கள் கேட்கிறார்கள். நியாயமாகப் பார்க்கப் போனால் ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி லெவலுக்கு பத்திரிகைகளில் எழுதும் ஊடகத் தோழர்களின் பெயரைதான் புலிகளுக்கு சூட்டியிருக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் மக்கள் மனதில் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் இன்னமும் அமரர் எஸ்.எஸ்.சந்திரன் அளவுக்கு புனிதமடையாத காரணத்தால்தான் புலிகளுக்கு தற்காலிகமாக வேறு பெயர்களை சூட்டியிருக்கிறார் புரட்சித்தலைவி. இந்த நெருக்கடியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழினத் தலைவர்கள், ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளப் போராளிகளும் கூட எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் நமக்குக் கிடைத்த புரட்சித்தலைவியின் பஜனைமட பக்தகோடிகளாகவே இருக்கிறார்கள். சாவுக்கு டாட்டு நொட்டில் தொடங்கி, முந்தாநாள் ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்தவர் வரை வலது கையில் ரெட்டை குதுர றெக்கை பச்சை குத்தியவராகவே வாய்த்திருப்பது இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க புரட்சிகளுள் ஒன்றாக உலகத் தமிழின வரலாற்றில் பொறிக்கப்படும்.

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவிக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தி புண்ணியம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு நாம் டம்பளர்களுக்கா, மட்டையடி திமுகவின் வைகோவுக்கா, தமிழர் டான் நெடுமாறனுக்கா, கலக்கல் காம்ரேட் தாபாவுக்கா, அல்லது பத்திரிகைகளில் பாமாலை பாடப்போகும் ஊடகத்தோழர்களுக்கா என்பதுதான் இப்போது மக்களுக்கு சஸ்பென்ஸாக இருக்கிறது.

புண்ணியப் பூமியாம் பாரதம் புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப் பார்வையில் புனிதம் அடைகிறது. அம்மாவின் வழிகாட்டுதலில் பாரதம் வல்லரசாகி, உலகின் நெம்பர் ஒன் நாடாக ஆகப்போகும் காலம் வெகுவிரைவில். பாவ உலகில் பிறந்த பாவத்தைக் கழுவிக்கொள்ள நாமும் பாடுவோம் புரட்சித்தலைவியின் புனித கோவிந்தத்தை.

ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
புரட்சி அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வ மங்களம் கூடும்


(இந்த பாடலை தினமும் 1008 முறை பாராயணம் செய்பவர்களுக்கு அல்லது ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டு நூற்றியெட்டு லைக்கு வாங்குபவர்களுக்கு அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று வேதமார்க சன்மார்க்க போஷித நீடாமங்கல சோதிடர் வ.சுப்பிரமணிய அய்யர் கணிக்கிறார்)

14 மார்ச், 2013

குண்டெல்லோ கோதாரி!


கோதாவரி இந்தியாவின் இரண்டாவது நீளமான நதி. கங்கைக்குப் பிறகு இதுதான். 1465 கி.மீ. தூரம் பாய்கிறது. மகாராஷ்டிராவில் பிறந்து, ஆந்திராவை வளப்படுத்தி, தக்காண பீடபூமியை கடந்து வங்கக்கடலை அடைகிறது. கங்கையைப் போலவே இந்துக்களுக்கு இதுவும் புண்ணிய நதி. தென்னிந்தியாவில் ராமர் கோயிலுக்கு புகழ்பெற்ற புண்ணியத்தலமான பத்ராச்சலம் இந்நதியின் கரையில்தான் அமைந்திருக்கிறது.

வேண்டுவதை தருவாள் கோதாவரி. வேண்டாததை செய்தால் அழித்துவிடுவாள் என்றொரு நம்பிக்கை. 1986ல் அழித்துவிட்டாள். அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையில் கோதாவரியின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. சென்ற இடமெல்லாம் பெரும் நாசம். ஊருக்குள் புகுந்த வெள்ளம் மொத்தத்தையும் துடைத்துச் சென்றது. உயிரிழந்தோர் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. உயிர் பிழைத்தோர் அனைத்தையும் இழந்திருந்தனர். மூன்று நாட்களுக்கும் மேலாக சோறு தண்ணியில்லாமல் பத்ராச்சலம் ஸ்ரீசீத்தாராமச்சந்திர சுவாமி கோயிலில் ஒடுங்கிப் போயிருந்தவர்களை காக்க நேவி ஹெலிகாஃப்டர்கள் விரைந்தன. நகர்ப்புறங்களே நாசமென்றால், கிராமங்களின் கதி? மஞ்சள் நதி இம்மாதிரி சீற்றம் கொண்டு சீனாவை பேரழிவுக்கு உள்ளாக்கிய சம்பவத்தை ‘சீனாவின் துயரம்’ என்பார்கள். கோதாவரியின் கோபத்தை ‘ஆந்திராவின் துயரம்’ என்றும் சொல்லலாம். இருபத்தேழு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்நாட்களை நினைத்து மழை பெய்யும் போதெல்லாம் இன்னமும் நடுங்குகிறார்கள்.

கோதாவரி பேரழிவை கவிஞர்கள் கவிதையாக வடித்துத் தள்ளியதைப் போல, எழுத்தாளர்களும் கதைகளாக எழுதித் தள்ளினார்கள். அதில் ஒரு நூல்தான் கோதாவரி கதைலு. பி.வி.எஸ்.ராமராவ் எழுதியிருந்தார். 1989ல் வெளிவந்த இந்த புத்தகம் ஆந்திராவில் சூப்பர்ஹிட். இதை வாசித்த லட்சுமி மஞ்சுவுக்கு கோதாவரி வெள்ளத்தை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
                 
ஆந்திர சினிமாவின் அசைக்க முடியாத சக்கரவர்த்தி மோகன்பாபு. இரண்டு முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியிருக்கிறார். முன்னாள் ராஜ்யசபா எம்.பி. பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா என்று ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில் அவர்களுக்கு ’டஃப் ஃபைட்’ கொடுத்தவர். நம்மூர் நாட்டாமை தெலுங்கில் ’பெத்தராயுடு’வாக படமானபோது இவர்தான் ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்பக்கால நண்பரும் கூட. ரஜினியை மாதிரியே தமிழில் ஆரம்பத்தில் வில்லனாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், தெலுங்குக்கு செட்டில் ஆகி ஹீரோவானார். இவருடைய மூத்த மகள்தான் லட்சுமி மஞ்சு. அடுத்த இரண்டு மகன்களும் கூட ஆந்திராவில் ஹீரோக்கள்தான். குடும்பத்தோடு கலைச்சேவை.

Boss Rajini

ஆந்திரப் பெற்றோர் என்றாலும் லட்சுமி மஞ்சு சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர். சிறுவயதில் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பார். சினிமா அவருக்கு உயிர். அமெரிக்கா சென்று கலைத்துறையில் பட்டம் பெற்றார். ஏராளமான அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். பெரிய விளம்பரங்களில் தோன்றினார். சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்றவர்களிடம் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இருந்தும் தாய்மண் ஆந்திரா அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது.

ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் (வயதும் முப்பத்தைந்து என்பது ஒரு காரணம்) கிடைத்த வித்தியாசமான வேடங்களில் –வில்லியாக கூட- நடிக்க ஆரம்பித்தார். எம்.பி. கார்ப்பரேஷன் என்று புதிய நிறுவனத்தை துவக்கி படங்களை தயாரித்தார். தம்பிகள்தான் ஹீரோ. ராம்கோபால் வர்மாவின் ‘தொங்லா முத்து’, ‘அனகனகா ஒரு தீரடு’ போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. ‘டிபார்ட்மெண்ட்’ படத்தில் சஞ்சய்தத்தின் மனைவியாக வந்தவர் இவர்தான். சமீபத்தில் நம்முடைய ‘கடல்’ படத்திலும் தமிழில் அறிமுகமானார். தெலுங்கின் மாற்று சினிமா முகமாக லட்சுமி மஞ்சு உருவெடுத்துவிட்டாலும் பெரிய ‘பிரேக்’ ஒன்றுக்காக மெனக்கெட்டுக் கொண்டிருந்தார்.

’கோதாவரி கதைலு’க்கு முறைப்படி பேசி சினிமாவாக்க உரிமை பெற்றார். சினிமாவுக்கு ஏற்றவகையில் கதை மாற்றப்பட்டது. புதுமுக இயக்குனரான குமார் நாகேந்திராவுக்கு வாய்ப்பளித்தார். “அமெரிக்காவில் என்னுடைய திறமைக்காகதான் வாய்ப்புகள் கிடைத்தது. மோகன்பாபுவின் மகள் என்பதற்காக அல்ல. நானும் ஒரு திறமையாளருக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறே” என்றுகூறி குமார்நாகேந்திராவை அறிமுகப்படுத்துகிறார். இவர் விளம்பரப்பட இயக்குனர். இவரது சில விளம்பரங்கள் மஞ்சுவை அசத்தியிருந்ததாலேயே இந்த அரிய வாய்ப்பு வீடு தேடி வந்தது.

gundollo
2011 ஜனவரியில் இந்த படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார் மஞ்சு. இளையராஜாவின் தீவிர ரசிகையான அவர் ராஜாதான் இப்படத்துக்கு இசையமைத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் கிடந்தார். ஏனெனில் அவரது இசைதான் நதியை அழகாக்கும் என்பது மஞ்சுவின் எண்ணம். நான்கு மாதங்கள் கழித்து ராஜா ஒப்புக்கொண்டார். மூணாறு சென்று பாட்டுக்கு ட்யூன் போட்டார். ராஜாவின் இசை கோதாவரிக்கு ஆக்சிஜென் மாதிரி. அருமையான பாடல்கள் கிடைத்ததுமே படம் மடமடவென்று வளர ஆரம்பித்தது. ராஜா கொடுத்த தெம்பால் தமிழ்/தெலுங்கு இருமொழிகளிலும் படத்தை வெளியிட முடிவெடுத்தார் மஞ்சு. ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்று தமிழ் வெர்ஷனுக்கு பெயர் சூட்டப்பட்டது.

40 ஏக்கர் நிலம் மொத்தமாக வாடகைக்கு எடுத்தார்கள். ராஜமுந்திரிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்தை புதுசாக ஆர்ட் டைரக்டர் உருவாக்கினார். ஆயிரக்கணக்கான லாரி தண்ணீரை பயன்படுத்தி மினி-கோதாவரி நதியை செட்டிங்கிலேயே உருவாக்கினார்கள் (லைஃப் ஆப் படத்தில் கடலையே செட்டு போட்டது போல). காட்சிகளை தத்ரூபமாக படம்பிடிக்க மொத்தம் 50 கேமிராக்கள். கிராபிக்ஸுக்கும் வெள்ளமாக செலவழித்திருக்கிறார்கள். கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரத்துக்காக படத்தின் வெளியீடு பல முறை தள்ளி வைக்கப்பட்டது.

படத்தின் கதை என்னவோ சிம்பிள்தான். ஆதி-மஞ்சு இருவருக்கும் திருமணம் ஆகிறது. கோதாவரியில் வெள்ளம் பாய்கிறது. கிராமங்கள் மூழ்குகின்றன. தன்னுடைய முன்னாள் காதலிக்கு என்னானதோ என்று ஆதி அலைபாய்கிறார். மஞ்சுவும் தன்னுடைய முன்னாள் காதலனை நினைத்துப் பார்க்கிறார். ஃப்ளாஷ்பேக்குகளில் காட்சிகள் விரிகின்றன.
இடையில் ஆதி-டாப்ஸி ‘லிப்-லாக்’ காட்சி ஒன்று படத்தில் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. என் வாழ்க்கையிலேயே முதல்தடவையாக இப்போதுதான் இவ்வளவு டீப் கிஸ் அடிக்கிறேன் என்று டாப்ஸியும் வெட்கத்தோடு ஒப்புக்கொண்டார். இந்த ஒரு காட்சிக்காகவே படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்குவோம் என்று சென்ஸார் பயமுறுத்த, கஷ்டப்பட்டு எடுத்த அக்காட்சியை நீக்கி யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
  
இது வெறும் படமல்ல. மஞ்சுவின் கனவு. தன்னை நிரூபிக்க பயன்படும் வாய்ப்பாக இப்படத்தை நினைக்கிறார். அதனால்தான் என்னவோ உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8க்கு படம் வெளியாகியிருக்கிறது. இன்னும் தமிழ் டப்பிங் பணிகள் சரியாக முடியாததால், தமிழ் வெளியீடான ‘மறந்தேன், மன்னித்தேன்’ கொஞ்சம் தள்ளிப் போகிறது.

முதல் பார்வையில் ‘குண்டெல்லோ கோதாரி’ பாஸ்மார்க்தான் வாங்கியிருக்கிறது. விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறார் லட்சுமி மஞ்சு. ஆணாதிக்க சினிமாவில் ஒரு பெண் ஜெயித்துதான் காட்டட்டுமே?

(நன்றி : cinemobita.com)

13 மார்ச், 2013

வசந்த மாளிகை

அழகாபுரி ஜமீனின் இரண்டாவது வாரிசு ஆனந்த் ஒரு பெரும் குடி மற்றும் காம வெறியர். ஆனால் நல்லவர். வேலை வெட்டியே இல்லாத அவர் தனக்கு ஒரு பி.ஏ.வை வேலைக்கு வைத்துக் கொள்கிறார். பி.ஏ.வாக வரும் பெண் ஆனந்தை திருத்துகிறார். திருந்திய ஆனந்த் பி.ஏ.வை காதலிக்கத் தொடங்குகிறார். அந்தஸ்து, சுயமரியாதை மாதிரி சில பிரச்சினைகளால் பிரியும் காதலின் கதி என்ன? – ஹீரோயின் ஹீரோவை திருத்துவது என்று கிட்டத்தட்ட ‘புதிய பாதை’ கதை மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கவுசல்யா தேவி என்பவர் எழுதிய தெலுங்கு நாவலான ‘பிரேமநகர்’ தெலுங்கில் அதே பெயரில் படமாக்கப்பட்டது. டி.ராமாநாயுடு பெரும் பொருட்செலவில் தயாரித்து 1971ல் வெளியானது. நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். இதையடுத்து தமிழிலும் அதே படத்தை ‘வசந்த மாளிகையாக’ உருவாக்கினார் ராமாநாயுடு. தெலுங்கினை இயக்கிய பிரகாஷ்ராவே தமிழிலும் இயக்கினார். நடிகர், தயாரிப்பாளர், கேமிராமேன், இயக்குனர் என்று பிரகாஷ்ராவுக்கு நிறைய முகங்கள் உண்டு. வசந்தமாளிகைக்கு பிறகு சிவாஜிக்கு ‘அவன் ஒரு சரித்திரம்’ இயக்கியவரும் இவரே. இவருடைய மகன் ராகவேந்திரராவ் தெலுங்கில் நூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சாதனை இயக்குனர். தெலுங்கின் சூப்பர் ஸ்டார்கள் அத்தனை பேரையும் இயக்கியவர் (ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா’ இவருடைய இயக்கம்தான்).

தமிழுக்கு ஏற்ப வசந்தமாளிகையில் சில மாற்றங்கள் செய்துக்கொண்டார் பிரகாஷ்ராவ். குறிப்பாக காமராஜரின் பிரச்சார பீரங்கியான சிவாஜிக்காக சில அரசியல் ‘பஞ்ச்’கள் வசனங்களில் இடம்பெற்றது. சிவாஜி குடிகாரராக நடித்தாலும் அப்போது திமுக அரசு கொண்டுவந்த மதுவிலக்கு வாபஸை கிண்டலடித்து நாகேஷ் பேசுவார். காமராஜரின் பள்ளிச்சீருடை அறிமுகத்துக்கு ஒரு சின்ன பிரச்சாரத்தையும் சிவாஜி செய்வார் (ஸ்ரீதேவி பள்ளிச்சீருடை அணிந்து கிளம்பும்போது). பாட்டாளிகளுக்கு ஆதரவான வசனங்கள் மூலம் ஆளும் திமுகவுக்கு ஆணி அடிக்கவும் முயற்சித்திருக்கிறார்.

பீம்சிங் படங்களில் நடித்து, நடித்து சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்யக்கூடியவர் என்று பெயர் பெற்றுவிட்டார். கலர் படம் என்பதாலோ என்னவோ முடிந்தவரை யதார்த்தமான நடிப்பை வசந்தமாளிகைக்கு வழங்கினார். குடிக்கும் காட்சிகளில் அவரது கண்கள் சிவந்து, கால்கள் லேசாக தள்ளாட்டம் போட, நாக்கு குழறி, நடுங்கும் விரல்களில் சிகரெட் புகைத்து.. சர்வதேச தரத்துக்கு சிவாஜியின் நடிப்பு அமைந்தது. படத்தின் கதையோடு இணைந்தவை என்பதால் பாடல் காட்சிகளுக்கு பிரத்யேகமாக மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் பாடலில் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்தே நடித்திருக்கிறார். ஒரே படத்தில் இத்தனை டைட் க்ளோசப் வேறு எந்த நடிகனுக்குமே வைக்க முடியாது. அப்படி வைத்தால் விகாரமாகி விடும். சிவாஜி மட்டுமே குளோசப்பிலும் அழகாக தெரிபவர். லாங் ஷாட்களிலும், ஸ்க்ரீனில் தன்னுடைய இருப்பை எப்படியேனும் தெரியப்படுத்துபவர்.

இம்மாதிரி படங்களைப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த நடிகரான விளங்கிய சிவாஜிக்கு உரிய கவுரவத்தை நாம் அளிக்கத் தவறிய அவலம் உறைக்கிறது. வசந்தமாளிகை வெளிவந்ததற்கு முந்தைய ஆண்டுதான் ரிக்‌ஷாக்காரனில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டிருந்தது. வாத்யார் ரசிகனாக இருந்தாலும் நடிப்புக்காக அவருக்கு விருது என்பதை நம்மாலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அப்போதைய இந்திரா காங்கிரஸுடனான திமுக கூட்டணிக்கு கிடைத்த லஞ்சமாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசிவரை சிவாஜிக்கு தேசியவிருது கொடுக்காமலேயே அவரை அவமானப்படுத்தி விட்டது இந்திய அரசு. காலமெல்லாம் காங்கிரஸுக்கு தன்னலம் பாராமல் உழைத்த கலைஞனுக்கு கிடைத்த பரிசு இது.

வசந்தமாளிகை வெளியான 1972, சிவாஜியின் ஆண்டு. அவ்வாண்டு குடியரசுத் தினத்துக்கு வெளியான ராஜாவில் தொடங்கி ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி என்று ஏழு படங்கள். ‘தர்மம் எங்கே’ தவிர்த்து மீதி ஆறு படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. வசந்தமாளிகை இருநூற்றி எழுபத்தைந்து நாள் ஓடி, வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. தமிழில் மாபெரும் வெற்றி கொடுத்த தைரியத்திலேயே பிற்பாடு இந்தியிலும் ராஜேஷ்கண்ணா, ஹேமமாலினியை வைத்து வசந்தமாளிகையை எடுத்தார் ராமாநாயுடு. அங்கே எழுநூற்றி ஐம்பது நாள் ஓடியது.

வசந்தமாளிகையின் ஒரிஜினலான பிரேமநகரில் நாகேஸ்வரராவ் இறுதிக்காட்சியில் இறந்துவிடுவார். தமிழிலும் அதேமாதிரி இடம்பெற்று, ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பை வெளியான நேரத்தில் வசந்தமாளிகை பெற்றதாம். இதனால் தியேட்டர்களில் ஏற்பட்ட வன்முறைச்சூழலை தவிர்க்க, இறுதிக்காட்சியை மீண்டும் மாற்றி சிவாஜி உயிர்பிழைப்பதாக மாற்றப்பட்டதாக ‘பழம்பெருசுகள்’ சிலர் சொல்ல கேள்வி. உண்மையா என்று தெரியவில்லை. இந்தி வெர்ஷனிலும் இதே க்ளைமேக்ஸ்தான்.

72ல் தொடங்கி பலமுறை தியேட்டர்களில் வசந்தமாளிகை ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் வசூலை அள்ள தவறுவதேயில்லை. கடந்த ஆண்டு டிஜிட்டலாக்கப்பட்டு வெளியாகி ‘கர்ணன்’ மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வசந்தமாளிகையும் மீண்டும் டிஜிட்டல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘டிஜிட்டல் ஆக்கியிருக்கிறோம்’ என்று சொல்லி ரசிகர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்கள். ஒளி, ஒலியில் பெரிய துல்லியம் ஏதுமில்லை. டிவிடி ரிப்பில் இருந்து உருவி புரொஜெக்‌ஷன் செய்வதைப் போல மங்கலாக திரையில் தெரிகிறது. எது எப்படியிருந்தாலென்ன வசந்தமாளிகையின் வசீகரம் இதனால் எல்லாம் குறைந்துவிடவில்லை. இம்முறையும் அரங்குகளில் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக ரசிகர்கள். விசில் சத்தம், கைத்தட்டல்களால் தியேட்டர் கூரைகள் அதிர்கிறது.

ஆல்பட் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் கலைக்கோயில் சிவாஜி ரசிகர்மன்றத்துடையதும் ஒன்று. கலைக்கோயில் என்கிற பட்டம்தான் அவருக்கு எத்துணை பொருத்தமானது?

9 மார்ச், 2013

9ன்பதுல குரு

“எம்படத்துலே கதையே இல்லை.. கதையே இல்லைன்னு ஒரு க்ரூப் புரளி கெளப்பிக்கிட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை சொல்றேன்.. கதையே இல்லாம படம் எடுக்க முடியாது”

- ‘ரட்சகன்’ படம் வெளியானபோது இயக்குனர் பிரவீன்காந்த்

பிரவீன்காந்த் ‘ஒன்பதுல குரு’ பார்த்தாரேயானால் தன்னுடைய கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்வார்.

பேச்சுலர்ஸ் பாரடைஸான ஹாலிவுட்டின் ‘ஹேங்க் ஓவர்’ படத்தை சுட்டு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. 1895ல் லூமியர் சகோதரர்கள் முதன்முதலாக ’சினிமா’ போட்டுக் காட்டிய துண்டுப்படத்தில் இருந்து, இதுவரை வெளிவந்திருக்கும் கோடிக்கணக்கான எல்லா சினிமாப் படங்களையுமே சுட்டு எடுத்திருப்பதாக தெரிகிறது. குறைந்தபட்சம் தமிழில் வெளிவந்திருக்கும் ஐயாயிரத்து சொச்சம் படங்களிலிருந்தும் ஓரிரு நொடி காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்பு முரளி, மோகன், எஸ்.வி.சேகர் மாதிரி இடைநிலை நாயகர்களை வைத்து இராம.நாராயணன் துணுக்குத் தோரணம் கட்டி சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி ரேஞ்சுக்கு படங்களாக பிரசவித்துத் தள்ளுவார் இல்லையா? இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் இந்த genre கொஞ்சம் கொஞ்சம் அழிந்து குற்றுயிரும் குலையுயிருமாக போய்விட்டது. சில ஆண்டுகளாக மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரி படங்கள் இவற்றின் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட வடிவம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு போன்றவை அவற்றின் அச்சு அசலான வடிவம். இந்தப் படங்களால் தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்தை நெருங்க முடியாது. சிறந்த அயல்நாட்டுப் படங்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் படாது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமான விஷயம். கல்லா கட்டும். தியேட்டர்களுக்கு பஞ்சமில்லாமல் content கிடைக்கும். இரண்டு பெரிய படங்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பும் filler ஆக செயல்படும். தியேட்டர் கேண்டீன்களில் சமோசா விற்பனை பெருகும். அச்சகங்களுக்கு போஸ்டர் ஆர்டர் இருந்துகொண்டே இருக்கும். தினத்தந்திக்கும், தினகரனுக்கும் ரெகுலர் விளம்பரம் கிடைக்கும். பிளாக்கர்களுக்கும் ஹிட்ஸ் தேத்த வசதியாக இருக்கும்.

பொதுவாக தயாரிப்பாளரின் கையை கடிக்காது. சில சமயங்களில் ஜாக்பாட்டும் அடிக்கும். அப்படியே தோற்றாலும் தயாரிப்பாளர் வடபழனி கோயில் வாசலில் தேங்காய் பொறுக்க வேண்டிய நிலைமை வராது. எனவே ஒன்பதுல குருக்களை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

படத்தில் ஹீரோ என்று யாரையும் சொல்ல முடியவில்லை. எனவே அவர்களை லூஸில் விட்டுவிடலாம். ஹீரோயின் லட்சுமிராய். இவரை அரபுக்குதிரை என்று குமுதங்களும், சினிக்கூத்துகளும் வர்ணிக்கின்றன. எனக்கென்னவோ கட்டுக்கடங்காத காட்டுக்குதிரையாக தெரிகிறார். ஒரு காட்சியில் ஸ்விம்மிங் பூலில் இருந்து எழுகிறார். அவரது நெஞ்சுரத்தை கண்டு வியந்து நமது நெஞ்சு உரமேறுகிறது. அசுரத்தனமான உடல் வளர்ச்சி என்றாலும் அவரது முகம் மட்டும் எட்டாம் க்ளாஸ் படிக்கும் பாப்பா மாதிரி இருப்பது அதிசயம்தான்.

சமகால ஹீரோக்கள், இயக்குனர்கள் அத்தனை பேரின் டவுசரையும் எந்தவித கூச்சநாச்சமுமின்றி கயட்டுகிறார்கள். குறிப்பாக மணிரத்னமும், பாரதிராஜாவும் படத்தைப் பார்த்தால் சினிமாவுக்கு துறவறம் பூண்டுவிடுவார்கள். சினிமாக்காரர்களைதான் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று பார்த்தால் கலைஞரையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் விவேகானந்தரை கூட விட்டு அடிக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். laugh riot.

பச்சை பச்சையாக டயலாக்குகள். கரும்பச்சை நிற காட்சிகள். இந்தப் படத்துக்கு தடை கோரவேண்டுமானால் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்தத்தில் தொடங்கி உலகின் எல்லா மதக்காரர்களும், எல்லா சாதிக்காரர்களும், சினிமா, அரசியல், பத்திரிகை என்று எல்லா துறையினரும் தடைகோர வேண்டும். தமிழக அரசு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தொடங்கி சீனா, அமெரிக்க அரசுகள் வரை தடை விதிக்க வேண்டும். நியாயமாகப் பார்க்கப் போனால் சென்ஸார் இப்படத்துக்கு ‘த்ரிபிள் ஏ’ சர்ட்டிஃபிகேட் தந்திருக்க வேண்டும்.

நாடி, நரம்பு, மூளை, புத்தி, நெஞ்சு, பஞ்சு என்று உடலின் சகல பாகங்களிலும் கட்டுக்கடங்காத காமவெறி கரைபுரண்டு ஓடும் ஒரு மனிதரால் மட்டுமே இத்தகைய படைப்பை வழங்கியிருக்க முடியும்.

கலாச்சாரப் போலிஸாருக்கும், சென்ஸாருக்கும் நடுவிரலை தூக்கிக் காட்டிய தைரியத்துக்கு இயக்குனர் பி.டி.செல்வகுமாருக்கு அட்டென்ஷனில் அடிக்கலாம் ஒரு சல்யூட்!

8 மார்ச், 2013

கனவை ஏற்று விதியை மாற்று

“நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. சராசரி குடும்பப் பெண்ணுக்கு இந்த கனவு சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும். எனவே எப்பாடு பட்டாவது இந்த சராசரி வாழ்விலிருந்து தப்பிக்க நினைத்தேன்” 

பதினேழு வயது சந்தாவுக்கு வீட்டில் கட்டாயத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார்கள். இதில் விருப்பமில்லாத அவர் நாட்டை விட்டே வெளியேறினார். முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது சந்தா சவேரி என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?

கல்கத்தாவுக்கு அருகில் கான்குர்கச்சி என்கிற இடத்தில் வசித்த மார்வாரி கூட்டுக் குடும்பம் சந்தா சவேரியுடையது. பதினான்கு வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போதெல்லாம் மார்வாரி குடும்பங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். முடிந்தவரை வெகுசீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைத்து தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

வங்காளத்தில் அப்போது கல்வி குறித்த விழிப்புணர்வு மிக அதிகமாக இருந்தது. கல்வி கற்பதை கலாச்சாரமாகவே மாற்றியவர்கள் வங்காளிகள். இந்த போக்கினால் கவரப்பட்டார் சந்தா. எனவே குடும்பத்தில் சண்டை போட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தார். உயிரியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தார்.

பார்க் தெருவிலிருந்த அமெரிக்கன் லைப்ரரி அவரை கவர்ந்தது. அடிக்கடி நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதுபோல ஒருமுறை சென்றுக் கொண்டிருந்தபோது வெயில் தாங்காமல் (சன் ஸ்ட்ரோக்) ஒரு அமெரிக்கப் பெண் நடுத்தெருவில் மயங்கி விழுவதைக் கண்டார். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று முதலுதவி செய்ய சந்தா உதவினார். அன்றிலிருந்து அந்த அமெரிக்கப் பெண் கேரனும், அவருடைய கணவர் டேவிட்டும் கல்கத்தாவிலிருந்தவரை சந்தாவுக்கு நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்.

1984ல் சந்தாவுக்கு வயது பதினேழு. இனியும் பொறுக்க முடியாது என்று அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். நிறைய படிக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். படிப்புக்காக ஊரை விட்டு ஓடுவது என்று முடிவெடுக்கிறார் சந்தா. உடனடியாக டேவிட்-கேரன் தம்பதியரின் நினைவுதான் அவருக்கு வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளராத காலம் அது. ஈமெயில் இல்லை. ஃபேக்ஸ் பரவலாகவில்லை. பாஸ்டனில் இருந்த டேவிட்டின் அலுவலகத்துக்கு போன் செய்தார். இவர் பேசுவது டேவிட்டுக்கு சரியாக கேட்கவில்லை. அவர் பேசுவது இவருக்கு சரியாக கேட்கவில்லை. பத்து நிமிட போராட்டத்துக்குப் பிறகு தன்னுடைய நிலைமையை தெரியப்படுத்தினார். இறுதியாக சந்தாவுக்கு அமெரிக்காவிலிருந்த ஸ்பான்ஸர் கடிதம் அனுப்பிவைக்க டேவிட் ஒப்புக்கொண்டார்.

அந்த கடிதத்தோடு அமெரிக்க தூதரகத்துக்குச் சென்று ‘விசா’ விண்ணப்பித்தார். விசா அதிகாரி சந்தாவைப் பார்த்து சொல்கிறார். “நீ சின்னப் பெண். உன்னால் அமெரிக்காவுக்கு போக முடியாது”.

கடுப்பான சந்தா பதிலளிக்கிறார். “அமெரிக்காவை சொர்க்கம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அங்கே செல்பவர்கள் திரும்பியே வரமாட்டார்கள் என்று நினைப்பா?”

அதிகாரிக்கு இந்த பெண் அங்கே செல்ல ஏதோ முக்கியமான காரணம் இருக்கிறது என்று தோன்றுகிறது. “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஐந்து வருடம் நீ அங்கே தங்கியிருக்க அனுமதிக்கிறேன்” என்று சொல்லி விசாவை தருகிறார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் டிக்கெட் எடுக்க வேண்டும்? சந்தாவுக்கு உதவிக் கொண்டிருந்தவர்கள் அவரது கல்லூரித் தோழர்கள். உடல் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் அவர்களால் தர இயலும். பணம்? தன்னுடைய வைரத்தோடுகளை விற்றார். டிக்கெட் வாங்கினார். கையில் வேறு பணம் எதுவுமில்லை. கட்டியிருந்த உடையோடு விமானமேறினார்.

“பாஸ்டன் வரையிலான பயணம் முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தேன். ஏனெனில் எனக்கு கல்கத்தாவை அவ்வளவு பிடிக்கும்” என்று சமீபத்தில் கொல்கத்தாவுக்கு வந்தபோது சொன்னார் சந்தா.

விமான நிலையத்தில் சந்தாவை வரவேற்க தவறவில்லை டேவிட்டும், கரேனும். ஏனெனில் அங்கிருந்து தொலைபேச கூட சந்தாவிடம் காசில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.

அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த சந்தாவுக்கு அடுத்து என்னவென்று தெரியவில்லை. செய்தித்தாள்களை மேய்ந்தார். அமெரிக்க முதியோர் பலருக்கும் தாதிக்கள் தேவைப்பட்டார்கள். ஒரு அமெரிக்க மூதாட்டிக்கு உதவ இவர் போய் சேர்ந்தார். தொண்ணூற்றி எட்டு வயது லெஸ்லிக்கு இவரது சேவை மிகவும் பிடித்துப் போனது. சில நாட்கள் கழித்து இவரது கையில் முப்பதாயிரம் டாலர் பணத்தைக் கொடுத்து, “நீ ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார். சந்தாவின் ஆசையும் அதுதானே?

ஹார்வர்டில் படிப்பு முடியும் காலத்தில் டேவிட் இவருக்கு வேறு ஏற்பாடும் செய்தார். தன்னுடைய மாமனாரையும், மாமியாரையும் சந்தாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் சட்டப்படி தங்களுடைய மகளாய் சந்தாவை தத்தெடுத்துக் கொண்டனர். தத்தெடுத்த பெற்றோர், சந்தாவின் உண்மையான பெற்றோரை சந்திக்க கல்கத்தா வந்தனர். ஆறு வாரங்கள் அவர்களோடு தங்கியிருந்து, சந்தா ஏன் அமெரிக்காவுக்கு வந்தார் என்று விளக்கினர். தங்கள் மகளது உள்ளத்தை அவர்கள் புரிந்துகொள்ள இச்சம்பவம் உதவியது.

கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சந்தாவின் மேற்படிப்பு தொடர்ந்தது. பயோகெமிஸ்ட்ரி துறையில் அங்கே ஆய்வுகள் புரிய ஆரம்பித்தார். பேராசிரியராக அங்கே அடிக்கடி வருகை புரிந்தவர் லைனஸ் பாலிங். இவர் வேதியியலுக்காக 1954லும், அமைதிக்காக 1962லும் நோபல் பரிசு வென்றவர். படிப்பு முடிந்தவுடன் பாலிங்கிடம் பணியாற்ற சந்தா விரும்பினார். பாலிங்குக்கு அப்போது வயது தொண்ணூறுக்கும் மேலே.

தன்னுடைய பிரத்யேக ஆய்வகத்தில் தொப்பி அணிந்து அமர்ந்திருந்த பாலிங்கை சந்தித்தார் சந்தா. தன்னுடைய பல்கலைக்கழக ஆய்வுத்தகுதிகளையும், பல்கலைக்கழகம் அவருக்குத் தந்திருந்த தர அளவீடுகளையும் சொன்னார். “உங்களிடம் மாணவியாக சேர்ந்து உங்கள் ஆய்வகத்தில் நான் பணிபுரிய இத்தகுதிகள் போதுமா?”

“எனக்கு இப்போது மாணவிகள் தேவையில்லை. மனைவிதான் தேவை” சந்தாவை தவிர்ப்பதற்காக லேசாக புன்முறுவலிட்டுக்கொண்டே சொன்னார் பாலிங்.

“நாம் எப்போது திருமணம் செய்துக்கொள்ளலாம்?” எதையும் யோசிக்காமல் சந்தா பதிலுக்கு கடிக்க, வாய்விட்டு சிரித்துவிட்டார் பாலிங்.

“என்னுடைய ஆய்வகத்தில் இப்போது பெரியதாக வேலைகள் எதுவுமில்லை. ஆய்வுக்குடுவைகளை கழுவி வைக்கும் வேலைக்கு மட்டும்தான் ஆள் தேவை”

“பரவாயில்லை. உங்களோடு இருப்பதே எனக்கு மகிழ்ச்சி” பாலிங்கிடம் சந்தா சேர்ந்த கதை இதுதான். அவர் 94 வயதில் மரணிக்கும் வரை அவரோடு வேலை பார்த்தார் சந்தா. அங்கிருந்தபோதுதான் சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வேதியியல் தீர்வுகளை காணும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க க்ரீன்கார்ட் வாங்கியபிறகு ‘ஆக்டிவர்’ என்கிற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ‘இமாமி ஃபேர் & ஹேண்ட்ஸம்’ முகப்பொலிவு க்ரீமின் ஒரிஜினல் ஃபார்முலாவில் கூட சந்தாவின் பங்குண்டு. முகப்பொலிவு, தோல் சுருக்கம் நீக்கம் போன்றவற்றுக்கு பயன்படும் பல்வேறு க்ரீம்களை உருவாக்கினார். எஸ்டீ லாடர், ரெவலான் போன்ற பிரபலமான அழகுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தாவின் ஃபார்முலாவை கொண்டவையே. பி2-ஆக்டிஜென் எனும் ஃபார்முலா இவர் உருவாக்கியதுதான்.

இன்று சந்தாவின் நிறுவனத்தின் பெயர் ஆக்டியோஜென். பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். வருடாவருடம் கொல்கத்தாவுக்கு வருகிறார். சால்ட் லேக் பகுதியில் சொந்தமாக ஒரு வீடும் கட்டியிருக்கிறார். கொல்கத்தாவின் மார்வாரி பெண்கள் இப்போது நிறைய பேர் உயர்கல்வி பயில்வதை மகிழ்ச்சியோடு பார்க்கிறார். 


“நான் என்னவாக விரும்பினேனோ, அதுவாக மாறியிருக்கிறேன். நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், அது குறித்த தயக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்தால்.. நிச்சயமாக விரும்பியதை அடைவீர்கள்” என்கிறார் சந்தா சவேரி. நோபல் கனவு அவரது கண்களில் இன்னமும் பளிச்சிடுகிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

6 மார்ச், 2013

மதுவிலக்கு : திடீர் காந்தி குல்லாக்கள்

தமிழ்நாட்டில் ஒரு மோஸ்தர் உண்டு. பேசுவதற்கோ, போராடுவதற்கோ எதுவுமில்லை என்றால் மதுவிலக்கை கையில் எடுத்துக் கொள்வார்கள். மது சமூகத்தின் பிரச்சினையா என்று கேட்டால் ஆமென்று ஒப்புக் கொள்வதில் நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அது மட்டுமே பிரதானப் பிரச்சினையுமல்ல.

காந்தியவாதிகளின் மதுவிலக்கு கோரிக்கையை நாம் சந்தேகிக்க முடியாது. அது அவர்களது கொள்கையின்பால் உருவாகும் எண்ணம். கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று முன்பு ஒருமுறை சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அப்போது பனைத்தொழிலாலர் நலவாரியத்தின் தலைவராக இருந்த குமரி ஆனந்தன் அந்த சிந்தனையை ஆரம்பத்திலேயே எதிர்த்தார். இத்தனைக்கும் பனைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் குமரியாரின் சொந்த சமூகத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய சமூகத்தையே எதிர்த்துக்கொண்டு மதுவிலக்கு கோரிக்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த குமரியார் போன்றவர்களை நாம் மதிக்கலாம்.

பாமக தலைவர் ராமதாஸ் அடிப்படையில் மருத்துவர் என்பதால் மதுவுக்கு எதிரான எண்ணம் கொண்டிருக்கிறார். இந்த எண்ணத்தை தனது இயக்கத்தின் கொள்கையாகவும் முன்னிறுத்துகிறார். ஆனால் அவரது எண்ணத்துக்கு அவரது கட்சியிலேயே எவ்வளவு ஆதரவிருக்கிறது என்பது கேள்விக்குறிதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளிலேயே மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் கட்சிக்காரர்களாக இருக்க முடியாது என்கிற அம்சம் இருக்கிறது. இது நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சமீபமாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ திடீரென்று மதுவிலக்கு போராட்டங்களில் ஈடுபடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் சார்ந்திருந்த இயக்கத்திடம் இதற்கு முன்பாக இவ்விஷயத்தில் எப்போதாவது முரண்பட்டிருக்கிறாரா? வைகோ மட்டுமல்ல. எந்த திராவிட இயக்கத் தலைவராவது திடீரென்று ‘காந்தி வேஷம்’ போட்டால் நாம் சந்தேகித்தே ஆகவேண்டும்.

“கொஞ்சமாவது உலக அறிவு கொண்டவர்கள் யாரும் மதுவிலக்கை ஆதரிக்க முடியாது. மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு காந்தியாலும், ராஜாஜியாலும் பாராட்டப்பட்ட, எனது தோப்பில் இருந்த 500 தென்னைமரங்களை அதற்காக வெட்டிச்சாய்த்த நான் சொல்கிறேன்” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். 1937ல் முதன்முதலாக ராஜாஜி மதுவிலக்கை சோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் கொண்டுவரும்போது அதை கிண்டலடிக்கவும் பெரியார் தவறவில்லை. “ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே இந்த திடீர் யோசனைக்கு காரணம்”

பெரியார், ராஜாஜியின் மதுவிலக்கை வெறுமனே எதிர் அரசியல் என்கிற நிலையில் இருந்து மட்டுமே எதிர்க்கவில்லை. அக்காலத்தில் மதுவால் வந்த வருமானத்தில் பெரும்பகுதி கல்விக்காக அரசால் செலவழிக்கப்பட்டு வந்தது. பார்ப்பனரல்லாத மக்கள் கற்பதை ராஜாஜி விரும்பவில்லை என்பதாலேயே கல்விக்கு வருமானம் தரும் வழியான மதுவை தடை செய்கிறார் என்றும் பெரியார் குற்றச்சாட்டினை வெளிப்படையாக முன்வைத்தார். பெரியாரின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப ராஜாஜியின் காலத்தில் நிர்வாகச் செலவுகளை காரணம் காட்டி இரண்டாயிரத்து ஐநூறு பள்ளிகள் மூடப்பட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மது அருந்துவதை பெரியார் ஒருவனுடைய தனிப்பட்ட உரிமையாக பார்க்கிறார். மதுவை எடுத்துக் கொள்வதும், நிராகரிப்பதும் அவனுடைய உரிமை, அதில் அரசாங்கம் தலையிட முடியாது என்பது அவரது வாதம். தன் மனைவியோடு ஒருவன் கலவி வைத்துக் கொள்வதை எப்படி அரசு தடை செய்யமுடியாதோ, அதுபோல மதுவையும் தடை செய்ய முடியாது என்றும் பேசுகிறார்.

எனவே பெரியாரின் வழித்தோன்றல்களான திராவிட இயக்கத்தார் திடீரென்று காந்தி குல்லா போட்டு மதுவிலக்குக்கான புரட்சியை முன்னெடுப்பது என்பது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல. அவ்வாறு மது ஒழிக்கப்பட வேண்டியது என்று நினைப்பவர்கள், முன்னெப்போதாவது இது குறித்து பேசியிருக்கிறார்களா, போராடியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். 1993 வரை திமுகவில் இருந்த வைகோ மதுவிலக்குக்காக கட்சியிலோ, பொதுமேடைகளிலோ அல்லது ராஜ்யசபாவிலோ ஏதேனும் கருத்தை முன்வைத்திருக்கிறாரா?

ராஜாஜி காலத்தில் அமலுக்கு வந்த மதுவிலக்கை கலைஞர்தான் திரும்பப் பெற்று ஒரு தலைமுறையையே மதுவுக்கு அடிமையாக்கி விட்டார் என்கிற பிரச்சாரத்தை இப்போது வைகோ முன்வைக்கிறார். அவரது மதுவிலக்கு வேடத்துக்கு இதுவே போதுமான காரணமுமாக இருக்கிறது. மிகக்கவனமாக ஆட்சியிலிருக்கும் அம்மாவை சங்கடப்படுத்தாமல் தன்னுடைய வழக்கமான பாதயாத்திரை போராட்டமுறையை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

மதுவைப் பொறுத்தவரை அந்தந்த மாநில அரசுகளே, அதன் தலையெழுத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இந்திய அரசியல் சட்டம். இதன்படி அப்போது குஜராத்தும், தமிழகமும் மட்டுமே மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி வந்தன. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி தருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அக்கொள்கை அமலில் இருப்பதால் தங்களுக்கும் அந்நிதியை வழங்குமாறு முதல்வராக இருந்த கலைஞர் அப்போது மத்திய அரசை கோருகிறார். ‘புதியதாக மதுவிலக்கு அமலுக்கு வரும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி’ என்று மத்திய அரசு மறுக்க, அதற்காகவே மதுவிலக்கை கலைஞர் 1971ல் வாபஸ் வாங்குகிறார். யார் மறுத்தாலும், ஊடக மாய்மாலங்களால் மறைக்க நினைத்தாலும் இதுதான் வரலாறு.

சட்டமன்றத்தில் அப்போது கலைஞர் பேசும்போது, “மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்? ” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுகவோடு நட்புறவில் இருந்த ராஜாஜியும், காயிதேமில்லத்தும் மதுவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவேண்டாம் என்று கலைஞரிடம் கேட்டுக் கொள்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதாலேயே இப்போது இந்த முடிவுக்கு வரவேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும், சரியானதும் மீண்டும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் கலைஞர் சமாதானம் சொன்னார்.

அதன்படியே படிப்படியாக 1973ல் கள்ளுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன. 1974ல் சாராயக்கடைகளும் மூடப்பட்டன. ராஜாஜிக்கும், காயிதேமில்லத்துக்கும் கொடுத்த வாக்கை கலைஞர் காப்பாற்றினார். இன்றுவரை மிகக்கவனமாக இது மறைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக கலைஞரை வில்லனாக குறிவைத்து இவ்விவகாரத்தில் பேசுகிறார்கள். எனவே, மதுவிலக்கினை திடீரென கையில் எடுப்பவர்களின் நோக்கம் எதுவென்பது தெளிவாகிறது.

எம்.ஜி.ஆர் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தபிறகு 1981ல் கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் மீண்டும் வருகிறது. தமிழ்நாடு வாணிபக் கழகம் எனப்படும் ‘டாஸ்மாக்’ 1983ஆம் ஆண்டுதான் உருவாக்கப்படுகிறது. இந்நிறுவனமே ஒட்டுமொத்த மதுவிற்பனைக்கும் பொறுப்பேற்கிறது. மிகக்கவனமாக மதுவிலக்கு பிரச்சினையில் எம்.ஜி.ஆரின் பாத்திரமும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. 2003ஆம் ஆண்டு ‘தமிழகத்தில் மது சில்லறை விற்பனை செய்ய அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக டாஸ்மாக் இருக்கும்’ என அத்திருத்தத்தில் இடம்பெறுகிறது. வைகோவுக்கு தைரியமிருந்தால், நேர்மையிருந்தால் இன்றைய டாஸ்மாக் சூழலில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்குமான தொடர்புகளையும் பேசட்டும்.

மதுவிலக்கு போராளி வைகோ நடுரோட்டில் நடந்து வருகிறாராம். டாஸ்மாக்கில் புரட்சி கண்ட புரட்சித்தலைவி வெயில் என்றும் பாராமல் அவரை சாலையில் சந்தித்து, எதற்காக இந்த போராட்டம் என்று கேட்கிறாராம். வைகோ விளக்குகிறாராம். தமிழ்நாட்டில் மேடைநாடகங்கள் அருகி வருகிறது என்று யார் சொன்னார்கள்?

இன்று திடீரென மதுவிலக்கு கொண்டுவரவேண்டுமானால் நமக்குத் தெரிந்து பிரதானமாக இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன.

ஒன்று. அரசின் நிதிநிலைமை ‘தள்ளாடும்’. குறிப்பாக தமிழக அரசு எளிய மக்களுக்காக தொடர்ச்சியாக அறிவித்து வரும் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி பெரும்பாலும் மது வருவாயிலிருந்தே வருகிறது. மதுவிலக்கு கொண்டுவரும் பட்சத்தில் இத்திட்டங்களை நிறுத்த முடியாது. இதற்கு தேவையான நிதி வருவாய்க்கு வேறேதேனும் ஆதாரத்தை தேடவேண்டும்.

இரண்டு. மதுவுக்கு அடிமையாகி விட்ட மக்களை திருத்துவது. மது கிடைக்கவில்லையெனில் கள்ளச் சாராயத்துக்கும் தயாராகவே இருக்கிறார்கள். மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்திலேயே கூட மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே சம்பவத்திலேயே மரணமடைந்தனர்.

அரசு, ‘டாஸ்மாக்’ நடத்துவதாலேயே மட்டும் மது குடிப்பதை ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆணுறை அணிந்தால் எய்ட்ஸ் வராது என்று பிரச்சாரம் செய்து, இலவசமாக ஆணுறைகளை அரசு வழங்குவதை கள்ள உறவுகளை ஊக்குவிப்பதாக புரிந்துகொள்ள முடியுமா என்ன?

மது ஓர் அரக்கன் என்பதிலேயோ, அது சமூகப் பிரச்சினை, மக்கள் அதிலிருந்து வெளிவரவேண்டும் என்பதிலேயோ மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்பிரச்சினையின் பின்னணிகளை அலசி ஆராயமல் வெறுமனே பிளாக் & ஒயிட்டாக மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று போராடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு என்றில்லாமல் நாடு முழுக்க ஒரே மாதிரியான நிலையை ஏற்படுத்துவதற்கான விவாதத்தை முதலில் தொடங்கவேண்டும். மதுவிலக்கு கொள்கையை மனதளவில் ஏற்றவர்கள் இதற்காக இயக்கங்கள் தொடங்கி மக்களிடம் பேசவேண்டும். மக்களின் மனமாற்றமின்றி, பங்களிப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை.

சங்கக் காலத்தில் இருந்து குடித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரே நாளில் மாறிவிடுவார்களா என்ன? முள்ளில் பட்ட சேலை. பொறுமையாகதான் எடுத்தாக வேண்டும்.

1 மார்ச், 2013

பாவமன்னிப்பு?

பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக்கூடிய நிலைக்கு நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும்.

- ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், பிப். 20, 2013 அன்று எழுதியது... 

“அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறைய பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத்தவனிடம் நான் செய்தது சரியா, தவறா என்று கேட்கப்போகிறேன்” மரணப்படுக்கையில் ஜெனரல் டயர் சொன்ன வாசகம் இது. பாரிசநோய் தாக்கியிருந்ததால் அப்போது பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். உயிரைவிடும் கடைசி நொடியிலும் கூட அவருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை மட்டும் மறக்கவேயில்லை. 

டயரால் மட்டுமல்ல. ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. இருந்தும் இன்னும் இந்தியர்களால் மறக்க முடியாத, ஜீரணிக்க முடியாத துயர சம்பவம் அது.

முதல் உலகப்போரின் போது சுமார் பண்ணிரெண்டு லட்சம் இந்தியர்களை இராணுவ வீரர்களாகவும், தொழிலாளர்களாகவும் போரில் ஈடுபடுத்தியது பிரிட்டிஷ் அரசு. மனிதவளம் மட்டுமின்றி உணவு, செல்வம் என்று போருக்காக இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டன. வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த அநியாய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. போரின் முடிவில் 43,000 இந்தியர்கள் பிரிட்டனுக்காக போர்க்களத்தில் உயிரிழந்தார்கள் என்கிற தகவலை சிவில் மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் போடவோ, போராட்டங்கள் நடத்தவோ தடை விதித்திருந்தார். 

1919, ஏப்ரல் 13. பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் வைசாகி பண்டிகைக்காக அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மும்மதத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் இருபதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெனரல் டயர் சுமார் நூறு வீரர்களோடு மைதானத்துக்கு வந்தார். அவர்களில் ஐம்பது பேர் ஆயுதம் தரித்திருந்தார்கள். மெஷின்கன் ஏந்திய இரண்டு வாகனங்களும் வந்தன. ஆனால் மைதானத்துக்குள் நுழையும் பாதை குறுகியதாக இருந்ததால், அவ்வாகனங்கள் உள்ளே நுழைய முடியவில்லை.

மக்களை கலைந்துப்போகச் சொல்லி அவர் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. பிற்பாடு விசாரணையின் போது இதற்கு அவர் சொன்ன விளக்கம் வேடிக்கையானது. “கூட்டத்தை கலைக்க நான் அங்கே செல்லவில்லை. அவர்களது ஒழுங்கீனத்துக்காக தண்டிக்க மட்டுமே விரும்பினேன்”.

சுடுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிகள் வெறித்தனமாக பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக முழங்கிக்கொண்டே இருந்தது. தோட்டாக்கள் தீரும் வரை. மொத்தமாக 1,650 ரவுண்டுகள். முதற்கட்டமாக பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் உயிரிழந்தனர். எங்கும் மரண ஓலம். சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால் தப்பிக்க வழியே இல்லை. உயிர்பிழைக்க வழி தெரியாமல் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த கிணற்றுக்குள் நிறைய பேர் குதித்தார்கள். துப்பாக்கி குண்டுக்கு தப்பி நெரிசலில் இறந்தவர்களும் கணிசமானவர்கள்.

“துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்துவிட்டதால் மட்டுமே என்னால் நடவடிக்கையை தொடரமுடியவில்லை. அவை இன்னும் கூடுதலாக இருந்திருந்தால் தீரும் வரை சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்” லண்டனில் நடந்த கமிஷன் விசாரணையில் ஜெனரல் டயர் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இச்சம்பவத்தை விவரிக்கும்போது சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மாதங்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த மரணக் கிணற்றில் இருந்து மட்டுமே 120 உடல்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருந்த கண்துடைப்பு விசாரணைக்குழு மொத்தமாக 379 பேர் மட்டுமே மரணித்தார்கள் என்று அநியாயமாக புளுகியது. பிற்பாடு அக்குழுவில் இருந்த ஒருவரே உண்மை எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்று ஒப்புக்கொண்டார். 

கூடியிருந்த மக்களின் எண்ணிக்கையும், சுடப்பட்ட ரவுண்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் அரசு சொல்லும் எண்ணிக்கை நம்பவே முடியாதது. எனவே இந்திய தேசிய காங்கிரஸ் இப்படுகொலைகளை விசாரிக்க தனியாக ஒரு குழுவை நியமித்தது. 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், தோராயமாக 1,000 பேர் உயிரிழந்ததாகவும் அக்குழு சொன்னது.

இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரியளவிலான இந்த படுகொலைகளை மூடிமறைக்க இங்கிருந்த இராணுவ அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். பிரிட்டனுக்கே கூட ஆறு மாதங்கள் கழித்து டிசம்பரில்தான் விஷயம் தெரிந்தது. நம்மூர் தலைவர்களுக்கே கூட உடனடியாக தெரியவில்லை. கல்கத்தாவில் இருந்த தேசியகவி இரபிந்திரநாத் தாகூருக்கு சம்பவம் நடந்து நாற்பது நாள் கழித்து 22 மே, 1919 அன்றுதான் தெரிந்ததாம். உடனடியாக கல்கத்தாவில் இதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினார்.

தனது மேலதிகாரியாக பஞ்சாப்பை ஆண்டுக்கொண்டிருந்த கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையருக்கு, ஜெனரல் டயர் இச்சம்பவம் குறித்த ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். அதில் ‘இந்தியர்கள், புரட்சிகர ராணுவத்தை கட்டமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினேன்’ என்று தன் வீரபிரதாபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், ‘நீங்கள் செய்ததுதான் சரி’ என்று ஒப்புக்கொண்டு டயரை பாராட்டியும் இருக்கிறார். பிற்பாடு இருபத்தோரு ஆண்டுகள் கழித்து இச்செயலுக்காக லண்டனில், பஞ்சாபை சேர்ந்த உத்தம்சிங் எனும் வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஓ’ட்வையர்.

வின்ஸ்டன் சர்ச்சில், ஹென்றி அஸ்க்வித் போன்ற பிரிட்டன் தலைவர்கள் அப்போதே இப்படுகொலைகளை கடுமையாக கண்டித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. படுகொலைகளை விசாரிக்க பிரிட்டிஷ் அரசு நியமித்த ஹண்டர் கமிஷனால் உருப்படியான நியாயம் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. ஜெனரல் டயர் மட்டும் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். படுகொலைகளுக்கு காரணமானவர்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்தே அறுபத்து ஆறு ஆண்டுகளும் ஆகிவிட்டது. ஆனால் அதற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்குமென்று இந்தியர்கள் இன்றும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் சுதந்திரத்துக்குப் பிறகு 1961லும், 1983லும் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் குறித்து எதுவுமே பேசவில்லை. பிறகு 1997ல் வந்தபோது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மவுன அஞ்சலி செலுத்தினார். “நம் கடந்தகாலத்தில் எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஜாலியன் வாலாபாக் மாதிரி. வரலாற்றை திரும்பவும் மாற்றி எழுத முடியாது. வரலாறு ஏராளமான வருத்தங்களும், ஏராளமான மகிழ்ச்சிகளும் நிறைந்தது. வருத்தங்களை பாடமாக படித்து, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன்னதாக இதைப்பற்றி பேசினார். இது நேரடி மன்னிப்பு இல்லையே என்று அப்போதே இந்தியர்கள் அங்கலாய்த்தார்கள்.

இப்போதும் அதேமாதிரிதான். பிரிட்டனின் பிரதமர் ஒருவர் ஜாலியன் வாலாபாக்குக்கு வருகை புரிந்தது இதுதான் முதல்முறை. வருகை பதிவேட்டில் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே தவிர, மன்னிப்பு கேட்கவில்லை என்று மீண்டும் குரல்கள் உயரத் தொடங்கியிருக்கின்றன.

எலிசபெத் ராணி மன்னிப்பு கேட்கவில்லை என்று வருத்தம் பரவியபோது, இந்தியப் பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் சொன்னதை நாம் நினைவுறுத்திப் பார்ப்போம். “தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா என்ன?”

(நன்றி : புதிய தலைமுறை)