8 பிப்ரவரி, 2013

வரலாற்றுக்கு நாம் வாழ்ந்தது எப்படி தெரியும்?

‘டைம் கேப்ஸ்யூல்’ என்பது தற்கால நடப்புகளை எதிர்கால சந்ததிகள் நூறு, ஆயிரம் வருடங்கள் கழித்து தெரிந்துகொள்ளும் பொருட்டு தகவல்களை பாதுகாப்பான முறையில் ஆவணப்படுத்தி, பூமிக்கு கீழே புதைத்து வைக்கும் வழக்கம். தாங்கள் வரலாற்றில் வாழ்வோமா என்கிற சந்தேகம் பிரபலங்களுக்கு எப்போதும் இருப்பதாலேயே ‘டைம் கேப்ஸ்யூல்’ மதிப்புமிக்க ஐடியாவாக இருக்கிறது.
ஒன்று :
இந்திராகாந்தி உச்சத்தில் இருந்த காலம். இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்கிற கோஷம் அவரது ஆதரவாளர்களால் வலுவாக எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. 1973. ஆகஸ்ட் 15 அன்று இந்திராகாந்தியால் டைம் கேப்ஸ்யூல் உருவாக்கப்பட்டு, டெல்லி செங்கோட்டையில் புதைக்கப்பட்டது. அதில் இந்திராவை அளவுக்கதிகமாக உயர்த்தி, அவரது எதிரிகளை தரம்தாழ்த்தி உண்மைக்கு புறம்பான தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இரண்டு :
அரசியல் நையாண்டி விமர்சகரும், துக்ளக் ஆசிரியருமான ‘சோ’ ராமசாமி,  டைம் கேப்ஸ்யூலை உருவாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அவரைப் பற்றியும் அவர் வாழும் காலத்தைப் பற்றியும் பல்வேறு தகவல்களுடன், சில துக்ளக் இதழ்களையும் சேர்த்து ‘பார்சல்’ கட்டி, பூமிக்குக் கீழே பத்தடி ஆழத்தில் பாதுகாப்பாக புதைத்து வைத்திருக்கிறாராம்.
மூன்று :
உ.பி.யின் முன்னாள் அதிரடி முதல்வர் மாயாவதிக்கு இன்ஸ்பிரேஷன் இந்திராகாந்தி. இந்திராவை மாதிரியே தானும் இந்தியாவுக்கு பிரதமர் ஆகவேண்டும் என்று பேராவல் கொண்டவர். அவரும் அவர் பங்குக்கு ஒரு டைம் கேப்ஸ்யூலை உருவாக்கியிருப்பதாக தகவல். இதில் மாயாவதியின் அரசியல் நுழைவு, வளர்ச்சி, சாதனைகள் முதலான தகவல்களுடன் தலித் உரிமைகளுக்காக அவர் புரிந்த போர்களைப் பற்றியும் விலாவரியான தகவல்கள் அடங்கியிருக்கிறதாம்.
எனவே நவீன இந்தியாவில் குறைந்தபட்சம் மூன்று டைம் கேப்ஸ்யூல்கள் இப்போது இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழர்களுக்கு இது புதுசு அல்ல. சோழர் காலத்தில் செப்பேடுகளில் தகவல்களை பதிந்து ஆவணப்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. பண்டைய தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே இன்றைய தமிழக வரலாற்றுக்கு ஓரளவு முழுமையான உருவம் கொடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம்.
“நெருப்பிலோ, நீரிலோ, பூச்சிகளால் அரிக்கப்பட்டோ அழியாத புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் நாம் உருவாக்க முடியாதா?” 1911ல் அலெக்ஸாண்டர் கோண்டா எனும் அமெரிக்கர் இவ்வாறு கேட்டார். வரலாற்றை ஆவணப்படுத்தி எதிர்கால மனிதர்கள் தங்கள் முன்னோரின் வாழ்வியலையும், சிந்தனைகளையும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டுமென்பது அவரது விருப்பம்.
அடிப்படையில் கோண்டா ஒரு வங்கி முதலாளி. நவீன வரலாற்று ஆவண நிறுவனம் (Modern Historic Records Association) என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆர்வத்தோடு உருவாக்கினார். ‘சமகால நடப்புகளை எதிர்காலத்திலும் வரலாறாக வாழவைப்போம்’ என்கிற கோஷத்தோடு வரலாற்று ஆவண நிறுவனம் செயல்படத் தொடங்கியது. அவர்கள் காலத்திய நடப்புகளை அசையும் படங்களாகவும், ஒலித்துண்டுகளாகவும் சுலபமாக ஆவணப்படுத்தக் கூடிய தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு நூற்றாண்டு கழிந்த நிலையில் கோண்டாவும், அவரது நிறுவனமும் ஆசைப்பட்ட பல்வேறு விஷயங்கள் நடந்தேறியிருக்கிறது. இன்று தகவல்களை ஆவணப்படுத்த பேப்பரே தேவையில்லை. கூகிள் புக்ஸ் போன்ற முயற்சிகளில் பல்வேறு புத்தகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையநினைவகங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. ஒளி, ஒலித்துண்டுகளும் யூட்யூப் மாதிரியான இணையவெளிகளில் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படுகின்றன.
அக்காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட், நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா போன்றோர் கோண்டோவுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். ஆவணப்படுத்துவதற்கான தகவல்கள் (The messages of the record) என்கிற அவரது திட்டத்துக்கு பங்களிப்பும் செய்திருக்கிறார்கள். இதனால் கோண்டோ வெகுசுலபத்தில் ஊடகங்களில் பிரபலமானார். எதிர்காலத்துக்கு தகவல்களை சேமிப்பவர் என்று மக்கள் அவரை கொண்டாடத் தொடங்கினார்கள்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அமைந்தது அவரது டைம் கேப்ஸ்யூல் திட்டம். இரண்டு கேப்ஸ்யூல்களை உருவாக்கி ஒன்றை நியூயார்க் பொதுநூலகத்திலும், மற்றொன்றை எகிப்திய பிரமிடுக்கு அடியில் புதைப்பதுமாக ஏற்பாடு. இதை நூறாண்டு கழித்து (அதாவது ஜனவரி 1, 2013) அப்போது வாழ்பவர்கள் எடுத்துப் பார்த்து வாசிக்கவேண்டும் என்பதுதான் திட்டம். அன்றைய செய்தித்தாள்கள் இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்தன.
ஏனோ வெகுவிரைவில் கோண்டாவும் அவரது குழுவினரும் மக்களுக்கு சலித்துவிட்டார்கள். முதல் உலகப்போரும் அப்போது தொடங்கிவிட்டதால், அதுகுறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரலாற்று ஆவண நிறுவனத்தை மறந்துவிட்டார்கள். பிற்பாடு சில ஊடகங்கள் அவரை விளம்பர வெறியர் என்று விமர்சித்து, புறக்கணிக்கத் தொடங்கின. 1913 டைம் கேப்ஸ்யூல் திட்டத்துக்குப் பிறகு இந்நிறுவனம் குறித்த செய்திகள் எதுவும் காணக்கிடைக்கவில்லை. இருபதாண்டுகள் கழித்து 1933ல் அலெக்ஸாண்டர் கோண்டா மறைந்தபோதுதான் டைம்ஸ் பத்திரிகையின் ‘மறைந்தார்கள்’ பக்கத்தில் அவரது படத்தை மக்கள் பார்த்தார்கள்.
சரி. கோண்டாவின் டைம் கேப்ஸ்யூல் திட்டம் என்ன ஆனது?
டிசம்பர் 5, 1913 அன்று நியூயார்க் பொதுநூலகம் கோண்டா கொடுத்த டைம் கேப்ஸ்யூல் பெட்டியை வாங்கிக் கொண்டதாக பதிவாகியிருக்கிறது. இப்போது போய் விசாரித்தால் அப்படியேதும் நூலகத்தில் இல்லையென்று சொல்கிறார்கள். போலவே பிரமிடுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டதாகவும் தகவல் எதுவுமில்லை. எகிப்து அரசு அப்படியெதுவும் தங்களுக்கு தெரியாது என்று மறுத்திருக்கிறது.
கோண்டா குடும்பத்தினர் யாருக்காவது இதுபற்றிய தகவல் தெரியுமாவென்றும் அமெரிக்க பத்திரிகையாளர்கள் விசாரித்திருக்கிறார்கள். அவருக்கு நேரடி வாரிசு யாருமில்லை. வளர்ப்பு மகன் ஒருவர் மூலமாக வழிவழியாக வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் செயிண்ட் லூயிஸ் எனுமிடத்தில் வசிக்கும் பெண் ஒருவர் இப்படியொரு ஏற்பாட்டை தங்களது எள்ளுத்தாத்தா செய்திருப்பதை ஒப்புக் கொள்கிறார். ஒரு தாமிரத்தகடு ஒன்றில் 2013ல் டைம் கேப்ஸ்யூலை எதிர்கால சந்ததியினர் பிரித்துப் பார்த்து மகிழலாம் என்ற தகவலை விட்டுச் சென்றிருப்பதாகவும் சொல்கிறார்.
டைம் கேப்ஸ்யூல் கிடைக்கவில்லையென்றாலும் வரலாற்று ஆவண நூலகம், நியூயார்க் பொதுநூலகத்துக்கு தந்திருக்கும் பல ஆவணங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. “ஆப்ரகாம் லிங்கனின் கொள்கைகளை பின்பற்றியே இப்போதைய பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்” என்று அதிபர் ரூஸ்வெல்ட் எழுதிக் கொடுத்திருக்கும் கடிதம் அங்கே கிடைக்கிறது. அப்போதைய ஸ்பெயின் மன்னர், பெர்னார்ட்ஷா உள்ளிட்ட பல பிரமுகர்கள் 2013ல் நாம் வாசிக்க, அப்போது விட்டுச் சென்றிருக்கும் செய்திகளும் இதுபோல காணக்கிடைக்கின்றன.
எது எப்படியோ, கோண்டா ஆசைப்பட்டபடியே அவரைப் பற்றி நூறு ஆண்டுகள் கழித்தும் நாம் இன்று பேசுகிறோம் இல்லையா? இதைதான் அவர் சாதிக்க நினைத்தார்.
ப்புறம் நம்மூர் மேட்டருக்கு வருவோம்.
இந்திரா காந்தியின் டைம் கேப்ஸ்யூல் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட துறைகளை கேட்டபோது, யாருக்கும் எதுவும் தெரியவில்லை. 1977ல் ஜனதா ஆட்சிக்கு வந்தபோது அந்த டைம் கேப்ஸ்யூலை தோண்டி எடுத்து அழிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டதாக ஒரு தகவல்.
நாம் துக்ளக்கை ரெகுலராக வாசிப்பதால், சோவின் டைம் கேப்ஸ்யூலை சீரியஸாக எடுத்துக் கொள்வதா, காமெடியாக எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை. அவரே மனம் விட்டு இதைப்பற்றிய விவரத்தை சொன்னால்தான் உண்டு.
மாயாவதி ரகசியமாக ரகசிய இடத்தில் டைம்கேப்ஸ்யூலை புதைக்கப் போகிறார் என்று அப்போது பேசப்பட்டதால், நிஜமாகவே புதைத்தாரா இல்லையா என்பதும் ரகசியமாகவே இருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

8 கருத்துகள்:

 1. தமிழர்களுக்கு இது புதுசு அல்ல. சோழர் காலத்தில் செப்பேடுகளில் தகவல்களை பதிந்து ஆவணப்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. பண்டைய தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே இன்றைய தமிழக வரலாற்றுக்கு ஓரளவு முழுமையான உருவம் கொடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம்." அருமையான கட்டுரை
  அதில் ஏன் இவர்! சோ

  பதிலளிநீக்கு
 2. லக்கி சார்,

  1977 - 80 இல் திரு மொரார்ஜி தேசாய் ஜனதா கட்சி ஆட்சியில் பிரதமராக இருந்த போது கல்வி அமைச்சராக இருந்த திரு பிரதாப் சந்திர சந்தர் அவர்கள் முன்னிலையில் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி காலத்து Time Capsule தோண்டி எடுக்கப் பட்டது. திருத்தங்கள் செய்து மீண்டும் புதைத்ததாகத் தெரியவில்லை.

  சினிமா விரும்பி
  http://cinemavirumbi.blogspot.in

  பதிலளிநீக்கு
 3. அண்ணா, மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த(க்கின்ற)போது இலங்கையில் நடந்தது, அக்கட்சி எடுத்த மாபெரும் முயற்சிகள்!!!! மற்றும் தற்போதைய டெசோ ஆகியவை குறித்து டைம் capsule அல்லது ஒலி, ஒளி வடிவில் எதிர்வரும் சந்ததியினருக்கு அல்லது இப்புவியில் வாழப்போகும் உயிரினங்களுக்கு தெரியப்படுத்த இயலுமா அண்ணா? என்னுடைய பின்னூட்டம் சம காலத்திய மக்களால் படிக்க இயலுமா அண்ணா !!!! அண்ணா எனக்கொரு கேள்வி... திராவிடம் என்றால் தற்போதைய சர்வதேச மற்றும் தேசிய எல்லைகளின்படி எவ்வாறு வகுப்பது அண்ணா?

  பதிலளிநீக்கு
 4. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சேரே... அனால் அது உண்மையாக இருக்கும் பச்சத்தில்!

  பதிலளிநீக்கு
 5. In this day and age of democracy, people are afraid to talk/write against those in power. How do we expect those in the temples and those written by "then" kaviyarasu's to tell the truth? unless there was a good rebel, who would have done this secretly, all those in the temples are exagerrated one sided praise.

  பதிலளிநீக்கு
 6. good article yuva...Apadiye ungalukum oru time capsule ready pannanum-nu anaithulaga yuva rasigar manram saarba thamizhaga mudhalvar amma-va kettukolgiroam.

  பதிலளிநீக்கு
 7. //அண்ணா, மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த(க்கின்ற)போது இலங்கையில் நடந்தது, அக்கட்சி எடுத்த மாபெரும் முயற்சிகள்!!!! மற்றும் தற்போதைய டெசோ ஆகியவை குறித்து டைம் capsule அல்லது ஒலி, ஒளி வடிவில் எதிர்வரும் சந்ததியினருக்கு அல்லது இப்புவியில் வாழப்போகும் உயிரினங்களுக்கு தெரியப்படுத்த இயலுமா அண்ணா?

  க‌டைசி த‌மிழ‌ன் உயிரோடு இருக்கும் வ‌ரை ம‌ற‌க்காது ப‌ற்ற‌ வைத்த‌ தீ. அது ச‌ரி...


  திராவிடம் என்றால் தற்போதைய சர்வதேச மற்றும் தேசிய எல்லைகளின்படி எவ்வாறு வகுப்பது அண்ணா?

  க‌டைசி வார்த்தையை முத‌லில் போட்டு ப‌டித்தாலும் கேள்வி பொருள்ப‌டும்.

  பதிலளிநீக்கு